லூயீ மன்னர் எந்தச் செங்கோட்டையின் சிறையறைக்குள்ளே அடைக்கப்பட்டுக் கிடந்தாரோ, அதே சிறைக்கூடத்தின் பாதாளச் சிறைக்குள்ளேதான் மாஜீ சுல்தானா ஷஜருத்துர்
அடைக்கப்பட்டுக் கிடந்தார். அவரது உயிர் அடியுடன் போகவில்லை என்றாலும், அன்னவர் செத்த பிணத்துக்குச் சமமாகவே அசைவற்று ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தார். அவருக்கென்று வேளா வேளைக்கு வைக்கப்பட்ட உணவை அவர் கையால் தொட்டும் பார்க்கவில்லை. ஆகையால், அச் சிறையறை முழுதும் ஈக்களும் கொசுகுகளும் மொய்த்துக்கொண்டிருந்தன. அந்த இளவயதம்மையாரின் தலைக்கூந்தர் முழுவதும் பஞ்சேபோல் வெளுத்து நரைத்து விட்டது.
அவர் அவ்வறையில் எந்த நிலையில் கொண்டுபோய் அமர்த்தப்பட்டாரோ, அதே நிலையிலேயே அசையாமால் குந்திக்கிடந்தார். சிறையறைக்கு வெளியிலே பெண் சேவகிகள் கடுங்காவல் காத்து நின்றனர். ஷஜருத்துர்ரின் அழகிய சந்திரவதனம் பார்க்கப் பயங்கரமாகவும் கிழடு தட்டியும் இருண்டு போயிருந்ததுடனே, ஓர் ஆயிரம் வருடம் வாழ்ந்தவள் எப்படிப்பட்ட தோற்றத்துடனே காணப்படுவாளோ, அத்தகைய திரைந்த கரைந்த தோற்றத்தையே நம் செளந்தரிய ஷஜருத்துர் பெற்றுக்கொண்டிருந்தார். அருமையான நிழலிலே தங்கி, அபூர்வமான உண்டியும் அழகிய பானமும் அருந்திப் பிழைத்து, அரசியாகவுங்கூட உயர்ந்து ஓங்கிய ஷஜருத்துர், இப்படி நாற்றம் பிடித்த சிறையறைக்குள்ளே பேழையுள் அடங்கிய பாம்பெனச் சுருண்டு, கெட்டு மக்கிய ரொட்டித் துண்டையும் கோப்பைக் கூழையும் ருசிக்கவேண்டி நேர்ந்த விந்தையே உலகின் மாபெரு விந்தையாகும்!
ஷஜருத்துர்ரின் மாகொடிய விரோதியுங்கூட அந்தப் பெண்மணியை அப்பொழுது கண்டிருந்தால், நெஞ்சங் குழைந்து மனமுருகிப் போயிருப்பான். ஆனால், மைமூனாவின் வச்சிரம் பாய்ந்த உள்ளத்திலே கொஞ்சமும் கருணை பிறக்கவில்லை. அரண்மனையின் அந்தப்புர சப்ரமஞ்சத்தில் சாய்ந்த வண்ணம், நாளைக் காலையில் பொழுது விடிந்ததும் எப்படி ஷஜருத்துர்ரின் உயிரைப் போக்கினால் மிகவும் ருசியாய் இருக்குமென்று யோசித்துக்கொண்டிருந்தாள் மைமூனா. கொஞ்சங் கொஞ்சமாய்க் கசையடி கொடுத்து, தோலைக் கொப்பளிக்கச் செய்து, சிறுகச் சிறுக உயிரை உறிஞ்சுவதே சர்வ சிலாக்கியமென்று தீர்மானித்து, கண்மூடித் தூங்கிவிட்டாள் அந்தப் புதிய ராணி.
ருக்னுத்தீனை உள்ளிட்ட எல்லா பஹ்ரீகளும் நீலநதித் தீவிலே பேசாமல் முடங்கிக் கிடந்தார்கள். முன்பெல்லாம் ஷஜருத்துர்ரின் ஆட்சிக்காலத்தில் புர்ஜீகள் எப்படி ஸப்தநாடியும் ஒடுங்கிப்போய் மூலையில் முடங்கிக் கிடந்தார்களோ, அதே கதியை இப்பொழுது பஹ்ரீகள் பெற்றுக்கொண்டு விட்டார்கள். ஆண்டவன் நாடியபடியே அனைத்தும் நடக்கட்டுமென்று அவர்கள் வா ய்திறவாமலே மெளனமாக மயங்கி இருந்துவிட்டார்கள். இப்படிப்பட்ட அசந்தர்ப்பத்திலே மெளனம் ஒன்று தானே தக்க மருந்தாயிருக்க முடியும்?
இறுதியாக, ஹிஜ்ரீ 657 – ஆம் ஆண்டின் ஸபர் மாதம் 16-ஆம் நாள் விடிந்தது. விடியாமூஞ்சி போலே சென்ற இரவு முழுதையும் சோகத்திலும், செயலற்ற தன்மையிலும், சிந்தனையற்ற வகையிலும் கடத்தி முடித்த ஷஜருத்துர்ருக்கு மேற்குத் திசையில் அஸ்தமித்துக்கொண்டிருந்த பூரணசந்திரனின் நிலவொளியையும், கிழக்கே எழுந்துகொண்டிருந்த சூரியனின் காலைக் கிரணங்களையும் சற்றுமே வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை. என்னெனின், ஷஜருத்துர்ரின் மூளையிலிருந்து திரவமாகக் கரைந்து ஆவியாகப் பரிணமித்த பாகம்போக, எஞ்சியிருந்த கட்டிப்பாகம் கிர்ரென்று முழங்காலுக்குக் கீழே இழிந்துவிட்டிருந்தது!
பதினெட்டாம் நூற்றாண்டிலே பிரான்ஸ் தேசத்தில் நடந்த மாபெரும் ராஜப்புரட்சிக் கலகத்தின் பொழுது, வெறிகொண்ட பொதுமக்களால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பதினாறாவது லூயீ மன்னனும், அவன் மனைவி மெரீ அந்த்வானேத்தும் தங்கள் சிரங்களைப் பறிகொடுப்பதற்குச் சற்று முன்னே எப்படிக் காணப்பட்டார்களோ, அதனினும் அதிக பரிதாபகரமாகவே நம் ஷஜருத்துர் காணப்பட்டாரென்பது மிகையாகாது. நல்ல யௌவன வயதையடைந்திருந்த அந்தத் துருக்கி தேச மாது கிழடுதட்டிப் போனதுடனே, மேனியில் தோல் சுருங்கியும் முகத்தில் திரைமுதிர்ந்தும் நரைவிழுந்தும் பச்சை நரம்பெடுத்தும் கண்கள் குழிவிழுந்து மங்கியும் காதுகள் கல்போலே செவிடுபட்டும் கன்னங்கள் பள்ளம் விழுந்தும் கப்ருஸ்தானிலிருந்து எழுந்துவந்துவிட்ட பைசாசமேபோல் காணப்பட்டார்.
சகலகலா வல்லியாகவும் அறிவின் ஆழிய சமுத்திரமாகவும் அழகின் நுனிச் சிகரமாகவும் ஜொலித்துத் திகழ்ந்து, பார்ப்போரனைவரின் உள்ளத்தையும் கொள்ளைகொண்டு நின்ற நம் கதாநாயகி, இப்பொழுது பொலிவிழந்து, அறிவிழந்து, பேய் போலத் தேஜஸற்று, மங்கிப்போய், மழுங்கிப்போய் முடங்கிக் கிடந்தார்; நேற்றுவரை எகிப்தின் ஏகபோக சுல்தானாவாக மாட்சி பெற்று விளங்கிய அவர் மின்வெட்டுகிற நேரத்திலே கைதியாகவும் துரோகியாகவும் கொலைகாரியாகவும் கொடுங்கோல் அரக்கியாகவும் தாழ்ச்சியுற்றுவிட்ட பேரதிசயத்தைக் கண்டு நெக்கு நெக்கு உருகிக்கொண்டிருந்தது. அப் பெண் மனம். அற்புத சக்தி ஒரு மிகப் பெரிய சுல்தானாவைக் கைதியாகச் செய்து சிறையிலும் அடைத்துவிடும் என்பதை ஷஜருத்துர் இப்பொழுது தான் உணர்ந்தார். அவர் குந்தியிருந்த பேரீச்சம்பாயின் கூரிய ஓலை நுனிகள் அம்மென்மையான மல்லிகை மேனியைக் குத்தித் துளைக்கவும் கரடுமுரடான தரை செம்பஞ்சினும் குழைவான உறுப்புக்களை உறுத்தவும் சகலவித சுகபோக செளபாக்கியங்களுடனே மிளர்ந்து, மெல்லிய மலரணைகளிலும் அன்னத் தூவி அரியணைகளிலும் புரண்டு மெருகேறியிருந்த மேனி அச்சிறைக் கம்பிகளின் மீது அழுந்திக் காய்ப்பேறவும் ஒரு காலம் தமக்கு வந்துறும் என்பதைச் சற்றாவது சுல்தானா ஷஜருத்துர் கனவிலேனும் கண்டிருப்பாரென்றா நீங்கள் எண்ணுகின்றீர்கள்?
பொழுது புலர்ந்து, தினகரனும் உயரக் கிளம்பிவிட்டான். காலையாகாரம் சிறைக்காவலர்களால் ஷஜருத்துர்ருக்கு வழக்கம்போல் அளிக்கப்பட்டது. அதையும் அவர் தொட வில்லை; வெறும் தண்ணீரைக்கூட அருந்த அவரால் முடியவில்லை. பொழுது ஏறஏற, அவருடைய மூப்பும் விகாரத்தோற்றமும் மோசமாகிக்கொண்டே வந்தன. தம்முடைய மரணத்தின் வாயின் பக்கல் சிறுகச்சிறுகச் சென்றுகொண்டிருந்த ஷஜருத்துர், தாம் கசையடித் தண்டனையைப் பெறு முன்னேயே உயிரிழந்துவிட வேண்டுமென்று ஆவலாய்த் துடித்துக்கொண்டிருந்தார். தாம் இதுவரை பெற்றவையே போதுமென்று ஆகிவிட்டது. ஆயின், அரசு மாளிகையிலே மிக நாஜூக்காகப் போஷித்து வளர்க்கப்பட்ட அந்தச் சத்து நிரம்பிய உயிரா அவ்வளவு சீக்கிரம் பிரியும்? மீதியையும் அனுபவிக்காமல் எப்படித் தப்புவது? விதி, பொல்லாத விதி!
சூரியன் மெல்ல மெல்ல உச்சிக்கு உயர்ந்து வந்துவிட்டான். வெயிலோ, தகித்துக்கொண்டிருந்தது. அச் சிறைக்கூடம் எதிர்நோக்கியிருந்த நீலநதியில் கூடக் குளிர்ந்த காற்றுக் கொஞ்சமும் வீசவில்லை. ஆனால், அந் நதிக்கு மேற்கே ஆயிரம் மைலுக்கு மேலே விஸ்தரித்துள்ள ஸஹராப் பாலைவனத்திலிருந்து நெருப்புக் காற்று வீசிக்கொண்டிருந்தது. காற்றின் கடிய உஷ்ண மிகுதியால் மூச்சிழுத்துச் சுவாசிப்பதேகூட இயலாமற் போயிற்று. வெயிலின் கொடுமை அன்று அவ்வளவு அதியுக்கிரமாயிருந்தது. நம் கதாநாயகியை நாம் உங்களுக்கு அறிமுகப்படுத்த ஆரம்பித்த முதல் அத்தியாயத்தில் ஸீனாய் வனாந்தரத்தின் வெயிற்கொடுமையை வருணித்தோமே, அதனினும் பன்மடங்கு உக்கிரத்துடனேதான் தற்சமயம் ஸஹராவின் உஷ்ணக்காற்று வீசிக்கொண்டிருந்தது. ஆனால், ஒரே ஒரு விசேஷம்: ஷஜருத்துர் இந்த வெயிற் கொடுமை ஒன்றையும் உணரவுமில்லை; ஸ்பரிசிக்கவுமில்லை. என்னெனின், புறத்திலிருந்த உஷ்ணக்கொடுமை அவருடைய அகத்திலிருந்த கடும் உஷ்ணத்தைவிட மிகமிகக் குறைவாய் இருந்தமையாலேயே என்று அறிவீர்களா நீங்கள்?
அப்படிப்பட்ட உச்சியுரும உஷ்ண நேரத்தில் புதிய சுல்தானா மைமூனா தன்னுடைய மெய்காப்பாளர்கள் புடைசூழ, கட்டியக்காரர்கள் முன் வழி காட்ட, நிமிர்ந்த தலை குனியாமல் சகலவித டாம்பிக நடையுடனே அச் செங்கோட்டையின் பாதாளச் சிறைச்சாலைக்குள்ளே வந்து புகுந்தாள். இந்தப் புதிய சுல்தானா பதவியேற்ற பின்னர் முதன் முதலாக நடைபெறப்போகிற மரண தண்டனை இதுவேயாதலால், எல்லா விதமான பயங்கரத் தோற்றத்துடனும் சூழ்நிலையுடனும் மைமூனா ஷஜருத்துர் அடைபட்டுக் கிடந்த அறைக்குள்ளே சென்று நுழைந்தாள். சுமார் பதினைந்து காவலாளிகள் புடை சூழ அந்தப் புதிய ராணி ஷஜருத்துர்ரின் எதிரில் வந்து நிற்பதைக் கூடக் கவனிக்காமல், குனிந்த தலை நிமிராமலே குந்திக் கிடந்தார் அந்தப் பழைய ராணி. உயிரீர்க்கும் கொடுங்ககூற்றின் தூதுவர்கள் நிற்கும் மாதிரியே அத்தனைபேரும் மகா பயங்கரத் தோற்றத்துடனே நம் மாஜீ சுல்தானாவின் எதிரில் வந்து நின்றார்கள்.
மைமூனா ஒருமறை திரும்பிப் பார்த்தாள். தன்னுடன் வந்த ஆண் காவலர்கள் அங்கிருந்து அகன்றுவிடும்படி கட்டளையிட்டாள். பிறகு அச்சிறையறையின் திறந்த கம்பிகளுக்கத் திரையிடப்பட்டது. சோர்ந்துபோயும், உணர்ச்சியற்றும் சுருண்டுகிடந்த ஷஜருத்துர், நான்கு பெண் சேவகிகளால் தூக்கி நிறுத்தப்பட்டார். ஆனால், தூக்கி நிறுத்தியதும், அம்மாது குழைத்த மாப்போல் மீண்டும் குழைந்து வீழ்ந்தார். எனவே, அவரைச் சும்மா நிற்பாட்டி வைக்கமுடியாதென்று கண்ட கொலைகாரிகள், மேல் உத்தரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்த இருப்புச் சங்கிலிகளிலே இரண்டை அவிழ்த்து விட்டு, ஷஜருத்துர்ரைத் தூக்கித் தாங்கிப் பிடித்துக்கொண்டு, வலக்கரத்தை ஒரு சங்கிலியாலும் இடக்கரத்தை மற்றொரு சங்கிலியாலுமாகப் பிணித்து, அவ்விரு கரங்களையும் எவ்வளவு அகற்றிவைக்க முடியுமோ, அவ்வளவு அகற்றிப் பிரித்துவிட்டார்கள். அப்பொழுது ஷஜருத்துர் சிலுவையிலறையுண்ட ‘பாடுபட்ட சொரூபமே’ போலத் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டு கைகளை விரித்தபடியே குற்றுயிராய்த் தொங்கிக் கொண்டிருந்தார்.
அரக்கியினும் கொடியராகிய அக் கொலை பாதகிகள், எட்டாவது சிலுவை யுத்தத்திலே மிஸ்ரைக் காப்பாற்றிய அப் புனித மேனியை ஆடையையுரிந்து முழு நிர்வாணமாக்கிவிட்டார்கள். தொங்கிய வதனத்துடனே தமது சிவந்த மேனியை முதன் முறையாகக் காண நேர்ந்த ஷஜருத்துர்ரின் பஞ்சடைந்த கண்களிலே குருதிக் கண்ணீர் சிதற ஆரம்பித்தது. தம்மை அடுத்தபடியாக அப் பாதகிகள் என்ன செய்யப் போகிறார்களென்பதைப்பற்றியும் ஷஜருத்துர் எண்ணிப் பயப்படவில்லை; அல்லது எதிரில் நின்று வாய்கொண்ட மட்டும் சபித்துக் தூற்றித் திட்டிக் குவித்த மைமூனாவின் வார்த்தைகளையும் கேட்கவில்லை; அல்லது வன்மையான தோல்வாரில் நீளமாகப் பின்னிவிடப்பட்டிருக்கும் எருமைத்தோல் கொறடாக்களை நான்கு பாதகிகள் நான்கு மூலையிலுமாக நின்று கொண்டு, அத் தேஜஸிழந்த துருக்கி மாதின் சண்பக மேனியைக் குறிபார்த்தவாறு. ஓங்கிய கரத்துடனே தயாராய் நிற்பதையும் ஷஜருத்துர் கவனிக்கவில்லை.
ஆனால், அந்தப் பெண்கள் நாயகத்தின் கண்ணெதிரே இறந்தகால நிகழ்ச்சிகள், – அமிர் தாவூதின் மாளிகையுள்ளே நுழைந்தது முதல், முதல்நாள் வரையில் நிகழ்ந்த சொப்பனக் காட்சிகள், – பொய்யான துனியாவிலே மெய்யே போல் ஜொலிக்கிற மாயாவினோதப் பகட்டுவேஷங்கள் அப்படியே வந்து நிற்கின்றன.
மைமூனாவோ. ஷஜருத்துர்ரின் நிலையைச் சற்றும் உணராமல், தாம் ஆதிமதல் இன்றுவரை கொண்டுவிட்ட கொடிய குரோதத்தை வார்த்தை ரூபமாக்கிக் கக்கிக்கொண்டிருந்தாள். ஒருவாறாகத் தன்னுடைய ஆத்திரத்தையெல்லாம் உத்தேசம் அரைமணி நேரம் பேசித் தீர்த்து ஆற்றிக்கொண்டாள். இறுதியாக, “ஏ, பெண்ணென்று பெயர் படைத்த பொல்லாத பிசாசே! நீ இதோடு நாசமாகித் தொலையக் கடவாய்! இறுதித் தீர்ப்பு நாளிலேகூடப் படுபாவியாகவே உயிர்ப்பிக்கப்படக் கடவாய்! இறைவனே உனக்கு என்றென்றும் மீள்விலாத நரகத் தீயைத் தந்து, என் சாபத்தை நன்கு நிறைவேற்றி வைப்பானாக! என் கணவரின் உயிருக்காக உன் உயிர்; மானத்துக் கீடாக உன் மானம்; என்னை வீணே வருத்தியதற்காக நீ பெறும் உன்னதப் பரிசு” என்று கர்ஜித்துக்கொண்டே மைமூனா ஒரு மூலைக்குச் சென்று ஒதுங்கி நின்று, அந்தக் கொறடா பிடித்து நின்ற நான்கு கிங்கிலியச்சிகளையும் சன்னை செய்து ஊக்கிவிட்டாள்.
கனமான முரட்டுத் துணியைத் தண்ணீரிலே தோய்த்துவிட்டு அப்படியே தலைக்குமேல் தூக்கி எதிரில் கிடக்கும் கற்பாறைமீது வண்ணான் மோதுகிற வேகத்தில், அந் நான்கு பாதகிகளும் சுளீரென்று நான்கு அடி கொடுத்தார்கள், எதிரில் கட்டுண்டு நிர்க்கதியாய் அந்தரத்தில் தொங்கி நின்ற மாஜீ மஹா சுல்தானாவை!
அம் மாதரசியின் மென்தூவி மேனிமீது அச் சவுக்கடி விழுந்து சதையைப் பிய்த்துக்கொண்டு, உதிரத்தைச் சொரிகிற வேளையிலே, ஷஜருத்துர்ருக்கு மிகப் பழைய காலத்து விசேஷம் ஒன்று மின்சார வேகத்தில் கண்முன் வந்து நின்றது. தம்மை ஆதியில் வளர்த்த யூசுபின் இல்லத்திலே கடைசியாக நடந்த சம்பாஷணைகளும் சம்பவங்களும் எப்படியோ இந்தப் பாழாய்ப்போன வேளையிலே புத்துயிர்பெற்று முளைத்தெழுந்து, ஷஜரின் கண்முன் ஏன் நின்றனவோ? ஷஜருத்துர்ரின்மீது அடுத்த சவுக்கடி விழுந்தபொழுது, “ராணியா! நானா? ஷஜருத்துர் மிஸ்ரின் சுல்தானாவா! அபூ, அபூ! நான் சுல்தானாவாகவா உயரப் போகிறேன்! இந்த மிஸ்ரின் ஸல்தனத்துக்கே ராணியாகவா போகப்போகிறேன்!…” என்று யூசுபிடம் பேராச்சரியத்தின் பெரு மகிழ்ச்சியால் நிஜமாகவே துள்ளிக் குதித்துத் தாவித் துடித்த காட்சி சட்டென்று ஞாபகத்துக்கு வந்தது.
“ஏ, எல்லாம் வல்ல இறைவா! இன்று யான் இம்மாதிரியான முடிவையும் கூலியையும் பெற்றுக்கொள்வதற்காகவா இம் மிஸ்ரின் ஸல்தனத்தின்மீது மோகங் கொண்டேன்? இத்தாழுலக வாழ்விலே எனது வாழ்க்கையென்னும் நாடகத்தின் இறுதிக் காட்சி இப்படி இருக்கவேண்டுமென்றோ என்னைப் பெற்றோரும் வளர்த்தோரும் மணந்தோரும் மற்றோரும் வாழ்த்திவிட்டுச் சென்றார்கள்?” என்று கூறி. உள்ளத் துடிப்பால் உயிர் போய்க்கொண்டே இருந்த வேளையில் விழுந்த மூன்றாவது சவுக்கடி, அவ்வணையா ஜோதியான ஆருயிரைப் பெற்றிருந்த ஷஜருத்துர்ரின் பெரிய ஆவியைச் சட்டென்று அவித்துவிட்டது. பச்சைப் புண்ணாகி, இரத்தம் பீரிட்டுச் சொட்டிக்கொண்டிருந்த சரீரத்திலிருந்து அந்த ஆத்மா, முட்டைக் கூட்டைவிட்டு விடுதலையடைந்த பறவையே போல் பறந்து போய் விட்டது!
நம் ஷஜருத்துர்ரின் முடிபு இறுதியிலே இம் மாதிரியாக விளையவேண்டுமென்று இறைவன் முன்னமே எழுதிவைத்திருந்தான்! அவ்விதியை வெல்ல எவரால் இயலும்?
அவ்வம்மையார் வெறும் பிரேதமாகிவிட்டார் என்பதைக்கூட உணராமல் அப்பெண்ணரக்கிகள் மேலும் மேலும் அடிகொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். மைமூனாவும் நிறுத்தச் சொல்லாமல் ஊக்கிவிட்டுக்கொண் டிருந்தாள். வஞ்சம்! கொடிய வஞ்சம்!!
நீலநதித் தீவிலே செயலற்றுக் குந்திக் கிடந்த பஹ்ரீகளுக்கு அந்தப் படுகொலை பற்றிய செய்தியொன்றுமே தெரியாதாகையால், சிறையில் அடைபட்டுக் கிடக்கிற தங்கள் “சுல்தானா”வை எப்படிக் காப்பாற்றி மீட்பிப்பது என்று தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய தலைவர் ருக்னுத்தீன் காஹிராவிலேயே அலைந்துகொண்டிருந்தமையால், அவர் வந்தவுடனே ஒரு முடிவுக்கு வரலாமென்று வாளா இருந்தார்கள். ஆனால், அந்த ருக்னுத்தீன் நான்கு நாட்கள் முடிகிறவரை தீவுக்கும் திரும்பவில்லை; அவர் என்னவாயினார் என்பதும் தெரியவில்லை.
கடைசியாக, மைமூனா பதவியேற்ற ஆறாவது நாள் ஜாஹிர் ருக்னுத்தீன் கண்ணீர் சொரிந்தவராகத் தீவுக்குள்ளே திரும்பி வந்து சேர்ந்தார். இதுவரை ருக்னுத்தீன் கண்ணீருகுத்து அழுததைக்கூடக் கேட்டிராத மற்ற பஹ்ரீகள் ஒன்றும் புரியாமல் திகைத்தார்கள்; விழித்தார்கள் பெருவிழியாய்.
“என் தோழர்காள்! நம்முடைய நித்திய ஜோதி அணைந்து விட்டது! ஷஜருத்துர் ஸாஹிபா படுகொலை புரியப்பட்டு விட்டார்!” என்று கூறிக்கொண்டே கோவென்றழுதார் ருக்னுத்தீன். அவர் அழுததைவிட மற்றவர்கள் இன்னம் பலமாய் அழுதார்கள். பஹ்ரீகள் மற்றொரு ஷஜருத்துர்ரை இனி எங்கே காணப் போகிறார்கள்?
அத் தீவு முழுதும் அக்கணமே ஒரே ஒப்பாரி மயமாயிருந்தது. எல்லா பஹ்ரீகளுக்கும் ஒரே தாயாக விளங்கிய, அவர்களை உற்பத்தி செய்துவிட்ட ஸாலிஹின் உத்தம பத்தினியாகத் திகழ்ந்த, இனிய மாதரசியைப் பறிகொடுத்த அவர்கள் கதறிக்கதறி அழுததில் வியப்பில்லை யன்றே!
பிறகு, எல்லாரும் ஒருவாறாக அழுகை ஓய்ந்ததும், தங்கள் தலைவரைப் பார்த்தார்கள். அப்பொழுதுதான் ருக்னுத்தீன் முன்னினும் அதிகமாக அழுதுகொண்டிருந்ததைக் கண்டார்கள்.
“என் தோழர்கள்! நாம் அவரைப் பிரிந்தது துயரளிக்கவில்லை. ஆனால், அப்புனித மாதரசியின் பிரேதமாகிய திவ்ய திருமேனி செங்கோட்டைச் சிறைச்சாலைச் சாக்கடையிலே புழுத்துப்போய்க் கெட்ட நாற்றம் வீசிக்கொண்டு கிடக்கிறதே! அதை நினைத்துத்தான்……”
இது கேட்டு, எல்லா மம்லூக்குகளும் வாய் பிளந்தார்கள். “என்ன! பிரேதத்தைக்கூட அடக்கம் செய்ய வில்லையா?” என்று ஆக்ரோஷத்துடன் கேட்டார்கள்.
“இல்லை, இல்லை! அந்தப் பொல்லாத மூர்க்க மணம் கொண்ட மைமூனா அவ்வுடலை நாய்க்கும் நரிக்கும் கழுகுக்கும் இரையாக்க விரும்புகிறாளாம். மிஸ்ரைக் காத்தளித்த மங்கைக்கு இதுதானா இறுதிப் பரிசு? கையோரிடமும் காலோரிடமும், உடலின் வெவ்வேறு அவயங்கள் வேறோரிடமுமாகச் சிதறுண்டு கிடக்கின்றனவாம்! ஆ! நாம் – பஹ்ரீகளாகிய நாம் – அவருடைய உப்பைத் தின்று வளர்ந்த நாம் எப்படிச் சகித்துக் கொண்டு சும்மா இருப்பது? அவர் கைது செய்யப்படுவதற்குச் சற்று முன்னேயுங்கூட நான் காப்பாற்றுவதாகச் சபதம் செய்தேனே! ஆனால், மோசம் போயினேனே! அவருயுரைக் காப்பாற்ற என்னால் இயலவில்லையெனினும், உடலையாவது யான் எப்படிக் காப்பாற்றுவேன்?” என்று துயரால் துடித்து மெய் சோர்ந்தார்; வெய்துயிர்த்தார்.
அன்று மாலை வரையில் அவர்கள் ஏதேதோ ஆலோசித்தார்கள். தங்கள் ‘மலிக்கா’வின் சிதறுண்ட திருமேனியை எப்படியாவது சேகரித்துக் கொண்டுவந்து, ஒரு ஜனாஜாத் தொழுகை தொழுது, ஒரு நல்லடக்கம் (இஸ்லாமிய அடக்கம்) அளிக்கவேண்டுமென்று முடிவு செய்தார்கள். செங்கோட்டைச் சிறை அத் தீவிலிருந்து மிக அருகாமையிலும் ஆற்றங்கரையிலும் இருந்து வந்தமையால், இப் பிரேதத்தைச் சுலபமாகக் கொண்டு வந்துவிட முடியும். ஆனால், நிர்வாணமாகவும், துண்டு துண்டாகவும் சிதறுண்டு கிடக்கும் உடலை எப்படிச் சேகரிப்பது என்பதே பெரும் பிரச்சினையாயிருந்தது. அதையும் அவர்கள் அதி சுலபமாகத் தீர்த்துவிட்டார்கள். தங்களுள்ளிருந்து விவாகமானவர்களின் மனைவிமார்களை அவ்வேலைக்கென்று தேர்ந்தெடுத்தார்கள்.
நள்ளிரவிலே சுமார் ஐந்நூறு பஹ்ரீகள் சேர்ந்தாற்போல் ஆற்றைக் கடந்து, செங்கோட்டையண்டைச் சென்று சேர்ந்தார்கள். திறந்த முற்றத்தின் சாக்கடையோரத்திலே கேட்பாரற்றுக் கிடந்த, சிதறுண்டு போய்த் துர்க்கந்தம் வீசிக்கொண்டடிருந்த அனாதைப் பிரேதத்தை அம் மம்லூக் பெண்மணிகள் துணியில் சேர்த்துச் சுருட்டியெடுத்துக்கொண்டு வந்தார்கள். எதிர்பார்த்த தடபுடலோ, அல்லது தடைமுறையோ ஏதும் சிறைச்சாலையில் ஏற்படாமையால், தூரத்தில் நின்றுகொண்டிருந்த ஐந்நூறு பஹ்ரீகளும் துணைக்கு வரவேண்டிய நிலைமை ஏற்படவில்லை.
பஹ்ரீகளின் தீவுக்குள்ளே ஷஜருத்துர்ரின் உருக்குலைந்து பிரேதம் ஒருவிதமாக நறுநீரினால் கழுவிக் குளிப்பாட்டப்பட்டது; பிறகு கபனிட்டு, பேழையுள் வைத்து மூடி, அங்கேயே எல்லா பஹ்ரீ மம்லூக்குகளாலும் ஜனாஜாத் தொழுகை தொழப்பட்டது. ஆனால், “இப்பொழுது எங்கே அடக்கம் செய்வது?” என்பதில் எல்லாரிடையேயும் வெவ்வேறுவித அபிப்பிராயம் நிலவ அரம்பித்தது. ருக்னுத்தீன் மட்டும் பேசாதிருந்தார். தலைவர் சொல்கிறபடியே கேட்கவேண்டுமென்று அனைவரும் அவருடைய முகத்தை நோக்கினார்கள்.
ருக்னுத்தீன் தீர்க்கமாய் யோசித்தார். மிஸ்ரைக் காப்பாற்றிய விராங்கனையின் மையித்தைக் காஹிராவின் பிரத்தியேக இடத்திலேதான் நல்லடக்கம் பண்ணவேண்டும் என்றாலும், சுல்தான் ஸாலிஹின் கல்லறைக்குப் பக்கத்திலே ஷஜருத்துர் கட்டியிருந்த பளிக்கறையிலேதான் தபன் செய்யவேண்டுமென்று முடிவுகட்டிக் கொண்டார். இதற்கு சுல்தானா மைமூனாவின் உத்தரவு பெற்றாக வேண்டுமே என்று தீர யோசித்து,தாமே நேரில் தூதுபோய் அனுமதிபெற்று வருவதென்று முடிவுசெய்து, காஹிரா அரண்மனையிலே சுல்தானா எதிரில் போய் நின்றார்.
முதலில் மைமூனா மறுத்துரைத்தபோதினும், ஜாஹிர் ருக்னுத்தீன் கடைசிவரை விட்டுக்கொடுக்கவில்லை.
“தங்களுக்கு ஷஜருத்துர்மிது எவ்வளவு குரோதமிருந்ததோ, அவ்வளவு குரோதத்துக்கும் அளவு மீறிப் பழிவாங்கி விட்டீர்கள். தாங்கள் அந்த அம்மையாரின் உயிர்மீது எவ்வளவு வெஞ்சந் தீர்த்துக்கொண்டாலும், கேவலம் செத்த சரீரம் என்ன பாபத்தைச் செய்தது? ஒரு முஸ்லிமாவின் பிரேதத்தைப் புதைக்கக்கூடாதென்று தடுப்பதற்கு மற்றொரு முஸ்லிமாவாகிய தங்களுக்கு அதிகாரம் ஏது? நாளையொரு காலத்தில் தாங்கள் மரணமடைவீர்கள் என்பதையும் அப்பொழுது தங்களுடைய மையித் இந்தக் கதியை அடையக்கூடாதென்று விரும்புவீர்கள் என்பதையும் நான் ஞாபக மூட்டுகிறேன். எனவே, எங்கள் தலைவியாரின் பிரேதத்தை, அவர் உயிருடனிருந்த காலத்தில் மிகவும் உவப்புடன் விரும்பிவந்த ஸ்தலத்தில் பதைப்பதற்குத் தங்களுடைய அனுமதியைக் கோரி நிற்கிறேன். தாங்கள் அவ் வம்மையாரைச் சபித்த சாபத்தையெல்லாம் நிறைவேற்றிக் கொண்டதாகத் தாங்களே கூறுகின்றீர்கள். எனினும், இறுதிச் சபதமாகிய பிரேதவடக்கம்கூட நடக்கக் கூடாது! என்று தாங்கள் கொண்டிருக்கிற வைராக்கியத்தை மட்டும் சற்றே தளர்த்துங்கள். எந்த அம்மையார் இருந்து இந்நாட்டைக் காப்பாற்றித் தந்திராவிட்டால், தாங்களும் நானும் இந்நேரம் கிறிஸ்தவர்களால் கொல்லப்பட்டுப் போயிருப்போமோ, அந்த அம்மையாரின் பூதஉடம்புக்காகக் கொஞ்சம் கருணை காட்டுங்கள், தாயே!” என்று உருக்கமாய்ப் பேசினார்.
ருக்னுத்தீனின் இறுதி வாக்கியம் மைமூனாவை இருகூறாக அறுத்துவிட்டது. வாஸ்தவந்தானே? ஷஜருத்துர் இல்லாமற் போயிருந்தால், மிஸ்ர்தான் ஏது? மைமூனாதான் ஏது? மைமூனா தம்மையறியாமலே தலையசைத்துச் சரி சொல்லி விட்டார்.
ஜாஹிர் உடனே அங்கிருந்து தந்தீவுக்கு ஓடினார். எல்லா பஹ்ரீகளிடமும் தாம் பெற்றுவந்த பெருவெற்றியைத் தெரிவித்தார். ஜனாஜா வைத்திருந்த ஸந்தூக் – பேழை – தனப்படவில் அத் தீவினின்னு வெளியேற்றப்பட்டுக் கரைக்குக் கொண்டுவரப்பட்டது. எல்லா பஹ்ரீ மம்லூக்குகளும், ஷஜருத்துர்ரை நிஜமாகவே வியந்தவர்களும் ஆயிரக்கணக்கில் எறும்புச்சாரியேபோல மெளனமாய் அணிவகுத்து நின்றார்கள். ஜாஹிர் ருக்னுத்தீனுட்பட எட்டுப்பேர் அப்பிரேதப் பெட்டியை மிகவும் மரியாதையுடன் தோள் கொடுத்துத் தாங்கி முன்னே நடந்து மெதுவாய்ச் சென்றனர். பின்னே அந்தப் பல்லாயிரக்கணக்கான மம்லூக்குகளும் மற்றையோரும் கண்ணீர் ததும்ப வழிநடந்து, பின் தொடர்ந்தனர். “இன்னா லில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிஊன்! – நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கே உரிமையவர்களாய் இருக்கிறோம்!” என்று ஒவ்வொருவரின் உதடுகளிலிருந்தும் திருமறை வார்த்தைகள் வெளிப்பட்ட சோகத்திலே பலர் மூர்ச்சைகூட உற்று விட்டனர். வீதிகளில் நின்றோரும், சாளரவழியே எட்டிப் பார்த்தோரும், மாடிமீது நின்று பாய்ந்து பார்த்தவர்களும் தாம்தாம் நின்றவிடத்திலேயே வேரூன்றிப் போனார்கள். அப்பிரேத ஊர்வலத்தைப் பார்த்து உயிருள்ளனவும், உயிரில்லாதனவுங்கூட உருகிவிட்டனவென்றால், ஷஜருத்துர்ரின் சக்தியைத்தான் நாம் வியக்க வேண்டும். ஏனென்றால், உயிரிழந்த பின்னருங்கூட உலகினைக் கவர்கிற சக்தி உலகத்தில் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. தோள்மீது சுமந்து செல்லப்படுகிற எத்தனை பிரேதங்களைக் காஹிரா வாசிகள் கண்டிருப்பார்கள்? ஆனால், இப்பொழுது அவர்கள் அழுததைப்போல் வேறெப்பொழுது அழுதிருக்க முடியும்?
மெதுவாக ஊர்ந்து சென்ற அப் பிரேத ஊர்வலம் இறுதியாக அப்பளிக்கறையின் திறந்த மண்டபத்திலே வந்து நின்றது. ருக்னுத்தீனும் மற்றையோரும் அப் பிரேதப் பெட்டியை மெதுவாகக் கீழிறக்கி வைத்தார்கள். அப் பளிக்கறையைக் கண்டதும் ருக்னுத்தீனுக்குப் பழைய சம்பவங்கள் ஞாபகத்துக்கு வந்தபடியால், இருசொட்டுக் கண்ணீருகுத்தார்.
அம் மண்டபத்தின் நடுவிலே ஆறடி நீளத்தில் பிரேதக்குழி தோண்டப்பட்டது. மண்ணிடை நின்று மாட்சிமிக்க ஆட்சி புரிந்து புகழுடம்பு பெற்றுவிட்ட சுல்தானா ஷஜருத்துர்ரின் பூதவுடம்பு அம் மண்ணுள்ளே தாழ்த்தப்படவேண்டியது மட்டுமே எஞ்சி நின்றது. அந் நேரத்திலே எங்கும் அமைதியும் பெரிய நிச்சப்தமும் நிலவிக் காணப்பட்டன. ஜாஹிர் ருக்னுத்தீன் அப் பிரேதப்பெட்டி எதிரில் நின்று கொண்டு, கைகட்டிய வண்ணம் பேசாதிருந்த காட்சி மிகமிக உருக்கமாயிருந்தது. ஜனாஸாத் தொழுகை முன்னமே முடிவடைந்து விட்டபடியால். இப்பொழுது அத்தலைவர் ஏதோ துஆ என்னும் பிரார்த்தணை புரியப் போகிறாரோவென்று எல்லாரும் ஆவலுடன் காத்திருந்தனர்.
ருக்னுத்தீன் தம்முடைய ஆத்திரத்தையும் ஆறாத் துயரத்தையும் அடித் தொண்டைக்குக் கீழே அழுத்திப் பிடித்துக்கொண்டு, தாழ்ந்த மந்தண தொனியில் மிகவும் உருக்கமாக வார்த்தை வார்த்தையாகப் பேசுகிறார்:-
“ஏ, இம் மிஸ்ரைக் காத்த – இல்லை, இம் முஸ்லிம் உலகையே காத்த எங்கள் உத்தமத் தாயே! இன்று அந்தத் திரும்பாவுலகுக்குத் திரும்பிச்சென்று சேருங்கள்! அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் தங்கள்மீது கருணாமாரியைச் சொரிவார்களாக! அற்பத்திலே உதித்தீர்கள்; அற்பத்திலே வளர்ந்தீர்கள்; அபாரமானவற்றைச் சாதித்தீர்கள்; அபாயத்தை அகற்றினீர்கள்; வேறெம் மனிதனும் பெறமுடியாத பேற்றைப் பெற்றீர்கள்; மீண்டும் அற்பத்துக்கே போய்ச் சேர்கிறீர்கள். மனிதன் மண்ணிலே பிறந்து மண்மீது வளர்ந்து, மண்ணுள்ளே மறைகிறான். ‘பொன்றுதல் ஒருகாலத்தும் தவிருமோ? பொதுமைத் தன்றோ? இன்றுளார் நாளைமாளள்வர் புகழுக்கும் இறுதியுண்டோ?’
“யா மலிக்காத்தல் முஸ்லிமீன்! யா ஜலாலத்தல் மலிக்கா ! யா ஸாஹிபத்தல் சுல்தானா! தங்கள் ஆவி என்றென்றும் சுகசாந்திக் கடலிலே மூழ்கியிருக்குமாக! மிஸ்ரிகளும், உலக முஸ்லிம்களும் தங்கள் பிரிவால் ஈடுசெய்ய முடியாத மகத்தான பெரு நஷ்டத்தையே அடைந்து விட்டார்கள். இனிமேல் எந்தக் காலத்திலும் தங்களைப் போன்ற மற்றொரு ஷஜரை நாங்கள் பெறப்போவதுமில்லை; காணப்போவதுமில்லை. கடலிற் கலங் கவிழ்த்தோம். எங்களைக் காப்பாற்றிய தங்களைக் காப்பாற்ற வகையில்லாது கொன்று தீர்த்தோம். வலிமையிருந்தும், வழிதடுமாறி விட்டோம். ஸாலிஹின் உடலை நாற்றமெடுக்காமற் செய்த தங்கள் திருமேனியை நாறிப்போகச் செய்துவிட்டோம். மாக்களை மக்களாக்கிய தங்களை நாய்க்கும் நரிக்கும் கழுகுக்கும் இறையாக்கினோம்! குளிர்ந்த ஆட்சி நிழலைத் தந்தருளிய தங்களை எல்லாவிதமான சித்திரவதைக்கும் உள்ளாக்கினோம்!
“ஏ, எங்கள் மாதாவே! தூங்குங்கள், நன்றாய்த் தூங்குங்கள்! இச் சிறிய உடலை வைத்துக் கொண்டு இப் பெரிய ஸல்தனத்தை நிர்வகித்து அசதியடைந்த தாங்கள் சற்று விசிராந்தியாயிருப்பதற்கு இக் குழியுள்ளே நுழைகிறீர்கள். இனியொரு முறை இம்மாதிரியான துன் மரணம் தங்களைத் தொடராது. மன்னாதி மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவிலே இந்த ஆறடிக் குழிக்குள்ளேதான் கிடத்தாட்டப்படுகின்றனர் என்றாலும், தாங்கள் இவ்வளவு சடிதியிலே இப்படி எதிர்பாராது தள்ளப்படுவீர்களென்று எவரே எதிர்பார்த்தார்? இந் நாட்டுக்குள்ளே அனாதையாய் நுழைந்தீர்கள். வர்த்தகனால் வளர்க்கப்பட்டீர்கள். அடிமையாய் விற்கப்பட்டீர்கள். அரச பத்தினியாய் உயர்த்தப்பட்டீர்கள். செங்கோலைப் பற்றிப் பிடித்தீர்கள். கணவரையிழந்தும், சிந்தையை இழக்காமல் நிமிர்ந்து நின்றீர்கள். கண் விழித்தீர்கள்; கருத்தழிந்தீர்கள். தியாகம் புரிந்தீர்கள். லூயீயை வென்றீர்கள். மிஸ்ரைக் காத்தீர்கள் – முஸ்லிம் உலகுக்கே உயிர்ப் பிச்சையளித்தீர்கள். கொடுங்கோலன் தூரான்ஷாவை ஒழித்தீர்கள். தாங்களே ஏகபோக நல்லாட்சி புரிந்தீர்கள். கலீஃபாவை எதிர்த்தீர்கள்; அதிலும் வெற்றி பெற்றீர்கள். துரோகிகளைக் களைந்தீர்கள். இறுதியாகத் தாங்கள் பெற்றுக்கொண்ட இவ் இழிய பரிசை நினைந்து நான் மட்டும் கண்ணீர் விடவில்லை; இந்த உலகம் உள்ளளவும் பின்னே வரப்போகிற சந்ததியார்களும் தங்கள் சரிதையைக் கேட்டுக் கதறியழத்தான் போகின்றார்கள்.
“என்னெனின், தாங்கள் முஸ்லிம் உலக சமுதாயத்துக்குச் செய்து சென்றிருக்கிற தியாகச் செயல்கள் தாற்காலிகமானவையுமல்ல, அல்லது தங்களின் சுயநலத்துக்காகவுமல்ல. எங்கோ துருக்கியில் பிறந்த தாங்கள், ஒண்டவந்த ஊரைக் காப்பாற்றியே தீரவேண்டுமென்பது என்ன கடமை? உலகத்தில் எல்லா முஸ்லிம்களும் தங்களிடம் கற்றுக் கொள்ளவேண்டிய பரநலத் தியாகம் இதனினும் வேறென்ன இருக்கிறது? ஏ, இஸ்லாத்தைக் காத்து ரக்ஷித்த வீரத் தியாகியே! என்றென்றும் இறைவன் தங்களைச் சாந்தி நிகேதனமென்னும் பிர்தவ்ஸிலேயே தங்கியிருக்கச் செய்வானாக! எங்கள் ஒவ்வொருவருக்கும் ஆண்டவன் தங்களுக்கிருந்ததுபோன்ற மனவைராக்கியத்தையும் திடமான சக்தியையும் தீர்க்கமான அறிவையும் திண்மையான நெஞ்சுறுதியையும் தந்தருள்வானாக!
“தாயே! நான் அழவில்லை; ஆயின், என் தேகமெலாம் தானே கண்ணீரைக் கசக்கிப் பிழிகிறது. நான் ஆடவில்லை; ஆனால், என் சதையாடுகிறது. ஏ, ஐயூபிகளின் அணையா விளக்கைப் பெரும் புயற்காற்றில்கூட அணையாமற் காத்த புனிதமிக்க அன்னையே! நாங்கள் விடைபெற்றுக் கொள்கிறோம். தாங்களோ, திரும்பாவுலகுக்குத் திரும்புச் செல்லுகிறீர்கள். சாந்தி! சாந்தியடைவீர்களாக!
“ஏ, இறைவா! இவ் வம்மையார் எல்லாரையும் போன்ற மனிதரே எனினும், நீ இவருக்கு இணையற்ற சக்தியைத் தந்தருளினாய். எவ்வளவோ நன்மைகளை இவ்வம்மையார் புரிந்திருக்கிறார் என்பதற்கு நீயே சாக்ஷியாயிருக்கிறாய். இவர் தவறுகளும் புரிந்திருக்கலாம். ஆனால் ரஹ்மானாகிய நீ, ரஹீமாகிய நீ, சர்வ தயாளுவாகிய நீ, பக்தரக்ஷகனாகிய நீ இவரை முற்றும் மன்னித்து, உன்னுடைய நல்லடியார்களுள்ளே ஒருவராய் உயர்த்திக்கொண்டு விடுவாயாக! எங்கள் ரக்ஷகா! நாங்கள் செய்ய வேண்டிய கடமையில் எதையேனும் மறந்துவிடுவோமாயின், அல்லது அதில் தவறிழைத்து விடுவோமாயின், அதற்காக எங்களைத் தண்டிக்கப் பற்றிப்பிடிக்காதிருப்பாயாக. எங்கள் ரக்ஷகா! எங்களுக்கு முன்னுண்டாயவர்கள் மீது நீ சுமத்திய கடினச் சுமையைப் போல எங்கள்மீதும் நீ சுமத்தாதிருப்பாயாக.
“எங்கள் ரக்ஷகா! எங்களால் எதைச் சுமக்கச் சக்தியில்லையோ, அதனையும் எங்கள்மீது நீ சுமத்தாதிருப்பாயாக! இன்னம், எங்களைவிட்டுப் பாபங்களை நீ அழித்தருள்வாயாக; மேலும், எங்களுக்காகப் பிழைபொறுத்தருள்வாயாக. இன்னம், எங்கள்மீது கருணைகூர்ந்தருள்வாயாக. நீயே எங்களுடைய பராமரிப்பாளனாயிருக்கிறாய். ஆகவே, உன்னை நிராகரிப்பவர்களாய கூட்டத்தவர்மீது எங்களுக்கு நீ உதவி புரிந்தருளக் கடவாய்!” என்று அத்தலைவர் துஆ ஓதியதும், அத்தனை ஆயிரம் பேரும் ஏகக் குரலில் “ஆமின்” என்று இறைஞ்சினார்கள்.
பிரேதப் பொட்டி திறக்கப்பட்டு, சற்றும் குலுங்காமல் அந்த மையித் வெளியில் பந்தோபஸ்தாகத் தூக்கப்பட்டது. பிறகு மெதுவாக அப் புதைகுழியுள்ளே தாழ்த்தப்பட்டது. அங்குக் குழுமி நின்றோர் அனைவரும் தம்மையறியாமலே செறுமி விட்டார்கள். ருக்னுத்தீனுட்பட ஆளுக்கொரு பிடிமண்ணை அள்ளிப்போட்டு, ஷஜருத்துர்ரின் பூதவுடலை மறைத்து மூடினார்கள்.
அப் புதைகுழி மூடப்பட்டு முடிந்ததும், ஜாஹிர் ருக்னுத்தீன் ஒரு குடம் நிறையத் தண்ணிர் எடுத்து, அதன்மீது ஊற்றிக்கொண்டே, குர்ஆன் ஷரீபின் திருவாக்கியங்களான (89 : 27-30) வசனங்களை ஓதினார்:- “ஏ, விசிராந்தியடைந்துள்ள ஆத்மாவே! உன்னுடைய ரக்ஷகனை நோக்கி, நீ அவனோடு பிரீதியடைந்து கொண்டு, அவன் உன்னோடு பிரீதியடைந்து கொண்டு இருக்கிற நிலையிலே, மீளக்கடவாய்! ஆதலின், என்னுடைய அடியார்களிடத்தில் புகுதக்கடவாய்! இன்னம், என்னுடைய சுவர்க்கத்தில் நுழையக் கடவாய்!”
அப்பளிக்கறையை விட்டு அனைவரும் வெளியேறித் தத்தம் வீடுசேர்ந்து, கண்ணீர் வற்றுகிறவரை கரைந்துருகி, ஆறாய்ப் பெருகினார்கள். அனைவரின் அழுகையோசையையுங் கேட்ட மைமூனாவேகூடக் கண்கலங்க நேர்ந்துவிட்டது!
காஹிரா நகரின் பாழடைந்த ஒரு மூலையிலே இன்றுங்கூட ஷஜருத்துர்ரின் ‘மாஸோலிய’மாகிய இப் பளிக்கறை கிலமாகி நிற்பதை நீங்கள் சென்று காணலாம். உலகின் மிகமிகப்பெரிய அத்மாக்களுள் ஒன்றாகிய நம் கதாநாயகியின் கப்ரிலே இன்றுங்கூடப் பேரமைதியே நிலவி நிற்கிறது.
(முற்றிற்று)
Image courtesy: civicegypt.org
-N. B. அப்துல் ஜப்பார்
<<முந்தையது>>
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License