தோழர்கள் – 33 அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்-ஸஹ்மீ (ரலி)

33. அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்-ஸஹ்மீ (عبد الله بن حذافة السهمي)

கொப்பரையில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருந்தது. சூடாகி விட்டது என்பதை உறுதி செய்து கொள்ள, ஓரிருவர் ஏற்கெனவே அந்த எண்ணெயினுள் தூக்கி எறியப்பட்டிருந்தனர். விழுந்த மாத்திரத்தில் அந்த மனிதர்களின் சதையெல்லாம் கரைந்து கழண்டு போய், எலும்புகள் துருத்திக்கொண்டு, வறுபட்டுக் கொண்டிருந்தன. நிச்சயமாய் எண்ணெய் சூடாகிவிட்டிந்தது. எக்கச்சக்க சூடு.

தீ மேலும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

ரோமாபுரியின் பைஸாந்தியச் சக்கரவர்த்தி அந்த முக்கியமான போர்க் கைதியைப் பார்த்து கடைசித் தவணையாகக் கேட்டான்:

“உனக்கு இறுதி வாய்ப்பு அளிக்கிறேன். கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக் கொள்கிறாயா?”

வைராக்கியத்துடன் பதில் வந்தது “முடியாது”

மன்னனுக்கு வேறு வழி தோன்றவில்லை. “இழுத்துச் செல்லுங்கள் இவரை; கொப்பரையில் தள்ளுங்கள்”

சேவகர்கள் அந்தக் கைதியை இழுத்துச் சென்றனர். கொப்பரையை நோக்கி நெருங்க நெருங்க, அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது. அதைப் பார்த்ததுதான் தாமதம், மகிழ்ச்சியுற்ற சேவகர்கள் உடனே சக்கரவர்த்தியிடம் ஓடினார்கள்.

“மன்னர் மன்னா! கைதியின் கண்களில் கண்ணீர்”

“ஆஹ்! படிந்தார் கைதி. இறுதியில் மரண பயம் வந்து விட்டது பார். அவரை உடனே என்னிடம் அழைத்து வாருங்கள்”

சக்கரவர்த்தியிடம் கைதி மீண்டும் அழைத்து வரப்பட்டார். “இப்பொழுது சொல்! கிறிஸ்துவ மதம் உனக்குச் சம்மதம் தானே?”

அந்தக் கைதி பதிலைச் சொன்னார். அப்படியே ஸ்தம்பித்துப் போனான் அந்த பைஸாந்தியச் சக்கரவர்த்தி!

oOo

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நபித்துவம் அருளப்பெற்று, மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சியுற்ற ஆரம்பத் தருணங்களிலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா ரலியல்லாஹு அன்ஹு. அப்பொழுது முஸ்லிம்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுஞ்செயல்கள் பற்றி முந்தைய அத்தியாயங்களில் பார்த்துக் கொண்டே வந்தோம். அந்த வன்முறைகளிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ள நபியவர்களின் அனுமதியுடன் அபிஸீனியாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டனர் முஸ்லிம்கள்.

அவர்களில் அப்துல்லாஹ்வும் ஒருவர். பின்னர் நபியவர்கள் மதீனா புலம்பெயர்ந்து, இஸ்லாம் அங்குப் பரந்து விரிய ஆரம்பித்தவுடன், இலகுவான எத்தியோப்பிய வாழ்க்கையைத் துறந்துவிட்டு, அல்லாஹ்வின் தூதருடன் இணைந்து கொள்ளவும் அவர்களை அண்மிக் கொள்ளவும் பரபரத்தார்கள் அயல்நாட்டு மண்ணில் வசித்து வந்த அத்தனை தோழர்களும்.

துவங்கியது இரண்டாவது ஹிஜ்ரா. மதீனா வந்தடைந்தார் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா.
மதியுகம்; எளிய குணம்; இனிய பண்பு; நாவண்மை; நெஞ்சுறுதியுள்ள போர் மரபு போன்ற சிறப்பம்சங்கள் கொண்டவர் அப்துல்லாஹ். இவருக்குச் சகோதரர் ஒருவர் இருந்தார். குனைஸ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி). உமர் இப்னு கத்தாப் (ரலி) மகள் ஹஃப்ஸா ரலியல்லாஹு அன்ஹாவின் கணவர் இந்த குனைஸ். பத்ருப் போரில் குனைஸ் வீர மரணமடைந்த பின்னர் ஹஃப்ஸா (ரலி) அவர்களை நபியவர்கள் மறுமணம் புரிந்து கொண்டார்கள்.

மதீனா வந்தடைந்தபின் நபியவர்களிடம் நேரடிக் கல்வி பயில ஆரம்பித்தார் அப்துல்லாஹ். அதன்பின் நிகழ்வுற்ற போர்களில் எல்லாம் அயராமல் பங்கெடுத்துக் கொண்டார். வீரமும் விவேகமும் ஞானமும் அவரிடம் பண்பட்டு வளர்ந்து கொண்டிருந்தன.

ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டின்போது இஸ்லாமிய ஆட்சியின் அடுத்தக் கட்டமாக அண்டை நாடுகளுக்கும் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்ல முடிவடுத்தார்கள் நபியவர்கள். இதைப்பற்றி ஃபைரோஸ் அத்-தைலமி (ரலி) வரலாற்றில் ஓரளவு பார்த்தோம். சட்டென நினைவுக்கு வரவில்லையெனில் மீண்டும் அதைச் சற்றுப் பார்த்து விடுவோம்.

தம் தோழர்களை அழைத்து நபியவர்கள் உரை நிகழ்த்தினார்கள். ஏக இறைவனைப் புகழ்ந்துவிட்டு, “நம் அரேபிய நாட்டு எல்லையைத் தாண்டியுள்ள அரசர்களிடம் உங்களில் சிலரை என் தூதர்களாக அனுப்பிவைக்க விரும்புகிறேன். மர்யமின் மகன் ஈஸாவிடம் இஸ்ரேலிய மக்கள் பின்வாங்கியதைப்போல் என்னிடம் நீங்கள் நடந்து கொள்ள மாட்டீர்கள் அல்லவா?”

“ஆணையிடுங்கள் என்ன செய்ய வேண்டுமென்று; செய்து முடிக்கிறோம். உத்தரவிடுங்கள் எங்குச் செல்ல வேண்டுமென்று; சென்று வருகிறோம். இத்தகைய பணிகள் புரிய தாங்கள் எங்களைத் தேர்ந்துடுத்துள்ளது எங்களுக்குப் பெருமகிழ்வே” என்று எளிதாய் பதில் அளித்துவிட்டார்கள் தோழர்கள்.

மண்ணும் பெண்ணும் பொன்னும் என்று இகலோகமே குறிக்கோளாய் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் சக்தி மிக்க மன்னர்களிடம் இஸ்லாமிய அழைப்புக் கடிதம் அனுப்பிவைக்க நபியவர்கள் முடிவெடுத்தபோது, அதிலுள்ள சோதனைகளையும் ஆபத்தையும் நன்கு உணர்ந்தே இருந்தார்கள். அறிமுகமற்ற தூர தேசங்களுக்குத் தோழர்கள் செல்ல வேண்டும். அந்நாட்டு மக்களின் மொழி, அம் மன்னர்களின் குணாதிசயம் போன்றவை சரியாகத் தெரியாது. அந்த மன்னர்களோ பட்டம், பதவி, செல்வம், அதிகாரம் என்று கோலோச்சிக் கொண்டிருப்பவர்கள். ஆளாளுக்குத் தங்களையெல்லாம் கடவுளாகவே பாவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் சென்று ஏகத்துவம் சொல்லி, நபியவர்களின் கடிதத்தைக் கொடுத்தால் அந்தத் தூதர்களுக்கு நேரும் கதி என்பது, ஒரேயடியாகவோ கொஞ்சங் கொஞ்சமாகவோ உயிர் போகும் சாத்தியம் நிறைந்தது.

இவை அத்தனையும் நன்கு உணர்ந்தே தெளிவான பதில் அளித்தார்கள் தோழர்கள். அவர்களில் எட்டு பேரைத் தேர்ந்தெடுத்தார்கள் நபியவர்கள்.

ஹாதிப் பின் அபூபல்தஅ (ரலி) எகிப்து நாட்டுக்குச் செல்ல வேண்டும்; அம்ரு பின் உமைய்யா அத்தமரி (ரலி) எத்தியோப்பியா மன்னன் நஜ்ஜாஷிக்கு; தஹிய்யதுல் கல்பி (ரலி) ரோம நாட்டின் சீஸருக்கு; அலா பின் அப்துல்லாஹ் அல்-ஹத்ரமீ (ரலி) பஹ்ரைன் நாட்டின் அரசர் முன்திர் பின் ஸாவீக்கு; ஷுஜா பின் வஹப் அஸதீ (ரலி) டமாஸ்கஸின் அரசர் ஹாரித் பின் அபூ ஷமார் கஸ்ஸானீக்கு; ஸலீத் கைஸ் பின் அம்ரு அல் ஆமிரீ (ரலி) யமாமாவின் அரசர் ஹௌதா பின் அலீயிடம்; ஓமன் நாட்டு அரசருக்கு அம்ரு பின் ஆஸ் (ரலி); பாரசீகத்தின் பேரரசன் குஸ்ரூவிடம் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா (ரலி) என்று நிர்ணயித்து ஒவ்வொருவரிடமும் கடிதம் எழுதி அளிக்கப்பட்டது.

அல்லாஹ்வின் தூதரின் தூதர் என்ற தம் பணியை பெருமகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார் அப்துல்லாஹ். வீட்டிற்கு வந்து பயணத்திற்குத் தேவையான மூட்டை முடிச்சுக் கட்டிக்கொண்டு, மனைவி, பிள்ளைகளைக் கட்டியணைத்து விடை பெற்றுக்கொண்டு ஒட்டகத்தின் மீது ஏறிக் கிளம்பினார். செல்பவர் வருவாரா மாட்டாரா என்ற நிச்சயமற்ற நிலை அக்குடும்பத்தினருக்கு. பிரியா விடை அளித்தனர். இறைவன் ஒருவனே துணை என்று தன்னந்தனியாக மலை, மேடு, பள்ளத்தாக்கு என்று துவங்கியது அவரது பயணம்.

பாரசீகம் வந்தடைந்து அரசு அதிகாரிகளிடம் செய்தி சொன்னார். “மதீனாவிலிருந்து தங்கள் மன்னனுக்குக் கடிதம் கொண்டு வந்துள்ளேன். அவரைச் சந்திக்க வேண்டும்”

சக்கரவர்த்திக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ‘மக்கா, மதீனாவில் ஏதோ புதிய மதம் தோன்றியிருக்கிறதாம். அதன் பெயர் இஸ்லாம் என்கிறார்கள். முஹம்மது என்பவர் தம்மை இறைவனின் தூதர் என்று சொல்லிக் கொள்கிறார்’ என்பது போலெல்லாம் அம்மன்னன் முன்னரே கேள்விப்பட்டு இருந்திருக்க வேண்டும். “அரசவையை அலங்கரித்துத் தயார் செய்யுங்கள். நம் முக்கியத் தலைவர்களை அங்கு வரச் சொல்லுங்கள். நானும் குளித்து முடித்துவிட்டு வருகிறேன்” என்று உத்தரவிட்டான் அவன்.

அனைவரும் வந்து சேர, அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு மன்னனைச் சந்திக்க அழைத்து வரப்பட்டார். செல்வத்திலும் ஆடம்பரத்திலும் தகதகவென ஜொலித்தது அந்த அரசவை. எங்குத் திரும்பினும் படோடபம். குழுமியிருந்த அவையினர் அங்கமெங்கும் ஆபரணம். பளபளவென ஆடையும் பற்பல விலையுயர்ந்த கற்கள் பதித்த கிரீடமும் கோலுமாய் மாமன்னன் குஸ்ரூ.

இவை எதற்கும் பொருந்தாத ஒரு தோற்றத்துடன் அங்கு வந்து நுழைந்தார் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா. அரபு மக்கள் உடுத்தும் கரடுமுரடான உடை; மிக எளிய தலைப்பாகை; கையில் நபியவர்கள் கொடுத்தனுப்பிய கடிதம். அவ்வளவுதான் அவரது அங்க அலங்காரம். தலை உயர்த்தி, நெஞ்சு நிமிர்த்தி நடந்து வந்தார். இறை அச்சம் ஒன்று மட்டும் உடலெங்கும் வியாபித்து விடும்போது மற்றவை எல்லாம் துச்சம் என்றாகிவிடுகிறது.

அவரது கையிலிருந்த கடிதத்தை வாங்கி வரும்படி தம் சேவகனை நோக்கி சைகை புரிந்தான் குஸ்ரூ. “அதெல்லாம் முடியாது” என்று கடுமையாக மறுத்தார் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா. “என் கையால் உன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது எங்கள் நபியின் உத்தரவு. அதை என்னால் மீறமுடியாது. நான்தான் உன்னிடம் கொடுப்பேன்”

நபியவர்களின் ஒவ்வொரு கட்டளையையும் ஒவ்வொரு வார்த்தையையும் எப்படி அச்சு அசலாக அவர்கள் பின்பற்ற முனைந்தனர் என்பது மிகப் பெரும் விந்தை! எந்தச் சந்தர்ப்பமாக இருந்தாலும் சரி; அது யாராக இருந்தாலும் சரி; அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவுமில்லை, சமரசம் செய்து கொள்வோம் என்று சிறிதளவு முனைவதும் இல்லை. பின்னாளில் அவர்கள் அடைந்த கிடைத்தற்கரிய வெற்றியெல்லாம் அந்த உறுதியில்தான் மறைந்து இருந்திருக்கின்றது.

இத்தகைய செயலெல்லாம் குஸ்ரூவும் அவனது அரசவையும் அறியாத ஒன்று. ஆச்சரியத்துடன் அனுமதியளித்தான் குஸ்ரூ. அல்-ஹிராவிலிருந்து எழுத்தர் ஒருவரை வரவழைத்து, அரபு மொழியில் எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தைப் படிக்கச் சொல்ல, மொழிபெயர்த்தார் அவர்.

“அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்! அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, பாரசீகச் சக்கரவர்த்தி குஸ்ரூவுக்கு எழுதிக் கொள்வது. இறைவனின் நேர்வழியில் நடப்பவர் மீது சாந்தி உண்டாவதாக …”

இவ்வளவு மட்டுமே கேட்ட குஸ்ரூவின் முகம் சினத்தால் சிவந்து போனது! கடுஞ்சீற்றம் பொங்கியது! இரத்த நாளங்கள் விம்மிப் புடைத்தன!

“நிறுத்து!” முழுக் கடிதத்தையும் படிக்கவிடாமல் தடுத்து நிறுத்தினான். திகைத்தது அரசவை. எல்லாம் எதற்கு? நபியவர்கள் அந்தக் கடிதத்தில் தன் பெயரை முதலில் குறிப்பிட்டு அதற்குப் பின் குஸ்ரூவின் பெயரைக் குறிப்பிட்டு விட்டாராம். கடிதம் படித்துக் கொண்டிருந்தவரைத் தடுத்து அதைப் பிடுங்கி, சுக்குநூறாகக் கிழித்து காற்றில் பறக்கவிட்டவன், கடும் எரிச்சலுடன் இரைந்தான்.

“என் அடிமை எனக்கு இப்படித்தான் கடிதம் எழுதுவதா?”

அரபுப் பிரதேசமும் அதன் மக்களும் தன் ஆளுகையின் கீழ் இல்லை என்றிருந்தாலும், அதிகாரமும் செருக்கும் இறுமாப்பும் ‘தான் ஆண்டான்; மற்றவர் அனைவரும் அடிமை’ என்ற எண்ணத்தில்தான் திளைத்திருந்தான் அவன். அரபுகளை, பொருட்படுத்தத்தக்க ஒரு மக்கள் இனமாகக்கூட பாரசீகர்கள் கருதியிருக்கவில்லை. ஏறக்குறைய அதே எண்ணமே ரோமர்களிடம் குடிகொண்டிருந்தது. ஏனென்றால் அவர்களிடையே ‘இருவரில் யார் வஸ்தாது?’ என்று போர் நடந்து கொண்டிருந்ததே தவிர, மற்றவர்களை அவர்கள் அந்த ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டதில்லை.

இத்தகைய மனோபாவத்தில் இருந்தவனுக்கு, மதீனாவில் இருந்து வந்துள்ள முஹம்மதின் கடிதம், குசலம் விசாரிக்கும்; நீதி உரைக்கும் வெண்பா போன்று ஏதாவது எழுதி இருக்கும் என்பன போன்ற அசட்டையான எதிர்பார்ப்பே இருந்தது. ஆனால் நபியவர்களின் கடிதத்தின் ஆரம்ப வாசகமே அவனுடைய ‘தான்’ என்ற அகங்காரத்துக்கு வேட்டு வைப்பதுபோல் அமைந்திருந்தால்? கடிதம் கிழிந்து பறந்து தரையில் விழுந்தது.

“இந்தத் தூதுவனை என் அவையிலிருந்து உடனே வெளியேற்றுங்கள்” கோபத்துடன் அவன் கட்டளையிட, அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா வெளியேறினார்.

வெளியே வந்தவருக்கு அடுத்து என்ன காத்திருக்கிறது என்பது நிச்சயமாகவில்லை. ‘என்னைக் கொலை செய்வார்களா; அல்லது பிழைத்துப்போ என்று விட்டுவிடுவார்களா?’ யோசித்தவருக்கு சரியான பதில் தெரியவில்லை. ஆனால் ஒரேயொரு எண்ணம் மட்டும் பெரும் நிம்மதி அளித்தது.

“அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லாஹ்வின் தூதரின் ஓலையை நான் சமர்ப்பித்து விட்டேன். நபியவர்களின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன். அதுபோதும். உயிர் போனாலும் சரி; மிச்சமிருந்தாலும் சரி” என்று எண்ணிக்கொண்டவர், தம் ஒட்டகத்தின் மீது ஏறிக்கொண்டு மதீனா நோக்கிக் கிளம்பிவிட்டார்.

சற்று நேரம் கழித்து குஸ்ரூவின் கோபம் தானாய்த் தணிந்தது. சற்று நிதானத்திற்கு வந்தான். சேவகர்களிடம், “சரி சரி! அந்த அப்துல்லாஹ்வை அழைத்து வாருங்கள். முஹம்மது வேறு என்ன செய்தி சொல்லி அனுப்பினார் என்று கேட்போம்”

உடனே ஓடி, தேடினார்கள் சேவகர்கள். ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அரேபியா நோக்கிச் செல்லும் பாதையிலும் சென்று பார்த்தார்கள். அங்கும் அவர் தென்படவில்லை. அதற்குள் அப்துல்லாஹ் வெகு தூரம் சென்று விட்டிருந்தார்.

“தூதுவர் சென்று விட்டார் அரசே” என்றார்கள் திரும்பிவந்த சேவகர்கள்.

oOo

“தூதுச் செய்தியைக் குஸ்ரூ கிழித்து எறிந்து விட்டான் அல்லாஹ்வின் தூதரே” என்றார் திரும்பி வந்து சேர்ந்த அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா.

மதீனா வந்தடைந்தவர் பாரசீக அரசனின் அரசவையில் நடந்தவை அனைத்தையும் விவரித்தார். நிதானமாய்க் கேட்டுக்கொண்ட நபியவர்கள் இறுதியில் சொன்னார்கள், “அதைப் போலவே குஸ்ரூவின் சாம்ராஜ்யத்தை அல்லாஹ் கிழித்தெறிவானாக” வேதம் அருளப்பெற்ற நபியின் வாக்கு, பிற்காலத்தில் அப்படியே பலித்தது!

மக்காவிற்குத் தெற்கே அமைந்துள்ள யமன் நாட்டில் பாரசீக அரசாட்சி நிகழ்ந்துகொண்டிருந்ததும் அதன் ஆட்சிப் பொறுப்பு பாதான் என்பவரிடம் ஒப்படைக்கபட்டிருந்ததும் ஃபைரோஸ் (ரலி) வரலாற்றில் விரிவாகப் பார்த்தோம். அந்த பாதானுக்குக் கடிதம் எழுதினான் குஸ்ரூ. “வலுவான இரண்டு வீரர்களை ஹிஜாஸ் பிராந்தியத்தில் தோன்றியுள்ளவரிடம் அனுப்பவும். அவரைப் பிடித்து என்னிடம் கொண்டு வரச் சொல்லவும்”

அதன்படி அபாதாவீ, கர்காரா எனும் இரண்டு வீரர்களைத் தேர்ந்தெடுத்து, நபியவர்களிடம் அனுப்பி வைத்தார் பாதான். “தாங்கள் தாமதமின்றி கிளம்பிச் சக்கரவர்த்தி குஸ்ரூவிடம் வரவேண்டியது. இது அரசக் கட்டளை” என்று செய்தியும் அவர்களிடம் அனுப்பப்பட்டது. இதெல்லாம் தவிர, அந்த இருவரிடமும் வேறொரு செய்தியும் சொல்லியிருந்தார் பாதான்.

”அந்த நபி என்பவரைக் கூர்ந்து கவனித்து, அவர் என்னென்ன செய்கிறார் என்பதைத் தங்களால் முடிந்தவரை திடமாக அறிந்துகொண்டு வந்து எனக்குச் செய்தி சொல்லுங்கள்” அரச ஆணையையும் அனுப்பிவிட்டு, இப்படியொரு தகவலையும் பாதான் கோரியதற்கு, இஸ்லாத்தைப் பற்றி அவர் அதுவரை அரசல் புரசலாய்க் கேள்விப்பட்டிருந்த செய்திகளும் மனதில் குறக்களியும் அவரை அப்படிச் செய்யத் தூண்டியிருக்க வேண்டும்.

வேகமாய் தாயிஃப் நகரை வந்தடைந்தார்கள் அவ்விருவரும். அங்கிருந்த குரைஷி வணிகர்களிடம் நபியவர்களைப் பற்றி விசாரிக்க, ‘அப்படியா சேதி?’ என்று குதூகலித்துப் போனார்கள் அந்த குரைஷிகள். உடனே மதீனா நோக்கிக் கையைக் காண்பிக்க, பாதானின் வீரர்கள் அதை நோக்கிக் கிளம்பியதும், பெரும் குஷியுடன் மக்கா நோக்கி ஓடினார்கள் குரைஷி வணிகர்கள்.

“நற்செய்தி உங்களுக்கு! குஸ்ரூவின் வீரர்கள் முஹம்மதை நோக்கிச் செல்கிறார்கள். இனி முடிந்தது அவர் கதை”

வல்லரசிடம் வாலாட்டினால் நடக்குமா? அடக்கப்பட்டுவிடுவார் அவர் என்று தீர்மானமே பண்ணி விட்டார்கள் குரைஷிகள். நம்மால் முடியாதது குஸ்ரூவினால் முடிந்தால் நலமே என்ற எண்ணம்தான். வேறென்ன?

மதீனா வந்தடைந்த அந்த இருவரும் நபியவர்களைச் சந்தித்து, பாதான் கொடுத்தனுப்பிய மடலை அளித்தனர்.

“மன்னாதி மன்னர் குஸ்ரூ தங்களை அவரிடம் அழைத்து வரும்படி எங்களை அனுப்பியிருக்கிறார். தாங்களே இணங்கி வந்துவிட்டால் தங்களைப் பற்றி நல்ல விதமாய் அவரிடம் நாங்கள் எடுத்துரைப்போம். தங்களிடம் கருணையுடன் அவர் நடந்து கொள்வார். தாங்கள் வர மறுத்தால் … அவர் யார், அவருடை சக்தி என்ன, ஆளுமை என்ன, அதிகாரம் என்ன என்பதை எல்லாம் தாங்கள் அறிந்திருப்பீர்கள்… தங்களையும் தங்கள் மக்களையும் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார் …”

அவர்கள் பேசிக்கொண்டேயிருக்க, கூர்ந்து அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் நபியவர்கள். மழுங்க மழித்த தாடையும் நல்ல அடர்த்தியான மீசையுமாக அவர்களின் அந்தத் தோற்றம் முஹம்மது நபிக்கு அறவே பிடிக்கவில்லை.

“யார் உங்களுக்கு உங்களது தாடியை மழிக்க உத்தரவிட்டது?””

தலைக்கு ஆபத்து தெரிவித்து வந்தால் இவர் தாடியைப் பற்றிக் கேட்கிறாரே! புரியவில்லை அவர்களுக்கு. “எங்கள் இறைவன்” என்று பதில் சொல்லி வைத்தார்கள். குஸ்ரூதானே அவர்களின் கடவுள்.

அமைதியாய் பதில் கூறினார்கள் முஹம்மது நபி, “ஆனால் என் இறைவன் எங்களுக்குத் தாடியை வளர்க்கவும் மீசையைக் கத்தரிக்கவும் உத்தரவிட்டுள்ளான்” என்று கூறியவர்கள், “நாளை வரை காத்திருங்கள்; மீண்டும் பேசுவோம்” என்று அறிவித்து விட்டுச் சென்று விட்டார்கள்.

இதனிடையே பாரசீகத்தில் முக்கிய அரசியல் நிகழ்வொன்று நடைபெற்றது. குஸ்ரூவுக்கு ‘ஷிர்வே’ என்றொரு மகன் இருந்தான். அவனுக்குத் தன் தந்தை தன்னிச்சையாகவும் கொடுங்கோலனாகவும் ஆட்சி செய்து வருவது மகா எரிச்சலாயிருந்தது. பாரசீகர்களின் கண்ணியத்துக்குக் குஸ்ரூவின் செயல்பாடுகள் மிகவும் பங்கம் விளைவிப்பதாய்க் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான் அவன். இறுதியில், ‘ஏதாவது செய்து இந்த அப்பனைப் போட்டுத் தள்ளினால்தான் சரி’ என்று தோன்றியது அவனுக்கு. நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் அன்றைய நாளில் தன் தந்தையைக் கொலை செய்து முடிக்க, கடவுள் குஸ்ரூ செத்துப் போனான்.

இந்தச் செய்தியை இறைவன் தன் வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் மூலமாக நபியவர்களுக்கு அன்றிரவு அறிவித்துவிட்டான். அதுவும் எப்படி? மிகத் துல்லியமாய், அந்தக் கொலை நிகழ்வுற்ற நாள், இரவின் எந்தப் பொழுது, என்ன தேதி ஆகிய விபரங்களுடன்! மறுநாள் அந்த இரு தூது அதிகாரிகளையும் அழைத்தார்கள் முஹம்மது நபி. “உங்கள் மன்னாதி மன்னர் செத்துப் போய்விட்டார் தெரியுமா?” என்று கொலை விபரங்களை அக்கு வேறு ஆணி வேறாகத் தெரிவித்ததும் அதிர்ந்து போனார்கள் அவ்விருவரும்!

“நீர் என்ன சொல்கிறீர் எனப் புரிந்துதான் சொல்கிறீரா? எங்கள் கடவுளுக்குக் கடிதம் அனுப்பினீர்கள் என்ற அற்பமான ஒரு விஷயத்திற்கே உம்மைக் கைது செய்யச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீர் என்னடாவென்றால், எங்கள் கடவுள் இறந்துவிட்டார் என்று அபாண்டம் உரைக்கிறீர்? இது தப்பு! மகாக் குற்றம்! அப்படியே நாங்கள் குறித்துக்கொண்டு எங்கள் மன்னன் பாதானிடம் தெரிவிக்கலாமா?”

“ஆம், சொல்லுங்கள். மேலும், என்னுடைய மார்க்கமும் ஆட்சியும் குஸ்ரூவின் கீழுள்ள அனைத்து இராச்சியங்களையும் துடைத்தெறியும் என்பதையும் என் சார்பாக உங்கள் மன்னனுக்குத் தெரிவியுங்கள். எனவே, உங்கள் மன்னன் பாதான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால், அவருடைய அதிகாரத்தில் தற்சமயம் இருப்பதையும் அவருக்குக் கொடுப்பேன் என்றும், அவர் தற்சமயம் நிர்வகித்துக் கொண்டிருக்கும் பகுதிகளுக்கெல்லாம் அவரையே அரசனாகவும் ஆக்கி வைப்பேன் என்றும் தெரிவியுங்கள்”

தன்னைக் கைது செய்ய வந்தவர்களை, அவர்களின் வாயடைத்து, அவர்களின் மன்னனுக்கு அவனுடைய அதிகாரத்தையே மீண்டும் திருப்பித் தரும் விசித்திரம் நடைபெற்று முடிந்தது. மேலும், மற்றொரு மன்னனிடமிருந்து தமக்குப் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த தங்கத்தையும் வெள்ளியையும் ஒரு சிறு பையில் கட்டி, கர்காராவிடம் கொடுத்தனுப்பினார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். “உங்கள் மன்னனுக்கு எனது இந்த அன்பளிப்பை அளியுங்கள்”

கொண்டுவந்த அரச ஆணையை ஒரு கையிலும் பரிசுப் பையை மற்றொரு கையிலும் தூக்கிக்கொண்டு தூதுவர்கள் இருவரும் யமனுக்குத் திரும்பி வந்து, நடந்ததையெல்லாம் பாதானிடம் விவரித்தார்கள். நிகழ்காலம் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் எந்தவொரு தகவல் தொடர்பு வசதியும் இல்லாத அக்காலத்தில் எத்தகைய தலைபோகிற செய்தியாக இருந்தாலும் அது நிலம்விட்டு நிலம் வந்து சேர அதற்கே உரிய காலம்தான் ஆகும். ஆகையினால் பாதானுக்கு அதுவரை குஸ்ரூ கொலையுண்ட செய்தி வந்து சேர்ந்திருக்கவில்லை. எனவே, “இதெல்லாம் ஒரு மன்னன் கூறுகிற செய்தியாக எனக்குத் தெரியவில்லை. என் மனத்திற்கு அவர் ஒரு நபி என்றுதான் படுகிறது. அது மட்டும் உண்மை என்றால், அவர் உங்களிடம் கூறியது நடந்தே தீரும். குஸ்ரூ கொல்லப்பட்டது உண்மை என்றால் இவர் ஒரு நபியும், இறைத்தூதரும் என்பது மெய்யாகிவிடும். அப்படியெல்லாம் இல்லையெனில், அடுத்து அவரை என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவெடுப்போம்” என்றார் பாதான்.

நியாயமான சிந்தனையும், அந்நேரத்திற்கான சரியான யோசனையும் பாதானிடமிருந்து வெளிப்பட்டது. அடுத்து சில நாட்களிலேயே பாரசீகத்திலிருந்து அந்தச் செய்தி பாதானுக்கு வந்து சேர்ந்தது. ஷிர்வேதான் செய்தி அனுப்பியிருந்தான். அட்சரம் பிசகாமல் அப்படியே நபியவர்கள் தெரிவித்திருந்த செய்தி. அதனுடன் மேலும் ஒரு தகவலும் இருந்தது, “மேற்கொண்டு தகவல் வரும்வரை மதீனாவில் இருக்கும் அந்த நபியை ஒன்றும் தொந்தரவு செய்யாமல் இருக்கவும்”
பாதானுக்குத் தெளிவு ஏற்பட்டுவிட்டது. ‘முஹம்மது மெய்யாகவே அல்லாஹ்வின் தூதராகத்தான் இருக்க முடியும்’ அபாதாவீயை அழைத்து மேலும் தகவல் விசாரிக்க, “அவருக்கென்று எந்த ஒரு பாதுகாவலரும் கிடையாது மன்னரே! மக்களெல்லாம் இயல்பாய் அவரைச் சந்திக்க முடிகிறது. அவரைப்போல் ஒரு மதிப்பையும் அச்சத்தையும் என்னுள் தோற்றுவித்த வேறு எவரையும் நான் இதுவரை சந்தித்துப் பேசியதேயில்லை” என்று மனத்திலுள்ள உண்மையை அப்பட்டமாய் விவரித்தான் அவன்.

ஷிர்வேயின் மடலைத் தூக்கி வீசி விட்டுத் தாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக அறிவித்து விட்டார் பாதான். இவ்விதமாக பாரசீகத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு யமனில் நிகழ ஆரம்பித்தது பெருமாற்றம்.

oOo

ஹிஜ்ரீ 19ஆம் ஆண்டு. உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சிக் காலம். ரோமர்களின் பைஸாந்தியப் படைகளுடன் இடைவிடாது யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது. ரோமர்கள் தோற்றுக் கொண்டேயிருக்க, ஒவ்வொரு பகுதியாக முஸ்லிம்கள் வசமாகிக் கொண்டேயிருந்தன. அப்பொழுது ஒரு யுத்தத்தில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபாவும் படையொன்றில் இணைந்து போரிட்டுக் கொண்டிருந்தார். வலுவான தங்களது சாம்ராஜ்யத்தைப் பாலைவனத்திலிருந்து கிளம்பிவந்த முஸ்லிம்களின் படை விரட்டி விரட்டி அடிப்பதையும் நபித்தோழர்களின் குணாதிசயம், தீவிர இறை நம்பிக்கை, தம்முடைய இறைத்தூதருக்காக அவர்கள் புரிந்து கொண்டிருந்த தியாகம் ஆகியனவும் கதை கதையாக ரோமர்களை அடைந்து ஒருவித பேராச்சரியத்திலும் திகிலிலும் ஆழ்ந்திருந்தனர் அவர்கள்! ‘யார்தான் அவர்கள்? அப்படியென்ன கொம்பு முளைத்திருக்கிறது அவர்களுக்கு?’ என்று பார்க்க, அறிய, பேராவல் ஏற்பட்டுப்போயிருந்தது பைஸாந்திய மன்னனுக்கு. எனவே அவன் தன் வீரர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். “போரில் சிறைபிடிக்கப்படும் முஸ்லிம் வீரர்களைக் கொல்லாதீர்கள்; அவர்களை என் சபைக்கு அழைத்து வாருங்கள்”

அந்த யுத்தத்தில் சில முஸ்லிம்கள் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபாவும் ஒருவர். அவரை மன்னனின் அரசவைக்குக் கூட்டிச் சென்றார்கள் ரோமப் படையினர்.

“இவர் பெயர் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா. மக்காவில் இஸ்லாத்தில் இணைந்த மூத்தவர்களில் இவரும் ஒருவர். முஹம்மது நபியின் முக்கியமானத் தோழர்களில் ஒருவர்” என்று அப்துல்லாஹ் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார்.

நீண்ட நேரம் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் ரோம மன்னன். மிக மிக எளிமையான தோற்றத்தில் ஒருவரைக் கண்டானே தவிர எவ்வித சிறப்பான அலங்காரமோ, கிரீடமோ, அடையாளமோ அவரிடம் தென்படவில்லை.

“நான் உமக்கு ஒரு சலுகை அளிக்க விரும்புகிறேன்” என்றான் அவரை நோக்கி.

“என்ன அது?”

“நீர் கிறித்துவ மதத்தை ஏற்றுக் கொண்டால் நான் உம்மைத் துன்புறுத்தாமல் விடுவித்து விடுகிறேன்; தாரளமான கவனிப்பும் உமக்கு உண்டு”

யோசிக்காமல் சட்டென திடமான பதில் வந்தது. “நீ அளிக்கும் சலுகையை விட மரணம் எனக்கு ஆயிரம் மடங்கு உவப்பானது”

“நீர் ஒரு மதிப்புக்குரிய மனிதராய்த் தெரிகிறீர். உமக்கு என் மகளை மணமுடித்து வைப்பேன்; என் ஆட்சி அதிகாரத்தில், அரசாங்கத்தில் பெரும் பங்கு உமக்கு அளிப்பேன். கிறித்துவ மதத்தை ஏற்றுக்கொள்; அதுபோதும்”

உலக மதிப்பீட்டில் மிகப்பெரும் வாய்ப்பும் சலுகையும் அது. அன்றும் இன்றும் என்றும் தலைவர்களும் பின்தொடர்பவர்களும் எதற்காக ஓடுகிறார்கள்? அக்கால வல்லரசான ரோம அரசாங்கத்தின் மன்னன் தன் மகளை அளிக்கிறேன்; நிலம் அளிக்கிறேன்; பட்டம் பதவி அளிக்கிறேன் என்றெல்லாம் தங்கத் தாம்பாளத்தில் ஏந்தித் தருகிறான். அதுவும் யாருக்கு? மற்றொரு சாம்ராஜ்ய மன்னனுக்கோ, பட்டம், பதவி, அந்தஸ்து ஆகியனவற்றில் உயர்ந்தோங்கி நின்றவருக்கோ அல்ல. மிக மிக எளிமையான வாழ்க்கைத் தரத்தைக்கொண்ட, பாலை நிலத்திலிருந்து வந்திருக்கக்கூடிய ஒரு சாதாரண மனிதருக்கு! எங்கிருந்து வந்தது அவருக்கு இத்தகைய சிறப்பும் அங்கீகாரமும்?

இஸ்லாம்! அதில் எத்தகைய சமரசமும் செய்து கொள்ளாத அடிபணிதல்!

இப்பொழுது அந்த இஸ்லாமே அங்கு விலைபேசப்பட்டது. அதை முற்றிலும் உணர்ந்திருந்தார் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா. விலங்குகளால் பூட்டப்பட்டிருந்த அவர் முகத்தில் புன்னகை தோன்றியது.

“உன்னிடம் உள்ள அனைத்தும் அதனுடன் அரபுகளிடமுள்ள அனைத்தும் சேர்த்து மூட்டை கட்டி என்னிடம் கொட்டினாலும் சரியே! அதற்காகவெல்லாம், ஒரே ஒரு நொடிகூட முஹம்மது கற்றுத் தந்த மார்க்கத்திலிருந்து விலக மாட்டேன்”

அளிக்கும் அன்பளிப்பை யாரேனும் மறுக்கும்போது அது ஏற்படுத்தும் வலியிருக்கிறதே, அது சாதாரண மனிதர்களுக்கே கடுமையானது. பரந்து விரிந்த சாம்ராஜ்ஜியத்தின் மன்னர்களுக்கோ அது அவர்களின் கௌரவப் பிரச்சினை. அதை, அந்த கௌரவத்தை அடியுடன் இடித்தது அப்துல்லாஹ்வின் அந்தத் திட்டவட்டமான நிராகரிப்பு. தன் முகத்தில் உமிழ்ந்ததைப் போல் உணர்ந்தான் அந்த மன்னன். கோபம் ஜிவுஜிவு என்று தகித்தது. இதற்குமேல் அவருக்கு அளிக்கவோ, உறுதி கூறவோ ஒன்றுமில்லை என்றும் புரிந்தது.

“எனில் எனக்கு வேறு வழியில்லை. நான் உம்மைக் கொல்ல வேண்டியிருக்கும்”

“அவ்வளவுதானே? உன் விருப்பம் போல் செய்து கொள்ளலாம்”

‘என்ன இது? அடங்க மாட்டார் போலிருக்கிறதே? அப்படியானால் இவருக்கு அளிக்கப்படும் மரணம் இலேசானதாக இருக்கக் கூடாது’ என்று நினைத்தவன் அவரைச் சிலுவையில் வைத்துக் கட்டும்படி உத்தரவிட்டான்.

“எங்கே வில்லாளிகள்? அவரது கைகளில் அம்பு எய்யுங்கள்”

சிலுவையில் தொங்கிய அவரது கைகளில் அம்புகள் பறந்து வந்து தைத்தன. குருதி குபுக்கென்று பொங்கி வழிந்து. மன்னன் மீண்டும் அவரிடம் சலுகை பேசினான். “கிறித்துவத்தை ஏற்றுக் கொள்கிறாயா?” திடவுறுதி குறையாமல் மறுத்தார் அப்துல்லாஹ்.

“அவரது கால்களில் அம்பு எய்யுங்கள்” என்று பிறந்து அடுத்த அரச கட்டளை.

இப்பொழுது அவரது கால்களில் அம்புகள் நிலைகுத்தின. மீண்டும் ஒருமுறை அவரிடம் கேட்டான் மன்னன். அப்துல்லாஹ்வுக்கோ மேலும் மேலும் உறுதி பெருகிக் கொண்டிருந்தது. மீண்டும் தெளிவாய் மறுத்தார். மசியவில்லையே இவர். வேறென்னகொடூரம் புரியலாம் என்று யோசித்தவன், “அவரைச் சிலுவையிலிருந்து விடுவியுங்கள்” என்றான்.

பெரும் அண்டா அளவிலான கொப்பரை நிறைய எண்ணெய் ஊற்றி, கீழே நெருப்புப் பற்ற வைத்தார்கள் சேவகர்கள். தீ, திகுதிகுவென கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. எண்ணெய் கொதிக்கும் வரை காத்திருந்தார்கள். முஸ்லிம் கைதிகளில் இருவரை இழுத்து வரச் சொன்னான் மன்னன். அதில் ஒருவரை கொதிக்கும் அந்த எண்ணெயில் தூக்கி எறிய, விழுந்த மாத்திரத்தில் அவரின் சதையெல்லாம் கரைந்து கழண்டு போய், எலும்புகள் துருத்திக் கொண்டு நின்றன. அவர் அலறுவதற்குக்கூட அவகாசம் இருந்திருக்கவில்லை. அவ்வளவு சூடு.

இந்தக் காட்சியின் கொடூரம் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபாவை நிச்சயமாகப் பலவீனப்படுத்தியிருக்கும் என்று நம்பினான் பைஸாந்தியச் சக்கரவர்த்தி. கடைசித் தவணையாக அப்துல்லாஹ்விடம் கேட்டான்.

“இப்பொழுது சொல். இதுவே உமக்குக் கடைசி வாய்ப்பு. கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக் கொள்கிறாயா?”

ஆனால் முன்பைவிட இன்னமும் அதிக வைராக்கியத்துடன் தான் பதில் வந்தது. “முடியாது!”

“இழுத்துச் செல்லுங்கள் இவரை. கொப்பரையில் தள்ளுங்கள்”

சேவகர்கள் அவரை இழுத்துச் சென்றனர். கொப்பரையை நோக்கி நெருங்க நெருங்க, அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அதைப் பார்த்ததுதான் தாமதம், மகிழ்ச்சியுற்ற சேவகர்கள் உடனே சக்கரவர்த்தியிடம் ஓடினார்கள்.

“மன்னர் மன்னா! கைதியின் கண்களில் கண்ணீர்”

“ஆஹ்! இறுதியில் மரண பயம் வந்து விட்டது பார். இப்பொழுது நம் வழிக்கு வருவார். அவரை உடனே என்னிடம் அழைத்து வாருங்கள்”.”

“இப்பொழுது சொல்! கிறிஸ்துவ மதம் உனக்குச் சம்மதம் தானே?”

“நிச்சயமாக இல்லை”

“நீர் நாசமாய்ப் போக! பின் எதற்கு அழுதீர்?”

அவர் உரைத்த பதிலில் அப்படியே ஸ்தம்பித்துப் போனான் அந்த பைஸாந்தியச் சக்கரவர்த்தி.

“மரணமல்ல என் கவலையும் பயமும். அல்லாஹ்வின் உவப்பைப் பெறுவதற்கு, அதற்கென தியாகம் புரிவதற்கு என்னிடம் உள்ளதோ ஒரே ஓர் உயிர். என்னிடம் மட்டும் என் தலையிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கையளவு உயிர்கள் பல இருந்திருந்தால் அவை அத்தனையையும் ஒன்றன் பின் ஒன்றாய், மகிழ்ச்சி பொங்க, இந்தக் கொப்பரையில் கொட்டித் தீர்த்திருக்கலாமே என்று எண்ணிப் பார்த்தேன்; கைச்சேதம் கண்ணீராகிவிட்டது”.”

கொதிக்கும் கொப்பரையின் அருகே நின்றுகொண்டு, வெறும் எலும்பாய் மிதக்கும் சக முஸ்லிமைப் பார்த்துக்கொண்டு, சமரசத்தின் நிழல்கூட விழாமல் அவர் பேசினாரென்றால் அந்த வார்த்தைகளின் ஒவ்வொரு எழுத்தும் சத்தியம். அசாத்திய பலம் கொண்டது அந்த ஈமான்.

மிகவும் யோசித்தான் அந்த மன்னன். ‘என்ன இவர்? என்னுடைய தற்பெருமை, தன்மானத்தையெல்லாம் கொன்று விட்டு, இந்த மனிதர் கொப்பரையில் போய்க் குதித்துவிடத் தயாராக இருக்கிறார். மரணத்திலும் இவர் வென்று விட்டால் எனக்கு முழுத் தோல்வியல்லவா?’

“போகட்டும் போ! என்னுடைய நெற்றியில் முத்தமிடு. நான் உன்னை விடுவித்து விடுகிறேன்”

சற்று நேரம் ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தார் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா. என்ன பேசுகிறான் இந்தப் பேரரசன்? அவனது தோல்வியை அவனது முகத்திப் படித்துவிட்டார். அவன் கண்களின் கெஞ்சல் புரிந்தது. தம் மரணத்தைவிட அவனுக்கு அவனது தன்மானம் பெரிது என்பது தெரிந்தது. அதைத் திறம்பட உபயோகித்துக் கொள்ள முடிவெடுத்தார்.

“செய்கிறேன். ஆனால் நீ முஸ்லிம் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்”

“அப்படியே ஆகட்டும்”

தனக்குள் சொல்லிக் கொண்டார் அப்துல்லாஹ். “இவன் அல்லாஹ்வின் எதிரி. நான் இவன் நெற்றியில் முத்தமிடுவதால் முஸ்லிம் கைதிகள் அனைவருக்கும் விடுதலை கிடைக்கப்போகிறது; அவர்களது உயிர் காப்பாற்றப்படுகிறது எனில் அதற்காக நான் முத்தமிடுவதில் பாதகம் ஏதும் இல்லை”

மன்னனின் நெற்றியை முத்தமிட்டார் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா. விடுதலையானார்கள் முஸ்லிம் கைதிகள்.

வெற்றிகரமாய் மதீனா திரும்பினார்கள் அனைவரும். கலீஃபா உமரிடம் நடந்தை விவரி்த்தார் அப்துல்லாஹ். அதைக் கேட்ட உமர், விடுதலையாகி வந்தவர்களைப் பார்த்தார். பெருமிதம் பொங்கியது அவருக்கு. “ஒவ்வொரு முஸ்லிமும் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபாவின் நெற்றியை முத்தமிடக் கடமைப்பட்டிருக்கிறார். நான் அவர்களில் முந்திக் கொள்கிறேன்”

எழுந்து சென்று அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபாவின் நெற்றியை முத்தமிட்டார் அமீருல் மூஃமினீன் உமர்.

தோழர்கள் பலரின் வாழ்க்கையிலும் நாம் பொதுவாய்க் காணும் அம்சம் இது. நபியவர்களின் மேல் நம்பிக்கைக் கொண்டு, இஸ்லாத்தை ஏற்று, இறை நம்பிக்கைக் கொண்டு அடிபணிந்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள் அவர்கள். அவர்களின் தினசரி வாழ்க்கை என்பது மிகவும் யதார்த்தமாகத்தான் கழிந்து சென்றிருக்கிறது. ஆனால் அவர்களின் உன்னதமெல்லாம் அவர்களின் உள்ளே எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அதை உலகத்திற்கு வெளிச்சமிட்டு அறிவிக்க, சொல்லாமல் கொள்ளாமல், அல்லாஹ் சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தித் தந்துவிடுகிறான் பாருங்கள்! அப்பொழுது பிரளயமாய் வெடித்துத் திறக்கிறது அவர்களது தியாகமும் மேன்மையும். தங்களுக்குரிய சிறப்பிடங்களை உறுதிப்படுத்தி வரலாற்றில் நிலைபெற்று விடுகிறார்கள் அவர்கள்.

பின்னர் முஸ்லிம்கள் ஒவ்வொருவராக வந்து முத்தமிட்டனர் – அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபாவை.

இரு பேரரசர்களை எதிர்கொண்டு, கொஞ்சங்கூட அஞ்சாமல் தீரத்துடன் உரையாடிய அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா, உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியின்போது இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

சத்தியமார்க்கம்.காம்-ல் 20 ஜூன் 2011 அன்று வெளியான கட்டுரை

உதவிய நூல்கள்

Related Articles

Leave a Comment