70. பிலால் பின் ரபாஹ் – 1 (بلال بن رباح)
கஅபாவின் மேல் விறுவிறுவென்று ஏறினார் அவர். கூரையின்மேல் நின்றுகொண்டு தமது உரத்த இனிய குரலில் முழங்க ஆரம்பித்தார்.
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அஷ்ஹது அ(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ்
அஷ்ஹது அ(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ்
தொழுகையின் அழைப்பிற்கான அந்த பாங்கொலி மக்காவின் மலைக்குன்றுகளில் முட்டி எதிரொலித்தது. குன்றுகளிலும் உயர்ந்த இடங்களிலும் ஓரமாக ஒதுங்கி, தொங்கிய முகங்களுடன் கஅபாவில் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த குரைஷிகளுக்கு அந்தக் காட்சியை நம்பவே முடியவில்லை. இது கனவா, நனவா? புழுதியில் கிடத்தப்பட்டு, புழுவாக நசுக்கப்பட்ட அந்தக் கறுப்பர் இன்று நம் புனிதக் கருங்கல் ஆலயத்தின் உச்சியில் நின்று உரத்து உரைத்துக் கொண்டிருப்பது விதியா, விசித்திரமா? உயிர் பிரிந்து விடுமோ என்று கிடந்த நிலையில் ஈனக் குரலில் அன்று அவர் முனகிய வார்த்தைகளை இன்று இந்தக் கஅபாவின் கூரையில் நின்று உச்சபட்ச ஒலியில் ஓங்கி ஒலிப்பது தற்செயலாக இருக்க முடியுமா?
பலருக்கும் பலவித எண்ணங்கள் ஓடின. ஆனால் முஸ்லிம்களின் மாபெரும் வெற்றி நாளான அன்று அந்தப் புனிதத் தலத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அனைவரும் அந்நிகழ்வின் பிரமிப்பில் கட்டுண்டுக் கிடந்தனர்.
oOo
ரபாஹ்-ஹமாமா தம்பதியருக்கு பிலால், காலித் எனும் இரு மகன்கள். இன்றைய எத்தியோப்பாவும் அன்றைய அபிஸீனியாவுமான ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் ரபாஹ். அவர் எப்போது அரபு நாட்டுக்கு வந்தார், அந்நாட்டைச் சேர்ந்த பனூ ஜுமாஹ் குலத்தைச் சேர்ந்த ஹமாமாவை எப்போது திருமணம் புரிந்தார் என்ற விபரங்கள் இல்லை. ஆனால், அவர்களுடைய மகன் பிலால் பதின்மப் பருவத்திலேயே அடிமையாகிவிட்டார்.
மக்காவில் குரைஷிகளின் முக்கியத் தலைவர்களுள் ஒருவனாக இருந்த உமைய்யா இப்னு ஃகலஃப் என்பவனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த பிலாலுக்கு எசமானனின் ஆடுகளை மேய்ப்பது, எடுபிடி வேலைகளைச் செய்வது, கையளவு பேரீச்சம் பழம் ஊதியம் என்று வாழ்க்கை கழிந்து கொண்டிருந்தது.
எசமான் இட்ட பணியை மட்டும் ‘ஆமாம் சாமி’ என்று மறுப்பின்றி செய்து கொண்டிருந்தாரே தவிர, அந்த எசமானும் அவருடைய குலத்தினரும் கும்பிட்டு வந்த சாமி சிலைகளின்மீது, அந்தக் கடவுளர்களின்மீது எவ்வித நம்பிக்கையும் பிலாலுக்கு இருக்கவில்லை. தாம் உண்டு, தம் வேலை உண்டு என்று இருந்து வந்தார். இந்நிலையில் ஒருநாள், அவரையும் அந்தச் செய்தி வந்து அடைந்தது.
‘அல் அமீன் தெரியுமில்லையா? அவருக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறதாம். நபியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாராம். அந்த இறைவன் என்பவன் ஏகன் ஒருவன் மட்டுமே என்கிறாராம். கேள்விப்பட்டாயா?’ என்று மக்காவில் பரவிய செய்தியைக் கேட்டதும், அடிமையாகக் கிடந்தவருக்கு என்ன பொறி தட்டியது என்று தெரியவில்லை, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுவிட்டார் பிலால் பின் ரபாஹ், ரலியல்லாஹு அன்ஹு!
‘நமக்கெல்லாம் தெரிந்தவரான அல் அமீன், தம்மை இறைத் தூதர் என்று சொல்லிக் கொள்கிறாராம்’ என்று ஒற்றை வரிச் செய்தி குரைஷிப் பெருசுகளின் காதுகளை எட்டியபோது முதலில் அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் மெதுவே, மெதுமெதுவே அது விரிவடைந்து குறிப்பிடத்தக்க செய்தியாகி, பரபரப்பாகி, தலைப்புச் செய்தி அளவிற்கு நிலைமை எட்டியதும் குரைஷித் தலைவர்கள் குதித்து எழுந்தார்கள். ‘பொழுது போகாமல் சும்மா ஏதோ பேசித் திரிகிறார் என்று பார்த்தால், இந்த முஹம்மது நமது கடவுளர்களைப் போலி என்கிறார், சிறியவர், பெரியவர், அடிமைகள் என்று தம் கொள்கைக்கு ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறார். இப்படியே விட்டால் சரிவராது’ என்று கோபத்தில் மூச்சிரைத்தார்கள்.
குரைஷிகளின் ஆத்திரமும் எரிச்சலும் அதிகரிக்க அதிகரிக்க அவற்றுக்கெல்லாம் வடிகாலாய் அடிமைகளும் இன, குல பாதுகாப்பு எதுவும் இல்லாமலிருந்த பலவீனமானவர்களும்தாம் வசமாக மாட்டினார்கள். கொந்தளித்த குரைஷிகளுக்கு இரண்டு குறிக்கோள்கள் இருந்தன. ஒன்று, முஸ்லிம்களைச் சித்திரவதைக்கு உள்ளாக்கி அவர்களைப் புதிய மதத்திலிருந்து வெளியேறச் செய்வது. அடுத்தது, பலவீனமான முஸ்லிம்களைப் போட்டு அடித்துத் துவைப்பதன் மூலம் பாதுகாவல் வளையத்திற்குள் இருக்கும் இதர முஸ்லிம்களின் மனத்தில் கிலி ஏற்படுத்துவது.
|
உமைய்யாவிடம் அடிமையாகக் கிடந்த பிலால், எந்தக் குலப் பாதுகாப்பும் இல்லாதவர். சொல்லப்போனால், குரைஷிகள் அவரையும் அவரைப் போன்ற அடிமைகளையும் மனிதப் பிறவியாகவே கருதியதில்லை. அவர்களைப் பொருத்தவரை அவர் ஒரு ஜந்து. ஏவலுக்கு அடிபணிந்து, பணியாற்றிக் கிடக்க வேண்டியது அவரது கடன். அவ்வளவுதான். அதைத்தாண்டி, அவருக்கு என்று ஒரு கருத்து இருக்கும்; அதன்படி அவர் செயலாற்றுவார், விருப்பமான சட்டையை அணிந்துகொள்வார், தமக்குப் பிடித்தமான மதத்தைத் தேர்ந்தெடுப்பார், அதைக் கர்ம சிரத்தையாய்ப் பின்பற்றுவார் என்பனவெல்லாம் அவர்களது கற்பனையைத் தாண்டிய சங்கதிகள். கனவிலும் அதை அவர்கள் நினைத்துப் பார்த்ததில்லை.
இங்கு மற்றொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இஸ்லாத்தை ஏற்ற அடிமைகள், ‘தாங்கள் அடிமைத் தளையில் சிக்கிக்கிடக்கின்றோம். நாயைவிடக் கேவலமாய் நடத்தப்படுகின்றோம். போதும் இந்தக் கேடுகெட்ட வாழ்க்கை’ என்று நினைத்து இஸ்லாத்தை ஏற்றார்கள் என்று கருதிவிட முடியாது. ஏனெனில் எசமானனின் பேச்சைக் கேட்டு, கிடைத்ததை உண்டுவிட்டு, அவன் சொன்ன வேலையைச் செய்துவிட்டு, தேமே என்று கிடந்தவரைக்கும் அவர்கள் பெரிய அளவிலான சித்திரவதைக்கோ, கொடுமைக்கோ ஆளானாதில்லை. மாறாக, இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்த பிறகுதான் அவர்களுக்குச் சொல்லி மாளாத பிரச்சினை, துன்பம், அவலம், சித்திரவதை என்று சோதனைகள் அணிவகுத்தன. அப்படியானால், ஏன் அத்தகைய சவால்களுக்கு அவர்கள் தங்களை உள்ளாக்கத் துணிந்தார்கள் என்ற கேள்வி எழுமில்லையா?
ஈமான்! அதன் சுவை அவர்களைக் கவர்ந்தது. ஏக இறைச் செய்தியின் அடிநாதம் அடிமைப்பட்டுக் கிடந்த அவர்களது புத்தியைத் தட்டி எழுப்பியது. மனமுவந்து ஏற்றார்கள். இஸ்லாத்தினுள் நுழைந்தார்கள். அதுதான், ‘உயிரே துச்சம்’ என்று இவ்வுலகின் சோதனைகள் அனைத்தையும் எதிர்கொண்டு தாங்கும் திடவுறுதியை அவர்களுக்கு அளித்தது.
‘உன்னுடைய அடிமை அந்த முஹம்மதை ஏற்று முஸ்லிமாகிவிட்டானாம். உனக்குத் தெரியுமா?’ என்று உமைய்யா இப்னு ஃகலஃபுக்கு ஒருநாள் செய்தி வந்து சேர்ந்தது. முஹம்மதையும் அவரது செய்தியையும் தப்பு, தவறு என்று மட்டந்தட்டி, உதாசீனப்படுத்தி வருகிறோம். அவர் கிளப்பியிருக்கும் குழப்பத்தை எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். அப்படியிருக்கும்போது, நான் வைத்ததே சட்டம்; இட்டதே பணி என்று என்னிடம் கிடக்கும் அடிமை ஒருவன் – அவரிடம் பேசிப் பழகுவதே தப்பு என்றிருக்க – அவரை நம்பி, அவரது செய்தியையும் நம்பி, புது மதத்தை ஏற்றுக்கொண்டானா? எங்கிருந்து அவனுக்கு இந்த தைரியம்? இருக்கு அவனுக்கு உபச்சாரம்’ என்று முஷ்டியை முறுக்கிக் கொண்டு எழுந்தான் உமைய்யா இப்னு ஃகலப்.
‘நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா? மரியாதையாக அந்த மதத்தைவி்ட்டு வெளியேறிவிடு’ என்று முதலில் மிரட்டல் ஆயுதத்தைப் பிரயோகித்தான் உமைய்யா. ‘அதெல்லாம் முடியாது’ என்று மறுத்துவிட்டார் பிலால்.
போகட்டும், என்று சற்றுக் கீழிறங்கி சன்மானம் அளிக்கிறேன், சகாயம் புரிகிறேன் என்று ஆசைகாட்டி பேரம் பேச ஆரம்பித்தான். அதற்கும் அவர் மறுக்கவே, அவனுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டது. ஓர் அடிமை, சுயமாய்த் தனக்கென ஒரு மதத்தைத் தேர்ந்தெடுக்கும் அளவிற்கு நிலைமை ஆகிவிட்டதா? இனி இன்னும் என்ன கெஞ்சிக்கொண்டு என்று அடுத்தக் கட்டத்திற்குச் சென்றான் உமைய்யா.
ஒருநாள் முழுக்க, அன்ன ஆகாரம், தண்ணீர் எதுவும் தராமல் பட்டினிபோட்டு, வெயில் மண்டையைப் பிளக்கும் நண்பகல் நேரத்தில், பிலால் ரலியல்லாஹு அன்ஹுவை தரதரவென்று பாலைவெளிக்கு இழுத்துச் சென்றான். அவனுடன் சிறு கூட்டமாக அவனது அடிப்பொடி சிறுவர் கூட்டம் சேர்ந்து கொண்டது. நெருப்பாய்க் கொதித்தது மணல். பிலாலின் கைகளைக் கட்டி, வெற்றுடம்பாய் அவரை அம்மணலில் படுக்கப் போட்டான். முதுகு சுடுகிறதே என்று அவர் அப்படி, இப்படி அசைந்துவிடக்கூடாது என்று ஒரு பெரும் கல்லைத் தூக்கிவந்து, அவரது மார்பின் மேல் வைக்கச் சொன்னான். என்னவாகும்? உடல் வறுபட்டது. முதுகுத் தோல் தீய்ந்து, தோல், சதை, நரம்பு என்று அவரது உடல் முழுதும் ரணவலி பரவியது. ஆனால் அந்த வெப்பத்தின் தாக்கம் அவரைத் தங்கமாய்ப் புடம் போடத்தான் உதவியது. அபிஸீனிய கறுப்பர் பிலால் தங்கமாய் மாறும் ரசவாதம் அந்தப் பாலை மணலில் நிகழ ஆரம்பித்தது.
வேதனையின் உச்சத்தில் துடித்த அவரிடம், “முஹம்மதை நம்புவதை விட்டுவிட்டு லாத், உஸ்ஸா சாமிகளை அழை. அது போதும். உன்னை விட்டுவிடுகிறேன். இல்லையா நீ இப்படியே கிடந்து சாக வேண்டியதுதான்” என்றான் உமைய்யா. துடித்த அந்தக் கரிய உதடுகளிலிருந்து வார்த்தைகள் வெளிவந்தன.
“அஹதுன்! அஹதுன்!” ஒருவனே! ஒருவனே! என்ற பதில் மட்டும் வந்தது.
அவர் பதில் ஏதும் சொல்லாமல் கிடந்திருந்தாலாவது அவனுக்கு மேலதிக ஆத்திரம் ஏற்பட்டிருக்காது. ஆனால் அதற்கு மாறாக, அவர் தம்முடைய ஏக இறை நம்பிக்கையை மேலும் மேலும் உச்சரித்தால்? அது அவனை ஆத்திரத்தின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. சூட்டில் பிலால் வதைபட்டுக் கொண்டிருக்க, அவன் மூளை உஷ்ணத்தில் கொதித்தது. அடுத்து அவரை என்ன செய்யலாம் என்று ஆத்திரம் பொங்கியது. அவருடைய கழுத்தில் கயிற்றைக் கட்டினான். சிறுவர் பட்டாளத்திடம் கயிற்றின் மறுமுனையை அளித்தான். ஒரு மிருகத்தைப்போல் அவரைத் தரதரவெனப் பிடித்து இழுத்துக் கொண்டு தெருத்தெருவாக ஊர்வலம் சென்றார்கள் அச்சிறுவர்கள்.
ஒவ்வொரு நாளும் இப்படி விதவிதமாக அவர்கள் சித்திரவதை செய்தும் அந்த எஃகு மனிதரின் மனத்தில் மட்டும் உறுதி குலைவதாக இல்லை. அடித்து, உதைத்து அவர்கள்தாம் களைத்துப் போனார்களே தவிர, குருதியும் வியர்வையும் சொட்டச் சொட்ட அவர் உறுதியாகக் கிடந்தார்.
கோபத்தின் உச்சிக்குச் சென்ற உமைய்யா அவருடைய முகத்திலேயே குத்தினான். “கேடுகெட்ட அடிமையே! எங்களுக்கு எத்தகைய அவமானத்தைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறாய்! சாமிகள் லாத், உஸ்ஸாவின்மீது ஆணையாக! அடிமைகளுக்கும் எசமானர்களுக்கும் உன்னை ஒரு பாடமாக ஆக்கி வைக்கிறேன பார்” என்று கத்தினான்.
அதற்கும் அவரிடமிருந்து வந்த பதில், “ஒருவனே! ஒருவனே!”
தொடர்ந்தது. சித்திரவதை ஒவ்வொரு நாளும் தொடர்ந்தது. அப்படியான ஒருநாளில் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு வந்து குறுக்கிட்டார்.
“பாவிகளா! என் இறைவன் அல்லாஹ் என்று சொல்லும் ஒரே காரணத்திற்காகவா இந்த அடிமையைத் துன்புறுத்துகிறீர்கள்? கொலை வெறியில் துடிக்கிறீர்கள்? அவருக்கான விலையைச் சொல்லுங்கள். நான் வாங்கிக் கொள்கிறேன்” என்றார்.
அடித்து, அடித்து கை ஓய்ந்து போயிருந்தான் உமைய்யா. சாகடித்தால் ஒரு காசுக்கும் அவர் பயன்பட மாட்டார். அந் நிலையில் அபூபக்ரு (ரலி) தாமே முன்வந்து ‘பிலாலை வாங்கிக் கொள்கிறேன்’ என்றதும் அவனுக்கு அது நல்ல வாய்ப்பாக அமைந்து போனது. அவன் வர்த்தகனாயிற்றே! யோசித்துப் பார்த்தான். செத்தாலும் சரி, என் இஸ்லாத்தை விடமாட்டேன் என்று உறுதியாக நிற்கும் அடிமையிடம் தோற்றுப் போவதைவிட, வந்தவரை இலாபம் என்று காசை வாங்கிக்கொண்டு, போய்த்தொலை என்று தலை முழுகுவது உசிதம் என்று கணக்குப் போட்டவன் ஏதோ ஒரு விலையைச் சொன்னான்.
பேரமில்லை; மறு பேச்சில்லை. உடனே அத்தொகையைக் கொடுத்து பிலாலை வாங்கினார் அபூபக்ரு. ஏழோ அல்லது நாற்பதோ அவாஃகின் தங்கம் விலையாகக் கொடுத்தார் என்று ஓர் அறிவிப்பில் உள்ளது.
‘வா போவோம்’ என்று நடக்க ஆரம்பித்தவரிடம், “அதிகமான விலை கொடுத்து ஏமாறி விட்டீரே. ஒரே ஒரு காசுக்குக் கேட்டிருந்தாலும் பிலாலைத் தந்திருப்பேன்” என்றான் உமைய்யா.
“நீதான் ஏமாறி விட்டாய் உமைய்யா. இதைவிட அதிகமான விலையை நீ கேட்டிருந்தாலும் கொடுப்பதற்கு நான் தயாராகவே இருந்தேன்” என்று பதில் அளித்தார் அபூபக்ரு.
அவை ஏட்டிக்குப் போட்டியான பதிலன்று. சத்தியமான வார்த்தைகள். எழுத்துக்கு எழுத்து சத்தியமான வார்த்தை. அந்த முன்னோடித் தோழர்களுக்கு சக முஸ்லிமின் உயிரும் மானமும் பாதுகாவலும் அத்துணை உயர்வு; அத்துணை முக்கியம். நாமெல்லாம் வெகு கவனமாகப் படிக்க வேண்டிய பாடம் இது.
விலை கொடுத்து வாங்கிய பிலாலைத் தம் அடிமையாக ஆக்கிக் கொள்ளவில்லை அபூபக்ரு ‘இனி நீர் சுதந்தரமானவர்’ என்று அக்கணமே விடுதலை அளித்துவிட்டார். ரலியல்லாஹு அன்ஹுமா. அடி, உதையிலிருந்து விடுதலை என்று வெறுமே சொல்லிவிட முடியாத மாபெரும் விடுதலை அது.
கை வீசவும் வலுவின்றி நைந்து போய் நடந்து செல்லும் அந்த முன்னாள் அடிமையின் கைகளில் தன் மரணம் காத்திருக்கிறது என்பதை அறியாமல் அவ்விருவரும் நடந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான் உமைய்யா.
oOo
பத்ரு போருக்கு முகாந்திரமாய் ஆர்ப்பாட்டமும் உற்சாகமுமாகக் குரைஷிகளின் படை மக்காவிலிருந்து மதீனாவை நோக்கிக் கிளம்பியது. ஊரே கிளம்பிச் செல்ல உமைய்யா மட்டும் அதில் கலந்துகொள்ளாமல் அமைதியாகத்தான் இருந்தான்.
வயது முதிர்ச்சி ஒரு காரணம். தவிர அவனுக்குக் கொழுத்த தடித்த சரீரம். உள்ளூரில் கஅபா அருகில் அமர்ந்துகொண்டு துஷ்டத்தனம் புரிவது எளிது. போரில் என்றால் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடவேண்டும், அதுவும் மதீனாவரை பயணமாம். இதெல்லாம் நம் உடம்புக்கு சரிப்படாது என்று தங்கிவிட்டான்.
முஸ்லிம்களைத் தீர்த்துக்கட்டி விடுவோம் என்று தீவிர நம்பிக்கையிலும் மமதையிலும் இருந்த குரைஷிகளுக்கு இது பொறுக்கவில்லை. ‘நல்லதொரு வாய்ப்பை நழுவ விடுகிறானே மடையன்’ என்று உக்பாவும் அபூஜஹ்லும் உமைய்யாவின் வீட்டிற்கு வந்தனர். உக்பாவின் கையில், நறுமணப் புகை போட உதவும் சாம்பிராணிச் சட்டி இருந்தது. அபூஜஹ்லிடம் பெண்களின் அழகு சாதனப் பொருட்கள்.
உமைய்யாவின் கைகளில் அந்தச் சட்டியைக் கொடுத்த உக்பா, “ஏ அபூஅலீ! இந்தா உனது அறையில் இதைக்கொண்டு தூபம் போட்டுக் கொள். பெண்களின் அறைக்கு அதுதான் அழகு,” என்றான்.
பெண்களின் அலங்காரப் பொருட்களை உமைய்யாவிடம் கொடுத்தான் அபூஜஹ்லு. “ஏ அபூஅலீ! இதைக்கொண்டு நன்றாக அலங்காரம் செய்து கொள்.”
ஒருவனை உசுப்பேற்ற இதைவிட வேறென்ன வேண்டும்? அவர்கள் இருவரையும் தன் கைகளில் அவர்கள் தந்தவற்றையும் மாறி மாறிப் பார்த்தான். வேகமாய்த் தூக்கி எறிந்துவிட்டு, “மக்காவிலேயே சிறந்த பலமான ஒட்டகத்தைக் கொண்டுவாருங்கள்” என்று எழுந்து நின்றான் உமைய்யா. என்ன செய்வது? இறைவன் நிர்ணயித்திருந்த அவனது விதி அவனுக்காக பத்ரில் காத்திருந்தது.
குரைஷிகள் பெரும்படையாக பத்ருக்கு வந்து சேர்ந்ததும் சொற்ப அளவிலான முஸ்லிம்களுடன் போர் மூண்டதும் அதை ஒட்டிய பல நிகழ்வுகளும் நாம் முந்தைய அத்தியாயங்களில் பார்த்ததுதான். எல்லாம் முடிந்து கணக்குப் பார்த்தால், குரைஷிகளின் பல முக்கியத் தலைகள் உருண்டிருந்தன. மற்றும் பலர் யுத்தக் கைதிகளாக முஸ்லிம்களிடம் சிக்கியிருந்தனர். அப்படியான சிறைக் கைதிகளுள் உமைய்யாவும் ஒருவன். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹுவிடம் அவருக்கு உரிய போர்வினைப் பங்காக அவன் சிக்கியிருந்தான். களத்திலிருந்து அவர் அவனை இழுத்துக் கொண்டு செல்வதை பார்த்துவிட்டார் பிலால்.
‘ஹா! அதோ கொடுங்கோலர்களின் தலைவன். அவன் மட்டும் உயிர் பிழைத்தால் அதைவிடப் பெரிய சோகம் எனக்கு இல்லை’ என்று தம் வாளை உயர்த்திக்கொண்டு கிடுகிடுவென்று ஓடினார் பிலால்.
அவர் விரைந்து வருவதைப் பார்த்துவிட்டு, ‘பிலாலே! இவன் என்னுடைய கைதி’ என்று கத்தினார் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப். போர்க்களத்தில் தமக்குக் கிடைத்த வசமான மீன், பெருந்தலை உமைய்யா. மீட்புத்தொகையாகப் பெரும் பணம் கிடைக்கும் என்பது நிச்சயம். எனும்போது, அவனை இழக்க அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் விரும்பவில்லை. ஓடி வந்த பிலால் உமைய்யாவை இழுக்கப் பார்க்க, அவர் தடுக்க… என்ன ஆனாலும் சரி, இன்று இவனை விட்டுவிடக் கூடாது என்று முடிவெடுத்தார் பிலால்.
“அன்ஸாரிகளே! இதோ கொடுங்கோலர்களின் தலைவன். இவன் பிழைத்தால் அதைவிடச் சோகம் எனக்கு வேறில்லை” என்று களத்தில் இருந்தவர்களை நோக்கிக் கத்தினார். முஸ்லிம்களின் கூட்டம் ஒன்று குருதி வடியும் வாள்களுடன் ஓடி வந்தது. உமைய்யாவையும் அவனுடன் சேர்ந்து சிக்கியிருந்த அவனுடைய மகனையும் ஈசலாய்ச் சூழ்ந்தனர். அதற்குமேல் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபால் அந்தக் கைதிகளுக்கு அபயம் அளிக்க முடியவில்லை. ரத்தம் தெறிக்க அவ்விருவரும் துண்டாடப்பட்டார்கள்.
வெட்டுண்டு சடலமாய்க் கிடந்தவனை பிலால் வெறிக்கப் பார்த்தார். மகிழ்ச்சிக் களிப்பில் அவரது கரிய உதடுகள் முழக்கமிட்டன.
“அஹதுன்! அஹதுன்!”
அன்றொரு காலத்தில் நசுக்கப்பட்டு முணுமுணுப்பாய் உதிர்ந்த வார்த்தைகள், இன்று கம்பீரமாய் தெறித்து வந்தன. பிணமாகக் கிடந்தான் உமைய்யா, பிலால் ரலியல்லாஹு அன்ஹுவின் காலடியில்.
தொடரும், இன்ஷா அல்லாஹ்…
oOo
– நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம்-ல் 21 டிசம்பர் 2017 அன்று வெளியான கட்டுரை
Image courtesy: islamichistory.org
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License