தோழர்கள் – 37 ஸைத் இப்னுல் கத்தாப் (ரலி)

by நூருத்தீன்
37. ஸைத் இப்னுல் கத்தாப் (زيد بن الخطاب)

“உங்கள் மத்தியில் ஒருவர் அமர்ந்துள்ளார். மறுமையில் நரகை அடைவார். அவரது கடைவாய்ப் பல்லின் அளவு உஹது மலையைவிடப் பெரிதாய் இருக்கும்”

ஒருநாள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் தோழர்களுடன் அமர்ந்திருந்தார்கள். அனைவரும் அளவளாவிக் கொண்டிருக்க, நபியவர்கள் திடீரென அமைதியடைந்து, பிறகு மேற்கண்டவாறு அறிவித்தார்கள்.

‘இப்பொழுது ஈமான் கொண்டவராக அமர்ந்திருக்கும் ஒருவர், மறுமையில் பெரும் பாவத்துடன் நரகை அடையப் போகிறார். பாவச் சுமையினால் அவரது பல்லின் அளவு மட்டுமே உஹது மலையைவிடப் பெரிதாய் இருக்கும்’ என்ற அந்த அறிவிப்பைக் கேட்டதும் முதுகுத்தண்டு சில்லிட்டுப் போனது அங்கு அமர்ந்திருந்த அனைவருக்கும். ‘யாராக இருக்கும் அது?’ ஒவ்வொருவருக்கும் தம்மைப் பற்றி, தம் ஈமானின் வலுவைப் பற்றி எக்கச்சக்கக் கவலை ஏற்பட்டுப் போனது.

காலம் நகர நகர, அந்தக் குழுவில் அன்று அமர்ந்திருந்த ஒவ்வொருவரும் இறந்து கொண்டிருந்தனர். அனைவருக்கும் நல்ல சிறப்பான இறுதி முடிவே ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இறுதியில் இருவரே மீந்திருந்தனர். அதில் ஒருவர் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு. தூக்கம் மறந்து, அச்சத்தில் திகிலடைந்து கிடைந்தார் அவர், “எங்கே அந்த முன்னறிவிப்பின் அபாக்கியவானாகத் தாம் ஆகிவிடுவோமோ” என்று.

ஆனால் அந்த இன்னொருவருக்கு அந்த அச்சம் இருந்ததா, அந்த முன்னறிவிப்பு நினைவில் இருந்ததா என்பது தெரியவில்லை.

oOo

ஒருவழியாகப் பொய்யன் முஸைலமாவின் கதைக்கு யமாமாவின் மரணத் தோட்டத்தில் வைத்து முடிவுரை எழுதிவிட்டு, வெற்றிகரமாக மதீனா திரும்பிக் கொண்டிருந்தது முஸ்லிம்களின் படை. எக்கச்சக்க உயிரிழப்பு; குர்ஆனை மனனம் செய்திருந்த முக்கியமான நபித் தோழர்களின் இழப்பு; ஆகிய கடுமையான சோதனைகளுக்கும் தியாகங்களுக்கும் பிறகு வந்துவாய்த்த வெற்றி. காலித் பின் வலீத் ரலியல்லாஹு அன்ஹுவின் பிரமாதமான தலைமையில் ஒருங்கிணைந்த முஸ்லிம்களின் படையினர் அதைச் சாதித்து முடித்து மதீனாவினுள் நுழைந்துகொண்டிருந்தனர்.

கலீஃபா அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு, அவர்களையெல்லாம் வரவேற்றுக் கொண்டிருந்தார். மகிழ்வும் துக்கமும் ஒருங்கிணைந்திருந்த நிகழ்வு அது. களத்திற்குச் சென்ற தம் உறவுகள் திரும்பி வருகிறார்களா என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் மக்கள். அப்படித் திரும்பி வந்தவர்களைக் கண்டதும் அந்த உறவுகளுக்கு இரட்டிப்பு மகிழ்வு. உயிர்த் தியாகிகளின் உறவினர்களோ தாம் இழந்தவர்களின் மறுமை நற்பேற்றை மனதில் சுமந்துகொண்டு துக்கத்தைத் தாங்கிக் கொண்டனர்.

அபூபக்ருவின் அருகில் உமர் ரலியல்லாஹு அன்ஹுவும் இருந்தார். வெற்றி வீரர்களின் அணிவரிசையில் அவரது கண்கள் யாரையோ தேடின. அவர் தேடியவர் உமரைப் போலவே நெடு நெடுவென உயரமானவர். மக்கள் கூட்டத்தில் எளிதாய் அடையாளம் கண்டுகொள்ள முடியும். அதனால் பரபரவென அந்தப் படைவீரர்களின் அணியை அலைந்த உமரின் கண்களில் அவர் தென்படவில்லை. அப்பொழுது உமரை நெருங்கி வந்தார் ஒருவர். உமரிடம் அந்தச் செய்தியைத் தெரிவித்தார்.

“தங்களின் சகோதரர் வீர மரணம் எய்தினார்”

பெரும் சோகத்தை அளித்த அந்தச் செய்தியை அமைதியாக உள்வாங்கிக் கொண்ட உமர், “அல்லாஹ்வின் கருணை ஸைதின் மேல் பொழியட்டுமாக! அவர் என்னை இரண்டு நல்ல விஷயங்களிலும் முந்திக் கொண்டார். எனக்கும் முன்பாகவே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அவர், வீர மரணத்திலும் என்னை முந்திவிட்டாரே”

அவர், உமரின் அண்ணன் ஸைத் இப்னுல் கத்தாப் – ரலியல்லாஹு அன்ஹு.

oOo

மதீனாவில் நபியவர்களிடம் மக்கள் கோத்திரம் கோத்திரமாக, இனம் இனமாக, தனித்தனியாக வந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்று முன்னரே அறிந்திருந்தோம் இல்லையா? அப்படி வந்தவர்களுள் ஒருவன் யமாமாவில் இருந்து வந்த ரஜ்ஜால் இப்னு உன்ஃபுவா அல்-ஹனஃபீ. வெகு நல்ல பிள்ளையாக நபியவர்களிடம் பிரமாணம் செய்துவிட்டு இஸ்லாத்தினுள் நுழைந்தான் அவன். அப்பொழுதெல்லாம் அவனிடம் ஏதும் கெடுநோக்கம் இருந்ததாய்த் தெரியவில்லை. சமர்த்தாக நபியவர்களிடம் பாடம் பயின்றுகொண்டு, குர்ஆன் கற்றுக்கொண்டு, மனனம் புரிந்துகொண்டு என்று இதர தோழர்களைப் போல் அவன் பொழுதும் ஒடிக் கொண்டிருந்தது. மாணவனாகத்தான் இருந்தான் அவன்; பிற்பாடு புத்தி கெட்டுப்போன மாணவன். பாடம் சரியாக ஏறாத மக்குப் பிள்ளையாக அவன் இருந்து தொலைத்திருந்தாலும் பரவாயில்லை. பொய்யன் ஒருவனுக்குத் துணைபோகும் மாபெரும் கொடூரனாக அவன் மாறிப்போனதுதான் பெருஞ்சோகம்.

திடீரென ஒருநாள் யமாமாவில் முஸைலமாவின் விளையாட்டுத் துவங்கியது என்று பார்த்தோம் இல்லையா? அந்த விளையாட்டு விபரீதமாகிக் கொண்டேவர, ஒருநாள் ரஜ்ஜாலை அழைத்த நபியவர்கள், ‘உன் ஊர்க்காரனின் அயோக்கியத்தனமும் அட்டகாசமும் சகிக்கவில்லை. போய் அவனுக்குப் புத்தி சொல்லி திருத்தப்பார். அந்த மக்களையெல்லாம் நேர்வழியின் பக்கம் திருப்பு’ என்பதைப்போல் சொல்லி அனுப்பி வைத்தார்கள். பிறிதொரு குறிப்பில் கலீஃபா அபூபக்ருவின் ஆட்சி காலத்தின்போது அபூபக்ரு (ரலி) அவனைத் தம் தூதுவனாக யமாமாவிற்கு அனுப்பியதாக உள்ளது.

கிளம்பினான் ரஜ்ஜால். வழிநெடுக யோசித்தானோ, ஊர் எல்லையை அடைந்ததும் மாறினானோ, பிற்காலத்தில் வரவிருக்கும் தஜ்ஜாலின் குழப்பத்திற்குமுன் ரஜ்ஜாலின் குழப்பம் வரலாற்றில் பதிவாகட்டும் என்று முடிவெடுத்தான் அவன். இவனும் பனூ ஹனீஃபா குலம். முஸைலமாவும் அதே குலம். எனவே திடீரென முஸைலமாவின்மீது இனப்பாசம் தொற்றிக்கொள்ள, அந்த மக்களை நேர்வழியில் அழைக்கும் பொறுப்பை எல்லாம் ஊர் எல்லையிலேயே தூக்கி எறிந்துவிட்டு, மாபெரும் பொய்யுடன் ஊருக்குள் நுழைந்தான் ரஜ்ஜால். “நான் மதீனாவிலிருந்து முக்கியமான செய்தியொன்றை சுமந்து வந்திருக்கிறேன். முஹம்மது, முஸைலமாவைத் தம் தூதுத்துவத்தில் கூட்டுச் சேர்த்துக்கொண்டார்”

முஸைலமா மூட்டியிருந்த நெருப்புக்கு இந்த நெய் போதாது? கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது யமாமாவின் குழப்பம். பொய்யன் முஸைலமாவின் அட்டகாசம் உச்சக்கட்டத்தை எட்டியதற்கு ரஜ்ஜால் வகித்த பங்கு பெரும் பங்காகிப் போனது. மதீனாவிலிருந்தே வந்த ஒருவன் இவ்விதம் சொன்னதும் முஸைலமாவை நம்பலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த மக்கள், கொத்துக் கொத்தாய்ச் சடுதியில் தடம்புரண்டனர். முஸைலமாவின் பேச்சைக் கேட்டு அவன் பொய்யை நம்பியவர்களைவிட ரஜ்ஜாலின் பொய்யைக் கேட்டு முஸைலமாவை நம்பியவர்கள்தாம் ஏராளம் என்றாகிப்போனது.

இங்கு ஒரு உபதகவல். நபியவர்கள் முன்னறிவிப்பு செய்த கூட்டத்தில் மீதமிருந்த இருவரில் அபூஹுரைரா ஒருவர் என்று பார்த்தோமா? அந்த இன்னொருவன் இந்த ரஜ்ஜால்.

oOo

உமர் இப்னுல் கத்தாபின் அண்ணன் ஸைத் இப்னுல் கத்தாப், ரலியல்லாஹு அன்ஹு, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அவர்களின் நபித்துவத்தின் ஆரம்பத் தருணங்களிலேயே, உமருக்கு முன்னதாகவே, மக்காவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர். நாளாவட்டத்தில் மக்காவில் நிலைமை மோசமடைந்து பற்பல முஸ்லிம்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்தபோது அதில் ஸைதும் ஒருவர். மதீனா வந்து சேர்ந்த முஹாஜிர்களுடன் மதீனாவின் அன்ஸாரித் தோழர்களை நபியவர்கள் சகோதரர்களாக இணைத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்விதம் ஸைதுக்குச் சகோதரராக அமைந்தவர் மஅன் இப்னு அதீ ரலியல்லாஹு அன்ஹு.

மஅன் இப்னு அதீ, அகபா உடன்படிக்கையில் கலந்து கொண்டவர். பின்னர் பத்ரு, உஹத், அகழிப் போர் என்று அனைத்து முக்கியப் போர்களிலும் நபியவர்களுடன் கலந்துகொண்டு வீரம் பேசியவர். பெரும் உறுதி வாய்ந்தவர். பிரசித்தமானது அவரது உறுதி. மிகையில்லை. நபியவர்கள் இறந்தபோது மிகப் பெரும்பாலான நபித் தோழர்கள் இடிந்தே போய்விட்டார்கள். அந்தச் சோகம் ஓர் உண்மை என்றுகூட யாராலும் உணர்ந்து கொள்ள இயலாத நிலை. அப்பொழுது பலரும், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபியவர்களின் பிரிவுக்கு முன்னதாகவே நாங்கள் இறந்து போயிருந்தால் நலமாய் இருந்திருக்குமே! இப்போது தீமைக்கும் உலக இச்சைகளுக்கும் அடிபணிந்துவிடுவோமோ என்ற அச்சம் ஏற்படுகிறதே” என்று கவலைப்படத் துவங்கிவிட்டார்கள்.

அப்பொழுது உறுதி வசனம் உரைத்தார் மஅன். “அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன். நபியவர்களுக்கு முன்னதாகவே நான் மரணமடைந்துவிட விரும்பியிருக்க மாட்டேன். ஏனெனில் நபியவர்கள் நம்மிடையே வாழ்ந்திருக்கும்போது அவர்கள் மீது எந்தளவு நம்பிக்கைக் கொண்டிருந்தேனோ அதே அளவிலான நம்பிக்கையிலேயே அவர்களின் மரணத்திற்குப் பிறகும் நிலைத்திருந்து காட்ட விரும்புகிறேன்”

இந்த மஅனுடன் சகோதரராக இணைந்துகொண்டார் ஸைத் இப்னுல் கத்தாப். பத்ருப் போர் உட்பட இதரப் போர்களில் கலந்து கொண்டு அதிலெல்லாம் அவர் ஆற்றிய சேவை வீர சேவை. ‘எதிரியைக் கொன்று ஒழிப்பேன்; அல்லது வீர மரணம் எய்துவேன்’ என்றுதான் களம் புகுந்து கொண்டிருந்தார் அவர். உஹதுப் போரின் போது சுழன்று சுழன்று வாள் வீசிக் கொண்டிருந்த ஸைதின் போர்க்கவசம் கழன்று வீழ்ந்து விட்டது. அதைக் கண்டுவிட்டார் உமர் இப்னுல் கத்தாப். எதிரிகளின் வாளுக்கு அண்ணன் இரையாகி விடக்கூடாதே என்று பதற்றத்தில் அவரை நோக்கி, “ஒ ஸைது! எனது கவசத்தை எடுத்துப் பூண்டு போரைத் தொடருங்கள்” என்று கூற, வேகமாய் பதில் வந்தது.

“உமரே! உமக்கு வீர மரணம் எவ்வளவு உவப்போ அதேபோல்தான் எனக்கும்” என்றவர் இறுதிவரை கவசம் பூணவில்லையே! அப்படியேதான் போரிட்டு ஓய்ந்தார்.

இப்படியான ஸைத் இப்னுல் கத்தாபின் புகழுக்கு முத்தாய்ப்பாய் வந்து அமைந்தது யமாமாப் போர். பொய்யன் முஸைலமாவுடன் நிகழ்ந்த இறுதிப் போர். ஏகப்பட்ட உயிரிழப்புகளினால் மிகுந்த சங்கடமான நிலையில் இருந்தது முஸ்லிம்களின் படை. ஒரு தீவிர முடிவுடன் அன்று களம் இறங்கினார் காலித் பின் வலீத் (ரலி). படைகளை ஒருமுகப்படுத்தி முஹாஜிர்களின் சார்பாய்க் கொடியை ஏந்தும் பொறுப்பை ஸைத் இப்னுல் கத்தாபின் வசம் ஒப்படைத்தார் அவர். களம் புகுந்தார் ஸைத். ஆக்ரோஷமாய் நிகழ்ந்து கொண்டிருந்தது அந்த இறுதிக்கட்டப் போர்.

அன்றும் ஆரம்பத்தில் முஸ்லிம்களுக்கு நிறைய இழப்பு ஏற்பட ஆரம்பித்தது. முரட்டுத்தனமாய்ப் போரிட்டுக் கொண்டிருந்தனர் பொய்யன் முஸைலமாவின் பனூ ஹனீஃபா கோத்திரத்தினர். இதையெல்லாம் கவனித்த ஸைது விறுவிறுவென ஒரு குன்றின்மீது ஏறி நின்றுகொண்டு முஸ்லிம்களை நோக்கிக் கத்தினார்.

“மக்களே! கடைவாய்ப் பல்லைக் கடித்துக் கொள்ளுங்கள். தாக்குங்கள் எதிரிகளை! அவர்களை நோக்கி முன்னேறுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன்! அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு எதிரிகள் தோல்வியடையும்வரை நான் பேசப் போவதில்லை. அல்லது நான் வீர மரணம் அடையவேண்டும். பிறகு அல்லாஹ்விடம் என் காரணத்தை நான் பேசிக் கொள்வேன்”

அவ்வளவுதான்! பல்லைக் கடித்துக் கொண்டார்; பேசாமல் வாயை இறுக்கிக் கொண்டார். களத்தினுள் புகுந்து ஓடினார்.

அவரது கண்கள் தேடி அலைந்தன, முஸைலமாவின் பொய்க்கு நெய் ஊற்றி வளர்த்தானே ரஜ்ஜால் – அவனை. எதிரிகளின் படை வரிசைக்குள் அவர்களை வெட்டிக் கொண்டே இரை தேடும் வல்லூறைப்போல் ரஜ்ஜாலைத் தேடிப் பறந்தோடினார். ஒருவழியாய் ரஜ்ஜால் அவரது கண்களில் தென்பட்டான். அவனை எப்படியும் நெருங்கி விடவேண்டும் என்று அவனுக்கு வலப் புறத்திலிருந்தும் இடப் புறத்திலிருந்தும் முயலும் போதெல்லலாம், எதிரிப் படையினர் ஒரு வெள்ளம் போல் அவனை மூடிக் கொண்டனர். அவனைக் கீழே வீழ்த்திவிட வாளைச் சுழற்றியபடி நெருங்கிக் கொண்டிருந்தார் ஸைது. படையினர் அப்படியே அவன்மேல் வீழ்ந்து அவனைக் காத்துக் கொண்டிருந்தனர். ஸைதும் விடவில்லை. அவன் தப்பித்துவிட முடியாதவாறு பாய்ந்து பாய்ந்து முன்னேறினார் அவர். இறுதியில் ஒரு வகையாய் ரஜ்ஜால் மாட்ட, அவனது தலையைக் கொய்து எறிந்தார் ஸைது இப்னுல் கத்தாப், ரலியல்லாஹு அன்ஹு.

முஸைலமா முதுகெலும்பு உடைந்த தருணம் அது. ரஜ்ஜால் கொல்லப்பட்டான் என்ற செய்தி பொய்யர்களின் படையில் தீயாய்ப் பரவியது. அதன் அதிர்ச்சி மனத்தளவில் அவர்களைத் தாக்கி ஏகத்துக்கு அவர்களைப் பலவீனப்படுத்தியது. அதற்கு முக்கியக் காரணம் மற்றொன்றுங்கூட. தன்னை நபி என்று அறிவித்துக் கொண்ட முஸைலமா அவ்வப்போது தன் மக்களிடம் கூறிக் கொண்டிருந்தான், “நாம் வெற்றி பெறப்போவது உறுதி. என்னுடன் அர் ரஜ்ஜால் இப்னு உன்ஃபுவாவும் அல் முஹ்கம் இப்னு துஃபைலும் சேர்ந்து, நாங்கள் மூவரும் மதத்தைப் பரப்பி, பேரரசு நிறுவப் போகிறோம்”.

அப்படி முஸைலமாவால் முன்னறிவிப்பு செய்யப்பட்ட ரஜ்ஜால் இப்பொழுது கொல்லப்பட்டான் என்றதும் நபி என்று முன்னறிவிப்புச் செய்து கொண்டிருந்த அவனது உண்மை ரூபம் படையினர் மத்தியில் சந்தி சிரிக்க ஆரம்பித்தது. குறிபார்த்து வீசிய தமது வாளால் முஸைலமாப் படையினரின் கால்களை நடுங்க வைத்துவிட்டார் ஸைது.

அதே நேரத்தில் அந்தச் செய்தி முஸ்லிம்களின் மத்தியில் மாபெரும் புத்துணர்ச்சியை அளிக்க ஆரம்பித்துவிட்டது. அவர்களது தன்னம்பிக்கையின் வலு மேலும் மலையென உயர்ந்துவிட, பெரும் காயம்பட்டு வீழ்ந்து கிடந்த முஸ்லிம்களெல்லாம் தங்கள் காயங்களைத் தட்டிவிட்டுக் கொண்டு மீண்டும் வாள்களைச் சுமந்துகொண்டு “ஹோ“ வென்று களத்தில் புகுந்தனர். அதன் பிறகு, மரணத் தோட்டத்திற்குள் எதிரிப் படைகளைத் துரத்தியடித்ததும், அங்கு முஸைலமா கொல்லப்பட்டதும் தாபித் பின் ஃகைஸ், அப்பாத் பின் பிஷ்ரு ஆகிய தோழர்களின் வரலாற்றின்போதே நாம் அறிந்து கொண்ட நிகழ்வுகள்.

இறுதியில் அந்தப் போரில் ஸைதை வீரமரணம் வந்து தழுவியது. வீழ்ந்து சாய்ந்தவரின் கைகளிலிருந்து கொடியைத் தாங்கி ஏந்திப் போரைத் தொடர ஓடினார் ஸாலிம் மௌலா அபீஹுதைஃபா. ஸைதுடன் சேர்ந்து அதே யமாமாப் போரில் வீர மரணத்தைத் தழுவியவர் மஆன் இப்னு அதீ. அழுத்தந்திருத்தமாய் அமைந்துபோன அவர்களின் சகோதரத்துவம் மரணம்வரை ஒன்றாக அமைந்துபோனது ஒரு சிறு ஆச்சரியம்.

oOo

முஸ்லிம்களின் படை வெற்றிகரமாய் மதீனா திரும்பிக் கொண்டிருந்தது. கலீஃபா அபூபக்ரு அவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார். அருகே உமர். அவரது கண்கள் தம் அண்ணனைத் தேடிக் கொண்டிருந்தன.

ஸைது இப்னுல் கத்தாப் நெடு நெடுவென உயரமானவர். மக்கள் கூட்டத்தில் எளிதாய் அடையாளம் கண்டுகொள்ள முடியும். அதனால் பரபரவென அந்தப் படைவீரர்களின் அணியை அலைந்த உமரின் கண்களில் அவர் தென்படவில்லை. அப்பொழுது உமரை நெருங்கி வந்தார் ஒருவர். உமரிடம் அந்தச் செய்தியைத் தெரிவித்தார்.

“தங்களின் சகோதரர் வீர மரணம் எய்தினார்”

அண்ணன் இறந்த செய்தி எத்தகைய சோகத்தை அளித்திருக்க வேண்டும்? அதையெல்லாம் தாண்டி உண்மையும் மேன்மையும் உணரும் பக்குவத்தில் இருந்தவர்கள் அவர்கள். நிதானமாகக் கூறினார் உமர். “அல்லாஹ்வின் கருணை ஸைதின் மேல் பொழியட்டுமாக! அவர் என்னை இரண்டு நல்ல விஷயங்களிலும் முந்திக் கொண்டார். எனக்கும் முன்பாகவே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அவர், வீர மரணத்திலும் என்னை முந்திவிட்டாரே.”

“யமாமாப் போர்களத்தின் வல்லூறு” என்று பிற்றைக் காலத்தில் புகழ்ந்துரைக்கப்பட்ட ஸைது இப்னுல் கத்தாபை அந்தப் போரில் கொன்றவர் அபூமர்யம் அல்-ஹனஃபீ. பிற்காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் இவர். உமர் இப்னுல் கத்தாப் கலீஃபாவாக இருந்த காலத்தில் அவரைச் சந்திக்க நேர்ந்த அபூமர்யம், “மூஃமின்களின் தலைவரே! ஸைதை அல்லாஹ் எனது கரங்களால் உயர்த்தி வைத்தான். நான் ஸைதால் இழிவடைந்துவிடாமல் காத்தருளினான்” என்றார். அபூமர்யமின் செயலினால் ஸைத் இப்னுல் கத்தாபுக்கு வீரமரணத்தைப் பரிசளித்த இறைவன், ஸைதினால் அபூமர்யம் கொல்லப்பட்டு இறை நிராகரரிப்பாளராகவே மரித்துவிடாமல் காப்பாற்றினான் என்பது அதன் அர்த்தம். தெளிவாகப் புரிந்து கொண்டார் உமர்.

முதம்மிம் இப்னு நுவைரா என்பவரின் சகோதரர் ஒருவர் இறந்து போனார். இயற்கையான மரணம். அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லித் தேற்றிக் கொண்டிருந்தார் உமர். அதற்கு பதில் அளித்தார் முதம்மிம். “என் சகோதரன் தங்களின் சகோதரர் ஸைதைப் போல் வீர மரணம் அடைந்திருந்தால், நான் இந்தளவு அவனது இழப்பை நினைத்து வருந்தியிருக்க மாட்டேன்”

ஸ்தம்பித்துப் போனர் உமர். “என் சகோதரனின் இழப்பிற்கு உன்னைப்போல் இந்தளவு அழகாய் ஆறுதல் அளித்தவர் யாருமில்லை முதம்மிம்”

என்னதொரு சமூகம்! என்னதொரு சிந்தனை!

பிற்காலத்தில் உமர் (ரலி) அடிக்கடி கூறுவதுண்டு, “ஸஃபாப் பகுதியிலிருந்து வீசும் காற்று என்னைத் தழுவும்போதெல்லாம் நான் அதில் ஸைதை உணர்கிறேன்”

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

சத்தியமார்க்கம்.காம்-ல் 24 ஆகஸ்டு 2011 அன்று வெளியான கட்டுரை

உதவிய நூல்கள்

Related Articles

Leave a Comment