اَلْحَمْدُ للهِ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْأَرْضَ وَ بَعَثَ النَّبِيِّيْنَ عَلَى الْأَرْضِ وَ نُصَلِّيْ عَلَى النَّبِيِّيْنَ الْمُرْسَلِيْنَ وَ نَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلَىٰ ٰالِهِ وَ صَحْبِهِ اَجْمَعِيْنَ اَمَّا بَعْدُ
அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்கவேண்டுமென்று எனக்கும் சொல்லிக் கொள்ளுகின்றேன்.
அன்பிற்குரிய முஸ்லிம் சோதரர்காள்! இஸ்லாத்தை நமக்கு ஆடையாகவும் ஈமானை நமக்கு ஆபரணமாகவும் அளித்து அருள்மாரி சொரிந்துள்ள அல்லாஹுத் தஆலாவை அனவரதமும் அன்புடன் போற்றிப் புகழ்வோமாக. உலகத்துக்கொரு ஜகத்குருவாயும், சீர்திருத்தச் சாதுவாகவும், அனுப்பப்பட்ட நபிகள் நாயகத்தை (ஸல்) நன்கு ஆசீர்வதிப்போமாக. மேலும், ஆண்டவன் தன் குர்ஆன் ஷரீபில் நம்மை நோக்கிக் கூறுவதாவது: “ஏ நன்னம்பிக்கை கொண்டவர்காள்! உங்களுடைய ஆன்மாக்களையும், உங்கள் குடும்பத்தாருடைய ஆன்மாக்களையும் நரகத் தீயைவிட்டுக் காப்பாற்றிக் கொள்வீர்களாக.” இத்திருவாக்கியத்தால் நாமெல்லாரும் சன்மார்க்கத்தில் இருந்து, பாரமார்த்திகப் பரிபக்குவம் பெற்று, பரலோகத்தில் காணப்படும் நரகத்தின் நெருப்பைவிட்டு மீட்சி பெறத்தக்க நன் மார்க்கத்துக்கு வரவேண்டுமென்றும் நாம் மாத்திரம் அந் நற்பதவியையடைந்து விடுவது போதாமல், நம் சுற்றத்தார்களையும் மற்றுமுள்ள இன பந்துக்களையும் அத்தகைய சன்மார்க்கத்துக்குக் கொண்டுவந்து, அவர்களை இறுதிக் கால வாழ்க்கையின் சகலவிதமான தண்டனையை விட்டும் காப்பாற்றி வைக்க வேண்டுமென்றும் நன்கு தெரிந்து கொள்ளுகின்றோம்.
எனவே, நாம் எவ்வாறு அத்தகைய பரிபக்குவத்தை அடைவது முடியுமென்பதுதான் இதுகாலை நாம் சிந்தித்துணரத்தக்க ஒரு பிரச்சினையாகும். எவ்வாறு நமது பந்து மித்திரரையும் அத்தகைய பக்குவத்துக்குக் கொண்டுவருதல் முடியும் என்பதும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஓர் அத்தியாவசியமான காரியமாய்க் காணப்படுகின்றது. எனவே, நாம் உய்யும் வழிவகைகளைப் பின் வருமாறு தெரிந்து கொள்ளக் கடவோம் :-
பொதுவாய் நோக்குமிடத்து, இஸ்லாமிய போதனைப்படி பெரியோர்கள் எவ்வண்ணம் சீர்திருத்தம் அடைந்து முன்னேற்றத்துக்கு வருகிறார்களோ, அப்படியே நாமும் நம் மக்களையும் மனைவியரையும் மற்றும் சோதரரான சுற்றத்தார்களையும் சீர்திருத்தி முன்னேற்றத்துக்குக் கொண்டுவர வேண்டியது மஹா முக்கியக் கடமையாகும். மனைவி மக்கள்மீது நமக்குள்ள கடமைகளை நாம் அன்னவருக்குச் செவ்வனே நிறைவேற்றி வைத்தல் வேண்டும்; அவ்வாறே மனைவி மக்களுக்கு நம்மீதுள்ள கடமைகளையும் அன்னார் ஒழுங்காய் அனுஷ்டித்துவரல் வேண்டும். பெரியோர்களுக்கும், சிறியோர்களுக்கும் உயரிய நன்னீதியைக் கற்பித்து, வாழ்க்கையைச் சீர்திருத்த முயலுதல் வேண்டும். சிறியோர்கள் பெரியோர்களுக்கு மேதை மரியாதைகளைச் செய்து காட்டல் வேண்டும். எவன் பெரியோர்களுக்கு மரியாதை செய்யவில்லையோ, அவனது ஈமான் பூரணமடைய வில்லையென்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்கிறார்கள். எவன் தன் தாய் தந்தையருக்குப் பணிந்து, அன்னாரைக் கண்ணியப்படுத்தி ஒழுகவில்லையோ, அவன் மஹா பெரிய பாதகனாவான். பெற்றோருடன் பேசவேண்டுமானால், மிருதுவாயும் தாழ்மையாயும் பிரியமாயும் பேசவேண்டும். அவர்கள் இடும் மார்க்கத்துக்கு விரோதமல்லாத எத்தகைய வேலைகளையும் மனப் பிரீதியுடனே எடுத்துச் செய்து, அன்னாரைத் திருப்தி படுத்தல் வேண்டும். பெற்றோர் பொருட்டு ஆண்டவனிடம் ஐந்து நேரமும் தொழுகை வேளைகளில் அன்னாரின் இகபர நலத்துக்காகப் பிரார்த்தனை புரிதல் வேண்டும்; இது மைந்தர்க்குப் பெற்றோர் மீதுள்ள முக்கிய கடமையாகும்.
வாழ்க்கைத் துணைவர்களாகிய கணவனும் மனைவியும் ஓருயிரும் ஈருடலுமாக, ஒருவருக்கொருவர் சுற்றாடையேபோல், ஒற்றுமையாய் இருந்துவரல் வேண்டும். ஸமரஸமும் அன்பும் பற்றும் ஏகமனமும் கொண்டு, குடும்பத்தைச் செவ்வனே நடைபெறச் செய்தல்வேண்டும். அப்பெண்களை நமக்குக் கிடைத்த பேராதரவாகப் பாவித்து நடத்தல் வேண்டும்; அவர்களும் ஆடவர்களைப் பெறுதற்கரிய பெரும் பாக்கியமாகவும் வாழ்க்கை நலத் துணையாகவும் கொளுகொம்பேபோல் பாவித்து வருதல் வேண்டும். “காதலிருவர் கருத்தொருமித்து, ஆதரவு பட்டதே இன்பம்” என்பர்.
ஆண்டவனும் குர்ஆனில், “அப் பெண்மணிகள் ஆடவர்களாகிய உங்களுக்கு உடை போன்றவர்களாவர்; நீங்களும் அம் மாதர்களுக்கு உடைகளைப் போலாவீர்கள்,” என்று கூறியிருக்கிறான். இதன் தாத்பரியமாவது: பெண்களின் குற்றங் குறைகளையெல்லாம் ஆடவர்கள் மறைத்து, அவர்களைச் சமமாகப் பாவித்தல் வேண்டும்; இவ்வாறே பெண்களும் ஆடவர்களின் குற்றங் குறைகளையெல்லாம் பொறுத்து மறைத்து, அன்னாரைக் கண்ணியப்படுத்தல் வேண்டும். மேலும் குர்ஆன் ஷரீபில் ஆண்டவன் கூறும் வேறொரு வாக்கியத்தின் கருத்தாவது:-
“ஏ மனிதர்களே! ஆண்டவனுடைய அடையாளங்களுள் ஓர் அடையாளம் உங்கள் இனத்திலிருந்தே ஒரு வாழ்க்கைத் துணையை (பெண்ணை) உண்டாக்கியிருக்கின்றான்,” என்பதே யாம்; இதனால் உங்கள் மனம் விசிராந்தியடையுமாக. ஆதலின், அத்தகைய உங்கள் தோட்டுணைகளை நீங்கள் கண்ணியப்படுதல் வேண்டும். கணவனுக்கும் மனைவிமீது பலகடமைகள் இருக்கின்றன; அவ்வாறே மனைவிகளுக்கும் கணவர்மீது பலகடமைகள் இருக்கின்றன. பெண்களுக்கு வேண்டிய ஆகார வசதியும் அடை ஆபரண உதவியும் ஆடவன் செய்தல் வேண்டும். அவர்களுடைய சிந்தனைகளை தீ மார்க்கங்களின் பக்கல் செல்லா வண்ணம் உபதேசம் பண்ணிப் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். யாதொரு காரணமுமின்றி அன்னார்களைத் துன்புறுத்தவேனும், தண்டனையிடவேனும் கூடாது; அவர்கள் ஆடவர்பால் ஒப்படைக்கப்பட்ட அமானத்தாவார்கள்.
ஆனால், மனைவியின் கடமையோ, புருஷனுக்கு இதமாய் முற்றும் இன்பத்துடன் நடந்து கொள்வதாகும். அவனுக்குத் தன்னாலான மட்டும் க்ஷேமத்தையும் சந்துஷ்டியையும் விளைவித்தல் வேண்டும். அவனது சுகத்தைத் தன் சுகமாகவும் அவனது கஷ்டத்தைத் தன் கஷ்டமாகவும் பாவித்து, அவனுக்கு உறுதுணையாய் நடந்துவருதல் வேண்டும். அவனுடைய மானத்தையும் அவனுடைய சொத்து சுதந்தரங்களையும் அவள் செவ்வனே காப்பாற்றிவைத்தல் வேண்டும். பொதுப்படையாய்க் குடும்பத்தைக் கணவனது வருவாய்க்கு ஏற்றவாறு செட்டாகவும் கௌரவமாகவும் நடாத்தி வரல் வேண்டும்.
தாய் தந்தையர்கள் தம் மக்களுக்கு மிகவும் அவசியமாயப் பிரயோஜனந் தரத்தக்க கல்வி கற்பித்து வைப்பதைத் தமது முதற் கடமையெனக் கருதி, அதைச் செய்தல் வேண்டும். இஸ்லா மார்க்கமாகிறது, சிறு பிள்ளைகள் ஏழு வயதை அடைந்ததும் அவர்களுக்குத் தொழுகையைப் பற்றியும் ஞானத்துடன் இருப்பதைப் பற்றியும் கற்பித்து வைத்தல் வேண்டுமென்று வற்புறுத்திக் கூறுகின்றது. இவ்வண்ணம் சிறுவர் சிறுமியர் அனுஷ்டிக்குமாறு நாம் வற்புறுத்தல் வேண்டும். பத்து வயதையடைந்து விடுவார்களாயின், சரியான முறையால் அவர்களுடைய ஞானத்தையும் வாழ்க்கையையும் நடக்கைகளையும் சீர்திருத்த வேண்டுமென்றும் நம் மார்க்கம் மிகவும் வற்புறுத்திப் போதிக்கின்றது. ஆகவே, சிறுவர் சிறுமிகளுக்கு முதன் முதலில் குர்ஆனைப் பொருளுடன் பயிற்றுவித்தல் வேண்டும். அதன் பின்பு அதன் எல்லாவித அர்த்தங்களையும் கற்பித்துக் கொடுத்தல் வேண்டும். மார்க்க ஞரனங்களை அதிகம் படிப்பித்து வைத்தல் வேண்டும். நன்னீதிகளை முறையே போதித்துவரல் வேண்டும். நன்னடக்கையிலேயே ஒழுகி வருமாறு அவர்களைச் சரியாய்ப் பழக்குதல் வேண்டும். இது, நாம் நம் மக்கட்குச் செய்து வைக்கும் மாபெரும் பாரமார்த்திகப் பேருதவியாகும். இதுவே அவர்களை இகபரத்தில் மேன்மையுறச் செய்யும்.
அன்பர்காள்! நும் மக்களின் அறிவைப் பெருகச் செய்யுங்கள். பிற்காலத்துக்காக அவர்களை நல்ல மனிதர்களாகப் பழக்கி வாருங்கள். பெண்களுக்கும் கலா ஞானத்தை மிக்க நல்ல முறையிலே அளித்து, சுதந்தரத்தையும், உரிமையையும் சட்டப்படி அதிகம் அளியுங்கள். பெண்களின், அகதிகளின் உரிமைகளைப் பறிக்க முயலாதீர்கள். நீங்களும் சீர்படுங்கள்; கல்வி, வர்த்தகம், நாகரிகம் முதலியவற்றிலும் முன்னேற்றமடையுங்கள். நுங்கள் பெண்மணிகளையும் நாகரிகமடையச் செய்யுங்கள். எனவே, ஆண்டவன் நம்மையும் நம் மனைவி மக்களையும் இம்மை மறுமை ஆகிய இரு லோகத்திலும் சகலவித மேன்மையும் தந்து, சம்பூர்ண சுகசாந்தியையும் இனிது அளிப்பானாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًاِ
بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ،