அஷ்ரபின் முடிவும் அப்புறம் நிகழ்ந்தனவும்

பொழுது புலர்ந்ததும், காஹிரா வெங்கணும் சூன்யமாய்க் காணப்பட்டது. சுல்தான் சென்ற இரவு கையொப்பமிட்ட பிரகடனத்தின் நகல் பொழுது விடிவதற்குள் பல்லாயிரம் பிரதிகளாகத் தயாரிக்கப்பட்டு, கண்ட கண்ட பொது ஸ்தலங்களிலும்

மஸ்ஜித்களிலும் ஒட்டப்பட்டு விட்டன. அவ்வறிக்கையைப் படித்த மக்கள் ஒன்றும் புரியாமல் திகைத்தார்கள். இரண்டு சுல்தான்களுள் ஒரு சுல்தான் தேசத் துரோகியாய் விட்டாராம்; அதற்காக அவரைக் கைதுசெய்து மற்றொரு சுல்தான் காவலில் வைத்து விட்டாராம் என்னும் பேச்சு, காட்டுத்தீப் போலே எங்கும் நொடிப்பொழுதில் பரவிவிட்டது. சிலருக்கு ஒரு விவரமும் புரியவில்லை; பலருக்கு இதன் அர்த்தமென்ன வென்பதே விளங்கவில்லை.

மிஸ்ர்தேசம் தோன்றிய உத்தேசம் ஐயாயிரம் ஆண்டுகளுக்குள் நிகழ்ந்திருக்கிற அத்தனை அதிசயங்களுள்ளும் இப்பொழுது இவர்கள் கேள்வியுற்ற அதிசயமே மிகப்பெரிய பேரதிசயமாய்க் காணப்பட்டது. இரு சுல்தான்கள் ஒன்றாய்ச்சேர்ந்து கூட்டுப் பொறுப்புடனே ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிற வேலையில், ஒரு சுல்தான் மற்றொரு சுல்தானால் சிறையில் அடைக்கப்படக்கூடிய பெரிய குற்றத்தைச் செய்துவிட்டாரென்றால், எவருக்குத்தாம் வியப்புப் பிறக்காது?

அரசவை எப்பொழுது கூடப் போகிறதோ என்று பொறுமையிழந்து எல்லாக் காஹிரா வாசியும் வினாடிகளை எண்ணிக்கொண்டிருந்தார்கள். அரசவைக்குச் சென்றால்தான் எல்லா உண்மையும் புலப்படுமென்பதை அவர்கள் நன்குணர்ந்தவர்க ளாதலால், எல்லாரும் தத்தம் வேலையை மறந்து, ‘நீ முந்தி, நான் முந்தி’ என்று பெருந்திரளாகக் குழுமி அரண்மனைக்குள் புகுந்துவிட்டார்கள்.

அன்று கடைசியாக அரசவை கூட்டப்படுகிற நேரம் வந்தது. வழக்கத்துக்கு விரோதமாக, ஒரு சுல்தான் மட்டுமே – மலிக்குல் முஈஜ் மட்டுமே – மெல்ல நடந்துவந்து தம் ஆசனத்தின்மீது ஏறி அமர்ந்துகொண்டார். அவருடைய வதனத்தில் சோகமே குடிபுகுந்திருந்தது; சோகம் மட்டுமின்றி, பெரிய ஏமாற்றத்தைப் பெற்றுக்கொண்ட தோற்றமும் சேர்ந்து காட்சியளித்தது. அரியாசனத்தில் ஏறி அமர்ந்ததும், அவர் சென்ற இரவெல்லாம் ஷஜருத்துர்ரின் போதனைகளைப் பாடம்பண்ணி யிருந்தபடியே, பொய்ந்நடிப்பான முகபாவத்தோடும் தாழ்ந்த தொனியுடனும் கீழ்க்கண்ட சுருக்கமான பிரசங்கத்தை வெகு சாமார்த்தியமாகப் பேசி முடித்தார்:-

“ஏ, என் குடிஜனங்களே! மந்திரிகளே! பிரதானிகளே! உங்களையெல்லாம் போலவே இன்று நாமும் மிகவும் சுமையான ஹிருதயத்துடனேதான் துக்கம்மிக்க செய்தியொன்றை ஏற்க நேரிட்டுவிட்டது. வேலியே பயிரை மேயும் கதையைக் கண்ணுக்குப் பிரத்தியக்ஷ­மாய்ச் செய்துகாட்டும் நயவஞ்சகத்தை நேற்றுவரை எம்முடனே கூட்டாட்சி புரிந்துவந்த எம் சகோதர சுல்தான் இதுவரை தனது உள்ளத்துள்ளே ஒளித்து வைத்திருந்தான் என்பதை நாம் முன்னமே உணராமற் போயினோம். அசத்தியம் அழிந்துப்போகக் கூடியதாயே யிருக்கிறதென்று அல்லாஹுத்தஆலாவே தன் திருமறையில் திருவுளமாகி யிருப்பதேபோல், பொய்வேஷமிட்டு இதுவரை உலகை ஏமாற்றித் திரிந்த மூஸா என்னும் ஐயூபியின் உண்மைச் சொரூபம் இப்பொழுது வெளியாகிவிட்டது. இந்த மிஸ்ர் தேசத்தையும் இதிலுள்ள ராஜபக்தி விசுவாசமிக்க நல்ல குடிமக்களாகிய உங்களெல்லாரையும் நம் மாகொடிய விரோதியான அந் நாஸிர் யூசுபுக்குக் காட்டிக்கொடுத்து விடுவதற்கு அச் சிறுவன் பயங்கரமான படுசூழ்ச்சியைச் செய்துவிட்டதை நாம் கையுங் களவுமாய்க் கண்டுபிடித்துவிட்டோம். அந்தத் துரோகியை இனியும் வெளியே வாளா விட்டுவைப்பது தற்கொலைக்கு ஒப்பாகுமென்று கருதி, அவனை உடனேயே உங்கள் எல்லீரின் நன்மையை யுன்னிச் சட்டென்று கைதுசெய்து காவலில் வைத்துவிட்டோம். ஜனநாயகத்துக்காகவே பாடுபடும் நாம், பொதுமக்களாகிய உங்களுடைய தீர்ப்பின் படியேதான் மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்று கருதி, இச் சபையைக் கூட்டியுள்ளோம். ஆண்டவனின் மெய்யடியார்களும், மூஃமின்களுமாகிய நீங்கள் என்ன தீர்ப்பை வழங்குகிறீர்களோ, அதையே ஏற்று நடத்தச் சித்தமாயிருக்கிறோம் என்பதையும் நாம் ஆவலுடனே தெரிவித்துக்கொள்ளுகிறோம்!”

இந்த பிரசங்கத்தை முஈஜூத்தீன் பிழையேது மில்லாமலே பேசித்தீர்த்தார். என்னெனின், கடந்த இரவெல்லாம் விடியவிடிய ஷஜருத்துர் தம்கணவரை இந் நாடகத்தை நன்றாய் நடிப்பதற்குப் பக்குவமாய் ஒத்திகை நடத்திப் பழக்கி விட்டிருந்தார். இப் பிரசித்திபெற்ற பொய்ப் பிரசங்கத்தைப் பேசி முடித்ததும் தம் ஆசனத்தில் அமர்ந்து, பகிரங்க பிரதானியை யழைத்துத் தம் சட்டைப்பைக்குள் பத்திரமாய் மடித்து வைத்திருந்த ஒரு கடிதத்தை எடுத்து நீட்டிக் கொடுத்து. உரத்த குரலில் எல்லாருக்கும் கேட்கும்படி வாசித்துக் காட்டச் சொல்லிக் கட்டளையிட்டார். அப் பிரதானியும் அதை வாங்கிக் கையில் விரித்துப்பிடித்து, வெண்கலம் போன்ற தம் தொண்டையால் விளக்கமாகப் படிக்கலாயினார். அரசவையோ கப்ருஸ்தானைவிடப் பேரமைதியாயிருந்து, அவ்வார்த்தைகளை அதிக கவனமாய்ச் செவிமடுத்தது:

அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால், உலகத்தை உய்விக்கத்தோன்றிய உன்னதத் திருத்தூதர் முஹம்மத் (சல்) அவர்களுடைய சந்ததியார்களும், உண்மையான மூஃமின்களுமாகிய சகோதர முஸ்லிம்களுள் ஒருவனாகிய, தற்சமயம் மிஸ்ரின் ஸல்தனத்தை மற்றொரு சுல்தானுடன் சேர்ந்து கூட்டாட்சி புரிந்துவருகிற, அல் மலிக்குல் அஷ்ரப் என்னும் சிறப்புப்பெயர் படைத்த மூஸா ஐயூபி என்று அழைக்கப்படுகின்ற அடியேன், அகில உலக முஸ்லிம் வீரர்களுள்ளும் தலைசிறந்து விளங்கிப் புகழ்மிக்க ஏகதளபதியும் ஆட்சிவீரருமாக விளங்கித் திகழும் அந் நாஸிர் யூசுப் என்று அழைக்கப்படும் தங்கள் திருச் சமூகத்துக்குத் தாழ்மையுடன் அடிபணிநது விண்ணப்பித்துச் சமர்ப்பித்துக் கொள்ளும் கோரிக்கை என்னவென்றால்:-

“இந்த மிஸ்ர்தேசத்தை ஒழுங்கான முறையில் நிர்வகித்து ஆட்சி செலுத்தத் தக்க பொருத்தமான தலைவர் எவருமே இல்லையென்னும் சரியான உண்மையை மிகநன்றாய் உணர்ந்துள்ள தாங்கள், இந் நாட்டைத் தங்களுடைய உன்னதமான ஆட்சியின்கீழ்க் கொணர்ந்து, சகல குடிமக்களுக்கும் பெரு நன்மையையே புரியவேண்டுமென்னும் நேர்மையான கொள்கையை மேற்கொண்டிருக்கிறீர்கள் என்பதை அடியேனும்,என்போன்ற பெரும்பான்மையான மிஸ்ரிகளும் நிச்சயமாய் அறிவோமென்றாலும், என்னுடன் சேர்ந்து சுல்தானாக விளங்குகிற என் ஜென்ம சத்துரு முஈஜுத்தீன் ஐபக் என்பவனும் அவனைச் சேர்ந்த மிகச்சில அற்பர்களும் மட்டுமே குறுக்கிட்டு நின்று எல்லா நன்மைகளுக்கும் முட்டுக்கட்டையாய் இலங்குகின்றன ரென்பதை என் மனம் வருந்தித் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் எங்களெல்லார்க்கும் விமோசனம் உண்டுபண்ணுவதற்காகப் பெரிய படையொன்றைத் திரட்டிக்கொண்டு, எந்த நேரத்தில் இந்நாட்டுக்குள் பாய்ந்து வருவதாயிருப்பினும், அடியேனும் என் குடிமக்கள்களும் தங்களை உள்ளன்புடனே வரவேற்று உபசரித்து, தங்களையே எங்களுடைய சரியான சுல்தானென்று ஏற்றுக்கொண்டு, தங்களின் தண்ணிழலின் கீழே என்றென்றும் அடிபணிந்து காத்துக் கிடப்போம் என்பதையும் என் மனம், மெய், வாய் பூர்வமாகச் சத்தியமிட்டுக் கூறுகிறேன். நான் தங்களுக்குச் சமர்ப்பிக்கும் இவ்விண்ணப்பப் பத்திரத்திலுள்ள உண்மைகளைத் தாங்கள் கிஞ்சித்தேனும் சந்தேகித்தால், முதலில் தங்களுடைய ஒற்றர்களை இங்கு அனுப்பிவைத்து, உண்மையை நேரில் கண்டறிந்து வரும்படி செய்யுங்கள். இறைவனே என்னுடைய தூய்மையான எண்ணங்களுக்குச் சாக்ஷியாயிருக்கிறான்.

(ஒப்பம்)
தங்களடியேன், மூஸா ஐயூபி, அல் அஷ்ரப்

அரசவையில் கூடியிருந்தோர் அனைவரும் கூர்மையுடன் இவ் வார்த்தைகளைச் செவியேற்றவுடனே நிலைதடுமாறி விட்டார்கள். மிஸ்ரின் ஸல்தனத்தையும் குடிஜனங்களையும் எதிரிக்குக் காட்டிக்கொடுப்பதற்காக மலிக்குல் அஷ்ரப் சதி செய்து இப்படிப்பட்ட துரோகம் மிக்க கடிதத்தை எழுதியிருக்கிறானென்று அக்கணமே அவர்களெல்லாரும் முடிவுகட்டி விட்டார்கள்.அக்கடிதம் படித்து முடிக்கப்பட்டவுடனே, அஃது அங்குக் குழுமியிருந்தோருள் பிரதானமானவர்களுக்குக் காண்பிக்கப்பட்டது. அக் கடிதத்திலுள்ள கையயாப்பம் அஷ்ரபின் கையொப்பந்தான் என்பதை அவர்கள் கண்ணாரக் கண்டதும், மெய்பதறிப் போனார்கள். இதுவே தக்க தருணமென்பதைக் கண்டுகொண்ட அந் நயவஞ்சக ஐபக் சபையோரைப் பார்த்து, ‘எனவேதான், எம தன்பிறகுறிய நண்பர்காள்! யாம் வேறு வழியின்றி அக்கணமே அச் சண்டாளனாகிய கொடிய துரோகியைக் காராகிருகத்தில் போட்டு அடைத்துவைக்க நேர்ந்தது. தற்செயலாக இந்தச் சதிமிக்க கடிதம் எம்முடைய கரங்களில் சிக்கியபடியால், விஷயம் இவ்வளவு இலேசாகப் போயிற்று. இக் கடிதம் மட்டும் நம் ஜென்ம சத்துருவின் கைக்கு எட்டியிருக்குமாயின், நம் அனைவரின் கதியும் என்னவாகியிருக்கும் இந்நேரம்? ஐரோப்பிய கிறிஸ்தவர்களின் அநாகரிகப் படையெடுப்புக்களான சிலுவை யுத்தங்களினின்று இம் மிஸ்ரைக் காப்பாற்றிப் பேரையும் புகழையும், கீர்த்தியையும் கியாதியைம் நிலைநாட்டி, நம்மெல்லோரின் சுதந்திரத்தையும் காப்பாற்றிதந்து ரக்ஷித்தருளிய பெயர்போன ஐயூபி சுல்தான்களின் சந்ததியில் உதித்தவனாகத் தன்னைக் கூறிக்கொள்கிற இந்த மூஸாவென்னும் கொடிய பாதகனுக்கு என்ன தண்டனையை நாம் வழங்கவேண்டு மென்பதை, ஏ, என் அறிவிற் சிறந்த குடிமக்களே! நீங்களே கூறிவிடுங்கள்!” என்று ஒரு பெரும்போடு போட்டார்.

“அவனைக் கொல்லுங்கள்! கொல்லுங்கள்!”என்று பல பேர் கத்தினர்.

“இல்லை அவனைக் கிழித்தெறியுங்கள்!” என்று சிலர் கதறினார்கள்.

“அவனது உடலைச் சித்திரவதை செய்து, கண்டதுண்டமாக வெட்டியெடுத்துக் கழுகுக்கும், காக்கைக்கும் ஓநாய்க்கும் விட்டெறியுங்கள்!” என்று மற்றுஞ் சிலர் மேனி துடிக்க அலறினார்கள்.

“அவனைத் தேசப்பிரஷ்டம் செய்துவிடுங்கள், போதும்!” என்று பலாத்காரத்தில் நம்பிக்கையில்லாத சில சாத்விக சமாதானப் பிரியர்கள் செப்பினார்கள்.

“தக்கப்படி பகிரங்கமாக விசாரித்து, குற்றத்தை நிரூபித்து, ஏற்ற தண்டனையை அளியுங்கள்!” என்று ஒரு விவேகமிக்க பெரியார் நிதானமாகச் சொன்னார்.

“பகிங்கர விசாரணை நடத்த வேண்டுமா? கையுங்களவுமாய்ச் சிக்கிக்கொண்டவனை விசாரித்தால், அவன் என்ன சொல்வான்? அவனுடைய சதித்திட்டத்தை அம்பலப்படுத்துகற இக்கடிதமே அவனுக்கு விரோதமாய்ச் சாக்ஷியம் பகரவில்லையா? அவனை விசாரித்து வேறு நம்நேரத்தை வீணாக்க வேண்டுமா? குற்றமிழைத்தவன் எவன் தன்னுடைய குற்றத்தை ஏற்றுக்கொள்ளுவான்? விசாரிக்கப்போனால், கடைசிவரை அவன் தன்னை நிரபராதியென்றே சொல்லிக்கொள்வான்,” என்றுமெருகு கொடுத்துப் பேசினார் முஈஜுத்தீன்.

“ஆம்! வாஸ்தவந்தான், அவனை விசாரிக்கவே தேவையில்லை. அவன் மன்னிக்கமுடியாத குற்றவாளியேதான். நீங்கள் அவனுக்குத் தக்க தண்டனையை விதித்துத்தான் தீர வேண்டும்!” என்று எல்லாப் பிரதானிகளும் ஏககாலத்தில் கூச்சலிட்டார்கள்.

எனவே, நியாயத்தைத் தீர வசாரித்துத் தீர்பபளிக்க வேண்டுமென்று கூறிய அவ்வொரே பெரியாரின் கட்சி கடுங்காற்றில் சிக்கிய கலமாகிவிட்டது. சுல்தான் முஈஜுத்தீனோ, அதுதான் தருனமெனக் கருதி, “பொது மக்களே! பிரதானிகளே! யாம் எம் கடமையில் இமியளவும் பிறழ மாட்டோம் என்பதை உறுதியாய் நம்புங்கள். நீங்களெல்லீரும் எம் சபையைச் சிறப்பித்து எமக்குக் கூறிய மந்திராலோசனைகளை நாம் நன்றியடன் ஏற்றுக்கொண்டோம். எமக்குப் போதிய அவகாசம் கொடுங்கள். இந்தச் சதித்திட்டத்தின் முழு விருத்தாந்கங்களையம் நாம் நன்கு அலசி ஆராய்ந்து பார்த்து, இவ்விஷமத் திட்டம் எவ்வளவு தூரத்துக்கு வேர்விட்டிருக்கிற தென்பதைப் பூரணமாக அறிந்து, எவ்விதமான தண்டனையை அக் குற்றவாளிக்கு வழங்கலாமோ, அவ்விதமான ஏற்ற தண்டனையை அவனுக்கு நாம் நிச்சயமாக வழங்குவோம். தேசத்துரோகக் குற்றமென்பது மன்னிக்கத்தக்க குற்றமல்லவே?” என்று கூறி முடித்து அரசவையை விட்டகன்றார்.

சரித்திராசிரியர்கள் இன்றுங்கூட வெவ்வேறு அபிப்பிராயத்துடனே சண்டையிட்டுக்கொண்டே கிடக்கிறார்கள். ஐயூபி வம்சத்தின் இறுதி சுல்தான் மலிக்குல் அஷ்ரபேதான் என்பதை எல்லாச் சரித்திராசிரியர்களுமே ஏகமனத்துடன் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவரிடமிருந்த ஸல்தனத்தைப் பறித்துக் கொண்ட ஐபக் அந்த ஐயூபிச் சிறுவரை என்ன செய்தார் என்பதிலேதான் மாறுபட்ட அபிப்ராயங்கள் மலிந்திருக்கின்றன. ஒரு சில சரித்திராசிரியர்கள், ஐயூபி மூஸா, ஐபக்கால் இரகசியமாகப் படுகொலை புரியப்பட்டாரென்று எழுதுகிறார்கள். வேறு சிலர், ஷஜருத்துர்ரே அஷ்ரபைக் கொன்று பழிதீர்த்துக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இன்னம் சிலர், சிறையிடப்பட்ட அந்தச் சிறு வாலிபர் இரகசியமாய் வெளியேறி எங்கோ ஓடிமறைந்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், சரியான சரித்திரங்களை ஒழுங்காகத் திரட்டிக் கொடுப்பவர் என்று எல்லாராலும் ஒருங்கே புகழப்படும் பெரிய சரித்திராசிரியர், ஸர் ஸையித் அமீர் அலீ, P.C., C.I.E., LL.D., M.A., தமது ”A Short History of the Saracens” என்னும் நூலின் 389-ஆம் பக்கத்தில், மலிக்குல் அஷ்ரப் அவருடைய உறவினர்கள் வாழ்ந்திருந்த ஏமன் தேசத்துக்குத் திருப்பியனுப்பப்பட்டு விட்டதாக வரைந்துள்ளார்.

மேலும் கதையை வளர்த்துவதில் பயனில்லை. அமீருல் மூஃமினீன் கலீஃபா முஸ்தஃஸிம் பில்லாஹ் சென்ற கி.பி. 1250 ஆகஸ்ட், 5-ஆம் தேதி மிஸ்ரின் ஸல்தனத்தின்மீது நட்டு வைத்த ஐயூபி சுல்தான் மலிக்குல் அஷ்ரப், 1255-ஆம் ஆண்டிலே (ஹிஜ்ரி 652) இருக்கிற இடம் தெரியாமல் ஒழிந்து போய்விட்டார். எனவே, சென்ற நான்காண்டுகளுக்கு மேலாக இரட்டையாட்சிக்கு உட்பட்டுக் கிடந்த மிஸ்ரின் ஸல்தனத் இதுபோது ஒரே சுல்தானாகிய முஈஜுத்தீன் ஐபக்கின் கையிலே சென்று சேர்ந்துவிட்டது. மிஸ்ர் சரித்திரத்தின் ஐயூபி வம்சாவளி இவ்வண்ணமாக அந்த இறுதி சுல்தான் மலிக்குல் அஷ்ரபுடனே தேய்ந்து மறைந்தது.

மலிக்குல் முஈஜுத்தீன் ஐபக் மிஸ்ரின் ஏகபோக சுல்தானாகத் திகழ்வதற்கு ஒரே ஒரு தடையாயிருந்த மலிக்குல் அஷ்ரபின் மறைவு ஒருவிதமாக முடிவடைந்த பின்னர், அந்த ஐபக் அரியாசனத்தில் தலைநிமிர்ந்து அமர்ந்துகொண்டு விட்டார். ஏதோ, தமக்குத் தலைமுறை தலைமுறைப் பாத்தியதையாக விளங்கிவருகிற மிஸ்ரின் ஸல்தனத்தை மிகவும் நியாயபூர்வமாகத் தாமே அடைந்துகொண்டு விட்டதாக மனப்பால் குடிக்க ஆரம்பித்தார். மிஸ்ர் சிம்மாசனந்தான் சபிக்கப்பட்டதோ அல்லது அதன் மீது அமர்கிறவர்கள்தாம் அப்படிச் சபிக்கப்பட்டவர்களாக மாறிப்போய் விடுகிறார்களோ, அஃது ஆண்டவனுக்கே வெளிச்சம்! பாருங்கள்! ஷஜருத்துர் முஈஜுத்தீனை மணந்திராமற் போயின், அவர் அந்த அரியாசனத்தைக் கனவில்கூடக் கண்டிருக்கப் போவதில்லை. ஷஜருத்துர் ஸாலிஹின் அரண்மனைக்குள்ளே தெய்வாதீனமாய்க் காலடியெடுத்து வைக்காமற் போயிருப்பின், ஷஜருத்துர்ரேகூட மிஸ்ரின் சிம்மாசனத்தைக் கருத்தில் கருதியும் இருக்கப் போவதில்லை! அப்படிப்பட்ட ஸல்தனத்துக்கு குருட்டு வாய்ப்பில் சுல்தானாக உயர்ந்துவிட்ட முஈஜுத்தீன் ஐபக்குக்குப் பொல்லாத காலம் உதயமாகி விட்டபடியால், மிஸ்ரின் சிம்மாசனத்தில் தாமே என்றென்றும் ஏகபோக சுல்தானாக வீற்றிருக்க வேண்டுமென்னும் எல்லையற்ற பேராசையும் அப் பேராசையை நிறைவேற்றிக் கொள்வதற்கு உறுதுணையாய் விளங்கக் கூடிய புர்ஜீகளையே நண்பர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்னும் விபரீத புத்தியும் முளைத்தெழ ஆரம்பித்தன.

தூரான்ஷாவின் துக்க சம்பவம் நிகழ்ந்து இன்னம் ஐந்தல்லது ஆறாண்டுகள் கூடப் பூர்த்தியாகவில்லை யென்றாலும், முஈஜுத்தீனுக்கு அது ஞாபகமில்லை. என்னெனின், அரசியலில் ஒரு சம்பவம் குறித்துள்ள ஞாபகம் நெடுநாள் நீடித்து நிற்பதில்லை யென்பார்கள். அல்லது, ஞாபகம் இருந்ததென்று வைத்துக் கொண்டாலும், தாம் சகலவற்றையும் சாதுர்யமாக நிர்வகித்து முடிக்கலாமென்னும் விபரீத நம்பிக்கை யிருந்துவந்தது போலும். மேலும், என்னதான் அவர் ஏகபோக சுல்தானாகக் காட்சியளித்து வந்தபோதினும், அந்தப்புரத்திலிருக்கிற மாஜீ அடிமைப் பெண் ஷஜருத்துர்ரின் கைப்பொம்மையாகத் தான் விளங்கி வருவதிலுள்ள பேரவமானத்தை அவரால் சகிக்க முடியவில்லை. எல்லா விஷயத்திலும் ஷஜருத்துர் சொல்லுகிறபடியே தாம் நடக்கவேண்டியிருப்பதையும், அந்த அம்மையாரை மீறித் தம்மால் ஒன்றும் செய்ய முடியாமலிருப்பதையும் உன்னியுன்னி, முஈஜுத்தீன் மெய்துவண்டார். எல்லா அரசாங்க அலுவல்களிலும் ஷஜருத்துர் நேரே தலையிடுவதையும் சர்வ அதிகாரங்களையும் அவ்வம்மையாரே செலுத்துவதையும் அந்த சுல்தானால் சற்றும் பொறுக்க முடியவில்லை. மேலும், ஷஜருத்துர் தாமாகப் பார்த்து ஐபக்குக்கு இட்ட பிச்சைதானே இந்த ஸல்தனத் என்பதை அந்த அம்மையார் அடிக்கடி இடித்துக் காட்டுவதை அவரால் கொஞ்சமும் பொறுக்க முடியவில்லை.

ஷஜருத்துர்ரைத் தொலைத்துத் தலைமுழுகலாம் என்றாலோ, முஈஜுக்கு அவ்வெண்ணத்தை உள்ளத்தால் சிந்திக்கவும் தைரியம் எழவில்லை. எங்கே தம்மையே அவ்வம்மையார் தீர்த்துக் கட்டிவிடுவாரோ என்ற பேரச்சம் அதிகம் வாட்டத் தொடங்கிற்று. அன்றியும், ஐபக்கின் உள்ளத்துள்ளே அந்தரங்கமாய்த் தோன்றுகிற எந்த எண்ணத்தையம் ஷஜருத்துர் சுலபமாகத் தெரிந்து கொள்ளக்கூடிய மிகப்பெரிய சாமார்த்திய சாலியாயிருந்தது வேறு அந்த சுல்தானின் வயிற்றைக் கலக்கிக் கொண்டிருந்தது. எனவே, அவர் எப்படியாவது தம் ஆட்சியின்கீழே புர்ஜீகளை வலுவடையச் செய்துகொண்டு, பஹ்ரீகளையும் ஷஜருத்துர்ரையும் நாளடைவில் வீழ்த்திவிடுவதென்று மனத்துள்ளே கோட்டை கட்டிக்கொண்டு விட்டார். ஆகவேதான், தாமே ஒரு பஹ்ரீயா யிருந்தும், புர்ஜீகளைக் கருணையுடன் நடத்த ஆரம்பித்தார், – தம் சுயநலமிக்க பேராசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக!

ஆனால், ஷஜருத்துர்ரைப் பற்றியென்றாலோ?

இறுதி ஐயூபியின் வீழ்ச்சிக்காக வின்னியாசமான திட்டம் வகுத்துக் கொடுத்த பெரிய சூழ்ச்சிக்கார அவ் விவேகி, என்னென்ன நடக்குமென்பதை மட்டுமின்றி, என்னென்ன நடக்காதென்பதைக்கூட முற்கூட்டியே உணரும் ஏழாவதறிவைப் பெற்றிருந்தா ரென்பதை நாம் கூறத் தேவையில்லை. என்றைக்கு மலிக்குல் அஷ்ரப் கலீஃபாவால் நியமனஞ் செய்து காஹிராவுக்கு அனுப்பப்பட்டாரோ, அன்றுமுதல் இன்றுவரை அல்லுபகல் அனவரதமும், கனவிலும் நனவிலும் ஒரே கருத்துடனேயே சகலவித விசித்திரமிக்க சூழ்ச்சிகளையும் சூழ்ச்சிக்குமேல் சூழ்ச்சிகளையும் சூளுறவுகளையம் சபதங்களையும் மேற்கொண்டு வந்த அவ்விசித்திர மாதரசியார் இனியொரு முறையும் ஏமாற்றமடைவார், அல்லது தோல்வியைப் பெற்றுக்கொள்வார் என்றா நீங்கள் கருதத் துணிகின்றீர்கள்? ஷஜருத்துர் முஈஜுத்தீனுக்குப் பேராசை பிடிக்குமென்பதையும் அறிவார்; அப்படிப்பட்ட பேராசையை நிறைவேற்றிக்கொள்ள புர்ஜீகளின் உதவியைப் பெறுவார், அல்லது பெற முயலுவார் என்பதையம் அறிவார்; அப்படிப் பெற்றுக்கொண்டதும் ஷஜருத்துர்ராகிய தம்மையேகூட அந்த சுல்தான் ஒழித்துக் கட்டிவிட்டு, அவருடைய முதல் மனைவி மைமூனாவையே பட்டமகிஷியாக்கிவிடுவாரென்பதையும் அவர் நன்குணர்வார்.

எனினும், தம்முடைய சக்தியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மிகப் பொறுமையுடன் இருந்துதானாக வேண்டும் என்பதை ஷஜருத்துர் நன்கு தெரிந்துகொண்டார். மேலும் அந்த சுல்தான் முஈஜுத்தீன் போகிற போக்குக்குச் சிறிது காலம் விட்டுக் கொடுத்தால் மட்டுமே தாம் அசைக்க முடியாத பலத்தைப் பெற்றுக் கொண்டுவிட முடியுமென்றும் உணர்ந்து கொண்டார். எல்லாவற்றுக்கும் மேலாக, ஷஜருத்துர் முஈஜுத்தீனை அக்கணமே பகைத்துக் கொணடு, அவரை ஸல்தனத்தைவிட்டு, அல்லது உலகத்தையேவிட்டு வெளியேற்றி விடாமல் நாள் கடத்திக் கொண்டிருந்ததற்கு முக்கிய காரணம் ஒன்று இருந்தது: எப்படியாவது தாம் முஈஜுத்தீனுக்கு ஓர் ஆண் மகவைப் பெற்றுவிட வேண்டுமென்று அந்தரங்கத்தில் ஆசை கொண்டிருந்தது. என்னெனின், தமக்கொரு பிள்ளை பிறந்தால் அதையே தமக்கு பிற்கால வாரிஸாக ஆக்கிவிடலாமென்று ஷஜருத்துர் எண்ணியிருந்தார். ஆனால், ஆண்டவனது நாட்டந்தான் வேறு விதமாயிருந்தது. குழந்தை என்னும் செல்வத்தையோ, பொருள் என்னும் செல்வக் குவியலையோ அந்தப் பராபரன் தான் நாடியவர்களுக்கு மட்டுமே யன்றோ கொடுத்தருள்கிறான்?

இவ்விதமாக, சுல்தானின் அரண்மனைக்குள்ளே சுல்தான் தம் மனைவியை மிஞ்சுவதற்குத் திட்டமிடவும், ஷஜருத்துர், மடைத்தலையில் வாடியிருக்கும் கொக்கைப் போல் சமயம் வாய்ப்பதற்குக் காத்து நிற்கவுமாக நாட்கள் பல மெல்லமெல்ல நகர்ந்து கொணடிருந்தன. ஆனால், முஈஜுத்தீன் எந்நேரமும் ஷஜருத்துர்ருக்கு அஞ்சி அடிபணிந்து கொண்டுதான் இருந்தாரென்பதை நாம் மீட்டும் கூறத் தேவையில்லை.

அரண்மனைக்குள்ளே இப்படியிருக்க, மைமூனாவின் இல்லத்துக்குள்ளே சென்று சிறிது எட்டிப்பார்ப்போம்:- உத்தியோகத்தினிமித்தம் அன்று விட்டைவிட்டு வெளிச்சென்ற காதலர் இன்று வருவார், நாளை வருவார் என்று அந்தக் கற்பிற்சிறந்த மாது சிரோமணி தினமும் காத்துக் கொண்டே, சிறுகச் சிறுக இந்த நாலரை வருடங்களை எப்படியோ ஓட்டிவிட்டாள். ஏமாற்றத்தா லேற்பட்ட சோகமும் காத்திருந்தமையால் விளைந்த கலக்கமும் அவ் வம்மையைக் கிழடுதட்டச் செய்துவிட்டன. சிறுவன் நூருத்தீன் அலீயோ வெகு விரைவாக வளர்ந்து அழகிய பாலகனாக உருமாறி, தினமும் கல்வி கற்றுவருவதில் முனைந்து நின்றான். வாழக்கையில் பெறுவெறுப்புத் தோன்றிவிட்ட மைமூனாவுக்கு இந்தக் கான்முளை மைந்தனொருவன் மட்டுமே ஊன்றுகோலாய் விளங்கிவந்தான். சமயா சமயங்களில் விருத்தாப்பிய கிழவரான மைமூனாவின் தந்தை அபுல்ஹஸன், தம்முடைய புத்திரி கணவனை ஷஜருத்துர்ருக்குப் பறிகொடுத்து விட்டுக் கண்ணீர் சிந்திக்கொண்டு கவலை வெள்ளத்திலேயே நீந்திக்கொண்டிருக்கிறாளென்னும் செய்தியைக் கேட்கச் சகியாமல் தம் மகளுக்கு ஆறுதல்கூற வந்துவந்து போவார். அவருக்கும் தம்முடைய பேரனாகிய நூருத்தீன் அலீமீது மிகுந்த வாஞ்சையுண்டு. அங்கு வரும் போது ஒவ்வொரு முறையும் அக் கிழவர் மைமூனாவையும் நூருத்தீனையும் தம்முடன்கூட வந்துவிடச் சொல்லி வற்புறுத்துவார்.

“மைமூனா! பாம்பின் வாய்க்குள் அகப்பட்ட தேரையும், யானையின் வாய்க்குள் புகுந்த கரும்பும், நெருப்பில் சிந்திய நெய்யும், கமர் வெடிப்பில் விட்ட பாற்குழம்பும், மிகப் பெரிய உலோபியின் கையிலகப்பட்ட பொருளும் ஒரு வேளை தப்பி நம்மிடம் வந்து சேர்ந்தாலும் சேரலாம்; ஆனால், அந்த ஷஜருத்துர்ரின் கைக்குள் சிக்கிய உன் கணவன் எங்கிருந்து மீளப் போகிறான்? நீ என் பேச்சைக் கேளம்மா! இப்போதே புறப்பட்டு என்னுடன் வந்துவிடு.நாம் வேறு எந்நாட்டுக்குச் சென்றாவது தப்பிப் பிழைக்கலாம். உன் மைந்தன் நூருத்தீன் பெரிய சாமர்த்தியசாலி. அவன் முகக் களையைப் பார்த்தாலே ராஜ தேஜஸ் பிரகாசிக்கிறது. இனியொரு காலத்தில் அவன் அதிசம்பன்ன னாவான். அவனை நாம் வைத்துக் கொண்டே நம் வாழ்க்கையைச் சந்தோஷமாகக் கழிக்கலாம். பெற்ற தந்தையாகிய நான் சொல்கிற என் பேச்சைத் தட்டாதே அம்மா!” என்று கிழவர் பலப்பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறார்.

“அபூ! தங்கள் புத்திரியாகிய என்மீது தாங்கள் கொண்டிருக்கிற வாத்ஸல்யத்தாலேயே இப்படியெல்லாம் உபதேசிக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால், மனைவியாகிய எனக்கு என் கணவர்மாட்டுச் சில கடமைகள் உண்டென்பதைத் தாங்கள் மறந்துவிடலாமா? இன்றில்லாவிட்டாலும், நாளையொரு காலத்தில் அவர் என்னை விழையாமலா போய்விடுவார்? அல்லாமலும், அவர் என்னிடம் கோபமாக இவ் வீட்டைவிட்டு வெளியேறவில்லையே! அல்லது என் மீது அதிருப்தி கொண்டு திரஸ்கரித்துச் செல்லவில்லையே! அல்லது என்னிடம் எத்தகைய வீண்வம்பையும் வளர்த்துச் சண்டையிட்டுப் போகவில்லையே! எப்போதும் பார்க்கிற கருணை ததும்பிய அழகிய நோக்குடனே பிரிய மனமின்றித்தானே, சாண்வயிறு வளர்க்க உத்தியோகத்தினிமித்தம் வெளிச்சென்றார்! அவர் என்னதான் ஷஜருத்துர்ரின் சாஹசத்துக்குப் பலியாகிவிட்டாரென்றாலும், என்றைக்காவது ஒரு நாளைக்கு என்னைக் காண்பதற்காக என்றில்லாவிடினும், அவர் பெற்ற புத்திர பாக்கியத்தைக் கண்டு களிக்கவாவது இப்பக்கம் திரும்ப வருவாரல்லவா? ஆவலுடன் வருகிற அவரை அடியோடு ஏமாற்றுவதற்காகத் தாங்கள் திட்டமிடுகிறீர்களே! வேண்டாம், வேண்டாம், வேண்டாம்!” என்று மைமூனா பலமுறையும் கதறியழுதிருக்கிறாள்.

கிழவர் என்ன செய்வார் பாவம்! வந்த வழியே திரும்பிச் சென்று விடுவார். பிறகு மீண்டும் சில தினங்கள் கடந்து திரும்பி வருவார். பிறகும் திரும்பிப் போவார். இங்ஙனமாக நாட்க ளனேகம் ஓடின.

ஒருநாள் அவருக்கே ஆத்திரம் அதிகரித்து விட்டது. “மகளே! நீ ஏன் முரட்டுப் பிடிவாதம் பிடிக்கிறாய்? உன் புருஷன் இனியும் திரும்பப் போகிறானென்றா நீ பகற்கனவு காண்கிறாய்? அவன் இப்போது மிஸ்ரின் ஏகபோக சுல்தானாக உயர்ந்துவிட்டான். ஷஜருத்துர் என்னும் அச் சாகசக் கள்ளியுடன் பூவுலக வாழ்க்கையைச் சுவர்க்கலோகப் பேரானந்தமாகக் களித்துச் சுவைத்துக்கொண்டிருக்கிறான். நீயோ, பித்துப் பிடித்துப்போய், முடவன் கொம்புத்தேன் தன் வாயில் வந்து தானே விழும் என்று வேலையற்றுப் போய்க் காத்துக் கொண்டிருந்த கதையாக அவனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாய். நீ இனியேனும் என் பேச்சைக்கேட்டு இங்கிருந்து வெளியேறி, என்னுடன் வந்துவிட்டால், பிழைத்துப்போவாய். இன்றேல், ஏங்கி ஏங்கி நெஞ்சம் புண்ணாகி மண்ணுக்கு இரையாய் விடுவாய். அல்லது ஷஜருத்துர் என்னும் உன்னுடைய சக்களத்தியின் சதிக்குப் பலியாவாய். அவள் என்னவோ இலேசுபட்டவளென்று எண்ணிக் கொண்டு, நீ சிறுபிள்ளைத்தனமாய் நெருப்புடன் விளையாடுகிறாய்!” என்று கடுமையான தொனியில் கத்தினார்.

“ஏன், என் சக்களத்திக்கும் யானென்ன கேடு விளைத்தேன்? அல்லது அவளுக்கு நான் கெடுதி என்ன நினைத்தேன்? அவள் நெருப்பாயிருந்தால்தான் எனக்கென்ன? அல்லது அதனினும் பொல்லாத கொள்ளியா யிருந்தால்தான் எனக்கென்ன? என் கணவரை என்னிடமிருந்து கபடத்தனமாய்ப் பறித்துக் கொண்ட அவள் என்னை என்ன செய்ய முடியும்?” என்று அகங்காரமிக்க ரோஷத்துடன் கேட்டாள் மைமூனா.

“என்ன செய்ய முடியுமா? ஏன்? அவளால் என்னதான் செய்ய முடியாது? துருக்கி தேசத்தவளுக்கு எப்படிப்பட்ட தேள்கொடுக்கு இருக்கு மென்பதை நீ எங்ஙனம் அறிவாய்? அவள் மகா நீலி. எதையும் செய்ய வல்ல கள்ளி; பொல்லாத சாகஸக்காரி. தன் சுயநலத்துக்காக எப்படிபபட்ட நினைக்க முடியாத கபடநாடகத்தையும் நடிக்கக் கூடியவள்; தன் முன்னேற்றத்துக்குத் தடையாயிருப்பதாகக் கருதும் விஷயங்களை, அல்லது மனிதர்களைத் தன்னுடைய கால் கட்டைவிரலால் அரை நொடியில் அமுக்கி நசுக்கியெறிய வல்ல காதகி! நீ உயிருடனே இருப்பது இடைஞ்சல் என்று அவள் தப்பித்தவறி நினைத்துவிட்டாலே போதும்! நீ எங்கே போவாயென்பதும் எந்தக் கதியாய் முடிவாயென்பதும், உனக்கே தெரியாமலாகிவிடும். சும்மாவா அவளுடைய நிழல் கூட எவர்மேலும் விழக்கூடாதென்று பற்பல மக்கள் பயப்படுகிறார்கள்?

“கணவனின் வயிற்றைக் கிழித்துக் குடலைப் பிடுங்கித் தைலமிட்டுத் தைத்தவள்அவள்! தூரான்ஷாவின் நெஞ்சைப் பிளந்து ஹிருதயத்தை நையப் பிசையச் செய்தவள் அவள்! அஷ்ரபின் கதியை அதோ கதியாய்ப் போய் முடியச் செய்த கபட நாடக சூத்திரப் பாவை அவள்! அவள் இன்னம் என்னென்ன பயங்கர படுகொலைத் திட்டங்களைச் சித்தம் செய்து வைத்திக்கிறாளோ,எ வரால் அறிய முடியும்? அவளிடம் வலியச் சென்று சிக்கிக்கொண்டிருக்கும் முஈஜ் எப்படியாவது தொலையட்டும்! ஆனால், நீயும் உன் புத்திரனுமாவது தப்பிப் பிழையுங்களே! என் பேச்சைக் கேளம்மா! என் அனுபவத்தைக் கொண்டு நான் சொல்கிறேன். நீ உன் சக்களத்திக்கு எத்தகைய கெடுதியும் நினைக்காமலிருக்கலாம். ஆனால், நீ இருப்பதே தனக்குத் தீங்கென்று அவள் நினைத்துவிட்டால், அதுவே போதுமே!… என் அறிவுரையைச் சற்றே கேள்!”

“அபூ! உலகத்தில் சத்தியந்தானே இறுதியில் வெற்றி பெறும்? அவள் என்ன ஆட்டம் ஆடினாலும், என்ன ‘பாட்டம்’ பாடினாலும், நம் எல்லார்க்கும் மேலேயுள்ள ஆண்டவனென்ன உறங்கியா போய்விட்டான்? ஏன் வீணே பயப்படுகிறீர்கள்? என் கடமையிலிருந்து நான் சிறிதும் விட்டுக் கொடேன். முதலில் என் கணவர்; ஏனையவெல்லாம் அப்புறந்தான். அவர் என்னை மறந்தாரென்பதற்காக நான் அவரை வெறுத்துத் தள்ளுவதென்பது, அல்லது அதற்காக இவ்வீட்டைவிட்டு வெளியேறுவதென்பது முக்காலும் முடியாது.”

“மகளே! உலகோரெல்லாரும் உத்தமர்களாயிருந்து, கயவர்கள் கம்மியாயிருந்த காலத்திலே சத்தியம் நிலைக்குமென்றும், அசத்தியம் அழிந்து விடுமென்றும் நம்பலாம்! இப்போது அப்படியில்லை. உலகத்தில் உத்தமர்கள் அகப்படுவது குதிரைக் கொம்பாயிருக்கிறது. எனவே, நீ சொன்ன தத்துவார்த்தத்தைத் திருப்பிப் படிக்க வேண்டியதுதான்! ஆண்டவனுக்குத் தூக்கமில்லையென்பது வாஸ்தவந்தான் ஆனால், உலகோர் அப்படி நினைத்து தாலாட்டிக் கொண்டிருக்கிறார்கள். நீ உன் கணவன்மாட்டுக் கொண்டுநிற்கிற சில கடமைகளுக்கொப்பாகவே, அவனும் உன்மாட்டுப் பல கடமைகளைச் செலுத்தக் கட்டுப்பட்டிருக்கிறான். எப்பொழுது அவன் தன்னுடைய கடமைகளை நிறைவேற்றுகிற வி­யத்தில் விபரீதமாகத் தவறிவிட்டானோ, அப்போதே நீ அவன்மாட்டுக் காட்ட வேண்டிய பொறுப்புகளும் உன்னைவிட்டு நீங்கிவிட்டனவென்றே சொல்ல வேண்டும். இதுதான் நம் தூய்மையான மார்க்கத்தின் திவ்ய போதனை. இறைவனுக்கு இணை வைப்பவர்களைப் போலவும் சன்மார்க்கத்தை நிராகரிப்பவர்களைப் போலவும், ‘கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புரு­ன்; அவன் என்ன தீமை செய்தாலும், மனைவி வாயைப் பொத்திக்கொண்டு வாளா இருக்க வேண்டும்,’ என்று நீ வாதிப்பதை நான் வன்மையாய்க் கண்டிக்கிறேன்.”

கல்லில் நார் உரித்தாலும், மைமூனாவின் எஃகு மனத்தைக் கரைக்கவைப்பது எளிய காரியமன்று. எனவே, அவள் தந்தை அபுல்ஹசன் அறிவுறுத்திய சற்போதனைகளை அவள் இறுதிவரை ஏற்கவே இல்லை. என்றைககேனும் ஒருநாள் நல்ல நாளாக விடியுமென்றே அவள் திண்ணிதா யெண்ணிக் காத்துக் கிடந்தாள். உலக வாழ்க்கையென்பது காத்திருத்தலையும், நம்பியிருத்தலையும், பொறுத்திருத்தலையுமே பொறுத்து நிற்கிறதென்னும் உண்மையில் அவள் தன் உறுதியை ஒரு சிறுதும் தளர்த்திக் கொள்ளவில்லை.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார் 

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment