துல்ஹஜ் மாத 3–ஆவது குத்பா

by பா. தாவூத்ஷா

اَلْحَمْدُ لله الَّذِي خَلَقَ السَّمٰوٰتِ وَ الْأَرْضَ ذىِ الْملْكِ وَالْمَلَكُوْتِ وَالْعِزَّةِ وَالْجَبَرُوْتِ وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِهِ وَ صَحْبِهِ اَجْمَعِيْنَ اَمَّا بَعْدُ

அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்கவேண்டுமென்பதை எனக்கும் சொல்லிக் கொள்ளுகின்றேன்.

நிச்சயமாக உங்களுள்ளே அல்லாஹ்வினிடத்து மேலானவர்கள் (ஆண்டவனுக்கு) அஞ்சி நடப்பவர்களே” – (49:13)

அன்புள்ள சோதரர்காள்! ஈதுல் அல்ஹாவென்னும் இம்மாத ஹஜ்ஜுப் பெருநாள் ஒரு சர்வ சாதாரண நாளென்றெண்ணி விடாதீர்கள். உலக சரித்திரத்திலேயே நிகரற்ற விதமாய் நின்றிலங்கும் ஒரு குர்பானீயின் விஷயத்தை இது விளக்கிக் காட்டுகின்றது. இப்ராஹீம் (அலை) அவர்களின் இறுதிக் காலத்தின்போது பிறந்த ஒரு குழந்தையான ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்கள்மீது அளவுகடந்த பிரியங் கொண்டிருந்தார்கள். அன்றியும் அவர்கள் வாழ்க்கையே ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்கள் மீதேதான் சார்ந்திருந்த தென்பது மிகையாகாது. இவ்வளவு அன்பும் ஆர்வமும் கொண்டிருந்த பிள்ளையின் பிரியத்தைக் காட்டினும் ஆண்டவனது பொருத்தத்தை யடைவதே மேலெனக் கண்ட ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்களுடைய பிள்ளையான ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்களது கழுத்தில் கத்தியை வைக்கத் துணிந்தனர். இக்காரியத்தின் மூல்யமாய் ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் உலக மக்களக்குக் காட்டிச் சென்றது என்னவெனின், இவ்வுலகின்கண் காணப்படும் சகல வஸ்துக்களின் மீதிருக்கும் அன்பைக் காட்டினும் ஆண்டவன்மீதே அளவு கடந்த விதமாய்ப் பிரியங் கொள்ள வேண்டுமென்பதே யாம்.

இவ்வாறு இப்ராஹீம் (அலை) அவர்களே போன்ற மேலான ஸ்தானத்தை நாம் அடைந்து எக்காலமும் மெய்ஞ்ஞானம் பூண்டு ஏகாக்கிர சித்தத்திலாழ்ந்திருக்க முடியாமற் போயினும் வருஷத்துக் கொரு முறையேனும் இவ்வாறான ஆனந்தத்தில் ஆழ்ந்திருப்போமாயின், நிச்சயமாய் இப்ராஹீம் (அலை) அவர்களுக்குண்டான உள்ளக் கிளர்ச்சியில் ஒரு சிறிதேனும் நாம் அடைந்து ஆண்டவன் பாதையில் அவன் பொருத்தத்தைப் பெறவேண்டு மென்றெண்ணி உண்மையான குர்பானீயின் கருத்தை நாமும் ஒரு சிறிது நிறைவேற்ற முற்படலாமென்பது திண்ணம்.

தற்சமயம் நம் முஸ்லிம் நேயர்கள் செய்ய வேண்டியதும் இதுவே : ஆண்டவன் பாதையில் அளவிறந்த உலக ஆசைகளைப் பலியிடுதல் வேண்டும். அன்றியும் ஐசுவரியங்களையும் அப்படியே இஸ்லாத்தின் மேன்மைக்காகக் குர்பானீ செய்ய வேண்டும். ஆனால், நம் முஸ்லிம் நேயர்களின் நடக்கையைச் சிறிதும் கவனிப்பீர்களாக: தங்களுடைய பெண், அல்லது ஆண்களுக்கு விவாகம் செய்ய வேண்டுமாயின் வீணான விதமாய்ப் பணத்தை அள்ளியிறைக்கின்றனர். போதிய தொகை தங்கள் வசம் இல்லாமற் போய்விடின், மற்றவர்களிடம் கடன் வாங்குகின்றார்கள். உண்பதிலும் குடிப்பதிலும் உலக அலங்கார ஆடைகளைத் தயாரிப்பதிலும் வீணான வேடிக்கை விளையாட்டுக்களிலும் சொத்துக்களை வீண்விரயம் பண்ணுகின்றனர். இப்படிப்பட்ட இவர்களைக் கண்டு, “ஆண்டவன் மார்க்கத்திற்காக நுங்கள் முதல்களில் சிறிதைக் குர்பானீ செய்யுங்களே,” என்று சொல்லிவிடுவோமாயின், உடனே கையை முடக்கி மூடிக்கொள்கின்றனர்.

“என்னிடம் பணமென்பதே யில்லாது பெருங் கஷ்டத்தில் மூழ்கியிருக்கின்றேன்; நிலமோ விளையவில்லை; வியாபாரத்திலோ பெருநஷ்டம்.” என்று கூறுகின்றனர். அதுசமயம் தான் இவர்கள் யாருக்குக் கடன் கொடுக்க வேண்டுமென்பதை யெல்லாம் நினைத்துப் பார்க்கின்றனர். “ஏராளமாய் நான் கடன் கொடுக்கவேண்டி யிருக்கின்றதே!” எனக் கூறுகின்றனர்.

இந்தக் கடன் இன்னவர்களுக் கெப்படி உண்டாயிற்றென்பதைக் கவனிக்கப் புகுவோமாயின், ஆண்டவனும், அவனுடைய ரஸூலும் சொல்லாத, சில ‘கன்னாஸ்’களின் கலைப்புக்களுக் கிணங்கி, அவ்விருவர்களுக்கு மெதிராய் வீணான சடங்குகளிலும் அனாசார அக்கிரமங்களிலுமே தங்கள் பணங்களை அள்ளியிறைத்து இவ்வாறான கடன்காரராய்க் காணப்படுவார். ஆனால், அல்லாஹ்வுக்குச் சிறிது கடனாய்க் கொடுக்கக் கூசுகின்றனர். இடுவதோ பிக்ஷை; பெறுவதோ மோக்ஷம். “ஆண்டவனுக்கு” என்ற வார்த்தை இவர்களின் செவிகளில் விழுந்து விட்டால், இவர்களுடைய எல்லாக் கஷ்டங்களும் அதுசமயம் ஞாபகத்துக்கு வந்துவிடும்.

அன்றியும், தங்கள் சமூகத்தவர்கள் முதன்மை பெற்றவர்களாயிருக்கும் காரியத்தில் தங்களுடைய கரங்களை மூடிக்கொண்டு தம்வயம் ஒன்றுமில்லையென்று நடிக்கும் விஷயத்தில் நம் சோதரர்களான முஸ்லிம்களே முதன்மையான ஸ்தானம் வகிப்பவர்களா யிருக்கின்றனர். இந்துக்களோ, தங்கள் ஜாதியார் முன்னேற வேண்டுமென்ற நோக்கங் கொண்டு செலவு செய்யும் விஷயத்தில் முழுப் பிரயாசையும் கைக்கொண்டு முன்னணியில் நிற்கின்றனர். கிறிஸ்தவர்களோ, தங்கள் திரவியங்களை இதுவிஷயத்தில் திரவியமென் றெண்ணாது தண்ணீரெனக் கருதியே தளரா ஊக்கத்துடன் தாராளமாக அள்ளிவீசுகின்றனர். இக்காரணம் பற்றியேதான் கிறிஸ்துவம் பிரசார சபைகள் உலகின் எல்லா மூலை முடுக்குக்களிலும் ஆழமாய் வேரூன்றப் பட்டிருக்கின்றன. ஆனால், ‘முஸ்லிம்களாகிய நம் சோதரர்களுக்கு மாத்திரம் ஏனோ இம்மாதிரியான உணர்ச்சி உண்டாகாம லிருக்கின்றது?’ என்பதை நினைக்கும் போதுதான் மிக்க வருந்தவேண்டி யிருக்கின்றது.

இவர்களுக்கு, கலியாணச் சடங்குகள் செய்யும் போதும் பெண்பரியம் போடும்போதும் கத்னா வென்னும் சுன்னத் கலியாணம் செய்யும்போதும் காது குத்தும்போதும் வேறு பல வீணான கூண்டு கொடியேற்றம் முதலிய அனாசார பழக்க வழக்கங்களைச் செய்யும்போதும் இந்தக் கஷ்டமும் லோபித்தனமும் ஈயாத்தன்மையும் கடன்களும் எங்குப்போய் மறைந்து விடுகின்றன யென்பதுதான் விளங்கவில்லை. இதிலிருந்தே இவர்கள் உண்மையில் ஆண்டவன்மீதும் ரஸூல் (ஸல்) அவர்கள்மீதும் கொண்டுள்ள ஈமான் என்னும் உறுதி எவ்வளவு தூரம் உண்மையானதென்பதை நீங்களே நன்குணர்ந்து கொள்ளலாம்.

முஸ்லிம்களுக்கு ஆண்டவனா லனுப்பப்பட்ட உயரிய திரு வேதமாகிய குர்ஆன் ஷரீபின்படி நீங்கள் நடந்து, அதற்காக ஆண்டவன் பாதையில் ஒவ்வொருவரும் ஒரு சிறிய தொகையைச் செலவழிப்பதென்று கங்கணங் கட்டிக் கொள்வீர்களாயின், நிச்சயமாய் ஏனைச் சமயத்தவர்களும், அன்னவர்க்குரிய வேதங்களும் சூரியனைக்கண்ட பனியேபோல் முன்னரே பறந்து போயிருக்குமென்பது திண்ணம். இதுகாலை, வாளாலன்று, பேனா முனையைக் கொண்டுதான் “பீஸபீல்” செய்ய வேண்டும்; செய்ய முடியும். ஆனால், சகோதரர்களாகிய நீங்கள் இவ்வாறு நடந்துசெல்ல முற்படாமலும் பிறரை நடந்து செல்லும்படி தூண்டாமலும் இருப்பதனால்தான் அயல்மார்க்கத்தவர்கள் நம்மை ஏளனம் பண்ணிக்கொண்டும் நம் திருநபியவர்களை வாயில் வந்தவாறெல்லாம் வைது கொண்டும், வரைந்து கொண்டும் நம்மழகிய திருமறையைப் பரிகசித்துக்கொண்டும் வருகின்றனர்.

சோதரர்காள்! இனியேனும் விழித்துக் கொள்ள மாட்டீர்களா? ஆண்டவனுக்காக ஒரு சிறிய வஸ்துவையேனும் குர்பானீ செய்ய முன் வர மாட்டீர்களா?

மெய்யன்பீர்! இதுசமயம் நடந்துகொண்டுவரும் இஸ்லாமிய பிரசாரமே போதுமானது, ஆண்டவனுக்காக நாமொன்றும் குர்பானீ செய்யவேண்டிய அவசியமில்லை, என்று எண்ணிவிடாதீர்கள். அயல் மதஸ்தர்கள் செய்துகொண்டுவரும் குர்பானீகளைக் காணுங்கால், நாமொன்றும் செய்யவில்லை யென்றேதான் சொல்ல வேண்டும். மெய்யாகவே நம் முஸ்லிம் சோதரர்களுக்குள் குர்பானீ செய்யும் இவ்வுணர்ச்சியை உண்டுபண்ணி விடுவோமாயின், இஃது எங்குப்போய் முடிவடையும்? எவ்வாறான நிலைமையில் வந்து சேரும்? இதைத் தக்கமுறையில் யாரே நடாத்திச் செல்வார்? என்னும் விஷயத்தை நாமொன்றும் கவனிக்க வேண்டுவதின்று. இவ்வாறாய துறையில் முஸ்லிம்கள் குர்பானீ செய்ய முனைந்து விடுவார்களாயின், ஆண்டவன் இதை எம் மார்க்கத்தாலேனும் மேன்மேலும் முன்னுக்குக் கொண்டு வருவானென்பது திண்ணம்.

ஆதியில் இப்ராஹீம் (அலை) அவர்கள் மிக உறுதியாய் ஸ்திரப்படுத்திச் சென்ற தௌஹீத் என்னும் ஏகதெய்வக் கொள்கையைப் பரப்புவதற்காகவும் எம்பிரான் (ஸல்) அவர்களின் உண்மையான மாஹாத்மியத்தை வெளிப்படுத்துவதற்காகவும் தீவிரமான குர்பானீயையே நம் முஸ்லிம்கள் செய்ய வேண்டியவர்களா யிருக்கின்றனர். இன்னவர்களுக்கு இஸ்லாத்தில் உண்மையான பற்றுதல் உண்டாய்விடுமாயின், தங்கள் மார்க்க ஞானங்களை இவ்வகிலத்தோர் கண்டு களிப்புற வேண்டுவது அத்தியாவசியமென்பதை உணர்ந்து. இவர்கள் ஐசுவரியங்களெல்லாம், இல்லை, இன்வரின் ஆன்மாக்களெல்லாமும் இதில் மடிந்து போயினும், அஃதொரு பெரிய பிரமாதமான காரியமென் றெண்ண மாட்டார்கள்.

நண்பீர்! எம்பிரான் (ஸல்) அவர்களின் பாதத்தின் கீழ் என்ன மடிந்து கிடந்தது? இவ்வாறான குர்பானீ செய்தவர்கள் எவர்? என்பதை நாம் நன்கு கவனித்தல் வேண்டும். இதுதான் உண்மையில் ஈமான் கொண்ட சஹாபாக்களின் குர்பானீயாகும். இதனால் நாம் அநேகம் படிப்பினைகளைப் படித்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. அவர்கள் தங்களுக்குரிய சிறிய வஸ்துமுதல் விலைமதிக்க முடியாத அப்படிப்பட்ட மாபெரும் பொருள்கள்வரை இஸ்லாத்திற்காகக் குர்பானீ செய்ய ஒரு சிறிதும் பின்வாங்கினார்க ளில்லை. அவர்களது நிலைமையைக் கவனிக்குமிடத்து, சிறிய சிறிய வேலைகள் முதல் மாபெரும் உத்தியோகங்கள் வரை கைக்கொண் டிருந்தார்கள். சிறிய சிப்பாய் முதல் பெரும் பெரும் கர்னல்களாகவும் ஜெனரல்களாகவும் கவர்னர்களாகவும் விளங்கி உலகத்தையே ஆட்டிவைக்கும் லௌகிக மன்பதைகளே போல் நின்றிலங்கினார்கள். இவ்வாறே உற்றார் உறவினரின் பந்துத்வத்தைப் பரிபூரணமாய்ப் பூண்டிருந்தார்கள். இப்படியே ஐசுவரியங்களைச் சேர்க்கும் விஷயத்திலும் நிகரற்றவராய் நின்றனர். அதை இணையில்லா வண்ணம் பாதுகாத்தும் வந்தார்கள்.

இவ்வண்ணம் மும்முரமாய் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த இவர்கள், ஆண்டவனது உண்மையான பாதையிலே வேலை செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டு விடுமாயின், தங்கள் தேசத்தை தேசமென்று எண்ணினார்களில்லை. தங்களுடைய உற்றார் உறவினராய சொந்தக்காரர் முதலியவர்களை ஒருசிறிதும் பொருட்படுத்தினார்க ளில்லை. தங்களுடைய முதல்களென்னும் சொத்து சுதந்திரங்களை மண்ணாய் எண்ணிக் கண்ணை மூடிக்கொண்டு வாரியிறைக்கப் பின்வாங்கினார்க ளில்லை. எனவே, அவர்கள் ஆண்டவன் பாதையில் எதையேனும் செய்ய வேண்டுமெனின், அதுவிஷயத்தில் அளவுகடந்த பித்துக் கொண்டவர்களே போல் துடிதுடித்துக்கொண்டிருந்தனர். இவையல்லவோ இஸ்லாத்தின் இணையில்லாப் பிரகாசத்தை யடைந்த ஹிருதயங்கள்.

எம்பெருமான் (ஸல்) அவர்கள் காலத்தில் மட்டுமேதான் அவை வேலை செய்து கொண்டிருந்தனவென் றெண்ணிவிட வேண்டா. ஆனால், நாயகம் (ஸல்) அவர்கள் மண்ணிடையினின்று மறைந்து விட்டதன் பின்னும் இவ்வுணரச்சியானது தங்களுக்குள் வேலை செய்துகொண்டிருந்ததுமன்றி, ஏனைத் தேசத்தவர்களும் தங்கள் இன்பத்தில் கலந்து களிப்புற வேண்டுமென்று அப்படியே இவ்வகிலத்தோர்க்கும் காட்டிச் சென்றது. இஃதோர் சரித்திரி முணர்ந்த உண்மை விஷயமாகும்.

எனவே, ஏ எமதாண்டவனே! உனது பாதையில் குர்பானீ செய்து வழிகாட்டிச் சென்ற முன்னவர்களின் மார்க்கத்திலேயே முஸ்லிம் மக்களாகிய எங்களை நடாத்தி வைப்பாயாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

لَن تَنَالُواْ الْبِرَّ حَتَّى تُنفِقُواْ مِمَّا تُحِبُّونَ

بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ

Image courtesy: urdumania.net

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<குத்பா பிரசங்கம் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment