முஹர்ரம் மாத 2-ஆவது குத்பா

by பா. தாவூத்ஷா

اَلْحَمْدُ للهِ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْأَرْضَ وَ بَعَثَ النَّبِيِّيْنَ عَلَى الْأَرْضِ وَ نُصَلِّيْ عَلَى النَّبِيِّيْنَ الْمُرْسَلِيْنَ وَ نَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلَىٰ ٰالِهِ وَ صَحْبِهِ اَجْمَعِيْنَ اَمَّا بَعْدُ

பேரன்பிற்குரிய பிரிய சோதரர்காள்! எல்லா உலகங்களையும் படைத்துக் காத்து ஆளும் ஆண்டவனை ஆதியிற் புகழ்ந்து, அவனுடைய திருத்தூதராகிய நபி முஹம்மத் (ஸல்) மீது ஆசி கூறியதன் பின்னால் அறிந்து கொள்வீர்களாக:—

அல்லாஹ்வுடைய வணக்கத்தை நான் உங்களுக்கு உபதேசம் செய்கின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டு மென்பதை எனக்கும் சொல்லிக்கொள்ளுகின்றேன்.

அன்பார்ந்த முஸ்லிம்காள்! இப்பரிசுத்த முஹர்ரம் மாதத்தில் நாம் என்னென்ன நற்கருமங்களைப் புரிதல் வேண்டும்? எப்படிப்பட்ட பெரியோர்களின் பிராணத் தியாக சம்பவங்களை நாம் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்? நாம் அதன் சம்பந்தமாய் நமது வாழ்க்கையை எவ்வாறு திருத்திக் கொள்ளுதல் வேண்டும்? நாம் எத்தகைய சமய ஊழியங்களைப் புரிதல் வேண்டும்? என்பன போன்ற விஷயங்களைச் சற்று ஓர்ந்து பார்ப்போமாக. இம்மாதம் நமது ஹிஜ்ரீயின் ஆரம்பமா யிருப்பதனால், நமது தினசரி வைதிகலெளகிக கிரியைகளை யெல்லாம் மிக்கநல்ல முறையில் திருத்திக் கொள்வோமாக. குர் ஆனில் ஆண்டவன் நமக்கிட்டுள்ள கட்டளைகளையும் , ஹதீதில் நபிகள் நாயகம் (ஸல்) நமக்கருளிய ஆக்ஞைளையும், பெரியார்களின் அரும் பெரும் போதனைகளையும், இமாம்களின் மார்க்கச் சட்டங்களையும் சிரமேற் கொண்டு இன்று முதல் ஓர் அணுவளவும் தவறவிடாது சீராக ஒழுகி வரக் கடவோமாக. நன்னம்பிக்கை, வணக்கம் விரதம் தர்மம் தியாகம் பரோபகாரம் ஜீவகாருண்யம் கருணை அன்பு அருள் பொறை போன்ற இத்தகைய நற்கருமங்களையே நாம் இனிப் புரியக் கடவோமாக. பாதகம் துன்பம் அநியாயம் மோசம் சூதாடல் வியபிசாரம் புரிதல் முதலிய கொடுங் காரியங்களை யெல்லாம் இன்றோடு வெறுத்துத் தள்ளுவோமாக. பசித்தோர்க்கு அன்னமிடுதல், தாகத்துடன் வந்தோர்க்குப் பானமளித்தல், யாசித்தோர்க்கு தர்மமீதல், துன்புற்றோர்க்கு சுகமளித்தல் போன்ற நற் கிரியைகளையும் நாம் செய்துவரக் கடவோமாக. இன்னம், இப்பரிசுத்த மாதத்தில் ஆண்டவனது ஆணைக்குக் கட்டுப்பட்டுத் தம்முடைய உடல்பொருள் ஆவியையெல்லாம் அல்லாஹ்வின் பாதையிலே அர்ப்பணம் செய்த பெரியார்களின் அருஞ்சம்பவங்களை நினைத்து நினைத்து நெக்கு நெக்கு உருகுவோமாக!

ஹஹ்ரத் அலீ (ரலி) அவர்களின் மரணத்துக்குப் பின்னால் அவர்களுடைய மூத்தபுத்திரரான ஹஹ்ரத் இமாம் ஹஸன் (ரலி) கலீபா ஸ்தானத்தில் நியமிக்கப்பட்டு சிலகாலம் ஆட்சி புரிந்து வந்தார். பன்னெடுங்கால முன்னிருந்தே பனூஉமையாக்கள் இந்த கலீபா ஸ்தானத்தி லுள்ளோர்க்கும் கொடிய விரோதிகளா யிருந்துவந்தனர். இத்தகையோரின் தீத்தொழில் நாட்டில் பரவாதிருத்தற்காக முஆவியாவின் ஜீவியகால மட்டும் அவரே கிலாபத் ஸ்தானத்தை வகித்துக் கொண்டு, அவரது காலத்துக்குப் பின்னே அந்த ஸ்தானத்தை இமாம் ஹுஸைனுக்கு (ரலி) அளித்துவிட வேண்டுமென்ற வாக்குறுதியின்மேல் ஹஜ்ரத் இமாம் ஹஸனும் (ரலி) முஆவியாவும் இணக்கத்தை நாடி ஸமரஸ உடன்படிக்கை செய்துகொண்டார்கள். இமாம் ஹஸன் (ரலி) பனூ உமையாக்களுடன் வீணாண மனஸ்தாபத்தை உண்டுபண்ணிக் கொள்ளக்கூடாதென்றே இவ்வாறு விட்டு கொடுத்தார்கள். ஆனால், எப்போதும் தீய எண்ணத்தையே மனத்துள் கொண்டு நின்ற முஆவியாக்கள் (பனூ உமையாக்கள்) கிலாபத்துத் தங்கள் சுவாதீனத்தில் வந்தவுடனே தங்கள் தலைநகரைத் திமஷ்கிலேயே ஊர்ஜிதம் செய்து கொண்டார்கள். எத்தகைய பாதகத்துக்கும் அஞ்சாத இந்த மூர்க்கர்கள் தாங்கள் செய்து கொடுத்த உடன்படிக்கைக்கு முற்றும் மாற்றமாகக் காரியம் செய்ய ஆரம்பித்தனர். முஆவியாவின் காலத்திற்குப் பின்பு கிலாபத்தை இமாம் ஹுஸைன் (ரலி) தான் அடைய வேண்டுமென்று அவ் வுடன்படிக்கையில் கண்டிருக்க, அதற்கு முற்றிலும் மாற்றமாய், கலீபா ஸ்தானத்தை முஆவியாவின் மகன் எஜீத் என்னும் கொடும் பாதகனுக்கு அளிக்கப்பட்டுப் போயிற்று. இந்த எஜீதின் அக்கிரமத்திற்கு அஞ்சி அநேகர் அவனுக்குக் கீழ்படிந்து, அவனுடன் அடிமைச் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டனர். இந்த அக்கிரமத்திற்கு ஹஜ்ரத் அலீ (ரலி) யின் இளைய புத்திரரான இமாம் ஹுஸைனும் (ரலி) அப்துல்லா பின் உமரும் (ரலி) அப்துல்லா பின் ஜுபைரும் (ரலி) அபூபக்ர் மகன் அப்துர் ரஹ்மானும் (ரலி) ஆகிய நல்லோர்கள் உடன்படவில்லை. எனவே, எஜீது இவர்கள் மீதெல்லாம் வன்மங் கொண்டான்; இவன் பரிசுத்த தீனுல் இஸ்லாத்தையும், குர்ஆனையும் அவதூறு செய்ய ஆரம்பித்தான். மதப்பெரியார், கற்றறிந்தோர் போன்றவர்களை யெல்லாம் கழுதைகள் மீதேற்றி அவமானப் படுத்தினான். அவனுக்கு இணங்கி நடவாத முஸ்லிம் குடிமக்களை யெல்லாம் அதிகம் துன்புறுத்தினான். ஆனால், நம்முடைய இமாம் ஹுஸைன் (ரலி) மிகுந்த இறையடியாராகவும் மதத்தில் அதிகம் ஆர்வமுடையவராயும் தயாள சித்தமுடையவராயும் இருந்து வந்தார். எஜீதுக்கோ, இமாம் ஹுஸைன் (ரலி) மீது மிக்க மனப் புழுக்கமும், பொறாமையும் வளர்ந்து வந்தன. இறுதியில் இவரைத் தொலைத்து விட்டால்தான் தனக்கு அனுகூலமுண்டெனத் தீய நாட்டமும் கொண்டு விட்டான். கூபாவாசிகளுக் கெல்லாம் இலஞ்சத்தைக் கொடுத்து, இமாம் ஹுஸைனை (ரலி) எந்த வழியாலேனும் தொலைத்துவிட வேண்டு மென்று பாதகச் சூழ்ச்சி செய்யத் தலைப்பட்டான். கூபாவாசிகளெல்லாரும் இமாம் ஹுஸைனிடம் (ரலி) சென்று உதவி யளிப்பதாகக் கூறித் தங்களையும் சிப்பாஹீகளாகச் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் விண்ணப்பித்து, தங்களூருக்கு வந்துவிட்டால் மெத்த நலமென்று பலப்பல நயவஞ்சக தனத்தை யெல்லாம் செய்து காட்டினார்கள்; அவ் இராக் தேசத்தினருக்கு உண்மையிலே உதவிபுரிய எண்ணமில்லை; எல்லாம் நயவஞ்சகச் சூழ்ச்சிகளே. பிறகு இமாம் ஹுஸைன் (ரலி) தமக்குச் சொந்தமான குதிரைப் படையையும், 40 காலாட் படைகளையும் ஆயத்தப்படுத்திக்கொண்டு, கூபாவுக்கு புறப்பட்டனர். இவர்களை யெல்லாம் சர்வ நாசப்படுத்திவிட வேண்டுமென்று எஜீது ஏராளமான முஸ்தீபுகளைத் தையார் செய்து கொண்டான். இமாம் ஹுஸைனின் (ரலி) ஆட்கள் தங்கியிருந்த ஓரிடத்தில் எஜுதின் படைக ளெல்லாம் வந்து புகுந்து தாக்கித் துன்புறுத்தி, எந்த முஸ்லிமும் தப்பிக்கொள்ள முடியா வண்ணம் முற்றுகையிட்டு விட்டார்கள். இமாம்களுடனே இருந்த தியாகி முஸ்லிம்கள் மட்டும் பின்னிடையாமல் தமது ஆவியை இஸ்லாத்திற்காக அர்ப்பணம் செய்துவிடவும் துணிந்திருந்தனர். இப்படிப்பட்டவர் 72 பேர்களே யாவர். எஜீதின் கொடும்பாதகர்களோ, ஏராளமா யிருந்தனர். ஆண்டவன்மீது உறுதி கொண்ட முஸ்லிம்களும் பின்னிடையவில்லை. இருசாரர்களுக்கும் கர்பலா என்னும் மைதானத்தில் கடும்போர் நிகழ்ந்தது; இதனால் இரத்த வெள்ளம்பெருகிற்று. இரு கூட்டத்திலும் பல சிப்பாஹீகள் சிதைவுண்டு மாண்டனர். இமாம் ஹுஸைனைச் சேர்ந்த முஸ்லிம் வீரர்களோ, பல நாட்கள் மட்டும் பட்டினி கிடந்து வாடினார்கள். அந்த யுத்தத்தின்போழ்து எறித்த கொடிய வெயிலினால் தாகித்து நாவறந்து போயினார்கள். எனவே, அவர்களுக்குத் துன்பம் சகிக்க முடியவில்லை; விரோதிகளெல்லாரும் வாடிக்கிடந்த இவ்வுத்தம முஸ்லிம்கள் மீதும் இமாம் ஹுஸைன் (ரலி) மீதும் வந்து வேகமாய்ப் பாய்ந்தனர். தாகத்தினால் வாடியவர்களின் கழுத்தையெல்லாம் துணித்தனர்; கொன்றனர்; கொலையும் சித்திரவதையும் புரிந்தனர். இமாம் ஹுஸைனின் (ரலி) திருமேனியிலெல்லாம் அம்புகளை எய்து உடலைச் சிதைத்தனர். கொடும்பாவிகள் இமாம் ஹுஸைனின் (ரலி) சிரசையும் துண்டித்தனர். நபிகள் திலகம் (ஸல்) எந்த திருவதனத்தில் முத்தம் ஈந்தார்களோ அந்த முகம் படைத்த பேரர் ஹுஸைனின் (ரலி) திருவதனத்தைக் காலால் உதைத்தனர். நபிகள் (ஸல்) திலகம் முத்தமிட்ட இவரது இதழை எஜீதென்னும் பாதகன் பிரம்பாலடித்துக் கிழித்தான். இந்த ஷுஹதாக்களுடைய சரீரங்களைத் தெருத் தெருவாக இழுத்துச் சென்றனர். இமாம் ஹுஸைனின் (ரலி) சிரசை நீண்ட சூலத்தில் குத்தி, உயரத்தூக்கி வீதிகள் தோறும் வேடிக்கையாக எடுத்துத் திரிந்தனர். என்னே எஜீத்மாக்களின் இழிதொழில்! பரிதாபம்! பரிதாபம்!!

இக் காலத்தி லுண்டான முஸ்லிம் என்ற நாமம் பூண்ட எஜீதின் வம்சத்தினர்களோ, அம்மாதிரியான பிராணத்தியாகம் புரிந்த ஷுஹதாக்களைத் தாங்களே கொன்றதுபோல ஈட்டிகளையும் பாலாக்களையும் கையிலேந்திக்கொண்டு, கொன்ற கையின் பாவனையேபோல் பஞ்சாக்களென்னும் ஒருவிதக் கையைப் பொன்னினாலும், வெள்ளியினாலும், பித்தளையினாலும், சாதாரணத் தகரத் தகட்டினாலும் செய்து, கரத்தில் பிடித்துக்கொண்டு, ஒரே சந்தோஷமாய்க் கொண்டாடுகின்றனர்! அநியாயமாய்க் கொல்லப்பட்டவர்களின் நாமங்கள் ஒருமாறு மறக்கப்பட்டு விடுதல் கூடுமோவென்று எண்ணுகிறவர்களே போல், “யாலீ!” “தூலா” “ஹஸ்ஸேன்” “ஹுஸ்ஸேன்” போன்றவைகளான வாக்கியங்களைக் கத்துகின்றனர். இதுதான் இவர்கள் அவர்களுக்குச் செய்யும் மரியாதை போலும்! அப்ஸோஸ்!

அன்றியும், காடுகளில் காணப்படும் வனவிலங்குகளான துஷ்டப் பிராணிகளின் வேடமேபோல் இம்மானிடர்கள் பூண்டுகொண்டு, அளவில்லாத ஆனந்தங் கொள்ளுகின்றனர்; இவ்வாறே இஸ்லாத்துக்கு நேர்முரணான இன்னம் அனேக காரியங்களைச் சிறிதும் தயங்காது செய்கின்றனர். இப்படிப்பட்ட அழிச்சாட்டியங்களை யெல்லாம் எக்காலத்திலேதான் எம் முஸ்லிம் நேயர்கள் விலக்கப் போகின்றார்களோ? ஏக கருணாநிதியான இறைவனே! நீதான் இன்னவர்களுக்குச் சரியான நேர்வழியைக் காண்பித்தல் வேண்டும். இவர்கள் சுயமே உணர்வு பெற மாட்டார்களே!

அந்தோ! ஆண்டவனுடைய மெய்யடியார்கள் பட்ட கஷ்டத்தை விளக்கவும் இயலவில்லையே! எனவே, எமது அன்பிற்குரிய முஸ்லிம்காள்! இவற்றை யெல்லாம் சிந்தித்து, நீங்கள் ஆண்டவனுக்காகவும், அவனுடைய ரஸூலுக்காகவும், அவர்களின் தீனுக்காகவும் பெருமுயற்சியும் (ஜிஹாதும்) பேரூழியமும் புரிவீர்களாக. எல்லாம் வல்ல இறைவன் இத்தகைய சத்தியத் தியாகிகளின் உத்தமப்பதவியை நமக்கும் அளித்து, நம்மையும் தன் சொந்த அடியார்களாகச் செய்துகொள்வானாக. இதுவே எல்லாரும் விரும்பத்தக்கதும்.

ஏ எங்க ளிறைவனே! எங்களையும், எங்களைப் போன்ற ஏணை முஸ்லிம்களையும் இவ்வுலகினில் உன்னுடைய ரஸூலின் திருப் பேரர்களே போன்ற தியாகிகளாகச் செய்து, இதற்கு மாறாய் ஷிர்க் பித்அத் முதலிய கொடுஞ்செயல்களைப் புரியும் தீயோர்களின் கூட்டரவில் சேர்த்துவையாது, உன்னுடைய நல்லடியார்களான நபிமார்களும், ஷுஹதாக்களும், சாலிஹீன்களும் பெற்றபேற்றைப் பெற்று உய்யுமாறு செய்வித்து, எங்களனைவரையும் சிராத்துல் முஸ்தீக மென்னும் நேரான பாதையிலே சீராக நடத்தி வைப்பாயாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆல ஆமீன்!

 

o وَإِن يُرِيدُواْ أَن يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ اللّهُ هُوَ الَّذِيَ أَيَّدَكَ بِنَصْرِهِ وَبِالْمُؤْمِنِينَ o وَإِن جَنَحُواْ لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ

 

بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ،

Related Articles

Leave a Comment