துல்கஃதா மாத 3–ஆவது குத்பா

اَلْحَمْدُ لله الَّذِي خَلَقَ السَّمٰوٰتِ وَ الْأَرْضَ ذِى الْمُلْكِ وَ الْمَلَكُوْتِ وَ الْعِزَّةِ وَ الْجَبَرُوْتِ وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِهِ وَ أَصْحَابِهِ وَ سَلَّمَ اَمَّا بَعْدُ

அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்பதை எனக்கும் சொல்லிக் கொள்ளுகின்றேன்.

அன்புள்ள முஸ்லிம் நேசர்காள்! நம்மைச் சுட்டிக் காட்டி நமதாண்டவன், “மனிதர்களின் நன்மையின் பொருட்டு உண்டாக்கப்பட்ட வகுப்பார்களுள் நீங்கள் மிகவும் சிரேஷ்டமானவர்கள்,” என்று கெளரவித்தது அழைக்கின்றான். இதனால்தான் நம்மை நோக்கி அவ்வேக நாயகன், “இன்று நுங்களின் மார்க்கத்தை நிரப்பமாக்கி விட்டேன்; மேலும் என்னுடைய அருட்கொடையை உங்களுக்குச் சம்பூரணமாகச் செய்தேன்; இஸ்லாத்தையே உங்களுக்குரிய மார்க்கமாய் ஏற்றுக்கொண்டேன்,” என்றும் திருவுளம் பற்றியுள்ளான். எனவே, ஆண்டவன் கூறியவாறும் அவனுடைய திருத்தூதராய நம் நாயகம் (ஸல்) அவர்கள் உபதேசம் செய்தவாறும் அப்படியே நாம் அடியொற்றி நடக்க வேண்டும்; இல்லையேல் நடக்கப் பிரயத்தனமேனும் எடுத்தல் வேண்டும். அப்பொழுதுதான் நாம் உண்மையில் ஆண்டவனுடைய சரியான பக்தர்களெனச் சொல்லிக் கொள்ள முடியும்.

நண்பர்காள்! நாம் தற்சமயம் எத்தனையோ நூற்றுக் கணக்கான விஷயங்களில் சீர்திருத்தமடைய வேண்டியவர்களா யிருக்கின்றோம். ஆயினும், அவற்றுள் ளெல்லாம் மேலான ஒரு விஷயத்தில் முக்கியம் முன்னமேயே நம் மனத்தைத் திருப்பிச் சீர்திருத்த மடைந்திருக்கவேண்டியவர்களாய்க் காணப்படுகின்றோம். அது விஷயத்தில் நம் முஸ்லிம் நேசர்கள் ஆண்டவனது ஆணைக்கும் அவனுடைய திருத்தூதரின் உபதேசத்துக்கும் முற்றும் நேர்முரணான விதமாகவே நடந்து வருகின்றனர்:

அஃதாவது, நபிகரீம் (ஸல்) அவர்கள் முஸ்லிம் பெண்மணிகளை மிக்க அன்புடனும் அதிக கெளரவத்துடனும் கவனித்து வந்தார்கள். இவர்களின் பாத்தியதைகளென்ன வென்னும் விஷயத்தில் முற்றும் நல்ல மாதிரியிலே நடந்துகாட்டியும் சென்றார்கள். இறுதியில் தாங்கள் மரணமடைவதற்கு முன்னே செய்துவிட்டுப் போன வசிய்யத்திலுங் கூடப் பெண் பிள்ளைகளின் பாத்தியதைகளை மிக்க கவனத்துடன் கண்ணியமான முறையிலே காப்பாற்றிக் கொண்டுவர வேண்டுமென வற்புறுத்திச் சென்றிருக்கிறார்கள்.

ஆனால், இதுசமயம் இந்தியாவிலுண்டான முஸ்லிம் பெண்மணிகளின் நிலைமையைக் கவனிக்குமிடத்து, அது மஹா மஹா மோசமாயே காணப்பட்டு வருகின்றது. என்னெனின், முஸ்லிம் ஆண்பிள்ளைகளான நண்பர்கள் சிலர் இந் நங்கையரை மிருகங்களைக் காட்டினும் கேவலமான முறையிலே நடாத்தி வருகின்றனர். இன்னவர்களுள் நம் மாதாக்களும் இருக்கின்றனர்; மனைவியர்களும், சகோதரிகளும், நம் பெண்மக்களும் ஆகிய சகலரும் பெண்களாகவே தாம் இருக்கின்றனர். ஆனால், நாம் நந் தாயாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளென்ன? பெண்ஜாதிமார்களை எப்படிக் கண்ணியமாய் நடத்த வேண்டும்? சகோதரிகள் பெண்மணிகள் முதலியவர்களின் பாத்தியதைகளென்ன? என்னும் இவ்விஷயங்களை உணர்ந்து, அவற்றின்படி நாம் நடந்து வருகின்றோமில்லை. ஆனால், இதற்கு நேர்முரணாய் அன்னவர்களுக்கு அநியாயத்தை அதிகம் இழைத்து வருகின்றோம். சொந்தமாய் நம் மனைவியர் விஷயத்திலோ, நாம் மிக்க கொடுமை செய்பவர்களாகவே யிருந்து வருகின்றோம். அவள் ஏதேனும் ஒரு சிறு குற்றத்தைத் தெரியாமல் செய்துவிடினும், அவள்மீது அடங்காக் கோபங் கொள்கின்றோம்; ஏசுகின்றோம்; பேசுகின்றோம்; வெறுக்கின்றோம்; துரத்துகின்றோம். உபயோகமற்ற வீண்சண்டைகள், இல்லை, பிணக்குக்களின் காரணமாய்த் தலாக்கென்னும் விவாகரத்தும் செய்து விடுகின்றோம்.

இத் தேயத்தில் சிற்சில முஸ்லிம்கள் மார்க்கச் சட்டப்படி சகோதரிக்குள்ள பெண்பாகத்தையும் கொடுப்பதில்லை. இம்மாதிரி தவறான காரியங்களினால் தீனுக்கும் துன்யாவுக்கும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் (ஸல்) ஆகாத முறைகளிலே நாம் நடந்து கொண்டு செல்வதல்லாமல், அயல் மதஸ்தர்கள் நம்மைப் பார்த்து ஏளனம் செய்யும் முறையிலேதான் நாம் ஒழுகி வருகின்றோம். இன்னம், அன்னவர்கள், “நமது குர்ஆனும் மார்க்கமும்தாம் இவ்வாறு நடந்து செல்லும்படி போதிக்கின்றன,” என்னும் பறைசாற்றுகின்றனர். உண்மையைக் கவனிக்குமிடத்து, பெண்மணிகளை எம்மாதிரியான சிறிய முறையிலும் கேவலமாகவும் அவர்களைக் கஷ்டப்படுத்தித் துன்புறுத்தியும் அவர்களிடம் அக்கிரமமாகவும் நடந்து கொள்ள வேண்டுமென்று இஸ்லாமும் குர்ஆன் ஷரீபும் எங்கும் அனுமதியளிக்கவே யில்லை. ஆனால், எமது இஸ்லாம் மதமும் குர்ஆனும், உலகத்தில் தோன்றியிருக்கும் வேறெந்த மார்க்கமும் வேதமும் அளிக்காத அத்துணைப் பெரிய தாராளத்தையும் சுதந்தரத்தையும் கண்ணியத்தையும் கெளரவத்தையுமே பெண் மகளிற்கென்று அருள் செய்திருக்கின்றது. ஆயினும், தற்காலத்தில் பெண்பிள்ளைகளுக்குப் புரிந்துவரும் கொடுமைகளெல்லாம் நீங்கள் அறியாத் தனத்தால் செய்யும் அக்கிரமங்களே யாகும். இதற்கு, விஷயத்தை உணர்ந்து கொள்ளா மாக்களான நீங்கள்தாம் ஜவாப்தாரி யாவீர்கள். இஸ்லாமும் இதன் மூலகிரந்தமாய குர்ஆனும் நீங்கள் புரியும் இவ் வக்கிரமங்களுக்கு ஒரு சிறிதும் ஜவாப்தாரியா யிருப்பது முடியவே முடியா தென்பது திண்ணம்.

அன்பீர்! நுங்கள்பால் சில தலைவர்கள் பிரசங்க மேடைமீது ஏறிவிட்டார்களாயின், சண்டப் பிரசண்டமாய் சாகோப சாகையாய் மீசை துடிக்க ஆக்ரோஷத்துடனும் மனங்கரைந்துருகும் வண்ணம் அதிக உருக்கத்துடனும் யாரும் இகழா வண்ணமும் மிக்க சாமர்த்தியத்துடனும் பிரசங்கமாரி புரிகின்றனர். அன்னவர்களின் உண்மை அந்தரங்கத்தைக் கவனிக்குமிடத்து, இப்பெண்ணென்னும் பேதையர் வர்க்கத்தின் பாத்தியதைகளை இவர்களும் விழுங்கிக் கொண்டும் மற்றவர்களும் விழுங்க வேண்டுமென்னும் பிரயத்தனம் செய்து கொண்டுமே தான் வருகின்றனர். இவ்வாறான மனிதர்களுக்கு அறிவுறுத்துவான் வேண்டியே நபி நாயகம் (ஸல்) அவர்கள் “நீங்க ளெல்லாம் மேய்ப்பவர்களாய் (போஷிப்பவர்களாய்) இருக்கின்றீர்கள். எனவே, நீங்கள் உங்கள் பிரஜைகளை (ஆடுகளை)ப் பற்றிக் கேள்வி கேட்கப்படுவீர்கள்,” என்று கூறியுள்ளார்கள். அஃதாவது, உங்களிடம் ஐக்கியமாயிருக்கும்படி செய்யப்பட்ட அவ்வஸ்துக்களை எம்முறையில், எந்த விதமாய் நடத்திக் கொண்டு வந்தீர்கள்? என்று ஆண்டவனால் இறுதிநாளின்போது நீங்கள் கேட்கப்படுவீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) திருவாய்மலர்ந்தருளிச் சென்றார்கள்.

ஆதலின், இவ் விந்தியாவில் காணப்படும் ஒவ்வோர் ஆண்மகனும் அவனவளைச் சார்ந்த பெண்களுக்கு அதிகாரியாகவே (மேய்ப்பவனாகவே) தான் காணப்படுகின்றான். எனவே, இவர்களும் தங்களிடம் பாதுகாப்புக்காகக் கொடுக்கப்பட்டிருந்த பெண் பிள்ளைகளுக்கு எவ்வளவு செளகரியம் செய்து தந்தார்கள்? எவ்வளவு கெளரவமாய் அன்னவரை நடத்திக் கொண்டு வந்தார்கள்? என்னும் விஷயத்தைப்பற்றி இறுதி நாளின் போழ்து ஆண்டவனால் கேள்வி கேட்கப்படுவார்கள்.

இதற்கேற்ப இங்குள்ள பெண்மணிகளும் ஆண் பிள்ளைகளிடம் அடக்கமாகவும் ஒடுக்கமாகவும் நடந்து கொண்டுவரல் வேண்டும். ஆடவர்களுக்குப் பெண்டிர் சோறு சமைத்துப் போடவேண்டுவது அவசியந்தான். ஆனால், இந்தப் பெண்கள் தமக்குச் சமைத்துப் போட வேண்டியது முக்கியக் கடமையானதே என்று ஆடவர் எண்ணிவிடுவது கூடாது. இவ்வாறே பெண்மணிகள் தங்கள் கணவனது கிழிந்த துணியைத் தைத்துக் கொடுக்க வேண்டும்; ஆனால், இம்மாதிரியான வேளைகளையெல்லாம் பெண்மக்கள் செய்யத்தான் வேண்டும்; இப்படிப்பட்ட பணிகளெல்லாம் செய்ய வேண்டியது அல்லாஹ்வினால் பெண்மணிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட பர்லென்னும் கடமையென எண்ணிவிடுவது கூடாது. எனவே, ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பலவிதங்களினாலும் உடுத்தாடையேபோல் உதவியாளர்களாய்த் தாம் நின்றிலங்குகின்றனர். ஆதலின், ஒருவருடைய பாத்தியதையிக் மற்றவருக்கென்ன இருக்கின்றது என்னும் விஷயத்தை இருசாரார்களும் சிறிது ஆழ்ந்து கவனிப்பார்களாயின், அப்பொழுதுதான் சதிபதிகளான இருவர்களும் ஆண்டவனது ஆணையை யொட்டி நடப்பவர்களாக ஆவது முடியும்.

பெண்டிர்மீது சில பாத்தியதைகள் புருஷருக்கிருப்பதே போல், புருஷரின்மீதும் சில பாத்தியதைகள் பெண்டிருக் குண்” டென்று ஆண்டவனே தன் திருமறையில் கூறியுள்ளான். எனவே, இப்படி நடந்தால்தான் நாம் உண்மையான முஸ்லிம்களாவோம்; அப்பொழுதுதான் நம் முஸ்லிம்களின் தீனும் துன்யாவும் இலேசாயிருக்கும்; அதுகாலையே இவர்கள் இவ்விரு விஷயங்களிலும் முன்னேற்ற மடைந்தவர்களாகவும், மேன்மையானவர்களாகவம் விளங்கி நிற்பது முடியும்.

ஆதலின், ஏ ஆண்டவனே! நம் முஸ்லிம் பெண்மணிகளைச் சமத்துவமாகவும் கெளரவமாகவும் சரிநிகர் சமானமாகவும் மிக்க ஒழுங்கான முறையில் நல்லவிதமாக முஸ்லிம் ஆடவர்கள் நடத்தும் வண்ணமும், அந் நங்கையர்க்குரிய உரிமைகளை இவர்கள் ஆளிக்கும் வண்ணமும் நேரான பாதையென்னும் சீரான ஹிதாயத்தைத் தந்தருளி எங்களையெல்லாம் நரகத்தீயின் வேதனைகளினின்று காப்பாற்றிப் பேரருள் புரிவாயாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ

بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ

Image courtesy: aboutislam.net

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<குத்பா பிரசங்கம் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment