எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
ஏக இறைவனாம் அல்லாஹ்வின் அரும் பெரும் கருணையினால் எமது ‘ஆயிஷா பதிப்பகம்’ சார்பாக, நூருத்தீன் எழுதிய சஹாபியாக்களின் வரலாறான ‘தோழியர்’
எனும் நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிடுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் தோழியர் எனும் தலைப்பில் வெளிவந்த இந்த வரலாற்றுத் தொடர் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் சத்தியமார்க்கம் பப்ளிகேஷன்ஸ் அச்சிட்டு வெளியிட்ட இதன் முதல் பதிப்பு வெகு விரைவில் முற்றிலுமாய் விற்றும் தீர்ந்தது. ஆயினும் இந்நூலுக்கான தேவை வாசகர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வருகிறது. அதனைப் போக்கும் விதமாக இந்த இரண்டாம் பதிப்பை வெளியிட்டுள்ளோம்.
மாமேதை இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் எழுதிய ‘அல்பிதாயா வந்நிஹாயா’ எனும் அரபு பெருநூலை தமிழாக்கம் செய்து இதுவரை ஏழு பாகங்கள் வெளியிட்டுள்ளோம். இதர பாகங்களையும் வெளியிடும் பணி நடைபெற்று வருகிறது. நம் தமிழ் வாசகர்கள் படித்துப் பயன்பெரும் பொருட்டு இஸ்லாமிய வரலாற்று நூல்களைத் தரமான வகையில் அச்சிட்டு வெளியிட வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள். அதற்கேற்ப, இந்நூல் ‘தோழியர்’ எங்களின் மற்றொரு வெளியீடாக அமைந்துள்ளது.
அதிகமாக அறியப்படாத நபித் தோழியரின் வாழ்க்கை வரலாற்றை எளிய மொழியில், தமக்கே உரிய தனிப் பாணியில் சிந்தை கவரும் வகையில் வடித்துள்ளார் இந்நூலாசிரியர் நூருத்தீன். முஸ்லிமல்லாதவரும் படித்து ரசித்து புரிந்து கொள்ளும் வகையில் இந்நூல் சுவையாக அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பு. உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இஸ்லாமிய மகளிர் வரலாறாகக் கற்பிப்பதற்குத் தகுதி வாய்ந்தது இந்நூல் என்பது எங்களின் உறுதியான நம்பிக்கை. இந்நூலை நீங்கள் வாசிப்பதோடு நின்றுவிடாமல், தங்களுக்கு அறிமுகமான, தமிழறிந்த அனைவருக்கும் பரிந்துரைத்து, அவர்களும் வாங்கி வாசிக்க ஊக்குவிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
எங்கள் பணிகளுக்கான வெகுமதி நிறைவாகக் கிடைத்திட இறைவனிடம் இறைஞ்சுகிறோம். இந்நூல் குறித்து தங்களின் மேலான ஆலோசனைகளையும் கருத்துகளையும் வழங்கிடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
M. சாதிக் பாட்சா
J. இக்பால் கான்