வியபிசாரமன்று; ஆனால், “நியோகம்!” – 5

இன்னமும் எட்டாவது வகையென்பது அயர்ந்த உறக்கத்திலிருப்பவளை, அல்லது மயக்கங்கொண்டிருப்பவளை, அல்லது பித்துப் பிடித்தவளைப் பாதுகாத்து ரக்ஷிக்காது, அவளைத் தனியிடத்திற் கொண்டுபோய்க் காமாந்தகாரத்தால் உண்டாகும் மோக இச்சையை நிறைவேற்றிக்கொண்டு, முகத்தில் கரியைப் பூசுவதாகும்; இதுவும் ஒருவகை விவாகமாம்.

ஐயகோ! அநியாயமே! இஃது எந்தத் தெய்வத்துக்குத்தான் அடுக்கும்! காந்தர்வத்தையும் பைசாசத்தையும் எந்தப் பகுத்தறிவுள்ள மனிதன்தான் வெட்கமடையாது விவாகமென்று கூறத் துணிவான்? இப்படிப்பட்ட சேர்க்கையெல்லாம் தர்ம நீதியை விட்டுப் பகிரங்கமாக அப்புறப்பட்டும், அநீதியான செய்கைகளாவும் பாபக் கிரயைகளாகவும் பகிரங்க வியபிசாரத்தனமாகவும், மனமுரணான வேலைகளாகவும் காணப்படாமல் வேறெவ்விதமாகத்தான் கருதப்படுதல் கூடும்?

காந்தர்வமும் ராக்ஷசமும் பைசாசமும் மணமகன் இன்னானென்னும் குறிப்பில்லாத தடுமாற்றமாய்க் காணப்படுகின்றன. பொதுவாக வியபிசாரத்தில் எவனொருவன் சங்கலீகாணம் செய்து காரியத்தை முடித்துவிடுகிறானோ, அவனே வியபிசார புருஷனாகிறான்; இவ்வாறாகத்தான் அன்னவரின் நியோக விவாகத்திலும் நடைபெற்று வருகின்றது. ஏனெனின், தனிப்பட்ட இடத்தில் சந்திப்பதனாலும் பலாத்காரமாய்த் தூக்கிச் செல்லப்படுவதாலும் ஸ்மரணை தப்பியிருக்கும்போது சேர்க்கை செய்வதனாலும் அந்தக் காரியம் விவாகமென்று கூறப்படுகின்றது. எனவே, இத்தகைய விவாகத்திலும் நியோகத்திலும் காணப்படும் சட்ட திட்டங்களைக் காட்டினும் அதிகமாகவே வியபிசாரத்திலும் காணப்படுகின்றன. ஆதலின், இந்த வியபிசாரத்தின் முன்னிலையில் அவர்களுடைய விவாகமும் நியோகமும் வியபிசாரத்தினும் மிக்க இழிந்தவையாகவே காணப்படுகின்றன. இப்படிப்பட்ட விவாகத்தையும் நியோகத்தையும் வைத்துக்கொண்டிருக்கும் ஜாதியார் வேறு பகிரங்க வியபிசாரி (குச்சுக்காரி) களைக் கண்டு குறைகூறுவது வெறும் பொறாமையாகவே காணப்படாநின்றது. ஏனெனின், வியபிசாரத்தை வேறு பெயருடன் அனுஷ்டித்து வருவோர் உண்மை வியபிசாரிகளைக் கண்டு தூஷிப்பதானது, வெறும் அசூயையாக வல்லாது வேறு எவ்வாறு கருதப்படும்? இதற்கெல்லாம் ஆரியர்களின் மனத்துள் புகுந்துகொண்டிருக்கும் ஏதோவொன்றுதான் காரணமாய்க் காணப்படுகின்றது.

மேற்கூறிய வின்னியாச விவாகங்களையும் வேடிக்கை நியோகங்களையும் வெட்கமற்றவையென்று கூறத்துணியுங்கால், ஏன் இவற்றைக்காட்டினும் அதிக நாணயமான மானமுள்ள சட்டங்களையுடைய பொட்டுக்கட்டிய வியபிசாரத்தையும் வெட்கமற்ற தொழிலென்று அன்னார் தீர்மானித்தல் கூடாது? ஆனால், வியபிசாரத்தை மட்டும் வெட்ககரமான ஈனத்தொழிலென்று கூறுவதற்குப் பிரத்தியேகமான காரணம் என்னதான் இருத்தல் கூடும்? அவர்களுடைய வேதத்தில் அசல் வியபிசாரமே காந்தர்வ விவாகமென்று கூறப்பட்டில்லையா? கபீர்.

“நியோகம் செய்வதனால் வியபிசாரம் குறைந்து மானிட வர்க்கமும் அன்புடன் பிறக்கும் குழந்தைகளால் விருத்தியாகும். அதுவுமன்றி. கர்ப்பத்தை அழிப்பது அறவே நின்றுவிடும். நீசகுல ஸ்திரீயுடன் உயர்குலப் புருஷன் மோகங்கொள்வதும் வியபிசாரிகளுடைய வேசித்தனமும் உத்தம குலங்கள் அபவாதத்தால் அருகிப்போவதும் வம்சநாசம் ஸ்திரீ புருஷர்களின் துக்கங்கள் திருட்டுச்சூல் கொள்ளல் முதலிய மற்றும்பல பாபங்களும் நியோகத்தினால் நின்று போய்விடும். இக்காரணங்களுக்காகவே நியோகத்தை அதரிக்கவேண்டும்.” இது தயானந்தரின் ஒருவகைக் குயுக்திவாதமான நியோக சமாதானமாகும்.

(ஆ! ஹா!! தயானந்த மஹாராஜ்! வியபிசாரத்தின் நாமத்தை அழிக்கப் பார்க்கின்றீர்கள்; ஆனால், அது முடியவில்லை. மலத்தைப் “பவ்வீ” என்று மங்கல வழக்கில் கூறுவதுபோலவே ஆரியரின் சமாதானமும் காணப்படுகின்றது. வியபிசாரமென்னும் நாமத்தையே அடியோடு அகற்றிவிட்டு, விவாகமென்றும் நியோகமென்றும் கூறிக்கொண்டு, இக்காரியத்தில் வெட்கப்பட வேண்டுவது ஒரு சிறிதும் அவசியமில்லையென்று கூறுவீர்களாயின், பின்னரும் ஏன் இந்நாட்டில் கர்ப்பமழித்தலும் குழந்தை முறித்தலும் நடந்துகொண் டிருக்கின்றன? வியபிசாரமென்னும் பெயர் இவ்வுலகில் இருந்தவரை கர்ப்பநாசமும் சிசுஹத்தியும் அவசியமாக நடந்துகொண்டிருந்தன. ஆனால், வியபிசாரத்தின் பெயரே இந்நாட்டினின்றும் எடுபட்டுப்போய், அதற்கு வேதசாஸ்திரம் விவாகமென்றும் நியோகமென்றும் பெயர் வைத்து, அஃது அனுமதிக்கப்பட்ட செய்கை தானென்று உத்தரவும் கொடுத்து, அதில் வெட்கப்பட வேண்டிய அவசியமும் இல்லையென்று பகிரங்கமாகக் கூறிவிட்டபின்னர், கர்ப்பநாசமும் சிசுஹத்திகளும் நடவாமலே அடியுடன் ஒழிந்துபோயிருத்தல் வேண்டும்.

உயர்குலத்தவருள் அல்லது சமவர்ணத்தாருள் எவர்மீது விருப்பம் பாய்கின்றதோ, அவரிடம் நெருங்கலாம்; பிள்ளைகளையும் பகிரங்கமாகப் பெற்றுக்கொள்ளலாம்; பிறகு நல்ல சந்தோஷத்துடனும் வெளியில் உலாவித் திரியலாம். அப்பொழுது வம்சங்கள் சந்ததியற்றுப் போமென்று அஞ்சவேண்டிய பயமில்லை. ஆனல், நியோகத்தில் அன்புடன் பிள்ளைகளைப் பெறுவதென்பது மிகத்தவறான அபிப்பிராயமாகவே காணப்படுகிறது. ஏனெனின், ஒவ்வொரு பெண்ணினிடமும் பதினொரு புருஷர்களும் ஒவ்வொரு புருஷனிடமும் பதினொரு பெண்களும் சேர்ந்துகொண்டு நியோகம் செய்வது நியாயந்தானென்று கூறப்படும்போது, அன்புடனே பிள்ளைகளைப் பெற்றெடுப்பதென்பது ஓர் அசம்பாவிதமான காரியமாகவே காணப்படாநின்றது.

பிரியமென்பது ஒருபுறம் இருக்கட்டும், வெவ்வேறு புருஷர்களுக்கும் வெவ்வேறு ஸ்திரீகளுக்கும் மாறிமாறிப் புணர்ச்சி ஏற்படுவதனால் ஒருவர் பிள்ளையை மற்றொருவர் நன்கு மதிக்காமலிருப்பதோடு அசூயையால் வெறுக்கவும் துணிந்துவிடுவார். காமலாகிரியால் கட்டுண்டு கிடப்போரிடம் புத்திர வாஞ்சையென்பது எங்கிருந்து எவ்வாறு ஜனித்தல்கூடும்? கபீர்)

-பா. தாவூத்ஷா

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment