சூரியன் உதயமாவதற்குள் இளவரசர் தூரான்ஷாவும் அவருடன் சென்ற மூன்று குதிரை வீரர்களும் காஹிராவிலிருந்து பல காவத தூரம் பறந்துவிட்டனர். மிகவும் உயரிய இனத்தைச் சேர்ந்த

உன்னத அரபிக் குதிரைகள்மீதே அந்நால்வரும் காற்றினுங் கடிய வேகத்தில் ஷாமை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அக் குதிரைகளோ, அல்லது அவற்றின்மீது ஆரோகணித்திருந்தவர்களோ, தங்கள் ஆயுளில் இன்றுவரை இவ்வளவு மின்னல்வெட்டும் வேகத்தில் பறந்து பாய்ந்ததே இல்லை. எதிரிகள் காஹிராவின் எல்லையை மிதிப்பதற்குள் அவர்கள் திமஷ்க் சென்று சுல்தானை இங்குத் திருப்பியனுப்ப வேண்டுமென்றால், பறந்து செல்லாமல் பின் எப்படிச் செல்வார்கள்? பறப்பதற்குச் சிறகில்லாமையால் குதிரைமீது ஓடவேண்டியிருக்கிறதே என்னும் ஏக்கத்தால் இளவரசரும் அவருடன் சென்ற வீரர்களும் தரைமீது இவ்வண்ணமாகக் குதிரைகளை உதவியாக வைத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் பாய்ந்து பாய்ந்து சென்றனர். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் இப்படிப்பட்ட வேகத்தில் பாய்ந்து செல்வதற்குக் கூட உபயோகமில்லாத அசுவங்களையா ஐயூபிகள் வைத்திருப்பார்கள்! காஹிராவிலிருந்து புறப்பட்ட 24 மணி நேரத்தில் ஷாம் எல்லையை அவர்கள் எட்டிவிட்டார்கள். தரைமார்க்கமாகக் காஹிராவுக்கும் திமஷ்க்குக்கும் இடையே சுமார் 400 மைல் தூரமிருந்ததென்பதை நீங்கள் மறக்கக் கூடாது.

புராணங்களில் வருகிற புற்றீசல் போன்ற குழப்பக் கூட்டத்தினரைக் கண்ட கண்ட திக்கிலும் வைத்துக்கொண்டு, சென்ற இரண்டரை ஆண்டுகளாக மிஸ்ர் சுல்தானுடன் மாயப்போர் புரிந்துகொண்டிருந்த அந்த முஹம்மத் ஷா இதுவரை பிடிபடவில்லை. இறுதிவரை ஒருகை பார்த்து, அந்தத் துரோகியை வெட்டி வீழ்த்தாமல் தாய்நாடு திரும்புவதில்லையென்ற உறுதியான தீர்மானத்திலிருந்து ஸாலிஹ் சற்றுமே தளராமையால் இன்னமும் விட்டுக் கொடுக்காமலே அந்த ஷாவைப் பிடிக்க வலைவீசிக்கொண்டிருந்தார். அக் கயவனும் தன்னால் இயன்ற வகையாலெல்லாம் மாயாவித் தந்திரம் பல புரிந்து கொண்டு தலைமறைவாயிருந்துகொண்டே குழப்பமும் கலகமும் செய்தவண்ணமிருந்தான்.

முஹம்மத் ஷாவைப் பிடிக்க முடியவில்லையே என்னும் ஏக்கத்துடன் மேலும் மேலும் முயற்சி செய்துகொண்டிருந்த ஸாலிஹ் நஜ்முத்தீன், சற்றும் எதிர்பாராத விதமாகத் தம் மைந்தரும், அவருடன் கூட மூன்று குதிரை வீரர்களும் இரைக்க இரைக்கப் பெருமூச்செறிந்துகொண்டு தம்முன்னே வந்து நிற்பதைக்கண்டு ஆச்சரியமுற்று விட்டார். சளைக்காமல் ஓடிவந்த குதிரைகளின் கடைவாயில் வழிந்து பொங்கிய நுரையும், ஏறி வந்தவவர்கள் மூச்சுத் திணறத் திணறத் திக்கு முக்காடுவதும் அவரை இன்னம் அதிகமான அதிசயத்துள்ளே ஆழ்த்தின.

“மைந்தா! ஏன் இந்த அவசரம்? என்ன விசே­ஷம்?”என்று தம் குமாரரை இறுகத் தழுவிச் சாந்தமாய் விசாரித்தார் அவ்வரசர்.

“அபூ! மீண்டும் நசாராக்கள்!… தமீதாவைப் பிடித்து விட்டார்கள்… இந்நேரம் என்ன நடந்ததோ…”

“ஆ! என்ன, நசாராக்களா! தமீதா போய்விட்டதா! ஆ!”

“நேரங் கடத்துவதில் பயனில்லை, அபூ! தாங்கள் இக்கணமே காஹிராவில் இருந்தாக வேண்டும். பாவம், என் சிறிய தாயார் இந் நெருக்கடியான சந்தர்ப்பத்தில் நிலைமையை எப்படிச் சமாளிப்பார்? தயவுசெய்து உடனே செல்லுங்கள். இப்பொழுதே புறப்படுங்கள்! யோசிக்காதீர்கள். நான் இங்குள்ள அலுவல்களைக் கவனித்துக் கொள்கிறேன். கொஞ்சம் பேரை மட்டும் எனக்குத் துணையாக விட்டுவிட்டு, மீதிப் பட்டாளத்தைக் கையோடு கொண்டுபோய் அக் கிறிஸ்தவர்களை விரட்டுங்கள்! நிலைமை முற்றினால் ஆபத்து! இந்நேரம் அக் கிறிஸ்தவப் படையினர் காஹிராமீதே படையெடுத் திருந்தாலும் இருக்கலாம். ஓடுங்கள், ஓடுங்கள்!”

இடிவிழுந்த மரமேபோல் சாய்ந்து விழவேண்டிய நிலைமையிலே சுல்தான் இருந்தார். வந்த வீரர்கள் சுருக்கமாகவும் விளக்கமாகவும் லூயீ மன்னரின் படையெடுப்பை விவரித்துக் கூறினர். அவ்வளவுதான்! அவர் அன்று பகல் உணவையும் அருந்தாமல், தம்முடைய படைகளை உடனே மிஸ்ருக்குத் திரும்ப வேண்டுமென்று ஆக்ஞாபித்தார். சிற்றரசர் நாஸிரிடம் சுல்தான் விடைபெற்றுக்கொள்ளு முன்னே தம் மைந்தரிடம் சில உபதேசம் புரிந்தார். முஹம்மத் ஷாவைச் சிறைபிடிக்கத் தாம் இறுதியாகப் போட்டிருந்த திட்டத்தை விளக்கிக் கூறி, இப்போது அத் துரோகி எல்லாப் படையினரையும் இழந்து சில அத்தியந்த நண்பர்களுடன் எங்கோ ஒளிந்துக்கொண்டிருக்கிறானென்றும், இன்னம் பத்துப் பதினைந்து நாட்களில் அவனைப் பிடித்துவிடலாமென்றும், அந்த ஷாவைக் கைது செய்யாமல், அல்லது கொன்று தீர்க்காமல் தூரான்ஷா மிஸ்ருக்குத் திரும்பக்கூடாதென்றும் கட்டளையிட்டார். தந்தையின் உபதேசங்களையும் ஏவல்களையும் தூரான்ஷா கவனமாய்க் கேட்டார்.

“மைந்தா! அஞ்சாதே. ஆண்டவன் இருக்கிறான். அந்த ஷாவை நீ இன்னம் சில தினங்களில் பிடித்துவிட முடியுமென்பதை நான் நன்கறிவேன். எனினும், தேவைக்கு அதிகமான படையினரையே நான் இங்கே விட்டுச் செல்கிறேன். என்னெனின், மிஸ்ரில் அந்தக் கிறிஸ்தவர்கள் வாங்குகிற உதையில் ஒரு வேளை இங்கு ஓடி வந்தாலும் வருவார்கள். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் பயன்படுவதற்காகவே நான் இங்கே இச் சேனா பலத்தை விட்டுச் செல்லுகிறேன். நீ ஒன்றுக்கும் அஞ்சாதே! புலிக்கூட்டத்தின் முன் கேவலம் ஆட்டுக்குட்டிகள் என்ன செய்ய முடியும்? நீ தைரியமாக இரு. ஷாவை தப்ப விட்டுவிடாதே; மிஸ்ரில் அடிபட்டு புறமுதுகிட்டுத் தரைமார்க்கமாக ஒருவேளை அக் கிறிஸ்தவர்கள் இங்கு வந்தால், நீ உன் கைவரிசையை இங்குக் காட்டுவாயாக! ஆண்டவனே எல்லார்க்கும் நல்லருள் புரிவான். நான் சென்று வருகிறேன்.”

“அபூ! தாங்கள் கூறியபடியே நடக்கிறேன். ஆனால், என் மனம் எக்காரணத்தாலோ சாந்தியடையாமல் பதறிக் கொண்டிருக்கிறது.”

“பதறிக்கொண்டிருக்கிறதா? நீ காஹிராவிலிருந்து வேகமாய் வந்த காரணமாயிருக்கலாம். உனக்குக் கோழைத்தனம் இல்லையே!”

“அபூ! நான் வந்த வேகத்தில் சற்றுப் பலஹீனமுற்றிருக்கிறேனென்பது உண்மையே. ஆனால், அதனாலோ அல்லது கோழைத்தனத்தாலோ நான் பதஷ்டமடையவில்லை. என் மனம் ஏனோ சஞ்சலப்படுகிறது! அவ்வளவுதான்.”

சுல்தான் பரிகாசச் சிரிப்புச் சிரித்தார்.

“நீயா சஞ்சலமடைகிறாய்? அந்தப் பேடிப் பயல்கள் நம் ஸல்தனத்தை விழுங்கிவிடுவார்களென்றா சஞ்சலமுறுகிறாய்? அட, பைத்தியமே! நீ ஐயூபி வமிசத்தில் பிறந்துமா இப்படி அஞ்சுகிறாய்? அந்தக் கிறிஸ்தவ அரக்கர்கள் நல்ல மூமின்களை என்ன செய்துவிட முடியும்!”

“தந்தையே! யான் அதைக் குறிப்பிடவில்லை. தாதா ஸலாஹுத்தீன் சிலுவையுத்தம் ஜெயித்து இங்கே ஷாமில்தான் காலஞ் சென்றார். அப்பால் அவருடைய தம்பியும் அதேவிதமாக இங்கேயே உயிர் துறந்தார். இப்போது தாங்கள் இங்கிருக்கும் போதுதான் கிறிஸ்தவர்கள் அடுத்த யுத்தத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்…”

ஸாலிஹ் யோசித்தார். தம் மைந்தன் என்ன கூறுகிறான், அல்லது என்ன கருத்துப்பட இதையெல்லாம் பேசுகிறான் என்று எண்ணினார்.

“தூரான்! என் நேரத்தை வீணாக்காதே! நீ என்ன நினைக்கிறாயென்பதைத் திறந்து சொல்லிவிடு!”என்று கோபக் கனல் பொங்கக் கூறினார். இளவரசர் அக்குரலின் கடுமையைக் கேட்டுக் கலகலத்துப் போயினார்.

“ஒன்றுமில்லை. தாங்கள் தாராளமாய்ச் சென்று வாருங்கள் நான் சொல்ல வந்ததெல்லாம், ஆண்டவன் நமக்கிடும் சோதனைகளையெல்லாம், சுல்தான்கள் ஷாமில் இருக்கும் போது விடுகிறானே என்பதுதானாகும். வேறொன்றுமில்லை!” என்று தட்டித் தடுமாறி உளறிக் கொட்டினார்.

“இப்போது அப்படியொன்றும் எனக்கோ உனக்கோ ஆபத்தெதுவும் நேரிட்டு விடவில்லை. முன்பெல்லாம் கிறிஸ்தவர்கள் தரை மார்க்கமாக இங்கு வந்து போராடிவிட்டு, அப்பால் மிஸ்ரின் பக்கம் திரும்பினார்கள். இப்போது எடுத்த எடுப்பிலேயே அவர்கள் மிஸ்ர்மீது பாய்ந்திருக்கிறார்கள். இதில் என்ன இருக்கிறது?….. சரி, சரி; நீ பயப்பட வேண்டாம். உனக்கொன்றும் இங்கே குறைவு வராது. உன் பாட்டனார்களைப் போல் நீ இங்கு மாளமாட்டாய். நான் போய்வருகிறேன். நான் கூறியவற்றைக் கவனமாய் ஞாபகம் வைத்துக்கொள்!” என்று சுல்தான் தம் மைந்தரிடம் விடை பெற்றுக்கொண்டு, அவரைக் கட்டித் தழுவினார். துரான்ஷாவின் கண்களிலிருந்து இரண்டொருதுளி கண்ணீர் வழிந்தது.

மணிக்கு அறுபது மைல் வேகத்தில் வீசுகிற சூறாவளிக் காற்று எப்படிப்பட்ட புகைத் திரளைப் பாலைவனத்தில் கிளப்பிவிடுமோ, அப்படிப்பட்ட புழுதிப் படலத்தைக் கிளப்பிக் கொண்டே கடிய விரைவுடன் சுல்தான் ஸாலிஹும் அவருடைய படையினரும் அவ் அரப்நாட்டு மணற் காட்டினூடே காஹிரா நோக்கிப் பாய்ந்த வந்துகொண்டிருந்தனர். முன்னம் முஹம்மத் ஷாவை எதிர்ப்பதற்காகச் சென்றபோது அவர்கள் ஓடின வேகத்தைவிட மிகவதிகமான வேகத்துடனேதான் இப்போது மிஸ்ர் நோக்கி வந்துகொண்டிருந்தனர்.

ஷஜருத்துர் ஜீலானீயைக் காவலில் வைத்த பின்பு யுத்தத்துக்கான சகல முஸ்தீபுகளையும் செய்துவிட்டு, சுல்தானை அழைத்துவரத் தூரான்ஷாவையும் ஷாமக்கு அனுப்பிவிட்டு, அரண்மனையிலிருந்து வெளியேறி, நீல நதி தீரத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த செங்கோட்டையின் நீண்ட கோபுரத்தின் உச்சியில் ஏறி, வடக்குப் பக்கம் பார்வையை ஓட்டிக் கிறிஸ்தவர்கள் இப்பக்கம் வருகிறார்களோவென்று ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தார். உளவர்கள் ஒருவரும் இன்னம் திரும்பிவந்து செய்தியொன்றும் சொல்லாமையால், கிறிஸ்தவர்கள் தமீதாவைவிட்டு இன்னம் உள்நோக்கி முன்னேறவில்லையென்று ஷஜருத்துர்ரும், மந்திரிமார்களும் உணர்ந்து கொண்டார்கள். சுல்தான் ஸாலிஹ் காஹிராவுக்கு வந்து சேர்கிற வரையில் அக் கிறிஸ்தவர்கள் இங்கு வந்துவிடாமலிருக்க வேண்டுமே என்று ஆண்டவனிடம் கையேந்திய வண்ணம் துஆக் கேட்டுக்கொண்டிருந்தனர். அந்தக் கோபுரத்தில் நின்றபடியே தினமும் தூரத்தில் சிலுவைக்கொடி தெரிகிறதா, அல்லது இளம்பிறைக்கொடி தெரிகிறதா? என்று எல்லாரும் ஆவலுடன் நோக்கிக்கொண்டேயிருந்தனர்.

மூன்றாவது நாள் விடிந்ததும் அரசியாருக்குச் செய்தி எட்டிற்று : கிறிஸ்தவர்கள் தமீதாவைப்பிடித்துவிட்ட மகிழ்ச்சியின் பெருக்கத்தால் அவர்கள் நிலைகுலைந்து, பேரானந்தமுற்று, அங்கேயே சுகபோக வாழ்வைக் குடித்துச் சுகித்து ஆனந்தப் பெரு வெள்ளத்தில் நீந்திப் பெருமிதமடைந்து போயிருக்கின்றனர் என்றும், அவர்கள் இருக்கிற நிலைமையைப் பார்த்தால் காஹிரா மீது படையெடுக்க நாட்டங்கொண்டிருப்பதாகச் சற்றும் தோன்றவில்லையென்றும் ஓர் உளவன் வந்து சொன்னான். இருந்தாலும், அவர்களை நம்புவதற்கில்லையென்றும், எந்நேரத்திலும் அன்னவர்கள் நினைத்தாற்போலக் குபீரென்று பாய்ந்து விட்டாலும் பாய்ந்துவிடக் கூடுமென்றும் அவன் ஐயத்துடன் அறிவித்தான்.

இச் செய்தி கேட்டு, ஷஜருத்துர்ரின் முகம் மலர்ந்தது. சுல்தான் வருவதற்குள் கிறிஸ்தவர்கள் இங்கே வந்துவிட மாட்டார்கள் என்னும் இம் மகிழ்ச்சிக்குரிய செய்தியைவிட வேறு எச் செய்திதான் அரசியார்க்கு அதிகமான உளத்திருப்தியையும் மனச்சாந்தியையும் அளித்திருக்க முடியும்?

மேற்குறிப்பிட்ட சந்தோஷ சமாசாரம் கேட்ட மறு நிமிஷத்தில் மற்றொரு சேவகன் ஷஜருத்துர் முன்னே வந்து நின்று ஸலாம் போட்டான்.

“யா ஸாஹிபத்தல் ஜலாலத்தில் மலிக்கா! நம் சுல்தானின் படைகள் ஷாமை விட்டுப் புறப்பட்டு விட்டன. நாளை மாலைக்குள் அல்லது நள்ளிரவுக்குள் சுல்தான் இங்கே வந்து சேர்ந்து விடுவார். இந்தச் சுப செய்தியை முற்கூட்டியே தங்களுக்கு அறிவிக்கச் சொல்லி என்னை மலிக்குஸ் ஸாலிஹ் அனுப்பி வைத்தார்,” என்று அச் சேவகன் பயபக்தியுடன் மொழிந்து நின்றான்.

இது கேட்டதும், ஷஜருத்துர்ருக்கு இரு செவிகளிலும் அமுதச் சாறு பிழிந்து விடப்பட்டது போன்ற சொல்லொணா மகிழ்ச்சி பொங்கிற்று. சுமக்க முடியாத சுமையைக் கழுத்தொடியவும் முதுகு நெகிழவும் சுமந்து செல்பவர் சுமை தாங்கியைக் கண்டதும் அடையும் ஆத்ம திருப்தியான அகமகிழ்வை விட ஷஜருத்துர் பெற்றுக்கொண்ட உள்ளத்துணர்ச்சி மிக்கு நின்றது. பாவம்! ஓர் அனாதையான யுவதி, அதிலும், அரசபாரம் என்னவென்பதையே உணராத சாதாரணப் பெண்மணி இத்தகைய இசகுபிசகான பேரிடைஞ்சலில் மாட்டித் திருதிருவென்று விழித்துக்கொண்டிருக்கையில், சுல்தான் வரவை எவ்வளவு ஆவலுடன் வரவேற்றிருப்பாரென்பதை எங்ஙனம் முற்றும் வருணித்து முடித்தல் முடியும்?

அப்பால் நகர்ந்த ஒவ்வொரு வினாடியும் ஒரு யுகமேபோல் ஷஜருத்துர்ருக்குத் தோன்றிற்று. பொறுமையின்மையாலோ, கணவரைப் பிரிந்து பல நாட்களாகி விட்டதன் ஆவல் மிகுதியாலோ, அல்லது தம் சிசு அகால மரணமடைந்த செய்தியை நேரில் சொல்லி ஆறாத்துயரை ஆற்றிக்கொள்ள வேண்டுமென்னும் ஏக்க மிகுதியாலோ ஷஜருத்துர் அப்படி ஸாலிஹை எதிர் நோக்கி எதிர்பார்த்து நிற்கவில்லை. ஆனால், சிலுவை யுத்த வேஷம் பூண்டு மிஸ்ரிலே காலடி எடுத்து வைத்த காதகர்கள் காஹிராவுக்குள் நுழைவதற்குள், சுல்தான் படைகளைக் கொண்டு வந்து, ஒரு பகுதியை உடனே தமீதாவுக்கனுப்பி அந்நகரை மீட்க வேண்டுமே என்னும் ஓரே ஆவல் மட்டுமே அவ்வரசியின் உள்ளத்துள் துடிதுடித்துக்கொண்டிருந்தது.

துடித்துக்கொண்டிருக்கிற ஷஜருக்குத் திருப்தியூட்டத் தக்க வகையிலே மேலும் மேலும் சுப செய்திகள் வந்து கொண்டேயிருந்தன. கிறிஸ்தவர்கள் தமீதாவை விட்டு நகரவேயில்லை என்னும் செய்தி தொடர்ச்சியாய்ப் பல உளவுப் பேர்வழிகளால் கூறப்பட்டு வந்ததேபோல, சுல்தானின் படைகள் காஹிராவை நெருங்கிக் கொண்டேயிருக்கின்றன என்னும் சங்கதியும் வந்துகொண்டேயிருந்தது.

இறுதியாக, அந்த ஜமாதியுல் ஆகிர் பிறை 15-இல் (கி.பி. 23-9-1249) களங்கமிலா நீல வானில் சிறிதே தேய்ந்த வட்டவடிவமான சந்திரன் தன் முழுத் தேஜஸுடன் ஜொலித்துக்கொண்டிருக்க, கடல்போன்ற நீலநதி வெள்ளியை உருக்கி வார்க்கப் பெற்றதைப் போன்ற காட்சியைக் கண்ணுக்கு விருந்தாக ஊட்டிக்கொண்டிருந்த வேளையில் இரவு பதினொரு மணிக்கு மலிக்குஸ் ஸாலிஹ் நஜ்முத்தீன் தம் பரிவாரங்களுடன் காஹிராவுள் வந்து நுழைந்தார். பருவமழையில்லாமல் வெய்யோனின் கதிர்களுக்கு இரையாகி வாடி வதங்கும் நேரத்தில் பயிர்களின்மேல் கனத்த மழை கொட்டினால் அஃதெவ்வளவு ஆனந்தமளிக்குமோ, அதனினும் அதிகமான பேரானந்தப் பெரு மகிழ்ச்சியை அக் காஹிராவாசிகள் பெற்றுக் கொண்ட காரணத்தால் தம்மையறியாமலே, வானம் அதிரவும், நீலநதி எதிரொலியிடவும், அசைவனவும் அசையாதனவுமாகிய அத்தனை உயிர்களும் கிடுகிடுக்கவும் “அல்லாஹு அக்பர்!” என்னும் தக்பீரைப் பேரிடிபோல் முழக்கினர்.

அரண்மனையின் உப்பரிகையின் மாடத்திலிருந்தவாறு தம் கயற்கண்களை அகல விழித்து ஷாம் திக்கையே ஏக்கத்துடன் நோக்கியவண்ணமிருந்த ஷஜருத்துர் சுல்தானின் வருகையைக் கண்டு மேனி குலுங்கினார். அவர் மனம் அந் நிமிஷத்தில் எப்படி இருந்திருக்குமென்பதை நீங்களே யூகித்தறிந்து கொள்ளுங்கள்.

சிலுசிலுவென்று வீசும் தென்றல் காற்றால் சிலுப்பி விடப்பட்ட கூந்தல் முன்னெற்றியிலே தவழ்ந்து விளையாட, ஆனந்தத்தாலும் ஆத்திரத்தாலும் கண்களின் கீழிமைகள் நிறையக் கண்ணீர் பொங்கி நிற்க, பலப்பலவித எழுவகையுணர்ச்சிகள் அவ் வம்மையாரின் அகத்தை நெகிழ்த்திட ஷஜருத்துர் சுல்தான் ஸாலிஹைக் கட்டித் தழுவி மௌனமாய் நின்றார். கல்லினுங் கடிய வைராக்கிய நெஞ்சம் படைக்கப் பட்டவரென்று வருணிக்கப்படும் ஸாலிஹ், தாம் கலீலையிழந்த புத்திர சோகத்தால் தம்மையறியாமலே விம்மிவிட்டார். சுல்தானயிருந்தாலென்ன, சுல்தானாவாயிருந்தாலென்ன – அவர்களும் மனிதர்களே அல்லவோ?

அப்பால் நடந்த நிகழ்ச்சிகள் மின்னல் வேகத்திலே நிகழ்வுறலாயின. ஷாமிலிருந்து திரும்பி வந்த படைகள் இரவு மட்டும் ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டுமென்றும், பொழுது புலர்ந்ததும் அவை தமீதா நோக்கிச் சென்று அக் கிறிஸ்தவர்களை விரட்டவேண்டுமென்றும் முதற்கட்டளை பிறந்தது.

அடுத்தபடியாக, சுல்தான் ஷாமில் இருந்த காலத்தில் அவசியத்தையும் அவசரத்தையும் கருதி ஷஜருத்துர் ஏற்படுத்திய சர்வசட்டதிட்டங்களும் சுல்தானின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டன. சுல்தான் தவறேதும் கண்டு பிடிக்கத்தக்க குறையை ஷஜருத்துர் செய்திருந்தாலன்றோ அவர் மாற்றுச் சட்டம் பிறப்பித்திருப்பார்!

மூன்றாவதாக, மம்லூக்குகளின் பிரச்னை எழுந்தது. இது பெரிய விஷயமாதலால், படைகள் தமீதா நோக்கிச் சென்ற பின்னர் நுணுக்கமாகக் கவனிக்கப்படுமென்று தாத்காலிகமாக அதனை ஒற்றி வைத்துவிட்டு, அடுத்த விஷயத்தை எடுத்துக்கொண்டார்.

முஸ்லிம் படைகள் தமீதாவில் போர்புரியும் போதெல்லாம் காஹிராவையும் தற்காத்துக்கொள்ள வேண்டுவது மிகவும் அத்தியாவசிய மென்பதைச் சரித்திரம் ஏற்கெனவே கற்பித்திருப்பதால், ஒருவேளை, எதிரிகள் நீலநதிவழியே காஹிராவுக்குள்ளே புகுந்து விடுவதானாலும் அப்போதும் நிலைமையைச் சமாளிக்க வேண்டுமே என்று சுல்தான் கவலைப்பட்டார். ஆனால், ஷஜருத்துர்ரின் சமயோசித புத்தியால் அத்தனை காஹிராவாசிகளும் ஏற்கெனவே எல்லாவிதமான நடவடிக்கைகளுக்கும் ஆயத்தமாய்க் காத்திருக்கிறார்களென்று கேள்வியுற்றதும் அகமகிழ்ந்தார்.

பின்னர்க் கடைச் சாமத்திலே, வந்த அலுப்புத்தீர அவர் படுத்து நன்றாய் உறங்கி விழித்தார்.

பிறைக் கொடிகளை ஏந்திக் கொண்டு ஆயிரக்கணக்கான குதிரைப் படைகளும், பல்லாயிரக்கணக்கான காலாட்படைகளும் சுல்தானின் ஆசியைப் பெற்றுக்கொண்டு, ஜாஹிர் ருக்னுத்தீன் என்னும் மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமான சேனாபதியின் தலைமையிலே தமீதா நோக்கித் தற்காப்புப் போர் புரிவதற்காகப் புறப்பட்டு விட்டன. இதில் விசேஷம் என்னவென்றால், அப்படைத் தலைவருட்பட அச் சேனையிலே சுல்தானின் மம்லூக்குகளாகிய அடிமைகள் அதிகம் நிரம்பியிருந்தனர். அவர்களுக்கு அம் மன்னர் மீதிருந்த பக்தியின் பெருக்கத்தால், பழைய காலத்து அமீர்களைப் போன்ற சுயநல நோக்கமின்றி, உண்மையான மெய் விசுவாசத்துடனே வீரப்போர் நிகழ்த்த விரைந்து சென்றனர்.

ஐயூபிகளின் ஆட்சியில் முதன் முதலாக மம்லூக்குகள் சுல்தானுக்காகப் போர் புரியச் சென்ற முதற் சம்பவமும், மிகமிக முக்கிய நிகழ்ச்சியுமாகிய இவ்வைபவத்தை நேயர்கள் நன்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டுவது அத்தியாவசியமாகும்.

படைகளை வழியனுப்பிவிட்டு, ஸாலிஹ் அமைதியுடன் அரண்மனைக்குத் திரும்பினர்.

அவர் இத்தனை நாட்களுக்குப் பின்னர் அரியாசனம் ஏறியபோது அவரிடம் கொண்டு வரப்பட்ட முதல் வழக்கு ஷெய்கு ஜீலானீயின் விவகாரமாகும். விலங்கு பூட்டப்பட்ட கைகளுடன் அந்த மாஜீ கவர்னர் சென்னி கவிழ்ந்து கொண்டு சுல்தான் முன்பினில் நின்றுகொண்டிருந்தார். இப்போது ஷஜருத்துர் வெறும் அரசர் பத்தினியாகையால், அவர் எதிலும் கலந்து கொள்ளாமல், அரசவை மண்டபத்தின உப்பரிகையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். ஸாலிஹின் முகம் சகிக்கொணாக் கடுங் கோபத்தால் அனற் பிழம்பைக் கக்கியது.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<அத்தியாயம் 28>> <<அத்தியாயம் 30>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment