இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) – 05

by நூருத்தீன்

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் கல்வி ஞானத்தை நான்கு முக்கியப் பிரிவுகளில் குறிப்பிடுகிறார்கள்.

o அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகள்

o தோழர்கள், தாபியீன்கள், தபஅ தாபியீன்கள் ஆகியாரின் ஃபத்வாக்கள்
o குழப்பவாதிகளின் பிரிவுகள், அவர்களின் கொள்கைகள், அதற்குரிய சீரிய தெளிவான விளக்கங்கள்
o ஃபிக்ஹ் அர்-ராயி

இமாம் மாலிக்கின் ஆசிரியர்களுள் மிக முக்கியமான ஒருவர் ரபிஆ இப்னு அப்துர் ரஹ்மான். மாலிக்கின் தாயார் அவரைத் தம் மகனுக்கு முதல் ஆசானாகத் தேர்ந்தெடுத்து, அவரிடம் அனுப்பி வைத்தார் என்பதைப் பார்த்தோமிலலையா? இவருக்கு “ரபிஆ அல்-ராயி” என்பது பட்டப் பெயர். மதீனாவில் இருந்த ஏழு மார்க்க அறிஞர்களிடம் கல்வி கற்றுத் தேறியிருந்தார் அவர்.

இஸ்லாமிய மார்க்கத்தின் ஞான மரபை முக்கிய இரண்டு கூறாகப் புரிந்து கொள்ளலாம். முதலாவது குர்ஆனையும் நபிமொழிகளையும் உள்ளது உள்ளவாறே கற்று அதன் வெளிப்படையான அர்த்தங்கைளப் பின்பற்றுவது. இரண்டாவது அதன் அர்த்தங்களுக்குள் ஆழ உட்புகுந்து, அதன் விளக்கங்களை அலசி ஆராய்ந்து அறிந்து, அவற்றைப் பயன்படுத்துவது. இமாம் அபூஹனீஃபா (ரஹ்) இந்த இரண்டாவது வகையில் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்ந்தார். நேரடியான விளக்கம் கிடைக்கப்பெறாத விஷயங்களில், அதைப் போன்ற வேறு பிரச்சினைகளுக்கு அமைந்திருக்கும் விளக்கங்களை எடுத்து, ஒப்பீடு செய்து தனி முடிவுக்கு வருவது அவரது வழித்துறையில் முக்கியமான ஓர் அம்சம். இராக் பகுதிகளில் வசித்த அறிஞர்கள் மத்தியில் இம்முறை வெகு பரவலாக அமைந்திருந்தது.

மதீனாவில் வசித்த அறிஞர்கள் மத்தியிலோ இவ்வாறான அணுகுமுறை வெகு குறைவாக இருந்திருக்கிறது. அவர்களது கவனமெல்லாம் வேறு வகை. குர்ஆன், நபிமொழி ஆகியவற்றிலிருந்து வெவ்வேறு அர்த்தம் அளிக்கும் இரண்டு தகவல்களை ஒப்பீடு செய்து, அவற்றில் தெளிவான ஒரு முடிவுக்கு வருவதே அவர்களுக்கு வெகு முக்கியமாக இருந்தது.

இறை வசனங்களிலும் நபியவர்களின் அறிவிப்புகளிலும் உள்ளவற்றை மக்களின் நலனுக்கு ஏற்றவகையில் ஒத்திசைவாகக் கருத்து கொள்வது ஆசான் ரபிஆவின் சிறப்புத் தகுதியாக இருந்தது. அச்சமயம் மதீனாவில் இருந்த மற்ற அறிஞர்களைவிட அவர்தான் அதில் மிகவும் ஆற்றலுடன் இருந்திருக்கிறார். இந்த ஆசிரியரிடம்தாம் மாலிக்கின் மாணவப் பருவம் வெகு நீண்ட காலம் அமைந்திருந்தது. இவரிடமும் இமாம் அல்-ஸுஹ்ரியிடமும் பயின்ற கல்விதாம் பிற்காலத்தில் இமாம் மாலிக்கின் மார்க்க அணுகுமுறையில் பெரும் ஆதிக்கம் செலுத்தியது. ஆசான் ரபீஆவிடம் அவருக்கு அணுக்கமும் நெருக்கமும் வெகுவாக இருந்தபோதும் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டார் இமாம் மாலிக். அதைப் பார்ப்பதற்குமுன் இமாம் மாலிக் தம் ஆசானிடம் நடந்துகொண்ட விதங்களெல்லாம் நமக்கு முக்கியம். அவற்றைப் பார்த்துவிடுவோம்.

மாணவர் மாலிக் தம் ஆசானிடம் செலுத்தியது ஆக உயர்தரமான மரியாதை. ஆட்சியாளரைச் சந்திக்கும்படி அவருக்கு அழைப்பு வந்தால் தமது ஆசான் ரபீஆவைக் கலந்தாலோசித்து அவரது ஒப்புதல் இல்லாமல் அவர் செல்வதில்லை. தாம் ஆசானுடன் இருக்கும்போது, யாரேனும் ஏதேனும் சந்தேகம் இருக்கிறது, விளக்கம் வேண்டும் என்று வினா தொடுத்தால், அதற்குரிய விடையை, விளக்கத்தை தாம் மிகத் தெளிவாக அறிந்திருந்தாலும், இமாம் மாலிக் தம் வாயைத் திறக்க வேண்டுமே! கப்சிப் என்றுதாம் அமர்ந்திருப்பார்.

ஒருமுறை ஆசான் ரபீஆவும் மாணவர் மாலிக்கும் இமாம் ஸுஹ்ரியை சந்திக்கச் சென்றிருந்தனர். இமாம் ஸுஹ்ரி ஒரு வினாவை இவர்கள் முன்வைத்து, விளக்கம் அளியுங்களேன் என்றார். ரபீஆ அதற்குரிய விளக்கத்தை விவரிக்க, வெகு அமைதியாக அமர்ந்திருந்தார் மாலிக். ஸுஹ்ரி அவரிடம் திரும்பி, “ஏன் அமைதியாக அமர்ந்திருக்கிறீர்?” என்று கேட்டார்.

“ஆசான் விடை அளித்துவிட்டாரே” என்று மட்டும் பதில் வந்தது.

‘பரவாயில்லை. நீர் உம்முடைய கருத்தைச் சொல்லும்’ என்று ஸுஹ்ரி மீண்டும் மீண்டும் வற்புறுத்த தமது கருத்தை விவரித்தார் மாலிக். அது ஆசான் ரபீஆவின் கருத்துடன் வெகுவாக வேறுபட்டிருந்தது. ஆனால், இமாம் ஸுஹ்ரிக்கு அதுதான் சரியான விளக்கம் என்று தெரிந்துவிட்டது. இதுவே சரியான கருத்து, என்று அதைத்தான் ஏற்றுக்கொண்டார் அவர்.

ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு இருக்கும்போது அமைதி காப்பதிலும் முறைப்படி அதை வெளிப்படுத்துவதிலும் தகுதியில் மூத்தோருக்குக் கண்ணியமளிப்பதிலும் சபையில் நாவைப் பேணுவதிலும் உள்ள மேன்மைக்கு எளிய உதாரணம் நமக்கு இந் நிகழ்வுகளில் அமைந்துள்ளது. கருத்துச் சொல்கிறேன் பேர்வழி என்று மார்க்க விஷயங்களில் சகட்டுமேனிக்கு மூக்கை நீட்டும் நமக்கு, கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தால் அது புலப்படும்.

தம் ஆசானிடம் இமாம் மாலிக் கருத்து வேறுபாடு கொண்டார் என்று மேலே பார்த்தோமில்லையா, அது வெகு தீவிரமான ஒன்றாகத்தாம் உருவெடுத்தது. ஒரு கட்டத்தில் ரபீஆவின் பாட குழுமங்களுக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டு தம் இல்லத்திலேயே தங்கிவிட்டார். அதற்குக் காரணம் இருந்தது. இமாம் ஸுஹ்ரி, ரபீஆ இருவரின் பாட குழுமங்களுக்கும் செல்ல ஆரம்பித்தபோது, தாபியீன் அறிஞர்களின் முடிவுக்கு மாற்றமாக ரபீஆவின் மார்க்கத் தீர்ப்புகள் இருப்பதைக் கவனித்தார் இமாம் மாலிக். அந்த வேறுபாடு வெகு ஆழமாக இருப்பதைக் கண்டு அவருக்கு மிகவும் அதிருப்தி ஏற்பட்டது.

அவர் மட்டுமின்றி அவருடன் பயின்ற அல்-லயித் இப்னு ஸஆத், அப்துல் அஸீஸ் இப்னு அப்துல்லாஹ் ஆகியோரும் அதே கருத்தையே கொண்டிருந்தனர். பிற்காலத்தில் அப்துல் அஸீஸ் மார்க்க அறிஞராக உருவானதும் அல்-லயித் எகிப்தின் முக்கியமான மார்க்க அறிஞராக உயர்ந்ததும் அவரை இமாம் ஷாஃபி (ரஹ்) உயர்வாகப் பாராட்டி குறிப்பிட்டுள்ளதும் இங்கு நமக்கு உபரித் தகவல்கள்.

தம் ஆசானிடமிருந்து விலகி வந்துவிட்டாலும் இமாம் மாலிக் புதிதாகப் பாட குழுமத்தை உடனே ஆரம்பித்துவிடவில்லை. அது வெகு நீண்ட காலத்திற்குப் பிறகே தொடங்கியிருக்கிறது. தவிர, அவர் தம் ஆசான்மீது கொண்டிருந்த உயர் மதிப்பை இறுதிவரை பத்திரமாகவே பாதுகாத்து வந்தார். மாணவர்கள் மாலிக், அல்-லயித் இருவரும் தம் ஆசானைப்பற்றி மடல் எழுதிக்கொண்டபோதும் அதில் இருந்ததெல்லாம் கண்ணியம். லயித் மாலிக்கிற்கு எழுதிய மடலில் இருந்த இந்த வாசகங்கள் அதற்குச் சரியான சான்று. “ஆயினும் ரபிஆ மிகவும் சிறந்த மனிதர். ஆழமான தர்க்கம், விவரிப்பதில் சிறப்பு, தெளிவான நல்லொழுக்கங்கள், இஸ்லாத்தைப் பற்றிய ஆழமான ஞானம், தம் சகோதரர்களிடம் – குறிப்பாக நம்மிடம் – மெய்யான விசுவாசம் கொண்டிருப்பவர். அல்லாஹ் அவர்மீது கருணை பொழிவானாக. மன்னித்தருள்வானாக. அவருடைய நற்காரியங்களை விஞ்சிய வெகுமதியை அளித்தருள்வானாக.”

இமாம் மாலிக் மதீனாவில் வாழ்ந்ததால் அறிஞர்களின் சகவாசம் அவருக்கு இயல்பாக அமைந்துபோனது. இஸ்லாமிய ஞானத்தின் அடிப்படைத் தத்துவத்தின் பூரண அறிவு ஆழமாக அவருக்குள் வேரூன்ற அது உதவியது. அவர் அந்த அறிஞர்களைச் சந்தித்ததும் பயின்றதும் –

அவை –

(தொடரும்) 

-நூருத்தீன்

சமரசம் பத்திரிகையில் பிப்ரவரி 16-28, 2018 இதழில் வெளியானது

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

<–முந்தையது–>  <–அடுத்தது–>

<–ஞான முகில்கள் முகப்பு–>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment