சில ஆண்டுகளுக்கு முன், ஒரு கல்லூரியில், ‘வண்ணத்துப் பூச்சி ஒன்று எங்கோ ஒரு மூலையில் சிறகடிச்சு, சில வாரங்களுக்குப் பிறகு வெகு தொலைவில் வேறு எங்கோ ஒரு சூறாவளி
வந்து… இரண்டுக்கும் தொடர்பு இருக்குது’ என்று புரொபஸர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
“என்ன உடான்ஸ்டா இது?” என்றான் அவன் நண்பனிடம்.
“கேயாஸ் தியரிடா”
“நீயே உக்காந்து கேளு. இன்னிக்கு தசாவதாரம் ரிலீஸ். நான் பார்க்கப் போறேன்.”
சில மாதங்களுக்கு முன், ஒரு சீன கிராமத்தில், ஏற்றுமதிச் சந்தைக்கு பெண்களின் கைப்பைகள் தயாராக்கும் குடில் ஆலையில் வேகவேகமாய்ப் பணி நடந்தது. கல்பதித்த உலோக வண்ணத்துப் பூச்சியை கைப்பையில் பதிப்பது என்று பலப்பல கரங்கள் இயங்கி அங்கு கையிரச்சல் மயம். ஒரு பைக்கு இத்தனை ஜியாவ் காசு என்று கூலி. எவ்வளவு அதிகம் முடிகிறதோ அத்தனை ஜியாவ் கிடைக்கும். அவற்றை யுஆன் பணமாகத் தேற்றி, கோழி, பாம்பு, பல்லி என்று வீட்டுக்கு மளிகையுடன் செல்லலாம் என்று வேகமான பணி. ஓர் ஊழியனின் கையிலிருந்து வண்ணத்துப் பூச்சி கீழே விழுந்து அதன் சிறகில் ஒரு சிறு மழுங்கல். ஓரிரு நொடி தாமதித்தான் அந்த ஊழியன். ‘யார் கவனிக்கப் போகிறார்கள்?’ என்று சீன மொழியில் நினைத்தவாரே அந்த வண்ணத்துப் பூச்சியை எடுத்து ஒட்டினான்.
நேற்று, ஷாப்பிங் மாலுக்கு தன் புது மனைவியுடன் சென்றிருந்தான் அவன். அவர்கள் இருவரின் கையெல்லாம் பை. பை உரசலும் தோள் உரசலுமாக நடந்தவனிடம் அவள் காட்டினாள், ‘அந்த ஹேண்ட்பேக் பாருங்க, நல்லாருக்கு”
விலையை விசாரித்துவிட்டு, “வாங்கிக்கோ” என்றவன் பணம் கொடுக்கும்போது, “ஐயோ! இந்த பட்டர்ஃப்ளையில் முனை மழுங்கியிருக்கே” என்றான்.
வேறு ஸ்டாக் இல்லையே என்று கடைச் சிப்பந்தி வருத்தப்பட, “அப்புறமா நல்லதா வாங்கிக்கலாமே” என்று மனைவியை வீட்டுக்குக் கடத்தினான் கணவன். புது மனைவியின் முகத்தில் மேக்கப் மட்டும் மீந்து, சிரிப்பு விலகியிருந்ததை அவன் கவனிக்கவில்லை.
இன்று அலுவலகத்தில் வீட்டுச் சாப்பாட்டைப் பிரித்து கிழங்குப் பொரியலைச் சுவைத்தால் உப்பு தப்பியிருந்தது.
***
படித்துவிட்டு “என்னத்த கதை இது” என்று அலுத்துக் கொண்டார் அப்பா. புத்தகத்தை வீசிவிட்டு தொலைக்காட்சியை ரிமோட்டில் நோண்டும்போது, மாணவ மகன் வந்து அவரிடம் நொந்தான். “முதல்ல இருந்த ஹிந்தியாச்சும் பரவால்ல. ஹிந்தி படத்தைப் பார்த்து டெஸ்ட் எழுதிட்டேன். ஸ்கூல்ல இந்த சம்ஸ்கிருதம் பாடம் வேணும்னு யார் உங்களை வேண்டச் சொன்னது? பெத்தப் புள்ளைமேல அக்கறை வேணாம்?”
“நான் எங்கேடா சம்ஸ்கிருதம் கேட்டேன்?” என்று அப்பா புரியாமல் விழிக்க,
“அதான் ஓட்டுப் போட்டீங்களே.”
-நூருத்தீன்
இந்நேரம்.காம்-ல் 17 டிசம்பர் 2014 அன்று வெளியான கட்டுரை
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License