சுல்தானாவின் சிந்தனை

அரபு நாட்டுக் கதையில் வருகிற பொய்யான கட்டுக் கதைகளைவிட அதிசயமிக்க இந்த ஷஜருத்துர்ரின் ஆச்சரியமான மெய்யான காதையை கலீஃபாவின் தூதுவன் பிளந்தவாய் மூடாமல் முற்றும் கேட்டு முடித்தான்.

சில சந்தேகங்கள் எழுந்தன; அவற்றைத் தெளிவித்துக் கொள்வதற்காகக் குறுக்கு விசாரணை புரிந்தான். அவன் விடுத்த கேள்விகளையும் பெற்றுக்கொண்ட விடைகளையும் பாருங்கள்:-

“அமீர் தாவூதால் அவ்வளவு பிரியத்துடன் வளர்க்கப்பட்ட ஷஜருத்துர், சுல்தான் ஸாலிஹை மணந்து கொண்டதும், எப்படித் திடீரென்று உங்கள் இனம் முழுதையுமே வெறுக்கத் துவக்கிக் கொண்டாள்?”

“பேராசை யாரை விட்டது? இவள் எப்போது சுல்தான் ஸாலிஹை மணந்து கொண்டாளோ, அப்போதே இந்த ஸல்தனத்தைத் தன் வாரிஸ் அடைய வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டாள். ஆனால், ஆண்டவன் வேறுவிதமாக நாடியிருந்தமையால், இவளுக்குப் பிறந்த ஒரே சிசுவான மன்ஸூர் கலீலையும் தன்னிடம் அழைத்துக் கொண்டான். வேறு பிள்ளை பெருவதற்குள் சுல்தான் ஸாலிஹ் ஷாமுக்குப் போய்விட்டார். திரும்பி வந்ததும் வியாதியாய்ப் படுத்து உயிர் துறந்து வட்டார். தாற்காலிக ஆட்சி புரிந்து ஸல்தனத்தின் ருசியையெல்லாம் முழுக்க முழுக்க அனுபவித்தபடியால், வெறும் அனாதையாயிருந்தவளுக்கு அதிகமான பேராசை தோன்ற ஆரம்பித்துவிட்டது. பட்டத்துக்கு வாரிஸாகத் தூரான்ஷா இருக்கிற வரையில் இவள் சுல்தானாவாக உயர்வது முடியாதென்பதை இவளே நன்கறிவாள். எனவே, என்ன மாதிரியான கபடமார்க்கத்தைக் கடைப்பிடிக்கலாமென்று யோசித்தாள். சுல்தான் ஸாலிஹைவிடத் தூரான்ஷா விவேகியாதலால், பஹ்ரீகளை நேசிப்பது பேராபத்தென்பதை யூகித்துக்கொண்டு, அவர்களை அறவே வெறுத்து, தலைமுறை தலைமுறையாக இந்த ஸல்தனத்துக்கு நிஜபக்தியுடன் தொண்டூழியம் புரிந்துவரும் எங்கள் நட்பை அவர் பெற்றுக்கொண்டார். இதற்கிடையில், துரோகியான இந்த ஷஜருத்துர் அமீர் தாவூதின் உப்பைத் தின்று வளர்ந்திருந்தும், தன் சுயநலத்தின் நிமித்தமாக ஸாலிஹ் உயிருடனிருந்த காலத்திலேயே அந்த பஹ்ரீகளுடன் ஞேயம் பூண்டிருந்தாள். சுல்தான் காலஞ்சென்று விட்டதைப் பகிரங்கப்படுத்தி விட்டால் நாங்கள் எங்கே தூரான்ஷாவுக்காகக் கக்ஷி கட்டிக்கொண்டு விடுவோமோ என்று பயந்து, பிரேதத்தையும் மார்க்கத்துக்கு விரோதமாக, ‘தபன்’ செய்யாமலே மூடிவைத்திருந்தாள். ருக்னுத்தீன் இவளுக்கு முழுக்க முழுக்க உட்கையாயிருந்தான். கபடத்தனமாகத் தூரான்ஷாவைப் பேருக்காகவாவது பட்டமேற்றி வைத்துவிட்டுப் பிறகு கொலை புரிந்து விடுவதென்றும் முதலிலேயே அவர்கள் திட்டமிட்டுக் கொண்டார்கள். எல்லாம் அவ்விரு துரோகிகளும் போட்ட திட்டப்படியே நடந்தேறின.”

“ஷஜருத்துர் தானே பட்டத்துக்கு வரவேண்டுமென்று ஆதியிலேயே நோக்கங் கொண்டிருந்தால், ஸாலிஹின் பிரேதத்தை ஏன் மூடிவைத்தாள்? தூரான்ஷா ஷாமிலிருந்து திரும்பி வருகிறவரையில் ஏன் காத்திருந்தாள்? அவள் அப்போதே ராணியாகியிருக்க வேண்டியதுதானே?”

“இதிலென்ன விந்தையிருக்கிறது? யுத்தம் நடந்து கொண்டிருக்கையில் ஒரு பெண்பிள்ளை எப்படித் தன்னை அரசியாக்கிக் கொள்ள விரும்புவாள்? அன்றியும், வெற்றி தோல்வி எப்படிப் போய் முடிகிறதென்பதைப் பார்த்துக்கொள்ளலாமென்றும், தோல்வி ஏற்பட்டு விட்டால் எல்லாம் ஸாலிஹின் தலையோடு தொலையட்டுமென்றும், வெற்றி கிடைத்து விட்டால் எல்லா லாபத்தையும் தான் அடையலாமென்றும் இவள் எண்ணியிருந்தாள். லூயீ கைதியாகப் பிடிபட்ட அன்றிரவே தூரான்ஷா இந் நகரின் எல்லையை எட்டிவிட்டமையால், இவள் வேறுவழியின்றித் தூரான்ஷாவைப் படுகொலை புரியும் திட்டத்தைச் சற்று ஒற்றிப்போட நேர்ந்தது. மேலும், கணவனை இழந்த கைம்பெண் இத்தா என்னும் துக்கங் காக்காமல் பட்டத்துக்கு ஏறினால், பொதுமக்கள் உட்பட எல்லாரும் கிளர்ச்சி செய்வார்களே என்று பயந்து, ஸாலிஹ் மாண்டவுடனே தன்னை ஸுல்தானாவாகப் பரகடனம் செய்துகொள்ளவில்லை. இவள் இப்படி நிதானமாகப் பட்டத்துக்கு வந்ததால்தான் போட்ட திட்டங்களை நன்கு நிறைவேற்ற முடிந்தது. இத்தா என்னும் வெளி வேஷத்தில் இவள் மூலையில் குந்திக் கொண்டு சூழ்ச்சி செய்யவும், ருக்னுத்தீன் என்பவன் இவளை இரகசியத்தில் சந்தித்துச் சந்தித்துப் பேசிச் சதியாலோசனை புரியவும், இதற்கிடையில் பஹ்ரீகள் தங்களுடைய பலத்தைப் பெருக்கிக் கொள்ளவும் முடிந்தன. துருக்கி நாட்டவளான இந்தச் சூனியக்காரியை இலேசுபட்டவள் என்று நினைத்து விடாதே! செத்த கணவனின் குடலைப் பிடுங்கியெறிந்து மூமிய்யாவாக்கக் கூடியவளும், மாற்றாள் மைந்தனின் ஹிருதயத்தைக் கசக்கியெறியும்படி ருக்னுத்தீனை ஊக்கிவிடக் கூடியவளுமாகிய இந்தப் பாதகியை, முண்டைக் காதகியை முட்டாள்களான மிஸ்ரிகள் ‘சுல்தானா! சுல்தானா!’ என்று கட்டித் தழுவுவதை என்ன வெட்கக்கேடென்று கூறுவது? எப்படிப் பட்டரையும் நொடிப் பொழுதில் மயக்கிவிடுகிறாள் இக்கள்ளி. இவள் எவ்வளவு கைதேர்ந்த சூனியக்காரியாயிருந்தால் அவ்வளவு சுலபமாக ஓர் ஐயூபி சுல்தானாகிய ஸாலிஹை நொடிப் பொழுதில் மயக்கித் தன் கைக்குள்ளே போட்டுக் கொண்டிருப்பாளென்று நீ நினைக்கின்றாய்? இந்த ஜால வித்தை கற்ற நீலியை மணந்ததாலன்றோ ஸாலிஹ் அற்பாயுஷில் மாண்டு போயினார்!”

“அது சரிதான்! கலீஃபாவைக் கலக்காமல் தானே பட்டத்துக்கு வந்துவிடலாம் என்னும் தைரியம் இவளுக்கு எப்படிப் பிறந்தது?”

“சூனிய வித்தை கற்றவர்களுக்கு ஈதெல்லாம் என்ன பிரமாதம்! கலீஃபாவா யிருந்தாலென்ன! இவள்தான் எல்லாம் மிஸ்ர்வாசிகளையும் செம்மையாக மயக்கி வைத்துக் கொண்டிருக்கிறாளே! கலீஃபாவை எதிர்க்கும்படியாக எல்லா மக்களையும் தூண்டிவிடுவதுகூட இவளுக்குப் பிரமாதமில்லை. இவள் எதற்கும் துணிந்த கப்பி.”

“கலீஃபாவைத் திரஸ்கரிப்பவளா யிருந்தால், தன்னுடைய நாணயங்களில் இவள் ஏன் தன்னை ‘முஸ்தஃஸிமிய்யா’ என்று பொறித்துக்கொண்டிருக்கிறாள்?”

“இதுவும் ஒருவித ஏமாற்று வித்தைதான்! உலகமக்களின் கண்களில் மண்ணையள்ளிப் போடுவதற்கு இதுவுமோர் உபாயம். தான் கலீஃபாவின் அனுமதியின்மீதே சுல்தானாவா யிருப்பதாக எல்லாரும் எண்ணிக் கொள்ளட்டுமென்று செய்துள்ள தந்திர யுக்தி அது.”

கலீஃபாவின் தூதுவன் கண்களை மூடிக்கொண்டு யோசித்தான். புர்ஜீகள் கூறுவன முற்றும் உண்மையே என்று சிறிதும் சந்தேகமின்றி முடிவுகட்டிக் கொண்டு விட்டான். குளவி, கொட்டிக் கொட்டிக் கீரைப் புழுவைத் தன்னிறமாக்குகிறதெனச் சொல்லப்படும் கதையேபோல், புர்ஜீகளின் பொறாமைமிக்க, ஒருதலைப் பக்ஷமான சில உண்மைக்கு முரணான விவரங்களையும் விருத்தாந்தங்களையும் கலீஃபாவின் தூதுவன் அப்படியே ஏற்றுக் கொண்டதுடன், ஷஜருத்துர்ரைப் பற்றி முதலில் எந்த அளவு தப்பபிப்ராயங் கொண்டிருந்தானோ, அதனினும் அதிகமான முடிவையே எட்டிவிட்டான்.

“சரி நான் போய் அமீருல் மூஃமினீனிடம் இவற்றையெல்லாம் கூறிவிடுகிறேன். ஈதல்லாமல், நீங்கள் என் மூலமாக விடுத்தனுப்ப வேண்டிய விசேஷச் செய்தி இன்னம் ஏதாவது உண்டா?”

“உண்டு. நாங்கள் – புர்ஜீ மம்லூக்குகள் ஒவ்வொருவரும் – இந்த ஷஜருத்துர்ரை இக்கணமே முடிதுறக்கச் செய்யவேண்டுமென்று துடியாய்த் துடித்துக்கொண்டிருக்கிறோம். கலீஃபத்துல் முஸ்லிமீன் முஸ்தஃஸிம் பில்லாஹ் அவர்கள் இவளுக்கு விரோதமாக எவரை அரியாசனத்தில் அமர்த்தினாலும் நாங்கள் ஏற்றுக் கொள்ளச் சித்தமாயிருக்கிறோம். மேலும், காலஞ் சென்ற சுல்தான் மலிக்குல் காமிலின் புத்திரியொருவரின் வம்சாவளியில், ஐயூபி வம்சத்தில், பட்டத்துக்கு வாரிஸான சிறுவரொருவர் இந்த மிஸ்ரிலேயே இருக்கிறார். அவரை கலீஃபா சுல்தானாக்கினாலும் நாங்கள் தயாராய் ஏற்றுக்கொள்கிறோம். மேலும், இந்த அபகரிப்புக்காரிக்கு எதிராக நம்முடைய கலீஃபா என்ன நடவடிக்கை யெடுப்பதாயிருந்தாலும்,  புர்ஜீகளாகிய நாங்கள் எங்கள் உடலில் இறுதித் துளி உதிரம் ஓடுகிற வரையில், கிலாஃபத்துக்காவும் இஸ்லாத்தின் நேர்மைக்காகவும் முற்றமுற்ற ஒத்துழைப்பதாக உறுதி பூண்டிருக்கிறோம் என்பதையும் கலீஃபா அவர்களிடம் நீ போய்த் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்! இதுதான் நாங்கள் உன் மூலமாக அமீருல் மூஃமினீன் அவர்களுக்கு விடுக்கும் தூதுச் செய்தியாகும்!”

இவ்விதமாகவெல்லாம் அத் தூதனுக்கு புர்ஜீ மம்லூக்குகள் விஷபோதனை யூட்டிவிட்டார்கள். அவனும் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு, பாக்தாதை நோக்கிச் சவாராகினான்.

அன்று மலை அரண்மனை யந்தப்புரத்துள் என்ன நிகழ்ந்ததென்பதைச் சற்றே எட்டிப் பார்ப்போம்:-

அரசவையைக் கலைத்துவிட்டு அந்தப்புரம் சென்ற சுல்தானா ஷஜருத்துர் வெளித் தோற்றத்தில் மிகவும் அமைதி குடி கொண்டவர்போல் காணப்படினும், கலீஃபாவின் தாக்கீதை உதாசினஞ்செய்த தம்மீது எப்படிப்பட்ட கொடும் பழிவாங்கும் ஆத்திரத்துடனே அல்முஸ்தஃஸிம் பில்லாஹ் நடவடிக்கைகளை எடுப்பார் என்பதை மன்னஞ் செய்து கொண்டமையால், உள்ளத்தில் அமைதியின்றி வாட்டமுறத் தொடங்கினார். நசாராக்களின் பொல்லாத சிலுவை யுத்தத்திலிருந்து காப்பாற்றிய மிஸ்ர் தேசத்தை கலீஃபாவின் கோபத்துக்கா பலியிடுவது? எல்லா முஸ்லிம் ராஜ்யங்களுக்கும் கலீஃபா தாக்கீது பிறப்பித்து, எல்லாத் தேசங்களையும் மிஸ்ர்மீது பாயும்படி அவர் ஏவிவிட்டால்…?

முன்னம் வெகு பாடுபட்டுக் காப்பாற்றிய இந்த மிஸ்ர் தேசம் இனி என்ன கதிக்கு ஆளாகப் போகிறதோ என்னும் கவலை தோய்ந்த வதனத்துடன் ஷஜருத்துர் கலங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே முஈஜுத்தீன் வந்து சேர்நதார். அந்த அத்தா பேக்கின் முகமும் கலவரமுற்றிருந்தது. ஷஜருத்துர் அவரை வெறிக்கப் பார்த்தார்.

“யா ஸாஹிபத்தல் ஜலாலத்தில் மலிக்கா! கலீஃபாவின் தூதனை புர்ஜீகள் சிலர் வழிமடக்கிக் கொண்டு, அவனிடம் ஏதேதோ இல்லாததையும் பொல்லாததையம் திரித்துக் கூறி, தங்களுக்கு விரோதமாக என்னென்னவோ கோள்மூட்டி யனுப்பியிருக்கிறார்களென்று நம்முடைய உளவனொருவன் இப்போதுதான் என்னிடம் வந்து தெரிவித்தான். இதனால் என்னென்ன சங்கடங்கள் விளையுமோ, தெரியவில்லையே!” என்று அந்த ஐபக் கவலை தோய்ந்த வதனத்துடனே கைபிசைந்து கொண்டே கூறினார்.

“என்ன! புர்ஜீகள் தங்கள் விஷமத்தனத்தை இன்னமுமா விட்டொழிக்கவில்லை?”

“யா ஸாஹிபா! பாம்பின் பல்லிடுக்கிலே விஷமில்லாத வேளையும் இருக்கிறதோ? கலீஃபாவிடமிருந்து உங்களுக்கு விரோதமாகத் தாக்கீது வந்துவிட்டதென்பதை அவர்கள் கேட்டவுடனே உள்ளம் குளிர்ந்து விட்டார்கள். இவ்வளவு பெரிய கலீஃபாவே உங்களுக்கு எதிராக இருக்கும்போது, தாங்களும் தங்களாலியன்ற கைங்கரியத்தை யெல்லாம் செய்ய வேண்டியது மிகவும் அவசியமான கடமையென்று புர்ஜீகள் விஷமம் செய்கிறார்கள். இப்போது யான் தங்களிடம் என்ன கூறவந்தேனென்றால், இந்த புர்ஜீகள் கலீஃபாவின் தூதனின் கையில் பெரிய கொள்ளியைக் கொளுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அவன் பாக்தாதுக்குப் போய், ஏற்கனவே புகைந்து கொண்டிருக்கிற நெருப்பில் எண்ணெயை ஊற்றப் போகிறான். இன்னம் பத்துப் பதினைந்து நாட்களில் கலீஃபா எல்லாவிதமான கேடுகளையும் நமக்கும் நம் ஸல்தனத்துக்கும் விளைக்கப் போகிறார். இதற்கிடையில் நாம் சகலவிதமான முன்னேற்பாடுகளுடனும் முன்னெச்சரிக்கைகளுடனும் எல்லாவிதமான ஆபத்துக்களுக்கும் ஆயத்தமாயிருத்தல் வேண்டும்.”

“இந்த கலீஃபாவுக்கு ஏன் இப்படிப் புத்திகெட்டுப் போய் விட்டது? மிஸ்ரின் ஆட்சிப் பீடத்தில் எவர் அமர்ந்திருந்தால் இவருக்கென்ன? கிறிஸ்தவர்கள் பல்லாயிரக் கணக்கான படைகளுடன் மிஸ்ர்மீது படையெடுத்து வரும்போது, பாக்தாதில் தம் அரண்மனைக்குள் பஞ்சணைமீது மல்லாந்து படுத்துக்கொண்டு குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருக்கிற கலீஃபாவுக்கு மிஸ்ரின் க்ஷேமத்தின்மீது இதுகாலைப் பெரிய கரிசனம் பிறந்துவிட்டது போலும்! நிஜமான ஆபத்தில் சகாயம் செய்வதற்கு ஞானமில்லாதவர் இப்போது என்னவோ பெரிய அபாயம் வந்துவிட்டதைப் போலல்லவோ பர்மான் அனுப்புகிறார்! சென்ற சிலுவை யுத்தத்தில் மட்டும் லூயீ ஜெயித்து இந்த மிஸ்ரை அவன் கிறிஸ்தவ நாடாக ஆக்கிவிட்டிருந்தால், இந்த கலீஃபா அப்போது யாரை சுல்தானாக நியமிப்பார்? கலீஃபாவாகயிருந்தால், என்ன வேண்டுமானாலும், தாம் நினைத்தபடி செய்யலாம் போலும்! ஸலாஹுத்தீன் காலத்திலிருந்து இதுவரை நடந்துள்ள ஆறு சிலுவை யுத்தங்களின் போதும் இஸ்லாத்தின் பிறைக் கொடியைக் காப்பாற்றுவதற்குத் தம்முடைய சிறு சுண்டு விரலைக்கூட உயர்த்தாத கலீஃபாவுக்கு இப்போது இஸ்லாத்தின் சுபிக்ஷத்தின்மீது பெரிய அக்கறை பிறந்துவிட்டது போலும்! ஒரு பெண்பிள்ளை சுல்தானாவாக இருக்கக்கூடாதென்று எந்தக் குர்ஆனில் எழுதியிருக்கிறது? அல்லது எந்த ஹதீது கூறுகிறது? யான் என்னவோ பெரிய ஹராமான காரியத்தைச் செய்துவிட்டதாக அன்னவர் கூறுகிறாரே, இதை எங்கே போய்ச் சொல்லியழுவது!”

“யா ஸாஹிபா! இந்தக் காலத்தில் கலீஃபாவுக்கு யார் மரியாதை கொடுக்கிறார்? அவருடைய பர்மானை எவர் மதிக்கிறார்? கலீஃபாக்களெல்லாம் இருக்க வேண்டிய மாதிரியில் இருந்து, கொடுக்க வேண்டிய மரியாதைகளைக் கொடுத்து, செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து, நடக்க வேண்டிய முறையிலே நடந்துக்கொண்டால் தானே உலக முஸ்லிம்களின் கண்ணியத்தையும் கெளரவத்தையும், மேதையையும் மரியாதையையும் பெற்றுக் கொள்ள முடியும்? அதுதானே இப்போது கிடையாது! கலீஃபாக்கள் இருக்க வேண்டிய இலக்ஷணமும் முறையும் குலபாயெ ராஷிதீன்களான நான்கு நல்ல கலீஃபாக்களோடேயே போய் முடிந்துவிட்டன. கிலாஃபத்தென்னும் ஊழியம் – இஸ்லாத்துக்கான தியாகம் – இப்போது ஊதியம் சம்பாதிக்கும் உயர்ந்த உத்தியோகமாகவல்லவோ மாறிப்போய்விட்டது! இன்னம் நாட்கள் செல்லச் செல்ல, இந்த கலீஃபாக்கள் இப்படியே திருந்தாமலிருந்தால், பின்னொரு காலத்தில் முஸ்லிம்களுக்கு கலீஃபா ஒருவர் இல்லாமலே போய்விட்டாலும் போய்விடலாம்! இப்படியிருக்க, இந்த முஸ்தஃஸிம் பில்லாஹ் விடுத்த பர்மானைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டுவதின்று. எனினும், புர்ஜீகள் தூபம் போட்டிருப்பதால், ஏதும் தீமை விளையலாம்.”

“இது நல்ல வேடிக்கை! இப்போது நாம் என்ன செய்யலாமென்று நீர் கருதுகிறீர்?”

“செய்வது என்ன இருக்கிறது? புர்ஜீகளைத் தவிர இந்த ராஜ்யத்திலுள்ள அத்தனை ஆண்களும் பெண்களும், முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதாரும், ஏழைகளும் பணக்காரர்களும், அடிமைகளும் அமீர்களும், எல்லா வகுப்பினரும் ஏகமானதாகத் தங்களையே சுல்தானாவாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனரென்பது மிஸ்ர் ராஜ்யம் அறிந்த உண்மை. இங்ஙனமிருக்க, தங்களை வீழ்த்துவதற்கோ, அல்லது கலீஃபா இஷ்டப்பட்ட பேர்வழியை இங்கு சுல்தானாக நியமிப்பதற்கோ, எவர் உடந்தையாயிருக்க முடியும்? அவர் பகற்கனவு காண்கின்றார். புர்ஜீகள் ஒத்து ஊதுகிறார்கள். இவ்வளவுதானே? உள்ளூரில் அக்கிரமம் புரிந்த ஒரு மலிக்குல் முஅல்லமை வீழ்த்திய மிஸ்ரிகளுக்கு, கலீஃபா அனுப்புகிற படைகளைத் தடுத்து வீழ்த்துவதா ஒரு பெரிய காரியம்? கிறிஸ்தவர்களையே மண்ணைக் கெளவச்செய்த பஹ்ரீகளாய நாங்கள் இந்த கலீஃபாவின் கூலியாட்களை வெல்வதுதானா கஷ்டம்? தாங்கள் இவ்விஷயத்தில் கலங்க வேண்டியதே இல்லை. எங்களுடைய சுல்தானாவைக் காப்பாற்றிக்கொள்ள எங்களுக்குத் தெரியாதா?”

“அத்தாபேக்! நான் ஏனை எதனையும் பற்றிக் கவலைப்படவில்லை. அந்த கலீஃபா என்னை ‘விதவை, விதவை’ என்று இடித்துக் கூறியிருப்பதுதான் என் நெஞ்சை அறுக்கிறது. ஆண்டவனின் சோதனையால் நான் கைப்பெண்ணாகி விட்டால், கலீஃபாவாயிருப்பவர் ஒருவர் என்னை நையாண்டி செய்வதா? அல்லது விதவையாயிருப்பது ஸல்தனத்துக்கு விரோதமான அம்சமா? எனக்கொன்றும் புரியவில்லையே!”

“யா ஸாஹிபா! அதிலும் ஓர் உண்மையிருக்கிறது. என்னெனின், முன்னம் ஒரு முறை தாங்கள் இந் நாட்டைத் தாத்காலிகமாக ஆட்சி செலுத்திய காலத்தில் தங்கள் கணவர் உயிருடனிருந்தமையால் அஃதாவது, தாங்கள் விதவையாயில்லாத காரணத்தால் கலீஃபா பேசாமல் இருந்துவிட்டாரென்று அர்த்தம். இப்போது அப்படிக் கில்லாமற் போய்விட்டபடியால், அவர் தங்களுக்குத் தாக்கீது விடுப்பது நியாயமென்று அர்த்தம் – அவ்வளவேதான்!”

அக்கணமே ஷஜருத்துர்ரின் கண்முன்னிருந்த கறுப்புத்திரை கிழிந்து, ஒரு விசித்திர ஞானோதயம் கட்புலனாயிற்று. சுல்தானா சட்டென்று நிமிர்ந்து அமர்ந்தார். கண்களைச் சிம்புளித்துக் கொண்டார்.

“அப்படியானால், நான் விதவையாயில்லாமற் போய் விட்டால்?”

முஈஜுத்தீன் ஐபக் ஒன்றும் பொருள் விளங்காமற் திருதிருவென்று விழித்தார்.

 “அப்போது கலீஃபா என்ன செய்வாரென்று நினைக்கின்றீர்?” என்று தொடர்ந்தாற்போல் அடுத்த கேள்வியை விடுத்தார் ஷஜருத்துர். ஐபக்கின் முகக்குறியிலிருந்து, அவர் ஒன்றும் புரியாமல் திகைக்கிறாரென்பதை சுல்தானா உணர்ந்து கொண்டார் – “என்ன, நான் சொல்வது புரிந்ததா?”

“யா ஸாஹிபா! தாங்கள் எப்படி விதவையாயில்லாமற் போய்விட முடியும்? சுல்தான் ஸாலிஹின் பிரேத அடக்கத்தைப் பொய்யென்று எப்படி நிரூபிக்க முடியும்?”

ஷஜருத்துர் சிரித்தார். “நீர் என்ன விசித்திரமாய்ப் பேசுகிறீரே! காலஞ் சென்ற சுல்தான் ஸாலிஹ் மீண்டும் உயிர் பெற்றெழுந்தால் மட்டுந்தானா நான் விதவைக் கோலத்தை விட்டு வெளியேற முடியும்? இஸ்லாத்தில் கைம்பெண்கள் மறுமணம் புரிந்துகொள்வது ஹலால் அல்லவோ?”

சுல்தான் ஸாலிஹைப் போன்ற அவ்வளவு உன்னதமான கணவரைப் பறிகொடுத்த ஷஜருத்துர் மீண்டும் மறுமணம் புரிந்துகொள்வாரென்பதைச் சற்றும் இதுவரை எதிர்பாராத ஐபக் இந்த விசித்திரமான வார்த்தைகளைக் கேட்டதும், முதலில் திகைத்துப் போய்விட்டார். எனினும், சிரமத்துடனே தம் வியப்பை அடக்கிக் கொண்டு, “யா சுல்தானா! தாங்கள் மறுமணம் செய்து கொண்டால், கலீஃபாவால் ஒன்றுஞ் செய்ய முடியாதென்பது சரிதான்; ஆனால், …….” என்று இழுத்தார்.

“ஏன்? தகுதி மிக்கவரும், கலீஃபா என்ன செய்வதாயிருந்தாலும் இறுதிவரை எதிர்த்து நிற்கக் கூடிய சக்தி மிக்கவருமாகிய ஒருவரை என்னால் கணவராகச் சம்பாதிக்க முடியாதென்றா நீர் சந்தேகிக்கிறீர்?”

“இல்லை ஸாஹிபா! தங்களால் அப்படிப்பட்ட ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியாதென்று நான் கூறுவரவில்லை. ஆனால், இப்போதுள்ள நிலைமையில் தாங்கள் தங்கள் இஷ்டத்துக்கு வேறொருவரை மணந்துகொள்ள முடியாதே என்றுதான் கவலைப்படுகிறேன்.”

“ஏன் அப்படிச் சொல்லுகிறீர்”

“தாங்கள் இந் நாட்டுக்கு சல்தானாவாக இருப்பதற்கு லாயிக்கில்லையென்று கலீஃபா எப்போது தாக்கீது பிறப்பித்து விட்டாரோ, அப்போதே தாங்கள் மேற்கொண்டு எடுக்கிற எந்த நடவடிக்கையிலும் அவர் குற்றங் கற்பித்துக் கொண்டே தான் இருப்பார். ஏனென்றால், வைதவ்ய கோலத்திலுள்ள தாங்கள் மீண்டும் சுமங்கலி யாவதென்றால், அதற்கும் அவரது அனுமதியைப் பெறவேண்டுமென்று அடுத்த தாக்கீதை விடுப்பார்!”

“என்ன! நான் மறு விவாகம் செய்துகொள்வதாயிருந்தால், அதற்குக்கூட கலீஃபாவின் அனுமதி வேணடுமோ? இஃதென்ன கூத்து?”

“ஆம். தாங்கள் சம்பிரதாயத்துக் காகவாவது கலீஃபாவைக் கேட்டுத்தான் ஆகவேண்டுமென்று அந்த கலீஃபா தீர்ப்புக் கூறுவார். தாங்கள் அத்தீர்பையும் உதாசினஞ் செய்தால், இப்போதுள்ள நிலைமையொன்றும் மாறப்போவதில்லை; மாறாக, இன்னம் கடினமாகிவிடும். அவருடைய தீர்ப்பைத் தாங்கள் ஏற்றுகொள்வதாயிருந்தாலோ, தாங்கள் அவர் குறிப்பிடுகிற மனிதனைத்தான் மணந்துகொள்ள வேண்டி வரும். இப்போது புர்ஜீகள் கலீஃபாவிடம் நேசம் பாராட்டுகிற நிலைமையில், கலீஃபாவானவர் ‘ஷஜருத்துர் இன்ன புர்ஜீ அமீரைத்தான் மணக்க வேண்டும்!’ என்று கட்டளையிட்டுவிட்டாலும், அதிசயப் படுவதற்கில்லை. எப்படியாவது தங்களை இந் நாட்டின் ஆட்சிப் பீடத்தில் அமர்த்தக் கூடாதென்பதுதானே கலீஃபாவின் ஒரே நோக்கம்? எனவே, தாங்கள் மறுமணம் செய்து கொண்டாலும், கொள்ளாவிட்டாலும் ஒன்றும் விஷயம் சுமுகமாய்த் தீரப்போவதில்லையே!”

ஷஜருத்துர் சற்றே யோசித்தார். முஈஜுத்தீன் கூறுவதில் முற்றும் உண்மையே நிறைந்திருந்தது. கலீஃபாவின் கோபத்தை ஏற்கனவே சம்பாதித்துக் கொண்டு விட்டார் சுல்தானா. இதிலிருந்து விடுதலையடைவதற்கு மறுமணம் புரிந்துக்கொள்ளலாமென்றால், முதலில் சம்பிரதாயத்தை அனுஷ்டிக்க வேண்டும். அப்படி அனுஷ்டிப்பதால் கோரிய பலனேதும் கிட்டப் போவதில்லை. எனவே, வருவது வரட்டுமென்று துணிந்து விவாகம் செய்துகொண்டால், கலீஃபாவையும் ஏய்த்து விடலாம், விஷயத்தையும் சாதித்துக் கொள்ளலாம் என்று ஷஜருத்துர் முடிவு கட்டிக்கொண்டார்.

“அத்தாபேக்! நான் தீர்மானம் செய்துவிட்டேன்: சம்பிரதாயமும் வேண்டாம்; சாம்பிராணியும் வேண்டாம்; நான் கலீஃபாவை கேட்பதாயிருந்தால்தானே அவர் குறிப்பிடுகிறவனை நான் மனக்கவேண்டும்? வருவது வரட்டும். என் இஷ்டத்துக்கே இன்னம் இரண்டு நாட்களுக்குள் என் மனசுக்குப் பிடித்த மணாளரைத் தேர்ந்தெடுத்து விடுகிறேன். அவரையே மிஸ்ரின் சுல்தானென்றும் பிரகடனப்படுத்தி விடுகிறேன்! கலீஃபா அப்பொழுது என்ன செய்கிறாரென்று பார்த்து விடுவோமே! நானென்ன துருக்கி தேசத்திலுதித்த வீர அணங்கு என்று நினைத்தாரா, அல்லது திஜ்லா நதியோரத்தில் திரிகின்ற வெள்ளைப் பொம்மையென்று மதித்தாரா? – கடைசி வரையில் நான் ஒருகை பார்த்து விடுகிறேன்! – கலீஃபாவாம், கலீஃபா!”

ஷஜருத்துர் கீழுதட்டைக் கடித்துக்கொண்டு கடைசி இரு வார்த்தைகளை உச்சரித்த வன்மையைக் கண்டு, ஐபக் நடுங்கி விட்டார்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment