திட்டங்கள் வகுப்பதிலும் சூழ்ச்சிகளுக்கு எதிர் சூழ்ச்சிகளை உண்டு பண்ணுவதிலும் எப்படிப்பட்ட எதிர்பாராத இடைஞ்சல்களும் இடையூறுகளும் வந்துற்ற போதினும் அவற்றை வெகு சுலபமாக உதறித் தள்ளக்கூடிய முன் யோசனையைப்
பெற்றிருப்பதிலும் ஒரு மனிதன் எவ்வளவுதான் மிகப்பெரிய சாதுரியவனாக விளங்கிவந்த போதினும் அவனும் சில சந்தர்ப்பங்களில் சற்றும் எதிர்பாராத இடையூறுகளில் சிக்கிக் கொள்ள நேர்ந்துவிடுகிறது. அப்படிப்பட்ட சந்தர்பங்களிலே அவனுடைய சிந்தனா சக்தியும் சாமர்த்திய தந்திரங்களும் யுக்திப் பிரவாகங்களும் ஒன்றுக்கும் பயன்படாமற் போய்விடுவதுடனே, குன்றுமுட்டிய குரீஇப் போலே நிலைதடுமாறி விடுவதுண்டு. இஃது இயற்கைச் சட்டம். சமயோசித புத்தியோ, முற்குறிப்பறியும் தன்மையோ, கெட்டிக்கார சாமர்த்தியமோ அச்சமயங்களில் அன்னவனை விட்டு ஆவியாய்ப் பரிணமித்துவிடும். செய்வது இன்னதென்று புலப்படாதுபோய் அவன் தட்டித்தடுமாறி முரட்டுத்தனமாய் வெளியேறப் பார்ப்பான். அல்லது வந்துற்ற சோதனைக்குப் பலியாகி விடுவான்.
அதேவிதமாக, சென்ற பல ஆண்டுகளாகத் தன்னுடைய வாழ்க்கையின் விசித்திரமான சொக்கட்டான் ஆட்டத்தில் மிக மிக ஜாக்கிரதையாக வெல்லாம் ஒவ்வொரு பேதாவையும் நகர்த்திவந்த ஷஜருத்துர் இந்நிமிஷம்வரை சம்பூர்ண வெற்றியைப் பெற்றுவந்தும் எதிரிகளுக்குப் படுதோல்வியை உண்டுபண்ணி வந்தும் அன்று அரசவையில் மூண்டுவிட்ட திடீர் கலகத்தில் அடிபட்டு நிலைகுலைந்து போய்விட்டார். அன்று நடந்த கலகத்தைவிட இன்னம் பொல்லாத கொடிய சோதனைகளை முன்பெல்லாம் ஷஜருத்துர் வெகு சுலபமாக உதைத்துத்தள்ளி, ஒருவிதத் தங்குதடையுமின்றி உன்னதமாக முன்னேறி வந்திருந்தாலும் அன்று நடந்த சிறிய கலாட்டா அவருடைய சகலகலா வல்லுந சக்திக்கும் ராஜதந்திரம் நிபுணத்துவ முன்னேற்றத்துக்கும் பெரிய முட்டுக் கட்டையாய்ப் போய் முடிந்தது.
அரசவையிலிருந்து கலங்கிய சிந்தையுடன், முகஞ்சுளித்து வெளியேறிய அவர் தம் உணர்வின்றி வழிநடக்கலாயினார். அவருடைய கால்கள் அவரைச் சுமந்து சென்றன, அவர் நடக்கவேண்டுமென்னும் எண்ணத்துடன் வழிநடந்ததாகத் தெரியவில்லை. உணர்விழந்த உடலைச் சுமந்துச் சென்ற அக்கால்கள் அவரை அவருடைய பிரத்தியேக அறைக்குள்ளே வலியக் கொண்டு போய்ச் சேர்த்தன. அவ்வறையின் நடுவில் கிடந்த சாய்வான பஞ்சணைமீது அவர் தம்மையறியாமலே தொப்பென்று வீழ்ந்து மல்லாந்துவிட்டார். பிரக்ஞை தவறிவில்லை யென்றாலும் மயக்கமுற்று விடவில்லை யென்றாலும் அல்லது பைத்தியம் பிடித்து விடவில்லை யென்றாலும் ஷஜருத்துர்ரின் மூளை அந்த வெறிபிடிக்கும் எல்லையை எட்டிக்கொண்டிருந்தது.
அன்று அரசவையில் தாம் பெற்றுக்கொண்ட ஈடிணையற்ற பேரவமானத்தை அடைவதற்காகவோ அவர் இதுவரை மிஸ்ருக்குச் சேவை புரிந்து வந்தார்! அவருக்கும் அவருக்கு பின்னே வரப்போகும் சந்ததியார்களுக்கும் மிஸ்ரிகள் தலைமுறை தலைமுறையாகக் கடமைப்பட்டு நிற்கவேண்டியதிருக்க, அன்று என்ன கைம்மாற்றைப் பெற்றுக்கொண்டார்! தம் உடல், பொருள், ஆவி, தூக்கம், விழிப்பு, கணவர் ஆகியவனைத்தையும் சர்வசங்க பரித்தியாகம் புரிந்து மிஸ்ரின் ஸல்தனத்தை இருகால் மிருகங்களான ஐரோப்பியர்களின் முரட்டுப் பிடியினின்று காப்பாற்றிக் கொடுத்ததற் கெல்லாம் அவர் இந்தப் பேரவமானத்தைத்தானா பெறவேண்டும்? – கட்டவிழ்த்துக் கொண்ட காளைக்கன்றே போல் துள்ளித்துள்ளி ஓடிக்கொண்டிருந்தது ஷஜருத்துர்ரின் சிந்தனாசக்தி.
“ஏ, இறைவா! ஐயூபிகளுக்காக யான் இந்நாட்டை வேற்றானிடமிருந்து காப்பாற்றினேன். ஆனால், ஐயூபிகளுக்கு இந்த ஸல்தனத் சொந்தமில்லையென்பதை நீ நன்கு நிரூபித்துவிட்டாய். தூரான்ஷாவிடமிருந்து நீயேதான் இந் நாட்டைப் பிடுங்கி என்னிடம் கொடுத்தாய். எனவே, சட்ட பூர்வமாகவும் நியாய பூர்வமாகவும் அல்லது வேறெவ் வகையாலும் நானே யன்றோ இம்மிஸ்ரின் ஏகபோக சுல்தானாவாக இருக்க வேண்டும்? உன்னுடைய நாட்டத்துக்கு முரணாக அந்த கலீஃபா வேறொருவனை அரசனாக நியமிப்பதற்கு என்ன அதிகாரமிருக்கிறது? அந்த கலீஃபா ஏவுகிறவற்றுக்குத்தான் நான் தலை வணங்கவேண்டுமென்று கூறுதற்கு புர்ஜீகளுக்கு என்ன அதிகாரமிருக்கிறது? எந்த புர்ஜீகளின் வாலை ஒட்ட நறுக்குவதற்காக நான் ஸாலிஹ் மன்னரின் சவத்தை மறைத்து வைத்தேனோ, எந்த புர்ஜீகள் வேரோடு தொலையவேண்மென்று நான் அல்லுபகல் அனவரதமும் நின்னை வேண்டி நின்றேனோ, அந்த புர்ஜீகளுக்கோ நான் பணியவேண்டும்?
“ஏ, இறைவா! நான் பட்டபாடுகள் அத்தனைக்கும் இதுவோ நின் வெகுமதி? – இம்மிஸ்ரிலுள்ள எல்லா மக்களும் பஹ்ரீகளும் என் கணவர் முஈஜுத்தீனும் எனக்கே முற்றமுற்றக் கட்டுப்பட்டு நடக்கும்போது இந்த புர்ஜீகள் – கயவர்கள், கள்ளர்கள், போக்கிரிகள், சுயநலமிகள், சேஷ்டை மிக்கவர்கள், சூழ்ச்சி செய்கிறவர்கள் – அந்த கலீஃபாவின் தயவை வைத்துக்கொண்டேயல்லவா என்னை இழிவுபடுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்? ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, இறுதியாக மனிதரையு மல்லவா இந்தப் பேடிகள் கடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்! என்னை இவர்கள் என்னவென்று நினைத்துவிட்டார்கள்?
“ஐயூபிகளின் ராஜ்ஜியத்தை நான் அமானத்துப் பொருளாகப் போற்றிக் காப்பாற்றித்தந்த அப் பெரிய கடமைக்காக நான் இதை என் சொந்த வெகுமதியாகப் பெற்றுக்கொண்டேன். நான் பட்டபாடுகளுக்குக் கூலியாகவே நான் சுல்தானாவாக உயர்ந்திருக்கிறேன். ஆனால், என் நியாய பூர்வமான இவ் வெகுமதியை கலீஃபாவின் துணைக்கொண்டு பிடுங்கிக் கொள்ளத் திட்டமிடும் புர்ஜீகள் முன்னம் அபூபக்ர் ஆதிலைக் கொன்றார்கள்; ஸாலிஹின் மரணத்துக்குப்பின் நாட்டை அபகரிக்கச் சூழ்ச்சிச் செய்தார்கள்; தூரான்ஷா பட்டத்துக்கு வந்ததும் அவனைத் தங்கள் வலைக்குள்ளே போட்டுக்கொண்டார்கள். இப்போது என்னையும் ஐபக்கையும் கழுவில் ஏற்றப் போகிறார்களாம்! என்ன நெஞ்சுத் துணிச்சல்! என்ன அகம்பாவம்! என்ன கேடுகெட்ட புத்தி!
|
“ஏகபோக சுல்தானாவாக விளங்கித் திகழ்கின்ற என்னை, இவர்கள் யார், வீழ்த்துவதற்கு? என்னையும் என்ன புளியங்காயென்று எண்ணிவிட்டார்களா? அல்லது கையாலாகாத பேடிப் பெண்னென்று கருதிவிட்டார்களா? ஆண்டவன் எனக்களித்திருக்கிற சக்தியைக் கொண்டும் சாமர்த்தியத்தைக் கொண்டும் பதவியைக் கொண்டும் பாக்கியத்தைக் கொண்டும் என்னையே நான் இந்நாட்டின் நிரந்தர சுல்தானாவாக ஆக்கிக் கொள்ளாமற் போனால், நானும் ஷஜருத்துர்ரா? போனால் போகட்டுமென்று நான் இத்தனை நாட்களாக பேசாமல் அடக்க ஒடுக்கமாய் ஆட்சி செலுத்தி வந்தேன். எப்போது விஷயம் இவ்வளவு முற்றிப்போய் இந்த தூரத்துக்கு வந்துவிட்டதோ, இனியும் நான் சும்மா இருப்பதாவது? நான் மட்டும் மனம் வைத்தேனானால், இந்த கலீஃபாவையும் புர்ஜீகளையும் ஒரே மூச்சில் ஊதித் தொலைத்து விட மாட்டேனா? எனக்கென்ன குறைவான அறிவா இருக்கிறது? ஒரு சுல்தானின் அற்ப மனைவியாக நான் இருந்த காலத்திலேயே இந்த ஸல்தனத்தை ஓர் ஆட்டம் ஆட்டிப் படைத்திருக்கும்போது, இப்போது நானே சர்வ வல்லமையுள்ள ஏகபோக மகாராணியாய் இருந்துவருங்கால், என்னால் எதை செய்ய முடியாது?
“செத்துப்போன பிரேதத்தை வைத்துக்கொண்டு, பெரிய பிரெஞ்சு மன்னனை கைதியாய்ப் பிடித்த எனக்கு, உயிருள்ள ஐபக்கை துணையாக வைத்துக் கொண்டு என் இஷ்டம்போலே யாவற்றையும் ஆட்டிப் படைப்பதுதானா பிரமாதம்? அடிமையாயிருந்த எனக்கு ஒரு பெரிய ஐயூபி சுல்தானை மயக்குவதற்கிருந்த பிரம்மாண்டமான சாகச சாமார்த்தியம் இப்போது அரசியாயிருக்கும் என்னை விட்டுவிட்டா ஓடிப்போய் விட்டது? அடிமையாயிருந்து நான் சாதித்த அத்தனை விஷயங்களையும்விட அதிகமானவற்றையே அரசியாயிருக்கும் நான் சாதிக்காமற் போவதாவது?
“ஏ, என் நெஞ்சமே! நீ அஞ்சாதே! இம் மிஸ்ரிலே சென்ற ஐயாயிரம் ஆண்டுகளாக எத்தனையோ அற்புதங்களும் என்னைப்போன்ற பெண்களாலேயே செய்துக் காட்டப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட அற்புதசக்தி வாய்ந்த அவர்களெல்லாரையும்விட எனக்குச் சற்று அதிகமான அறிவும் ஆற்றலும் இல்லையா? பெண்ணென்றால், கேவலமானவளென்றும் கையாலாகாதவளென்றும் அர்த்தமா? ஏ, மனமே! பொறு, பொறு! பின்னே வரப்போகிற மக்கள் என் ஈடிணையற்ற சரித்திரத்தைப்படித்து நெஞ்சம் துணுக்குகிற காரியங்களனைத்தையும் நான் செய்துகாட்டாமற் போவதில்லை! எனக்குப் பிறர் எதுவரை மரியாதை காட்டினாரோ, அதுவரை நானும் மிக மரியாதையாகவே மயிர்காலிலே கட்டப்பட்டு நடந்து வந்தேன். ஆயின், எப்போது அவர்கள் என்னை நிந்திக்க ஆரம்பித்துவிட்டார்களோ, அப்போதே நானும் என்னுடைய சர்வ சக்தியையும் பிரயோகிப்பதென்று முடிவு கட்டிவிட்டேன. நான் மிகவும் அற்பத்திருந்து அரசியானேன் என்பது மெய்யே. ஆனால், நான் மீண்டும் அற்பத்துக்குப் போய்ச் சேர்வேன் என்று, ஏ என் நெஞ்சமே! நீ அஞ்சாதே!”
நினைக்க நினைக்க, ஷஜருத்துர்ருக்கு மனம் பொரும ஆரம்பித்துவிட்டது. ஏமாற்றத்தாலேற்பட்ட ஆத்திரத்தைவிட, வைராக்கியத்தா லேற்பட்ட பொருமலே அதிகரித்தது. வைராக்கிய மென்றால், எப்படிப்பட்ட வைராக்கியம்? உலகத்தில் இதுவரை எப்படிப்பட்ட ஆணோ பெண்ணோ செய்தறியாத வைராக்கியம்! துருக்கியில் பிறந்த உடலத்துள் ஓடிய உதிரம் கொதித்ததனால் எழுந்த சூளுரவு எப்படிப்பட்டதாய் இருந்திருக்குமென்று எண்ணுகிறீர்கள்? போகப்போக நீங்களே தெரிந்துக்கொள்வீர்கள்.
ஷஜருத்துர் சட்டென்று எழுந்து அமர்ந்தார். தம் வதனத்தைத் துடைத்துக் கொண்டார். தலைமயிரைக் கோதிக் கட்டிக் கொண்டார். ஒய்யாரமாக நடைநடந்து, அவ்வறையின் வாயிலண்டை வந்தார். அங்கே ஒரு மம்லுக் காவலாக நின்றுகொண்டிருந்தான். அம்மாது சிரேமணியைக் கண்டதும் தலைவணங்கினான்.
“அடே! அரசவை கலைந்துவிட்டதா? ஐபக் எங்கே?” என்று ஆத்திரத்துடன் ஷஜர் வினவலுற்றார்?
“யா மலிக்கா! அரசவை இன்னம் கலையவில்லை. மலிக்கும் இன்னம் அந்தப்புரத்துள் வரவில்லை,” என்று அந்த மம்லுக் விடையீந்தான்.
“என்ன! இன்னம் அரசவை கலையவில்லையா! கலகம் ஓய்ந்து விட்டதோ?”
“ஆம், ஸாஹிபா! தாங்கள் எழுந்து இங்கே வந்தவுடனே கலீஃபாவின் ஆட்சிகளும் புர்ஜீகளும் தாங்கள் அமர்ந்திருந்த ஆசனத்தில் மூஸாவை அமர்த்திவிட்டார்கள்”
“அப்படியானால், ஐபக் என்னவானார்?” என்று பதஷ்டத்துடன் வினவினார் ஷஜருத்துர்.
“அவர் அங்கேயே அசையாமல் அமர்ந்திருக்கிறார், அவர்களிருவருக்குமே அனைவரும் வாழ்த்துக் கூறுகிறார்கள். ஸாஹிபா!”
“ஒரு சிம்மாசனத்தில் இரு சுல்தான்களா! இவர்களுக்கென்ன, பைத்தியமா பிடித்துவிட்டது?” என்று ஷஜருத்துர் வியப்புடன் வினவிக்கொண்டே அசையாது மரம்போல் நின்றார்.
“யா ஸஹிபா! சுல்தான் ஐபக்கும் அந்த ஐயூபியைத் தம்முடனே சோதர சுல்தானாக ஆளட்டுமென்று நல்வரவேற்றுப் பிரசங்கம் புரிகிறாறாம். யான் இப்போதுதான் இவ்விஷயத்தைக் கேள்வியுற்றேன். இறுதியாக, புர்ஜீகள் தங்களுக்கென்று ஒரு சுல்தானை ஏற்படுத்திக்கொண்டே விட்டார்கள்,” என்று அந்த மம்லுக் விடையீந்தான்.
ஷஜருத்துர்ருக்கு ஏமாற்றத்துக்கு மேல் ஏமாற்றமாய்ப் போய்விட்டது! அவருடைய நெஞ்சம் விம்மிக் குமுறிற்று. புர்ஜீகளை அடியுடன் மட்டந்தட்டுவது என்னும் கொடிய வைராக்கிய்துடனே எழுந்துவந்த ஷஜருத்துர் அந்த மம்லூக்குகளின் வெற்றியைப் பற்றிக் கேட்டதும் வெளிறிப் போயினார். அவர் கண்முன்னே இவ்வுலகமே இருள்வதுபோலவும் சுழல்வது போலவும் உருள்வது போலவும் கவிழ்வது போலவும் தோன்றிற்று. உணர்விழந்த வண்ணம் பின்னிடைந்து சென்று, தம் தலையை இரு கரங்களாலும் இறுகப் பற்றிக்கொண்டு மீண்டும் அப் பஞ்சணைமீது தொப்பென்று வீழ்ந்தார்.
“ஏ ஷஜருத்துர்! உன்னைச் சாதாரண புர்ஜீகள் எங்ஙனமெல்லாம் ஏமாற்றுகின்றனர், பார்த்தனையா? நீ ஒரு பெண்ணாய்ப் பிறந்துவிட்டமையா லல்லவோ கலீஃபாமுதல் ஒரு சாதாரண மம்லூக்வரை எல்லாரும் உன்னை உல்லங்கனம் செய்கிறார்கள்? நீ மட்டும் ஓர் ஆணாய் அவதரித்திருந்தால், உன்னிடம் எவரே வாலாட்டத் துணிவர்?” என்று தம்மைத் தாமே நிந்தித்துக்கொண்டார், மனம் புழுங்கிய மாஜீ சுல்தானா.
சட்டென்று வேறு யோசனை ஒன்று உதித்தது. ஷஜருத்துர் பெண்ணாய்ப் பிறந்து சாலிஹ் மன்னரை மணந்திராமற் போயிருந்தால், இந்தப் பெரிய மிஸ்ர் சாம்ராஜ்யம் அவருக்கு எங்ஙனம் கிடைத்திருக்கப் போகிறது என்னும் மாற்றெண்ணம் தோன்றியதும் வேறுவிதமாகச் சிந்தையைச் செலுத்தலாயினார்.
“நான் பெண்ணாய் இருந்தாலென்ன? பேடியல்லவே? என்னால் முடியாததும் ஒன்று இவ்வுலகிலுண்டோ? என்னால் நியமனம் பெற்ற ஐபக்கையும் ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து கலிஃபா நியமனம் செய்தனுப்பிய, ஐயூபியையும் என்னால் அரை நொடியில் வீழ்த்த முடியாதா? இந்த மிஸ்ரின் ஏகபோக ஆட்சியை என் கைகளில் மீட்டும் சிக்கவைக்க முடியாதா? எனக்கு உரிமையில்லையா? சாமர்த்தியமில்லையா? அல்லது கெட்டிக்காரத் தனந்தானில்லையா? என்னைவிட எந்தவகையில் இந்த இரு சுல்தான்களும் மேன்மையுற்றுவிட்டார்கள்? புர்ஜிகளோ, அல்லது பஹ்ரீகளோ அல்லது முழு மிஸ்ருமோ என் சாமார்த்தியத்துக்கு இனையாய் நிற்கத்தான் முடியுமா? அல்லது எனதாயுள் உள்ளவரை என்னைத் தவிர வேறு யாரையாவது இச் சிம்மாசனத்தில் அமர்த்தத்தான் முடியுமா? அப்படி எவரையாவது அமர்த்திவிட்டாலும், நான் கைகட்டிக்கொண்டு பேசாமல் பேடிகை வாளேபோல் பார்த்துக்கொண்டிருக்கத்தான் இயலுமா? என்னைக் கிள்ளுக் கீரையென்று நினைத்துக் கொண்டுவிட்டார்கள் போலும்! ஷஜருத்துர் யரென்பதை இன்னம் சில நாட்களில் நான் காட்டிவிடுகிறேன்!
“ஏ, என் வைராக்கிய நெஞ்சமே! நீ அமைதியாயிரு! உன் உறுதியில் தளர்ச்சியுறாதே! இதுபோது என்ன மிஞ்சி விட்டது? உன் திட்டங்களைச் சுலபமாக நிறைவேற்றிக்கொள்ளவேயன்றோ இரண்டு சுல்தான்கள் ஆட்சி புரிகின்றனர்? உன் சிரமத்தை எளிதாக்குவதற்கேயல்லவோ இச் சரியான சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது? ஊர் இரண்டுபட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டமல்லவா? ஏகபோக ஒரே சுல்தான் வேரூன்றி நின்றாலும் என் காரியங்களில் ஒரு சிறிது தடங்கலேற்படலாம். இரண்டு பேராகப் போட்டி ராஜ்ஜியம் நடத்தினால், எனக்குச் சகலமும் சுலபமாகிவிடாவா? இப்போதும் ஒன்றும் மீறிப்போய் விடவில்லையே!
“ஏ, மனமே! நீ பொறுமையயாயிரு. மிகப் பெரிய வெற்றியை நான் அடைந்துகாட்டுகிறேன்! என்னைக் கண்டு இம்முழு உலகமே அலறும்படியும் அதிசயிக்கும்படியும் செய்துக்காட்டுகிறேன். என் ஆன்மா எவன் கரத்திலிருக்கிறதோ அவன்மீது ஆனையாக! இந்த மிஸ்ர் ராஜ்ஜியத்தை என் ஏகபோக ஆளுகைக்குக் கீழ்க் கொண்டுவந்து என்னைக் கண்டோரனைவரும் கிடுகிடுக்கும்படி நான் செய்யாவிட்டால் என் பெயர் ஷஜருத்துரல்ல! இப்போது எந்த புர்ஜிகள் எனக்கு ஏளனம் புரிந்துக்கொண்டும் என்னை உதாசினஞ் செய்துக்கொண்டும் இருக்கிறார்களோ அதே புர்ஜிகள் வல்லமைமிக்க சுல்தானா ஷஜருத்துர்ரைக் கண்டு கலகலத்து விலவிலத்து போகும்படி செய்யாமற் போவதில்லை! என்னை எவன் வருத்தினானோ, அவன் என்னிடமே தக்க சிக்ஷைபெறவேண்டும்! என்னை எவன் திரஸ்கரித்தானோ, அவன் என்னாலே திரஸ்கரிக்கப்பட வேண்டும்! என்னை எவன் வீணே துன்புறுத்தினானே, அவன் சரியான முறையிலே பழிவாங்கப்படவேண்டும்! எவன் என் ராஜ்ஜியத்தை என்னிடமிருந்து பிடுங்குவதற்குச் சூழ்ச்சி செய்தானோ, அவனுடைய உயிரை அவன் உடலிலிருந்து நானே பிடுங்கியாக வேண்டும்! எவன் என்னை இவ்வளவெல்லாம் மனமுடையச் செய்தானோ, அவனுடைய ஹிருதயத்தை துண்டுத்துண்டாக நானே சிதற அடிக்க வேண்டும்!
“ஏ, ஷஜருத்துர்! நீ துவண்டு விடாதே! பலஹீனமுற்று விடாதே! நிமிர்நது நில்! உன் இனிய சபதம் நிறைவேறுகிற நாள் சமீபித்து விட்டது! உன் இணையற்ற சாமர்த்திய வித்தைகளை நீ நல்ல சமயத்தில் நழுவ விட்டு விடாதே! அன்று என்னை வளர்த்த யூசுபிடம் என் வைராக்கியத்தைச் செலுத்தி வெளியேறி வெற்றிகண்ட நான் இந்த அரண்மனையிலேயே இருந்து கொண்டு எதைத்தான் சாதித்து முடிக்க இயலாது? ஏ என் வைராக்கிய சித்தமே! நீ பொறு, பொறு, பொறு!”
சற்று முன்னர் வைராக்கிய உறுதிபூண்டு வாயில்வரை எழுந்து சென்றவர் அங்கே ஏமாற்றமான செய்தியைக் கேட்டு மீட்டும் திரும்பினார். ஆனால், இப்போது மனவுறுதியுடன் செய்து கொண்ட சூளுரவு இருக்கிறதே, அது மிகவும் பொல்லாதது. என்னெனின், பழுக்கக் காய்ந்த இரும்பில் சம்மட்டியாலடித்தால், அஃதெப்படிக் கருமான் இஷ்டப்படி உருவடையுமோ, அஃதேபோல் புழுங்கிக் காய்ந்திருந்த அவருள்ளத்துள் இதுபோது செய்துகொண்ட சபதம் மிகவும் வன்மையான உறுதியைப் பெற்றுக்கொண்டு விட்டது. கட்டுக் கதைகளில் நாம் கேள்வியுறுகிற மானஸ சபதங்களெல்லாம் ஷஜருத்துர் எடுத்துக் கொண்ட இக் கொடிய சூளுறவுக்கு உறைபோடவுங் காணா; அல்லது அவர் எடுத்துக் கொண்ட சபதம் எவ்வளவு வன்மை மிக்கது என்பதை நாம் விவரிக்கவும் முடியாது. கற்பனைக் கெட்டாத அற்புதங்களைக்கூட உண்மைச் சம்பவங்கள் தோற்கடித்துவிடும் என்பதற்கு ஷஜருத்துர்ரின் பிற்கால நடக்கைகள் அத்தாட்சியாகப் போவதைக் கண்டு நீங்களெல்லீரும் திடுக்கிடப் போகிறீர்கள். பழையனூர் நீலியின் சபதமென்பதெல்லாம் ஷஜருத்திர்ரின் வைராக்கிய மிக்க உறுதியின் முன்னே ஒரு சிறிதும் போட்டியிட முடியாதன்றே!
இதுபோது ஷஜருத்துர் இரண்டா முறையாகத் தம்முடைய அறையிலிருந்து வெளிவந்தார். அரசவைக் கலைந்ததும் ஐபக்கை இங்கே கொண்டுவர வேண்டுமென்று அந்த மம்லூக்கிடம் சுருக்கமாக ஆக்ஞை பிறப்பித்தார். மேலும், அத்தாணி மண்டபத்தில் என்ன நிகழ்ச்சிகள் நடந்தனவென்னும் முழுவிவரமும் தமக்குத் தெரியவேண்டுமென்று கட்டளையிட்டார். ஷஜருத்துர் பேசி முடிந்ததும், அந்த பஹ்ரீ சிட்டாய்ப் பறந்த விட்டான்.
போனவன் சிறிது நேரத்தில் சுல்தான் முஈஜுத்தீனுடனே விரும்பி வந்தான். ஷஜருத்துர் நிற்கிற மாதிரியும் பார்க்கிற பார்வையும் சுல்தானுடைய மேனியைக் குலுக்கிவிட்டன. என்ன நடக்கப் போகிறதோ என்னும் அச்சம் அவருடைய உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஜிவ்வென்ற பயங்கர உணர்ச்சியை உண்டுபண்ணி விட்டது. அவர் எத்துணைமட்டும் அஞ்சி நின்றாரென்பதை, நடுங்கியாடுகிற தாடி ரோமங்களின் நுனிகள் நிரூபித்துக் கொண்டிருந்தன. ஷஜருத்துர்ரின் முகத்தைப் பார்த்த வண்ணம் அடிமேலடி வைத்து மெல்ல நடந்துவந்த அரசர்பிரான் தூக்குமேடைக்கு இழுத்துச் செல்லப்படுகிறவனைப் போல் தம்மையறியாமலே ஊர்ந்து சென்றார்.
“யா சுல்தானுல் மிஸ்ர்! வருக, வருக! தங்களுடன் உதவிக்காக நியமிக்கப்பட்ட மற்றொரு சுல்தானை எங்கே காணோம்?” என்று பரிசாகச் சிரிப்புடனே ஷஜருத்துர் வரவேற்றார். கொஞ்ச நஞ்சம் முஈஜுத்தீனுக்கு இருந்த தைரியமும் இவ்வரவேற்பைச் செவியேற்றதும் ஆவியாகப் பரிணமித்துவிட்டது!
“காதலி! என்மீது என்ன குற்றமிருக்கிறது? நான்…..” என்று நடுங்கிக் கொண்டே, முஈஜுத்தீன் வாய்த்திறந்தார்.
“உஸ்! நான் தங்கள்மீது குற்றம் சுமத்தவில்லை. தங்களுடன் சேர்ந்து சுல்தானாக நியமனம் பெற்றிருக்கும் மலிக்குல் அஷ்ரப் எங்கே என்றுதான் கேட்டேன்!”
எவ்வளவு பொங்கியெழுகிற நெஞ்சத்திலிருந்து கசப்பான இச் சொற்கள் பிறக்கின்றன வென்பதை முஈஜுத்தீன் உணர்ந்துகொண்டாராதலால், கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் சமாதானமாய்ச் சம்பாஷிக்கத் துவக்கினார்.
“ஷஜருத்துர்! சர்வமும் நீயாகவே விளங்கிவருகின்றாய். உனக்குத் தெரியாததொன்றும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. நீயே என்னை சுல்தானாக ஆக்கினாய். நீயே என்னை மணந்து கொண்டாய். இப்போதும் நீயே இந்த ஸல்தனத்தின் சூத்திரக் கயிற்றைக் கெட்டியாய்ப் பற்றிக்கொண்டிருக்கிறாய். யானோ, உன் கையில் ஒரு மரப்பாவை. நீ சொல்லுகிறபடியே யான் கேட்டு நடக்கிறேன்; கேட்கவும் கட்டுப்பட்டுக் கிடக்கிறேன். இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அமீருல் மூஃமினீனாகிய கலீஃபா அவர்களே போட்டிக்காக ஒரு சுல்தானை நியமனஞ் செய்து, தம்முடைய கட்கந்தாங்கியின் துணையுடனும் தம்முடைய பரிவாரங்களின் உதவியுடனும் இங்கே அனுப்பியிருக்கும்போது, அதே சந்தர்ப்பத்தில் புர்ஜீகளும் நமக்கெதிராகக் கலகம் விளைக்கும்போது, வேறெப்படித்தான் நிலைமையைச் சமாளிப்பது? ராஜதந்திர யுக்தியைக் கடைப்பிடித்தால் மட்டுமே மீளமுடியுமென்று நான் கருதினேன். தக்க சமயத்தில் நீயும் எழுந்து வந்துவிட்டாய். மூஸாவையும் சுல்தானாக ஏற்றுக்கொண்டதாக நான் சமயோசித புத்தியுடன் நடந்துகொள்ளாமற் போயிருந்தால், இந்நேரம் என்ன கதி ஆகியிருக்கும் தெரியுமா?”
ஐபக்கின் இந்தப் பதிலைக் கேட்டதும், ஷஜருத்துர் பேய் போலச் சிரித்தார். அச் சிரிப்பாலெழுந்த பயங்கரச்சப்தம் அவ்வறை முழுதும் பேரச்சமூட்டும் பலத்த எதிரொலியைப் பிரதிபலித்தது.
தொடரும்…
-N. B. அப்துல் ஜப்பார்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License