3. சமுதாயச் சீர்திருத்தம்
தாவூத்ஷாவைப் பொருத்தவரை அரசியலுக்கு இரண்டாம் இடந்தான். காலத்தின் கட்டாயத்தால் அரசியலில் கலந்து கொண்டார்.
அவரது முதல் நோக்கம், முழு உழைப்பு, சமுதாயச் சீர்திருத்தம் தான். முஸ்லிம் சமுதாயத்தைச் சீர்திருத்த வேண்டும் என்பதே தாவூத்ஷாவின் உயிர் மூச்சாக இருந்தது. அவரது பேச்சும் எழுத்தும் சமுதாயச் சீர்திருத்தமே ஆகும்
சப் மாஜிஸ்திரேட்டாக இருந்த காலத்திலேயே அவர் சமயப் பிரசாரத்திலும் ஈடுபட்டார். வெளியூர்களுக்குச் சென்று, சமயச் சொற்பொழிவுகள் ஆற்றினார்.
இதில் என்ன ஆச்சரியம் என்றால், அவர் கம்ப இராமாயண கதாகலட்சேபமும் செய்தார். கல்லூரியில் படிக்கும் நாளிலேயே அவருக்குக் கம்ப இராமாயணத்தில் நல்ல புலமை இருந்தது. அவர் சப் மாஜிஸ்திரேட்டாக இருந்தபோது, ஒரு நாள் இரவு வேலை முடித்து, தன்னுடைய பணியாட்களுடன் அவர் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் ஒரு தெருவில் அவரை “வாங்கோ… வாங்கோ…” என்று வரவேற்று, மேடை ஏற்றினார்கள்.
அந்தத் தெருவில் சீதா கல்யாணம் கதாகாலட்சேபம் நடப்பதாக இருந்தது. ஆனால், காலட்சேபம் செய்ய வேண்டிய பாகவதர் வரவில்லை. இவர்தான் பாகவதர் என்று நினைத்து, இவரை வரவேற்று மேடை ஏற்றி விட்டார்கள்!
நிலைமையப் புரிந்து கொண்ட தாவூத்ஷா, அன்று விடிய விடிய “சீதா கல்யாணம்” காலட்சேபம் செய்தார்! நிறையப் பாடல்கள் கூறி விளக்கம் சொல்லி துணைக் கதைகள் பேசி எல்லோரையும் அசத்தி விட்டார்!
பிறகு தான் இவர் சப்-மாஜிஸ்திரேட்டு, சாயபு என்பது தெரிந்தது. கூட்டத்தினர் இவரது புலமையைப் பாராட்டினார்கள். “கம்ப இராமாயண சாயபு” என்று பட்டம் கொடுத்தார்கள். யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது மட்டுமல்ல; இந்த சமய ஒற்றுமையை இனிய மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்கள்.
முஸ்லிம் சங்கம்
அந்த நாளில் சின்னச் சின்ன ஊர்களிலும், தெருக்கள் தோறும் நூலகங்கள் இருக்கும். நாச்சியார் கோயிலிலும் 1905 ஆம் ஆண்டு “சுதேச நன்னெறிச் சங்கம்” என்று ஒரு சங்கம் தொடங்கப்பட்டது. அதன் சார்பில் ஒரு நூலகம் நடத்தினார்கள். சில மாதங்களில் அதற்கு மூடு விழா நடத்தி விட்டார்கள்.
1914 ஆம் ஆண்டில் பா. தாவூத்ஷாவின் முயற்சியால் மீண்டும் ஒரு சங்கம் தொடங்கப்பட்டது. “அறிவானந்த சபை” என்று பெயர். நூலகம் திறக்கப்பட்டதுடன், உடற்பயிற்சி நிலையம் ஒன்றும் நடத்தினார்கள்.
1915 இல் தாவூத்ஷா அச்சங்கத்தின் தலைவரானார். சமய சமுதாயச் சீர்திருத்தத்துக்கு அச்சங்கத்தைப் பயன்படுத்திக் கொள்ள அவர் விரும்பினார். அதற்கு வசதியாகச் சங்கத்தின் பெயரை “முஸ்லிம் சங்கம்” என்று மாற்றினார்.
நாச்சியார்கோயிலில் முஸ்லிம்கள் அதிகம். 1884 ஆம் ஆண்டு முதலே அங்கு ஒரு அரபிக் கல்லூரி நடந்து வருகிறது.
தனது சீர்திருத்தங்களை முதலில் உள்ளூரில் தொடங்க தாவூது ஷா விரும்பினார். உள்ளூரிலும், வெளியூர்களிலுமாகப் பல ஊர்களில் அவர் சொற்பொழிவாற்றினார். அந்த பேச்சுகள் எல்லாம் அவ்வப்போதே காற்றில் கரைந்து போயின.
அப்பேச்சுகளை அச்சிட்டு வெளியிட்டால், நிலைத்து நிற்கும், பல ஆயிரம் மக்கள் படித்துப் பயன் பெறுவார்கள் என்று அவர் கருதினார். “முஸ்லிம் சங்கக் கமலம்” என்ற பெயருடன் அந்தப் பேச்சுகளை வரிசையாக வெளியிட்டார்.
1919 ஆம் ஆண்டில் புத்தாண்டு நாளில் (ஜனவரி 1) முதல் “கமலம்” வெளி வந்தது. அடுத்த ஆண்டு “மறுகமலம்” என்ற தலைப்பில் வெளியிட்டார். இந்த இரண்டு ஆண்டில் 32 “கமலங்கள்” வெளி வந்தன. எல்லாம் சிறுசிறு வெளியீடுகள், “முஸ்லிம்களின் கல்வி அறிவு, ஒழுக்கம், மார்க்க உணர்ச்சி முதலியவற்றை மேன்மைப்படுத்த முன் வந்து, செந்தமிழில் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டோம்” என்கிறார், தாவூத்ஷா.
இஸ்லாத்தின் இணையில்லா அற்புதம், இஸ்லாத்தின் இனிவரும் உன்னதம், இஷா அத்தே இஸ்லாம், இஸ்லாமும் இதர மதங்களும், எமது கொள்கை முதலிய கட்டுரைகள் இந்தக் கமலங்களில் இடம் பெற்றன.
தத்துவ இஸ்லாம்
தனது பிரசாரத்தை, பிரசுரத்தை தமிழ்நாடு முழுவதும் செல்லும்படி தீவிரப்படுத்தத் தாவூத்ஷா விரும்பினார். எனவே, “கமலம்” வெளியீடுகளை ஒரு மாத இதழாக மாற்றினார். இதழுக்கு “தத்துவ இஸ்லாம்” என்று பெயரிட்டார்.
“தென்னாட்டு முஸ்லிம்களிடம் காணப்படும் மூடக் கொள்கைகளை எல்லாம் களைந்து, அவர்களுடைய மார்க்க ஞானத்தையும் கல்வியறிவையையும் அபிவிருத்தி செய்ய, 1921 மே மாதம் முதல் ‘தத்துவ இஸ்லாம்’ என்னும் பெயருடன் ஒரு மாதப் பத்திரிகை வடிவமாக முஸ்லிம் சங்கம் தந்து பிரசாரத்தை செய்து வர முற்பட்டது.
துண்டுப் பிரசுரங்களால் மட்டும் போதிய பயனை அடைய முடியாதெனக் கண்டே ‘தத்துவ இஸ்லாம்’ என்னும் சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்டது’ என்பார், பா.தாவூத்ஷா
இவ்விதழ் தொடங்க கோலாலம்பூரில் (மலேசியா) பெரிய வியாபாரியாக இருந்த துக்கையாச்சி ஓ. முகையிதீன் ஷா ரூ.1000 நன்கொடை தந்தார். உடனடியாக 150 சந்தாதார் சேர்ந்தார்கள்.
இதழ் தொடங்கியபொழுது தாவூத்ஷா பண்ருட்டியில் சப் மாஜிஸ்திரேட்டாக இருந்தார். அவர் எல்லா எழுத்து வேலைகளையும் கவனித்துக் கொண்டார். முஸ்லிம் சங்கத்தின் செயலாளராக இருந்த கு. அமிருத்தீன் சாகிப் இதழை அச்சிட்டு வெளியிட்டார்.
லண்டன் பயணம்
இந்த நேரம் காஜா கமாலுதீன் என்ற முஸ்லிம் பிரசாரகர் தமிழ்நாட்டுக்கு வந்தார். இவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு குத்துச் சண்டை வீரர். பல நாடுகளுக்கும் போய், சமயப் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.
இவர் தமிழ் நாட்டுக்கு வந்ததும், தாவூத்ஷாவைப் பற்றிக் கேள்விப்பட்டார். தாவூத்ஷா ஒரு பி.ஏ பட்டதாரி; ஆங்கிலத்தில் அருமையாகச் சொற்பொழிவு ஆற்றக் கூடியவர். எழுத்துத் திறமையும் உண்டு. சமயப் பிரசாரம் செய்வதில் தீவிரமாக இருந்தார். எனவே, இவரைப் பயன்படுத்திக் கொள்ள காஜா கமாலுதீன் விரும்பினார்.
அப்போது அவர் லண்டனுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். “நீங்களும் லண்டனுக்கு வாருங்கள். உங்கள் நாவன்மையால் வெள்ளைக்காரர்களை முஸ்லிம்கள் ஆக்கி விட முடியும்” என்று தாவூத்ஷாவை அழைத்தார்.
சமயப் பிரசாரம் என்றதும் தாவூத்ஷாவும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். 1922 பிப்ரவரியில் லண்டனுக்குக் கிளம்பினார்.
ஓராண்டு அங்கே இருந்தார். இஸ்லாமியப் பிரசாரம் செய்தார். “இஸ்லாமிக் ரெவியூ” என்ற ஆங்கில இதழின் நிர்வாக ஆசிரியராகவும் பணியாற்றினார். ஜெர்மனிக்குப் போய், அங்கு ஒரு பள்ளி வாசல் கட்ட நிலம் வாங்கினார்.
லண்டனில் இருந்தபடியே ‘தத்துவ இஸ்லாம்’ இதழுக்கான கட்டுரைகளை எழுதி அனுப்பினார். ஆசிரியர், இங்கிலாந்தில்; இதழ் அச்சானது, சென்னையில்; வெளி வந்தது, நாச்சியார்கோயிலில்!
இதற்கு இடையே திருக்குரானை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் தாவூத்ஷாவுக்கு ஏற்பட்டது. தமிழ்நாட்டுக்குப் போனால்தான் இது முடியும் என்று புறப்பட்டார். காஜா கமாலுதீன் எவ்வளவோ தடுத்தும், கப்பலேறி விட்டார். இலங்கை வழியாக 1923 மே மாதம் தமிழ்நாட்டுக்குத் திரும்பினார்.
காஜா கமாலுதீனுடன் இருந்த ஓராண்டு, தாவூத்ஷாவின் எதிர்காலம் முழுவதையுமே சோதனைகளை சந்திக்கச் செய்துவிட்டது.
(தொடரும்)
நூல்: இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா
ஆசிரியர்: முனைவர் அ. அய்யூப்