இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) – 09

by நூருத்தீன்

அக்காலத்தில் திரிகை என்றொரு பொருள் இருந்தது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை நம்மிடம் புழக்கத்திலும் இருந்தது. உலர்ந்த தானியங்களை அரைத்து மாவு ஆக்குவது, பருப்பு வகைகளை

உடைப்பது போன்றவற்றிற்குப் பயன்படும் எந்திரக் கல். இதற்கு திரிமரம், திரிக்கல் என்றும் பெயர்கள் உண்டு என்கிறார்கள். அரவை மில்கள் கிராமங்களுக்கும் பரவியபின் இன்று பரணுக்குச் சென்று விட்ட அருங்காட்சிப்பொருள் இது.

சில வேளைகளில் இமாம் மாலிக் தம் வீட்டில் இதைப் போன்ற எந்திரக் கல்லை வெறுமே உருட்டியிருக்கிறார். தானியமெல்லாம் இருக்காது. அது எழுப்பும் கரகர ஒலி அவருக்குத் தேவைப்பட்டது. அவ்வளவுதான். ஏன்? உண்பதற்கு எதுவும் இல்லாமல், பசி தாளாமல், அவருடைய மகள் அழ, அண்டை வீட்டிற்கு அந்த அழுகை கேட்டுவிடக்கூடாது என்பதற்காக வெறுமே உருண்டிருக்கிறது மாலிக் வீட்டுத் திரிகை.

கல்வியிலேயே காலம் கழிந்ததால் தொழில் புரிவதில் அவருக்கு நேரம் பெரிதாக வாய்க்கவில்லை. அவருடைய சகோதரர் அந்-நத்ருவுக்குத் துணி வியாபாரம். சிலகாலம் அவருடன் அத்தொழிலில் இணைந்திருந்தார். பிறகு சொற்ப முதலீட்டில் ஏதோ தொழில் புரிந்திருக்கிறார். அவற்றிலெல்லாம் கிடைத்த வருமானம் கைக்கும் போதாமல், வயிற்றுக்கும் போதாமல் கடும் வறுமையில்தான் அவரது ஆரம்ப காலம் கழிந்திருக்கிறது. பசி தீர்ந்தால் போதும், அதற்குமேல் தொழிலில் கவனத்தைச் சிதறவிட முடியாது என்று கவனமெல்லாம் கல்வியாகவே கடந்திருக்கிறது அவரது வாழ்க்கை.

‘ஒரு காலத்தில் தமது வீட்டுக் கூரையில் உள்ள மரக்கட்டைகளைக் கழற்றி எடுத்து விற்று தம் வாழ்க்கையை நடத்தினார் இமாம் மாலிக். பிற்காலத்தில் உலகம் அவரைத் தேடி வந்தது’ என்று தெரிவித்திருக்கிறார் இப்னுல் காஸிம்.

“சற்றொப்ப 90 ஆண்டுகள் வாழ்ந்திருந்தார். ஹதீஸ் அறிவிக்கவும் ஃபத்வா வழங்கவும் இன்று தகுதி உள்ளவர்களுள் எழுபதுபேர் அவரிடம் மாணவராகப் பயின்று வந்தவர்கள்தாம். மரணமடையும் வரை நாளுக்குநாள் அவரது சிறப்பு உயர்ந்து வந்தது. அவரது வாழ்க்கை நிலையும் மாறிக்கொண்டே இருந்தது. இஸ்லாமிய மார்க்கத்தில் தலைசிறந்த இடத்தை அவர் எட்டினார். அவரது வாழ்க்கையின் பற்பல நிலைகளைக் குறித்த அறிவிப்புகளைக் கண்டால் ஆட்சேபிக்காதீர்கள். அல்லாஹ்வே வெற்றி வழங்குபவன்” என்று தெரிவித்திருக்கிறார் காழீ அய்யாத்.

பிற்காலத்தில் மார்க்க ஞானம் மிகைத்து, அவரது அருமை பெருமைகளை உணர ஆரம்பித்த ஆட்சி அதிகாரிகளும் கலீஃபாவும் அவரிடம் மார்க்கக் கருத்துகளைக் கேட்டறிய ஆரம்பித்தனர். அறிஞர்தான் இவர் என்ற அங்கீகாரம் கிடைத்தது. அப்பொழுது மாற ஆரம்பித்திருக்கிறது அவரது பொருளாதார நிலை. தன்னிறைவு அவரது வாழ்க்கையில் எட்டிப் பார்த்து, நிலைமை வெகுவாகச் சீரடைந்தது. அதுவும் எப்படி நிகழ்ந்தது? கலீஃபா அவருக்கு உதவித் தொகையையும் அன்பளிப்புகளையும் வழங்க ஆரம்பித்து அவற்றை ஏற்றுக்கொண்டார் இமாம் மாலிக். என்றாலும், அப்படியான உதவிகள் கலீஃபாவிடமிருந்து வந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வாரே தவிர, மற்ற எந்த அதிகாரிகளிடமிருந்தும் ஆளுநர்களிடமிருந்தும் எவ்விதப் பொருளாதார உதவியையும் அவர் பெற்றதே இல்லை.

இதைப் பற்றி மக்கள் அவரிடம் கேட்டிருக்கிறார்கள். “கலீஃபாக்களிடமிருந்து உதவி பெறுவதில் தவறில்லை. அவருக்குக் கீழுள்ளோரிடமிருந்து பெறுவதுதான் சந்தேகத்திற்குரியது” என்று விளக்கம் அளித்திருக்கிறார். தவிர, கல்வியாளர்கள் அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட வேண்டும் என்பதும் அவரது தெளிவான பதிலாக இருந்திருக்கிறது.

அரசாங்க உதவிதான் தாராளமாகப் பொழிய ஆரம்பித்துவிட்டதே என்பதற்காக, படோடபம், ஆடம்பரம், வீண்விரயம் என்று அவர் வாழ்க்கை மாறிவிடவில்லை. தமக்கும் குடும்பத்திற்கும் தேவையானது போக, மற்றவற்றைத் தம்மிடம் பயிலும் வசதி குன்றிய மாணவர்கள், வறியவர்கள் ஆகியோரின் தேவைகளுக்குப் பகிர்ந்தளித்து விடுவார். அவ்விதம் உதவி பெற்று அவரிடம் பயின்ற மாணவர்களுள் இமாம் ஷாஃபியும் ஒருவர். இமாம் மாலிக்கிடம் இமாம் ஷாஃபி ஒன்பதாண்டு காலம் மாணவராகப் பயின்றிருக்கிறார்.

கண்ணுக்குத் தெரியும் வகையிலான மாற்றம் என்று பார்க்கப்போனால், அவர் உடுத்தும் ஆடைகள் சிறப்பானதாக மாறியிருந்திருக்கிறது. ‘ஒருவனுக்கு அல்லாஹ் தன் வளத்தை அருளும்போது அதைப் பெறுபவன் அதை வெளிப்படுத்தாமல் வறுமைக்கோலம் பூண்டிருப்பதை நான் விரும்புவதில்லை. குறிப்பாக அறிவில் சிறந்தோங்கும் மக்கள் அப்படி இருக்கலாகாது. குர்ஆன் ஓதுபவர் வெள்ளை ஆடை அணிவதை நான் விரும்புகிறேன்,’ என்று அதுபற்றி இமாம் மாலிக் கருத்து தெரிவித்திருக்கிறார். வெண்ணிற ஆடைகளை அணிவதும், நறுமணம் பூசிக்கொள்வதும் அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களாக இருந்திருக்கின்றன.

மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தக் கூடிய தோற்றம் இமாம் மாலிக்கிற்கு அமைந்திருந்தது. மக்களுக்கு ஆன்மிகத்தில் ஊக்கம் ஏற்படுத்தக்கூடியவராக அவர் இருந்ததாகவும் அனைவரும் அவரிடம் பெரும் அன்பும் மதிப்பும் பிரமிப்பும் கொண்டிருந்தனர் என்றும் பல அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. அறிவிலும் ஞானத்திலும் மட்டுமின்றி மக்களின் குணாதிசயங்களையும் அவர்களின் தராதரத்தையும் எடைபோடுவதிலும் அவருக்குத் தீர்க்கமான அகப்பார்வை.

“நான் மதீனா சென்றிருந்தபோது இமாம் மாலிக்கைச் சந்தித்தேன். நான் பேசியதை கவனமாகக் கேட்டுக்கொண்டவர் என்னைச் சற்று நேரம் உற்று நோக்கினார். அவர் நுண்ணறிவு மிக்க மனிதர். பிறகு என் பெயரைக் கேட்டுக்கொண்டு, ‘முஹம்மத். அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள். அனைத்துப் பாவங்களையும் தவிர்த்துக்கொள். வெகு நிச்சயமாக நீ உயர்ந்த நிலையை அடைவாய்” என்று தமது பால்ய பருவ நிகழ்வொன்றை இமாம் ஷாஃபி (ரஹ்) தெரிவித்திருக்கிறார்.

தாம் அறிந்த உண்மையை, எவ்விதப் பாரபட்சமும் இன்றி, அது யாராக இருந்தாலும், அறிவித்துவிடுவதில் இமாம் மாலிக்கிற்கு பெரும் மனவுறுதி இருந்தது. உண்மையை உரைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கமாக இருந்ததே தவிர, அதற்கான பாராட்டும் பெருமையும் யாரைப் போய்ச் சேரும் என்பதில் அவருக்கு அக்கறை இருந்ததில்லை. குற்றங்குறைகளுக்கு அப்பாற்பட்டிருந்தது அவரது நேர்மை.
அறிஞர்கள் மீது அவருக்கு மட்டற்ற மரியாதை இருந்தது. சமூகத்தில் அவர்கள் வகிக்கும் பதவியின்மீதும் அவர்களுக்கான பொறுப்பின்மீதும் அவருக்கு் மதிப்பு. அதனால், நீதிபதிகள், அவர்கள் அளிக்கும் தீர்ப்புகள் பற்றி அவர் விமர்சிப்பதில்லை. முன்பே குறிப்பிட்டது போல், தீர்ப்புகளின்போது ஏதேனும் முக்கியமான விஷயத்தை நீதிபதிகள் கவனிக்கத் தவறியிருந்தால் தனிப்பட்ட முறையில் அதை அவர் அவர்களிடம் தெரிவித்து விடுவார். அநாவசியமாகத் தொந்தரவு அளிக்கக்கூடாது, தேவையற்ற குறுக்கீடுகள் கூடாது என்பதே அவரது நோக்கம்.

நபி மொழிகளான ஹதீஸ் கலையிலும் மார்க்கச் சட்டங்களான ஃபிக்ஹ் துறையிலும் சிறப்பான ஆற்றல் இமாம் மாலிக்கிற்கு ஒருங்கே அமைந்திருந்தன. இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளுடன் மோதிய வழிகேடர்கள், முரண்பட்ட கருத்துகள் கொண்ட சீர்கேடர்கள், போதாததற்கு ஷிஆ, கவாரிஜ் கூட்டத்தினர் என்று பலவிதக் குழப்பங்கள் அக்காலகட்டத்தில் நிலவின என்று பார்த்தோமில்லையா? அப்படியான சூழ்நிலையில் மக்கள் குழம்புவதற்கு பஞ்சமா என்ன? தெளிவு பெறுவதற்காக இமாம் மாலிக்கை அவர்கள் அணுக ஆரம்பித்தனர். அவ்விதம் வருபவர்களுக்கெல்லாம் தெளிவான விளக்கங்களை அளித்து, கைப்பிடித்து இழுக்காத குறையாய் நேர்வழியை அடையாளம் காண்பித்து பணிபுரிவது இருக்கிறதே பெரும்பணி அது. தம்மால் இயன்ற அளவிற்கு அவற்றைத் திறம்படச் செய்தார் அவர்.

நபியவர்களையும் நபித்தோழர்களையும் அவர்களுக்கு அடுத்து வந்தவர்களையும் பின்பற்றுவதே சரியான வழி. மார்க்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமா, குர்ஆனும் சுன்னாஹ் எனப்படும் நபிவழியும் அடிப்படை; இவை இரண்டின் அடிப்படையில்தான் மார்க்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமே தவிர தர்க்கத்தின் அடிப்படையிலோ பகுத்தறிவுக் காரணங்களின் நியாயத்திலோ அவற்றை அணுகக்கூடாது என்பதை அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தினார், அதே நேரத்தில் இஸ்லாத்தில் எந்த ஒன்றும் தர்க்கத்திற்கோ பகுத்தறிவுக்கோ முரண்படாது என்பதையும் குறிப்பிட்டுத் தெரிவித்துள்ளார் இமாம் மாலிக் (ரஹ்).

அடுத்து. அவரது வழித்துறை எந்த அடிப்படையில் அமைந்துள்ளது என்பது –

(தொடரும்)

-நூருத்தீன்

சமரசம் பத்திரிகையில் ஏப்ரல் 16-30, 2018 இதழில் வெளியானது

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

<–முந்தையது–>  <–அடுத்தது–>

<–ஞான முகில்கள் முகப்பு–>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment