தினசரி வாழ்க்கையில் முஈஜுத்தீன் ஐபக்குக்கும் ஷஜருத்துர் ராணி திலகத்துக்கும் இடையே தினேதினே சுமுகம் என்பது அறவே இல்லாது போனதுடன், மனஸ்தாபமும் அதிகரித்து வந்ததுடன், மனக்கசப்பும் ஒருவர்மீது மற்றொருவருக்குச்

சந்தேகமும் வளரத் தொடங்கி விட்டன. சென்ற அத்தியாயத்தில் நாம் வருணித்த சம்பவம் நடந்து பத்து நாட்களாவதற்குகுள்ளே அவ்விருவருக்கிடையே களைய முடியாத பகைமையுணர்ச்சி வேரூன்றி விட்டது. கொடுக்குக் கத்தரித்து விடப்பட்ட தேளேபோல் முஈஜுத்தீனீன் கதி ஸப்தநாடியும் ஒடுங்கிப் போயிருந்தும், ஆத்திரமும் ஆவேசமும் எப்படியாவது ஷஜருத்துர்ரை ஒழித்துத் தலைமுழுகினால் தேவலாமே என்னும் விபரீத உணர்ச்சியும் அவருடைய மூளையைக் கலக்க ஆரம்பித்து விட்டன.

ஷஜருத்துர் முஈஜுத்தினின் நடக்கைகளில் மாறுதலைக் கவனிக்கலாயினார். எனவே, எந்நேரத்திலும் தமதுயிர்க்கு ஆபத்து வந்துவிடக்கூடும் என்றஞ்சி, அல்லும் பகலும் சர்வ ஜாக்கிரதையாய் இருந்ததுடனே, முஈஜுத்தீனுக்கே, அந்தப்புரம் முழுதிலும் தம்முடைய பிரத்தியேக பஹ்ரீ மம்லூக் ஹல்காக்களைக் காவல் புரிய நியமித்து விட்டார். சுருங்கச் சொல்லின், முஈஜுத்தீன் வெறும் காவற் கைதியே போல் நடாத்தப்பட்டார். அவர் போகிற இடங்களுக்கெல்லாம், நிழலேபோல் பஹ்ரீ மம்லூக் காவலர்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தார்கள். அவர் புரிகின்ற ஓவ்வொரு காரியமும் அக் காவலர்களால் துருவப்பட்டது. அவர் எழுதுகிற ஒவ்வோரெழுத்தும் உளவர்களால் படிக்கப்பட்டது. அவர் உளத்துள் எண்ணுகிற ஒவ்வோரெண்ணமும் எவ்வகையாலேனும் வெளிப்பட ஆரம்பித்தது. அவர் தோட்டத்துக்குப் போனாலும் ஆபத்து; குளிக்கப் போனாலும் ஆபத்து. இரகசியப் போலீஸ் பின்தொடர்ந்தது. முஈஜுத்தீன் தம்மீது வெறுப்புக் கொண்டு தற்கொலை புரிந்துகொள்ள முற்பட்டால்கூட அதையும் செய்துகொள்ள முடியாதபடி வேவுகாரக் காவலர்கள் வெகு நுணுக்கமாய்க் கண்காணித்தார்கள்.

முஈஜுத்தீனுக்கோ, தம்மீதே வெறுப்புத்தட்ட ஆரம்பித்து விட்டது. இப்போதுதான் அவர் மைமூனாவைத் தலாக்குச் சொன்னது பெருத்த அநியாயமென்பதை உணர ஆரம்பித்தார். சில சமயங்களில் எப்படியாவது எவருங்காணாமல் நள்ளிரவில் வெளியேறி, எங்கேனும் ஓடியொளியலாமோ வென்று கடுமையாகச் சிந்திக்கத் தொடங்கினார். அல்லது ஷஜருத்துர்ரை இரகசியமாகக் கொன்று தீர்த்துவிடலாமோ என்று கூடத் திட்டமிடத் துணியலானார். சுல்தானாவைக் கொல்வதென்பது எளிதன்றென்றாலும், அப்படிக் கொன்ற பின்னர்த் தாம் பஹ்ரீகளிடம் எவ்விதமான கொடுந்தண்டனையைப் பெற்றுக்கொள்வாரென்பதை நினைக்கும்பொழுதே குடல் குலுங்குவார். மதுவருந்திய மந்தியின் மனம் என்ன பாடு படுமோ, அத்தனை பாடுகளையும் முஈஜுத்தீனின் மனம் பட்டுச சலித்தது. உருப்படியான எந்தத் திட்டத்தையும் அவரால் வகுக்க முடியவில்லை.

முஈஜுத்தீனுக்கும் ஷஜருத்துர்ருக்கும் இடையே இப்படிப்பட்ட மனஸ்தாபம் தினமும் முற்றிக்கொண்டே வருகிறதென்பதைத் தெரிந்துகொண்ட புர்ஜீ மம்லூக்குகள் தேன் குடித்த கரடி மாதிரி துள்ளினார்கள். அவர்கள் எங்கே இடுக்குக் கிடைக்கும், எப்படி சுல்தானாவை வீழ்த்தலாம், எப்பொழுது சமயம் வாய்க்கும் என்று ஒவ்வொரு நாளையும் கடத்தி வந்தபடியால், இப்பொழுது கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்டுவிட்ட பெரும் பிணக்கை மிக நன்றாய்ப் பயன்படுத்திக் கொண்டுவிடலாமே என்று துடியாய்த் துடித்தார்கள். எல்லா புர்ஜீகளையும்விட, நாம் முன்பு குறிப்பிட்ட ஃபக்ருத்தீனுக்கு வாயில் அதிகமாய் எச்சில் ஊறிற்று. முன்னையைவிட இப்பொழுது அவருக்கு வயது சென்றிருந்தமையால், பேராசையும் அந்த அளவுக்கே வளர்ந்திருந்தது.

முஈஜுத்தீனின் போதாத காலம் உதயமாவதற்கும் ஃபக்ருத்தீன் அவரை இரகசியமாய்ச் சந்திப்பதற்கும் சரியாயிருந்தது. ஷஜருத்துர் அரசாட்சியைத் தம்முடைய கையில் பற்றிக்கொண்டது முதல் புர்ஜீ இனம் முழுதுமே பேழையுள் அடங்கிய பாம்பெனப் போயிருந்ததென்றாலும், இப்படிக் கணவன்-மனைவி வாழ்க்கையில் பிளவேற்பட்டு விட்டதை உணர்ந்த அவர்கள் ஃபக்ருத்தீனை அப்பிளவிடைத் திணித்துத் தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்ளத் துணிந்து விட்டார்கள்.

அடிக்கடி ஃபக்ருத்தீனும் முஈஜுத்தீனும் இரகசியமாய்ச் சந்தித்துவந்தார்கள். தங்கள் சந்திப்பு வேறெவருக்கும் தெரிய முடியாதபடி அவ்வளவு பரமரகசியமாய் நடந்துவருவதாக அவர்கள் எவ்வளவு மனப்பால் குடித்துவந்தபோதினும் மிஸ்ர் ராஜ்ய முழுதுமே கண்ணாகவும் மூலைமுடுக்கெல்லாம் காதாகவும் விளங்கித் திகழ்ந்த மாட்சிமை தங்கிய மன்னர் பிராட்டி ஷஜருத்துர்ருக்கு ஒவ்வொரு விஷயமும் அவ்வப்பொழுது விளக்கமாய் எப்படியோ எட்டிக் கொண்டுதான் இருந்தது. செங்கோலுக்கு மிஞ்சியா சங்கீதம்? ஷஜருத்துர்ரின் ஆட்சியின் போதா ஷஜருத்துர்ருக்கே எதிராக எவராலாவது சூழ்ச்சி செய்ய முடியும்? பாவம்! முஈஜுத்தீனும் ஃபக்ருத்தீனும் பகற்கனவில் சஞ்சரித்தவர்களாய், தாங்கள் கூடிப்பேசுவதும் சூழ்ச்சி நினைப்பதும் திட்டம் வகுப்பதும் ஒன்றுமே ராணியம்மையாருக்குத் தெரியமாட்டாது என்று எண்ணிக்கொண்டு விட்டார்கள்!

ஆனால், அவர்கள் ஒவ்வொரு முறையும் கூடிச் சந்திக்கிற விஷயம் காற்றினும் கடுவேகமாய் ஷஜருத்துர்ருக்கு எட்டிக்கொண்டுதான் இருந்தது. அவர்கள் பேசிக்கொள்ளுகிற ஒவ்வொரு குசுகுசுப்பான மந்தண வார்த்தையும் சுல்தானாவின் செவிகளில் முழுவேகமாக விழுந்துகொண்டே இருந்தது. எனினும், தக்க தருணம் வாய்க்கிறவரை, ஒன்றுமறியாதவரே போல் ஷஜருத்துர் மிகப் பொறுமையுடனே காத்துக்கொண்டிருந்தார். அவசரப்பட்டு எதையும் ஆற்றுவதென்பதுதான் அவருடைய அகராதியிலேயே கிடையாதே!

ஃபக்ருத்தீன் – முஈஜுத்தீன் சந்திப்பும் இப்போதெல்லாம் அடிக்கடி நிகழலாயிற்று. ஒருவிதமாக அவர்களும் ஒரு சூழ்ச்சிமிக்க திட்டத்தைத் தங்களுக்குள் பேசிமுடித்துக் கையிருப்பில் வைத்துக்கொண்டு விட்டார்கள். இறுதியாக ஒரு நாள் அந்த மாஜீ சுல்தானும் மார்ஜால ஃபக்ருத்தீனும் சந்தித்துப் பேசிய விபரம் இதுதான்:-

“யா மலிக்! தாங்கள் அந்தக் குருட்டுக் கண்ணனாகிய ருக்னுத்தீனைப்பற்றி ஒன்றுமே கவலைப்படத் தேவையில்லை. புர்ஜீகளாகிய எங்களுக்கு அவனுடைய பலஹீனம் என்னவென்பது இப்போது நன்றாய்த் தெரிந்துவிட்டது. அவன் தங்களை ஒன்றும் செய்ய முடியாது. அவனை நாங்கள் கவனித்துக் கொள்ளுகிறோம். தூரான்ஷா அற்பச்சிறுவனாய் இருந்தமையாலும் அவன் எங்களுடைய பேச்சை முற்றும் கேட்காமையாலும் அப்படி அநியாயமாய்க் கொலையுண்டுபோனான். தாங்கள் என்ன, வீரத்தில் குறைந்தவர்களா? அல்லது எங்கள் மீது அவநம்பிக்கை கொண்டிருக்கிறீர்களா? ஒன்றுமில்லையே! பின்பு பயப்படுவானேன்? ஒரு மீசை முளைக்காத பெண்பிள்ளையை – அதிலும் இந்நாட்டுக்குள்ளே அபலையாகவும் அனாதையாகவும் வந்து நுழைந்த பேர் ஊர் தெரியாத, பெற்றோர் உற்றார் இன்னாரென்று தெரியாத பேதையை – அதிலும், இவ்வரண்மனைக்குக் கைதியாய்க் கொணர்ந்து நிறுத்தப்பட்ட அடிமைச் சிறுக்கியை – சூனியவித்தைக் கற்ற பொல்லாத நீலியை வீழ்த்துவதற்கு ஆண் சிங்கங்களாகிய நமக்கெல்லாம் சக்தியில்லாமலா போய்விட்டது? மிஸ்ர் மக்கள்தாம் பேடிகளாகவும் கையாலாகாதவர்களாகவும் பெண்ணொருத்திக்கு அடிபணிகிறவர்களாகவும் இருக்கிறார்களென்றால், நமக்குக் கூடவா ஆண்மை குன்றிப்போய் விட்டது? இன்று கலீஃபா அவர்கள் ஏதோ சங்கடத்தில் சிக்கிக் கொண்டிருப்பதால் இவளைக் கண்டதுண்டமாய் வெட்டியெறிந்து, பாக்தாத் கோட்டை வாயிலில் தொங்கவிடாமல் இருக்கிறார்கள். நமக்கு வேறென்ன அலுவல் இருக்கிறது? இவளை இப்படியே எத்தனை நாட்களுக்கு விட்டு வைப்பது? மிஸ்ரின் கதிதான் என்னாவது? எட்டாவது சிலுவை யுத்தத்தைத் தான் பிரமாதமாக ஜெயித்துக் கொடுத்து விட்டதாக எத்தனை நாட்களுக்குப் பசப்பிக்கொண்டு எல்லாரின் கண்களிலும் மண்ணைத் தெள்ளிப் போட்டுக்கொண்டிருப்பாள், இவள்? இவளுக்கு இறுதிக்காலம் முடுகிவிட்டது. அந்த இறுதியையும் நம் மூலமாகப் பிரயோகிக்கவே இறைவன் நாடியிருக்கிறான். இனி யோசிக்க வேண்டியது ஒன்றுமில்லை. நாளை இந்நேரத்துக்குக்கெல்லாம் இவள் ஆறடிக் குழிக்குள்ளே ஆழப்போட்டுப் புதைக்கப்படல் வேண்டும். ஆமாம்!” என்று மந்தமணமான தொனியில், முஈஜுத்தீனின் காதோடு வாய்வைத்து ஊதினார் ஃபக்ருத்தீன்.

முஈஜுத்தீன் வாய்த்திறக்காமல் பெருமூச்செறிந்தார்.

“யா மலிக்! தாங்கள் ஒன்றுக்கும் கலக்கமுறத் தேவையில்லை! நான் வகுத்திருக்கிற திட்டம் வெகு அபூர்வமானது; எவரும் சந்தேகிக்க முடியாதது; மிகச் சுலபமானது; கோரிய பலனைத் தரவல்லது. ஆனால், அம்முறையைப் பிரயோகிக்க வேண்டிய பொறுப்பு மட்டும் தங்களைச் சேர்ந்தது. அதனால் என்ன விளைவதாயிருப்பினும், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்,” என்று விஷயத்துக்கு வந்தார் ஃபக்ருத்தீன்.

“அஃதென்ன அப்படிப்பட்ட சுலபமான திட்டம்?” என்று முஈஜுத்தீன் துடுக்காய் வினவினார்.

ஃபக்ருத்தீன் ஒருமுறை நாற்புறமும் திரும்பிப் பார்த்துக் கொண்டார். தாம் முஈஜுத்தீனிடம் வார்த்தையாடுவதை வேறெவரும் ஒற்றிக் கேட்கவில்லையே என்பதை நன்றாய்த் தெரிந்துகொண்டார். எனினும், தம் குரலை முன்னினுங் கம்மிப் படுத்திக்கொண்டு இன்னுங் குசுகுசுப்பாய்க் காதோடு வாயைப் பொருத்து உதடசைத்தார்.

இந்த நஞ்சு இருக்கிறதே, இது மனித சருமத்தில் பட்டாலே போதும்! உடனே புதைக்குழியைத் தோண்ட வேண்டியது தான்!

“வேறொன்றுமில்லை. இந்தச் சிறிய சிமிழிலே கொடிய நஞ்சுத்துளி கொஞ்சம் இருக்கின்றது. தீண்டிய நிமிஷத்திலேயே ஒரு பெரிய யானையைக்கூட வீழ்த்திவிடக் கூடிய பொல்லாத விஷமுள்ள கொடிய நாகப் பாம்பின் பல்லிடுக்கிலிருந்து வடிக்கப்பட்டது இவ் விஷம். அப்ரீக்கா கண்டத்தின் கொடிய காடுகளின் பாதாளப் புதர்களிலே புகுந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான வயது நிரம்பிய மிகப் பெரிய நாகப்பாம்பின் வாயில் சுரக்கும் நஞ்சுத்துளி இதுவாகும். மற்ற நச்சரவங்களின் நஞ்சுக்கும் இந்தச் சிமிழிலுள்ள நஞ்சுக்கும் ஒரே வித்தியாசம்தான் உண்டு: சாதாரண நல்ல பாம்பின் விஷம் உதிரத்தில் கலந்தால்தான் மனிதன் சாவான். அவ் விஷம் தலைக்கேறுமுன் மந்திரம் பிரயோகித்து அதை இறக்கிவிட்டாலும் இறக்கிவிடலாம். ஆனால், இந்த நஞ்சு இருக்கிறதே, இது மனித சருமத்தில் பட்டாலே போதும்! உடனே புதைக்குழியைத் தோண்ட வேண்டியதுதான்! பூமத்திய ரேகை ஓடுகிற நடுக்காட்டுக் கொடும்பாம்பின் விஷம் எத்தன்மைத்தென்பதை நாங்கள்தாம் நன்கறிவோம். ஆமாம்!”

ஃபக்ருத்தீன் தம்முடைய உள்ளங்கையில் வைத்துக் காட்டிய அச் சிமிழை வெடுக்கென்று பிடுங்கினார் முஈஜுத்தீன்.

“அதைத் திறந்துவிடாதீர்கள்! தப்பித்தவறி மிகச் சிறிய துளி வெளிப்பட்டுத் தங்கள் உடம்பில் பட்டுவிட்டால், இந்த உலகத்திலுள்ள எந்த வைத்தியனாலும் அவ் விஷத்தை இறக்க முடியாது! ஜாக்கிரதை!” என்று நடுக்கத்துடன் எச்சரித்தார் புர்ஜீ மம்லூக் தலைவர்.
“என்ன, அவ்வளவு பொல்லாத விஷமா!”

“பொல்லாததா! கொல்லாமலே விடததாகும் இது! இது மனிதனின் சருமத்தின் மேலே பட்டுவிட்டால், அதற்கு மாற்று மருந்தே கிடையாது!”

முஈஜுத்தீன் அந்தத் தந்தச் சிமிழ்க்குப்பியை அப்படியே கையில் வைத்துக்கொண்டு வெகுநேரம் யோசித்தார்.

“யா மலிக்! என்ன யோசிக்கிறீகள்? இது பலிக்குமா பலிக்காதா என்றா?”

“இல்லை, இல்லை! இதை எப்படி எடுத்து அவள்மீது தடவுவதென்றுதான் எனக்குத் தோன்றவில்லை…”

“ஹுஜூர்! தாங்கள் எடுத்துத் தடவுவானேன்? தங்கள் அந்தப்புரத்தில் இந்த ஷஜருத்துர் தினமும் தன்னை அழகு படுத்திக்கொள்கிற பிரத்தியேக அறை இருக்கிறதல்லவா? அங்கே யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் புகுந்து, இவள் கண்ணுக்குத் தீட்டிக்கொள்கிற மைச்சிமிழ் வைத்திருக்கிற இடத்திலே இதை வைத்துவிட்டு, அதை எடுத்துவிடுங்கள். நாளைக் காலையில் இக் குப்பியை இவள் மைக்குப்பியென்று கருதித் திறந்து கையையும் உள்ளே விட்டுவிடுவாள்; அவசரத்தில் கண்ணிமையின் கீழும் இழிசிவிடுவாள். அப்புறம் நாம் ஜனாஸாவுக்கு ஏற்பாடுசெய்ய வேண்டியதுதான்!”

“ஜனாஸா”என்னும் வார்த்தையை ஃபக்ருத்தீன் உச்சரித்ததைக் கேட்டதும், முஈஜுத்தீனுக்கு நிஜமாகவே ஷஜருத்துர் அப்போதே மரித்துப்போய் விட்டதைப் போன்ற உணர்ச்சி பிறந்தது. மெல்லத் தம் தலையை ஆட்டிக்கொண்டார். அவர் வாயில் எச்சில் சுரந்தது.

எவரும் காணாத இருள் சூழ்ந்த நந்தவனத்தில் ஜனசஞ்சாரமே சிறிதுமில்லாத ஓரிடத்தில் ஃபக்ருத்தீனும் முஈஜுத்தீனும் பரமரகசியமாய் வகுத்துக்கொண்ட இப் பயங்கரச் சதித்திட்டம் வேறு எவருக்குமே தெரியாது என்னும் திடமான நம்பிக்கையுடனே, ஒருவர் கிழக்குப் பக்கமாகவும் மற்றொருவர் மேற்குப் பக்கமாகவும் நழுவிப் பிரிந்து, பூனைபோல் பதுங்கிச் சென்றுவிட்டார்கள்.

அந்த ஆள்நடமாட்டமே சற்றுமற்ற புதரிடையே ஷஜருத்துர்ரின் பஹ்ரீ ஒற்றனொருவன் தரையோடு தரையாய்ப் படுத்திருந்து எல்லாவற்றையும் கண்டும் கேட்டும், சிமிழ் கைம்மாறியதைக் கவனித்தும் ஒளிந்திருந்து தெரிந்துகொண்டான் என்பதை அவ்விருவரும் எங்கே எதிர்பார்க்கப் போகிறார்கள்.
முஈஜுத்தீனும் ஃபக்ருத்தீனும் அவ்விடத்தை விட்டு அகன்றதும், அவ் வொற்றன் மெல்ல வெளிப்பட்டான். மறுகணத்தில் அவன் சுல்தானாவின் திருமுன்பினில் சென்று மரியாதையாய்க் குனிந்து தரையைத் தொட்டு முத்தியிட்டு நிமிர்ந்து நின்றான்.

ஷஜருத்துர்ரிடம், அக் கணமே அவன் கண்டவற்றையும் கேட்டவற்றையும் அணுப் பிறழாது அப்படியே ஒப்பித்துவிட்டான்.

“இன்றிரவை சுல்தானா ஷஜருத்துர் தம்முடைய பளிக்கறையிலே கழிக்கப்போகிறார். எவரும் அவரைப் போய்த் தொந்தரை செய்யக்கூடாது!”என்னும் தாக்கீதை ஷஜருத்துர் உடனே பிறப்பித்து, அதை அந்தப்புரத்திலுள்ளவர்கள் எல்லாருக்கும் பிரகடனப்படுத்தும்படி கட்டளையிட்டுவிட்டு, வேகமாக அப்பளிக்கறை இருக்கும் இடம் நோக்கி நடையைக் கட்டினார்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment