ஷவ்வால் மாத 1–ஆவது குத்பா

اَلْحَمْدُ لله الَّذِي هَدٰيَنا السَّبِيْلَ الرَّشَادَ وَجَعَلَ لَنَا الدِّيْنَ الْاِسْلَامَ خَيْرَالْاَدْيَانِ فَمَنْ قَامَ وَجْهَهُ لِلدِّيْنِ حَنِيْفًا فَقَدْ فَازَ فَوْزًا عَظِيْمًا وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِهِ وَ صَحْبِهِ اَجْمَعِيْنَ اَمَّا بَعْدُ

அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்பதை  எனக்கும் சொல்லிக் கொள்ளுகிறேன்.

நம்மெல்லோரையும் நல்லடியார்களாகச் சிருஷ்டித்து இயற்கை மதமாகிய இஸ்லாத்தையும் நமக்குச் சன்மார்க்க மாயளித்து, ஈமானையும் மனப்பூஷணமாய் அருளிய அல்லாஹுத் தஆலாவை நாமெல்லோரும் நன்கு புகழ்ந்தொழுகுவோமாக. அவனுடைய திருத்தூதரான நம் ஞான குருவாம் நபிகள் நாயகரையும் (ஸல்) போற்றி ஆசிர்வதிப்போமாக. அதன் பின்பு முஸ்லிம் சகோதரர்காள்! அறிந்து கொள்வீர்களாக.

நாமெல்லோரும் ஏகநாயகனாகிய ஒரே ஆண்டவன்மீது பரிபூரண ஈமான்கொண்டு பக்தி பூண்டு, அவனையே சதா தியானித்துத் தொழுது வணங்குதல் வேண்டும். அவன்மீதே திடமான உறுதி வைத்து, அவனையே அனுதினமும் நம் வாழ்வுக்காதாரமாய் நம்பியிருத்தல் வேண்டும். ஆண்டவனை நம்பியவர்களெல்லாரும் அவனால் எப்பொழுதும் ஆதரிக்கப்படுவார்கள். “எவரேனும் அல்லாஹ்வின் மீது (தவக்கல்) நம்பிக்கை வைப்பாரானால், அந்த ஆண்டவனே அவர்களுக்குப் போதுமானவன்,” என்று குர்ஆன் ஷரீப் கூறுகின்றது. சுகத்தோடு வாழுங் காலங்களிலும் துன்பமுற்று வருந்தும் வேளைகளிலும் இறைவன்மீது உறுதி வைத்த நம்பிக்கையைச் சற்றுமே தளரவிடக் கூடாது. என்னெனின், ஆண்டவனே நம்மைச் சிருஷ்டித்தான்; அவனே நம்மை அன்பாய்ப் போஷிக்கின்றான்; அவனே சகல நல்வாழ்வையும் அளித்தருள்கிறான்; அவனே நம்மை இடையிடையே சற்றுச் சோதிக்கிறான். நமக்கேதேனும் துன்பமோ பிணியோ வறுமையோ வருமாயின், அதுவும் அல்லாஹ்வின் மூலத்திருந்தே நிகழ்கின்றது. இஃது, ஆண்டவன்  நம்பால் பக்ஷபாதமாய் நடக்கின்றான் என்பதனாலன்று.

நமக்கு வந்தணுகும் எல்லாத் தீங்குகளும் நாம் அவற்றில் பட்டுத்தேறிப் பரிபக்குவமும் மனச்சாந்தியும் அடைய வேண்டுமென்ற தெய்வ நியதியைக் கொண்டனவேயாகும். துன்பங்கள் வருங்கால், தெய்வத்தைத் தூஷிப்பது சபல சித்தர்களின் துர்க்குணமாகும். எனவே, ஆண்டவன் மீதே பரிபூரண நம்பிக்கை வைத்து, அவனிடமே – வேறெந்த அவ்லியாவி னிடத்திலுமன்று – நம்முடைய எல்லாக் குறைகளையும் முறையிட்டுக் கொள்ளல்வேண்டும். நம்முள் பலர் வாழ்வுவந்தக்கால், அதன் பேராசையால் ஆண்டவனையே அதிகம் மறந்து விடுகின்றனர். துன்பமோ வறுமையோ வந்துவிட்டால்தான் பள்ளிவாசல்களுக்கு வந்து மிகுந்த பக்தி சிரத்தையோடு ஆண்டவனைத் தொழ ஆரம்பிக்கின்றனர். தங்களுக் கிஷ்டமான போது ஆண்டவனைத் தொழுவதும் வேண்டாத போது அவனை அடியோடு மறப்பதும் பெருந் தீய நடத்தையாகும். இஃது அல்லாஹ்வை ஏமாற்றும் நயவஞ்சகத் தனமேயாகும்.

தங்கள் தொழுகை விஷயத்தில் பொடுபோக்காயிருப்போருக்கு வைல் என்னும் நரககதியே யாகும்,” என்று ஆண்டவனும், தன்னை இஷ்டமானபோது தொழுது ஏனைக் காலங்களில் மறந்திருப்போரைப் பற்றிக்  கூறுகின்றான். ஆதலின், சகோதரர்காள்! எந்த நாளும் எக்காலமும் அண்டவனைத் தொழுவதைச் சற்றும் விட்டுவிடாதீர்கள். அவனே ரமலானின் திரு வேதத்தையும், பெரு நபியையும் அளித்தருளினான். எனவே, எல்லாவற்றிற்கும் நீயே தஞ்சமென அவ்வாண்டவனையே சதா தியானித்துக் கொண்டிருங்கள். நம் முஸ்லிம் பாமரர்களுள் அநேகர் மார்க்கவிஷயம் ஏதும் அறியாமல், பேருக்கு மாத்திரம் முஸ்லிம்களென்று கூறித்திரியும் இக்காலை, நீங்களெல்லீரும் மார்க்க மஸ்அலாக்களையுணர்ந்து உங்களைச் சார்ந்த ஏனை ஜனங்களுக்கும் அவற்றைப் போதித்து, நீங்களும் தவறாமல் ஐங்காலமும் அல்லாஹ்வைத் தொழுது, வேறு சாதாரண மக்களையும் தொழுமாறு ஊக்கமளித்து, எல்லீரும் ஆண்டவனது திருவருளைப் பெறுவீர்களாக. ரமலான் சென்று விட்டது; இனி அடுத்த ரமலான் வரட்டுமென்று வாளா இருந்து விடாதீர்கள்.

பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் (ஆண்டவனிடம்) உதவி தேடுவீர்களாக!” என்று ஆண்டவன் கூறுகின்றான். என்னெனின், “பொறுமையாளருடனேதாம் ஆண்டவன் நிச்சயமா யிருக்கின்றான்

நல்லவிதமான நன்னம்பிக்கை கொண்டு, நற்கருமங்கள் பல புரிந்து ஒழுகினால்தான் இவ்வுலகில் ஆத்ம பரிசுத்தத்தோடு இருந்து இறுதிக் கியாமத்து நாளிலும் பாரமார்த்திக மோக்ஷமடைதல் சாலும். இன்றேல், நல்ல செயல் புரியாதோர் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள். ஆண்டவனைத் தொழுவோர்  ஜய பேரிகையோடு சுவர்க்கானந்தமடைவார்கள்; ஆண்டவனது திருச் சன்னிதானத்தை லிக்காவெனும் தரிசனத்தைக் கண்ணால் கண்டு மனப் பூர்த்தியடைவார்கள். கியாமத்தின் வேதனைகளினின்று தப்பி, நபிகள் நாயகத்தின் (ஸல்) ஷஃபாஅத்தைப் பெற்று மோக்ஷப் பேரானந்தமடைவார்கள். இப்படிப்பட்ட இன்பங்களைப் பெற நம்முள் பலர் நற்கருமங்கள் புரியாது வீணே தம் வாழ் நாட்களைப் போக்குகின்றனர்.

நீங்கள் சற்றே கண்ணைத் திறந்து பார்ப்பீர்களானால், உங்களுள்ளே பலர் சதா சர்வகாலமும் பணம் சம்பாதிப்பதையும் உலக சுகத்தையே தேடுவதையும் மனைவி மக்களோடு எப்பொழுதும் குலாவியிருப்பதையும் பேராசையும் பொறாமையும் பிடித்துத் திரிவதையும் ஒரு நாளும் பள்ளி வாசல்களுக்கு வந்து ஒரு ஸஜ்தாவும் செய்யாமலிருப்பதையும் கண்டு கொள்வீர்கள். ஏராளமான பொருள் திரட்டி வைத்திருந்தும், பேராசை மேலீட்டால் நஞ் சமூக நன்மைக்கென ஒரு தம்பிடியும் தர்மம் செய்யாத உலுத்தரான உலோபிகளும் நம்முள் பலர் இல்லாமலில்லை.

ஹராமன முதலை உபயோகிப்பது ஹராம் என்று தெரிந்தும், அப்படிப்பட்ட திருட்டுச் சொத்தையும் வட்டிப் பணத்தையும், கள்ள மார்க்கெட்டில் ஏமாற்றிப் பறித்தவைகளையுமே சதா சொந்த உபயோகப்படுத்தும் பல பாவிகளும் நம்முள் இல்லாமலில்லை. நல்ல மனிதர்களைக் கெடுத்து, அவர்களுக்குத் துவேஷத்தைக் கற்பிக்கும் தீயவர்களும் நம்முள்ளே இருக்கிறார்கள். திடகாத்திர தேகமும் போதுமான செளகரியங்களு மிருந்தும் ஆண்டவனைத் தொழாமலும் தர்மஞ் செய்யாமலும் சாக்குச் சொல்லி மனிதர்களை ஏமாற்றும்  நயவஞ்சகர்களும் அநேகர் இருக்கின்றார்கள். வெள்ளியோடு வெள்ளி பெருநாளோடு பெருநாள் மட்டுமே பள்ளிக்கு வருவாரும் பலர் உளர்.

இப்படிப்பட்டவர்களெல்லாம் பேருக்கு மட்டும் முஸ்லிம்களென்று இருந்து என்ன பயன்? இவர்கள் வீணுக்கேனும் ஆண்டவனுடைய விளை பொருள்களைத் தின்று கொண்டும் ஆண்டவனுடைய வான மண்டலத்தின் கீழ் வதிந்து கொண்டும் ஆண்டவன் பூமியின்மீது குடியிருந்து கொண்டும் எல்லாச் சுகத்தையும் ஆண்டவனிடமிருந்தே பெற்றுக்கொண்டும் அந்த ஆண்டவனையே சற்றும் வணங்காமலும், தர்மமான செயல்கள் புரியாமலும் இருப்பது எப்படிப்பட்ட பாதகமென்பதை எடுத்துக் கூறவும் வேண்டுமோ? ஓர் எஜமானனிடம் சம்பளத்தை வாங்கிக்கொண்டு வேலை செய்யாமல் இருப்பது தர்மமா? தன்னை ஈன்ற தாயை நன்றி மறப்பது ஆகுமா? அதைப் போல் ஆண்டவனருளிய அரிய பொருள்களை எப்பொழுதும் நாம் அனுபவித்துக் கொண்டு அவனுக்கு வணங்கி அடிபணியாமலிருப்பது உத்தமமாகுமா? நாம் நற்குனம் குடிகொண்டு நற்கருமங்கள் புரிந்தால், நம் ஆத்ம வாழ்விற்குத்தான் நலமுண்டு. இந்த உலகில் புண்ணியம் செய்தோர் மறுவுலகில் அபார ஜயம் பெறுவர். இவ்வுலகில் தீமைகளைச் செய்தோர், “எவனேனும் ஓர் அணுவத்துணை நன்மை செய்தால், அதற்குரிய நலனை (அங்கு) அனுபவிப்பான்; எவனேனும் அணுவத்துணைத் தீமையைப் புரிவானாயின், அதற்குரிய தண்டனையை யடைவான்,” என்று குர்ஆன் கூறுகின்றது.

ஆதலின், முஸ்லிம்காள்! அல்லாஹ்வின் மீது பரிபூரண நம்பிக்கை வையுங்கள்; அவனையே அல்லும் பகலும் அனவரதமும் தொழுது வாருங்கள். எப்படிப்பட்ட சுக துக்க காலங்களிலும் அவனையே நம்பிக் கடைப்பிடியுங்கள். இதற்காக எந்த அவ்லியாவின்பாலும் செல்லாதீர்கள். பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் அண்டவனிடமே அருள் பெறுங்கள். நீங்கள் சுயமே அகப்புறப் பரிசுத்தமடைவதோடு உங்கள் மனைவி மக்களையும், இனபந்து ஜனங்களையும் சன்மார்க்கத்தின் பக்கல் அழையுங்கள். இதுவே நமது கடமை. இதனை மறந்து இறுதியில் மோசம் போவது சரியன்று. ஆண்டவனது இறுதிநாள் தீர்ப்பு மிக்க நீதமுடையதாயிருக்கும்.

எனவே, எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மெல்லாருக்கும் நல்லருள் புரிவானாக. சன்மார்க்கத்திலும் நம்மைச் சதா செலுத்தி வைப்பானாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

فَوَيْلٌ لِلْمُصَلِّينَِ الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَِ الَّذِينَ هُمْ يُرَاءُونَِ وَيَمْنَعُونَ الْمَاعُونَِ

بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ

Image courtesy: hilalcommittee.org

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<குத்பா பிரசங்கம் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment