கைப்பேசியில் வந்த குறுந்தகவல்தான் இதன் உந்துதல். அன்புச் சகோதரர் அபூஷேக் அனுப்பியிருந்தார். தகவலின் சாராம்சம் – ‘அண்ணலாரின் வரலாற்றை முழுமையாகப் படிக்காமலேயே
தற்கால முஸ்லிம் சமூகம் வெற்றிக்கு அடிபோடுகின்றது’. அது ஆதங்கத்தை முகத்தில் அறையும் எளிய வாசகம்!
முஹம்மது நபி (ஸல்) பிறந்த மாதம் ரபீயுல் அவ்வல். இது ரபீயுல் அவ்வல் மாதம் (ஹிஜ்ரீ 1441ஆம் ஆண்டு) என்பதால், இந்த ஒரு மாதத்திற்குள்ளாவது நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறை முழுவதுமாக வாசிக்க ஊக்கமளித்து அவர் அத்தகவலை அனுப்பியிருந்தார். அதை Facebook-இல் பகிர்ந்தபோது, சகோ. முஹம்மது என்பவர், ‘புத்தகங்கள் பரிந்துரைத்தால் நல்லா இருக்கும்’ என்று பின்னூட்டம் இட்டிருந்தார்.
அதன் விளைவு – இந்தப் போட்டி!
பன்னூலாசிரியர், கவிஞர், தமிழ்மாமணி அதிரை அஹ்மத் அவர்கள் எழுதிய நூல் “நபி (ஸல்) வரலாறு”. இலக்கியச் சோலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நபியவர்களின் வாழ்க்கையை அழகிய தமிழில் மிக விரிவாக விளக்கும் இந்நூல் வாசகர்களுக்கு எனது ஒரு பரிந்துரை. மேலும் பல நூல்களும் தமிழில் உள்ளன. அவற்றையும் புரட்டலாம்; வாசிக்கலாம்.
இந்த ஒரு மாத கால அவகாசத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை விரிவாக வாசித்துவிட்டு, அவர்களது வரலாற்றின் ஏதேனும் ஓர் அம்சத்தை அடிப்படையாக எடுத்துக்கொண்டு, 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு கட்டுரை எழுதி அனுப்புங்கள்.
வந்து சேரும் கட்டுரைகளுள் சிறப்பான மூன்றை அதிரை அஹ்மத் அவர்கள் தேர்ந்தெடுத்துத் தருவார்கள். அந்த மூவருக்கும் தலா ₹.1000 பெறுமானமுள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.
நிபந்தனைகள்:
- நபி (ஸல்) அவர்களின் வரலாற்றிலிருந்து ஏதேனும் ஓர் அம்சத்தை அடிப்படையாகக் கொண்ட, 1000 வார்த்தைகளுக்கு மிகாத கட்டுரை
- அனுப்ப வேண்டிய முகவரி – admin@darulislamfamily.com
- கடைசி தேதி – நவம்பர் 30, 2019
- வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிரை அஹ்மத் அவர்களின் அறிவிப்பே இறுதியானது.
- பரிசு, புத்தகங்களாக இந்திய விலாசத்திற்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படும்.