36. அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னு ஹராம் (عبدالله بن عمرو بن حرام)
தபூக் போர் முடிந்து தம் தோழர்களுடன் மதீனா திரும்பிக் கொண்டிருந்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். படையில் தோழர் ஒருவர் மற்றவர்களைவிட மிக மெதுவாய் வந்துகொண்டிருந்தார். அவரைச் சுமந்து கொண்டிருந்த ஒட்டகம் நடக்க முடியாமல் மந்தமாய் நடந்து வந்து கொண்டிருந்தது. தரம் வாய்ந்த ஒட்டகம் வாங்கும் அளவிற்கெல்லாம் அவரிடம் வசதி இல்லை. இருப்பினும் தம்மிடம் உள்ளதை எடுத்துக்கொண்டு நபியவர்களுடன் படையெடுப்பிற்குச் சென்றுவிட்டிருந்தார் அந்தத் தோழர். ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது அந்த ஒட்டகம்.
அவரை நெருங்கிய நபியவர்கள், “யார் அது?” என்று விசாரித்தார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! நான் ஜாபிர் பின் அப்துல்லாஹ்”
“ஏன் இவ்வளவு அசமந்தப் பயணம்?”
“அது ஒன்றுமில்லை. எனது ஒட்டகம் நலிவுற்றதாய் இருக்கிறது. வேகமாய்ச் செல்ல மறுக்கிறது”
“கோல் ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டு வாங்கி, அதைக் கொண்டு அந்த ஒட்டகத்தை உந்தினார்கள் நபியவர்கள். அதன் பிறகு பார்க்க வேண்டுமே! அந்த ஒட்டகத்தின் அசதியும் சோம்பலும் போன இடம் தெரியவில்லை. மற்றவர்களைத் தாண்டி விரைய ஆரம்பித்தது அது. எங்கே நபியவர்களின் ஒட்டகத்தையும் முந்திக்கொண்டு இது சென்று விடுமோ என்று வேகத்தை மட்டுப்படுத்த வேண்டியிருந்தது ஜாபிருக்கு.
ஜாபிர் பின் அப்துல்லாஹ்வின் மேல் கழிவிரக்கம் பிறந்தது நபியவர்களுக்கு. அவரையும் அவர் தந்தையையும் நன்றாக அறிந்திருந்தவர்கள் அவர்கள். “ஒட்டகத்தை எனக்கு விற்றுவிடுங்கள் ஜாபிர்”
அல்லாஹ்வின் தூதருக்காக உயிரையே தரத் தயாராய் இருந்தவரிடம் ஒட்டகத்தை விற்பனைக்குக் கேட்டால்? “இதை நான் தங்களுக்கு அன்பளிப்பாய் அளித்துவிடுகிறேனே அல்லாஹ்வின் தூதரே!”
அதை மறுத்தவர்கள், “ஜாபிர், இதை நான் தங்களிடமிருந்து நான்கு தீனார்களுக்கு வாங்கிக் கொள்கிறேன். மதீனா சென்றடையும்வரை அதில் நீயே பயணித்து வரலாம்”
முஸ்லிம்களின் படை மதீனாவை நெருங்கியது. வேகவேகமாய்த் தம் இல்லம் நோக்கி விரைய ஆரம்பித்தார் ஜாபிர். அதைக் கவனித்த நபியவர்கள் விசாரித்தார்கள். “அவசரமாய் எங்குச் செல்கிறீர் ஜாபிர்?”
மறைக்காமல் கூச்சத்திற்குரிய உண்மை உரைத்தார் ஜாபிர். “நான் புதிதாய்த் திருமணம் முடித்தவன். மனைவியிடம் விரைகிறேன்”
மணப்பெண் யார் என்று மேற்கொண்டு நபியவர்கள் கேட்க, ‘அவர் கணவனை இழந்த கைம்பெண்’ என்று தெரியவந்தது. மிகவும் இளவயதினரான ஜாபிர் கைம்பெண் ஒருவரை மணமுடித்திருப்பது அறிந்து ஆச்சரியத்துடன் கேட்டார்கள் முஹம்மது நபி. “கன்னிப்பெண் ஒருவரை மணமுடித்திருக்கலாமே ஜாபிர்?”
இந்தக் கேள்வியும் இதைத் தொடர்ந்து நிகழ்வுற்ற உரையாடலில் இருந்தும் தம்பதியருக்கு இடையேயான இல்லற வாழ்க்கைக்குத் தேவையான பல அற்புதத் தகவல்களைத் தேர்ந்தெடுத்துச் சொல்கிறார்கள் அறிஞர்கள். இங்கு நமக்கு அது முக்கியமல்ல. ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அளித்த பதிலின் முக்கியமான வாசகம் மட்டும் தெரிந்து கொள்வோம்.
“அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையோ வீரமரணம் அடைந்துவிட்டார். நானும் என் ஏழு சகோதரிகளும் குடும்பத் தலைவன் அற்றுப் போனோம். என் சகோதரிகளோ மிகவும் இளவயதினர். நான் ஓர் இளவயதுப் பெண்ணை மணம் புரிந்து கொள்வதைவிட வயதில் மூத்த, பக்குவப்பட்ட பெண் ஒருவரை மனைவியாக அடைந்தால் அவர் என் சகோதரிகளை ஒழுக்கம் போதித்து, சீவி சிங்காரித்து திறம்பட வளர்ப்பார் என்ற எண்ணத்திலேயே ஒரு கைம்பெண்ணை மணமுடித்தேன்” ஜாபிருக்கு அல்லாஹ் நல்லருள் புரிய இறைஞ்சிய நபியவர்கள் மதீனா திரும்பியதும் தாம் விலைபேசிய தீனார்களைவிடச் சற்று அதிகமாய் அளித்து ஒட்டகத்தை வாங்கிக் கொண்டார்கள்.
மற்றொரு குறிப்பு ஜாபிருக்கு ஒன்பது சகோதரிகள் இருந்ததாகத் தெரிவிக்கிறது. ஏழோ ஒன்பதோ, அவர்களின் நல்வாழ்வின் பொருட்டு தம் இளவயதின் நியாயமான ஆசைகளை மட்டுப்படுத்திக் கொண்ட பொறுப்பான அண்ணன்; அவரின் தந்தைக்குப் பொறுப்பான புதல்வர். மரணத்தை நோக்கி விரையும்முன் அவரின் தந்தை அவரிடம் அளித்த பொறுப்பை அப்படியே ஏற்று, தம் வாழ்வை அமைத்துக் கொண்டிருந்தார் ஜாபிர். இப்படியான சிறந்த மகனின் பெருமைக்குரிய தந்தையே அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஹராம். ரலியல்லாஹு அன்ஹு.
oOo
73 ஆண்களும் 2 பெண்களும் கொண்ட குழு ஒன்று மக்காவிற்கு யாத்திரை புரியச் சென்றது. யாத்திரை முடித்த அந்தக் குழுவினர் இரண்டாம்நாள் ஊர் உறங்கிய நள்ளிரவு நேரத்தில் அகபா பள்ளத்தாக்கில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஓர் இரகசியச் சந்திப்பு நிகழ்த்தி உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தச் சந்திப்பு, உறுதிமொழி, ‘இரண்டாம் அகபா உடன்படிக்கை’ என்றெல்லாம் ஹபீப் பின் ஸைத் ரலியல்லாஹு அன்ஹு வரலாற்றில் விரிவாய்ப் பார்த்தோம் நினைவிருக்கிறதா?
அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கலந்து கொண்ட 73 ஆண்களில் ஒருவர் அப்துல்லாஹ் இப்னு அம்ரு. நபியவர்களின் திருக்கரம் பற்றி தமது “உயிர், பொருள், செல்வம்” அனைத்திற்கும் மேலாய் நபியை ஏற்றுக் கொள்வதாகவும், காப்பாற்றுவதாகவும் பிரமாணம் எடுத்துக்கொண்டார் அப்துல்லாஹ். பனூ ஸலமா கோத்திரத்தைச் சேர்ந்த் இவர், கஸ்ரஜ் குலத்தவர். தம்மிடம் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டு மதீனா திரும்புபவர்களில் முக்கியமானவர்களைத் தேர்ந்தெடுத்து சில பொறுப்புகளை ஒப்படைத்த நபியவர்கள் அப்துல்லாஹ் இப்னு அம்ருவை அவரது குலத்து முஸ்லிம்களுக்கு தலைவராய் நியமித்தார்கள். மதீனா திரும்பியது அந்த அன்ஸார்களின் குழு.
அப்துல்லாஹ் இப்னு அம்ரு தம் தந்தையின் சகோதரரின் மகளான நஸீபா பின்த் உக்பா இப்னு அதீயை மணமுடித்துக் கொண்டார். இவர்களுக்குப் பிறந்த மகனே ஜாபிர். அப்துல்லாஹ்வுக்குச் சகோதரி ஒருவர் இருந்தார் ஹிந்த். இந்த ஹிந்தின் கணவரே நாம் சென்ற அத்தியாயத்தில் அறிமுகப்படுத்திக் கொண்ட அம்ரிப்னுல் ஜமூஹ்.
அகபா உடன்படிக்கை முடிந்து மதீனா திரும்பிய அப்துல்லாஹ், தம் நேரம், சொத்து என அனைத்தையும் இஸ்லாமியப் பணிக்காகச் செலவிட ஆரம்பித்துவிட்டார். விறுவிறுவென மதீனாவில் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. அதன் பிறகு நபியவர்கள் ஹிஜ்ரத் மேற்கொண்டு மதீனா வந்தடைந்ததும் அவர்களுடன் இணைந்து கொண்டு இரவு-பகல் என்று எந்நேரமும் இஸ்லாமியப் பணியே மூச்சாகிப் போனது.
முதல் யுத்தம் பத்ரில் நிகழ்ந்தது, அதில் முந்நூற்று சொச்சம் பேர் மட்டுமே கலந்துகொண்டனர் என்பதை அறிவோமில்லையா?அந்தச் சொற்ப அளவிலான முஸ்லிம் வீரர்களில் ஒருவர் அப்துல்லாஹ். எனவே பத்ருப் போர் வீரர் என்ற மாபெரும் அடையாளம் அவருக்குக் கிடைத்துப் போனது. அடுத்து வந்து சேர்ந்தது உஹது யுத்தம். மதீனாவிலிருந்து முஸ்லிம் படைகள் கிளம்பிச் சென்று உஹது மலையடிவாரத்தில் எதிரிகளைச் சந்திக்கப் போகிறோம் என்று முடிவானதும், பரபரவென தயாராக ஆரம்பித்தனர் முஸ்லிம் வீரர்கள். தயாராக ஆரம்பித்தார் அப்துல்லாஹ்வும். அப்பொழுது அவரது மனத்தில் ஒரு குறக்களி. தாம் திரும்பி வரப்போவதில்லை என்று வெகு நிச்சயமாய் அவருக்குத் தோன்றியது. அந்த எண்ணம் கலக்கமோ, சஞ்சலமோ ஏற்படுத்தியிருக்க வேண்டுமே? ம்ஹும்! மாறாய் மனம் உற்சாகமடைந்து எக்கச்சக்க எதிர்பார்ப்பு அதிகரித்துப் போனது அவருக்கு. எனவே, திட்டவட்டமாய்த் தம் நிரந்தரப் பிரிவிற்கான ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார் அப்துல்லாஹ். ஏற்பாடுகள் என்றால் சொத்து-பத்து; நிலம்-நீச்சு; வீடு-வாசல்;மனை என அவற்றை பாகம் பிரிப்பதா? அப்படியெல்லாம் இல்லை.
மிகவும் இளவயதினரான தம் மகன் ஜாபிரை அழைத்து, “மகனே! நான் போருக்குச் செல்கிறேன். நான் திரும்பி வரப்போகிறேன் என்று எனக்குத் தோன்றவில்லை. அனேகமாய் வீரமரணம் எய்தும் முதல் முஸ்லிமாக நான் அமையக்கூடும். அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதுக்குப் பிறகு எனக்கு உவப்பானவன் நீயே. நான் செலுத்த வேண்டிய கடன் தொகை உள்ளது. அதைப் பொறுப்பேற்றுச் செலுத்திவிடு. உன் சகோதரிகளை நல்லவிதமாகக் கவனித்துக் கொள்”
கழுத்து நெரிக்கும் கடன் வாங்கிவிட்டு, அதைத் திருப்பிச் செலுத்த வழி அறியாமல் தம் உயிரை மாய்த்துக்கொள்ளும் செய்திகள் பழகிப்போன நமக்கு மரணத்தை நோக்கி விரையும் ஒருவர் தம் மகனைத் தம்முடைய கடனுக்குப் பொறுப்பாளியாய் நியமித்து, அதன் விபரங்களை அளித்துச் செல்வது விசித்திரமாய் இருக்கலாம். இஸ்லாத்தில் கடன் என்பது பெரும் பொறுப்பு; மாபெரும் பொறுப்பு. “வீர மரணம் அடைபவரின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும் – கடனைத் தவிர” எனும் தம் தலைவரின் எச்சரிக்கையை, அதில் பொதிந்துள்ள அர்த்தத்தின் தீவிரத்தை முழுமையாக அறிந்திருந்தவர்கள் அவர்கள். பிற்காலத்தில் ஜாபிர் அக் கடன்களை சிரமேற்கொண்டு திருப்பிச் செலுத்தியதும் அதன் சார்பாய் அமைந்த ஓர் அதிசய நிகழ்வையும் ஹதீத் குறிப்புகள் பாதுகாத்து வைத்துள்ளன. இன்ஷா அல்லாஹ் ஒருநாள் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹுவின் வரலாற்றை விரிவாய்க் காணும்போது அதைப் பார்ப்போம்.
தந்தை தம் பிள்ளைகளிடம் இப்படிப் பிரியாவிடை பெறுவது எத்தகைய தாக்கத்தை அந்தப் பிள்ளைகளின் மனங்களில் ஏற்படுத்தியிருக்க வேண்டும்? கண்ணீர் மல்க விடையளித்தனர்.
மறுநாள் பொழுது புலர்ந்தது; உஹதில் போர் துவங்கியது. போரில் முஸ்லிம்களின் கை ஓங்கியதும் பின்னர் சில முஸ்லிம்கள் இழைத்த தவற்றினால் போரின் போக்கு மாறிப்போய் மாபெரும் சேதம் முஸ்லிம் படைகளுக்கு நிகழ்ந்ததும் முந்தைய தோழர்களின் வாழ்க்கையில் ஆங்காங்கே பார்த்துக் கொண்டே வந்தோம். அப்பொழுது அந்த உஹதுக் களத்தில் ஏற்பட்டுப்போன கடின சூழல் தோழர்களுக்குப் பெரும் சோதனையாக மட்டும் அமையவில்லை; பலருக்குத் தங்களது ஈமானின் வலுவை உரத்துப் பறைசாற்றம் நல்வாய்ப்பாய் அமைந்து போனது. அவர்களில் அப்துல்லாஹ் இப்னு அம்ருவும் ஒருவராகிப் போனார். அவர் எதிர்பார்த்து விரைந்து வந்த வீரமரணம் அவரை ஆரத் தழுவியது!.
போர் முடிந்து, எதிரிகளின் கோரத் தாண்டவம் ஓய்ந்து, எல்லாம் ஒரு முடிவுக்கு வந்ததும் முஸ்லிம்கள் தங்கள் உறவுகளை அந்தக் களத்தில் தேட ஆரம்பித்தனர். ஜாபிரும் தம் தந்தையைத் தேட ஆரம்பித்தார். எதிரிகளின் அரக்க ஆட்டத்தில் சிதிலமடைந்து போய்க் கிடந்தது அப்துல்லாஹ் இப்னு அம்ருவின் சடலம். மாபெரும் சோகத்தை ஜாபிருக்கு அளித்த காட்சி அது. அவரும் அப்துல்லாஹ்வின் குடும்பத்தினரும் சோகத்தை அடக்கமுடியாமல் விம்மி அழுதனர்.
போர் களத்தில் சேதங்களைப் பார்வையிட்டுக்கொண்டே வந்த நபியவர்கள் அவர்களிடம், “நீங்கள் அவருக்காக அழுதாலும் சரி; அழாவிட்டாலும் சரி. அவரை வானவர்கள் தங்கள் இறக்கைகளால் நிழல் அளித்துக் கொண்டிருக்கின்றனர்” என்று ஆறுதலான நற்செய்தி அளித்தார்கள்.
போரில் வீர மரணமடைந்த தத்தம் உறவுகளை மதீனா சுமந்து சென்று நல்லடக்கம் செய்யலாம் என்று யத்தனிக்க ஆரம்பித்தனர் முஸ்லிம்கள். அப்துல்லாஹ் இப்னு அம்ருவின் மனைவி தம் கணவரையும், தம் சகோதரரையும் அந்தப் போரில் இழந்திருந்தார். அவ்விருவரின் சடலங்களையும் எடுத்துச் செல்லலாம் என்று நினைக்க அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அறிவிப்பு வந்தது. “போரில் வீரமரணம் அடைந்தவர்கள் அந்தக் களத்திலேயே அப்படியே அடக்கம் செய்யப்பட வேண்டும்”
அனைவரும் திரும்பி வந்தனர். நபியவர்களின் நேரடி மேற்பார்வையில் முஸ்லிம் வீரர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டனர். “இவர்களைக் கழுவ வேண்டாம். இவர்களது காயமும் இரத்தமும் அப்படியே இருக்கட்டும். மறுமை நாளிலே இவர்களின் மரணத்திற்கு நான் சாட்சி பகர்வேன். இறைவனுக்காகக் காயம் பட்டவர், அன்றைய நாள் தம் இரத்தம் அழகிய நிறமாக மாறிப் போயிருக்க, மிகச் சிறந்த நறுமணத்துடன் மீண்டும் எழுந்து வருவார். அம்ரிப்னுல் ஜமூஹ்வையும் அவரின் நண்பர் அப்துல்லாஹ் இப்னு அம்ருவையும் ஒன்றாக அடக்கம் செய்யுங்கள். அவ்விருவரும் இவ்வுலகில் மிகுந்த நட்புடன் திகழ்ந்தனர்” என்று அறிவித்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் கொண்ட அன்பு, பக்தி, பாசம் ஆகியன தம் வாழ்வின் அனைத்தையும்விட மேலோங்கி அகபாவில் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றியிருந்தார் அப்துல்லாஹ் இப்னு அம்ரு.
oOo
ஒருநாள் வாட்டமுடன் அமர்ந்திருந்தார் ஜாபிர். அதைக் கவனித்த நபியவர்கள், “ஓ ஜாபிர்! ஏன் சோகமாய் இருக்கிறீர்?” என வினவினார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையோ வீரமரணம் அடைந்துவிட்டார். அவர் விட்டுச் சென்ற கடனும் நான் பராமரித்து கரையேற்ற வேண்டிய என் சகோதரிகளையும் நினைத்துக் கவலையில் உள்ளேன்”
ஜாபிருக்கு அந்நேரம் தேவையான மாபெரும் ஆன்ம பலம் அளிக்கும் உண்மை ஒன்றை உரைத்தார்கள் நபியவர்கள். “ஓ ஜாபிர்! நான் உனக்கு நற்செய்தி ஒன்று சொல்கிறேன் கேள். அல்லாஹ் தனக்கு இட்டுள்ள திரைக்குப் பின்னால் இருந்தே மற்றவரிடம் உரையாடி இருக்கிறான். உன் தந்தையிடம் மட்டும் நேருக்கு நேராய் உரையாடியுள்ளான். ‘என் அடிமையே! என்னிடம் என்ன வேண்டுமோ கேள்; நீ கேட்பது உனக்கு அளிக்கப்படும்’ என்று அல்லாஹ் அவரிடம் கூறினான். அதற்கு உன் தந்தை, ‘என் இறைவனே! என்னை மீண்டும் உலகிற்கு அனுப்பு. உனக்காக உன்னுடையப் பாதையில் போராடி மீண்டும் என் உயிரை இழக்கிறேன்’ என்று கூறிவிட்டார்”
அதற்கு அல்லாஹ், “இறந்தவர் மீண்டும் திருப்பி அனுப்பப்பட மாட்டார் என்பது விதியாக்கப்பட்டு விட்டது” என்று அவரிடம் கூறினான்.
“அப்படியானால், எனக்குப் பின்னால் பூமியில் தங்கியிருப்பவர்களிடம் நீ எங்களுக்கு அளித்துள்ள நற்பேறை அறிவித்துவிடு” என்றார் உன் தந்தை அப்துல்லாஹ்.
அப்படியே ஆகட்டும் என்று வசனங்களை அருளிளான் இறைவன். “அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று எண்ணாதீர்கள் – தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் – (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். தன் அருட்கொடையிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு அளித்ததைக் கொண்டு அவர்கள் ஆனந்தத்துடன் இருக்கிறார்கள். மேலும் தம்முடன் (வீரமரணத்தில்) சேராமல் (உயிருடன் உலகில்) இருப்போரைப் பற்றி, ‘அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்’ என்று கூறி மகிழ்வடைகிறார்கள்” மூன்றாம் அத்தியாயமான சூரா ஆலு இம்ரானில் 169, 170ஆம் வசனங்களாக இவை பத்திரப்படுத்தப்பட்டன.
அல்லாஹ்வுக்காக அவனுடைய பாதையில் அனைத்தையும் இழந்து போரிடுகிறார்களே முஜாஹிதுகள் அவர்களைக் கொன்றுவிட்டால், கண்ணுக்குத் தெரியாமல் அவர்களைத் தூக்கி வீசிவிட்டால் எல்லாம் முடிந்தது என நம்புகிறார்கள் அல்லாஹ்வின் எதிரிகள். உண்மை என்னவெனில் அங்கிருந்துதான் துவங்குகிறது முஜாஹிதுகளின் வெற்றி! அத்தனை நாளும் ஆயுத முனையில் தங்கள் உயிரை ஏந்தி களத்தில் ஓடிக்கொண்டிருந்ததற்கான நற்கூலி. ‘என் போராட்டத்திற்கும் கவலைக்கும் சஞ்சலத்திற்கும் துன்பத்திற்கும் இத்தகு நற்பேறா? தா! மீண்டும் மீண்டும் உயிர் தா! உலகிற்குச் சென்று மீண்டும் மீண்டும் உன் பாதையில் போராடித் துறந்துவிட்டு வருகிறேன்’ என்று உற்சாகத்துடன் சொல்கிறார்கள் அவ்வீரர்கள். அதனால்தான், அல்லாஹ்வின் எதிரிகள் எந்தளவு தங்கள் உயிரை நேசிக்கிறார்களோ அதைவிட அதிகமாய் தங்கள் மரணத்தை நேசிக்கிறார்கள் இஸ்லாமியப் போர் வீரர்கள்.
அனைத்து உலக ரட்சகன், எல்லாம் வல்ல இறைவன், அந்த ஒருவன், அல்லாஹ்! அவனுடன் நேருக்கு நேர் உரையாடும் பாக்கியம் கிடைக்கப் பெறும்போது, உயிரென்ன, உடலென்ன? சிறந்தோங்கிப் போனார் அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஹராம்.
ரலியல்லாஹு அன்ஹு!
oOo
சத்தியமார்க்கம்.காம்-ல் 03 ஆகஸ்டு 2011 அன்று வெளியான கட்டுரை