Chapter14

“ஷஜருத்துர்! மலை கலங்கினாலும் மனங் கலங்கக் கூடாதென்பது மிக உண்மையே. எனினும், அப்போதைய நிலைமையில் எவர்தாம் மன நிம்மதியுடன் வாளா

இருக்கமுடியும்? மக்கள் படுகிற பாட்டைப் பார்த்து நான் மனமுருகிப் போய், மன்னரிடம் சென்றேன். அந்தக் கிறிஸ்தவர்களுடன் எப்படியாவது சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டுமென்று நான் அவரிடம் வாதாடினேன். அவரோ, பிடிவாதமாக எப்படியும் எதிர்த்து யுத்தம் புரிந்தே தீரவேண்டுமென்று சொல்லி, தக்க ஆயத்தங்கள் அனைத்தையும் செய்துவந்தார். தம்முடைய மற்றிரு சகோதரர்களின் உதவியைக் கோரி, ஆட்களையும் அனுப்பிவிட்டார்.

ஆனால், அவர் எதிர்பார்த்தபடி எதுவும் நடைபெறவில்லை; எவ்வளவு அதிக உதவி வந்தாலும் அந்த மாபெரும் கிறிஸ்தவப் படையினரைத் தோல்வியுறச் செய்ய முடியாதென்பதைக் கண்டுகொண்டார். ஏனெனில், சுல்தான் காமிலின் சகோதர்கள் அனுப்பிய முழுப் படையின் உதவியைக் கணக்கிட்டுப் பார்த்தால்கூட, எதிரிகளின் எண்ணிக்கையே பன்மடங்கு பெருக்கமாக இருந்தது. எனவே, சுல்தான் இப்போது நிஜமாகவே அதைரியமடைந்துவிட்டார்.

ஓரிரவு அவசரக்கூட்டம் கூட்டப்பட்டது. மீண்டும் அக்கிறிஸ்தவப் பிரதிநிதியை வரவழைப்பதென்றும், போர் நிறுத்தத்துக்கு என்ன நிபந்தனைகளை அவர் விதிக்கிறாரென்பதைத் தெரிந்து, அதன்படி நடந்து, மிஸ்ரின் ஸல்தனத்தைக் காப்பாற்றுவதென்றும் ஏகமனதாக நாங்கள் அனைவரும் தீர்மானித்தோம்.

அரசவைக்கு அந்தக் கிறிஸ்தவப் பிரதிநிதியாகிய கர்தினால் பெலேஜியஸ் வந்துசேர்ந்தார். அவர் முன்னர் இறுதியாகச் சூளுறவு செய்து கூறிய வார்த்தைகள் வீண்போகவில்லை என்பதை அவர் அறிந்திருந்ததனாலும், வெற்றிக்குமேல் வெற்றியைத் தம் படையினர் அடைந்து வருவதை அவர் கண்டு இறும்பூதெய்தி வந்தபடியாலும், எல்லையற்ற தற்பெருமையுடனும் தலைகனத்த மண்டைக் கிறுக்குடனும் அந்தப் பிரதிநிதி இதுபோது காணப்பட்டார். தமீதா முற்றுகையின் போதே மிகவும் அக்கிரமமான நிபந்தனைகளை விதித்த அவர் இப்போது காஹிராவைப் படையெடுத்துவரும் படையினரைத் தடுத்துநிறுத்த இன்னும் எத்தகைய குரூரமான நிபந்தனைகளை விதிப்பாரோவென்று நாங்கள் அளவற்ற கவலையோடுதான் எதிர்பார்த்து நின்றோம்.

நான் ஏற்கெனவே உன்னிடம் தெரிவித்ததுபோல் என்றென்றுமே நான் சுல்தானின் தனி மதிப்புக்கும் சலுகைக்கும் பாத்திரமானவனாய் இருந்து வந்தமையால், சுல்தான் என்னையே பக்கத்தில் அமர்த்தி வைத்துக்கொண்டு, தம் சார்பாக அக் கிறிஸ்தவப் பிரதிநிதியிடம் பேச்சு வார்த்தை நிகழ்த்தும்படி கேட்டுக்கொண்டார்; நானும் அந்தக் கோரிக்கைக்கு இணங்கி, அரசாங்கத்தின் சார்பாகப் பேசினேன்.

சென்ற முறையைவிட இந்த முறை அந்தப் பிரதிநிதிக்கு அதிகமான அகம்பாவமும் திமிரும் ஏறிப்போயிருந்தன என்பதை நான் நன்கு கண்டுகொண்டேன். ஏனென்றால், முன்னர் அந்தப் பிரதிநிதி எந்த எந்த நிபந்தனைகளை விதித்தாரோ, அவற்றையெல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோமென்றும், ஆனால், அவ்வெதிரிகள் கைப்பற்றியுள்ள தமீதாவை எங்களிடம் விட்டுவிடவேண்டுமென்றும் நான் கேட்டுக் கொண்டதைக்கூட அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

“ஏ அமீரே! சென்ற முறை நான் விதித்த நிபந்தனைகள் அநியாயமானவை என்றும், அக்கிரமமானவை என்றும், போக்கிரித்தனமானவை என்றும், இன்னும் என்னென்னவோ எல்லாம் நீங்கள் பழிசுமத்தினீர்கள். உங்கள் விடாக்கண்டன் தன்மையாலேயே தமீதாவின் நாசத்தை வரவழைத்துக் கொண்டீர்கள். இப்போது நாங்கள் தமீதாவைக் கைப்பற்றிய பின்னர் என் பழைய நிபந்தனைகளை நிறைவேற்றுவதாகக் கூறி, அந்த நகரையும் நாங்கள் விட்டு விடவேண்டுமென்றால், அது நடக்குமா? அந்தப் பழைய நிபந்தனைகள் காலாவதியாகி விட்டன. எனவே, இனி நீங்கள் காஹிராவையும் மிஸ்ரையும் காப்பாற்றிக்கொள்ள நாடினால், நான் இப்போது கூறுகிற புதிய நிபந்தனைகளை ஏற்றாக வேண்டும்” என்று அந்தப் பிரதிநிதி சொன்னார்; அதன் பின்னர் அவர் அந்தப் புதிய நிபந்தனைகளின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போனார்.

எனக்கோ இன்னது செய்வதென்று ஒன்றுந் தோன்றவில்லை. ஒருவார காலம் பேச்சுவார்த்தை நீடித்து நடந்தும், ஒரு முடிவும் ஏற்படவில்லை. அன்று கடைசியாக நம் சுல்தான் காமில் தாமே அந்தப் பிரதிநிதியைப் பார்த்து, “சரி; அவையெல்லாம் இருக்கட்டும். நாம் இதுமட்டும் இறுதியாகக் கூறுகிறோம்; எம்முடைய பெரிய தந்தை ஸலாஹுத்தீன் அந்த மூன்றாவது சிலுவை யுத்தத்தில் எந்தெந்தப் பிரதேசங்களைக் கைப்பற்றினாரோ, அந்தப் பிரதேசங்களை நாம் அப்படியே திருப்பித் தந்துவிடுகிறோம். போப்பின் பிரதிநிதியாகிய நீரும் அதற்குப் பிரதியாக இப்போது கைப்பற்றியிருக்கிற தமீதாவைத் திருப்பி எங்களுக்குக் கொடுத்துவிட்டு. உங்கள் நாட்டுக்குத் திரும்பிவிடுங்கள். ஏனென்றால், எங்கள் பெரிய தந்தையாரின் காலத்தில் நீங்கள் இழந்த பிரதேசங்களைத் திரும்பப் பெறத்தானே இப்படி அடுத்தடுத்துப் படையெடுத்து வருகிறீர்கள்?” என்று வெகு தாரளமாகவும் மனவொருமையுடனும் கூறினார்.

எனக்கு அந்த விஷயம் அறவே பிடிக்கவில்லை. ஏனெனில், சுல்தான் ஸலாஹுத்தீன் சொல்லொணாக் கஷ்டங்களுக்கெல்லாம் ஆளாகி, எல்லா இடையூறுகளையும் இடுக்கண்களையும் பொறுத்துக்கொண்டு அவ்வளவு பெரிய புகழ்மிக்க வெற்றியை நிலைநாட்டிச் சென்றிருக்க, ஒரே வினாடியில் அத்தனையையும் விட்டுக்கொடுத்து விடுவதாகக் காமில் கூறினால், நான் எப்படி ஆமோதிப்பேன்? எனினும், வேறுவழி ஏதுமே எனக்குத் தோன்றாமையால், பேசாமல் இருந்துவிட்டேன். ஆனால், அக் கிறிஸ்தவப் பிரதிநிதிக்குமட்டும் பேராசை தணியவேயில்லை. சுல்தான் விட்டுக்கொடுப்பதாகக் கூறுவது அவரது பலவீனத்தையே காட்டுகிறதென்று அந்தப் பிரதிநிதி எண்ணிக்கொண்டார். எனவே, அப் பலவீனத்தைப் பயன்படுத்தி, காஹிராவையே கைப்பற்றி, மிஸ்ரின் சுல்தானையே போர்க் கைதியாக்கி, அவரையே கொண்டுபோய்ப் ‘போப் பாண்டவர்’ திருமுன்னர் நிறுத்தவேண்டுமென்னும் பொல்லாத எண்ணம் அந்தக் கிறிஸ்தவர் மனத்துள் எழுந்துவிட்டது. பேராசைக்கு ஓர் எல்லையில்லை அல்லவா?

“என் நிபந்தனைகள் எல்லாவற்றையும நீர் ஏற்றே ஆகவேண்டும். நான் கடுகளவும் இதில் விட்டுக்கொடுக்கப் போவதில்லை. இஷ்டமிருந்தால், கௌரவமாக இப்போதே அந் நிபந்தனைகளையேற்று, எங்கள் போப்பாண்டவருக்கு அடிபணியுங்கள். இல்லையேல், எங்கள் படைகளை இக் காஹிராவின் எல்லையில் சந்தித்துப் போரிட்டு வெற்றி கொள்ளுங்கள். ஆனால், இதுமட்டும் நினைவிலிருக்கட்டும் : நடக்கப் போகிற யுத்தத்தில் நீர் தோல்வியடைந்தால், எம்மிடம் ஈட்டுப் பொருளாயிருக்கும் உம் மைந்தன் ஸாலிஹை மாத்திரம் நாங்கள் கொண்டுபோய் விடுவோமென்று நினையாதீர்; நீரும், உம் குடும்பமும், உம்முடைய அமீரும், ஏனைப் பிரமுகர்களும் ஆகிய அனைவருமே கைதியாக்கப்பட்டுப் பொன்விலங்குடனே ரோமாபுரிக்குக் கொண்டு செல்லப்படுவீர்களென்பதை மறக்க வேண்டாம். சென்றமுறை நான் தமீதா விஷயமாக உம்மை எச்சரித்தபோது, நீர் எம்மைச் சட்டைசெய்யவில்லை. ஆனால், அதனால் விளைந்த முடிவுகளை நீரே இப்போது காண்கின்றீர். அதேபோல், இப்போது நான் விடுக்கிற எச்சரிக்கையை நீர் பொருட்படுத்தாவிட்டால், அப்புறம் என்ன நடக்…”

சுல்தான் காமில் அதற்குமேல் அந்தக் கிறிஸ்தவரை பேச விடவில்லை. கோட்டைக் கதவு தடாரென்று சார்த்தப்படுவதேபோல், அக் கிறிஸ்தவரின் பேச்சைக் குறுக்கே தடுத்துவிட்டார் : “வாயை மூடும், ஏ கிறிஸ்தவரே! நன்று, நன்று. ஏற்றுக்கொண்டோம் உமது அறைகூவலை! இந்த நிமிஷமே நீர் வெளியேறிவிடுவீராக. நாளைப் போர்க்களத்தில் சந்திப்போம். ஆண்டவன் எவர் பக்கம் இருக்கிறானென்பதை நாம் பார்த்துவிடுவோம்.”

இவ் வண்ணமாக அந்த இறுதி முயற்சி தோற்றுவிட்டது. எனவே, அக் கிறிஸ்தவர்கள் இன்னும் அதிகமான ஆள்களையும் பொருள்களையும் திரட்டிக்கொண்டு, ஹிஜ்ரீ 619-ஆம் ஆண்டில் (கி.பி. 1221 ஆகஸ்ட்) இந்தக் காஹிராவுக்கு மிக அருகிலே வந்து பாடிவீடு நிர்மித்துவிட்டார்கள். இனி யுத்தத்தின்போது என்ன நிகழுமோ என்று பயந்து, சுல்தான் காமில் தாம் முன்னர் விடுத்த பிரகடனத்தை மாற்றி, எல்லா வயோதிகர்களையும், பெண்களையும், சிறுவர்களையும், பிணியாளிகளையும் காஹிராவைவிட்டு வெளியேறி, ஷாம் அல்லது (ஹல்ப்) அலெப்போவுக்குச் சென்றுசேரும்படி கட்டளையிட்டுவிட்டார்.

எதிரிகளுக்கும் எங்களுக்கும் பொதுவாக இந்த நீலநதி மட்டுமே வியாபித்திருந்தது. எனவே, அல்லாஹ் எங்களையெல்லாம் காப்பாற்றி, இஸ்லாத்தை நிலைத்திருக்கச் செய்ய நாடியிருப்பானாகில், அவன் இந்த நீலநதியைக் கொண்டுதான் காப்பாற்ற வேண்டுமென்று நாங்கள் நினைத்தோம். வீர ஸலாஹுத்தீன் வம்சத்தில் தோன்றிய மற்றோர் ஐயூபி சுல்தான் மிஸ்ரின் ஸல்தனத்தையே பறிகொடுத்தாரென்ற பழிக்குத் தாம் ஆளாகவேண்டி வந்ததேயென்று சுல்தான் காமில் கண்கலங்கி நைந்துருகி நின்றுகொண்டிருந்தார்.

(தொடரும்)

மறுபதிப்பு: சமரசம் – 16-31 மார்ச் 2012

<<அத்தியாயம் 13>>     <<அத்தியாயம் 15>>

 <<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment