68. அப்துல்லாஹ் இபுனு உமர் (عبد الله بن عمر ) – 2
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஒவ்வோர் அங்க அசைவையும் வார்த்தைகளையும் சமிக்ஞைகளையும் உற்று உற்றுப் பார்த்து வளர்ந்தவர் அப்துல்லாஹ் இப்னு உமர். அவை அனைத்தையும் அச்சு அசலாகத் தம் வாழ்விலும் சொல்லிலும் செயலிலும் கடைப்பிடித்தே தீர்வது என்பது அவரது இயல்பாகிவிட்டது. பெரும் பிடிப்பும் பிடிவாதமுமாக அதன்படி வாழ்ந்து, செயல்படுத்தியிருக்கிறார்.
நபியவர்களின் சுன்னாஹ்வைப் பின்பற்றுவதில் எவ்வித வியாக்கியானத்தையும் அவர் யோசிக்கவில்லை. ‘நபியவர்கள் செய்திருக்கிறார்களா, போதும். நானும் செய்வேன். அவ்வளவுதான்’ என்பது அவருடைய விடாப்பிடியான தீர்மானம். வார்த்தைகளில் விவரித்துவிட முடியாத உச்சபட்ச பேரன்பு அது. நபியவர்களின் பெயரை உச்சரிக்கும்போதெல்லாம், அவர்கள்மீது கொண்டிருந்த ஆழமான அன்பின் காரணமாக அவரது வார்த்தைகள் விம்மலின்றி வெளிவந்ததில்லை என்று தெரிவித்திருக்கிறார் ஆஸம் பின் முஹம்மத் அல்-அம்ரி. நமக்கெல்லாம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதைக்கூட முழுமையாக உச்சரிப்பதில் சோம்பல்.
இப்னு உமரிடம் நாஃபி என்ற பணியாள் ஒருவர் இருந்தார். ஹதீஸ்களின் தொடரில் நம்பகமானவராக இமாம் புகாரியால் அங்கீகரிக்கப்பட்டவர். அவரது வாயிலாக இப்னு உமர் வாழ்வின் நிகழ்வுகள் பல வரலாற்றில் பதியப்பட்டிருக்கின்றன. இப்னு உமர் நபியவர்களின் சுன்னாஹ்வைப் பின்பற்றுவதைப் பற்றி அவர் அறிவித்துள்ள பல தகவல்கள் வெகு சுவையானவை.
நபியவர்கள் ஒரு மரத்தினடியில் இளைப்பாறியிருக்கிறார்கள் என்று தெரிய வந்தால் போதும், அந்த மரம் வாடி விடாமல் நீர் ஊற்றிப் பராமரித்திருக்கிறார் இப்னு உமர். ஒருமுறை நபியவர்கள் இப்னு உமரிடம் பள்ளிவாசலின் ஒரு பகுதியிலுள்ள நுழைவாயிலைக் காட்டி நான் இதைப் பெண்களுக்காக விட்டுவிடலாம் என நினைக்கிறேன் என்று ஓர் அபிப்ராயம் தெரிவித்திருக்கிறார்கள். அப்படி அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காகவே, தம் வாழ்நாள் முழுவதும் அந்த நுழைவாயிலின் வழியாக அவர் செல்லவே இல்லை. ஒருமுறை மக்காவிற்குப் பயணம் செல்லும்போது, தம் ஒட்டகத்தின் தலையைப் பிடித்து அதைப் புகழ்ந்தவாறு “ஒருவேளை காலடியின்மீது காலடி படலாம்” என்று சொல்லியிருக்கிறார் இப்னு உமர். என்ன அர்த்தமாம்? நபியவர்கள் தம் ஒட்டகத்தில் பயணித்த பாதை அது. அதனால் அவர்களது ஒட்டகத்தின் காலடி பட்ட இடத்தில் இன்று தம் ஒட்டகத்தின் காலடியும் படக்கூடும் என்று அப்படியொரு நம்பிக்கை, பேராவல்.
நபியவர்கள் நின்று தொழுத இடங்கள் என்று தாம் அறிய வந்த இடங்களில் எல்லாம் அவரும் நின்று தொழுவார். ஏதேனும் ஓர் இடத்தில் நபியவர்கள் நின்று பிரார்த்தனை புரிந்திருப்பார்கள். அதே குறிப்பிட்ட இடத்தில் நின்று தாமும் பிரார்த்தனை புரிவார். நபியவர்கள் ஓர் இடத்தில் அமர்ந்து பிரார்த்தனை புரிந்தார்கள் என்று தெரியவந்தால் அவ்விடத்தில் தாமும் அதேபோல் அமர்ந்து பிரார்த்தனை. ஏதேனும் பிரயாணத்தின்போது நபியவர்கள் ஓர் இடத்தில் தம் வாகனத்திலிருந்து இறங்கி இரண்டு ரக்அத் தொழுதிருப்பார்கள். அவ்வழியே இவர் பயணம் செல்ல நேர்ந்தால் அதே குறிப்பிட்ட இடத்தில் தாமும் தம் வாகனத்திலிருந்து இறங்கி அதேபோல் இரண்டு ரக்அத் தொழுகையை நிறைவேற்றுவார்.
மக்க நகரில் ஓரிடத்தில் நபியர்களின் பெண் ஒட்டகம் இரண்டு முறை சுற்றியது; பின்னர் நபியவர்கள் அதிலிருந்து இறங்கி இரண்டு ரக்அத் தொழுதார்கள் என்பது அவருக்கு நினைவுக்கு வரும். நபியவர்களின் பெண் ஒட்டகம் அமருவதற்குமுன் தன்னிச்சையாக அப்படிச் செய்திருக்கலாம். ஆனால் இப்னு உமர் தம் பெண் ஒட்டகத்தில் அவ்விடத்தைக் கடக்கும்போது அதை அதேபோல் இரண்டுமுறை சுற்ற வைத்து, பிறகு அதிலிருந்து இறங்கி இரண்டு ரக்அத் தொழுவார்.
நபியவர்களின் செயல்பாடுகளைக் காற்புள்ளி, அரைப்புள்ளி அப்படி இப்படி என்று எவ்வித சமரத்திற்கும் இடம் கொடுக்காமல் வாஞ்சையுடன் மாய்ந்து மாய்ந்து பின்பற்றியிருக்கிறார். இவற்றையெல்லாம் அறிந்த அன்னை ஆயிஷா (ரலி), “நபியவர்கள் கடந்த பாதைகளின் தடயத்தைப் பின்பற்றுவதில் இப்னு உமரை விஞ்சிய ஒருவரை நான் கண்டதில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தளவு நபியவர்களின் செயல்களை நெருக்கமாகவும் அடியொற்றியும் பின்பற்றியவர் அவரைப் பற்றி அதிகமாகத்தானே விவரித்திருக்க வேண்டும். மாறாக அஞ்சினார். “ஹதீஸில் ஏதேனும் கூட்டிவிடுவோமோ, குறைத்துவிடுவோமோ என்ற அச்சத்தின் காரணமாக அவற்றை விவரிப்பதில் இப்னு உமர் மிகவும் எச்சரிக்கையானவர்” என்று அவருடைய காலத்தவர் அவரைப் பற்றி குறிப்பிடுமளவு தயக்கம்.
ஹதீஸின் மூல வாக்கியங்கள் ஒருபுறமிருக்க, அதன் மொழியாக்க வார்த்தைகளை வைத்துக்கொண்டு எவ்வித எச்சரிக்கையும் அச்சமும் இல்லாமல் நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு பிரயோகிப்பதும் வாதாடுவதும் சமகாலத்தில் நமக்கெல்லாம் மிக எளிதாகிவிட்டதே, அதை என்னவென்பது?
oOo
கனவு கண்டார், நபி (ஸல்) அவர்களிடம் அறிவுரை பெற்றார், இரவுத் தொழுகையை வழக்கமாக்கிக் கொண்டார் என்று மேலே பார்த்தோமில்லையா, அதைப் பற்றியும் அவர் குர்ஆன் ஓதுவதைப் பற்றியும் சுவையான தகவல்கள் வரலாற்றுப் பக்கங்களில் வழிகின்றன.
இப்னு உமர் பாத்திரமொன்றில் தண்ணீர் பிடித்து வைத்திருப்பார். இரவில் உளூச் செய்துவிட்டு இயன்றவரை தொழுவார். பிறகு சிறு உறக்கம். அதன்பின் எழுந்து, மீண்டும் உளூ, தொழுகை. ஓர் இரவில் நான்கைந்து முறை இவ்விதம் நிகழும்.
நாஃபியிடம், “வீட்டில் இப்னு உமர் என்ன செய்வார்?” என்று ஒருவர் கேட்டிருக்கிறார். அதற்கு நாஃபி, “உம்மால் அதைச் செய்ய முடியாது. தம்முடைய ஒவ்வோர் தொழுகைக்கும் உளூ செய்வார். தொழுகைகளுக்கு இடையே குர்ஆன் ஓதுவார். ஏதேனும் காரணத்தால் இஷாவின் கூட்டுத் தொழுகையை அவர் தவறவிட்டுவிட்டால், அன்றைய இரவு முழுவதையும் தொழுகையிலேயே கழிப்பார்” என்று பதில் அளித்தார்.
தொழுகையின் போதும் குர்ஆன் ஓதும் போதும் அழுது அழுது மாய்வார் என்றும் தெரிவித்திருக்கிறார் நாஃபி. சூரா பகராவின் இறுதி வசனம், ”இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்குக் கேட்பான்” என்பதை ஓதும்போது இது மிகவும் கடினமான கணக்கு வழக்கு என்று அழுதிருக்கிறார் இப்னு உமர்.
குர்ஆனின் 83ஆவது அத்தியாயத்தை ஓத ஆரம்பிப்பார். “அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்குக் கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.” என்று தொடங்கும் அந்த சூராவின், ”அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்- ” என்ற வசனத்தை அடைந்ததும் தேம்பி அழ ஆரம்பிப்பவர் அந்த அத்தியாயத்தின் இதர வசனங்களைத் தொடர்ந்து ஓத முடியாதவராகி விடுவார்.
குர்ஆனின் 57ஆவது அத்தியாயமான ஹதீதின் 16ஆவது வசனத்தை ஓதினார் இப்னு உமர். “ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? ” என்று அந்த ஆயத்தை ஓதியவர் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.
உபைத் இப்னு உமைருடன் அப்துல்லாஹ் இப்னு உமர் அமர்ந்திருந்தார். உபைத் ஏதோ விவரித்தவாறிருக்க இப்னு உமரின் கண்களிலிருந்து கண்ணீர். சூரா அந்-நிஸாவிலிருந்து 41ஆம் ஆயத்தை ஓதினார் உபைத். ”எனவே (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தினரையும் (அவர்களுடைய) சாட்சியுடன் நாம் கொண்டுவரும்போது, நாம் இவர்கள் மீது சாட்சியாக உம்மையும் கொண்டு வந்தால் (உம்மை நிராகரிக்கும் இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?” என்ற அந்த வசனத்தைக் கேட்டு இப்னு உமர் அழுத அழுகையில் அவரது தாடி நனைந்து நெஞ்சுடன் ஒட்டிக் கொண்டது. அவ் வழியே சென்ற ஒருவர் உபைதைப் பார்த்து, ‘போதும். நீர் இந்த ஷெய்கை மிகவும் விசனத்தில் ஆழ்த்திவிட்டீர்’ என்று பரிதாபப்படும் அளவிற்கு அழுதிருக்கிறார்.
ஒருமுறை அப்துல்லாஹ் இப்னு உமர் குளிர்ந்த நீர் அருந்தியிருக்கிறார். பிறகு அழ ஆரம்பித்துவிட்டார். ‘என்ன ஆயிற்று? எதற்காக அழுகின்றீர்கள்?’ என்று அவரிடம் கேட்டார்கள்.
“அல்லாஹ்வின் அருள் மறையிலிலுள்ள ‘அவர்களுக்கும் அவர்கள் இச்சித்து வந்தவற்றுக்கும் இடையே திரை போடப்படும்; (ஸபா 34:54)’ என்ற வசனம் என் நினைவிற்கு வந்துவிட்டது, நரகிலுள்ள மக்களுக்கு தண்ணீரைத் தவிர வேறு எந்த ஆசையும் இருக்காது என்று எனக்குத் தெரியும். நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து, ‘தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள் எனக் கேட்பார்கள் (அல் அராஃப் 7:50)’ என்று அல்லாஹ் சொல்கிறான்” என, குடிநீர் மறுக்கப்படும் நரகவாசிகளின் நிலையை எண்ணி இப்னு உமர் பெரிதாக அழுத இந் நிகழ்வைத் தெரிவித்திருக்கிறார் ஸமீர் அர்-ரியாஹி.
oOo
|
அற்புதமான அறிவுத் திறன், சொல்லி மாளாத தன்னடக்கம், பரோபகாரம், இறை வழிபாடு என்று அவரிடம் மிகைத்திருந்த நற்குணங்களும் பண்புகளும் ஏராளம். அனைத்திற்கும் மேலாக மிக எளிய தூய வாழ்க்கை.
கலீஃபா உமரின் காலத்தில் மார்க்கச் சட்டக் கலையின் நிலையைப் பற்றிக் குறிப்பிடும்போது, மதீனாவில் ஏழு சஹாபாக்கள் ஃபத்வா அளிப்பதில் முக்கியமானவர்கள். உமர், அலீ. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத், ஆயிஷா. ஸைது இப்னு தாபித். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹும்) என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அபூமுஹம்மது இப்னு ஹஸம் என்பவர், “இவர்கள் ஒவ்வொருவருடைய ஃபத்வாவும் பெரும் நூலாகத் தொகுக்கக் கூடியது” என்று கூறியுள்ளார். அந்தளவு இப்னு உமரிடம் ஞானம் நிறைந்திருந்தது. ஆனாலும் கருத்துகளை வெளிப்படுத்துவதிலும் தவிர்த்துக் கொள்வதிலும் அவருக்கு இருந்த எச்சரிக்கை பெரும் ஆச்சரியம்!
ஒருவர் இப்னு உமரிடம் வந்தார். மார்க்கம் தொடர்பான ஒரு விஷயத்தில் தம் கேள்வியை அல்லது சந்தேகத்தைக் கூறி அவரிடம் கருத்துக் கேட்டார். “நீர் கேட்பதைப் பற்றிய ஞானம் எனக்கில்லை” என்று சுருக்கமாக ஒற்றை வாக்கியத்தில் பதில் அளித்துவிட்டார் இப்னு உமர். அந்த மனிதரும் திரும்பிச் சென்று விட்டார். இப்னு உமர் தம் கைகளை வீசி, “இப்னு உமருக்கு ஞானம் இல்லாத ஒன்றைப் பற்றி அவர் கேள்வி கேட்கப்பட்டார். அதற்கு அவர் எனக்கு அதைப் பற்றிய ஞானமில்லை என்று பதில் சொல்லிவிட்டார்” என்று வெகு குதூகலமாகச் சொல்லி மகிழ்ந்திருக்கிறார்! ஞானம் தளும்பியிருந்தும் தெரியாத விஷயத்தில் ஏதேனும் தவறாகக் கூறி, குற்றவாளி ஆகிவிடுவோமோ என்று அவருக்கு அந்தளவு அச்சம். மட்டுமின்றி ‘தெரியாது’ என்று சொல்வதில் சற்றும் அவமானமோ, வருத்தமோ இன்றி குதூகலம்தான் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. எதற்கெடுத்தாலும் ‘எனக்குத் தெரியும்’ என்று மூக்கை நீட்டிக்கொண்டு ஓடும் நம் தலைமுறையினரை எந்த ரகத்தில் சேர்ப்பது?
ஒருவர் இப்னு உமருக்குக் கடிதம் எழுதியிருந்தார். ‘உங்களது ஞானத்திலிருந்து ஏதாவது எனக்கு எழுதி அறிவுறுத்துங்கள்’ என்று வேண்டியிருந்தது அதிலுள்ள வாசகம். ‘மடி எங்கே, இந்தா பிடி’ என்று அள்ளிக் கொட்டாமல் அவருக்கு பதில் எழுதினார்.
‘ஞானம் விசாலமானது. உனது முதுகு, மக்களின் குருதிச் சுமையிலிருந்தும் உனது வயிறு, அவர்களின் செல்வ வளத்திலிருந்தும் உனது நாவு, அவர்களின் பெருமைக்கு அவதூறு விளைவிப்பதிலிருந்தும் நீங்கியிருக்கட்டும். அதன்பின் அவர்களது பொதுநல விஷயத்தில் அக்கறை செலுத்தி சேவையாற்றியவனாக நீ அல்லாஹ்வைச் சந்திக்க முடிந்தால் அதைச்செய்.’
பொதுவாழ்க்கையில் ஒருவர் இறங்குவதாக இருந்தால் மக்களின் உயிர், பொருள், மானத்தைப் பாதுகாப்பதில்தான் முதல் முக்கியத்துவம் இருக்க வேண்டும். பிறகுதானே சேவை, உதவியெல்லாம்? இன்று பொது வாழ்க்கையில் உள்ளவர்களை யோசித்துப் பாருங்கள்!
oOo
அந்தக் காலகட்டத்தில் இஸ்லாமிய அரசுக்கு அளவற்ற செல்வம் வந்து குவிய ஆரம்பித்தது. அது பல தோழர்களுக்கு அச்சத்தைத்தான் அளித்தது. உலக ஆதாயத்திற்கும் செல்வ ஆடம்பரத்திற்கும் ஆட்பட்டுவிடுவோமோ என்று அஞ்சினார்கள். இப்னு உமரோ தம் தந்தையைப் போலவே உலக ஆசைகளை எல்லாம் மூட்டைக் கட்டி பாலை மணலில் குழிதோண்டிப் புதைத்துவிட்டு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்.
தம்முடைய அன்றைய அடிப்படைத் தேவைகளைத் தீர்க்கும் அளவிற்கு மட்டுமே அவருக்குப் பணம் தேவைப்பட்டது. மற்றபடி அவரது வாழ்க்கையில் எவ்வித சொகுசுக்கும் தேவை இருக்கவில்லை. இதனால் செல்வம் அவருக்கு அடிமைப்பட்டுக் கிடந்ததே தவிர அவர் செல்வத்திற்கு அடிமையாகவில்லை. அடிப்படைத் தேவைகள் என்று சொன்னாலும்கூட அதுவும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மாறக்கூடுமல்லவா? இப்னு உமரைப் பொறுத்தவரை அவரது அடிப்படைத் தேவை உயிர் வாழ்வதற்குத் தேவையான அளவில் சொற்ப உணவு, மானத்தை மறைக்கும் அளவிற்கான உடை. அவ்வளவுதான். அதைத் தாண்டி தம்மிடமுள்ள பணம் வறியவர்களுக்கும் தேவையுடையோருக்கும் உரிமையானது என்று அவர் கருதினார்.
அவரது தயாள குணத்தை அறிந்த வறியவர்கள், அவர் கண்ணில்படும் வகையில் பாதையில் அமர்ந்திருப்பார்கள். தங்களைக் காணும் அவர் தம் வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்களது தேவைகளை நிவர்த்தி செய்துவிடுவார் என்பது அவர்களுக்குத் தெரியும். ஏனெனில், அவர் தனியாக உணவு உண்டதில்லை. ஏழைகளையும் வறியவர்களையும் உடன் அழைத்து சமபந்தி போஜனம். தம் மகன்கள் ஏழைகளை அழைக்காமல் வசதி படைத்தவர்களை மட்டுமே விருந்துக்கு அழைத்தால், ‘தன்னிறைவு கொண்டவர்களை அழைத்து வைத்துக்கொண்டு பட்டினியில் கிடப்பவர்களைத் தவிர்க்கின்றீர்களா?’ என்று அவர்களுக்கு வசவு விழும்.
அரசாங்கக் கருவூலத்திலிருந்து தமக்குக் கிடைக்கும் பங்கு தவிர, நாணயமான வர்த்தகராகத் திகழ்ந்து அதன் வழியாக இலாபம் ஈட்டி, அவருக்கு நிறைய செல்வம் வந்து சேர்ந்தது. ஆனால் தமக்கென மிச்சம், மீதி என்று எதையும் பூட்டி வைத்துக் கொள்ளாமல் அவற்றை அள்ளி அள்ளி தானமளித்து விட்டுத்தான் அவருக்கு மறுவேலை. அப்படியான ஒரு நிகழ்வுதான் நாலாயிரம் திர்ஹத்தையும் வெல்வெட் துணியையும் தானமளித்துவிட்டு மறுநாள் கடனுக்குத் தீவனம் வாங்கியது.
தொடரும், இன்ஷா அல்லாஹ்…
oOo
– நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம்-ல் 04 செப்டம்பர் 2016 அன்று வெளியான கட்டுரை