தோழர்கள் – 66 ஸுஹைல் இபுனு அம்ரு (ரலி) – பகுதி 3

66. ஸுஹைல் இபுனு அம்ரு (سهيل بن عمرو) – 3

வ்வளவு நீண்டகாலம் இஸ்லாமிய எதிர்ப்பில் நிலைத்து நின்ற சுஹைலின் மனமாற்றம் ஆச்சரியம் என்றால், அதற்கடுத்தபடியான அவரது வாழ்க்கையில் இஸ்லாம் எந்தளவு மனத்தில் ஊன்றியிருக்கும் என்ற கேள்வி எழுமல்லவா? அதுதான் பேராச்சரியம்!

எந்தளவு இஸ்லாத்தை எதிர்ப்பதில் அவர் உறுதியாக இருந்தாரோ அதைவிடப் பன்மடங்காக உரமேறிப்போனது அவரது ஈமான்.

நபியவர்கள் இவ்வுலகைவிட்டுப் பிரிந்தபோது மதீனாவில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட தடுமாற்றத்தின்போது அபூபக்ரு ரலியல்லாஹு நிகழ்த்திய சிறு பிரசங்கம் பெரும் ஆறுதலாய் அமைந்து, மக்களைத் தம்முணர்விற்கு இழுத்து வந்ததில்லையா?

அதே காலகட்டத்தில் மக்காவில் அத்தகைய பணியைப் புரிந்தவர் ஸுஹைல் இப்னு அம்ரு. இஸ்லாத்தை ஏற்றிருந்த புதியவர்களுள் பலர், “ஆட்டம் முடிந்தது, நாங்கள் கிளம்புகிறோம்” என்பதுபோல் இஸ்லாத்தைவிட்டு வெளியேற முனைந்தனர். மக்காவில் பெரும் குழப்பமான நிலை. மக்காவின் ஆளுநராக இருந்த உதாப் இப்னு உஸைத் பதுங்கிக் கொள்ள வேண்டிய கடுமையான சூழ்நிலை. அந்தக் களேபரத்தின்போது மக்கள் மத்தியில் எழுந்து நின்றார் ஸுஹைல் இப்னு அம்ரு. அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்தபின், நபியவர்களின் மரணத்தைப் பற்றி அறிவித்துவிட்டுத் தொடர்ந்தார்.

“நபியவர்களின் இழப்பு இஸ்லாத்தை மேலும் வலுவாக்கவே செய்யும். மாறாக இந்த இழப்பைச் சாக்காக வைத்துக்கொண்டு யாரேனும் கலகம் செய்யலாம் என்று நினைத்தால் நாங்கள் அவர்களுடைய கழுத்தை வெட்டுவோம்”

‘கட்டுப்படு, அல்லது கழுத்தைக் கொடு’ என்று தெளிவான, தீர்க்கமான பேச்சு. அது, கலகம் செய்து பார்க்கலாம் என்று நினைத்தவர்களை அப்படியே கட்டுக்குள் கொண்டுவந்தது.

சுஹைலின் மைந்தர் அப்துல்லாஹ்வைப் பற்றிப் பார்த்தோமே, அவர் முஸைலமாவுக்கு எதிரான யமாமா யுத்தத்தில் உயிர்த் தியாகியான பின்னர் ஹஜ்ஜை நிறைவேற்றச் சென்ற கலீஃபா அபூபக்ரு, சுஹைலிடம் அவருடைய மைந்தரின் இழப்பிற்கு ஆறுதல் கூறினார். முன்னொரு காலத்தில், தம் மைந்தர்கள் முஸ்லிம்களாகிறார்கள், தம்மைக் கைவிட்டுச் செல்கிறார்கள் என்று ஆத்திரமும் வெறுப்பும் தலைக்கேறி நின்ற ஸுஹைல், அன்று அபூபக்ருவிடம், “இஸ்லாத்திற்காக உயிர் நீக்கும் தியாகி, தம் குடும்பத்தினர் எழுபது பேருக்காக மறுமையில் சிபாரிசு அளிக்க முடியும் என்று அல்லாஹ்வின் தூதர் தெரிவித்ததாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. என் மைந்தர் அந்த சிபாரிசை என்னிலிருந்து துவங்குவார் என நம்புகிறேன்” என்று சொல்லிவிட்டார்.

கலீஃபா அபூபக்ரு, அம்ரு இப்னுல் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹுவின் தலைமையில் ஷாம் பகுதியை நோக்கி முஸ்லிம் படைகளை அனுப்பிவைத்தார். அந்தப் படையில் குரைஷிக் குலத்தின் முக்கியஸ்தர்கள் பலர் இணைந்திருந்தனர். அவர்களுள் முக்கியமானவர்கள், அல் ஹாரித் இப்னு ஹிஷாம், ஸுஹைல் இப்னு அம்ரு, இக்ரிமா இப்னு அபூஜஹ்லு.

இஸ்லாமிய வரலாற்றின் புகழ்மிக்க யர்மூக் யுத்தத்தில் பங்களித்தார் ஸுஹைல். அவரது வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருந்தது. இஸ்லாத்தில் தாமதமாக இணைந்ததால் தாம் தவறவிட்ட நன்மைகள் ஏராளம் என உணர்ந்து பெருமளவு இறைவழிபாட்டிலும் நற்காரியங்களிலும் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார். தாமதத்தால் தங்களுக்குப் பின்தங்கிப்போன பெருமைகளைத் தக்க நேரத்தில் மற்றவருக்கு எடுத்துச் சொல்லவும் அவர் தயங்கியதில்லை.

ஒருமுறை கலீஃபா உமரைச் சந்திக்கக் குரைஷிக் குலத்தின் மேட்டுக்குடியைச் சேர்ந்த ஸுஹைல் இப்னு அம்ருவும் அபூஸுஃப்யான் இப்னுல் ஹர்பும் வந்திருந்தனர். போலவே குரைஷிகளின் முன்னாள் அடிமைகளான சுஹைப், பிலால் போன்றவர்களும் காத்திருந்தனர். முன்னாள் அடிமைகளுக்குத்தான் கலீஃபாவைச் சந்திக்க முதலில் அனுமதி கிடைத்தது. இஸ்லாத்திற்குள் நுழைந்தபின் உயர்ந்தவர் – தாழ்ந்தவர் கிடையாதே!

அபூஸுஃப்யான் தம்முடன் இருந்தவர்களிடம், “இதைப்போல் முன்னெப்போதும் நான் கண்டதில்லை. உமர் இவர்களை முதலில் அழைத்து, நம்மைக் கதவருகில் காத்திருக்க வைக்கிறாரா?”

ஸுஹைல் பதில் அளித்தார். “மக்களே! உங்களது முகங்களை என்னால் படிக்க முடிகிறது. உங்களுக்குக் கோபம் ஏற்பட்டால் அதை நீங்கள் உங்கள் மீதே கொள்ளுங்கள். அன்று இஸ்லாத்தை ஏற்க மக்களெல்லாம் அழைக்கப்பட்டனர்; நீங்களும் அழைக்கப்பட்டீர்கள். அவர்கள் முன்சென்று ஏற்றார்கள். நீங்கள் பின்தங்கி நின்றுவிட்டீர்கள். மறுமை நாளில் அவர்கள் முதலில் அழைக்கப்பட்டு நீங்கள் பின் தங்கி நிற்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கும் என நினைக்கின்றீர்கள்?” எவ்வளவு ஆழமான சிந்தனை?

போர், களம் என்று பங்காற்றிக் கொண்டிருந்த ஸுஹைலைக் கொள்ளைநோய் தாக்கியது. ஹிஜ்ரீ 18ஆம் ஆண்டு அம்வாஸ் நகரைத் தாக்கிய அந்த நோய் அந்நகரில் இருந்த ஸுஹைலையும் விட்டுவைக்கவில்லை. பல தோழர்கள் அதில் உயிர் நீத்தார்கள் என்று முஆத் (ரலி) வரலாற்றில் படித்தோமில்லையா? அந்த நோய்க்கு ஸுஹைல் இப்னு அம்ருவும் இரையானார்.

ரலியல்லாஹு அன்ஹு!

– நூருத்தீன்

oOo

சத்தியமார்க்கம்.காம்-ல் 11 ஜூலை 2016 வெளியான கட்டுரை

உதவிய நூல்கள்

Related Articles

Leave a Comment