தாருல் இஸ்லாம் தமிழகத்தின் நீண்ட நாள் முஸ்லிம் மாசிகை. ஆசிரியர் : அல்ஹாஜ் பா. தாவூத்ஷா. தலைப்புகளை அடுத்து பொருளடக்கம். 1920 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தாருல் இஸ்லாம் முன்னோடி மாத இதழ்.
64 பக்கங்களுடன் வெளிவந்த அந்த இதழ். பல புதிய இதழ்களின் தோற்றத்திற்கு உந்துசக்தியாக அமைந்தது. பக்கங்களைப் புரட்டப் புரட்ட தலையங்கங்கள். அரிமாநோக்கு, கண்ணோட்டம், அரசியல், ஆன்மீகம், அறிவியல், சட்ட, மருத்துவக் கட்டுரைகள், கவிதை, கதை, தொடர்கதை, கேள்வி – பதில், வாசகர் கடிதம், துணுக்குகள் முதலான பல்சுவை அம்சங்களுடன் பவனி வந்தது தாருல் இஸ்லாம். அதை அணுகாமல் தமிழ் இதழியலை ஆராய முடியாது. ஆசிரியர் பா. தாவூத் ஷா அவ்வப்போது வாசகர்களுக்குக் குரல் கொடுத்து வந்தார்.
ஓருயர்தர இஸ்லாமிய பத்திரிகையைப் பற்றி நினைக்க நேருங்கால் ஒவ்வொருவர் மனதிலும் உதிப்பது ‘தாருல் இஸ்லாம்’ என்னும் மாசிகைதான். முஸ்லிம்கட்கு வேண்டிய சகல நாகரிக விஷயங்களும் நிரம்பவுள்ள ஒரு குடும்ப மாதப் பத்திரிகை தா.இ. தான். எனவே, எல்லோரும் வாங்கி வாசித்து நற்பயன் பெறுவீர்களாக. தா.இ. விளையாட்டு, பொழுதுபோக்கு பத்திரிகையன்று. – பா. தாவூத் ஷா.
தாருல் இஸ்லாம் 37 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இதழில் இடம்பெற்ற ஒரு பெட்டிச் செய்தி இது :
அதே இதழில் என் அன்பர்கட்கு என்ற தலைப்பில் கடித வடிவில் வேண்டுகோள் கட்டுரையும் அவர் எழுதியுள்ளார். யான் சென்ற 37 ஆண்டுகட்கு முன்பிருந்தே இஸ்லாமிய ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறேன் என்பது நுங்கட்கெல்லாம் நன்கறியப்பட்டேயிருக்கிறது. சென்ற சில்லாண்டுகளாக யான் தா.இ.க்கு வேண்டிய முக்கிய கட்டுரைகளை மட்டும் வரைந்த னுப்பிக்கொண்டு, சற்றே ஓய்வெடுத்த வண்ணமிருந்தேன். ஆயின் இப்போது யான் மீண்டும் கோதாவில் குதித்து முழுக் கவனத்துடனே தா.இ. ஆசிரியப் பதவியை முற்றிலும் பொறுப் பேற்று நடத்த வேண்டிய அத்தியாவசியத்தை ஆண்டவன் என் தோள் மீது இதுபொழுது சுமத்திவிட்டிருக்கிறான். இதற்கு அன்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் அதிகம் கிடைக்கு மென்றே யான் ஆண்டவன் மீது உறுதி பூண்டுள்ளேன்.
இதனைத் தொடர்ந்து சந்தாதாரர்களுக்கும், ஏஜெண்டு களுக்கும் பா.தா. வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அடுத்து புதிய பகுதிகள் பற்றி அறிவிப்பு.
இனிமேல் தா.இ-த்தில் தகுதி வாய்ந்த மௌலவி ஒருவரால் அன்பர்கள் விடுக்கும் வினாக்களுக்கெல்லாம் மார்க்கபூர்வமான சரியான விடைகள் அளிக்கப்படும். இதுவேயுமன்றி, பெயர் போன பிரெஞ்சுப் பேராசிரியர் அலெக்ஜாந்தர் தூமாசால் வரையப்பட்டு, உலகப் பிரசித்திபெற்றுள்ள ல கோகன்த்த மோன்தே கிறிஸ்தோவென்னும் அரிய பெரிய நாவல் அப்படியே பிரெஞ்சு மொழியிலுள்ளபடி தமிழிலாக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் தொடர்கதையாக நம் தா.இ. இதழில் வந்துகொண்டேயிருக்கும். தாருல் இஸ்லாம் இதழைப் பற்றிய அறிமுகக் குறிப்பு இது.
வரலாறு ஆசிரியர் பா. தாவூத்ஷா அவர்களை அறிந்துகொள்ள வேண்டாமா? அவரே தம் வாழ்க்கைச் சுருக்கத்தை தா. இ. இதழ் ஒன்றில் எழுதினார்.
அதன் சில பகுதிகள்:
கி.பி. 1885 இல் கீழ்மாந்தூர் என்னும் (தஞ்சை ஜில்லா) மண்ணியாற்றங்கரையிலுள்ள குக்கிராமம் ஒன்றிலே பிறந்தேன். என் 18 ஆவது வயதிலே மேற்றிகுலேஷன் பரீட்சைக்கு போகுந் தறுவாயில் எனதருந் தந்தையை இழந்தேன்.
1908 ஆவது ஆண்டில் சென்னையில் மணம் புரிந்து கொண்டு, எப்.ஏ., பி.ஏ., பரீட்சையில் தேறினேன். தமிழில், மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீக்ஷையில் முதல்வனாய்த் தேறித் தங்கப் பதக்கமும் பரிசும் பெற்றேன். நான் பி.ஏ. பரீட்சையில் 1912 இல் தேறிச் சின்னாட்கட்குள்ளே என் மத்ராஸ் மனைவியை இழந்தேன்.
அப்பால் அவ்வாண்டு ஜூலையில் தென்னாற்காடு ஜில்லா கலெக்டர் ஆபீஸில் மாத நிவேதனம் ரூ. 25 இல் ஒரு சாதாரண குமாஸ்தாவாகச் சேர்ந்தேன்.
கலெக்டர் உத்தியோகத்துக்குத் தேவையாயிருந்த இலாக்கா சட்டப் பரீட்சைகளிளெல்லாம் தேறி 1917 இல் சப்மாஜிஸ்ட் ரேட்டாக உயர்ந்தேன்.
இடையில் 1915 இல், சென்ற மாதம் இறைவனடி சேர்ந்து விட்ட மைமூன் பீவியை – இவருக்கு அது காலை வயது 14 – மறுமணம் புரிந்து கொண்டேன்.
ஒன்பது ஆண்டுகள் வரை யான் சர்க்கார் உத்தியோகம் மிக நல்ல முறையில் வகித்தேன்.
1921 இல் யான் விழுப்புரத்தில் சப் மாஜிஸ்ட்ரேட்டாக இருந்த என் அரசாங்க அலுவலை, கிலாபத் இயக்கக் காரணத் தாலும் இஷாஅத்துல் இஸ்லாம் ஆர்வத்தாலும் உதறித் தள்ளி விட்டு வெளியேறினேன். அப்பொழுது என் பெயர் டெபுட்டி கலெக்டர் உத்தியோகத்துக்கு உயர்த்தப்பட வேண்டிய ஜாப்தாவில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
எனினும், என் மனைவி – 18 வயதே அடைந்திருந்த அப் பெண்மணி-தன் கணவர் சில்லாண்டுகளில் கலெக்டர் பதவியை அடையக் கூடுமெனப் பெருமையடைந்து நின்ற அந்நங்கையர்க்கரசி, எதிர் வார்த்தையொன்றும் பேசாது, இஷா அத்துல் இஸ்லாத்தில் கொண்டிருந்த இறைவன் பக்தியால் என்னுடன் முற்றும் ஒத்துழைக்கலாயினர்.
அப்பால் என் லண்டன் பிரயாணம் நிச்சயமாயிற்று. 1922 பிப்ரவரியில் யான் நாச்சியார்கோவிலை விட்டுப் புறப்பட்டேன். அதுபொழுது என் இளைய மைந்தன் நஜீரஹ்மத் பிறந்து 28 நாட்களே. என் மனைவி புனிறும் நீங்காது பிரசவ அறையிலே இருந்து வந்தார்.
என் முதல் மைந்தன் – இரண்டரை வயதே அடைந்திருந்த அப்துல் ஜப்பார் – மிக மிகக் கடுமையான டபுள் நிமோனியா ஜுரத்தால் பிராணாவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட அவசர நிலையிலே யான் என் மனைவி மக்களை விட்டு, அல்லாஹ்வின்மீது பாரத்தை போட்டுப் புறப்பட்டேன்.
ஓக்கிங்குக்கு அதாவது, வெண்ணிற அப்ஸரஸ்கள் வதியும் இங்கிலாந்துக்கு யான் சென்றுவிட்டால், என்னரும் இந்திய மனைவியை மறந்து, இல்லை துறந்துவிட்டு, வெள்ளை மனைவி யொருத்தியை மணந்துகொண்டு விடுவேன் என்று என் மனைவியை அச்சுறுத்தினர் சிலர். ஆனால், என் பாரியாள் சிறிதும் பயப்படாமல் என்னுடன் ஒத்துழைத்து, என்னைப் பயணப்படுத்தி அனுப்பிவைத்தார். 1923, மே மாத முதல் இன்று வரை யான் இச்சென்னையம் பகுதியில் தங்கி தாருல் இஸ்லாத்தை மிகமிக வெற்றியுடனே நடத்தி வருகிறேன்.
ஒரே இஸ்லாம். பகுத்தறிவுக்குப் பொருத்தமுள்ள இஸ்லாம். சர்வ தாராளமான இஸ்லாம். அபிவிருத்தியடைந்துவரும் இஸ்லாம். உயிருள்ள இஸ்லாம். உயர்வுள்ள இஸ்லாம் என்னும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே நுங்கள் தா.இ. இன்றும் நடைபெற்று வருகிறது.
இதொரு சீரிய செந்தமிழ் முஸ்லிம் மாசிகை. விகட சஞ்சிகை யன்று; வேடிக்கைக் கதைப் பத்திரிகை அன்று; இப்படிப்பட்ட பொழுதுபோக்குக்குரிய வீண்விளையாட்டுச் சஞ்சிகைகளை விரும்பும் வாலிபர்கட்கு இதோபதேசம் புரியும் இஸ்லாமிய உயர் தரச் செந்தமிழ்ச் சஞ்சிகை வேம்பேபோல் கசப்பது மெய்தான்.
இனியவர் என் சொலினும் இன்சொல்லே இன்னார். கனியும் மொழியும் கடுவே அனல் கொளுந்து, வெங்காரம் வெய்தெனினும் நோய் தீர்க்கும் மெய்பொடிப்பச் சிங்கி குளிர்ந்தும் கொலும். மூத்தோர் சொல்லும், முதிர்ந்த நெல்லிக் காயும் முன்னே துவர்க்கும்; பின்னே இனிக்கும் என்பது என் மாதா கூறும் பழமொழி.
பொதுப்படையாய் நோக்குமிடத்து, இற்றை நாள் யுவர்களும் யுவதிகளும் கடவுள் நெறியைக் கடைபிடிப்பதைக் காட்டிலும் கண்டதே காட்சி; கொண்டதே கோலம் என்னுமாறு உலகாயத வாழ்க்கையிலே உல்லாசமாய்ப்பொழுது போக்க விழைகிறார்கள்.
முஸ்லிம் வாலிபர்கள் இஸ்லாத்தை – அதிலும் உண்மை இஸ்லாத்தை ஓர்ந்து நடப்பதை விட்டு தா.இ. ஆனந்த விகடன், கல்கி, குமுதம் போல இல்லையே என்கின்றனர். அந்தோ! நுங்கள் தா.இ. பத்திரிகை சென்ற ஒன்றரைத் தலைமுறையாக இத்தமிழ்நாட்டில் எத்துணைப் பொருளாதார நெருக்கடியுடனே நடைபெற்று வந்துள்ளது என்பதை உள்ளுணர்ந்தவர்கள் நன்கறி வார்கள். இதனைத் தூக்கிப்பிடிக்க என் மனைவி மைமூனும் என் மகன் அப்துல் ஜப்பாரும் எத்துணை தியாகம் புரிந்துள் ளார்கள் என்பதை அல்லாஹ் ஒருவனே அறிவான்.
எனதுழைப்பிலும், கஷ்ட நஷ்டங்களிலும் அவர்கள் பங்கெடுத்து, மனமகிழ்ச்சியுடனே ஒத்துழைத்துள்ளார்கள். என்னுடன் உத்தியோகம் ஏற்றவர்களுள் பலர் கலெக்டர்களா கவும் மற்றும் பலர் டெபுட்டிகலெக்டர்களாகவும் வேலை பார்த்து, அப்பால் ஓய்வெடுத்து உபகாரச் சம்பளம் பெற்று உல்லாசமாக வாழ்கிறார்கள்.
அப்துல் ஜப்பாருடன் சர்க்கார் அலுவலில் ஈடுபட்ட சகபாடிகள் அனேகர் இது காலை மாதச் சம்பளம் ரூ. 500 அல்லது 600 பெறுகிறார்கள் எனின், எங்கள் பல்லாண்டுகளின் சமூக சேவையால் இறைவன் பாதையில் உழைத்து வருவதன் பயனாக, நாங்கள் நிலபுலங்களோ, வீடு வாசல்களோ வாங்கி விடவில்லை.
எத்தனையெத்தனை சிங்கை மான நஷ்ட தஅவா! எத்தனை யெத்தனை ஹிபாஜத்துல் இஸ்லாம் எதிர்ப்பு! எத்தனை யெத்தனை மன்னார்குடிக் கிரிமினல் கேஸ்கள்! இவற்றினை யெல்லாம் சமாளித்துத் தாண்டியே வெற்றியுடன் நுங்கள் தா.இ. தன் 38 ஆவது வயதை இது காலை எட்டியிருக்கிறது.
ஆசிரியர் பா. தாவூத் ஷா அவர்கள் 1957 ஆம் ஆண்டில் எழுதிய தம்மைப் பற்றிய தகவல்கள் இவை.
அரிய முன்னோடி
அறிஞர் ஹாஜி பா. தாவூத் ஷா, பத்திரிகை, பிரசுரத்துறையில் ஒரு பல்கலைக்கழகம். பல்கலைக்கழகப் பட்டப் படிப்பை, தமிழ்நாட்டு முஸ்லிம்கள் நினைத்துப்பார்க்க முடியாத காலத்தில் அவர் பி.ஏ., பட்டம் பெற்றார். ஆங்கில நூற்களை அணி அணியாக மொழிபெயர்த்து வழங்கினார். தமது பத்திரிகைகள் மூலம் பெரும் இலக்கிய, எழுத்தாளர் அணியை உருவாக்கிய பெருமைக்குரியவர் பேரறிஞர் பா.தா.
தாருல் இஸ்லாம், தத்துவ இஸ்லாம், முஸ்லிம் சங்கக் கமலம், தேவ சேவகம் ஆகியவை பா. தா. நடத்திய பத்திரிகைகள்.
அவர் தமது சொந்த ஊரான நாச்சியார் கோவிலில் பத்திரிகைப் பணியைத் தொடங்கினார். எனினும், 1923 ஆம் ஆண்டில் சென்னையில் தொடங்கிய தாருல் இஸ்லாமே சாதனை இதழாகப் பெயர் பதித்தது.
கதை, புனை கதை வளர்ச்சியை ஆராய்பவர்கள், தாவூத் ஷா அவர்களை அணுகாமல் இருக்க முடியாது.
ஆயிரத்தொரு இரவுகள் அரபுக் கதைகளை மொழி பெயர்த்து தமிழுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் அவர்.
அந்த அல்பு லைலா வலைலா தொகுதியை ஐம்பது ஆண்டுகளுக்கு முன் படிக்காத வாசகர்கள் இல்லை. அதைப் போன்ற மறக்க முடியாத நூல்கள் பற்பல. அவற்றை வெளியிட்டு விற்பனை செய்து வந்தது, அவருடைய ஷாஜஹான் புக் டிப்போ.
பரீட்சார்த்தமாக சில சிறுகதைகளையும் பா.தா. எழுதினார். அஹமதுன்னிசா மூட்டை கட்டுகிறாள் ஒரு நல்ல நகைச்சுவை சித்திரம். அவருடைய படைப்புகள் மறு பிரசுரம் செய்யப்பட வேண்டியவை.
பல பத்திரிகையாளர்களும், படைப்பாளர்களும் தோன்றுவதற்கு ஆசிரியர் பா. தாவூத் ஷா அவர்கள் ஆதர்சமாக அமைந்தார்.
அந்தக் காலத்தில் நான் பள்ளியிலே பயிலும்போது ஒரு கையிலே குடியரசு ஏடு, இன்னொரு கையிலே தாருல் இஸ்லாம் நாளேடு. இவைதான் எங்கள் கைகளை அலங்கரிக்கும் என்கிறார் கலைஞர்.
அவருடைய புதல்வர் என்.பி. அப்துல் ஜப்பார் தந்தை வழியில் பணியைத் தொடர்ந்ததும், மருமகனார் எஸ். அப்துர் ரஹீம், முஸ்லிம் முரசு இதழை 1948 ஆம் ஆண்டில் தொடங்கி சிறப்பாக நடத்தியதும் தமிழுலகம் அறிந்தவை.
(முஸ்லிம் முரசு மண்ணடி ராமசாமி தெருவில் இயங்கிய போது 1962 இல் பா.தா. அவர்களைச் சந்தித்து ஆசி பெறும் அரிய வாய்ப்பைப் பெற்றேன்)
கம்பராமாயண சாஹிபு
இலக்கியப் புலமை மிக்க பா. தாவூத் ஷா, கம்ப ராமாயண சாஹிபு என போற்றப்பட்டார். ஒரு கிராமத்தில் தற்செயலாக சீதா கல்யாண உபன்யாச நிகழ்ச்சியில் இரவு இரண்டு மணி வரை கம்ப ராமாயண விளக்கவுரை வழங்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. கேட்டு வியந்த இந்து சமய அன்பர்கள் ‘கம்ப ராமாயண சாஹிபு வாழ்க’ என வாழ்த்தினர். கம்ப ராமாயணம் உள்ளிட்ட இலக்கியங்களைப் படித்து பல பகுதிகளை இளமையிலேயே மனப்பாடம் செய்துகொண்டதால் இலக்கியச் சொற்பொழிவு அவருக்கு கைவந்த கலையாயிற்று. இள வயதில் கம்ப ராமாயண சாஹிபின் பேச்சை மயிலாப்பூரில் பல முறை கேட்டு மகிழ்ந்ததாக நினைவு கூர்ந்துள்ளார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜாஜியின் புதல்வர், நரசிம்மன். தமிழுக்கு இணையாக ஆங்கிலத்திலும் உரையாற்றும் அருந்திறனைப் பெற்றிருந்தார் பா.தா. 1885 மார்ச் 29 ஞாயிற்றுக் கிழமை பாப் ராவுத்தர் – குல்சும் பீவி தம்பதியரின் ஒரே செல்வ மகனாகப் பிறந்த தாவூத்ஷா பாலர்ப் பருவத்திலேயே கல்வியில் சிறந்து விளங்கினார். அவர் 1889 இல் கும்பகோணம் நேட்டிவ் ஹை ஸ்கூல் – உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கணித மேதை ராமானுஜம் உற்ற நண்பரானார். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பின்போது அவருக்குத் தத்துவப் பாடம் கற்பித்தவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் – முன்னாள் குடியரசுத் தலைவர். அப்போது அவருக்குத் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர் உ.வே. சாமிநாத ஐயர். கல்லூரி கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வென்று பரிசுகளைக் குவித்தார். தமிழ்ச் சங்கத் தேர்வில் முதல்நிலை பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார் அவர். உ.வே.சா அவர்களின் அன்புச் சீடராக இருந்ததால் பா. தாவூத் ஷாவின் உரைநடையில் தமிழ் தாத்தாவின் சாயலைக் காணலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
மதுரைத் தமிழ்ச் சங்க பொன்விழா மலரில் ‘இஸ்லாம்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை பரவலான வரவேற்பைப் பெற்றது. சில வரிகள்: மனிதனுக்கு மனிதன் மேன்மை தாழ்மை இல்லை, வெள்ளையன் கறுப்பன். மாநிறத்தான். மஞ்சணிறத்தான். கார்க்கேசியன். மங்கோலியன். நீகிரோவன் என்ற ஜாதி அல்லது இனவேறுபாடு இஸ்லாத்தில் இல்லை, இச்சன்மார்க்கத்தில் தீண்டாமை, பாராமை போன்ற எத்தகைய வருணாச்சிரமும் இல்லை. பிறவியால் எவனும் வேறெவனையுங்காட்டில் உயர்ந்தவனல்லன்.
உண்மையை ஓர்ந்து பார்க்குமிடத்து மெய்யாக நாகரிக மென்பது, மனிதன் இப்பிரபஞ்ச இயற்கையை வெல்வது கொண்டு தன்னுடைய இகலோக சுகபோகங்களை உலகாயத முறையிலே அபிவிருத்தியடைச் செய்து கொள்வதனால் மட்டுமே உண்டாய் விட மாட்டாது என்பது அறியக் கிடைக்கும் – புத்துலகமைப்பு என்ற நூலில் ஒரு பகுதி. ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) இஸ்மாயீல் (அலை) அவர்களைப் பலிமேடையின் மீது கிடத்தி அங்கு செய்ய வேண்டிய காரியங்களையெல்லாம் சரியாகச் செய்துவிட்டு, இறுதியில் பிள்ளைக் கீடாய் ஓர் ஆட்டுக் கிடாயையே பலி கொடுத்தார்களென்பதன் கருத்துக்களுள், மனிதர்கள் தங்களுக்குள் வளர்ந்து கொண்டு வரும் ஹைவானியத்தான மிருகப் பிராணிகளின் குணங்களை அப்படியே பலி கொடுத்து விடுதல் வேண்டும் என்று சொல்வது மொன்றாகும் என்பது குத்பா பிரசங்கம் நூலில் சுவையான வரிகள்.
மானுடருக்கேற்ற மார்க்கம் அவருடைய மொழிபெயர்ப்பு நூல்களில் ஒன்று. அதன் முன்னுரை வாசகங்கள்: இந்நூல் லாகூர் மௌலானா முஹம்மதலி (மர்ஹூம்) அவர்களால் அநேக ஆண்டுகளுக்கு முன்னே ஆங்கிலத்தில் வரையப்பட்ட நூலின் மொழிபெயர்ப்பாகும். இஸ்லாம் மார்க்க விளக்கம் அதில் சுருக்கமாய் துலக்கப்பட்டிருப்பதால், அதன் தமிழாக்கம் இத்தென்னாட்டு மக்களுக்கு மிக்க நன்மைபயக்குமெனக் கொண்டு, என் ஆப்த நண்பர் அல்ஹாஜ் (சோழபுரம்) கே.ஐ. ஜகரிய்யா சாஹிப் பலகாலும் வேண்டிக்கொண்டதற்கிணங்க யான் இது காலை அதனைத் தமிழிலே தந்துள்ளேன். இதன் ஆங்கில முதனூலில் இல்லாத ஒன்று இத்தமிழ் நூலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அதுதான் அந்த மௌலானா அவர்களால் ஆங்கிலத்தில் வரையப்பட்டு, அடியேனால் தமிழில் (1951, நவம்பர் தாருல் இஸ்லாத்திலே) பிரசுரிக்கப்பட்டுள்ள இஸ்லாத்தில் ஸ்தீரிகர்களின் அந்தஸ்து என்பதாகும். இஸ்லாத்தில் நாரிமணிகட்குரிய அந்தஸ்து இன்னது தான் என்று, அறியாது அந்தகாரத்தில் அநேகர் (முஸ்லிம் ஆண் பெரும்பான்மையினர் உட்பட) அலைகின்றனர். அண்ணாரின் கண்களைத் திறக்க இவ்வனுபந்தம் அதிக நன்மை பயக்கு மென்றே எண்ணி இதனை இந்நூலுடன் இணைத்துள்ளேன். வாசக நேயர்கள் வாசித்துப் பயன்பெறுவார்களாக. 22.11.1955 தேதியிட்டு மொழிபெயர்த்தவன் முன்னுரை எனும் தலைப்பில் அவர் எழுதியுள்ளார். அவருடைய தமிழ் நடைக்கும் மொழிபெயர்ப்புத் திறனுக்கும் இந்த நூல் ஒரு சான்று.
இதழ்கள். நூல்கள்
பா. தாவூத்ஷாவின் எழுத்துவன்மையும் பேச்சாற்றலும் இளமையிலேயே தெறிக்கத் தொடங்கியது. தமது சொற்பொழிவுகளை முஸ்லிம் சங்கக் கமலம், மறு கமலம் எனும் தலைப்புகளில் அந்நாளில் வெளியிட்டு வந்தார். ‘தத்துவ இஸ்லாம்’ மாத இதழை 1921 இல் தொடங்கி சிறிது காலமே நடத்தினார். அதுவே தாருல் இஸ்லாமாக மறுவடிவம் பெற்றது. அந்த இதழை சில சமயம் வார இதழாகவும், நாளிதழாகவும் கூட தேவைக்கேற்ப அவர் வெளியிட்டார். 1932 இல் ரஞ்சித மஞ்சாரி இதழையும் நடத்தினார். இழப்புகள் ஏற்பட்டதால் சிலமுறை தாருல் இஸ்லாம் பத்திரிகை நிறுத்தப்பட்டது. ஆசிரியர் தாவூத் ஷா பல எதிர்ப்புகளைச் சந்தித்ததும் அதற்குக் காரணம்.
சிறுகதைகளையும் நெடுங்கதைகளையும் பா. தா. தொடர்ந்து எழுதி வந்தார்.
முகலாய அரச குடும்ப மும்தாஜ், நூர்ஜஹான் வரலாறு. ஆங்கிலேய அரச குடும்பப் பின்னணியில் சிம்சனா, சிம்மாசனமா மற்றும் ஹாத்திம் தாய், ஜுபைதா, ரஸ்புதீன், காபூல் கன்னியர், கரளபுரி இரகசியம், காதலர் பாதையிலே, கப்பல் கொள்ளைக்காரி, கள்ள மார்க்கெட் மோகினி, மலை விழிங்கி மகாதேவன், காதல் பொறாமையா அல்லது பொறமைக் காதலா? ஆகியவை அவற்றுள் அடங்கும். ஷாஜஹான் புக் டிப்போவை நடத்திய பா. தா. அவர்கள் எழுதிய நூல்களின் எண்ணிக்கை மிக அதிகம். மேலோட்டமான ஒரு பட்டியல் :
ஜவாஹிருல் புர்கான் – பி தர்ஜுமதுல் குர்ஆன் – இரண்டாம் அத்தியாயம். 159 ஆம் வசனங்கள் வரை.
குர்ஆன் மஜீத் – மொழிபெயர்ப்பும் விளக்கவுரையும் (புதல்வர் அப்துல் ஜப்பாருடன் இணைந்து)
ஸஹீஹ் புகாரி (நபி மொழிக்கோவை) நாயக வாக்கியம் – நபிகள் நாயக மான்மியம், நாயகத்தின் நற்குணங்கள், மஹான் முஹம்மது நபி (ஸல்), நபி நாயகமும் நான்கு தோழர்களும், இஸ்லாம், ஈமான், தீனுல் இஸ்லாம், இஸ்லாம் இணையில்லாச் சாந்தி, பிரார்த்தனை, இஸ்லாமிய ஞானபோதம்,
அபூபக்கர் ஸித்தீக் (ரலி), உமரே பாரூக் (ரலி), உதுமான் (ரலி), அலீ (ரலி), ஹஜ் அனுபவங்கள்
குத்பா பிரசங்கம், மணவாழ்க்கையின் மர்மங்கள். திருமணமும் பிரிவினையும், அவ்லியாக்கள் மீது அபிமானம், ஆரியருக்கோர் வெடிகுண்டு, இஸ்லாம் காட்டிய அரசியல், மானுடருக்கேற்ற மார்க்கம், நாத்திகர்களுக்கு நல்விருந்து, ஜீவ வசியப் பரம ரகசியம், புத்துலகமைப்பு
அல்புலைலா வலைலா (என்ற) ஆயிரத்தோர் இரவுகள்
தமிழ் எழுத்தாளர் சங்கம் பா. தா. அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டி 1963 இல் கேடயம் வழங்கிச் சிறப்பித்தது. ஆனந்தவிகடன் ஆசிரியரும் ஜெமினி பட நிறுவன அதிபருமான எஸ். எஸ். வாசன் தாவூத்ஷா அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்து ஆலோசனைகளைப் பெற்று வந்தார். ‘சுதேசமித்திரன் ஆசிரியர் சி.ஆர். சீனிவாசன் அவர் மீது அன்பைப் பொழிந்த மற்றொரு நண்பர். இலக்கிய, இதழியல் செம்மல் பா. தாவூத்ஷா 24.2.1969 அன்று சென்னையில் காலமானார். வயது 84. சென்னை மாநகராட்சி அவருடைய மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது. நகரமன்ற உறுப்பினராக இருந்த ரங்கூன் சுலைமான் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். பா.தா. அவர்கள் நகராட்சித் தந்தையாக முன்னாளில் இருந்தவர். பாலர் அரங்கம் என முன்னர் அழைக்கப்பட்ட கலைவாணர் அரங்கில் இரங்கல் கூட்டம் ஒன்றும் நடத்தப் பட்டது. அன்றைய அமைச்சர் சாதிக் பாட்சா, சட்டமன்ற உறுப்பினர் ரவண சமுத்திரம் பீர் முஹம்மது, பேராசிரியர் கா. அப்துல் கபூர் முதலானோர் உரையாற்றினர்.
பத்திரிகையில் எங்கேனும் ஓரெழுத்துப் பிழையேனும் கண்டு பிடித்துத் தருவோர்க்கு இரண்டணா அஞ்சல் தலை பரிசு என்று அறிவித்ததும், தம் பத்திரிகையில் புரூப் திருத்துவதற்கென்றே புலவர் செல்வராஜ் என்ற தமிழ்ப் புலவரையே நியமித்து வைத்திருந்ததும் இவரே உண்மையான தமிழ்க் காவலர் என்று காட்டுகின்றன அல்லவா? இவருக்கன்றோ தமிழ்ச் சமூகம் நினைவுச் சின்னம் ஏற்படுத்தி இருக்க வேண்டும்?
”சென்னை மெமோரியல் மண்டபத்தில் அன்றொரு நாள் பா.தா. அவர்களுக்கும் பாபநாசம் சிவன் அவர்களுக்கும் தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயமும் பொன்னாடையும் வழங்கிப் போற்றிய நிகழ்ச்சியில் நம் கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார் அவர்கள் இப்போது தான் முதலாக ஒரு தமிழ் எழுத்தாளரைப் பாராட்டுகிறீர்கள் என்றாராம். பத்தாண்டுகளாக பல்வேறு எழுத்தாளர்களுக்குப் பாராட்டு தெரிவித்து வந்த அவ்விழாக் குழுவினருக்கு கவிஞரின் கூற்று பெருவியப்பாக இருந்தது. கவிஞர் விளக்கினார்:
எழுத்தை ஆளுகின்றவன் தானே எழுத்தாளன்? இதுவரையில் உங்களால் பரிசும் பாராட்டும் பெற்றவர்கள் எழுத்தால் ஆளப்பட்டவர்கள். இவர் ஒருவரேதான் எழுத்தை ஆண்டவர் என்று. இக்கூற்றை ஆங்கிருந்தோர் அனைவரும் ஏற்றுக்கொண்டு தானே ஆக வேண்டும்? பா.தா. அவர்களின் வாழ்க்கையே ஒரு காவியம். அவரது விரிவான வாழ்க்கை வரலாறொன்று விரைவில் வெளிவருமாயின், அதுவே தமிழுக்குச் செய்யும் பெருந் தொண்டாகும். செந்தமிழ்க் கொண்டல், ‘இராமாயண சாயபு என்ற பட்டங்களையெல்லாம் பெற்ற அந்த மேதையை – உரை நடைத் தாதையை – உலகம் உள்ளளவும் உள்ளும் வழி செய்ய வேண்டாமோ?” என்று எழுதினார், பேராசிரியர் செ. பசுலு முகியிதீன்.
–ஜே.எம். சாலி
சமநிலையச் சமுதாயம் எனும் பத்திரிகையில், தமிழ் முஸ்லிம் படைப்பாளிகளின் சாதனைகளை நினைவு கூர்ந்து, “இலக்கிய இதழியல் முன்னோடிகள்” என்ற தலைப்பில் ஜே.எம். சாலி அவர்கள் எழுதி வருகிறார்கள். அந்த வரிசையில் பா. தாவூத் ஷா அவர்களைப் பற்றி வெளியான கட்டுரை இது.