பாக்தாதில் அப்படியெல்லாம் கலீஃபா நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கையில், காஹிராவிலோ, அரண்மனையின் அந்தப்புரத்திலே ஷஜருத்துர்ரும் முஈஜுத்தீனும் காதல் விளையாட்டு

விளையாடிக்கொண்டிருந்தார்கள். முன்னம் ஒரு முறை ஷஜருத்துர் வேறொரு சுல்தானுக்கு மனைவியாயிருந்தார்; இப்போதோ, இனியொரு சுல்தானுக்கு மனைவியாயிருக்கிறார். இரண்டுக்கும் என்ன வித்தியாசமென்றால், முன் சந்தர்ப்பத்தில் சுல்தானின் தயவால் அந்த நிலைமையை அடைந்திருந்தார்; இப்போதோ, இவருடைய தயவால் இவர் கணவர் சுல்தானாயிருக்கிறார்.

முன்பெல்லாம் கணவருக்கு அடங்கிய மனைவியாய் ஷஜருத்துர் காட்சியளித்து வந்தார். இப்போதோ, ஷஜருத்துர்ருக்குப் பயந்த கணவராக முஈஜுத்தீன் காணப்பட்டு வருகிறார். ஸாலிஹின் பத்தினியாய் இருந்தபோதெல்லாம் அந்நாரிமணி மிகவும் சாந்தகுண சீலியாகவும் நேர்மைக்கோர் உறைவிடமாகவும் மிளிர்ந்து வந்ததுடன், தம்மையே ஸல்தனத்துக்கு எவ்விதத்திலும் சம்பந்தமில்லாத வேற்று நாட்டுப் பெண்ணாகக் கருதிவந்தார்; இப்பொழுதோ, நேர்மாறான குணங்களைப் பெற்றுக்கொண்டதுடனே, மிஸ்ரே தம்முடைய சொந்தச் சொத்தென்றும் அதை வெறும் தயாவிஷயமாகவும் தந்திரயுக்தியாகவுமே தாற்காலிகமாகத் தங் கணவரிடம் ஒப்படைத்து வைத்திருப்பதாகவும் மனப்பால்குடிக்க ஆரம்பித்து விட்டார். பதவி மோகத்தக்கு மிகவுமோசமாய்ப் பலியாய்விட்ட வேறொருவரை நாம் இவ்வுலக சரித்திரத்தில் ஷஜருத்துர்ருக்கு இணையாகக் கூறமுடியாதபடி ஆண்டவன் அவரை அத்துணை மாற்றிவிட்டான் என்பதைப் போகப்போக நீங்களே தெரிந்துகொள்ளப் போகிறீர்கள்.

“என்னாருயிர்க் காதலி! இன்பரச வல்லியே! நின்னை என் மனைவியாய் அடையும் பாக்கியத்தைப் பெற யான் என்ன புண்ணியஞ் செய்தேனோ தெரியவில்லையே! ஏ சுந்தராங்கியே! ஏன் பேசமாட்டேனென்கிறாய்?”.என்று விரகதாபத்தினால் வெதும்பிக் கொண்டே கிட்ட நெருங்கினார் மிஸ்ரின் சுல்தான் முஈஜுத்தீன்.

“உஸ்! காம சேஷ்டைகள் இருக்கட்டும்! கலீஃபாவின் ஆள் எவனோ ஒருவன் சில தினங்களுக்கு முன் இக் காஹிராவுக்கு வந்து, நம்மைப் பற்றியயல்லாம் புலன் விசாரித்துவிட்டு, ஐயூபி வம்சத்தைச் சேர்ந்த மூஸா வென்னும் சிறுவனையும் உடனழைத்துக்கொண்டு பாக்தாதுக்குச் சென்றிருக்கிறானாமே! அதனால் என்னென்ன கேடுகாலங்கள் சம்பவிக்குமோ தெரியவில்லையே?” என்று கலவரந் தோய்ந்த வதனத்துடனே ஷஜருத்துர் பேசினார்.

“அப்படியா? எனக்கது தெரியாதே! கலீஃபா என்னசெய்யப் போகிறாரோ தெரியவில்லையே?” என்று முஈஜுத்தீன் துள்ளித்துடிக்கப் பேசியதைப் பார்த்தால், கலீஃபா அக்கணமே அவர் கிரீடத்தைப் பறித்து, அவரைத் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்வதைப் போன்ற உணர்ச்சி பெற்றவர் உளறியதுபோலிருந்தது.

“என்ன செய்வார்? மிஸ்ருக்கு சுல்தானாவதற்கு ஐபக்குக்கு உரிமையில்லையென்றும் ஐயூபிக்கே உரிமையிருக்கிறதென்றும் அறிக்கை பிறப்பிக்கப் போகிறார். மிகவும் மிஞ்சிப் போய் விட்டால், அதே மூஸாவை சுல்தானாகவும் பிரகடனப் படுத்திவிடப் போகிறார். அவ்வளவுதானே!”

“ஐயோ! அப்படியானால் என்கதி?”.

“உங்கள் கதி என்ன! நீங்களம் சுல்தானாகவே இருப்பீர்கள்.”

ஓர் ஊரில் இரண்டு பைத்தியக்காரர்களா? ஒரு ஸல்தனத்துக்கு இரு சுல்தான்களா?

“என்ன! ஓர் ஊரில் இரண்டு பைத்தியக்காரர்களா? ஒரு ஸல்தனத்துக்கு இரு சுல்தான்களா? என்ன வேடிக்கை! அஃதெப்படி முடியும்?”

“மிஸ்ருடனே ஒரு சம்பந்தமுமில்லாத பாக்தாத் கலீஃபாவுக்கே இந்நாட்டுக்கு ஒரு சுல்தானை நியமிப்பதற்கு உரிமை இருக்கும்போது, இந்நாட்டைக் கிறிஸ்தவர்களின் வாயிலிருந்து மீட்டுக் கொடுத்த எனக்கு ஒரு சுல்தானை நியமிக்க உரிமை கிடையாதா? – நீங்கள் பேசாமலிருங்கள்; எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்!”

“ஷஜருத்துர்! என் வயிற்றைக் கலக்குகிறதே ! தூரான் ஷாவின் கதியை நான் இன்னம் மறக்கவில்லையே!”

“ஏன் தொடை நடுங்குகிறீர்கள்? அவனுக்கு விரோதமாக நானிருந்தேன்; அதனால் அவன் அந்தக் கதியில் போய் முடிந்தான். நீங்கள் என்னுடைய கணவரா யிருக்கிற வரையில் ஏன் கலங்க வேண்டும்? நான் இருக்கிற வரையில் உங்களை எவர் நெருங்கமுடியும்! கலீஃபா, என்ன உங்கள் சிரசையா கிள்ளிவிடுவார்?”.

“ஷஜர்! நீ இருக்கிற வரையில் என்னை எவரும் நெருங்கமுடியாதென்பது முற்றிலும் மெய்தான். ஆனால், கலீஃபா எடுக்கிற நடவடிக்கையில் நம்மிருவருக்குமே சேர்ந்து கேடுவிளைந்துவிட்டால்?… ஆ! நினைக்கவும் பயமாயிருக்கிறதே!”

“நீங்கள் பெரிய தைரியசாலியா யிருக்கிறீர்களே! கலீஃபா இன்னம் என்ன நடவடிக்கை எடுப்பாரென்பது தெரியாமலிருக்கும்போதே உங்கள் உயிரும் பாதி போய்விட்டது; குடலும் கலங்கிவிட்டது! உங்களை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது?”

“ஷஜருத்துர்! வேண்டாம்! கலீஃபாவின் கோபத்துக்கு என்னை ஆளாக்க வேண்டாம்! என்னை விட்டுவிட்டால்போதும்; நான் மைமூனாவுடன் எங்கேயாவது ஓடிப்போய், பிழைத்துக் கொள்ளுகிறேன்! எனக்கு என்னவோ பண்ணுகிறதே! ”

“உஸ்! பேசாமலிருங்கள். எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்ள எனக்குத் தெரியும். கலீஃபா என்ன செய்கிறாரென்பதைப் பொறுத்துப் பார்ப்போம். நீங்கள் இம்மாதிரி தொடை நடுங்கியாயிருப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையுமே அளிக்கிறது. கொண்டவன் பலமிருந்தால்தானே கூரைமேல் ஏறிச் சண்டை செய்யலாம்? உங்களுக்கு நான் தைரியங் கூறிக்கொண்டேயிருந்தால், என் வேலையை யார் பார்ப்பது?”.என்று கோபமாகப் பேசினார் மிஸ்ரின் மாஜீ சுல்தானா.
“என்னுடைய பலம் என்னவேண்டியிருகிறது? எல்லா அதிகாரத்தையுந்தான் நீயே வைத்துக்கொண்டிருக்கிறாயே! நான் பெயருக்காகவும் அறிக்கையுல் காட்டிய இடத்தில் கையொப்பமிடவும் வெள்ளிக்கிழமை குத்பாக்களில் என் பெயரை இ­மாம் சேர்த்துப் படிக்கவும் மட்டுமே யன்றோ சுல்தானாக இருக்கிறேன்! நான் சுல்தானாக இருந்ததெல்லாம் போதும் போதும். என்னை இவ்வளவோடு விட்டாலே போதுமே!”

அதற்குமேல் ஷஜருத்துர்ரால் பொறுக்க முடியவில்லை. மிகவும் ரோஷத்துடனும் ஆக்ரோஷத்துடனும் முஈஜுத்தீனுக்கு உபதேசம் புரிய ஆரம்பித்தார். சுல்தானென்றால் சர்வ சக்தியும் அவருக்கே இருக்கிறதென்பதை நன்றாய் விளக்கிக் காட்டி, போதாக் குறைக்குத் தாம் வேறு வேண்டியமட்டும் துணைபுரியக் காத்திருப்பதாகவும் தைரியங்கூறி, ஒன்றும் பிரமாதமாக வந்துவிடாதென்பதையும் சுட்டிக் காட்டினார்.

முஈஜூத்தீன் இயற்கையாகப் பயந்த சுபாவ முடையவரல்லர்; பக்கா தைரியசாலியே. ஆனால, அவர் ஷஜருத்துர்ருக்குத் தம்முடைய சுயேச்சையைப் பலிகொடுத்த பிறகு மிகவும் பலஹீனமுற்றுவிட்டார். ஷஜருத்துர் சற்றாவது பயந்து அடங்கி நடந்திருந்தால், முஈஜின் கையே ஓங்கியிருந்திருக்கும். ஆனால், அவ்வம்மையார் தம் அதிகாரத்தை எவ்விதத்திலும் எள்ளத்துணையும் பறிகொடுத்துவிடக் கூடாது என்னும் வைராக்கிய சித்தத்துடனே, முஈஜுத்தீனை மகா தந்திரமாகத் தமக்கு முற்றமுற்ற அடங்கி நடக்கக் கூடியவராகச் செய்து கொண்டுவிட்டு, இப்படிப்பட்ட சங்கட சந்தர்ப்பங்களில் பக்குவமாகப் பயமுறுத்தாட்டிக் கொண்டும் வந்தார். இம்மாதிரியெல்லாம் செய்வதற்கு வேறொருவரால் இயலுமா என்பது சந்தேகந்தான். எனினும், ஷஜருத்துர் இந்த விஷயத்தில் விசித்திரமான திருஷ்டாந்தமாகவே விளங்கி வருகிறார். இவ்வாறெல்லாம் தம்முடைய இணையில்லாச் சாமர்த்தியத்தைக் கொண்டு ஷஜருத்துர் செய்துகாட்டுகிற விசித்திரங்களை விளங்கிக் கொள்ளாதவர்கள், “ஷஜருத்துர் சூனியக்காரி” என்றும் “மந்திரவாதி” என்றும் “தந்திரக்காரி” என்றும் “மோகினிப்பேய்” என்றும் விதம் விதமாக வெல்லாம் திரித்துக்கூற ஆம்பித்து விட்டார்கள்.

முற்கூறிய சம்பவம் நடந்து சில நாட்களாயின. ஷஜருத்துர்ருக்குத் தெரியாமல் எப்படியாவது தம்முடைய ஆசை மனைவி மைமூனாவையும் அருமைக் குழந்தை நூருத்தீன் அலீயையும் ஒரு முறையாவது போய்ப் பார்த்துவிட்டு வந்து விட வேண்டுமென்று முஈஜுக்கு ஆவல் பிறந்தது. அவர் அப்படிப் போய்வரக் கூடாதென்று ஷஜருத்துர் ஒன்றும் நேரடியாகத் தடுத்து வைத்திருக்கவில்லை. எனினும், அவராகவே பயந்து கொண்டுதான் போகாமலிருந்தார். மேலும், பொழுது விடிந்ததிலிருந்து பொழுது போகிறவரை ஷஜருத்துர் ஓயாமல் முஈஜுதீனைக் கவனித்துக் கொண்டே யிருந்தமையால், அவருக்குப் பிரிந்துபோகத் தைரியம் பிறக்கவில்லை. அன்றியும் ஸல்தனத்தின் சாவியை யெல்லாம் கணவரிடம் கொடுத்துவிட்டு, ஷஜருத்துர்ரே சூத்திரக் கயிற்றைப் பிடித்துக்கொண்டிருந்தமையால், அம்மனைவிக்குத் தெரியாமல் கணவர் ஏதும் செய்யவும் முடிவதில்லை; நினைக்கவும் முடிவதில்லை. ஆகவே, எப்படியாவது பது மனைவியிடம் அனுமதி பெற்றுப் பழைய மனைவியைப் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டுமென்று நினைத்து ஷஜரை அண்மினார்.

வாழ்க்கையின் பற்பல வின்னியாசமான நாடகங்களில் நடித்து நடித்துப் பழகிப்போயிருந்த ஷஜருக்கு, தம்மெதிரில் வந்து நிற்பவரின் முகத்தைப் பார்த்தாலே எதிரியின் உள்ளத்துள் என்னவித எண்ணம் ஊசலாடிக்கொண்டிருக்கிறது என்பதைச் சரியாய் ஊகித்துணரும் சக்தியும் இப்போது வந்துவிட்டது. எனவே, முஈஜுத்தீன் தமதில்லத்துக்குப் போய்வர அனுமதி கோரவே தம்முன் வந்து நிற்கிறாரென்பதை ஷஜருத்துர் உணர்த்துகொண்டு விட்டார். கலீஃபாவின் நடவடிக்கைகள் தெரிவதற்குள்ளே முஈஜுத்தீனை நழுவவிடுவது கூடாதென்று ஷஜருத்துர் பல காரணங்களை உத்தேசித்து முடிவு செய்திருந்தமையால், அந்த சுல்தானை மெதுவாக மயக்க ஆரம்பித்தார்.

“நாதா! தங்கள் வதனம் ஏன் சற்று வாட்டமுற்றாற்போலிருக்கிறது? கலீஃபா என்ன, நம் தலையையா சேதித்து விடுவார்? விட்டொழியுங்கள் அந்த வீண் பயத்தை!”

“கண்மணி! நான் கலீஃபா எடுக்கப்போகிற நடவடிக்கைகளைப் பற்றிக் கவலைப்படவில்லை… ஆனால், நான்…”

“ஆனால், என்ன? தாங்கள் ஒன்றுக்குமே சற்றும் கவலைப்படவேண்டாமென்றுதான் நான் சொல்கிறேனே! அந்த மூஸா என்பவன் ஓர் எலிக்குஞ்சு! தாங்களோ, சிங்கக்குட்டி! கலீஃபா எலிக்குஞ்சை இந்நாட்டுக்கு சுல்தானாக நியமித்தனுப்பினால், சிங்கக்குட்டியாகிய தாங்களேன் அஞ்ச வேண்டும்? கேவலம், ஒரு ருக்னுத்தீனின் உதவியையும் மூமிய்யாவாக்கப்பட்ட பிரேதத்தையும் வைத்துக் கொண்டு, காட்டுமிறாண்டிகளான கொடிய நசாராக்களிடமிருந்தே நான் இந்த ஸல்தனத்தைத் காப்பாற்றியிருக்க, தேகாரோக்கியத்தில் ஒரு குறையுமின்றி, நல்ல திடகாத்திரத்துடனேயிருக்கும் தங்களை வைத்துக் கொண்டா இந்த அக்கிரமம் புரிகிற கலீஃபாவை வெல்ல முடியாது? முன்னமொரு கலீஃபாவுக்கு வேறொரு வகையில் விசித்திரமான பைத்தியம் பிடித்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். பல கலீஃபாக்கள் விதம்விதமான அக்கிரமங்களையும் அட்டூழியங்களையும் அழிச்சாட்டியங்களையும் புரிந்ததாகவெல்லாம் படித்திருக்கிறேன். அந்த மாதிரி இந்த கலீஃபாவும் என்னென்னவோ செய்து பார்க்கிறார்!”

“ஷஜருத்துர்! சும்மா கிடந்த என்னை இந்த மாதிரி சுல்தானாக்கிவிட்டு, என் உரிமைகளையெல்லாம் பறித்துவிட்டாயே! என் மனைவியுடனும் குழந்தையுடனும் யான எவ்வளவோ சுகத்துடனும் செளகரியத்துடனும் வாழ்க்கை நடாத்தி வந்தேன்.ஆனால், நான் எப்பொழுது உன்னை மணந்துகொண்டேனோ, எப்பொழுது சுல்தானாக ஆக்கப்பட்டேனோ, அப்பொழுதே நான் எல்லாவற்றையும் இழக்க நேர்ந்து, மன நிம்மதியற்ற வாழ்க்கையும் வாழவேண்டி வந்துவிட்டதே!”

“நாதா! சல்தனத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால், நாம், ஒரு சிறிதாவது நம்மாலியன்றதைத் தியாகம் செய்து தான் தீரவேண்டும். இப்போதும் ஒன்றும் மிதமிஞ்சிவிடவில்லையே! சகல பொறுப்பையும் நானேதான் நிர்வகித்து வருகிறேன். தாங்கள் பெயருக்காகவாவது சுல்தானாயிருக்கிறீர்கள்; எல்லாவித சுகபோக செளபாக்கியங்களையும் செளகரியமாய் அனுபவித்து வருகிறீர்கள். என்னைப் பாருங்கள்! அல்லும் பகலும் உறக்கங்கூடக் கொள்ளாமல் என்னென்ன விதமாகவெல்லாம் கவலைப்பட்டு வருகிறேன், தெரியுமா? இவ்வளவும் யாருக்காக? எல்லாம் தங்களுக்காகவே! சுல்தானாகிய தங்களைக் கெளரவிக்கவே! ஆனால், காரணம் ஏதுமின்றித் தாங்கள் இல்லாத கவலைகளையெல்லாம் வலிய வரவழைத்துக்கொண்டு, வீணே தவிக்கின்றீர்கள். இந்த கலீஃபாவின் உபத்திரவம் சிறிதே தணியட்டும். நானே மீண்டும் சுல்தானாவாகி, உங்கள் சுமையை இறக்கி விடுகின்றேன். இதற்காகப் பிரமாதமாகக் கவலைப்படுவானேன்?”

முஈஜுத்தீன் படுகிற அவஸ்தைகளை யயல்லாம் ஷஜருத்துர் “தியாகம்”என்னும் ஒரே வார்த்தையில் அடக்கிவிட்டபடியால், வீட்டுக்குப் போவதற்கு அனுமதி கோர அவர் துணியவில்லை. எனவே, பேசாமல் அங்கேயே அமர்ந்துவிட்டார். மெய்யும் சோர்ந்துவிட்டார்.

“ஷஜருத்துர்! கலீஃபா மூஸாவை சுல்தானாக நியமித்து விட்டால், நாமென்ன செய்யலாம்? நம்மீதும் அமீருல் மூஃமினீன் ஒழுங்கு நடவடிக்கை யெடுப்பாரோ?”

“நாதா! நான் எத்தனைமுறை சொல்லியிருக்கிறேன்? மிஸ்ரின் தலைவிதியை நிர்ணயிப்பதற்கு இவர் யார்? கலீஃபாவாயிருந்தால், தாம் நினைத்ததெல்லாம் செய்யலாமோ? மிஸ்ரை நான் தூரன்ஷாவுக்காகக் காப்பாற்றிக் கொடுத்தேன். அவன் சுல்தானாகவும் ஒரு சில நாட்கள் அரசுசெலுத்தினான். ஆனால், பொதுமக்களும் அமீர்களும் அவனுடைய அக்கிரமங்களைச் சகிக்க முடியாமல் அவனைக் கொன்று வீழ்த்தினார்கள். பிறகு அவர்களே ஏகமனதாக என்னைப் பட்டத்துக்கு உயர்த்தினார்கள். திஜ்லா நதிதீரத்தில் பாக்தாத் ஷரீபில் உல்லாசமாகப் பொழுது போக்கிக்கொண்டிருக்கும் கலீஃபா சாஹிபுக்கு இப்போது என்ன அவ்வளவு பெரிய அக்கறை இம் மிஸ்ரின் மீது பிறந்துவிட்டது? ஒரு பெண்பிள்ளை ஆட்சிபுரிவது ஹராம் என்று மார்க்கத்தீர்ப்புக் கொடுத்துவிட்டார். இப்போதுதான் தங்களை சுல்தானாக்கி விட்டேனே! இனியும், கலீஃபாவுக்கு என்ன வந்தது கேடு? நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள். மிஸ்ரிகள் வெறும் முட்டாள்கள்; சிறிதும், சுயஞானமில்லாதவர்கள்; இத்தனை நாட்களாக ஐயூபிகளுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள்; இனி நமக்குத்தாம் அடிமையாயிருப்பார்கள். மேலும், நான் இந்தக் காஹிராவுள் காலடி யெடுத்து வைத்ததுமுதல் அமீர்தாவூதால் வாங்கப்படுகிற வரையில் மிஸ்ரிகளுடனே நன்றாய்ப் பழகி, அவர்களுடைய குணவிசேஷங்களையும் மிகநன்றாகவே தெரிந்துகொண்டிருக்கிறேன். கலீஃபா ஏதாவது இசகுபிசகு செய்வதாயிருப்பின், மிஸ்ரிகள் நம்மையே ஆதரிப்பார்களன்றி, கலீஃபாவுக்குப் பயப்பட மாட்டார்கள். எனவே, நீங்கள் பேசாளமலிருங்கள்!”

“கலீஃபா தம்முடைய பரிவாரங்களுடன் மூஸாவை ஈங்கனுப்பி, அவனையே சுல்தானாக்கி விட்டால், நானும் எப்படி சுல்தானாக இருக்க முடியும்? எனக்கொன்றும் புரியவில்லையே! நீ ஏதேதோ தைரியம் சொல்லுகிறாய். நான் கேட்டுக்கொண்டாலும், என்மனம் கேட்க மறுக்கிறதே, ஷஜருத்துர்! கலீஃபாவை அறைகூவுவது சரிதான். ஆனால், பிறகு என்ன விளையுமென்பதையும் நாம் சற்றாவது சிந்திக்க வேண்டாமா? உன்னுடைய சாமர்த்தியத்தைப் பற்றியோ, அல்லது கெட்டிக்காரத்தனத்தைப் பற்றியோ நான் சந்தேகிக்கவில்லை.ஆனால், நம்மெல்லாரையும்விட சாமர்த்தியசாலியான அல்லாஹுத்தஆலா ஒருவன் இருக்கிறானென்பதையும், எல்லாம் அவன் நாடியபடியேதான் நடக்குமென்பதையும் நாம் மறக்கக்கூடாதல்லவா? ‘அல்லாஹ் சூழ்வினை செய்பவருள்ளெல்லாம் மிகச் சிறந்த சூழ்வினைக்காரன்’ என்று அவனே தன் திருமறையில் கூறியிருக்கவில்லையா?”

ஷஜருத்துர் ஆண்டவனைச் சென்ற சிலநாட்களாக அடியோடு மறந்துவிட்டு, உலகாயத வாழ்க்கையிலே நன்றாய் ஊறிப்போயிருந்தார். இப்போது முஈஜுத்தீன் அந்தப் பரம் பொருளின் பெயரை உச்சரித்தவுடனே நெஞ்சம் துணுக்குற்றுக் கல்லாய்ச் சமைந்துவிட்டார்.

கலீஃபாவை ஏமாற்றலாம்; மிஸ்ரிகளை ஏமாற்றலாம்; கணவரை மயக்கலாம்; சுல்தானாவாயிருக்கலாம். பேநாமியாகவாவது முஈஜுத்தீனைப் ‘பொய் சுல்தா’னாக ஆக்கிவிடலாம். ஆனால், எல்லாம்வல்ல இறைவனின் சக்தியொன்று எல்லாவற்றுக்கும் மேலாக நின்று சகல லோகங்களையும் ஆட்டிப்படைக்கிறதென்பதை அந்த ஷஜருத்துர் எப்படி மறுக்க இயலும்? லூயீயைத் தோற்கடிக்க உதவிபுரிந்த இறைவன், ஸாலிஹின் பிரேதத்தை மூடிவைக்கத் துணைபுரிந்த ஆண்டவன், காஹிராவைக் காப்பாற்றிய காருண்யன், அனைவரையும் ஆதரிக்கும் அருளாளன் இப்போது ஷஜருத்துர்ரைத் தண்டிக்க ஆரம்பித்துவிட்டால்? – இப்படி நினைத்துக்கொண்டே மாஜீ சுல்தானா மனமேங்கினார்; மாழ்கினார்; மூச்செறிந்தார்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment