اَلْحَمْدُ للهِ الْعَزِيْزِ الْجَبَّارِ الْمُتَكَبِّرِ الْمُسْتَعَانِ ذِى الطَّوْلِ وَ النِّعْمَةِ وَ الْغُفْرَانِ وَ نَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ الَّا اللهُ وَحْدَهُ لَّا شَرِيْكَ لَهُ وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ اَمَّا بَعْدُ اَيُّهَا الْاِخْوَانُ
அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்பதை எனக்கும் சொல்லிக் கொள்ளுகின்றேன்.
அன்பின் மிக்க அரிய நேயர்காள்! ஆண்டவனுடைய அடியார்கள்! பூவுலகின்கண் மேன்மையுற்று விளங்கத்தக்க முஸ்லிம் நேசர்காள்! நஞ் சமூகத்தார் க்ஷீணதசையடைந்து செல்லும் மார்க்கங்களுள் வர்த்தகத்தை நாம் கவனியாமல் விட்டிருப்பதும் ஒரு முக்கிய காரணமாகுமென்று நீங்கள் தெரிந்துகொண்டிருக்கிறீர்கள். எனவே, நீங்கள் உங்கள் உணவுப் பொருள்களுக்காகச் சிறிது சிரமமெடுத்து வியாபாரம் செய்ய முற்படுங்கள். வெறுமனே முதலில்லா வர்த்தகம் செய்யும் வழக்கத்தைச் சிறிது சிறிதாய் விட்டுவிடுங்கள். நம் நாயகம் (ஸல்) அவர்களும் கஷ்டமெடுத்துத்தான் வியாபாரம் செய்துகொண்டிருந்தார்கள். இப்படியே ஹஜ்ரத் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்களும் ஜவுளி வியாபாரம் செய்துகொண்டிருந்தார்கள். இவ்வாறே ஹஜ்ரத் உமர் கத்தாப் (ரலி) அவர்களோ கை வேலை செய்து ஜீவனம் புரிவதில் முதன்மையானவர்களாய் இருந்தார்கள். இவர்கள் கஷ்டப் பிரதேசமான அரேபியாவில் செங்கற்களை உற்பத்தி செய்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். ஹஜ்ரத் உதுமான் (ரலி) அவர்களும் வியாபாரத் தொழிலில் ஈடுபட்டு வந்ததுடன், மாபெரும் தனிகராகவுமிருந்தார் என்பதை நாம் சொல்ல வேண்டுவதின்று; இவர் வியாபாரப் பிரபலஸ்தர்களுள் ஒருவராய்த் திகழ்ந்துவந்தார் என்பதையும் நீங்களறிவீர்கள்.
வர்த்தகம் செய்வதும் கஷ்டப்பட்டுச் சம்பாதிப்பதும் ரஸூல் (ஸல்) அவர்களின் சுன்னத்தும் சஹாபாக்களின் வழக்கமுமாகும். எனவே, முஸ்லிம்களாகிய நாம் சோம்பேறித்தனம் குடிகொண்டவர்களாகவும் சுறுசுறுப்பற்றவர்களாகவும, தீக்ஷண்ய புத்தியில்லாதவர்களாகவும் இருந்துகொண்டு நமது அரிய நேரத்தை வீணே நாசமாக்குவது கூடாது.
அல்லாஹ் நமது நேரத்தை வீணே கழிப்பதற்கு அளித்தானில்லை. இம்மேலான காலங்களை வீணே கழிப்போமாயின், வேத வாக்கியப்படி நிச்சயமாய் ஷைத்தானின் சோதரர்களாகவே நாம் ஆய்விடுவோம். அன்றியும் ஒரு மனிதன் சம்பாதிக்கின்றான். ஆனால், பத்து மனிதர் ஒருவிதக் கஷ்டமும் இல்லாமல் சும்மா இருந்துகொண்டு அந்த ஒருவனது சம்பாத்தியத்தைக் கொண்டே உணவுப் பொருள்களைப் பெறுகின்றனர் என்றால், இஃது எவ்வளவு கேவலமானதென்பதை நீங்களே உய்த்துணர்வீர்களாக. இறுதிநாளின்போது இப்படிப்பட்ட செய்கைகளெல்லாம் கேள்விக்கணக்குக் கேட்கப்படுமென்பது திண்ணம். நுங்களுக்குக் கரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன; பாதங்களும் அளிக்கப்பட்டிருக்கின்றன; மனமும், ஞானமும், பகுத்தறிவும் அருளப்பட்டிருக்கின்றன. திடகாத்திரமும் ஈயப்பட்டிருக்கிறது. “இத்தனை விதமான சக்திகளும் குறையின்றி உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தனவே? அவற்றினை நீங்கள் எந்த முறையில் உபயோகப்படுத்தினீர்கள்?” என்று நிச்சயமாய் வினவப் பெறுவீர்கள். அதுசமயம் ஆண்டவனது வணக்கத்தையே தம்முடைய உயிராகக்கொண்டிருந்த ஆபிதீன்கள் தங்கள் வணக்கத்தையே ஆண்டவன் சன்னிதானத்தில் சமர்ப்பிப்பார்கள். இன்னம், தங்கள் ஜீவனோபாயத்திற்காகக் கை கால் மனம் புத்தி விவேகம் முதலியவற்றை உபயோகித்தவர்கள் தங்கள் வேலையை நாயன் முன் எடுத்தோதுவார்கள். இன்னவர்கள் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் சம்மானத்தையும் வாக்களிக்கப்பட்டபடி அடைவார்கள். ஆனால், மேலே சொன்னதற்கு முற்றும் மாற்றமாய் நடந்து கொண்டவர்கள் ஆண்டவன் கோபத்துக்கு உள்ளாவதுமன்றி, அவனால் கொடிய தண்டனையும் அடைவார்கள். எனவே, உலகத்தில் நமக்கென அளிக்கப்பட்டிருக்கும் போக போக்கியத்தை இனியேனும் மறவாதிருப்பீர்களாக.
இஸ்லாத்தில் கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத்து, ஹஜ்ஜு முதலிய ஐந்து முக்கிய முதற் கடமைகள் காணப்படுகின்றன. இவ்வைந்தும், உணவுப் பொருள்களும் சிறிது செல்வமும் இல்லாமல் பரிபூரணமாகா. எனவே, நீங்கள் இவையனைத்தையும் செவ்வனே நிறைவேற்ற நாடுவீர்களாயின், முதன் முதலாக உங்களுக்கு வேண்டிய ஜீவனோபாயத்தை நல்ல முறையிலே சேகரிக்க ஏற்பாடு செய்துகொள்ளல் வேண்டும். அப்பொழுதுதான் கலிமாவென்னும் நன்னம்பிக்கை உங்கள் ஹிருதயங்களில் உறுதியுடன் நின்றிலங்கும்; மேலும் தொழுகையென்னும் ஆண்டவனின் மேலான வணக்கத்தை மனச் சாந்தியுடன் நிறைவேற்றுதல் சாலும். இவ்வாறே மனச் சாந்தியுடன் நோன்பு நோற்க வேண்டுமாயின், சிறிது செல்வம் இருந்தே தீரவேண்டும். ஜகாத்து ஹஜ்ஜு முதலிய கடமைகளை நிறைவேற்ற எண்ணங் கொள்ளுவ மாயின், தனவந்தர்களாயில்லாமல் அது முடியாது.
எனவே, அன்புள்ள நேயர்காள்! நீங்கள் அல்லாஹ்வுக்காகப் படைக்கப்பட்டிருக்கின்றீர்கள். ஆனால், இவ்வுலகின்கண் காணப்படும் வஸ்துக்களெல்லாம் நுங்களின் சுகத்துக்காகவும் ஆரோக்கியத்துக்காகவுமே சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன வென அல்லாஹ் திருவுளமாயுள்ளான். ஆதலின், நீங்கள் உண்மையிலேயே ஆண்டவனுடைய அடியார்களாய் நின்று, அவனால் கட்டளையிடப்பட்ட வணக்கக் கிரியைகளைச் செவ்வனே செய்ய முற்படுவீர்களாக. ஆனால் இவ்வுலக க்ஷேமலாபங்களையும் இங்கு காணப்படும் சுக செளகரியங்களையும் நுங்கள் கைவசமிருந்து தவறவிட்டுவிடுவதும் கூடாது. இவ்வுலக சந்தோஷமான சுகபோகங்களை அடைய விரும்புவீர்களாயின், நீங்கள் அதற்குத்தக்க பிரயாசையும் கஷ்டமும் எடுத்தே தீரவேண்டும். ஆனால், ஒரு சிலர் இவ்வுலக சம்பந்தமான சுகபோகங்களையே விட்டொழித்தல் வேண்டுமெனக் கூறுவர். எனினும், அதன் உண்மை பொருளென்னவெனின், முஸ்லிம்களாகிய நீங்கள் இந்துக்களுள் காணப்படும் சன்னியாசிகளே போல் பணங்காசுகளான செல்வங்களைக் கண்டவுடன் இவற்றின்மீது வெறுப்புக்கொண்டு வெறுத்துத் தள்ளாது, இவற்றைப் பெற்றுக் கொள்ளுங்கள்; ஆனால், அதன் காரணமாய் நீங்கள் ஆண்டவனின் நல்லடியார்களாய் நின்றிலங்குவதை விடுத்து இவ்வுலக சுகபோகத்துக்கே முற்றுங் கட்டுப்பட்ட அடிமைகளாய்ப் போய்விடாதீர்கள், என்பதே. இதுதான் முஸ்லிம் அறிஞர்கள் கூறுவதன் தாத்பரியமாகும். இதனால்தான் நமதாண்டவனும், “நுங்களின் வீடுவாயில்கள், பெண்ஜாதி பிள்ளைகள், ஐசுவரியங்கள்,……. முதலிய வஸ்துக்களைவிட அல்லாஹ்வின் மீதும், அவனது ரஸூலின்மீதும் அதிகமான அன்பும் நன்னம்பிக்கையும் கொள்ளல் வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் உண்மையான மூஃமின்களாயிருத்தல் முடியு” மென்று தனது திருமறையாம் எமது குர்ஆன் ஷரீபில் திருவுளமாகியுள்ளான்.
எனவே, இனியேனும் முஸ்லிம் சோதரர்களாய நீங்கள் சிறிது ஆழ்ந்து கவனத்தைச் செலுத்தி, வியாபாரம் என்னும் நற்றொழிலை மேற்கொள்ள முற்றும் முயற்சியெடுப்பீர்களாக. ஜுமுஆத் தொழுகைக்குச் செல்லும்போது மட்டும் உங்கள் வர்த்தகங்களை நிறுத்தி வையுங்கள்; தொழுகை முடிந்தபின் மீண்டும் வந்து உங்கள் வர்த்தகங்களைத் தொடர்ந்து நடத்துங்கள். தேவன் ஓய்வெடுத்துக் கொண்ட நாளான ஞாயிறன்று எவரும் எந்தத் தொழிலையும், வர்த்தகத்தையும் செய்யக் கூடாதென்று தவறாய்க் கிறிஸ்தவர்கள் போதிப்பதே போன்று, முஸ்லிம்களை வெள்ளிக்கிழமையன்று பூரண ஓய்வெடுத்துக் கொள்ளும்படி இஸ்லாம் போதிக்கவில்லை. எனவே, பிரதி வெள்ளிக்கிழமையும் பாங்கு கூப்பிடப்பட்டதிலிருந்து தொழுகை முடிகிற மட்டுமே வர்த்தகத்தை நிறுத்தி வைப்பதே நம் மீது விதியாக்கப்பட்டுள்ளது. ஆனால், சமீப காலத்தில் அரசாங்கம் அமலுக்குக் கொண்டு வந்த ஷாப்புச் சட்டம் வற்புறுத்துவதற்கிணங்க, வெள்ளியன்று (அல்லது வேறு நாளில்) முழு நாளும் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். மற்ற நாட்களில் நம் வர்த்தகத்தை நாம் நல்லவிதமாய் நடத்தி முன்னுக்கு கொண்டு வருவதற்கான நல்லருளை அண்டவன் எனக்கும் உங்களுக்கும் அளித்தருள்வானாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَِ فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَِ وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا ۚ قُلْ مَا عِنْدَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ ۚ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَِ
بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ
Image courtesy: names.org
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License