பிரளயம்!

by நூருத்தீன்

சுட்டான்; சுட்டாள்.

மலையின்மீது செங்கல்லை வீசியதுபோல் குண்டு மட்டும் தெறித்து விழுந்து, கதவு ஜம்மென்று நின்றிருந்தது. ஒரு சிறு கீறல்கூட இல்லை. 

“பார்த்துட்டியா? திருப்தியா? NWSS-VBD-02 மாடல் கதவு. ஸ்டீல், கான்கிரீட் கலந்த ராட்சஷன். பெரிய குண்டு வெடிப்பையே தாங்கும்” என்றான் ஜான். அவன் மனைவி ஜோனின் முகத்தில் திருப்தி.

வடக்கு ஐடாஹோ மாநிலத்தின் தேசிய காடு ஒன்றின் அருகில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் குண்டு வெடிப்பைத் தாங்கும் புகலிடம் (bomb shelter) ஒன்றைக் கணவனும் மனைவியும் கட்டியிருந்தார்கள். பூகம்பம் வந்தாலும் சரி, குண்டு வெடிப்பு யுத்தம், ரசாயன யுத்தம் என்றாலும் சரி உங்கள் பாதுகாப்பு எங்கள் பொறுப்பு என்று தரையில் அடித்துச் சத்தியம் செய்து கட்டித் தந்திருந்தது பெரிய நிறுவனம் ஒன்று. பிரளயமோ, யுத்தமோ ஓடிப் போய்ப் புகுந்து கொள்ள வேண்டியதுதான். பிழைத்து விடலாம். ஆயுளைத் தொடரலாம்.

தேடித் தேடிப் பார்த்து, ஒவ்வொரு விஷயமாகத் தேர்ந்தெடுத்து இரண்டு மில்லியன்களுக்குமேல் டாலர்களைச் செலவழித்திருந்தனர் ஜான்-ஜோன் தம்பதியர். மூன்று மாதங்களுக்குத் தாக்குப் பிடிக்கும் அளவிற்கு உணவு, தண்ணீர், உயிர் வாழத் தேவையான இன்னபிற அத்தனையும் நிறைந்திருந்தன.

“இனி நாமாக நினைக்கும்வரை சாவுக்கு அனுமதியில்லை” என்றாள் ஜோன்.

சிரித்தான் ஜான்.

o-o-o

மாளாது வாழ்தல் (Survivalism) என்பது சமகாலத்தில் ஓர் இயக்கமாகவே உருவாகி வருகிறது. அதென்ன “மாளாது வாழ்தல்” என்று புருவத்தை உயர்த்தி விசாரிக்கப் போனால் அது முன்னெச்சரிக்கை என்பதன் தீவிரவாத வடிவம்.

கரெண்ட் போனால் சமாளிக்க டார்ச் லைட், மெழுகுவர்த்தி, தீ விபத்துக்கு நெருப்பை அணைக்கும் சாதனங்கள், காயங்களுக்கு முதலுதவிப் பெட்டி என்பதில் தொடங்கி, வீட்டை நெருங்கும்போதுதான் மனைவிக்கு வாங்க மறந்த புடைவை நினைவுக்கு வந்து மூளை தயாரிக்கும் சமாளிப்புப் பொய் என்பதுவரை மனிதர்களுக்கு முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் இயற்கையாய் அமைந்துள்ளன.

அது பெருகி, பெருகி கலவரம் வந்தால் எப்படி ஓடுவது, புயல் வந்தால் எப்படிச் சமாளிப்பது என்று விரிவாகி என்ன பிரளயம் வந்தாலும் சரி, யுத்தம் நிகழ்ந்தாலும் சரி, பொருளாதாரச் சீரழிவு ஏற்பட்டு நாடு பஞ்சம், பட்டினிக்குத் தள்ளப்பட்டு மக்கள் கொத்துக் கொத்தாகச் செத்து விழுந்தாலும் சரி எப்படியும் வாழ்ந்தே விடுவது என்று பேரிழிவுக்கு எதிராகப் பெரும் தயாரிப்புகள் செய்து வைத்துக் கொள்வது ஸர்வைவ்வலிஸமாம்.

1930-களிலேயே அணு ஆயுதப் போர், மத நம்பிக்கைகள் என்று இதன் ஆதி காரணம் துவங்கியிருக்கின்றது. வல்லரசுகளின் பனிப் போரும் பேரழிவுகள் பற்றி அச்சமூட்டி எழுதப்பட்ட நாவல்களும் பாதகமான எத்தருணத்திற்கும் தயார்படுத்திக்கொள்ளும் எண்ணத்தை வலுவாக விதைக்க ஆரம்பித்தன. பொருளாதார அழிவிலிருந்து தப்பித்து வாழ்தல் அதில் ஒன்று. அமெரிக்காவின் பண மதிப்பு குறைந்துபோய் நாடே நொடித்து நோஞ்சானாகிவிட்டால் எப்படி வாழ்வது, மீள்வது என்பது குறித்து 1960-களில் சில நிறுவனங்கள் நாடு முழுவதும் பரவலாகக் கருத்தரங்குகள் நடத்தி அவர்களது ‘கல்லா’நிறைய டாலர்கள். பணம் வெறும் காகிதம் மட்டுமே. தங்கம், வெள்ளி இருந்தால் எல்லா நேரத்திலும் செல்வநிலை உத்தரவாதம் என்று அறிவுரை பரவ ஆரம்பித்தது.

அடுத்தது இயற்கைப் பேரழிவு, மனித யுத்த பேரழிவு போன்றவற்றிலிருந்து தப்பித்து வாழ்க்கையைத் தொடர்வது. எஃகினாலான கட்டுமானப் புகலிடங்கள், மற்றவர்கள் அதை உடைத்து உள்ளே நுழைந்துவிட முடியாதபடி அரண்கள், தடுப்புகள், ஊடுருவும் கயவர்களைத் தடுக்கப் பூமியில் குழிதோண்டிப் புதைக்கும் வெடிகள் என்று மூச்சு முட்டும் அளவிற்கு முன்னேற்பாடுகளும் தயாரிப்புகளுமாக, பல்லாயிரப் பக்கங்களுக்குத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

கெட்டுப்போகாத டின் உணவுகள், தண்ணீர், நீர் சுத்திகரிப்பு உபகரணம், உடை, ஆயுதங்கள், அதற்கான குண்டுகள், மருந்து, மருத்துவச் சாதனங்கள் என்பதன்றி இயற்கை உபாதையைக் கழிக்க 5 கேலன் பக்கெட்டுகள் என்றெல்லாம் விலாவாரியாகப் பட்டியல் இட்டு வைத்திருக்கிறார்கள். பட்டியலில் இருக்கிறதோ இல்லையோ அந்தப் பக்கெட்டுகளுக்கு மூடி இருப்பது அவசியம் என்பது என் பரிந்துரை.

சுருக்கமாகச் சொன்னால் ‘மாளாது வாழும் இயக்கம்’ என்பது ஒரு குடும்பம் தனக்கான ஒரு குட்டி நாட்டை உருவாக்கிக் கொள்வது போல் இருக்கிறது.

அமெரிக்கச் செஞ்சிலுவைச் சங்கம் இரண்டு வாரம் தாக்குப் பிடிக்குமளவு தயாராக இருங்கள் என்று இயற்கைச் சீற்றத்தைச் சமாளித்து வாழ்வதற்குப் பரிந்துரைக்கிறது. ஆனால் மாளாது வாழும் இயக்கத் தீவிரவாளர்களின் கற்பனையோ மூன்றாவது இருண்ட உலகம். எனவே அவர்களுடையது ஏழாண்டு காலத்திற்காவது தாக்குபிடிக்கும் திட்டம்.

ஒரு காலத்தில் மலையைக் குடைந்து இருப்பிடத்தை ஏற்படுத்தி வாழ்ந்த சமுதாயம் ஒன்று இருந்தது. அதுவும்கூட இறைவனின் சக்திக்கு எதிராய் நிலைக்க முடியவில்லை. வெகு எளிதாய் அழிக்கப்பட்டது. அதெல்லாம் மதத்தை நம்புபவர்களுக்கு என்று சொல்லி, இறைவனின் சக்தியை மறந்துவிட்டு இயற்கையின் சக்தியை எதிர்த்துச் சமாளிக்க மாளாது வாழும் இயக்கம் நாள்தோறும் தயாராகி வருகிறது.

குறைந்தபட்ச முன்னெச்சரிக்கையாக மெழுகுவத்தி, பிரெட், தண்ணீர் போன்றவற்றைச் சிறிதளவு சேகரம் செய்து கொண்டு, அதற்கெல்லாம் முதலாய்ப் பாவங்களைத் தவிர்த்து வாழ்வதைப் பற்றி இறை நம்பிக்கையின் அடிப்படையில் சிந்தித்தால் போதும்; அது எனக்கும் குடும்பத்துக்குமான சிறந்த survival kit என்கிறான் எனக்குள் ஒருவன். இரண்டு மில்லியன் என்னிடம் இல்லை என்பதனாலன்றி, விதி ‘அவன்’ வசம் என்பதால் நான் எனக்குள் ஒருவன் சொல்வதைக் கேட்கப்போகிறேன்.

o-o-o

“என்னாச்சு தெரிஞ்சுதா?” என்று கேட்டாள் ஜோன். அவள் முகமெல்லாம் திகில். தங்களது குண்டு வெடிப்புப் புகலிடத்திற்குள் இருந்தார்கள்.

“சரியான தகவல் தெரியலே. கனடாவிலிருந்து மெக்ஸிகோ வரை மேற்குப் பகுதி முழுவதையும் அசைச்சு நொறுக்கிடுச்சாம். அதான் கடைசியா வந்த செய்தி. ரேடியோ எடுக்கலை. மேற்குப் பகுதி நிலையங்கள் எல்லாமும் காலின்னு நினைக்கிறேன். மத்திய பகுதி அலைவரிசைகளின் சிக்னல் சிக்குது.”

வெளியே அமெரிக்காவின் மேற்குப் பகுதி சிதிலமடைந்து அழிந்து போயிருந்தது.

“ம்ம்ம்… அடுத்து நாம என்ன செய்ய?”

“கவலைய விடு. தப்பிச்சு வந்து புகுந்துட்டோம். நிறைய அடுக்கியிருக்கே. எடுத்துச் சாப்பிடு. ஜெனரேட்டர் மின்சாரம் இருக்கிறதால பிரச்சினை இல்லே. பொழுது போக படங்கள் ஆயிரம் கிடக்கு. போட்டுப் பாரு. நம்ம கிட்டே இருந்த எல்லாப் படங்களையும் க்ளவுட் மூலமா இங்குள்ள செர்வருக்கு டவுன்லோட் செஞ்சுட்டேன்.”

இதற்குத்தானே மாய்ந்து மாய்ந்து தயாராகியிருந்தார்கள். எதற்குப் பதட்டம், அச்சம்? தவிர அலுவலகம், பிஸினஸ் என்று பரபரக்கவும் தேவையில்லை. அடுத்து சில வாரங்கள் எந்தப் பரபரப்பும் இன்றிக் கழிந்தன. பொழுது விடிந்து, மறைந்தது. பறவையும், காற்றும், தூரத்தில் சில மிருகங்களின் சப்தமும் போக இவர்கள் இருவரது பேச்சு மட்டும்தான் ஓசை. எல்லாம் தணிந்திருக்கும் என்று உறுதியானதும் காரில் ஒரு நடை போய்வரலாம் என்று ஒருநாள் சென்றால் அவர்கள் வாழ்ந்த நகரம் மணல் வீடுகளைக் காலால் மிதித்து அழித்ததுபோல் அகோரமாகிக் கிடந்தது. பிண வாடையும் பொத்துக் கொண்ட கழிவுக் குழாய்களால் இதர நாற்றமும் காற்றில் கலந்து, மூச்சை அடைத்து வாந்தி வந்தது.

“யாராவது இருக்கிறீர்களா?” சரிந்து விழுந்திருந்த ஒரு கட்டிடத்தின் மீது ஏறி நின்று கத்தினான் ஜான்.

“ஈஸ் எனி ஒன் தேர்?” தானும் கத்தினாள் ஜோன்.

பேசிக்கொள்ளாமல் ஷெல்டருக்குத் திரும்பினார்கள். என்ன பேசுவது என்று தெரியவில்லை. அண்டை அயல் நண்பர்கள், செல்ல நாய்க்குட்டி, காஃபி கடை மங்கை என்று ஒருத்தர் பாக்கியில்லாமல் எல்லோரும் காணாமல் போயிருந்தார்கள். ஜானும் ஜோனும் மட்டும் பிழைத்திருந்தனர்.

டின்னைப் பிரித்து இரவு உணவு சாப்பிடும்போதும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. முடித்துவிட்டு நிமிரும்போது இருவரும் ஒருவரையொருவர் பார்க்க,

“உனக்கு ஓக்கேயா?” என்றான்.

“ஆம் அதான் சரி” என்றாள்.

ஆளுக்கொரு ரிவால்வரை எடுத்தார்கள். ஒருவரைநோக்கி ஒருவர் நீட்டி,

சுட்டான்; சுட்டாள்.

-நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 02 ஜனவரி 2015 அன்று வெளியான கட்டுரை

அவ்வப்போது – தொடர் கட்டுரைகள்

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

Related Articles

Leave a Comment