அனுபந்தம் – I

by பா. தாவூத்ஷா

வாம மார்க்கம்

இந் நூலைப் படிப்போர் இதுகாறும் வாம மார்க்கத்தைப்பற்றி அதிகமாக ஒன்றும் தெரிந்து கொள்ளாததனால் அதைப்பற்றிய குறிப்பொன்றும் மிகச்சுருக்கமாக இதன் கீழே வரைகின்றோம்:-

இப்பரத கண்டத்தில் தந்திரபூஜை யென்னும் ஒருவகை அகோர வாமமார்க்க நியமமும் எக்காலத்திலும் நடைபெற்று வருகின்றது. “தந்திரகா” என்று சிறப்பாகக் கூறப்படுகின்ற பழக்க வழக்த்தில் காளிதேவியே அதற்குரிய தேவதையாகக் கொண்டாடப்பட்டு வருகிறாள். இதற்குரிய பூஜையானது இரகசியத்தில் மகா அருவருக்கத்தக்க செய்கைகளுடனே நடத்தப்பட்டு வருகிறதென்று சையித் அமீர் அலீ எழுதுகிறார். வட நாட்டிலும் நடைபெறும் துர்க்கை பூஜையில் இற்றைக்கும் நடைபெறும் அனாசாரங்கள் அனந்தமாகும். “காளி கட்டம்” (கல்கத்தா) என்னுமிடத்தில் காணப்படும் துர்க்கையின் கழுத்தில் கபால மாலையொன்று எப்பொழுதும் காணப்படும்; கல்கத்தாவிலுள்ள இந்தக் காளியின் நிறம் கருநிறமாய் வர்ணம் தீட்டப்பட்டிருக்கிறது; புலி ஏறே இவளுக்கு வாகனமாம்.

இஸ்லாத்தில் தீண்டக்கூடாதென்று கருதப்பட்டுவரும் மதுச் சரக்கை ஹிந்துக்கள் தங்கள் தேவதையாகிய காளிக்குப் பூஜை செய்யும்போது, அவளுக்குத் திருப்தி செய்வதற்காக உபயோகப் படுத்துகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் இந்தக் காளி பூஜையை நடுநிசியில் சுடுகாட்டுக்குச் சென்று பிணத்தின்மீது குந்திக்கொண்டு மண்டையோட்டினால் மதுச்சரக்கைக் குடித்துக்கொண்டே நிறைவேற்றுகிறார்கள். ஜயபுரியிலுள்ள ஒரு கோயிலில் இந்தத் துர்க்கையானவள் முதுகின் புறமாய்த் திருப்பப்பட்ட முகத்தை யுடையவளாய்க் காணப்படுகிறாள். ஏனெனின், நரபலிக்குப் பதிலாக ஆட்டுக்டாவைப் பலிகொடுத்ததற்காகக் கோபத்துடன் தன்முகத்தைத் திருப்பிக்கொண்டாளென்று ஐதிகம் கூறுகின்றது.

மேலும் அவ்வாம மார்க்கத்தினர் “மதுபானம், மாம்சம், மீன், பண்ணிகாரம், மைதுனம் என்னும் இவ்வைந்தும் எப்பொழுதும் மோக்ஷத்தை யளிக்கும்,” என்றும் எண்ணுகிறார்கள். “குடித்துக் குடித்துக் குடித்துக் கீழே விழுந்து திரும்பி எழுந்திருந்தும் எவன் குடிக்கிறானோ அவனுக்கே மறுபிறப்புக் கிடையாது,” என்று மஹா நிர்மாண தந்திரத்தில் எழுதியிருக்கிறார்கள். இம்மார்க்கத்தினர் பெற்ற தாய் உட்பட எப்படிப்பட்ட ஸ்திரீகளுடனும், “நான் தான் சிவன்; நீதான் பார்வதி,” என்று சொல்லிக்கொண்டு முறைதவறிய வழியில் வியபிசாரம் செய்வதுண்டென்று தயானந்தர் தமது சத்தியார்த்த பிரகாசத்தில் எழுதியிருக்கிறார்.

ஹிந்துக்களின் “சாஸ்திரங்களால் தீண்டக்கூடாதென்று கருதப்படும் சூதக ஸ்திரீகளுடன் சம்யோகம் செய்வது புஷ்கரஸ்நாநத்திற்குச் சமானமென்றும், சண்டாளியுடன் சேர்வது காசி யாத்திரைக்குச் சரியான தென்றும், சக்கிலிச்சியுடன் சேர்வது பிரயாகை ஸ்நாநத்திற்கு ஒப்பானதென்றும், வண்ணாத்தியுடன் கூடுவது மதுராபுரி யாத்திரைக்குச் சமானமென்றும், வேசியுடன் கூடுவது அயோத்தி யாத்திரைக்குச் சரியானதென்றும் கருதுகிறார்கள்,” என்றும் அவரே எழுதுகிறார்.

“வாம மார்க்கத்தவர்களைத் தவிர வேறு யாரும் வரக்கூடாத விடத்தில் ஆடவரும் பெண்டிருங் கூடிப் புருஷர்கள் ஸ்திரீகளை நிருவாணமாகச் செய்து பூஜை செய்கிறார்கள். பிறகு தன்னுடைய மனைவி, பெண், தாய், சகோதரி, நாட்டுப்பெண் எவர்களாயிருந்த பொழுதிலும் புருஷர்கள் எந்த ஸ்திரீயையாவது மைதுனம் செய்யலாம்,” என்றும் சத்தியார்த்த பிரகாச நூலாசிரியர் எழுதியிருக்கிறார். இஃதே போன்ற இன்னும் அனேக அருவருக்கத்தக்க கிரியைகளையெல்லாம் அவர் எடுத்து வர்ணிக்கிறார்.

“பிறகு ஒரு பாத்திரத்தில் சாராயம் நிறைத்து ஒரு தட்டு நிறைய மாம்சம், பண்ணிகாரம் இவைகளையும் வைக்கிறார்கள். அப்பொழுது அவர்களுடைய ஆசான் அவைகளைக் கையிலேந்திக்கொண்டு ‘நான் தான் பைரவன்; நான் தான் சிவன்,’ என்று சொல்லி அதைக் குடிக்கிறான். மிகுதியை மற்றவர்கள் குடிக்கிறார்கள். பிறகு எந்த ஸ்திரீயையாவது அல்லது வேசியையாவது அல்லது புருஷனையாவது நிர்வாணமாகச் செய்து கையில் கத்தியைக்கொடுத்து தேவி என்றாவது மகாதேவன் என்றாவது அழைத்து அவளுடையவோ அல்லது அவனுடையவோ மர்ம ஸ்தானங்களைப் பூஜைசெய்து அத்தேவியை அல்லது தேவனை மதுபானம் செய்யச்செய்து மிகுதியானவர்களும் அதிலிருந்தே குடிக்கிறார்கள். மயக்கம்வரும் வரையில் குடித்துச் சகோதரி, தாய், பெண் யாராயிருந்த போதிலும் அவர்களுடன் கூடி மைதுனம் செய்யவேண்டியதே ……… யாராவது வாந்தி செய்தால் அவர்களுள் அகோரி அதாவது சர்வசித்தியை யடைந்திருக்கிறவர் கக்கினவைகளைச் சாப்பிடவும் சாப்பிடுகிறார்,” என்பதும் ச.பி-த்தின் வாசகமேயாம்.

“புட்டி புட்டியாகக் குடித்துக் கெட்ட வழிகளிலிருப்பதற்காக விலைமாதர்கள் வீடுகளில் படுத்துறங்கி வெட்கமற்று, பயமற்றுப்போகிறவனே வாமமார்க்கிகளுள் சிறந்த சக்ரவர்த்தியாகக் கருதப்படுகிறான். அஃதாவது அதிகக் கெடுதல்களைச் செய்கிறவனே அவர்களுள் பெரியவனாகவும் நல்ல கிரியைகளைச் செய்து கெட்ட காரியங்களைச் செய்ய நடுங்குகிறவன் சிறியவனாகவும் எண்ணப்படுகிறான்” என்றும் அவர் வரைந்திருக்கிறார்.

“உடீஸ் தந்திரத்தில் கிரியாங்கம் ஒன்று இம்மாதிரி சொல்லப்பட்டிருக்கிறது: வீட்டுச் சுவர்களின் ஒவ்வொரு மாடத்திலும் சாராயம் நிறைந்த குப்பிகள் வைக்கப்பட்டிருக்கவேண்டும். ஒருவன் முதல் மாடத்திலிருக்கும் சாராயத்தைக் குடிக்கவேண்டும். பிறகு இரண்டாவது மாடத்துக்குப் போய் அங்குள்ள சாராயத்தையும் குடிக்கவேண்டும். பிறகு மூன்றாவது நான்காவது மாடங்களிலுள்ளதையும் குடித்துக் குடித்துக் கீழே மரத்துண்டுபோல் விழும்வரையில் குடித்துக்கொண்டே போகவேண்டும். கொஞ்சம் ஞாபகம் வந்தவுடன் முன்மாதிரியே குடித்துக் குடித்துக் கீழே விழ வேண்டும். நான்காம் தடவையும் இம்மாதிரி செய்து எழுந்திருப்பானாயின் அவனுக்கு மறுபிறப்பே கிடையாது,” என்றும் அவர் கூறியிருக்கிறார். என்ன ஆச்சரியம்! என்ன வெட்கக்கேடு!!

(தொடரும்)

-பா. தாவூத்ஷா

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>

 


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment