தோழர்கள் – 45 உத்மான் பின் மள்ஊன் (ரலி)

Makkah Aerial View
45. உத்மான் பின் மள்ஊன் (عثمان بن مظعون)

க்காவில் ஒரு நாள். கவிமடம் களை கட்டியிருந்தது. அவர்கள் மத்தியில் கவிஞன் ஒருவன் கவிதை ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தான்.

குரைஷிகள் மத்தியில் கவிஞர்களுக்கும் கவிதைக்கும் இருந்த கீர்த்தி, பெருமை பற்றியெல்லாம் முன்னரே தோழர்கள் சிலரது வரலாற்றின் இடையே பார்த்திருக்கிறோம். மது, மாது, கவிதை….. அவர்களுக்கு அவை தலையாய பொழுதுபோக்கு.

“அல்லாஹ்வைத் தவிர மற்றவை அனைத்தும் பொய்யே.”

“நீ உண்மையை உரைத்தாய்” என்று கூட்டத்திலிருந்த ஒருவர் ஆமோதித்தார்.

“இன்பம் அனைத்தும் நிலையற்றதே” என்று தொடர்ந்தது கவிதை.

முந்தைய வரியை ஆமோதித்தவர் இப்பொழுது இடைமறித்தார். “இது பொய். சுத்தப் பொய். சொர்க்கத்தில் உள்ள இன்பம் நிலையானது.”

கவிஞனுக்குக் கன்னாபின்னாவென்று எரிச்சல் ஏற்பட்டுப் போனது. அது, அவர் குறுக்கிட்டதால் மட்டுமின்றிக் கவிதையில் குற்றம் கண்டுபிடித்ததற்காவும். குரைஷிகளைப் பார்த்து, உசுப்பேற்றும் விதமாய் அந்தக் கவிஞன் ஏதோ சொல்ல, அவர்களுள் ஒருவன் எழுந்து இடைமறித்தவரைப் பார்த்து உரத்த குரலில் திட்டினான். பதிலுக்கு இவரும் பேசினார். பேச்சு, ஏச்சாக மாறி குரைஷிகளின் அந்தச் சபை நம் நாட்டு மக்களவை, சட்டசபை போல் ஒரே களேபரம். அது மிகைத்துப்போய், குரைஷி குலத்தவன் கவிதையை ஆட்சேபித்தவரின் கண்ணிலேயே பலமாகத் தாக்கினான். ரத்தக்களறியானது கண். இதையெல்லாம் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் குரைஷிக் குல முக்கியப் புள்ளி ஒருவன் – வலீத் இப்னு முகீரா.

இத்தகைய அசம்பாவிதம் அவருக்கு ஏற்படும் என்று அவனுக்கு ஓர் அனுமானம் இருந்திருந்தது. அடிபட்டவரை நெருங்கி, “என்னுடைய காப்புறுதியை நீ முறித்துக்கொள்ளாமல் இருந்திருந்தால் உன் கண்ணுக்கு இந்தக் கதி நேர்ந்திருக்காது.”

ஆனால், ஒற்றைக் கண்ணைப் பொத்திக்கொண்டு அவர் சொன்ன பதில் வலீத் இப்னு முகீரா எதிர்பாராதது.

oOo

உத்மான் பின் மள்ஊன் ஜுமஹி கோத்திரத்தைச் சேர்ந்தவர். ஃகவ்லா பின்த் ஹகீம் என்ற பெண்மணியைத் திருமணம் புரிந்துகொண்டு சீரும் சிறப்புமாய் மக்காவில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். இவருக்கு ஸைனப் பின்த் மள்ஊன் என்பவர் சகோதரி. ஸைனபின் கணவர் உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு. உமர் – ஸைனப் தம்பதியருக்குப் பிறந்தவர்களே அப்துல்லாஹ், அப்துர் ரஹ்மான், ஹஃப்ஸா – ரலியல்லாஹு அன்ஹும். இவர்களுள் ஹஃப்ஸா, நபியவர்களின் கரம் பற்றி அன்னை ஹஃப்ஸா என்றானவர். அன்னை ஹஃப்ஸா அவர்களின் தாய் மாமன்தாம் உத்மான் பின் மள்ஊன்.

குரைஷிகள் மத்தியில் அனாச்சாரம் மலிந்து கிடந்த, இஸ்லாத்திற்கு முந்தைய அந்தக் காலக்கட்டத்திலேயே ஓர் ஒழுங்கு முறையுடன் வாழ்ந்திருக்கிறார் உத்மான். “எனது சுயநினைவைப் பறித்து, என்னை அனாச்சாரமான காரியம் புரியத் தூண்டும் என்பதாலும் என்னைவிடக் கீழ்நிலையில் உள்ளவனின் நகைப்புக்கு நான் ஆளாக நேரிடும் என்பதாலும் நான் மதுபானம் அருந்தியதில்லை” என்று அவர் தம்மைப் பற்றிக் கூறியதாக வரலாற்றுக் குறிப்பொன்று தெரிவிக்கின்றது.

ஓர் ஆண்டின் ரமளான் மாதத்தில் மக்காவில் துவங்கியது இஸ்லாமிய மீளெழுச்சி. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமக்கு வஹீ அருளப்பட்ட செய்தியை அறிவிக்க, அவர்களின் குடும்பத்தவருக்குப் பிறகு முந்திக்கொண்டு நம்பிக்கை தெரிவித்தவர் நபியவர்களின் அணுக்கத் தோழர் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு. ஏற்றுக்கொண்டதுடன் நின்றுவிடாமல் தமக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் எடுத்துச் சொல்லிக் கைபிடித்து இஸ்லாத்திற்கு அழைத்து வந்தார் அவர். அப்படி வந்த முக்கியமானவர்களுள் ஒருவர் உத்மான் பின் மள்ஊன். உத்மானின் இரு சகோதரர்கள் குதாமாவும் அப்துல்லாஹ்வும் ‘நாங்களும் நம்பிக்கைக் கொண்டோம்’ என்று அபூபக்ருடன் வந்தனர். அந்த ஆரம்பத் தருணங்களில் இஸ்லாத்தில் இணைந்தவர்களில் பதினான்காவது முஸ்லிம் உத்மான் பின் மள்ஊன், ரலியல்லாஹு அன்ஹு.

அடுத்து அவர்களுக்கு என்ன நடக்கும்? நமக்குத் தெரிந்தவைதாம். குரைஷிகளின் இடைவிடாத ‘தடபுடல்’ உபசரிப்புகள்.

‘குடித்து கெட்டுப்போ அல்லது குடிக்காமல் உருப்பட்டுப்போ, அதைப்பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை. ஆனால் ஒரே இறைவன், இறுதி நபி, மறுமை அது-இது என்று பேசினால் சரிவராது. தொலைந்தாய் நீ’ என்பது அப்பொழுது குரைஷியர்களின் நியதியாக இருந்தது. சொல்லப்போனால் எக்காலத்திலும் இஸ்லாமிய விரோதிகளுக்கு அதுதான் நியதி. ‘போட்டுத் தாக்கு’ என்று குரைஷியர்கள் பட்டியலிட்டு வைத்திருந்தவர்களில் உத்மானின் பெயரும் இணைந்தது. சீரும் சிறப்புமாய் இருந்த வாழ்க்கை சின்னா பின்னமானது. முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதி நாளுக்குநாள் தீவிரமடைய, நபியவர்களின் அனுமதியின்பேரில் அபிஸீனியாவுக்குப் புலம்பெயர்ந்த முதல் குழுவுடன் உத்மான் பின் மள்ஊனும் இணைந்து ஊரைவிட்டு வெளியேற நேர்ந்தது.

அபிஸீனியாவில் முஸ்லிம்களுக்கு ஓரளவு அமைதியான வாழ்க்கை அமைய, அப்பொழுதும் தொடர்ந்து துரத்திவந்த குரைஷித் தூதுக்குழுவின் நிகழ்வுகளை ஜஅஃபர் பின் அபீதாலிப் ரலியல்லாஹு அன்ஹு வரலாற்றில் பார்த்தோம். அதெல்லாம் அடங்கி, பிறகு சிலநாள் கழித்துப் பொய்ச் செய்தியொன்று அபிஸீனியாவை அடைந்தது. ‘குரைஷிகள் மத்தியில் பெரும் மனமாற்றம் ஏற்பட்டுவிட்டதாம். அல்லாஹ்வுக்கு ஸுஜுது செய்யுமளவிற்கு மாறிவிட்டார்களாம்’ என்றெல்லாம் செய்தி பரவ, ஏக ஆனந்தம் முஸ்லிம்களுக்கு! ‘அப்பாடா தீர்ந்தது தொல்லை; வீட்டிற்குத் திரும்புவோம்’ என்று ஜித்தாவுக்குச் செல்லக் கப்பலேறினார்கள் முஸ்லிம் குழுவினர். ஆனால் அங்கு அவர்களைக் கை நீட்டி வரவேற்றது என்னவோ அடுத்தக்கட்ட அவலம்.

“வந்துவிட்டார்கள் தப்பித்துச் சென்றவர்கள். பிடியுங்கள், உதையுங்கள், மகிழுங்கள்” என்று புறப்பட்டு வந்தது குரைஷிக் கூட்டம். இத்தனை நாள் சேர்த்து வைத்திருந்த குரோதம் இப்பொழுது இன்னும் பலமாய் முஸ்லிம்களின் மீது இறங்கியது.

முன்னர் அபுல் ஆஸ் பின் அர்ரபீஉ ரலியலலாஹு அன்ஹு வரலாற்றில் ஸைனப் ரலியல்லாஹு அன்ஹா அவருக்குப் பாதுகாப்பு வழங்கியது குறித்து ஒரு செய்தியைப் படித்தோமே நினைவிருக்கிறதா? இதர தோழர்களின் வரலாற்றின் இடையிடையேயும் இத்தகுச் செய்தி குறுக்கிட்டிருக்கும். அக்கால அரபுகள் மத்தியில் இருந்துவந்த வழக்கம் அல்-ஜிவார். ஊருக்குள் புதிதாய் நுழைபவர், நலிவுற்ற நிலையில் உள்ளவர்கள் நகருக்குள் இருக்கும் முக்கியப்புள்ளி அல்லது கோத்திரத்துடன் அபயம் கோரி காப்புறுதி பெற்றுக் கொள்ளவேண்டும். அதுவே அவருக்குப் பாதுகாப்பு. அதை இதர கோத்திரத்தினர் ஏற்றுக்கொண்டு அவர் மேல் கை வைக்க மாட்டார்கள்; தீங்கிழைக்க மாட்டார்கள். மீறி ஏதாவது நடந்துவிட்டால் அது அபயம் அளித்தவருக்கே இழைக்கப்பட்ட கொடுமையாகக் கருதப்படும். அப்புறமென்ன இரண்டு கோத்திரங்களும் கட்டிப்புரண்டு காலாகாலத்துக்கும் சண்டை-சச்சரவு சகிதம் அவர்களது வாழ்க்கை தொடரும்.

இதில் விசித்திரம் என்னவென்றால் முஸ்லிம்களின்மேல் தாக்குதல் நடத்தும் முஸ்லிமல்லாதவர்களின் நடவடிக்கை. முஸ்லிம் ஒருவருக்கு முஸ்லிமல்லாதவர் அபயம் அளிக்கப் பொறுப்பேற்றுவிட்டாலோ, அதை மதித்து அந்த முஸ்லிமை விட்டுவிடுவார்கள் அனைவரும். நபியவர்களின் மக்கா வாழ்க்கையிலும் அவர்களுக்கே அந்த நிலைதான் நீடித்தது. நிராதரவாகிவிட்ட நபியவர்களுக்கு அபயம் அளித்தவர் அபூதாலிப். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாமலே வாழ்ந்து மறைந்தவர். அவருக்கு இருந்த செல்வாக்கும் அவரது குலப்பெருமையும் சேர்ந்து அவர் நபியவர்களுக்கு அளித்த அபயத்தை ஏற்றுக்கொண்டனர் குரைஷிகள். அதனால்தான் அபூதாலிப் உயிருடன் இருந்தவரை நபியவர்களை நேரடியாகப் பெரும் தாக்குதலுக்கு உட்படுத்த இயலாமல் குரைஷியரின் கைகள் கட்டப்பட்டிருந்தன. சிறிய வகையில் ஏகப்பட்ட தொந்தரவுகளை அளித்து அழிச்சாட்டியம் புரிந்தாலும் நபியவர்களுக்கு அவர்களால் பெரும் தீங்கு இழைக்க முடியவில்லை. அப்படியும் அவர்கள் வரம்பு மீறிய ஒரு தருணம்தான் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு வெகுண்டெழுந்து இஸ்லாத்தைத் தழுவ வித்திட்டது.

அபூதாலிபின் மறைவிற்குப் பிறகு தாயிஃப் சென்ற நபியவர்கள் அங்கு ஏற்பட்ட அவலத்தைச் சகித்துக்கொண்டு ரத்தக் காயங்களுடன் மக்கா திரும்ப நேரிட்டபோது, ஊருக்குள் நுழைய அபயம் தேவைப்பட்டது. அதை அவர்களுக்கு அளித்தது அல்-முத்இம் இப்னு அதீ. அல்-முத்இம், அவரின் மகன்கள், அவரின் சகோதரனின் மகன்கள் ஆகியோர் ஆயுதங்களுடன் சென்று கஅபாவில் நின்றுகொண்டு பாதுகாவல் வழங்கியதும்தான் நபியவர்களே மக்காவினுள் நுழைய முடிந்தது. அப்பொழுது, நபியவர்களைத் தாக்கும் நல்லதொரு வாய்ப்பு கைநழுவுவதைக்கண்டு ஏமாற்றமடைந்த அபூ ஜஹ்லு முத்இம்மிடம் கேட்டான், “நீ அவரைப் பின்பற்றுகிறவனா அல்லது வெறும் பாதுகாவலனா?” வெறும் பாதுகாவலன்தான் என்று பதில் கிடைத்ததும், “அப்படியானால் உனது பாதுகாவலுக்கு எங்களது இடையூறு இருக்காது” என்று சொல்லி விட்டான். தமது இஸ்லாமியப் பிரச்சாரத்தை மக்காவில் தொடர்வதற்கு இத்தகைய ஏற்பாடுகள் நபியவர்களுக்குத் தேவையாய் இருந்தன.

ஜித்தாவின் தரை தொட்டு உள்ளே நுழைந்ததும் தலையைத் தட்ட ஆரம்பித்துவிட்ட குரைஷிகளிடமிருந்து தமக்கொரு பாதுகாவல் தேடினார் உத்மான் பின் மள்ஊன். அதற்கு வலீத் இப்னு முகீரா முன்வந்தான். குரைஷிக் குலத்தின் பனூ மக்தூம் கோத்திரத்தைச் சேர்ந்த முக்கியப்புள்ளி வலீத். செல்வம், புகழ், அந்தஸ்து என்று எல்லாமே அவனுக்கு அமைந்திருந்தன. அவனுக்கு மகன் ஒருவர் இருந்தார். பிற்காலத்தில் இஸ்லாமிய வரலாற்றின் முக்கியப் பக்கங்களில் இடம்பெற்ற காலித் இப்னு வலீத் ரலியல்லாஹு அன்ஹு. உத்மான் இப்னு மள்ஊனுக்கு வலீதின் அபயம் கிடைத்ததும் குரைஷிகளின் அடி, உதை, சித்திரவதையிலிருந்து விடுதலையானார் அவர். ஓரளவு அச்சமின்றித் தெருக்களில் நடந்து செல்ல முடிந்தது; காரியமாற்ற முடிந்தது. ஆனால் அந்தப் பாதுகாவலே அவரது மனத்தில் பெரும் மாற்றத்தைத் தோற்றுவித்ததுதான் விந்தை. சுற்றுமுற்றும் பார்த்தார். தம்மைப் போன்ற முஸ்லிம்களை அந்தக் குரைஷிகள் ஈவிரக்கமின்றிச் சித்திரவதை செய்வது கண்ணில்பட்டது. ஆனால் தாம் மட்டும் பாதுகாவலுடன் உலா வருவது அவருக்கு உறுத்தியது.

‘அது எப்படி? என்னைச் சேர்ந்தவர்களுக்குத் துன்பம்; எனக்கு மட்டும் விலக்கா? இது சரியில்லை; முறையில்லை’ என்று குறுகுறுப்புத் தோன்றியது உத்மானுக்கு. யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவர் நேரே வலீத் இப்னு முகீராவிடம் சென்றார். “அபூ அப்துஷ் ஷம்ஸ்! நீ இத்தனை நாளாய் எனக்கு அளித்த அபயத்திற்கு நன்றி. இப்பொழுதிலிருந்து அதை நீ விலக்கிக் கொள்ளலாம்.”

என்ன பேசுகிறோம் என்று புரிந்துதான் பேசுகிறாரா என்று அவரை ஆச்சரியமுடன் பார்த்தான் வலீத். பிறகு வாஞ்சையுடன், “என் சகோதரன் மகனே! என் குலத்தவருள் யாரேனும் உனக்குத் தீங்கிழைத்தார்களோ?”

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நான் அல்லாஹ்வின் பாதுகாவலில் இருக்க முடிவெடுத்துவிட்டேன். அவன் எனக்கு அளிக்கும் அபயமே போதுமானது. அதனால் நீ எனக்கு அளிக்கும் அபயத்தை நீக்கிக்கொள்ளலாம்.”

“அப்படியானால் சரி. வா கஅபாவிற்குச் செல்வோம். நீ எனது பாதுகாவலை நிராகரிப்பதாக அங்கு மக்கள் மத்தியில் அறிவித்துவிடு. ஏனெனில் அங்கு வைத்துதான் நான் உனக்கு அபயம் அளிப்பதாகக் கூறினேன். நம் காப்புறுதி அங்கு முறியட்டும்.”

அது சரியான யோசனையாகப்படவே இருவரும் கஅபாவிற்குச் சென்றனர். வலீத் மக்களை நோக்கிப் பேசினான். “மக்களே! இந்த உத்மான் நான் அவருக்கு அளித்துள்ள அபய உறவை முறித்துக்கொள்ள வந்திருக்கிறார்.”

“ஆம். இவர் உண்மையை உரைக்கிறார். இவர் எனக்கு அளித்த அபயம் பாதுகாப்பாகவும் சொகுசாகவும் இருந்தது உண்மை. ஆனால் அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் நான் அபயம் தேடிக்கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன். அதனால் வலீதுடைய காப்புறுதியை முறித்துக் கொள்கிறேன்.”

அவ்வளவுதான். விஷயம் தீர்ந்தது. அந்த அறிவிப்பின் அத்தனை பின் விளைவுகளையும் நன்றாக உணர்ந்தவர் மன நிறைவுடன் திரும்பி நடக்க ஆரம்பித்தார். நம்மைவிட உலக வாழ்க்கையில் உயர் தரத்தில் உள்ளவரைப் பார்த்துப் பார்த்துப் போட்டியிடுவதே நமக்கெல்லாம் பழக்கம். ஆனால் அவரோ தம்மைவிட நலிவுற்றவர்கள் படும் துன்பத்திலும் வேதனையிலும் தமக்கும் பங்கு வேண்டும்; அதைக்கொண்டு அவர்கள் ஈட்டும் நற்கூலியைப் போல் தாமும் ஈட்ட வேண்டும் என்று போட்டியிட்டுச் செயல்பட்டிருக்கிறார். ரலியல்லாஹு அன்ஹு.

அதன்பின் ஒருநாள். மக்காவின் கவிமடம் களை கட்டியிருந்தது. அவர்கள் மத்தியில் கவிஞன் லபீத் பின் ராபீஆ கவிதை சொல்லிக் கொண்டிருந்தான். அங்கு வந்த உத்மான் பின் மள்ஊன் கூட்டத்தில் தாமும் அமர்ந்தார்.

“அல்லாஹ்வைத் தவிர மற்றவை அனைத்தும் பொய்யே” என்று தன் கவிதை வரியை வாசித்தான் லபீத்.

“நீ உண்மையை உரைத்தாய்” என்று கூட்டத்திலிருந்த உத்மான் ஆமோதித்தார்.

“இன்பம் அனைத்தும் நிலையற்றதே” என்று தொடர்ந்தது கவிதை.

உத்மான் இப்பொழுது இடைமறித்தார். “இது பொய். சுத்தப் பொய். சொர்க்கத்தில் உள்ள இன்பம் நிலையானது.”

லபீதுக்குக் கன்னாபின்னாவென்று எரிச்சல் ஏற்பட்டுப் போனது. குறுக்கிடுவது போதாதென்று கவிதையில் குற்றமும் சொன்னால்? குரைஷிகளைப் பார்த்து, “ஏ குரைஷி மக்களே! அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். இத்தகு மனிதர்கள் உள்ளவரை உங்களது கவியரங்கம் தடங்கலின்றி நடைபெற வாய்ப்பே இல்லை.” உசுப்பேற்ற இது போதாது?

கூட்டத்தில் இருந்த ஒருவன் எழுந்து உத்மானைப் பார்த்து உரத்த குரலில் திட்டினான். பதில் அளித்தார் உத்மான். பேச்சு ஏச்சாக மாறி, ஒருவருக்கொருவர் கண்கள் சிவக்க, முஷ்டி உயர்த்தி, விரல் நீட்டி, நாக்கை மடித்து…. குரைஷிகளின் அந்தச் சபை நம் நாட்டு மக்களவை, சட்டசபை போல் ஒரே களேபரம்.

நிலைமை தீவிரமாகிக் கைகலப்பு ஏற்பட்டுக் குரைஷிக் குலத்தவன் உத்மானின் கண்ணிலேயே பலமாகத் தாக்கினான். ரத்தக்களறியானது கண். இதையெல்லாம் தூரத்தில் நின்று அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் வலீத் இப்னு முகீரா.

உத்மானை நெருங்கி, “என் சகோதரன் மகனே! அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். உன் கண் குருடாகிப் போனால் அது அவலம். நீ மட்டும் என்னுடைய அபயத்தை முறித்துக்கொள்ளாமல் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? நடக்க விட்டிருப்பேனா?”

ஒற்றைக் கண்ணைப் பொத்திக்கொண்டு “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாகச் சொல்கிறேன் வலீத். இந்தக் கண் நொள்ளையாகப் போனால் நல்ல கண் வருத்தப்படும், அல்லாஹ்வின் பாதையில் தனக்கு இப்படி ஆகவில்லையே என்று. இப்பொழுது நான் மிகச் சிறந்த ஒருவனின் பாதுகாவலில் இருக்கிறேன். அதுவே எனக்குப் போதுமானது” என்று பதில் சொன்னார் உத்மான் பின் மள்ஊன். ரலியல்லாஹு அன்ஹு.

இதை என்னவென்று சொல்வது? நமக்கெல்லாம் கண்கள் இருக்கின்றன. ஆனால், சரியான பார்வை உள்ளதா என்பதை சுயபரிசோதனைதான் செய்துகொள்ள வேண்டும்.

oOo

பக்தியில் மிகவும் ஊன்றிப்போன உத்மான் பின் மள்ஊன் இறை வழிபாட்டில் முற்றிலுமாய்த் தீவிரமாகிப்போனார். எந்த அளவென்றால் அது நபியவர்கள் தலையிட்டு, சீர் செய்யும் அளவிற்குச் சென்றுவிட்டது. உத்மானின் மனைவி ஃகவ்லா பின்த் ஹகீம். தம் கணவருடன் இணைந்து ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றவர். இஸ்லாமும் அதன் கோட்பாடுகளும் அவருக்கு மிகவும் பிரியமாகி, நபியவர்களின் முதல் மனைவி அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தார். அன்னை கதீஜா இறந்தபின் நபியவர்களின் வாழ்வில் ஏற்பட்டுவிட்ட வெறுமையைத் தீர்த்துவைக்க துரித முயற்சியில் இறங்கினார் ஃகவ்லா. நபியவர்கள் மறுமணம் புரிய முதலில் ஆலோசனையை முன்மொழிந்தவர் இவரே.

அதைக்கேட்டு “நான் யாரை மணந்துகொள்ள?” என்று நபியவர்கள் வினவ, அன்னை ஆயிஷாவையும் வயதிலும் பண்பிலும் பக்குவம் அடைந்திருந்த அன்னை ஸவ்தாவையும் பரிந்துரைத்தார் ஃகவ்லா. நபியவர்களின் ஒப்புதல் பேரில் இரு வீட்டாரையும் சந்தித்து, பெண் கேட்டுப் பேசி முடித்துத் திருமணம் நடைபெற உதவினார் ஃகவ்லா

பின்னர் மக்காவில் பிரச்சினைகள் அதிகமாகி முஸ்லிம்கள் மதீனாவுக்குப் புலம்பெயர ஆரம்பிக்க, உத்மான் பின் மள்ஊன் தம் மனைவியுடன் புலம் பெயர்ந்தார். இரு முறை ஹிஜ்ரத் புரியும் பெரும்பாக்கியம் அமைந்து போனது உத்மானுக்கு. மதீனாவில் நபியவர்களின் மனைவியர் ஆயிஷா, ஸவ்தா ஆகியோருடன் நல்ல நட்பும் நெருக்கமும் ஏற்பட்டுப்போனது ஃகவ்லா பின்த் ஹகீமுக்கு.

ஒருநாள் ஃகவ்லா அலங்காரம் ஏதும் செய்துகொள்ளாமல் உடைகளில் கவனம் செலுத்தாமல் ஏனோ தானோவென்று இருப்பதைக் கவனித்தார்கள் நபியவர்களின் மனைவியர். அக்கால முஸ்லிம் பெண்கள் மத்தியில் வழக்கம் ஒன்று இருந்தது. வெகு முக்கிய வழக்கம். அவர்களது உடை, ஒப்பனை, அலங்காரம், கவர்ச்சி என்பதெல்லாம் கணவனுக்காகவும் கணவனுக்காக மட்டுமே அமைந்திருந்தன. அந்நிய ஆடவர்கள் மத்தியில் அதை அவர்கள் வெளிக்காட்டக் கூடாது என இறைவன் விதித்த தடையும் பின்னர் வந்து சேர்ந்தது. இதனால் வீண் சஞ்சலம், துர்நோக்கம் கொண்ட பார்வைக்கு அடிப்படையிலேயே தடை அமைந்து போனது. ஆனால் பெண் முன்னேற்றம், பெண்ணுரிமை என்ற மாயப் போர்வையில் நாகரீகம் என்ன கற்றுத் தர ஆரம்பித்தது என்றால் பெண்களின் கவர்ச்சியும் அலங்காரமும் பொதுவுடைமையாகிப்போய்க் கணவனின் பார்வையும் மனைவியின் சேவைகளும் இடம் மாறிப்போய்விட்டன.

விளைவு? நம் சமகாலக் குடும்பக் களேபரங்களே சாட்சி.

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா விசாரித்தார். “என்ன ஆயிற்று ஃகவ்லா? ஏன் இப்படி?”

“என்னத்தைச் சொல்ல? என் கணவர் பகலெல்லாம் நோன்பு நோற்கிறார். இரவெல்லாம் தொழுது கொண்டிருக்கிறார்.”

இறை வழிபாட்டில் மிகவும் தீவிரமாகி, தம் மனைவியிடம் உறவுகொள்ளும் சிந்தனையின்றி இருந்தார் உத்மான் பின் மள்ஊன். நபியவர்கள் இல்லம் திரும்பியதும் இதை உடனே அவர்களிடம் தெரிவித்தார் ஆயிஷா.

உத்மானைச் சந்தித்தார்கள் நபியவர்கள். “உமக்கு என்னிடம் உதாரணம் தென்படவில்லையா அபுஸ்ஸாயிப்? என்னைத்தானே நீர் பின்பற்ற வேண்டும்”

உத்மானுக்கு முதலில் அந்த வினா புரியவில்லை. அவரது வழிபாடுபற்றி விசாரித்தார்கள் நபியவர்கள். ஃகவ்லா கூறியது உண்மை என்று தெரியவந்தது.

“அவ்விதம் செய்யாதீர். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்கள் அனைவரையும்விட நான் அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவனாகவும் அவனது எல்லைகளுக்குக் கட்டுப்பட்டவனாகவும் இருக்கிறேன். துறவிகளின் வாழ்க்கைநெறி நமக்குப் போதிக்கப்படவில்லை. உமது கண்களுக்கு உம்மீது உரிமையுண்டு. உமது உடலுக்கு உம்மீது உரிமையுண்டு. உமது குடும்பத்தாருக்கு உம்மீது உரிமையுண்டு. சிறிது நேரம் வழிபாடு புரியுங்கள். சிறிது நேரம் உறங்குங்கள். சில நாட்கள் நோன்பு நோற்கலாம்; ஆனால் ஒவ்வொரு நாளும் அல்ல.”

ஆணும் பெண்ணும் திருமணம் புரிந்து ஒருவருக்கொருவர் தமது இச்சைகளைத் திருமண வரம்பிற்குள் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே இஸ்லாமிய வழிமுறை. இறை வழிபாட்டிலேயே மூழ்கிப்போய்த் தாம்பத்யத்தைப் புறக்கணிப்பதும் தன்னுரிமை, சுதந்திரம் என்ற பெயரில் திருமண உறவை மீறிப் புறம்பான அந்தரங்க உறவு கொள்வதும் அழிச்சாட்டியம் புரிவதும் முறையற்றது; பெரும் குற்றம் எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறது இஸ்லாம். இதில் பின்னதன் தண்டனை மிகக் கொடியது, ஏனெனில் அது சமூகத்தையே நாசமாக்கிவிடும் என்பதால். நம்மைச் சுற்றி இடமும் வலமும் திரும்பிப் பார்த்தால் அந்த நாசத்தின் அர்த்தம் தெரியும்.

நபியவர்களின் அறிவுரையைச் செவியேற்றார் உத்மான். அடுத்தமுறை ஃகவ்லா நபியவர்களின் மனைவியரைச் சந்திக்கும்போது அவரது அலங்காரம் புது மணப்பெண்போல் இருந்ததாம்.

oOo

மதீனாவில் இஸ்லாமிய வரலாற்றின் வெகு ஆரம்ப காலங்களிலேயே இறந்துபோனார் உத்மான் பின் மள்ஊன்.

“இவ்வுலகின் சொகுசு எதையும் அனுபவிக்காமல் பிரிந்துவிட்டீர் நீர்” என்று பெரும் வருத்தம் அடைந்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். உத்மானின் இழப்பு அவர்களுக்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது நெற்றியில் முத்தம் ஈந்த நபியவர்கள் விம்மி வடித்த கண்ணீர் தடையின்றி வழிந்து உத்மானின் கன்னத்தில் வீழ்ந்தது.

உத்மானை அடக்கம் செய்ததும், ஒருவரிடம், “அந்தக் கல்லை எடுத்துவாருங்கள்; என் சகோதரரின் கப்ருக்கு அருகில் அடையாளத்திற்கு வைக்கிறேன். பின்னர் என் குடும்பத்தினர் இறந்தால் அவருக்குப் பக்கத்தில் அவர்களை நல்லடக்கம் செய்ய இந்த அடையாளம் பயன்படும்” என்று சொன்னார்கள் நபியவர்கள்.

அந்த மனிதரால் தனியாளாய் அந்தக் கல்லைத் தூக்க முடியவில்லை. விறுவிறுவென்று எழுந்துசென்ற நபியவர்கள் தமது ஆடையின் கைப்பகுதிகளை மடித்துவிட்டுக்கொண்டு தாமே அந்தக் கல்லைச் சுமந்துவந்து கப்ரின் அருகில் வைத்தார்கள். நபியவர்களின் முன் கையின் வெண்மை தம் கண்முன் நிற்பதாக இந்த நிகழ்வை விவரித்தவர் குறிப்பிட்டுள்ளார்.

உம்முல் அலா என்பவர் நபியவர்களிடம் பிரமாணம் அளித்தவர். அவர் கனவொன்று கண்டார். அதில், உத்மான் இப்னு மள்ஊனுக்கான பாயும் நீரோடை ஒன்றைக் கண்டார். நபியவர்களிடம் வந்து அதைத் தெரிவிக்க, “பாயும் நீரோடை உத்மானின் நற்செயல்களைக் குறிக்கிறது” என்றார்கள் நபியவர்கள்.

ஹிஜ்ரீ மூன்றாமாண்டின் ஷஅபான் மாதத்தில் மதீனாவில் மரணமடைந்து, ஜன்னத்துல் பகீ மையவாடியில் முதன் முதலாக நல்லடக்கம் செய்யப்பெற்றவர் உத்மான் பின் மள்ஊன்.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்!

வெளியீடு: சத்தியமார்க்கம்.காம்

உதவிய நூல்கள்

Related Articles

Leave a Comment