டார்ஸ்டனின் உரைக்கு விமர்சனம்

by admin

ஜெர்மனியைச் சேர்ந்த பேராசிரியர் டார்ஸ்டன் சாச்சர் (Torsten Tschacher) சென்னை ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் ‘Extraordinary Translations’ and ‘Loathsome Commentaries’: Early Quranic Translations in the Tamil World எனும் தலைப்பில் அண்மையில் நிகழ்த்திய உரையை சகோதரர் உவைஸ் விரிவான கட்டுரையாக எழுதி வெளியிட்டிருந்தார்.

அந்த ஜெர்மன் பேராசிரியரின் உரையும் உவைஸின் கட்டுரையும் ஒரு சிறு விவாதத்தை உருவாக்கும், அதற்கான மேலதிக விளக்கம் தேவைப்படும் எனக் கருதுகிறேன்.

எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமிழும் இஸ்லாமும் பயின்றவர்கள், பழங்காசு சீனிவாசன் ஆகியோரிடம் நிறைய கேட்டு அறிந்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அறிஞர் பா. தாவூத்ஷா அவர்கள் Unsung Hero. ஒரு சாதாரண misunderstanding அவருடைய முழு உழைப்பையும் காவு கேட்டிருக்கிறது.

“A hypothesis is the initial building block in the scientific method. Many describe it as an ‘educated guess,’ based on prior knowledge and observation.” என்பார்கள். ஆக குத்துமதிப்பாகவே எழுதிக்கொண்டிருக்கிறோமா என்று தோழர்கள் உவைசும் ஆஷிர் முஹம்மதும் எண்ண வேண்டியதில்லை. ஆய்வுத்துறையில் யூகமும் அனுமானமும் உண்மையை நோக்கி உந்தித்தள்ளக் கூடியவை என்பதால் அவை வரவேற்கப்பட வேண்டியவையே. முன்முடிவுகள் மட்டும் இருக்கக் கூடாது.

பேராசிரியர் டார்ஸ்டன் தமிழகமெங்கும் சுற்றியலைந்து ஆரம்பகால திருக்குர்ஆன் தமிழ் மொழியாக்கங்களைக் குறித்த தகவல்களைத் திரட்டியுள்ளார். மொழிபெயர்ப்பாளர்கள் வாழ்ந்த ஊர், அந்த நூல்கள் அச்சாக்கம் செய்யப்பட்ட ஊர் ஆகியனவற்றைக் குறிப்பிட்டு வரைபடமொன்றையும் தயாரித்துள்ளார். அன்றைய தமிழக முஸ்லிம்கள் ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி அவர்களை ஏற்றுக்கொண்டதற்கும் பா. தாவூத்ஷாவை அவர்களை ஏற்காமல் அலைக்கழித்ததற்குமான காரணங்கள் யாவை?

பேராசிரியரின் உரையில் ஒரு மேற்கோள் இப்படியுள்ளது:

“தாவூத்ஷா செய்த திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு வார்த்தைக்கு வார்த்தை அப்படியே வெளிவந்திருந்த ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பை பின்பற்றி அமைந்திருந்தது. அதை இயற்றியது மௌலானா முஹம்மது அலி என்ற ஓர் அஹ்மதிய்யா அறிஞர்.”

இதில் டார்ஸ்டனின் புரிதலில் உள்ள மௌனத்தை, அதிலுள்ள இடைவெளியை நான் கீழ்க்கண்டவாறு புரிந்துகொள்கிறேன். அக்காலக் கட்டத்தில் வெளிவந்திருந்த ஆங்கில மொழிபெயர்ப்புகளின் ஆண்டு வரிசை இவை:

  • மௌலானா முஹம்மது அலீ – 1917
  • மர்மடூக் பிக்தால் (Marmaduke Pickthall) – 1930
  • யூஸுஃப் அலி – 1934

பா. தாவூத்ஷா குர்ஆனைத் தமிழில் மொழிபெயர்த்து அது வெளியான முதல் பதிப்பு 1931. எனவே அதுவரை மௌலானா முஹம்மதலீயின் மொழிபெயர்ப்பே முஸ்லிம் ஒருவரால் எழுதப்பட்ட முதல் ஆங்கில மொழிபெயர்ப்பாகும்.

அதற்கு முன்பு வந்திருந்த ஆங்கில மொழிபெயர்ப்புகளாவன:

  • George Sale – 1734
  • Rodwell – 1861
  • E.H. Palmer – 1880

இவை Non-Faithful translations வகையில் அடங்கக்கூடியவை. இந்தப் பின்னணியில் அணுகினால் பா. தாவூத்ஷா அவர்கள் மௌலானா முஹம்மது அலீயின் ஆங்கில மொழியாக்கத்தைத் தமது பணிக்கு எடுத்துக்கொண்ட காரணத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

சரி, மௌலானா முஹம்மது அலீ என்பவர் யார்? அவர் அஹ்மதிய்யாவா? தாவூத்ஷாவுக்கும் முஹம்மது அலீக்கும் இருந்த தொடர்புகள் எப்படிப்பட்டவை? பா. தாவூத்ஷாவின் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு மௌலானா முஹம்மது அலீயின் ஆங்கில மொழிபெயர்ப்பை வார்த்தைக்கு வார்த்தை பின்பற்றி அமைந்திருந்ததா?

இந்த வினாக்களுக்குள் புகும்முன் காஜா கமாலுத்தீன் (1870 – 1932) என்பவரை அறிந்து கொள்வது முக்கியம். கிழக்காசியவின் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, பர்மா நாடுகளுக்கு அவர் 1920-ல் பயணம் மேற்கொள்கிறார். இலண்டனில் Islamic Review என்கிற பத்திரிகையை தொடங்குகிறார். இவருடன் நேரடியாகவோ, கடிதத் தொடர்புகள் மூலமாகவோ பா. தாவூத்ஷாவுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவரின் அழைப்பை ஏற்று பா. தாவூத்ஷா 1922-ஆம் ஆண்டு இலண்டன் சென்று Islamic Review பத்திரிகையின் Sub-Editor பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.

1920-களில் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புப் பணியைத் தமது இலட்சியமாக அமைத்துக்கொண்டவர் பா. தாவூத்ஷா. அக்காலம் வரை குர்ஆனைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் நடந்திருந்தனவே தவிர அவை சாமான்ய மக்கள் பயன்படுத்தும் விதத்தில் அமையவில்லை; கிடைக்கவில்லை. அவற்றை ஒப்பிட்டுப் பார்க்க, சரிப்பார்க்க முந்தைய ஆங்கில மொழிபெயர்ப்புகளாவது (Non-Faithful translations) நூலகங்களில், புத்தகக் கடைகளில் கிடைத்தனவா என்றால் இருந்திருக்க வாய்ப்பில்லை. மௌலானா முஹம்மது அலீயின் மொழிபெயர்ப்போடு தாவூத்ஷாவை தொடர்புபடுத்தி பேசும்போது, அதற்கு முன்புவரை ஆங்கில மொழிபெயர்ப்பு திருக்குர்ஆனுக்கு உள்ளது என்கிற விஷயம் வெளியே (குறிப்பாக இந்தியாவில்) பரவலாகத் தெரியவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பது என் கருத்து.

பா. தாவூத்ஷாவை அஹ்மதிய்யா என்று குற்றம் சுமத்துபவர்கள் மௌலானா முஹம்மது அலீ அஹ்மதிய்யாவா என்பதை முதலில் அறிய வேண்டும். மிர்ஸா குலாம் அஹ்மது என்பவரை நபியென்று ஏற்றுக்கொண்டவர்கள் அஹ்மதியாக்கள். கிலாஃபத்தை அமைத்திருப்பதாகக் கூறும் அவர்களில் முதலாவது கலீஃபா ஹக்கீம் நூருத்தீன் (1841 – 1914). அந்த காலகட்டத்தில் அவர்களுடன் இயங்கிக் கொண்டிருந்த மௌலானா முஹம்மது அலீ போன்றவர்கள் மிர்சா அஹ்மதை நபியாகக் ஏற்றுக்கொள்ளாமல் அவரை ஒரு சீர்திருத்தவாதியாகக் கருதி தனியொரு அமைப்பை கண்டனர். அதுவே லாஹுர் அஹ்மதிய்யா இயக்கம் (Lahore Ahmadiya Movement) (1914) என்பதாகும். இவர்கள் லாஹுர் பார்ட்டி என்று அறியப்பட்டனர்.

அஹ்மதியாக்களும் லாஹுர் பார்ட்டியும் முரணியக்கங்கள். அஹ்மதிய்யாக்களை முஸ்லிம்களல்ல என்று தீர்ப்பளித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அங்குள்ள உலமா சபையை மேற்கோள்காட்டி ‘உம்மத்’தின் ஒருகிளையாக ‘லாகூரி’களை அங்கீகரித்துள்ளது. அந்த லாஹுர் பார்ட்டிகளுள் ஒருவரான காஜா கமாலுத்தீனோடு நட்பு கொண்டிருந்தை மட்டும் வைத்து தாவூத்ஷாவை அஹ்மதியா என்று எப்படிக் கூற முடியும்?. Trail of Muslim Libel Case-இல் சிங்கப்பூர் நீதிமன்றம் தாவூத்ஷாவை விடுவித்த விரிவான தகவலை இந்தச் சுட்டியைச் சொடுக்கிக் காணலாம்.
http://aaiil.org/text/books/others/misc/trialmuslimlibelcase/trialmuslimlibelcase.pdf

இந்த வழக்குப் பதிவேடு இருநூறு பக்கங்கள் அளவிற்கு விரிகிறது. தாம் இறந்துபோகும் வரை பா. தாவூத்ஷா சந்தித்த நெருக்கடிகளை அதிலிருந்து அறிந்துகொள்ள முடியும். இவையன்றி, 1924, 1925 தாருல் இஸ்லாம் இதழ்களில் தம்முடைய கொள்கையையும் தம்மைக் காதியானீ என்று குற்றம் சுமத்துபவர்களுக்குத் தெளிவான தம் விளக்கத்தையும் பா. தாவூத்ஷா எழுதியுள்ளதும் கவனத்திற்குரியது.

எங்கள் ஊரில் பணி ஒய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் வசிக்கிறார். தினசரி சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட ஆங்கில, தமிழ் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகளை எடுத்து வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் ஒப்பிட்டு பார்ப்பதை செயல் திட்டமாக நிறைவேற்றி வருகிறார். காஜா கமாலுத்தீன் மொழி நடையின் அழகியல்கூறு “The Shade of the Quran” நூலை மொழிபெயர்த்த ஆதில் சாலாஹியிடம் காணப்படுவதாக அவர் அடிக்கடி கூறுவார். அந்தப் பேராசிரியரிடமிருக்கும் மௌலானா முஹம்மது அலீயின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பை இரவல் பெற்று தாவூத்ஷாவின் குர்ஆன் மொழிபெயர்ப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். என் ஒப்பீட்டின் அடிப்படையில், முஹம்மத் அலீயின் மொழிபெயர்ப்பை தமிழில் தாவூத்ஷா பயன்படுத்தியிருந்தாலும் பல இடங்களில் தன் தனித்தன்மையுடனேயே எழுதியிருக்கிறார் என்பேன்.

அப்துல் ஹமீத் பாக்கியாத் மதரஸாவில் மார்க்கக் கல்வி பயின்று 1905/06-ஆம் ஆண்டு பாகவி பட்டம் பெற்றவர். கணித மேதை ராமானுஜம், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் உயர்நிலைப் பள்ளியிலும் மாநிலக் கல்லூரியிலும் முறையே பாடம் பயின்றவர் தாவூத்ஷா. மொழிஞாயிறு உ.வே. சாமிநாதய்யரிடம் மாணவராக இருந்துள்ளார். இந்தப் பின்னணியில் அணுகினால் முன்னவருக்கு அரபியும் பின்னவருக்கு ஆங்கிலமும் தமிழும் மூலமொழியாகின்றன.

திருக்குர்ஆன் தமிழ் பதிப்புக்குத் தேவைப்படும் நிதியைத் திரட்ட அப்துல் ஹமீது பாகவியாருக்கு அப்துல் காதர் என்கிற சூஃபி அறிமுகக் கடிதம் அளித்து அதை எடுத்துக்கொண்டு அவர் 1937 ஆம் அண்டு ஹைதராபாத் நிஜாமைச் சந்தித்திருக்கிறார். ஆனால் இப்படியான பரிந்துரகள் இன்றி பா. தாவூத்ஷா தன்னந்தனியனாக உலக நாடுகள் பலவற்றிலும் இயங்கியிருக்கிறார். அதனால்தானோ என்னமோ திருக்குர்ஆன் தமிழ்ப் பதிப்பில் சாதனையாளராக இருந்தும் அவரது பெயர் பெரிய அளவில் பேசப்படாமல் உள்ளது.

மேற்சொன்ன கருத்துகளின் அடிப்படையில் பா. தாவூத்ஷா, அப்துல் ஹமீது பாகவி ஆகியோரின் மொழிபெயர்ப்புகளையும் அவர்கள் சாதித்தவற்றையும் பா. தாவூத்ஷா எதிர்கொண்ட அவதூறயும் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

பேராசிரியர் டார்ஸ்டன் சாச்சரின் உரையை மிக நேர்த்தியாக மொழிபெயர்த்து நல்லதொரு கட்டுரையாக மாற்றிய சகோதரர் உவைஸின் பணி பாராட்டுக்கு உரியது. அவருக்கும் இந் நிகழ்ச்சியைத் திட்டமிட்டு சிறப்பே நடத்தி முடித்த சகோதரர் கோம்பை அன்வருக்கும் ரோஜா முத்தையா நூலக இயக்குனர் சுந்தர் கணேசனுக்கும் என் நன்றிகளையும் பாராட்டுகளையும். தெரிவித்துக் கொள்கிறேன்.

-கொள்ளு நதீம். ஆம்பூர்.

Related Articles

Leave a Comment