ஃபிக்ஹ் எனப்படும் இஸ்லாமியச் சட்டத்துறையில் மிகச் சிறந்த அறிஞராக விளங்கிய இமாம் மாலிக் (ரஹ்), தாம் அளிக்கும் மார்க்கத் தீர்ப்புகளுக்குத் தேர்ந்தெடுத்த வழிமுறைகளை நூலாகவோ,
குறிப்புகளாகவோ எழுதி வைத்து விட்டுச் செல்லவில்லை. ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு அவரது வழித்துறையைப் பின்பற்றிய அறிஞர்கள்தாம் இமாம் மாலிக்கின் வழிமுறை இன்னின்ன வகையில் அமைந்திருந்தன என்று குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்கள்.
எந்த வினாவாக இருந்தாலும் பிரச்சினையாக இருந்தாலும் அவற்றுக்கான விடையோ, தீர்வோ தேடுவதற்கு குர்ஆன்தாம் மூலமுதல் ஆதாரம். குர்ஆன் வசனங்களை அணுகும்போது அதில் மேற்கொண்டு ஒரு வரிசை அமைத்துக்கொண்டார் இமாம் மாலிக் (ரஹ்). நேரடியாக, ஒரே விளக்கம் மட்டுமே அமைந்த குர்ஆன் வசனங்கள் அதில் முதலாவது. ஒன்றுக்கும் மேற்பட்ட விளக்கங்களுக்குச் சாத்தியமுள்ள வசனங்கள் எனில், தாம் அணுகும் பிரச்னைக்கு அந்த வசனங்களின் இதர விளக்கங்கள் அவசியம் இல்லை எனில், அந்த வசனத்தின் நேரடிப் பொருள் எதுவோ அதை அப்படியே எடுத்துக்கொள்வார்.
தீர்வுகளை யூகிக்க வாய்ப்பளிக்கும் வசனங்கள், குறிப்புகள் மூலம் உணர்த்தக்கூடிய வசனங்கள் அதற்கடுத்து முக்கியத்துவம் பெறும். சுருக்கமாகச் சொல்வதெனில், குர்ஆனிலிருந்து அறிந்துகொள்ளக் கூடிய, அதிலிருந்து கிடைக்கக்கூடிய ஆதாரங்களுக்கு முக்கியத்துவம், முன்னுரிமை. அதனால், நம்பகமான தொடரில் கிடைக்கப்பெற்ற நபிமொழியாக இருந்தாலும் அது குர்ஆனின் விளக்கத்திற்கு முரண்படுவதாகத் தோன்றினால் தமது தீர்வுகளுக்கு, தீர்ப்புகளுக்கு அவற்றை அவர் ஆதாரமாகப் பயன்படுத்துவதில்லை.
அடுத்த இரண்டாவது முக்கியத் தரவு சுன்னாஹ் எனப்படும் நபிமொழிகள், நபிகளாரின் அறிவிப்புகள். அதற்கடுத்து மதீனாவில் உள்ள முஸ்லிம்களின் நடைமுறைகள். ஒரு நகரிலுள்ள முஸ்லிம்களின் நடைமுறையை எப்படி ஓர் ஆதாரமாகக் கொள்ள முடியும்? அக்கால கட்ட மதீனாவில் பிறந்து, அங்கேயே வளர்ந்து, முழுக்க முழுக்க அந் நகரிலேயே தம் வாழ்நாளைக் கழித்த இமாம் மாலிக்கின் பார்வையில் மதீனத்து முஸ்லிம்களைப் பற்றிய கருத்து இக்கால நமக்கு முற்றிலும் அந்நியமானது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் இருந்தன்றி அந்த முஸ்லிம்களிடம் எந்தவொரு இஸ்லாமியப் பழக்க வழக்கமும் நடைமுறைக்கு வந்திருக்காது என்பது அவருடைய கருத்தாக இருந்திருக்கிறது.
இஸ்லாமியச் சமூகத்தின் பிறப்பிடம் மதீனா; நபி (ஸல்) பத்தாண்டு காலம் அந்தச் சமூகத்தை வடிவமைத்திருக்கிறார்கள்; ஆயிரக்கணக்கான நபித் தோழர்கள், அவர்களுக்கு அடுத்தத் தலைமுறையினர் அந்தத் தெய்வீகப் போதனைகளைப் பின்பற்றி வாழ்ந்திருக்கிறார்கள் என்ற அடிப்படையில் அவற்றுக்கு அவர் முக்கியத்துவம் அளித்திருக்கிறார். அதனால் ஒரே ஒருவர் வாயிலாக அறிவிக்கப்பட்டிருக்கும் அஹத் வகை ஹதீஸாக இருப்பின், அவை மதீனா மக்கள் வெகு நிச்சயமாகப் பின்பற்றம் வழிமுறைகளுக்கு மாற்றமாக இருக்கும் பட்சத்தில், தம் தீர்வுகளுக்கு அதைப் பரிசீலிக்காமல் தவிர்த்திருக்கிறார்.
அதற்கடுத்து, நபியவர்களின் தோழர்களுடைய தீர்ப்புகள். ஏறக்குறைய ஹதீஸ்களுக்கு இணையாக அவற்றை அவர் ஆதாரமாகக் கருதியிருக்கிறார். நபியவர்களிடமிருந்து கற்றறிந்து தெளிவு பெற்றிருந்தாலொழிய மார்க்கம் தொடர்புடைய விஷயமொன்றில், தோழர்கள் தீர்ப்பு வழங்கியிருக்க மாட்டார்க்ள என்பது அவருடைய வாதம். அதே நேரத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் ஒரு விஷயத்தில் தீர்ப்பளித்திருந்து அவற்றினிடையே வேறுபாடு இருக்குமெனில், மக்களுக்கும் சமூகத்திற்கும் பயனளிப்பதில் அவர்களின் எந்தத் தீர்வு நெருக்கமாக இருக்கிறதோ அதைத் தாம் எடுத்துக்கொள்வார். நான்கு இமாம்களில், இமாம் மாலிக்கும் இமாம் அஹ்மது இப்னு ஹன்பலும் இவ்விஷயத்திற்கு அதிகம் முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள்.
மேற்சொன்னவற்றின் அடிப்படையில் ஒரு விஷயத்திற்குத் தீர்வை எட்டியிருந்தால், அதே போன்ற மற்றொரு விஷயத்திற்கும் அந்தத் தீர்வை ஒப்பிட்டுப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், அந்த இரண்டு விஷயத்திலும் ஒரேவிதமான காரணம் அடிப்படையாக இருந்திருக்க வேண்டும்.
இறுதியாக, ஸத்துத் தராயிஃ. நன்மையிலிருந்து தீமை உருவாகுமேயானால் அதைத் தடுப்பது. அதாவது மார்க்கத்தில் விலக்கப்பட்ட ஹராமான விஷயத்திற்கு இட்டுச் செல்பவை ஹராம். அனுமதிக்கப்பட்ட ஹலாலான விஷயத்திற்கு இட்டுச் செல்பவை ஹலால். உதாரணத்திற்கு திராட்சை விற்பனை அனுமதிக்கப்பட்ட ஒன்று. அதில் கருத்து பேதமில்லை. ஆனால், மது வியாபாரியிடம் அவர் மது தயாரிப்பதற்காக அதை விற்பது ஹராம்.
இமாம் மாலிக் (ரஹ்) மேற்கொண்ட சட்ட அணுகுமுறையின் நுணுக்கங்கள், அவற்றுடன் இதர இமாம்களுக்கு இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் போன்றவற்றை இஸ்லாமியச் சட்டத்துறை வல்லுநர்களிடம் ஒப்படைத்துவிடுவோம். உன்னதம், ஞானம், அறம், இறையச்சம், நபியவர்களின் மீதான மெய்யன்பு என இன்று நமக்கு அந்நியமாகிக் கிடக்கின்றனவே பல விஷயங்கள் அவற்றை அவர்களது வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்வோம். சாமான்யர்களாகிய நமக்கு அதுதானே முக்கியம்.
ஹதீஸ் கலையில் இமாம் மாலிக் தலைசிறந்த ஓர் அறிஞர் என்று பேதமின்றி அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவரது அல்-முவத்தா புகழ்பெற்ற நூல். ஹதீஸ் திரட்டுகளில் மிகவும் பழமை வாய்ந்தது. மற்றபடி அவர் எழுதியதாகச் சொல்லப்படும் இதர நூல்கள், தொலைந்துவிட்டன; அல்லது கிடைக்கவில்லை.
கலீஃபா அல்-மன்ஸுர், அல்-முவத்தா நூலைத் தொகுக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனால் நீண்ட காலம் உழைத்து இமாம் மாலிக் (ரஹ்) அதைத் தொகுத்து, மன்ஸுரின் மகன் அல்-மஹ்தியின் ஆட்சியின் போதுதான் அது நிறைவுற்றது. பிறகு ஆட்சி புரிந்த அல்-ரஷீத், அல்-முவத்தாவை ஆட்சியின் அதிகாரபூர்வமான சட்டமாக அங்கீகரித்து, அதன் நகலை கஅபாவில் வைக்க வேண்டும் என்று விரும்பியபோது, திட்டவட்டமாக அதை மறுத்துவிட்டார் இமாம் மாலிக் (ரஹ்). தம் பணி அரசாங்க அங்கீகாரம் பெற்று, உலகின் உன்னத ஆலயத்தில் அதன் படிவம் வைக்கப்பட வேண்டும் என்பது எத்தகு நற்பேறு! பரிந்துரையில் கிடைத்துவிடக்கூடிய வாய்ப்பா அது? ஆனால் தெளிவாக அதை நிராகரித்துவிட்டார் இமாம் மாலிக். காரணம் உன்னதம்.
‘இதில் கூறப்பட்டிருப்பவற்றைவிட இஸ்லாம் மிகவும் விரிவானது, விசாலமானது. அப்படி இருக்கும்போது இந்த ஒரு திரட்டை மட்டுமே அணுகவேண்டும் என்று மக்களுக்குக் கட்டுப்பாடு விதிப்பது அவர்களுக்கு அளிக்கப்படும் தேவையற்ற நிர்ப்பந்தம்’ என்று கூறி அதைத் தடுத்துவிட்டார்.
தவிர தம் வாழ்நாள் முழுவதும் முவத்தா நூலை தொடர்ந்து திருத்தி வந்தார். மிகவும் ஆதாரபூர்வமானவை மட்டுமே அவற்றில் இடம் பெறவேண்டும் என்று அயராது அவர் அதில் கவனம் செலுத்தி, செலுத்தி, அதன் விளைவாகப் பல ஹதீஸ்களை நீக்கி, விளக்கங்களைத் திருத்தி, ஆரம்பத்தில் ஆயிரத்து எழுநூறுக்கு மேல் இருந்த அந்த ஹதீஸ் திரட்டு ஆயிரத்து நூறாகச் சுருங்கி செம்மையடைந்தது.
பள்ளிவாசலில் நிகழ்ந்துவந்த அவரது பாட வகுப்புகள் அவரது அந்திம காலத்தில் அவரது இல்லத்திற்கு இடம் பெயர்ந்தன. அதற்கு முக்கியக் காரணம் இருந்தது. தொடர் சிறுநீர் கழிவு உபாதை அவருக்கு ஏற்பட்டுவிட்டது. ஆனால் அவர் தமது மரணம் நேரம் வரை மற்றவர்களுக்கு அதைத் தெரியப்படுத்தவில்லை. பள்ளிவாசலில் தங்களைக் காண முடிவதில்லையே என்று மக்கள் அவரிடம் விசாரித்தபோதுகூட, “தமது காரணங்களை வெளியில் சொல்லும் வாய்ப்பு அனைவருக்கும் அமைவதில்லை” என்று தெரிவித்துவிட்டார்.
மக்களின் ஏகோபித்த அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவராயிருந்த இமாம் மாலிக் (ரஹ்) ஹிஜ்ரீ 179 ஆம் ஆண்டு தமது 86ஆம் வயதில் இறைவனிடம் மீண்டார்.
நிறைவுற்றது
சமரசம் பத்திரிகையில் மே 1-15, 2018 இதழில் வெளியானது
அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்
<–முந்தையது–> <–அடுத்தது–>
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License