69. அபூமூஸா அல் அஷ்அரீ – 1 (أبو موسى الأشعري)
ஹுனைன் போரில் முஸ்லிம்கள் வெற்றியடைந்ததும் எதிரிகள் சிதறி ஓடினார்கள். ஒரு கூட்டம் தாயிஃப் நகருக்கு ஓடியது. மற்றவர்கள் நக்லாஹ்வுக்கும் அவ்தாஸ் பகுதிக்குமாகப் பிரிந்தனர். அவர்களை அப்படியே விட்டுவிட்டால் சரிவராது என்பதை உணர்ந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அபூஆமீர் ரலியல்லாஹு அன்ஹுவின் தலைமையில் ஒரு படையை ‘அவ்தாஸ்’ பள்ளத்தாக்கிற்கு அனுப்பி வைத்தார்கள்.
படை சென்றது. சண்டை நிகழ்ந்தது. எதிரிகள் அணியில் துரைத் இப்னு ஸிம்மா என்ற கவிஞன் ஒருவன் இருந்தான். அவனுக்கும் அபூஆமிருக்கும் இடையில் கடும் சண்டை. இறுதியில் அபூஆமிர் துரைதைக் கொன்றார். ஆனால் போரின்போது ஜுஷம் குலத்தைச் சேர்ந்த ஒருவன் எய்த அம்பு அபூஆமிரின் முழங்காலில் செருகி நின்றது.
முஸ்லிம்களின் படையில் அப்துல்லாஹ் இப்னு ஃகைஸ் என்பவரும் சென்றிருந்தார். அவர் அதைக் கவனித்துவிட்டு உடனே அபூஆமிரிடம் ஓடிச் சென்று, “’என் தந்தையின் சகோதரரே! உங்கள் மீது அம்பெய்தவன் யார்?” என்றார்.
“அதோ!” என்று அவனை அடையாளம் காட்டினார் அபூஆமிர். உடனே அவனை நோக்கி விரைந்தார் அப்துல்லாஹ் இப்னு ஃகைஸ். அவரைப் பார்த்ததுமே அவருக்கு முதுகைக் காட்டியபடி ஓட ஆரம்பித்தான் எதிரி. அவரும் விடவில்லை. பின்தொடர்ந்து ஓடினார். சண்டைக்கு வந்தால் பந்தயத்தில் ஓடுவதைப் போல் ஓடும் அவனைப் பின்தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த அப்துல்லாஹ், “உனக்கு வெட்கமில்லையா? நீ நிற்க மாட்டாயா?” என்று கத்தினார். அது அவனது மூளையின் ரோஷ இரசாயனத்தைத் தாக்க, உடனே நின்றான். அடுத்துத் துவங்கியது இருவருக்குமான சண்டை. வாள் ஒலி, தீப்பொறி என்று பரபரத்து, அவனைக் கொன்றார் அப்துல்லாஹ் இப்னு ஃகைஸ்.
பழி தீர்த்த திருப்தியில் அபூஆமிரிடம் சென்று, “உங்களைக் கொல்ல முயன்ற ஆளை அல்லாஹ் கொன்றுவிட்டான்” என்றார். கொன்றவர் தாமே என்றாலும் ‘நான்’ என்பது அவர்களுக்குத் தன்னடக்கமற்ற சொல். தவிர எல்லாம் அவன் செயல் என்பது அவர்களது உள்ளத்தில் எஃகாய்ப் பரவியிருந்த உறுதி.
“என்னுடைய முழங்காலில் பாய்திருக்கும் இந்த அம்பைப் பிடுங்கியெடு” என்றார் அபூஆமிர். சட்டென்று அதைப் பிடுங்கினார் அப்துல்லாஹ். குபுகுபுவென்று குருதி கொட்டியது.
“என் சகோதரரின் மகனே! நபியவர்களிடம் என்னுடைய சலாமைப் பகர்ந்து, எனக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்கும்படி கோரு” என்றார் அபூ ஆமிர். அப்துல்லாஹ் இப்னு ஃகைஸைப் படை அணிக்குத் தம்முடைய பிரதிநிதியாக நியமித்துவிட்டு, சிறிது நேரத்தில் அபூஆமீர் ரலியல்லாஹு அன்ஹு உயிர் துறந்தார்.
சென்ற காரியத்தை வெற்றியுடன் முடித்துவிட்டுப் படை ஊர் திரும்பியது. நபியவர்களைச் சந்தித்தார் அப்துல்லாஹ் இப்னு ஃகைஸ். அப்போது நபியவர்கள் பேரீச்சம் நாரினால் வேயப்பட்ட கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார்கள். அதன் மீது விரிப்பு ஒன்றும் இருந்தது. ஆனாலும் கட்டிலின் கயிறு நபியவர்களின் முதுகிலும் இரண்டு விலாப்புறங்களிலும் அடையாளம் பதித்திருந்தது. மாநபியின் அந்த எளிமையைக் கவனித்தபடி, நடந்ததையெல்லாம் அவர்களிடம் விவரித்தார் அப்துல்லாஹ். இறுதியாக, அபூஆமிர் தமக்காகப் பாவமன்னிப்புக் கேட்கும்படி வேண்டியிருக்கிறார் என்பதையும் தெரிவித்தார்.
தண்ணீர் கொண்டு வரச்சொன்னார்கள் நபியவர்கள். உளூச் செய்துவிட்டு, தம் இரு கரங்களையும் உயர்த்தி, “இறைவா! அபூஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பு அருள்வாயாக! மறுமை நாளில் உன் படைப்பினமான மனிதர்களில் பலரையும் விட அந்தஸ்தில் உயர்ந்தவராக அவரை ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
உடனே, “நபியவர்களே! எனக்காகவும் பாவமன்னிப்புக் கோருங்கள்” என்றார் அப்துல்லாஹ்.
“இறைவா! அப்துல்லாஹ் இப்னு ஃகைஸின் பாவத்தை மன்னித்து, மறுமை நாளில் கண்ணியம் நிறைந்த இருப்பிடத்திற்கு அவரை அனுப்புவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
ஏக இறைவன் அல்லாஹ்வின் தூதர்; அவர்கள் கையை உயர்த்திப் பிரார்த்திக்கும் பாக்கியம் கிடைத்தபின் வேறேன்ன வேண்டும்? மகிழ்ந்து நின்றார் அப்துல்லாஹ் இப்னு ஃகைஸ். வரலாற்றில் அவருக்கு அமைந்துபோன பெயர் அபூமூஸா அல்-அஷ்அரீ. ரலியல்லாஹு அன்ஹு!
oOo
மக்காவில் நபியொருவர் தோன்றியிருக்கிறார்; ஏக இறைவனை வழிபடச் சொல்கிறார்; ஆக உயர்ந்த ஒழுக்கப் பண்புகளை போதிக்கிறார் என்று தெரியவந்த உடனேயே மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு யமனிலிருந்து மக்காவுக்குக் கிளம்பிவிட்டார் அபூமூஸா அல்-அஷ்அரீ. வந்தவர் நபியவர்களைச் சந்தித்து, ‘இதென்ன ஏகத்துவம்?’ என்று கேட்டு, விளக்கம் அறிய அறிய, அவருக்கு உண்மை புரிந்து போனது. ‘ஏற்றுக் கொள்கிறேன்’ என்று இஸ்லாத்தினுள் நுழைந்துவிட்டார். சில காலம் மக்காவில் தங்கி நபியவர்களிடம் கற்பதும் உய்வதும் என்றானது அவரது பொழுது. அதற்குப் பிறகு யமன் நாட்டுக்குத் திரும்பியவர் அங்குத் தம் சொந்த பந்தங்களுக்கு ஏகத்துவத்தைப் பரப்புவது என்றாகிப் போனார். சில குறிப்புகள் அவர் அபிஸீனியாவுக்குப் புலம்பெயர்ந்து, அங்கிருந்து யமனுக்குச் சென்றுவிட்டதாகக் குறிப்பிடுகின்றன. அவ்வளவுதான். அவரது ஆரம்பகால வரலாறு சிறு முன்னுரையைப் போல் அத்துடன் முடிந்துவிடுகிறது. அதன்பின் மதீனாவில் நிகழ்ந்த ஃகைபர் யுத்தத்திலிருந்துதான் அவரது நெடிய வரலாறு விரிகிறது.
அபூமூஸா தோற்றத்தில் உயரம் குறைவானவராக, ஒல்லியானவராக இருந்திருக்கிறார். ஆனால் அவரது ஆளுமை பிரமிப்பு. பார்ப்போம்.
ஹிஜ்ரீ ஏழாம் ஆண்டு. முஸ்லிம்களை மதீனாவிற்கு அனுப்பி வைக்கும்படி மன்னன் நஜ்ஜாஷிக்குக் கடிதம் எழுதி, தம் தோழர் அம்ரிப்னு உமையா அல்ளம்ரீ (ரலி) மூலம் கொடுத்தனுப்பினார்கள் நபியவர்கள். அதற்குச் சில காலம் முன் நபியவர்கள் மதீனா புலம்பெயர்ந்த செய்தி அறிந்து அவர்களைச் சந்திக்க அபூமூஸா அல்-அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹு ஒரு குழுவோடு யமனிலிருந்து மதீனா கிளம்பியிருந்தார். ஐம்பது பேருக்கும்மேல் இருந்த அக்குழுவில் அபூமூஸாவின் சகோதரர்களான அபூருஹ்மும் அபூஆமிரும் இணைந்திருந்தனர்.
அவர்கள் பயணம் செய்த படகு அபிஸீனியாவில் கரை ஒதுங்க, அவர்கள் அங்கு இறங்கிக்கொள்ள நேர்ந்தது. அங்கு ஜஅஃபரையும் இதர முஸ்லிம்களையும் இவர்கள் சந்திக்க, ‘நபியவர்கள் நாங்கள் இங்குத் தங்கும்படி கட்டளையிட்டுள்ளார்கள். நீங்களும் எங்களுடன் தங்கிக் கொள்ளுங்களேன்’ என்று சொல்லி அவர்களையும் உடன் வைத்துக்கொண்டார் ஜஅஃபர் ரலியல்லாஹு அன்ஹு. இப்பொழுது அத்தனைபேரும் பயணம் புரிய இரண்டு படகுகளைத் தயார் செய்து அளித்தார் நஜ்ஜாஷி. ஜஅஃபர் தலைமையில் அந்த முஸ்லிம்கள் அனைவரும் மதீனா வந்தடைந்தனர். அச்சமயம் ஃகைபர் கைப்பற்றப்பட்டிருந்தது.
அதற்கு முந்தைய நாள் தம் தோழர்களிடம் நபியவர்கள், “‘சில மக்கள் நாளை உங்களிடம் வருவார்கள். அவர்களது மனம் உங்களுடையதைவிட இஸ்லாத்தின்மீது பற்றுக் கொண்டது” என்று அறிவிக்க, மறுநாள் வந்தடைந்த குழுவில் இருந்த யமன் நாட்டின் அஷ்-அரீக்கள் அவர்கள் என்று தெரிவித்துள்ளார் அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு.
அவர்களைக் கண்டதும் மகிழ்வுடன் வரவேற்ற அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “உங்களது புலம்பெயரல் இரண்டு. அபீஸீனியாவிற்குச் சென்றது ஒன்று; இங்கு என்னிடம் வந்தது மற்றொன்று” என்று அறிவிக்க, அக்குழுவினர் அனைவருக்கும் இரண்டு ஹிஜ்ரத்தின் நன்மை கிடைத்த பேருவகை சூழ்ந்தது. அவர்கள் நபியவர்களிடம் தங்களது கைகளைக் குலுக்கித் தங்களது அன்பைப் பரிமாற, அவர்கள்தாம் முதன்முதலாகக் கைகுலுக்கும் வழக்கத்தைத் துவக்கியவர்கள் என்றும் கூறியுள்ளார் அனஸ் இப்னு மாலிக்.
அதன்பின் நபியவர்களின் மிக முக்கியத் தோழர்களுள் ஒருவராக மாறிப்போனார் அபூமூஸா. அத்தோழமை அவரது ஞானத்தை மெல்ல மெல்ல விரிவாக்கியதால் சிறந்த அறிஞராகவும் ஆகிப்போனார். நபியவர்களுக்கு அல் அஷ்அரீ மக்களின்மீது பெருமதிப்பும் அன்பும் இருந்திருக்கிறது. காரணம் குர்ஆனின் 5ஆவது அத்தியாயத்தில் பதிவாகியுள்ள 54ஆம் வசனம், “அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்;” அருளப்பட்டபோது, “ஓ அபூமூஸா, அவர்கள் உம்முடைய மக்கள்” என்று அவரைச் சுட்டிக்காட்டினார்கள்.
அவர்களை ‘அஷ்அரீக்கள்’ (இலட்சியவாதிகள்) என்று அழைத்தார்கள் நபியவர்கள். சில வேளைகளில் யமனீக்கள் அனைவரையுமே அஷ்அரீக்கள் என்று அழைத்தார்கள். மென்மையான இளகிய மனம் கொண்டவர்களான அக்குழுவினர்மீது நபியவர்களுக்குப் பெரும் நன்மதிப்பு இருந்தது. பெருமையுடன் அவர்களைப் புகழ்வதும் உண்டு. “அஷ்அரீக்கள் பயணத்தில் செல்லும்போதோ, தங்களிடம் குறைவான உணவு இருக்கும்போதோ, தங்களிடம் உள்ள உணவை ஒரு துணியில் ஒன்றாகப் போட்டு அதைச் சமமாகப் பிரித்துத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள். ஆகவே அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள். நான் அவர்களைச் சார்ந்தவன்” என்று தெரிவித்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
அபூமூஸா இயல்பாகவே அமைதியான மனநிலையைக் கொண்டவர். ஆயினும் போர் என்று களம் இறங்கிவிட்டால் துணிச்சலும் வீரமும்தான் அவரது அடையாளம். அசாத்திய திறமையும் வலிமையும் அவருக்கு அமைந்திருந்தன. “அபூமூஸா குதிரை வீரர்களுள் திறமையானவர்” என்று நபியவர்களின் புகழாரம் அவருக்கு வாய்த்திருந்தது.
இறைவனின் நேசத்திற்குரிய அந்த மக்களின் அபூமூஸாவுக்கு அடுத்து அமைந்த பெருமை அவரது இனிய குரல்வளம். அது அவருக்கு எப்படிப் பயன்பட்டது?
ஓர் இரவு. நபியவர்கள் மஸ்ஜிதின் வாயிலில் நின்றிருந்தார்கள்; உள்ளே ஒருவர் தொழுது கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த புரைதா ரலியல்லாஹு அன்ஹுவிடம், “ஓ புரைதா, இவர் வெளிப்பகட்டுக்காக இதைச் செய்கிறார் என நினைக்கிறீரா?” என்று கேட்டார்கள்.
“அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே சிறப்பாக அறிந்தவர்கள்” என்றார் புரைதா.
“இது வெளிப்பகட்டன்று. இவர் அர்ப்பணிப்புள்ள நம்பிக்கையாளர். தாவூத் நபியவர்களுக்கு அளிக்கப்பட்டதைப் போன்ற அழகிய குரல்வளம் இவருக்கும் அருளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்கள். அத்தகு இனிய குரலில் குர்ஆன் ஓதித் தொழுது கொண்டிருந்தார் அவர். நபியவர்களின் மெய்ச்சான்றுப் பெற்றவரைப் பார்க்க யாருக்குத்தான் ஆவல் மிகாது? உடனே உள்ளே சென்று அவர் யாரென்று பார்த்தார் புரைதா. அவர் அபூமூஸா அல்-அஷ்அரீ. அவரிடமே அந்த நற்செய்தியைத் தெரிவித்தும்விட்டார் புரைதா.
|
பிற்காலத்தில் அவர் குர்ஆன் ஓதும்போது மக்கள் அவரைச் சூழ்ந்து அமர்ந்து கேட்டு மகிழ்வதும், “ஓதுங்கள் கேட்போம்” என்று கலீஃபா உமர் அவரைச் ஓதச் சொல்லிக் கேட்பதும் வழக்கமாக இருந்திருக்கிறது.
ஆனால் அவரது வாழ்க்கை வெறும் கல்வியாளராக நின்று விடவில்லை. வீரமும் சமஅளவில் கலந்திருந்தது. நபியவர்கள் நிகழ்த்திய போரிலும் சரி, பிற்காலத்தில் கலீஃபாக்களின் ஆட்சியில் நிகழ்ந்த போரிலும் சரி, அவர் முக்கிய வீரர்; பல சந்தர்ப்பங்களில் தளபதி. ஹிஜ்ரீ ஏழாம் ஆண்டு நபியவர்கள் தலைமையில் ஒரு படையெடுப்பு நிகழ்ந்தது. அப்பாத் பின் பிஷ்ரு ரலியல்லாஹு அன்ஹுவின் வரலாற்றில் அதை நாம் கடந்து வந்திருக்கிறோம்.
மதீனாவிலிருந்து நஜ்து வெகுதொலைவிலிருந்த பகுதி. கடினமான நிலப்பரப்பை நடந்தே கடக்க வேண்டிய நிலை முஸ்லிம்களுக்கு. உளத் திடத்தை, ஈமானை நன்கு சோதிக்கும் படையெடுப்பு அது. முஸ்லிம் வீரர்களுக்குச் சரியான காலணிகளும் இல்லை, அனைவருக்கும் போதிய வாகன வசதியும் இல்லை. ஆறு பேருக்கு ஓர் ஓட்டகம் என்ற நிலை. முறைவைத்துதான் தோழர்கள் சவாரி செய்தார்கள். நடந்து நடந்து பாதங்கள் தேய்ந்து, அபூ மூஸாவின், கால் நகங்களே விழுந்து விட்டன. அனைவருக்கும் கடுமையான வலி, காயம். அதற்கெல்லாம் அசரவில்லை அவர்கள். கிழிந்த துணிகளைக் கால்களில் கட்டிக் கொண்டார்கள். தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்கள். அதனால் ‘தாத்துர் ரிகாஉ – ஒட்டுத் துணிப்போர்’ என்று இந்தப் படையெடுப்பிற்கு வரலாற்றில் பெயரே ஏற்பட்டு விட்டது.
அதன்பின் மக்கா படையெடுப்பு, ஹுனைன் போர் என்று தொடர்ந்து அதில் ஒரு முக்கிய நிகழ்வுதான் அபூஆமிரைக் கொன்றவனை அபூமூஸா பழி தீர்த்ததும் பின்னர் நபியவர்கள் அவருக்காக இறைஞ்சியதும்.
முஆத் பின் ஜபல் ரலியல்லாஹு அன்ஹுவை நபியவர்கள் யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தார்கள் என்று பார்த்தோமில்லையா? அப்பொழுது அவருடன் அபூமூஸாவையும் அனுப்பினார்கள். ஸுபைத், அத்னு (ஏடன்) பகுதிகளுக்குப் பொறுப்பு அபூமூஸா அல்-அஷ்அரீ. அப்பொழுது நபியவர்கள் அவர்களிடம், “மக்களிடம் கடுமையின்றி, எளிதாக நடந்துகொள்ளுங்கள். நற்செய்தி அளியுங்கள். மக்களை விரட்டிவிடாதீர்கள்” என்று அறிவுறுத்தினார்கள்.
அதையடுத்து அபூமூஸா நபியவர்களிடம் கேட்டார். “எங்களது ஊரில் தேனினால் செய்யப்பட்ட அத்-தபஃக் என்ற பானம் உள்ளது. பார்லியினால் செய்யப்பட்ட அல்-மிஸ்ர் என்ற மற்றொரு பானம் உள்ளது.” எதை அருந்துவது, விடுவது என்று அவருக்குச் சந்தேகம் இருந்திருக்க வேண்டும்.
“போதையளிக்கும் பானம் எதுவொன்றும் ஹராம்” என்று நபியவர்கள் சுருக்கமாகப் பதில் அளித்துவிட்டார்கள். அவர்களது பயணம் துவங்கியது.
முஆத் அபூமூஸாவிடம் கேட்டார், “தாங்கள் எப்படி குர்ஆன் ஓதுவீர்கள்?”
“தொழுகையில் ஓதுவேன். பயணத்தில் இருக்கும்போது, நின்ற நிலையில், அமர்ந்திருக்கும் நிலையில் சிறிது சிறிதாக ஓதுவேன்.”
முஆத், “நான் உறங்குவேன். பிறகு எழுந்து தொழுவேன். என்னுடைய இரவுத் தொழுகைக்கு வெகுமதி தேடுவதுபோல நான் உறங்கும்போதுகூட அல்லாஹ்விடம் அதற்கான வெகுமதி தேடுவேன்” என்றார்.
பகலும் இரவும் குர்ஆனும் தொழுகையுமாக வாழ்ந்தவர்களுக்குப் பயணத்தின்போது பேசி அளவளாவுவதும் அதுவாகவே இருந்திருக்கிறது. நமக்கோ உபரிப் பொழுதுகள்கூட அர்த்தமற்ற செயல்களாலும் பேச்சுக்களாலும்தாம் ஆக்கிரமிக்கப்படுகின்றன.
oOo
இஸ்லாத்தை ஏற்றது முதல் அவரது வாழ்க்கை போரிலும் இஸ்லாமியப் பிரச்சாரத்திலும் மக்களுக்கு குர்ஆன் போதிப்பதிலும் நிர்வாகத்திலும் நீதி செலுத்துவதிலும் என்று மக்கள் சேவை, இறைவன் சேவை என்றே கழிந்திருக்கிறது. இத்தகைய வெகு முக்கியப் பணிகளுக்கு இறையச்சமும் ஆழ்ந்த ஞானமும் திறமையும் மதி நுட்பமும் ஏராளம் தேவை. அவை அத்தனையும் அபூமூஸாவிடம் நிறைவாக அமைந்திருந்தன. பார்ப்போம்.
உமர் இப்னுல் கத்தாப், அபூமூஸா அல்-அஷ்அரீ – ரலியல்லாஹு அன்ஹுமா – இருவருக்கும் இடையே இயற்கையான ஒரு நெருக்கம் ஏற்பட்டுப்போயிருந்தது. அது ஆழ்ந்த அன்பும் மரியாதையுமாக மாறியதால், உமரின் கிலாஃபத்தின் முக்கியத் தூண்களுள் ஒருவர் அபூமூஸா.
ஒருமுறை மாலைத் தொழுகைக்குப் பின் உமர் இப்னுல் கத்தாபைச் சந்திக்க வந்திருந்தார் அபூமூஸா.
“என்ன விஷயமாக வந்தீர்?” என்றார் உமர்.
“உம்மிடம் உரையாட வந்தேன்”
“இந்த நேரத்திலா?”
“ஆம். அறிவுத்தேடல் சார்ந்த விஷயம்”
உமர் அமர்ந்தார். இருவரும் பேச ஆரம்பித்து வெகு நேரம் ஓடிவிட்டது. தொழுகை நேரம் நெருங்கியதை உணர்ந்த அபூமூஸா, “ஓ அமீருல் மூஃமினீன். தொழுகை” என்று நினைவூட்ட, “நாம் தொழுகையின் நிலையில்தாம் இருக்கிறோம்” என்றார் உமர்.
அபூமூஸாவின் மீது உமருக்கு ஏற்பட்ட வாஞ்சையில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஏனெனில், ஞானம், இறை வழிபாடு, இறை பக்தி, தன்னடக்கம், மேன்மை, உலக ஆதாயங்களில் பற்றற்ற தன்மை, இஸ்லாத்தைக் கடைபிடிப்பதில் கடும் உறுதி, வீரம் போன்றவற்றிற்கு உதாரண நாயகராக அபூமூஸா அறியப்பட்டதும் அத்தகு குணாதிசயங்களுக்குப் புகழ்பெற்ற கலீஃபா உமர் என்ன செய்வார்? அவரைத் தமது நம்பிக்கைக்கு உரிய ஆளுநராக ஆக்கிக்கொண்டார்.
கலீஃபா அளித்த நியமனக் கடிதத்தையும் மூட்டை முடிச்சுகளையும் சுமந்துகொண்டு பஸ்ரா நகரின் ஆளுநராக வந்து சேர்ந்தார் அபூமூஸா அல்-அஷ்அரீ. வந்தவர் அந் நகர மக்களை அழைத்து வைத்து முன் அறிமுகமாக ஒரு குட்டிப் பிரசங்கம் புரிந்தார். “அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதரின் வழிமுறையையும் உங்களுக்குக் கற்றுத்தர, அமீருல் மூஃமினீன் உமர் என்னைத் தங்களிடம் அனுப்பி வைத்துள்ளார்” என்று கூறிவிட்டு அடுத்ததாக ஒன்றைச் சொன்னார்.
“நான் உங்களது தெருக்களைக் கூட்டித் துப்புரவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.”
அதைக் கேட்டு மக்களுக்குப் பேரதிர்ச்சி. ஆட்சியாளரின் பொறுப்புகளுள் ஒன்று மக்களுக்கு மார்க்கத்தைப் போதிப்பது என்பது புரிகிறது. ஆனால் தெருக்களையும் துப்புரவு செய்வதா? புதிதாக உள்ளதே என்று அவர்களுக்கு ஆச்சரியம். உமரும் அப்படித்தான். அவருடைய ஆளுநர்களும் அப்படித்தான். நாட்டைத் தூய்மைப் படுத்துவோம் என்று போலி வாதம்பேசி துடைப்பத்தையும் விளக்குமாற்றையும் பிடித்துக்கொண்டு விளம்பரங்களுக்குப் படம் காட்டுவது போலன்றி, அவர்களது பணி மெய்ப்பணி.
பஸ்ரா நகரில் அபூமூஸா புரிந்த நிர்வாகம் மிகவும் பிரமாதமானது. அதில் முக்கியமானது இஸ்லாமியக் கல்விச்சாலைகள். அவற்றைப் பஸ்ரா நகரில் தோற்றுவித்தவர்களுள் அபூமூஸா மிக மிக முக்கியமானவர். ஆளுநரின் பொறுப்புகளுள் கல்விப் பணியும் அடங்கியிருந்தது. அந்நகரில் இருந்த ஒரு பள்ளிவாசலை தம்முடைய கல்விச் சேவைக்கான நிலையமாக ஆக்கியவர் தம்முடைய நேரத்தில் பெரும்பாலான பகுதியை அதன் பணிக்காக ஒதுக்கினார். வாய்க்கும் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் அவர் தவறவிடுவதே இல்லை; மக்களுக்குக் கற்பிப்பது, அவர்களின் அறிவை விருத்தி செய்வது என்று அயராத பணி.
அக்காலத்தில் தொழுகையை முன்நின்று நடத்தும் கடமை ஆட்சியாளரைச் சார்ந்தது. சொற்ப சம்பளத்திற்கு ஊழியரைப்போல் இமாமைத் தேர்ந்தெடுக்கும் அவலம் உருவாகாத காலம் அது. அபூமூஸா மக்களுக்கு இமாமாக நின்று தொழுவிப்பார். அதிகாலை ஃபஜ்ருத் தொழுகை முடிந்ததும் மக்களை நோக்கித் திரும்பி அமர்ந்து, அவர்களுக்கு குர்ஆன் கற்றுத் தருவதும் அவர்கள் குர்ஆன் ஓதுவதைக் கேட்டுச் சரிசெய்வதும் அவரது வழக்கம்.
அவரது உரைகளில் மக்களுக்குப் பாடம் சொல்வதும் கற்பதற்கு அவர்களை ஆர்வமூட்டுவதும் தவறாமல் அடங்கியிருக்கும். ஓர் உரையில், “யாருக்கெல்லாம் அல்லாஹ் ஞானத்தை அருளியிருக்கிறானோ அவர் அதைப் பாடம் எடுக்கட்டும். ஆனால் தமக்கு அறிவு இல்லாத விஷயம் குறித்து அவர் பேசக்கூடாது. இல்லையெனில் மிகைப்படுத்தி இட்டுக்கட்டும்படி ஆகி அது அவரை இஸ்லாத்திலிருந்து வெளியேறியவராய் ஆக்கிவிடக்கூடும்” என்று அறிவுரை கூறினார். எந்த விஷயத்தை எடுத்தாலும் முந்திக் கொண்டு கருத்து சொல்லும் நமக்கு இது எவ்வளவு முக்கிய அறிவுரை!
அவர் மிகச் சிறப்பான காரீ – குர்ஆன் ஓதுவார் – என்று பார்த்தோமில்லையா? தாம் வாழ்ந்த ஊர்களில் எல்லாம் மக்களுக்கு குர்ஆன் பயிற்றுவிப்பது அவரது பாடத்திட்டத்தில் முதன்மையான அம்சம். பள்ளிவாசலில் மக்களைச் சிறு குழுக்களாகப் பிரித்து அமரவைத்து, ஒவ்வொரு குழுவாகச் சென்று அவர்களை குர்ஆன் ஓதச்சொல்லிக் கேட்பது, திருத்துவது, பயிற்றுவிப்பது என்று திட்ட ஒழுங்குடன் பாடம் நடைபெற்று வந்தது.
தனிப்பட்ட வகையிலும் அவரது ஈடுபாடு முழுவதும் குர்ஆனில்தான். பயணம் புரிந்தாலும் சரி, ஊரில் இருந்தாலும் சரி, அவரது பெரும்பாலான நேரம் குர்ஆனுடன்தான் கழியும். ஒருமுறை அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹுவை மதீனாவிலுள்ள கலீஃபா உமரிடம் அனுப்பி வைத்தார் அபூமூஸா.
“நீ கிளம்பும்போது அபூமூஸா எப்படி இருந்தார்?“ என்று விசாரித்தார் உமர்.
“அவர் மக்களுக்கு குர்ஆன் கற்பித்துக்கொண்டிருக்கும் நிலையில் அவரிடமிருந்து கிளம்பினேன்” என்றார் அனஸ்.
“அவர் மதிநுட்பமுள்ளவர்; புத்தி சாதுரியமுள்ளவர். நான் இதைச் சொன்னேன் என்று அவரிடம் சொல்ல வேண்டாம்” என்றார் உமர்.
அபூமூஸாவின் கல்விப் பணி பலன் அளிக்க ஆரம்பித்தது. குர்ஆனை மனனம் செய்தவர்கள், அறிஞர்கள் போன்றவர்கள் அவரைச் சூழ்ந்திருக்க ஆரம்பித்தார்கள். அப்போது பஸ்ராவில் மட்டும் குர்ஆனை மனனம் செய்தவர்கள் முந்நூறுக்கும்மேல் என்கிறது குறிப்பு. குர்ஆன் மனனம் செய்துள்ளவர்களின் பட்டியலை அனுப்புங்கள். அவர்களைக் கவுரவித்து, உதவிச் சம்பளத்தை அதிகப்படுத்த விரும்புகிறேன் என்று கலீஃபா உமர் கேட்டபோது, ‘அவர்கள் முந்நூறுக்கும்மேல்’ என்று பதில் எழுதி அனுப்பினார் அபூமூஸா.
குர்ஆன் கற்பித்துத் தருவதுடன் தமது கல்விப் பணியை அவர் சுருக்கிக் கொள்ளவில்லை. நபியவர்களின் ஹதீஸ்களை எடுத்துரைப்பதும் அவற்றைக் கற்றுத் தருவதும் அவரது கல்வித் திட்டத்தில் அடுத்த முக்கிய அம்சம். குறிப்பிட்ட அளவிலான தோழர்கள், அவர்களுக்கு அடுத்தத் தலைமுறையினரான தாபியீன்கள் அபூமூஸாவின் வாயிலாக ஹதீஸ்களைக் கற்று அறிவித்துள்ளனர். நபியவர்களின் வழிமுறை ஒவ்வொன்றும் அவருக்கு முக்கியம்; வெகு நெருக்கம். இறுக்கிப் பற்றிக்கொள்வது மட்டுமே அவரது குறிக்கோள்.
பஸ்ராவில் அபூமூஸாவுக்கு நெருக்கமானவர்களுள் ஒருவர் அனஸ் இப்னு மாலிக். அபூமூஸாவுடன் பயணித்த குழுவொன்றில் அனஸும் இருந்தார். பயணத்தின்போது பலதரப்பட்ட விஷயங்களையும் பேசிக்கொள்வது சகஜம்தானே; குழுவினர் உரையாடிக்கொண்டிருந்தனர். அவர்களது பேச்சு உலக வாழ்க்கை தொடர்புடையதாகவே இருந்தது. அதில் கலந்துகொள்ளாமல் அமைதியாக இருந்தாலும் சற்று நேரத்திற்குப்பின் அபூமூஸாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
அனஸிடம் “இவர்கள் அதிகம் பேசுகிறார்கள். வா! நாம் ஒதுங்கி சற்று நமது இறைவனை நினைவு கூர்வோம்” என்றார்.
குழுவிலிருந்து இருவரும் தனியாகப் பிரிந்து வந்து அமர்ந்து கொண்டார்கள். சற்று நேரம் கழிந்தது. “மறுமையைத் தேடுவதில் இம்மக்களை அலட்சியமாக இருக்க வைத்தது எது?” என்று கேட்டார் அபூமூஸா.
அதற்கு அனஸ், “உலக இச்சை, சைத்தான், ஆசா பாசம்” என்றார்..
“இல்லை. உலகம் அண்மையில் இருக்கிறது. அதை அவர்களால் பார்க்க முடிகிறது; உணர முடிகிறது. மறுமை அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது. அல்லாஹ்வின்மீது ஆணையாக!. அவர்கள் மட்டும் மறுமையைத் தம் கண்களால் கண்டுவிட்டால், அதைப் புறந்தள்ளியோ, பராமுகமாகவோ இருக்கவே போவதில்லை.”
சதாசர்வ காலமும் மறுமை மட்டுமே அந்தத் தோழர்களது அகக் கண்களில் காட்சியாகத் தேங்கிப் போயிருந்திருக்கிறது.
தொடரும், இன்ஷா அல்லாஹ்…
oOo
– நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம்-ல் 25 ஜூன் 2017 அன்று வெளியான கட்டுரை
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License