ஷஃபான் மாத 2-ஆவது குத்பா

اَلْحَمْدُ للهِ الَّذِي خَلَقَ السَّمٰوٰتِ وَ الْأَرْضَ وَ بَعَثَ النَّبِيِّيْنَ عَلَى الْأَرْضِ وَ نُصَلِّيْ عَلَى النَّبِيِّيْنَ الْمُرْسَلِيْنَ وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِهِ وَ صَحْبِهِ اَجْمَعِيْنَ اَمَّا بَعْدُ

அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்பதை எனக்கும் சொல்லிக் கொள்ளுகின்றேன்.

தனித்தவனும், இணை துணையற்றவனும், மகா பரிபூரணமானவனுமாகிய அல்லாஹுத் தஆலாவை நாம் அனவரதமும் புகழ்ந்து ஸ்தோத்திரிப்போமாக. அவனது ஹபீபும், சத்தியத் திருத்தூதரும், உலக தயாளருமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் போற்றி ஆசீர்வதிப்போமாக. அதன் பின்பு முஸ்லிம் சகோதரர்காள்! அறிந்து கொள்வீர்களாக :  

நமக்கு அல்லாஹ்வினிடத்திலிருந்து இவ் வழகிய சன்மார்க்கத்தைக் கொணர்ந்து கொடுத்த நபிகள் பெருமானவர்களின் (ஸல்) உம்மத்துகளாகிய நாம் ஏக பரம்பொருளாகிய அல்லாஹுத் தஆலாவை அதிகம் பஜித்து ஜபித்து வணங்குவதற்கென்று பிரத்தியேகமாக சில காலங்களை அவர்கள் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார்கள். எனவே, இம்மாதத்தில் அதிகமாய் ஆண்டவனை வணங்குவதால் நாம் சகல பாபத்தினின்றும் தவிர்ந்து கொண்டவர்களாவோம்.

ரஜப் மாதம் தம்முடைய உம்மத்துகளுக்குச் சொந்தமாய் வணக்கத்துக்குரிய மாதமென்றும், ஷஃபான் மாதம் தங்களுக்குத் திருப்தியான மாதமென்றும், ரமலான் மாதம் ஆண்டவனால் அதிகம் அடியவர்கள் அவனை வணங்க வேண்டியதற்காக நிறுவப்பட்ட மாதமென்றும் கூறுவார்கள். எனவே, இந்த மூன்று மாதத்திலும் சாதாரணமாய்ப் புரிவதைக் காட்டினும் அபரிமிதமான வணக்கங்களை முஸ்லிம்களெல்லாரும் புரிதல் வேண்டும். பொதுவாய்க் கூறவேண்டுமாயின், அல்லாஹ்வுக்கு அஞ்சி வணங்குவதில் எல்லாக் காலமும் ஒரே விதமாகத்தான் இருக்கிறது. ஆனால், இக்குறிப்பிட்ட காலத்தில் அதிகமான வணக்கம் புரிவதனால் நன்மையே யல்லாமல் தீமையொன்றுமில்லை.

மேலும், மரணம் என்பது இன்ன காலத்தில்தான் வந்து நம்மைப் பற்றிக்கொள்ளுமென்று சொல்ல முடியாதாகையால், இவ்வாண்டில் இப்போது வாழ்ந்திருக்கும் நாம் அடுத்த ஆண்டில் ஜீவித்திருப்போமென்பதற்குச் சற்றும் உறுதிப்பாடில்லை. சென்ற ஆண்டில் நம்முடனிருந்தவர்களில் எத்தனை நண்பர்கள் இவ்வாண்டில் இல்லையென்பதைக் கவனித்தீர்களா? எனவே, நாம் இப்போது ஆண்டவனை அதிகம் ஸ்தோத்திரம் செய்து அதிகமான நன்மையையும் ஆண்டவனது ரஹ்மத்தையும் சேமித்துக்கொள்வது மிகவும் நல்லதேயாகும்.

ஆனால், ஒருசில முஸ்லிம் பாமரர்கள் பராத் இரவில் சில அனாசாரச் செயல்களையும் செய்யத் துணிந்து விடுகிறார்கள். ஹிந்து மதத்தார்களும் அவரைப் போன்றவர்களும் நவராத்திரியையும் சிவராத்திரியையும் ஏகாதசியையும் கிருத்திகையையும் கொண்டாடுவான் வேண்டி அன்றிரவெல்லாம் சீனாவெடி முதலிய வாண வேடிக்கைகளைச் செய்து கொண்டும் கூத்துக் கேளிக்கைகளில் காலத்தை வீணே போக்கிக் கொண்டும் இருப்பதேபோல், நம்முள் சில முஸ்லிம் அவிவேகிகளும் அன்றிரவை இத்தகைய மௌட்டியக் காரியங்களில் கழிக்கின்றனர்.  இவைபோன்ற செய்கைகள் நம் மார்க்கத்துக்கு முற்றும் முரணான வென்பதை உணர்வீர்களாக.

மற்றுஞ் சில முஸ்லிம்கள் யாதோர் அவசியமுமின்றிப் பெருங் கூட்டங்கூட்டித் தீபாலாங்காரத்தோடு நகர்களின் மூலை முடுக்குக்களிலெ்லாம் இருக்கும் சவக் குழிகளுக்குச் சென்று கப்ர் பரஸ்த் செய்வதேபோல் அங்குக் குர்ஆனை ஓதி, வேறு பல வின்னியாச கருமங்களையெல்லாம் புரிகின்றனர். குர்ஆனை ஓதுவதும் இறந்தவர்களுக்கு ஜியாரத் செய்வதும் கூடாவென்று நாம் கூறவில்லை. இதையெல்லாம் நம் பள்ளிவாசல்களிலிருந்தபடியே செம்மையாய்ச் செய்துகொள்ளலாம். விளக்குக்கும் ஊத்பத்திகளுக்கும் சாம்பிராணிக்கும் பணத்தை வீண் செலவு செய்யவேண்டிய தேவையே ஏற்படாது.

எனவே, எமதரும் முஸ்லிம்காள்! இம் மாதத்தை வணக்கத்தாலும், பகலில் நஃபில் நோன்பு நோற்பதாலும் சிறப்பித்து வைப்பீர்களாக. குர்ஆனை ஓதுங்கள்; நபில் தொழுகையை நிறைவேற்றுங்கள்; ஆண்டவனிடம் உங்கள் ஆத்ம பரிசுத்தத்துக்காகவும் பாரமாத்திக நலத்துக்காகவும் உங்கள் இஸ்லாம் மதத்தின் நிரந்தர வாழ்வுக்காகவம் இஷாஅத்துக்காகவும் எல்லா மதங்களைக் காட்டினும் நுங்கள் “தீனுல் இஸ்லாம்” சிறந்தோங்குவதற்காகவும் அதிகம் வேண்டுதல் செய்து பிரார்த்தனை புரியுங்கள்.

இனிமேல் தொழுகையை எக்காலமும், எச் சந்தர்ப்பத்திலும் விடாமல் தொழுகிறோமென்றும் இனியொரு காலமும் எத்தகைய பாவத் தொழிலிலும் பிரவர்த்திப்பதில்லை யென்றும் பிரதிக்ஞை செய்து, பரிபூரண மனத்துடனே தௌபா செய்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் உண்மைப் பக்தர்களாகவும், ரஸூலே கரீம் (ஸல்) அவர்களின் முன்மாதிரியைச் செவ்வனே பின்பற்றும் சத்திய சிஷ்யர்களாகவும் ஆய்விடக்கடவீர்கள்.

மேலும் நபிகள் நாயகம் கூறியுள்ள வண்ணம், நேயர்களே! ஐந்து விஷயங்களை மற்றை ஐந்து விஷயங்களைக் காட்டினும் நீங்கள் அதிக மேன்மையாகப் பாவித்துக் கொள்ளுங்கள் :

  1. வாலிபப் பருவத்தை விருத்தாப்பியத்தைவிட மேன்மையாகவும்,
  2. சரீராரோக்கியத்தைப் பிணிவாய்ப்படுவதைவிட நல்லதாகவும்,
  3. சீமான்தனத்தை ஏழ்மை நிலையைவிட நல்ல சந்தர்ப்பமாகவும்,
  4. சாவகாசத்தை அவசரத்தைவிட உயரியதாகவும்,
  5. ஜீவித்திருப்பதை மரித்துப் போவதைவிட மிக்க சிலாக்கியமானதாகவும் பாவித்துக்கொண்டு,

வணக்கம், தருமம், சற்கருமம் முதலியவைகளை அதிகம் புரிந்து, ஆண்டவனது திருவருளைப் பெற முயலுங்கள். மரணம் வருமுன்னே பரலோக சுகத்துக்குரிய நற்சாதனத்தைச் சேமித்து நலனடையுங்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இக்கருமங்களை நாம் அனுஷ்டித்து வெற்றிபெறுதற்காகப் பேரருள் புரிவானாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ ۚ وَمَنْ يَفْعَلْ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَِ وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَِ وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا ۚ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَِ

بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ

Image courtesy: islam-today.co.uk

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<குத்பா பிரசங்கம் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment