அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!
சத்தியமார்க்கம்.காம் தளத்தில் சகோ. நூருத்தீன் எழுத, தொடராக
வெளிவந்து கொண்டிருக்கும் “தோழர்கள்” தொடரிலிருந்து 20 தோழர்கள் அடங்கிய தொகுப்பு, சத்தியமார்க்கம் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக, “தோழர்கள் – முதலாம் பாகம்” அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 11 செப்டம்பர் 2011 ஞாயிறு காலை 11 மணியளவில் சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் நிகழ்ந்தேறியது, அல்ஹம்து லில்லாஹ்!
நாடெங்கும் திருமணங்கள், புதுமனை குடிபுகல்கள், இன்ன பிற குடும்ப வைபவங்கள் – 11 செப்டம்பர் 2011 ஞாயிற்றுக்கிழமை சுப முகூர்த்தமாம். நூலாசிரியரின் 3 வார இந்திய வருகையைக் கருத்தில் கொண்டு, ‘நல்ல நாள்’ பற்றிய சிந்தனை இல்லாமல், அந்த நாளை நூல் வெளியீட்டுக்காகத் தேர்ந்தெடுத்திருந்தோம். நூல் வெளியீட்டுக்குப் மிகப் பொருத்தமான தேவநேயப் பாவாணர் அரங்கம் பல ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்கனவே பலருக்கும் பதிவாகிவிட்டிருந்தது. மிகுந்த பிரயாசைக்குப் பின்னர் 11.9.2011 காலையில் நமது நிகழ்ச்சியை நடத்திக் கொள்ள பாவாணர் அரங்கத்தினர் இசைவு தெரிவித்தனர், அல்ஹம்து லில்லாஹ்!
சத்தியமார்க்கம் குழுமத்தினரின் ஆலோசனையைத் தொடர்ந்து, தளத்தின் உதவிக் கரங்கள் பகுதியில் இடம்பெற்ற செவிப்புலன் இல்லாத சிறுமி ஆயிஷா சுல்தானாவுக்கு சத்தியமார்க்கம் சார்பாக ரூபாய் 45,000க்கான காசோலையை, சிறுமியின் சிற்றப்பாவிடம் வழங்கி எங்களது கன்னிப் பதிப்பான “தோழர்கள்” நூல் வெளியீட்டை ஒரு நல்லறத்துடன் தொடங்கினோம். இதை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மூவரைத் தவிர யாருக்கும் தெரியாமல், விளம்பரமின்றிச் செய்தோம். இந்த அறிவிப்பும் சிறுமி ஆயிஷா சுல்தானாவுக்குப் பிறர் உதவுவதற்கு ஓர் உந்துதலாக இருக்கும் என்பதால் இங்கு அதை வெளிப்படுத்துகிறோம்.
நூலாசிரியர் நூருத்தீனின் இளைய மகள் செல்வி. ஷைமா, இறைமறை வசனங்களைத் தம் இனிய குரலில், மிகத் தெளிவுடன் ஆற்றொழுக்காக ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க முன்வந்த கவிஞர் பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்), அமர்வுத் தலைவரில் தொடங்கி ஒவ்வொருவராக அறிமுகம் செய்து மேடைக்கு அழைத்தார்.
மேடையை அலங்கரித்தவர்கள் (இடமிருந்து வலம்:
1. மறைந்த தொழிலதிபர் கீழக்கரை அஹ்மது யாசீன் அவர்களின் மகனார் நாஸர் (ஹஜ் ஸர்வீஸ், மலேஷியா).
2. ஜமீல் (இணைய இதழாசிரியர், சத்தியமார்க்கம்.காம்)
3. “தோழர்கள்” நூலுக்கு மதிப்புரை வழங்கிய பன்னூலாசிரியர், கவிஞர் அதிரை அஹ்மது (அமர்வுத் தலைவர்)
4. பேராசிரியர், அ. மார்க்ஸ்
5. பேராசிரியர், டாக்டர் அப்துல்லாஹ்
6. நூருத்தீன் (“தோழர்கள்” நூலாசிரியர்)
சத்தியமார்க்கம்.காம் குழுமத்தினரில் ஒருவரும் கணி வல்லுநரும் பல அறிவியல் கட்டுரைகளின் ஆசிரியருமான சகோ. முஹம்மது ரஃபீக் (அபூ ஷைமா), நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வந்த அனைவரையும் வரவேற்றார்.
பன்னூலாசிரியரும், பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் அரபுக் கல்லூரியின் முன்னாள் தமிழாசிரியருமான கவிஞர் அதிரை அஹ்மது அவர்கள் நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரையாற்றும்போது, கண்ணியமான “தோழர்கள்” பற்றி மிகச் சுருக்கமாக விளக்கி, நூலாசிரியரின் எழுத்துப் பாரம்பரியத்தின் மீது வெளிச்சம் வீசினார்.
அடுத்ததாக, ‘நூல் அறிமுகம்’ செய்ய வந்த, சத்தியமார்க்கம்.காம் இணைய இதழாசிரியர் ஜமீல், “தோழர்கள்” நூல் கல்விக்கூடங்களில் வரலாற்றுப் பாடமாக வைக்கப்பட வேண்டிய ஒன்று என அறிமுகப்படுத்திவிட்டு, இன்றுவரை புனிதர்களாகப் பேசப்படும் நபித் தோழர்கள் “லா இலாஹ இல்லல்லாஹ்”வை ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் எப்படி வளர்க்கப்பட்டிருந்தனர்? எப்படிப்பட்ட மோசமான வாழ்க்கையை வாழ்ந்தனர்?; “லா இலாஹ இல்லல்லாஹ்” அவர்களது வாழ்க்கை முறையை எவ்வாறு தலைகீழாகப் புரட்டிப் போட்டது? எனச் சான்றுகளை முன்வைத்துப் பேசினார். எங்கோ உள்ள எத்தியோப்பியாவில் பிறந்த கறுப்பரும் அடிமையுமான பிலால் (ரலி) அவர்களை, “எங்கள் தலைவரே!” என்று குலப்பெருமை தலைக்கேறிக் கிடந்த குரைஷியருள் ஒருவரான உமர் பின் அல்கத்தாப் (ரலி) வாஞ்சையுடன் அழைக்க வைத்தது எது? என்ற கேள்வியுடன் தொடங்கி, லா இலாஹ இல்லல்லாஹ்வின் முதல் அழித்தொழிப்பு இலக்கு, தீண்டாமைதான் என்றார். தங்களது இல்லங்களில் இருக்கும் மதுக் குடங்களின் எண்ணிக்கையைத் தங்களின் பெருமைக்குச் சான்றாகப் பேசித் திரிந்த அரபியருள், மொடாக் குடியராகத் திகழ்ந்த ஹம்ஸா (ரலி) அவர்களை ஒழுக்கத்தின் உறைவிடமாக, அல்லாஹ்வின் சிங்கம் என்ற சிறப்புப் பெற்றவராக மாற்றியமைத்தது லா இலாஹ இல்லல்லாஹ் என்றார்.
அதன்பின், நூல் வெளியீடு தொடங்கியது.
“தோழர்கள் – முதல் பாகம்” நூலின் முதல் பிரதியை, அமர்வுத் தலைவர் அதிரை அஹ்மது அவர்கள் வெளியிட, தொழிலதிபர் A.Y. நாஸர் (மலேஷியா) பெற்றுக் கொண்டார். சகோ. A.Y. நாஸர் அவர்களின் சென்னை நிறுவனத்தில் நூலாசிரியர் நூருத்தீன் அவர்கள் பல்லாண்டுகளுக்கு முன்னர் பணியாற்றியவராம்.
இரண்டாவது பிரதியை, நூலாசிரியர் நூருத்தீன் வெளியிட, பழனியப்பா ப்ரதர்ஸ் (பிரிண்டர்ஸ்) உரிமையாளர் செல்லப்பன் பெற்றுக் கொண்டார். இவரும் சகோ. நூருத்தீனின் முன்னாள் முதலாளியாம்.
மூன்றாவது பிரதியை, சத்தியமார்க்கம்.காம் இணைய இதழாசிரியர் ஜமீல் வெளியிட, நூலாசிரியருக்குத் “தோழர்கள்” தொகுப்பில் ஊக்கமும் ஒத்துழைப்பும் நல்கிவரும் அவரின் துணைவியார் சகோதரி ஸேபா பெற்றுக் கொண்டார்.
அடுத்து, சிறப்புரையாற்ற வந்த பேரா.அ.மார்க்ஸின் உரை, ஆழமானதாக, கருத்துச்செறிவுடனும் விவரணங்களுடனும் அமைந்திருந்தது. இயக்கமாகப் பரிணமித்த இஸ்லாம், தன் குறிக்கோள்களில் அடைந்த வெற்றி பற்றிய ஓர் ஆய்வுரையாகவும் எளிமையானவர்களையே முன்னிலைப்படுத்திய இஸ்லாம் குறித்த மதிப்புரையாகவும் உலக இன்பத்தினைப் பொருட்படுத்தாமல், மறு உலக வெற்றி என்னும் குறிக்கோளினை முன்னிறுத்தி மிக எளிமையாக நபித்தோழர்கள் வாழ்ந்திருந்தும், பின்வந்த சமுதாயத்தவர் பொருளாசையில் புதையுண்டு போனது பற்றிய நேர்ப்பார்வையாகவும் பேரா. அ. மார்க்ஸ் அவர்களின் ஆழிய உரை அமைந்திருந்தது.
நூலைப் பற்றியும், நூலாசிரியரின் பாட்டனாரும் தந்தையாரும் அரபுத்தமிழ் கோலோச்சிய அந்தக் காலத்தில் மார்க்கத்தினைப் பரப்புவதற்குத் தனித் தமிழினைக் கையாண்ட பாங்குமுதல் அவர்தம் அரசியல் நிலைப்பாடுகள், அவர்கள் இயங்கிய பல்வேறு தளங்கள் பற்றிய புள்ளி விபரங்கள் ஆகியவற்றை வெகு இயல்பாக எடுத்துரைத்தார் பேரா. மார்க்ஸ். பிறகு, பெரியார் முன்மொழிந்த இஸ்லாம்; அவருடன் இணக்கம் / பிணக்கம் கொண்ட இஸ்லாமியர்கள் என்று தனக்கேயுரிய பாணியில் அடுக்கடுக்காய் அடுக்கிகொண்டே இருக்க, அவர்மேல் பொறாமையும் பிற்பாடு பேரா. அப்துல்லாஹ் குறிப்பிட்டதைப்போல வெட்கமாகவும் இருந்தது.
அதன்பின்னர் சிறப்புரை ஆற்றிய முனைவர். பேரா. அப்துல்லாஹ், நிகழ்வின் சூழல் தமக்குப் பாடசாலை வகுப்பறையைப் போன்று தென்படுவதாகக் கூறினார். “இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து” என்று கூறிடுவதற்கு முன்பும் பின்பும், பல சந்தர்ப்பங்களில் இஸ்லாம் பற்றித் தந்தை பெரியாரின் சிலாகிப்பைப் பட்டியலிட்ட பேராசிரியர், குலத் தாழ்ச்சி உயர்ச்சி பாராத, மானுடப் படைப்பில், அடுக்குநிலை வேறுபாடு காட்டாத ஏகக்கடவுளை, சரியாக எடுத்துச் சொல்லியிருந்தால் ஏற்பதற்குப் பெரியாரும் இசைவுடன் இருந்தார் என்பதைச் சுட்டினார் பேராசிரியர். “நாம் தான் வாய்ப்பைத் தவறவிட்டோம்”. தமக்கு முன்னர் சிறப்புரையாற்றிய பேரா. அ.மார்க்ஸ் அள்ளித் தெளித்த புள்ளி விபரங்களைப் பற்றி வியப்புத் தெரிவித்த பேரா. அப்துல்லாஹ், “இவர் ஏன் இன்னும் இஸ்லாமியர் ஆகாமலிருக்கிறார்?” எனும் வினாவையும் முன்வைத்தார்.
சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த பேராசிரியர் அப்துல்லாஹ்வின் பேச்சு, நூலாசிரியர் நூருத்தீனின் பாட்டனார் பெரியவர் தாவூத்ஷா, தகப்பனார் என்.பி.அப்துல்ஜப்பார் ஆகியோரைப் பற்றிய நினைவலைகளையும் கொண்டிருந்தது.
சாதாரண கவுன்ஸிலர் பதவிக்கே மானம் மரியாதையைத் துறந்துவிடத் துணிகின்ற இந்தக் காலத்தில், ஆளுநர் பதவி வீடுதேடி வந்த போதும் அதைக் கண்டு ஓடி ஒதுங்கிய நபித்தோழர்களின் பற்றற்ற நிலை பற்றி எடுத்துரைத்தார் பேரா. அப்துல்லாஹ். அண்ணலின் தோழர் அபூதர்தா (ரலி) அவர்கள் வாழ்ந்த, நம் கற்பனைக்கு எட்டாத எளிய வாழ்க்கையை நிகழ்காலத்தோடு ஒப்பிட்டு, வழக்கம்போல் பல உளவியல் நுட்பங்களைத் தன்னகத்தே கொண்டிருந்த பேரா.அப்துல்லாஹ்வின் பேச்சில் ஏகத்துவக் கலிமாவைத் “தோழர்கள்” உணர்ந்ததைப் போன்றே முழு முஸ்லிம் சமுதாயமும் உணரவேண்டுமென்ற வேட்கை இருந்தது.
நூலாசிரியர் நூருத்தீனின் எழுத்து நடையைப் புகழ்ந்துவிட்டு, அந்தக் காலத்தில் வாழ்ந்த தோழர்களைப் பற்றி எழுதுவதைப் போலவே இஸ்லாத்தினை புரிந்து, அதன் மகத்துவம் உணர்ந்து அதன் மேல் விழும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறி அதற்காகப் பரிந்து பேசிக் கொண்டு நம் சமகாலத்தில் வெளியே ஒரு தோழர்கள் கூட்டமே உள்ளது அவர்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து” என்பது மட்டுமே பெரியார் இஸ்லாத்தினைப் பற்றிப் பேசிய ஒரே விஷயம் என்பது போல அனைவரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 1923லேயே கேரளத்தில் தங்கள்மேல் திணிக்கப்பட்ட இழிவு நீங்க ஒரே வழி பெரியாரின் அறிவுரையின்படி இஸ்லாத்திற்கு மதம் மாறுவதே என்று தீர்மானம் நிறைவேற்றி அன்றே 50 பேர் அளவுக்கு இஸ்லாத்திற்கு மாறியதைப் பற்றியும் இன்னும் பலப் பல நிகழ்வுகளில் இஸ்லாத்தைப் பற்றி பெரியார் பேசியதையும் குறிப்பிட்டார்.
அமர்வுத் தலைவர் அதிரை. அஹ்மது அவர்களின் கணீர்க்குரலில் சத்தியமார்க்கம் தளக் கவிஞர் சபீர் எழுதிய “தோழர்கள்” கவிதை வாசிக்கப்பட்டு வரவேற்புப் பெற்றது:
தோழர்கள்…
சத்தியமார்க்கம் தளம் பதிக்கும்
முத்திரைத் தடம்!
தொடராக வந்த
சுடர்!
போர்க் களங்களைப்
பூக் குளங்களாகக் கண்டு
வாட்களோடு வாழ்ந்த
ஆட்களின் சரிதை!
கொல்லத் துடித்த எதிரிகளை
ஓரிறைக் கொள்கையில்
அடக்கிய நபியை…
ஆயிரம் துண்டுகளாக அறுத்துப்போட்டாலும்
அரணாகக் காத்த
தோழர்கள் சரிதை!
நபித் தோழர்களைப் பற்றி
நம் தோழரின் நூல்!
சாமானிய மனிதர்களின்
ஈமானியத் தியாகங்கள்
இதன்
நாயகர்கள் நடிகர்களல்லர்
எனினும் நட்சத்திரங்கள்!
வரலாற்றுக் குறிப்புகள் வடிவில்
வாழ்க்கை நெறிகள்!
இந்நூல்…
படிப்பதற்கு மட்டுமல்ல
படிப்பினைக்கும்தான்!
அடுத்து,
1. பேரா. டாக்டர் அப்துல்லாஹ்
2. பேரா. அ. மார்க்ஸ்
3. பன்னூலாசிரியர் அதிரை அஹ்மது
4. “தோழர்கள்” நூலாசிரியர் நூருத்தீன்
5. “தோழர்கள்” நூலைக் குறுகிய காலத்தில் மிகச் சிறப்புடன் அச்சிட்டுத் தந்த, க்ராஃபிக் பார்க் ஸாதிக் பாட்சா
ஆகிய ஐவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் நால்வருக்கும் நினைவுப் பரிசுகளை, சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகி சகோ. முஹம்மது சர்தார் வழங்கினார். க்ராஃபிக் பார்க் சகோ. ஸாதிக் பாட்சாவுக்கு சத்தியமார்க்கம்.காம் இணைய இதழாசிரியர் ஜமீல் வழங்கினார்.
ஏற்புரை வழங்க வந்த நூலாசிரியர் நூருத்தீன், இஸ்லாம் நிலைபெற, எழுத்தையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டிருந்த அர்ப்பணிப்பாளர்களான தம் பாட்டனாரோடும் தந்தையாரோடும், ஓய்ந்த பொழுதில் ‘ஏதோ எழுதுகின்ற’ தம்மை ஒப்பிடக்கூடாது எனும் வேண்டுகோளுடன் தொடங்கினார். நபித் தோழர்களின் தியாகங்களை எடுத்துச் சொல்லும்போது இடையிடையே உணர்ச்சிப் பெருக்கெடுத்துக் கண்கலங்கி, நம்மையும் கலங்கவைத்தார். குறிப்பாக, இஸ்லாத்தைத் தம் வாழ்க்கை நெறியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டதற்காக நபித் தோழர் கப்பாப் பின் அல்-அரத் (ரலி) ஏற்றுக் கொண்ட கொடுமைகளைச் சொல்ல வரும்போது, பேசமுடியாமல் தொண்டை அடைக்க சற்று நேரம் நின்றுவிட்டார். இறுதியாக, தம் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். சத்தியமார்க்கம் குழுவினரைப் பாராட்டிப் பேசவும் தவறவில்லை. “தோழர்கள்” நூல் வாசிப்பதற்கு மட்டுமல்ல; வாசித்தவற்றை நம் வாழ்க்கையில் செயல்படுத்துவதற்காக என நாம் உறுதி கொள்ளவேண்டும் என்று கூறி முடித்தார்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, வலைஞர் ஜமாலுத்தீன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி, ‘அமர்வுப் பிரார்த்தனை’யுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது, அல்ஹம்து லில்லாஹ்.
தோழர்கள் – முதல் பாகம் கிடைக்குமிடங்கள்:
சென்னை |
Shajidha Book Center 248 Thambu Chetty Street, Mannady, Chennai – 600 001 Tel : +91 44-25224821 Mobile : +91 9840977758 |
சென்னை |
Aysha Publications 78 Big Street Triplicane, Chennai – 600 005 Tel : 91 44-43568745 |
சென்னை |
Salamath Pathippagam 95, Linghi Chetty Street Mannady, Chennai 600 001 Tel : +91-44-25211981; 42167320 |
சென்னை |
Basharath Publishers 83, Angappa Naicken Street Mannady, Chennai 600 001 Tel : +91-44-25225028 Mobile : +91-9444240535 |
குமரி |
அன்ஸார் Mobile : +91 9786220915 |
அதிரை |
அப்துர் ரஹீம் Mobile : +91 9944824437 |
அமெரிக்கா |
நூருத்தீன் Mobile : +1 (206) 450-5973 |
தம்மாம் |
நஸ்ருத்தீன் ஸாலிஹ் Mobile : +966 50-3841699 |
துபை |
இம்ரான் கரீம் Mobile : +971 55-9739408 |
குவைத் |
அப்துல் கரீம் Mobile : +965 97919697 |
கத்தர் |
முஹம்மத் சர்தார் Mobile : +974 55515648 |
சிங்கப்பூர் |
சலாஹுத்தீன் Mobile : +65 96902845 |
நன்றி: http://www.satyamargam.com/1766