இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) – 03

by நூருத்தீன்

‘புறாக்களைப் பார்த்துக்கொண்டே பாடத்தைக் கோட்டை விட்டு விட்டாயா?’ என்பதைப் போல் தம் தந்தை கேட்டதும் சிறுவரான இமாம் மாலிக்குக் கோபமும் ரோஷமும் பொத்துக்கொண்டன. உடனே சாப்பிடாமல், கொள்ளாமல் மொட்டை மாடிக்குச் சென்று

இழுத்துப் போர்த்திப் படுத்துக்கொள்ளாமல் ஒரு காரியம் செய்தார். மதீனாவில் இப்னு ஹுர்முஸ் என்றொரு மார்க்க அறிஞர் இருந்தார். அவரிடம் சென்று, “என்னை மாணவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று வகுப்பில் சேர்ந்துவிட்டார்.

சேர்ந்துவிட்டார் என்று சொல்வதைவிட தஞ்சமடைந்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். ‘அவரிடம் என்னை அர்ப்பணித்துக்கொண்டேன்’ என்று பிற்காலத்தில் இமாம் மாலிக் கூறியுள்ளது அதற்கான ஒரு சுயச்சான்று.

ஒன்றல்ல, இரண்டல்ல ஏழு ஆண்டுகள் – மற்றொரு குறிப்பில் எட்டு ஆண்டுகள் – இப்னு ஹுர்முஸ்தாம் ஆசான்; முழு மூச்சுடன் அவரிடம்தான் பாடம். ஒருமுகப்பட்ட கவனத்துடன் ஆசான் போதிப்பதும் தாம் பயில்வதும் நிகழவேண்டும் என்ற எண்ணம் மாணவர் மாலிக்குக்குத் தோன்றியது. பயில்வதில் கவனம் செலுத்துவது தம் கையில். அதனால் பிரச்சினையில்லை. ஆனால் போதிக்கும் ஆசான் அறிஞர் எனும்போது அவரைச் சந்திக்க வருபவர்கள், சந்தேக நிவர்த்திக்கு அணுகுபவர்கள், ஆலோசனை வேண்டுபவர்கள் என்று வருவோர் போவோருக்குக் குறைவிருக்காதே? வகுப்பு நேரத்தில் அவை அநாவசிய குறுக்கீடுகள் அல்லவா என்று கவலைப்பட்டவர் அதற்கு ஒரு வழியையும் கண்டுபிடித்தார்.

வகுப்புக்குச் செல்லும்போது சட்டைப் பையில் சில பேரீத்தம் பழங்களை எடுத்துச் சென்று, ஆசிரியரின் பிள்ளைகளிடம் கொடுத்து, “செல்லங்களா! யாரேனும் ஷேக்கைச் சந்திக்க வந்தால், அவர் மும்முரமான பணியில் இருக்கிறார் என்று சொல்லி விடுங்கள். வந்து குறுக்கிடாதீர்கள்” என்று சொல்லிவிடுவார். பொய் கலப்பற்ற இயல்பான காவலை ஏற்படுத்திய அவரது புத்திசாலித்தனம் ஒருபுறம் இருக்கட்டும். பாடம் கற்பதில் எந்தளவுக்கு ஆர்வம் இருந்திருந்தால் அதை அவர் செய்திருப்பார்? அதுமட்டுமன்று. தரையில் அமர்ந்து பயில்வதுதானே அக்கால வழக்கம். குளிர்காலத்தில் கல் தரை படு சில்லென்று ஆகிவிடும். அதில் நீண்ட நேரம் எப்படி அமர முடியும்? அதற்கு அவரது யோசனை ‘குஷன்’ போல் பஞ்சு வைத்துத் தைத்த காற்சட்டை. எல்லாம் ஞானத் தேடலின் முனைப்பு; மும்முரம்.

தம் மாணவர் மாலிக்கிடம் சுடர்விடும் புத்திக் கூர்மையை ஆசான் இப்னு ஹுர்முஸும் நன்றாகவே அறிந்திருந்தார். ஒருநாள் தம் ஆசான் வீட்டு வாசலில் வந்தமர்ந்து அவரது அழைப்பிற்காகக் காத்திருந்தார் மாணவர் மாலிக். “யார் அது வாசலில் காத்திருப்பது?” என்று தம் அடிமைப் பெண்ணிடம் விசாரித்தார் இப்னு ஹுர்முஸ். வந்து பார்த்துவிட்டு, “அவர்தான், அந்தச் சிவந்த நிறத்தவர்” என்று தகவல் தெரிவித்தார் அப் பெண்.

“வரச் சொல். இம்மக்களுள் அறிவார்ந்த மனிதர் அவர்”

புலவர்களைப்போல் கவிஞர்களைப்போல் மிகையான பாராட்டும் புகழ்ச்சியும் உரைக்காத மெய்யான இஸ்லாமிய அறிஞர்கள் அவர்கள். அத்தகைய ஒருவரிடமிருந்து இத்தகு வார்த்தை எத்தகு சான்று!

ஹதீத், ஃபிக்ஹ் இவை இரண்டு மட்டுமே தமக்கான துறை என்று தீர்மானம் ஏற்பட்டதும் தமது கவனத்தை எந்தத் திசையில் ஒருமுகப்படுத்துவது என்பது இமாம் மாலிக் அவர்களுக்குத் தெளிவாகிவிட்டது. பல குழுக்களாகக் பிரிந்து கிடந்தவர்கள், பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டு குழம்பிக் கிடந்தவர்கள், அவர்களது கருத்துகள், அவற்றைப் பற்றிய வாதவிவாதம் ஆகியனவெல்லாம் அவருக்கு அநாவசியமாகி அப்படியே அவ்விஷயங்களிலிருந்து ஒதுங்கிவிட்டார்; புறக்கணித்துவிட்டார். அதற்காக அவற்றைப் பற்றிய அறிவோ, ஞானமோ அவரிடம் இல்லை என்று நினைத்துவிடக்கூடாது. அந்த விஷயங்களைப் பற்றிய தெளிவான கருத்து அவருக்கு இருந்தது; முரண்களுக்கு எதிரான ஆதாரங்கள் இருந்தன. இருந்தாலும் அவர் விவாதத்தில் இறங்கியதில்லை. விவாதங்களில் ஈடுபடுவதால் எந்தப் பயனும் இல்லை என்பது அவரது தீர்க்கமான நம்பிக்கை.

பிற்காலத்தில் ஆசானாக உயர்ந்து வகுப்புகள் நடத்திக் கொண்டிருந்த காலத்தில், அவர் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்த குழுவொன்றுக்கு முஃதஸிலா கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வந்தார். அவரவர் தத்தம் சந்தேகங்களைக் கேட்பார்களில்லையா, இவர் விதியைப் (predestination) பற்றி கேள்விகள் கேட்டார். முஃதஸிலா கூட்டத்தினருக்கு விதியைப் பற்றி மிகப் பிறழ்வான கருத்து இருந்தது. அது அவர்களை முஸ்லிம்களின் மைய நீரோட்டத்திலிருந்து பிரித்து, முஸ்லிம்களும் அவர்களும் கட்சி கட்டி, ஏகப்பட்ட வாத, விவாதங்கள் நடைபெற்று வந்த காலம் அது.

வினா தொடுத்தவரிடம் அமைதியாக இரு என்று மட்டும் சைகை காட்டிவிட்டுத் தம் நிகழ்வைத் தொடர்ந்தார் இமாம் மாலிக்.

பல்வேறாகப் பிரிந்து கிடப்பவர்களுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும், அவர்களிடம் எவ்விதம் உரையாட வேண்டும், அவர்களது கருத்துகளை எவ்விதம் மறுத்துரைத்து விளக்கம் அளிக்க வேண்டும் என்ற பாடங்களையெல்லாம் இப்னு ஹுர்முஸ் தம் மாணவர் மாலிக்குக்கு கற்றுத் தந்திருந்தார். அவற்றை நன்கு கற்றுத் தேறியிருந்த இமாம் மாலிக், நிகழ்வு முடிந்து கூட்டம் கலைந்து சென்றதும், தம்மிடம் வினாத் தொடுத்தவரை மட்டும் அழைத்து, “இப்பொழுது கேள்” என்றார்.

அந்த மனிதர் ஒவ்வொரு கேள்வியாக எடுத்து வைக்க, அவை ஒவ்வொன்றுக்கும் ஆணித்தரமான ஆதாரங்களுடன் மறுப்பை எடுத்து வைத்து விளக்கி, அந்த முஃதஸிலா கொள்கையினர் எப்படிப் பிறழ்வான கருத்தில் சிக்கி, திசை மாறிக் கிடக்கின்றனர் என்பதை இமாம் மாலிக் தெள்ளத் தெளிவாகப் புரிய வைத்தார்.

எல்லாவற்றையும் எல்லோரிடமும் விவரிக்க முடியாது, அனைத்தையும் அனைவரும் அறிய வேண்டியதும் அவசியமில்லை என்று அவர் கருதியதால் யாருக்கு எது தேவையோ அதை அவருக்குக் கற்றுத் தந்திருக்கிறார், விவரித்திருக்கிறார். வந்திருந்தவரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கும் சந்தேகங்களுக்கும் அத்தனைபேர் மத்தியிலும் இடமளித்து, அதை விவாதித்திருந்தால் என்னவாகியிருக்கும்? பிறருக்கு அநாவசிய குழப்பம், தேவையற்ற சர்ச்சை, வாக்குவாதம் என்று சபை சர்க்கஸ் கூடாரமாகியிருக்காது?

இணையவெளி கட்டுப்பாடற்ற சுதந்திரம் அளித்திருக்கிறது என்பதற்காக அவரவரும் தத்தம் இஷ்டத்திற்கு மார்க்கத்தில் புதுப்புது சர்ச்சைகளை உருவாக்கி, மனம்போனபடி கருத்துகள், பொறுப்பற்ற கேள்விகள், அர்த்தமற்ற வாக்குவாதம் என்று கூச்சலும் குழப்பமுமாய் அடித்துக்கொண்டிருக்கும் சமூக வலைதளப் பயனர்களுக்கு இதில் பாடம் உள்ளது.

இப்னு ஹுர்முஸை அடுத்து மதீனாவில் வாழ்ந்து வந்த தாபியீன்கள் பலரிடமும் இமாம் மாலிக் பாடம் பயில்வதும் ஞானம் தேடுவதும் தொடர்ந்தது. அவர்களுள் முக்கியமானவர் நாஃபி. அவர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் அடிமையாய் இருந்து விடுதலையானவர். மிகச் சிறந்த அறிஞர். பகல் நேரத்தில் நாஃபியின் வீட்டருகே வருவார் மாலிக். சற்றுத் தொலைவில் கொதிக்கும் வெயிலில், மர நிழலில் நின்று கொள்வார்.

நாஃபி எப்பொழுது வெளியே வருகிறாரோ அதுவரை பொறுமையாக அவரது காத்திருப்பு தொடரும். ஒருவழியாக நாஃபி வெளியே வந்ததும் நடப்பதுதான் வினோதம். அவரைக் காணததுபோல், அவருக்காகக் காத்திராததுபோல் நேரத்தைக் கடத்துவார் மாலிக். பிறகு, இயல்பாக அவரை நெருங்கி, முகமன் மட்டும் கூறிவிட்டு நகர்ந்துவிடுவார்.

தமது காரியங்களை முடித்துவிட்டு வீட்டின் வெளியே தனியாக இருக்கும் முற்றப்பகுதிக்கு நாஃபி நுழைந்ததும், அப்பொழுதுதான் அவரைத் தம் காரியத்திற்காக மாணவர் மாலிக் நெருங்குவது நிகழும். “இன்னின்ன விஷயங்களைப் பற்றி இப்னு உமர் (ரலி) என்ன சொல்லியிருக்கிறார்கள்? விவரம் அளியுங்களேன்” என்று விசாரிக்க, விளக்கமளிப்பார் நாஃபி. அவ்வளவுதான். அதைக் கேட்டுவிட்டு நன்றியுரைத்துவிட்டு சென்று விடுவார் இமாம் மாலிக்.

ஏன் இப்படி? நாஃபி அவர்களுக்குச சற்று எரிச்சல் குணம் இருந்திருக்கிறது. தாம் பக்குவமின்றி அவரை அண்மி, தமது ஆர்வம் கோளாறாகி அது அவருக்குத் தொந்தரவாக அமைந்துவிட்டால், தாழி உடைந்து விடுமே! அதனால், அந்த முன்னெச்சரிக்கையினால் தமக்கு வேண்டிய ஞானத்தை மட்டும் எப்படித் தன்மையாகத் திரட்ட வேண்டுமோ அவ்விதம் தன்மையாக இமாம் மாலிக் (ரஹ்) திரட்டியிருந்திருக்கிறார்.

இது இப்படியென்றால், நபிமொழிக் கலையின் மேதை இமாம் இப்னு ஷிஹாப் அல்-ஸுஹ்ரியை மாணவர் மாலிக் சந்தித்ததும் அம்மேதையை அவர் வியப்பில் ஆழ்த்தியதும் சுவையான நிகழ்ச்சி.

அது-

(தொடரும்) 

-நூருத்தீன்

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment