63. அல் பராஉ பின் மாலிக் (البراء بن مالك)
கோட்டைச் சுவரின் உச்சியிலிருந்து கீழே தொங்கவிடப்பட்ட நெருப்புக் கொக்கி, அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹுவைப் பற்றி இழுத்துக் கொண்டு மேலே உயர ஆரம்பித்தது. அதைப் பார்த்துவிட்டு படுவேகமாய் ஓடிவந்தார் அவருடைய சகோதரர்.
அது தஸ்தர் போர். நகரைச் சுற்றி வளைத்திருந்தது முஸ்லிம்களின் படை. பாரசீகர்கள் நகரின் உள்ளே சென்று பத்திரமாகத் தங்களை அடைத்துக்கொண்டுவிட, முஸ்லிம்கள் கோட்டையை முற்றுகையிட்டிருந்தனர். கோட்டை வாயிலின் உயர்ந்தோங்கிய சுவர்களுக்கு உட்புறமிருந்து பாரசீகர்கள் முஸ்லிம்களின்மேல் சரமாரியாக அம்பு மழை பொழிந்து கொண்டிருந்தனர். அது முஸ்லிம்களுக்கு பெருத்த உயிரிழப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தது. தவிர, பாரசீகர்கள் மற்றொரு புது யுக்தியைக் கையாண்டனர். அதுதான் முஸ்லிம்களுக்குப் பெரும் சவாலாகவும் சோதனையாகவும் அமைந்த விஷயம்.
பெரிய பெரிய கொக்கிகளை சிவந்துவிடும் அளவிற்கு நெருப்பில் சுட்டுக் கொண்டு, அவற்றை இரும்புச் சங்கிலிகளில் இணைத்துவிட சுவர்களின் மேலிருந்து கீழிறங்கின அக்கொக்கிகள். முஸ்லிம் வீரர்கள் சுவரை ஏறிக் கடக்கவோ சுவரை நெருங்கவோ முயலும்போது கிணற்றில் தவறி விழுந்த வாளியை மேலிருந்து துழாவி, கவ்வித் தூக்கிவிடும் பாதாள கரண்டியைப்போல் அந்த நெருப்புக் கொக்கிகளை முஸ்லிம்கள் மேல் மாட்டி, கவ்வி இழுக்க… என்னாகும்? சகிக்கவியலாத வேதனையுடன் தசை பொசுங்கி அவர்கள் உயிரிழிக்க நேர்ந்தது.
அப்படியொரு கொக்கிதான் அனஸ் பின் மாலிக்கைக் கவ்விப் பற்றியது. கொதிக்கும் இரும்புக் கொக்கியிலிருந்து விடுவித்துக் கொள்ள இயலாமல் அவர் தவிக்க, அதைப் பார்த்துவிட்டார் அவருடைய சகோதரர் அல் பராஉ பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு. தாமதிக்கமால் அந்தச் சுவரை நோக்கி ஓடினார். பாறைகளால் வடிவமைக்கப்பட்ட சுவர் சமமாக, தட்டையாக இருக்காதல்லவா? கரடு முரடமான அந்தச் சுவரில் விறுவிறுவென்று ஏறி, அந்தக் கொக்கியைப் பற்றிப் பிடித்து தம் சகோதரரை விடுவிக்க ஆரம்பித்து விட்டார். நெருப்பாய்க் கனன்ற கொக்கிகள் அவரது கையைப் பொசுக்கி புகைய ஆரம்பித்தது. கிடுகிடுவென்று அவர் தம் சகோதரர் அனஸை விடுவிக்க, இருவரும் கீழே விழுந்தார்கள்.
அனஸ் பின் மாலிக் தப்பித்தார். அல் பராஉவும்தான். ஆனால் அவரது கையில்தான் தசை பொசுங்கி, மிச்சம் நீட்டிக் கொண்டிருந்தவை எலும்புகள் மட்டுமே.
oOo
உம்மு ஸுலைம் பின்த் மில்ஹானுக்கும் அவருடைய முதல் கணவர் மாலிக் பின் அந்நள்ருக்கும் பிறந்த இருவர் அல் பராஉ பின் மாலிக், அனஸ் பின் மாலிக். ரலியல்லாஹு அன்ஹுமா. உம்மு ஸுலைம் இஸ்லாத்தை ஏற்றது, அவருடைய முதல் கணவர் அதை மறுத்தது, பின்னர் அவர் ஸிரியாவில் கொல்லப்பட்டது, அதன் பிறகு உம்மு ஸுலைமுக்கு அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹுவுடன் நடைபெற்ற மறுமணம் ஆகியனவற்றை அவர்கள் இருவருடைய வரலாற்றின்போதும் விரிவாகவே பார்த்துவிட்டோமல்லவா? எனவே இங்கு நேரடியாக உம்மு ஸுலைமின் மைந்தரின் கதை.
தம் மகன்களுள் ஒருவரான அனஸ் பின் மாலிக்கை, அவர் சிறுவராக இருக்கும்போதே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சேவை புரிய ஒப்படைத்துவிட்டார் உம்மு ஸுலைம். அடக்கத்தின், எளிமையின் உச்சபட்ச உதாரணமான நபியவர்களிடம் என்ன அதிகமான தேவைகள் இருந்துவிடப் போகின்றன? சேவை புரிந்ததுபோக அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அந்த மாமனிதரிடம் நேரடியாகக் கற்றுப் பயின்று தேறியதுதான் அதிகம். மிக அதிகம்.
ஆனால் பராஉ பின் மாலிக்கின் வாழ்க்கையோ ஆரம்பத்திலிருந்தே போர், வீரம் என்று துவங்கிவிட்டது. நபியவர்களுடன் உஹதுப் போர், ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது மரத்தின் அடியில் நபியவர்களிடம் சத்தியப் பிரமாணம் என்று இஸ்லாமிய வரலாற்றின் வெகு முக்கியமான அத்தியாயங்களில் அழுத்தமாகவே பதிந்துபோனார் பராஉ.
கலைந்த தலைமுடி, சீராட்டப்படாமல் வளர்ந்த உடம்பு, ஒல்லியான சதைப் பிடிப்பற்ற உருவம் – இவைதான் பராஉ தோற்றத்தின் வர்ணனை. சுருக்கமாகச் சொன்னால் வசீகரமற்ற தோற்றம். அதனால் என்ன? நபியவர்கள் அளித்த நற்சான்று ஒன்று அவரது சிறப்பியல்பிற்கு முத்தாய்ப்பாய் அமைந்து போனது. அதை அனஸ் ரலியல்லாஹு அன்ஹுவே அறிவித்துள்ளார், “அழுக்கடைந்து, நைந்துபோன ஒரு ஜதை முரட்டுத்துணியாலான ஆடைகளை உடைய எளிய நிலையிலும் தன்னலம் கருதாமல், அல்லாஹ்வுக்காகத் தம்மிடம் இருப்பவற்றை (தேவையுடைய) பிறருக்கும் பங்கு வைத்துக் கொடுப்பவர்கள் எத்தனை பேர்? அவர்கள் சத்தியமிட்டு இறைஞ்சினால் இறைவன் நிறைவேற்றுவான். அவர்களுள் அல் பராஉ பின் மாலிக் ஒருவராவார்.”
இது போதாது? இறைஞ்சினால் இறைவான் நிறைவேற்றி விடுவான் என்ற அளவிற்கு ஒருவரது அகம் தகுதி படைத்ததாக ஆகிவிடும்போது புறம் மின்ன சந்தனம், ஜவ்வாது என்று என்ன வேண்டியிருக்கிறது? தவிரவும், அவரது புறம்தான் இப்படி ஏனோ தானோவென்று பலவீனமாகத் தோன்றியதே தவிர, அகமெல்லாம் கம்பீரம், வீரம், அசுர பலம். போர்களில் தனி ஆளாய் அவர் கொன்றொழித்த எதிரிகளின் எண்ணிக்கை பன்மடங்கு. பலம் வாய்ந்த நூறு எதிரிகளை அல்-பராஉ கொன்றது பிரபலமான செய்தி என்று குறித்து வைத்திருக்கின்றார் இமாம் அத்-தஹபி.
போரில் அவர் நிகழ்த்தும் சாகசமும் அவரது அசாத்தியத் துணிச்சலும் தனிச் சிறப்புகள். எந்த அளவென்றால், பிற்காலத்தில் உமர் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக ஆட்சி செலுத்தும்போது, தம் தளபதிகளுக்கு எழுதும் மடலில், “அல்-பராஉ பின் மாலிக்கை படைக் குழுவினருக்குத் தலைவராக நியமித்து விடாதீர்கள்” என்று குறிப்பிட்டிருப்பார்! விஷயம் வேறொன்றுமன்று. தமது துணிச்சலின் காரணமாய் அல்-பராஉ மேற்கொள்ளும் காரியங்கள் படை அணியினருக்குத் தேவையற்ற சோதனையையும் சிக்கலையும் ஏற்படுத்திவிடக் கூடாதே என்ற முன்னெச்சரிக்கை அது.
பராஉவின் சாகசத்திற்கான சிறந்த முன்னுதாரணம் ஒன்று இருந்தது. அந்தப் பராக்கிரமத்தை அறிய பொய்யன் முஸைலமாவின் அட்டகாசங்களுக்குள் நாம் மீள்நுழைய வேண்டியிருக்கிறது. அந்த அயோக்கியனைப் பற்றி முன்னர் நெடுகவே நாம் படித்துவிட்டதால், நேராக யமாமா போர்க் களத்திற்குச் சென்று விடுவோம். காலித் பின் வலீத் ரலியல்லாஹு அன்ஹுவின் தலைமையில் முஸ்லிம்கள் ஆக்ரோஷமாய்ப் போரிட்டுக் கொண்டிருந்தனர். பொய்யன் முஸைலமாவின் படையினரும் சளைக்காமல், தளராமல் படு மூர்க்கமாய் எதிர்த்துப் போரிட்டு வந்தனர். முஸ்லிம்கள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற முடியாத தடைநிலை நிலவி வந்தது.
அந்தப் போரில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை தாபித் பின் ஃகைஸ், ஸாலிம் மௌலா அபீஹுதைஃபா, ஸைத் இப்னுல் கத்தாப் – ரலியல்லாஹு அன்ஹும் – ஆகியோரின் வரலாற்றின்போது விரிவாகவே பார்த்தோம். அப்பொழுது நடைபெற்ற மற்றொரு முக்கியமான நிகழ்வு, போரின் வெற்றிக்கு அடித்தளமிட்ட பெரும் பங்கு அல்-பராஉ பின் மாலிக்கைச் சேர்ந்தது.
முஹாஜிரீன்களையும் அன்ஸார்களையும் அவர்களின் அந்தந்தக் குலத்தினருடன் ஒருங்கிணைத்தார் காலித் இப்னு வலீத். அவரவர் குழுவினருக்கு அந்தக் குலத்தினருள் ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டார். அல் பராஉ பின் மாலிக்கிடம் “வெகுண்டெழுங்கள் பராஉ. உங்களுடைய அன்ஸார் இளைஞர்களை வழிநடத்தித் தாக்குதலைத் தொடங்குங்கள்” என்று உத்தரவிட்டார் காலித் பின் வலீத்.
விரைந்து தமது குதிரையில் ஏறினார் அல்-பராஉ. அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்தபின், தம் மக்களிடம், “ஓ மதீனாவாசிகளே! இன்று உங்களுக்கு மதீனா கிடையாது. அல்லாஹ்வும் சொர்க்கமும் மட்டுமே.”
இனி ஊராவது, வீடாவது? ஒரே வழிதான். அது எதிரில் உள்ளது. அந்தப் பாதையின் மறு எல்லை சொர்க்க வாயில். ஆகவே, ‘அடைந்தால் வெற்றி வாகை. இல்லையா சொர்க்கத்தில் ஜாகை’ என்று கருத்துரைத்தது அந்தப் பேச்சு. அல் பராஉ தமது ஆயுதத்தை உயர்த்திக் கொள்ள, அவரது குழுவினரும் ஆயுதங்களை ஏந்திக்கொள்ள, முஸைலமாவின் படையினர்மீது பாய்ந்தது அந்தக் குழு.
முஸைலமாவின் படையில் வாட்ட சாட்டமான ஒருவன் இருந்தான். பட்டப் பெயரோ, கெட்டப் பெயரோ, அவனை ‘யமாமாவின் கழுதை’என்று மக்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். கையில் வெள்ளை நிற வாளுடன் ஆஜானுபாகுவாய் நின்ற அந்தப் பேருருவத்தை சாதாரணத் தோற்றமுடைய பராஉ எதிர்கொண்டார். நேருக்கு நேர் இருவரும் நிற்கும்போது எப்படி இருந்திருக்கும்? பராஉவின் நலிந்த தோற்றத்தைக் கண்டு அவனுக்கு எத்தகு எகத்தாளம் ஏற்பட்டிருக்கும்?
பராஉவின் மனத்தில் தன்னம்பிக்கைத் தளர்ச்சியோ தடுமாற்றமோ இல்லை. அவனது காலைக் குறிவைத்துத் தமது வாளைச் செலுத்தினார். தவறிப் போனது அந்தத் தாக்குதல். ஆனால் அடுத்து அவனது பிடரி அவர் வசப்பட்டது. ஒரே வெட்டு; முடித்துவிட்டு அவனது வாளைப் பறித்துக் கொண்டு தம்முடைய வாளை உரையில் செருகிக்கொண்டு போரில் புகுந்துச் சுழல ஆரம்பித்தார் பராஉ. ஓயாமல், சளைக்காமல் வீசி, வீசி இறுதியில் உடைந்ததென்னவோ அந்த வாள்தான். பிறகு அதை எறிந்துவிட்டு தமது வாளை உரையிலிருந்து மீண்டும் எடுத்து, தொடர்ந்தது அவரது சண்டை.
இப்பொழுது முஸ்லிம்களின் தாக்குதலில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு முஸைலமாவின் படைகளுக்கு பலத்த சேதம்; அதிக அளவிலான உயிரிழப்புகள். எதிர்த்து சமாளிக்க முடியாமல் பின்வாங்க ஆரம்பித்தார்கள் அவர்கள். அப்படியே நகர்ந்து, நகர்ந்து, பின்னால் இருந்த பெரும் தோப்பு ஒன்றிற்குள் புகுந்து பூட்டிக் கொண்டனர். அதுதான் நமக்கு முன்னரே அறிமுகமான ‘மரணத் தோட்டம்’. ஆயிரக் கணக்கில் இருந்த அந்த எதிரிகள் உள்ளே நுழைந்து தோட்டத்தின் வாயிற் கதவுகளை இறுகப் பூட்டிக் கொள்ள, முஸ்லிம்கள் எளிதில் ஏறிக் கடக்க இயலாத வகையில் சுற்றிலும் நெடிய சுவர். தோட்டத்தை முஸ்லிம் படைகள் சுற்றி வளைத்தன.
என்ன செய்வது? உள்ளே எப்படி நுழைவது என்று முஸ்லிம்கள் யோசித்துக் கொண்டிருக்க துணிச்சலின் உச்சக் கட்டமாய் அந்தக் காரியத்தைச் செய்தார் அல் பராஉ பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு. யாரும் நினைத்துப் பார்க்காத, எதிர்பாராத காரியம். தம் குழுவினரிடம், “முஸ்லிம்களே. என்னை உங்களுடைய கேடயங்களில் ஏந்துங்கள். உங்களது ஈட்டி முனைகளால் கேடயத்தை மேலே உயர்த்துங்கள். என்னை உள்ளே வீசுங்கள். ஒன்று நான் கதவைத் திறந்து விடுவேன்; அல்லது உயிர்த் தியாகி ஆவேன்.”
ஓங்கிய வாளும், கூரிய ஈட்டிகளுமாய் கடும் ஆவேசத்துடன் பெருமளவில் உள்ளே குவிந்திருக்கும் எதிரிகளின் மத்தியில் ஒற்றை ஆளாய்ச் சென்று விழநேர்ந்தால், ‘கொத்துக் கறி’ போல் கொத்திக் கூறு போட்டுவிட மாட்டார்கள் அவர்கள்? உள்ளத்தில் எந்தளவு ஈமானின் உறுதி நிறைந்திருந்தால் தற்கொலைத் தாக்குதல் போன்ற இம்முயற்சிக்கு அவர் துணிந்திருப்பார்!.
‘ஆஹா! நல்ல யோசனை’ என்று முஸ்லிம்களும் உடனே செயல்பட்டனர். கேடயத்தில் அல் பராஉ அமர்ந்துகொள்ள, ஈட்டி முனைகள் அந்தக் கேடயத்தைத் தூக்கிக் கொண்டு உயர, கதவைத் தாண்டி எதிரிகளின் மத்தியில் ‘தொபீர்’ எனக் குதித்தார் அல் பராஉ பின் மாலிக். மரத்திலிருந்து ஈச்சங்குலை விழுந்ததா, வானிலிருந்து விண் கல் ஏதும் விழுந்ததா என்று எதிரிகள் திகைத்து, யோசித்து, சுதாரிப்பதற்குள் கடகடவென்று பத்து பேரை வெட்டித் தள்ளியவாறே ஓடி, கதவை அடைந்து, தாழ்ப்பாளை உடைத்தார் பராஉ. அவ்வளவுதான். மடை திறந்த அணையானது அத்தோட்டம்.
திமுதிமுவென்று உள்ளே புகுந்தது முஸ்லிம்களின் படை. புழுதி, இரைச்சல், ஆயுதங்கள் ஆவேசமாய் உரசும் ஒலி, குருதிப் பெருக்கு, எதிரிகளின் மரண ஓலம் என்று அதகளப்பட்டது அந்தத் தோட்டம். பொறியில் சிக்கிய எலிகளைப் போலானது முஸைலமா படையினரின் நிலை. இறுதியாக முஸைலமா கொல்லப்பட, அந்தப் போர் ஒரு முடிவுக்கு வந்தது.
முஸ்லிம்கள் பெரும் வெற்றியுடன் மதீனாவுக்குத் திரும்பும்போது தூக்குக் கட்டிலில் கிடத்தித்தான் பராஉ பின் மாலிக்கைத் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. அந்தளவு வெட்டுக் காயங்கள். அடுத்து ஒரு மாத காலம்வரை அவரது காயங்களுக்கு சிகிச்சை அளித்து கவனித்துக் கொண்டார் காலித் பின் வலீத்.
பராஉவின் தேடலெல்லாம் தெளிவான ஒன்றாக இருந்திருக்கிறது. உயிர்த் தியாகம்! போரிடும்போது எதிரியை வெல்ல வேண்டும்; வெற்றியடைய வேண்டும் என்று எந்த அளவு ஆவேசமும் உத்வேகமும் இருந்ததோ, அதற்குச் சற்றும் குறையாமல் அல்லாஹ்வுக்காக உயிர்த் தியாகி ஆகிவிட வேண்டும் என்பதும் அவரது சிந்தையில் ஊறிப்போன வேட்கை. அதில் திடமான உறுதி இருந்திருக்கிறது.
ஒருமுறை அவரது உடல் நலம் விசாரிக்க சில தோழர்கள் வந்திருந்தார்கள். அவர்களது பார்வையில் இருந்த கவலையைக் கவனித்துவிட்டார் பராஉ. அவர்களை நோக்கி, “என்ன? நான் எனது படுக்கையில் மரணமடைந்து விடுவேன் என்று நினைக்கிறீர்களா? அல்லாஹ்வின்மீது ஆணையாகச் சொல்கிறேன்! நான் உயிர்த் தியாகி ஆவதை அவன் தடுக்கப்போவதில்லை”
oOo
உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சியின்போது பாரசீகர்களுடன் நிகழ்ந்த போரில் முக்கியமான ஒன்று தஸ்தர். இந்தப் போரைப் பற்றி முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீ ரலியல்லாஹு அன்ஹுவின் வரலாற்றில் படித்திருக்கின்றோம். நகரைச் சுற்றி வளைத்திருந்தது முஸ்லிம்களின் படை. பாரசீகர்கள் நகரின் உள்ளே சென்று பத்திரமாகத் தங்களை அடைத்துக்கொள்ள முஸ்லிம்கள் முற்றுகையிட்டிருந்தனர். பல மாதங்கள் நீடித்த முற்றுகை இது. இந்தப் போரில் சகோதரர்கள் அல் பராஉ பின் மாலிக், அனஸ் பின் மாலிக் இருவரும் கலந்துகொண்டார்கள்.
நகரின் உயர்ந்தோங்கிய சுவர்களுக்குப் பின்புறமிருந்து பாரசீகர்கள் முஸ்லிம்களின்மேல் சரமாரியாக அம்பு மழை பொழிந்து கொண்டிருந்தனர். அது முஸ்லிம்களுக்கு உயிரிழப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தது. தவிர, பாரசீகர்கள் மற்றொரு யுக்தியைக் கையாண்டனர். அதுதான் முஸ்லிம்களுக்குப் பெரும் சவாலாகவும் சோதனையாகவும் அமைந்த விஷயம்.
பெரிய பெரிய கொக்கிகளை சிவந்துவிடும் அளவிற்கு நெருப்பில் சுட்டுக் கொண்டு, அவற்றை இரும்புச் சங்கிலிகளில் இணைத்துவிட சுவர்களின் மேலிருந்து கீழிறங்கின அக்கொக்கிகள். முஸ்லிம் வீரர்கள் சுவரை ஏறிக் கடக்கவோ சுவரை நெருங்க முயலும்போது கிணற்றில் தவறி விழுந்த வாளியை மேலிருந்து துழாவி, கவ்வித் தூக்கிவிடும் பாதாள கரண்டியைப்போல் அந்த நெருப்புக் கொக்கிகளை முஸ்லிம்கள் மேல் மாட்டி, கவ்வி இழுக்க… என்னாகும்? சகிக்கவியலாத வேதனையுடன் தசை பொசுங்கி அவர்கள் உயிரிழிக்க நேர்ந்தது.
அப்படியொரு கொக்கிதான் அனஸ் பின் மாலிக்கைக் கவ்விப் பற்றியது. கொதிக்கும் இரும்புக் கொக்கியிலிருந்து விடுவித்துக் கொள்ள இயலாமல் அவர் தவிக்க, அதைப் பார்த்துவிட்டார் அவருடைய சகோதரர் அல் பராஉ பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு. தாமதிக்கமால் அந்தச் சுவரை நோக்கி ஓடினார். பாறைகளால் வடிவமைக்கப்பட்ட சுவர் சமமாக, தட்டையாக இருக்காதல்லவா? கரடு முரடமான அந்தச் சுவரில் விறுவிறுவென்று ஏறி, அந்தக் கொக்கியைப் பற்றிப் பிடித்து தம் சகோதரரை விடுவிக்க ஆரம்பித்து விட்டார். நெருப்பாய்க் கனன்ற கொக்கிகள் அவரது கையைப் பொசுக்கி புகைய ஆரம்பித்தது. கிடுகிடுவென்று அவர் தம் சகோதரர் அனஸை விடுவிக்க, இருவரும் கீழே விழுந்தார்கள்.
அனஸ் பின் மாலிக் தப்பித்தார். அல் பராஉவும்தான். ஆனால் அவரது கையில்தான் தசை பொசுங்கி, மிச்சம் நீட்டிக் கொண்டிருந்தவை எலும்புகள் மட்டுமே. அப்படி இருந்தும், ‘போதும். கை பொசுங்கி நான் கையாலாகதவன் ஆகிவிட்டேன். நான் ஊருக்குத் திரும்புகிறேன்’ என்று அனுமதி கோராமல் களத்தில் தம் பங்கைத் தொடர்ந்தார் பராஉ.
முடிவுக்கு வராமல், பல மாத காலம் இழுத்துக் கொண்டே சென்ற தஸ்தர் முற்றுகை; தாமதமாகும் வெற்றி ஆகியவற்றினால் முஸ்லிம்களுக்குக் கவலை அதிகரித்தது. முஸ்லிம் படையினர் சிலர் அல் பராஉ இப்னு மாலிக்கிடம் சென்றார்கள்., “ஓ பராஉ! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உம்மைப் பற்றிச் சொன்னது நினைவிருக்கிறதா? ‘அழுக்கடைந்து, நைந்துபோன ஒரு ஜதை முரட்டுத்துணியாலான ஆடைகளை உடைய எளிய நிலையிலும் தன்னலம் கருதாமல், அல்லாஹ்வுக்காகத் தம்மிடம் இருப்பவற்றை (தேவையுடைய) பிறருக்கும் பங்கு வைத்துக் கொடுப்பவர்கள் எத்தனை பேர்? அவர்கள் சத்தியமிட்டு இறைஞ்சினால் இறைவன் நிறைவேற்றுவான். அவர்களுள் அல் பராஉ பின் மாலிக் ஒருவராவார்.’
“ஓ பராஉ! நமக்காகப் பிரார்த்தனை புரியுங்கள். அல்லாஹ் அவர்களுக்குத் தோல்வியைத் தந்து நமக்கு வெற்றியைத் தரட்டும்.”
தமது கரங்களை விண் நோக்கி உயர்த்தி, பணிவுடன், தெளிவாய், சுருக்கமாய் இறைஞ்சினார் பராஉ. “யா அல்லாஹ்! அவர்களுக்குத் தோல்வியைத் தருவாயாக. எங்களை வெற்றியாளர்களாக ஆக்கிவைப்பாயாக. என்னை உயிர்த் தியாகி ஆக்கி வைப்பாயாக.” நபியவர்களின் வாக்கு பலித்தது. பராஉவின் இறைஞ்சுதல் முற்றிலுமாய் நிறைவேறியது. முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது.
அந்தப் போரின்போது ஹுர்முஸானின் தாக்குதலுக்கு ஆளாகி உயிர்த் தியாகி ஆனார் பராஉ பின் மாலிக்.
ரலியல்லாஹு அன்ஹு!
oOo
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.
-நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம்-ல் 17 ஏப்ரல் 2015 அன்று வெளியான கட்டுரை