32. சுல்தானும் சுல்தானாவும்

மம்லூக் வி­ஷயத்தைத் தீர்த்து முடித்த பின்னர் ஸாலிஹ் நஜ்முத்தீனுக்குச் சிறிது ஓய்வு ஏற்பட்டது. அவர் என்றைத் தினம் ஷாமுக்குப் புறப்பட்டுச் சென்றாரோ அன்றிலிருந்து இன்றுவரை அரை நிமி­ஷமும் ஓய்வொழிவில்லாமல்

அரும்பாடுபட்டு வந்திருக்கிறார். இப்போதோ, ஷாம் வி­ஷயத்தைக் கவனிக்க அவருடைய மைந்தர் அங்கிருந்தார். சிலுவை யுத்தக்காரர்களைச் சந்திக்க ஜாஹிர் ருக்னுத்தீனின் தலைமையில் பெரிய சைன்யம் வடக்கே தமீதாவுக்குச் சென்றிருந்தது. உள்ளூரிலோ, புர்ஜீ மம்லூக்குகளும் பஹ்ரீ மம்லூக்குகளும் தனித்தனியே பிரித்து வைக்கப்பட்டு விட்டார்கள். ஒருவேளை கிறிஸ்தவர்கள் தெற்கு நோக்கி வந்துவிட்டாலும், அவர்களையும் சமாளிக்க எல்லா விதமான ஏற்பாடுகளும் சித்தஞ் செய்யப்பட்டு விட்டன. எனவே, அவர் சற்றே அமைதியான மூச்சை விட்டுக்கொண்டு, தமது பிரத்தியேக அறையிலே சிறிது சாந்தியாக அமர்ந்திருந்தார்.

அவருக்குப் பக்கத்தில் அவருடைய ஆருயிர்த் துணைவி ஷஜருத்துர் ராணி மிக ஒய்யாரமாக வீற்றிருந்தார். எழில்மிகு வதனத்தில் மிதந்துகொண்டிருந்த அவருடைய குறும்பு விழிகள் புளகாங்கிதத்தால் அடிக்கடி சிம்புளித்துக்கொண்டிருந்தன. மோனப் புன்னகை தவழ்ந்த அவருடைய அதரங்கள் லாவகமாகத் துடித்துக்கொண்டிருந்தன. பளிங்கினால் செதுக்கப்பட்ட பாவையின் அழகைப் பெற்றிருந்த அவருடைய தாவள்ளிய கழுத்திலே நவரத்னங்களும் வைத்திழைக்கப்பட்ட பதக்கமொன்று பார்ப்போர் கண்களைப் பறிக்கத் தக்கதாய்ச் சுடர்வீசி மின்னிக்கொண்டிருந்தது. அவ்வம்மையாருக்கு உத்தேசம் இருபத்தைந்து வயதே நிரம்பியிருந்தும், துருக்கி நாட்டில் பிறந்தவராதலாலும், நெடுநாள் மட்டும் திருமணமே புரிந்துகொள்ளாதிருந்தவராதலாலும், இப்போதுங்கூட ஒரே குழவியை மட்டுமே பெற்றிருந்தவராதலாலும், உடலிலோ உறுப்புக்களிலோ, அல்லது சருமத்திலோ சுருக்கமேதும் விழாமல் கன்னிப் பெண்ணின் தேகத்திலே வீசும் காந்தியே ஜொலித்துக்கொண்டிருந்தது.

மகா அவலக்ஷணம் பிடித்தவளுக்கு அரசியாகும் பாக்கியங் கிடைத்தாலே, அவள் அப்ஸரஸுக்குள்ள அழகத்தனையையும் செயற்கையால் பெற்றுவிட முடியும். அப்படியிருக்க, இயற்கையிலேயே ரூபலாவண்ய தேஜஸ் மிக்க ஒளியுடன் திகழ்ந்த சாமுத்திரிகா லக்ஷண ஷஜருத்துர்ருக்கு மிஸ்ரின் ஸுல்தானாவாக உயரும் அதிருஷ்டமும் கிடைத்ததென்றால், அவர் அப்போது பெற்றிருந்த எழிலின் உன்னதத்தை எந்தக் கவிஞனே முற்றும் வருணித்தல் சாலும்? அன்று வரை மிஸ்ர் தேசமே என்றுங் கண்டிராத அத்துணை வனப்பு மிக்க வனிதாமணியைத் தன்னகத்தே பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தை அவ்வரண்மனை அடைந்திருந்ததென்று மட்டுமே நாம் கூறமுடியும். சிற்பிகளுள்ளெல்லாம் மகா சிற்பியாய் மிளிரும் அவ்வருளாளன் படைத்த மஹோன்னதப் பேரெழில் உயிரோவியமாகவே ஷஜருத்துர் ஒளிச்சுடர் வீசிக்கொண்டிருந்தார். உலகில் மிகவும் அழகான ரூபத்தைப் பெற்றிருப்பது எப்போதும் ஆபத்துதானே!

சுல்தான் ஷஜரைத் தம் கருவிழிகளால் பருகி மகிழ்ந்து கொண்டிருந்தார். அவரை இவர் இத்தனை நாட்களாகக் கண்டு உள்ளப் பரவசம் கொண்டதைவிட, இன்று அவ் வம்மையார் முன்னெப்போதையும் விட இப்போது அதிக அழகுடன் தம் மனத்தைக் கொள்ளை கொண்டு விட்டதாகவே சுல்தான் எண்ணிக்கொண்டார்.

“பொன்னங் கிளியே ! நோயற்ற என் மனத்துக்கு உன்னினும் சிறந்த சஞ்சீவியை யான் எங்கே காணப்போகின்றேன்! அல்லாஹுத் தஆலா இந்த உலகில் மற்றெருவருக்கும் அளிக்காத பிரத்தியேக அதிருஷ்டத்தை எனக்கு அளித்திருக்கிறான்.”

“போங்கள், நாதா! ஏன் பரிகசிக்கின்றீர்கள்?” என்று நொடித்துச் சொல்லும்போதே ஷஜருத்துர்ரின் சங்குக் கன்னங்கள் நாணத்தால் சிவந்தன.

“இதில் பரிகாசமென்ன இருக்கிறது, ஷஜர்! நான் உண்மையைத் தானே கூறினேன்? நீயே சொல்: இந்த உலகத்தில் என்னைப் போன்ற மன்னர்கள் எத்தனையோ பேரிருக்க, உன்னை மனைவியாய் அடையும் பெரும் பாக்கியத்தை என்னைத் தவிர வேறு எவரே பெற்றார்? உன் புற அழகை நான் வருணிக்கவா? அல்லது உன் இணையற்ற அக அழகாகிய ஞான விகாசத்தை வருணித்துப் புகழவா? நிச்சயமாக இறைவன் என்னைப் பெரிய அதிருஷ்டசாலியாகவே ஆக்கிவைத்திருக்கிறான். உன்னை என்னிடம் சேர்ப்பிக்கவே போலும் அவன் மூனிஸ்ஸாவைத் தன்னிடம் அழைத்துக் கொண்டான்!”

“நாதா! இஃதென்ன திடீர் திடீரென்று தங்கள் கற்பனா சக்தி மாறி மாறிக்கொண்டே இருக்கிறது! அன்று பூங்காவிலே ஆண்டவனை எதற்காக நிந்தித்தீர்களோ, அதற்காகவே இன்று புகழ்கின்றீர்கள்! மூனிஸ்ஸாவை இழந்த பின்னர் அவரைப் போல் வேறொரு திவ்விய மனைவி எங்கே கிடைக்கப் போகிறாளென்று ஏங்கி ஏங்கிப் பெருமூச்செறிந்த தாங்கள் இன்று என்னென்னவோ பிதற்றி மகிழ்கின்றீர்கள். எனக்கொன்றும் விளங்கவில்லையே!”

“இதுவும் ஒரு கேள்வியா? மனிதனுக்கு வயதாக வயதாகத்தானே அனுபவ ஞானமும் அதிகரிக்கிறது? சென்ற ஆறு ஆண்டுகளுக்கு முன்னே நான் முட்டாளாயிருந்தேன்; இன்று நான் என் அனுபவத்தைக் கொண்டு புத்திசாலியாக உயர்ந்து விட்டேன். ஸலாஹுத்தீனின் புத்திரியாயிருந்தால் மட்டுமே மூனிஸ்ஸா உயர் ரகமாகிவிட முடியுமா? அல்லது திக்கற்ற அனாதையான உனக்குத்தான் அவள் நிகராகமுடியுமோ? எல்லாம் அவனுடைய திருவிளையாடல்களல்லவா? இன்று மூனிஸ்ஸாவே இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அவள் நான் இங்கில்லாத போது உன்னைப் போல ஆட்சி செலுத்தியிருப்பாளென்றா நீ நினைக்கின்றாய்! அல்லது நான் அவளை நம்பித்தான் இந்த ஸல்தனத்தை அவளிடம் ஒப்படைத்துச் சென்றிருப்பேனென்றுதான் கருதுகின்றாயா? தமீதாவை விழுங்கிவிட்ட சிலுவை யுத்தக்காரர்கள் உனக்காக அஞ்சியேயல்லவா காஹிராமீது படையெடுத்து வராமல் நடுங்கி நின்று விட்டார்கள்!”

“என்ன நியாயம் பேசுகிறீர்கள், நாதா! இறைவனின் நாட்டப்படி நடக்கிற எல்லாக் காரியங்களுக்கும் நானா காரணம்? அளவு கடந்த முகஸ்துதி செய்கிறீர்களே! நானென்ன வீராங்கனையா, என்னைக் கண்டு கிறிஸ்தவர்கள் அஞ்சியொளிய? அவர்களுக்கு வேறென்ன கஷ்டமோ தெரியவில்லை. அதனால்தான் இங்குப் போர்புரிய வரவில்லை. நானென்ன மாந்திரீக சக்தியைப் பிரயோகித்தா அவர்களை தமீதாவிலிருந்து அசையாமற் செய்துவிட்டேன்?”

“உன் பெயரே மாந்திரீக சக்தியைப் பெற்றிருக்கும்போது, நீ மந்திரம் வேறா செய்யவேண்டும்? – அது போகட்டும். நான் இங்கு இல்லாத போது என்ன பெரிய விசேஷம் நடந்தது? நான் அரசாங்க விஷயமாய்க் கேட்கவில்லை; அதுதான் எனக்குத் தெரியுமே! குடும்ப விஷயமாய்ச் சொல்: என்மைந்தன் உன்மீது பாசத்துடன் இருக்கிறானா? அல்லது உன்னை மாற்றாந்தாயெனக் கருதி, ஏதாவது இசகுபிசகாக நடந்துகொண்டானா?”

“நாதா! இன்று ஏன் தாங்கள் இப்படி விசித்திரமாய்ப் பேசுகின்றீர்கள்? நமக்கு விவாகமாகி இன்றுவரை யான் என்றைக்காவது தூரான் மீது குறையேதும் கண்டுபிடித்திருந்தாலன்றோ? மிகச் சிறந்த ஐயூபி வமிசத்திலே தாயையும் தந்தையையும் பெற்றுக்கொண்டிருக்கிற நம் அருமை மைந்தர் எப்படி இழிசன குணம் பெறுவார்? நாளையொரு காலத்தில் இந்த ஸல்தனத்தை மிகவும் உச்சத்துக்குக் கொண்டு வந்து நிறுத்தவேண்டிய கான்முளையாகிய அவரை நான் மிகவும் நேசிக்கின்றேன். அவரும் என்னை எல்லை கடந்த நேசிக்கின்றார். அவர் மட்டும் இல்லையென்றால், கலீலை இழந்த பின்னர் யான் இன்னும் உயிருடன் இருப்பேனென்றா நினைக்கின்றீர்கள்? தாங்களும் என்னை விட்டு ஷாமிலே இருக்கும் போது, என் குழவியும் அண்டவன் கட்டளைப்படி காலமாயின பின்பு, என் புண்பட்ட இதயத்துக்கு ஒரே சாந்தி மருந்தாய் வியங்கியவர் அவரல்லாவா? அவரை என் வயிற்றில் யான் சுமக்கவில்லையே யன்றி, வேறெவ்விதத்திலும் என் மைந்தராகவே பாவித்து வருகிறேனே! அவரும் என்னிடம் அதிக விசுவாசத்துடனேதான் நடந்துகொள்கிறார்!”

ஷஜருத்துர்ரின் கள்ளங் கபடமற்ற உள்ளத்தினின்று ஊற்றுக் கண்ணெடுத்தாலன்ன பிறந்த இவ்வுன்னதச் சொற்களைக் கேட்டு ஸாலிஹ் மனம் பூரித்துப் போயினார். ஆண்டிச்சியை அரசியாக்கி விடலாம். அனாதையைக் கோடீசுவரியாக்கி விடலாம். சொன்ன சொற் கேளாத வல்லியைப் பொற்பாவை ஆக்கிவிடலாம். ஆனால், அவளை மாற்றாந்தாய்க் குணம் வராமற் செய்வதென்பது எவராலாவது இயலக்கூடிய காரியமாமோ? அனால், அந்தத் துறையிலும் ஈடிணையற்று விளங்கிய தம் அருமைப் பத்தினியின் பண்பைக் கண்டு, சுல்தான் பேரானந்த முறாமல் இருக்க இயலுமா?

உண்மை என்ன? ஷஜருத்துர்ரும் சாதாரண மனிதப் பிறவியே. அவ் வம்மையார் இன்று அரசியாய் உயர்ந்துவிட்டாலும், தாம் ‘மனுஷியே’ என்னும் உண்மையை அவர் என்றும் மறக்கவில்லை. ஒரு சில நாட்களே வாழவந்த இத்தாழுலக வாழ்க்கையிலே, பட்டத்தைக் கருதியோ, பதவியைக் கருதியோ, சுயநலத்தைக் கருதியோ, — எந்த வகையிலும் வரம்பைக் கடக்கக்கூடாதென்னும் நல்லறிவை அவர் நழுவவிட்டதில்லை. அன்றியும், அவர் அரண்மனைக்கு வரும் முன்னே வாழ்ந்த தாழ்மையான வாழ்வைக் காற்று வாக்கிலே பறக்க விட்டுவிட்டு, தம் வாழ்க்கையின் புதிய அம்சத்துக்காகக் கர்வங் கொண்டுவிடவில்லை. இதனாலெல்லாம் மட்டுமே ஷஜருத்துர் அன்றுவரை மிஸ்ரில் வாழ்ந்த அத்தனை நாரிமணிகளுள்ளும் நடுநாயகமாய் விளங்கத்தக்க பேரெழிற் குணங்களைப் பெற்றுக்கொண்டு விட்டார் என்பதை மறந்துவிடாதீர்கள். அவ் வம்மையாரும் என்று வரை தம் கடமைகளைச் சரிவர உணர்ந்து பணியாற்றி வந்தாரோ, அன்றுவரை ஆண்டவனும் அவருக்கு அதிகமான உதவிகளையே புரிந்துவந்து, புகழுக்கு மேல் புகழைத் தந்து, மிக்க உச்ச நிலையிலே உயர்த்தி வைத்தான்.

“பூங்குயிலே! நான் உன் மனத்தை வருத்துவதற்காக இம்மாதிரியெல்லாம் கேட்கிறேனென்று நினைக்காதே! உள்ள விஷயத்தை உள்ளபடி உணர்ந்துகொள்ள வேண்டுமென்னும் ஆவல் மிகுதியால்தான் கேட்டேனேயன்றி, வேறல்ல. தூரான்ஷாவை நீ நேசிப்பதும், அவன் உன்னிடம் அதிகமாக பாசம்கொண்டு நிற்பதும் இயற்கைதானே? உலகின் பரம நீசன்கூட உன்னை வெறுக்கவோ, அல்லது வெறுக்க நினைக்கவோ முடியாதே! அப்படிப்பட்ட உன் சிறந்த குணநலங்களுக்கு நானே அடிமையாகி நிற்கும்போது, நான் பெற்ற மைந்தனும் அடிபணியாமற் போவானோ? அவன் எனக்கும் மூனிஸ்ஸாவுக்கும் பிறந்த காரணத்துக்காக மட்டும் நாளைக்குச் சான்றோனாகத் திகழப் போவதில்லை. ஆனால் உன்னிடம் பாடம் பயின்ற காரணத்தால் அறிவு விசாலம் அடைந்திருக்கிறானே, அதே காரணத்துக்காகவே நற்பெயரெடுக்க வேண்டும். நானே அவனிடம் பலமுறை கூறியிருக்கிறேன்: அவனுடைய பிற்கால வாழ்க்கைக்கெல்லாம் வேண்டிய சகல முன்மாதிரியும் உன்னிடமிருப்பதால், அவன் உன் பேச்சையே எப்போதும் கேட்கவேண்டுமென்றும் அறிவுறுத்தியிருக்கிறேன். வாஸ்தவத்திலேயே, அவன் என்றைக்காவது உன் பேச்சை உதாசினப்படுத்தினால். அன்றே கேடுகாலத்தைச் சம்பாதித்துக் கொள்வானென்றுதான் என் மனம் தானே கூறுகிறது!”

“நானென்ன, ஒரு குற்றங்கூட இழைக்க முடியாத அற்புதப் பிறவியா? நான் கூறுகிறவை பொருத்தமானால் கொள்ளவும், இன்றேல் தள்ளவும் அவருக்கு உரிமையில்லையா? ஒருகால், அவர் என்னைவிடப் புத்திசாலியாய் உயர்ந்து விடக் கூடாதோ? அப்போதுமா நான் சொல்கிறவற்றையெல்லாம் அவர் கேட்க வேண்டும்?” என்று ஷஜருத்துர் சற்று அழுத்தமாகக் கூறினார்.

“அவனுக்கு ஐம்பது வருட அனுபவம் ஏற்பட்டாலும் சரிதான். அப்போதும் அவன் ராஜதந்திரத்திலோ, ஞாக விகாசத்திலோ உன்னை மிஞ்சவே மடியாது. அதை நீயே, இன்ஷா அல்லாஹ், பார்த்துக்கொள்வாய்,” என்று சுல்தான் அறைகூவுகிற தொனியிலே கூறினார்.

அதனையடுத்து இரண்டொரு நிமிஷம் நிசப்தம் நிலவியது.

“நாதா! இப்போது தூரான்ஷா திமஷ்கிலேயே இருக்கிறாரா?” என்று ஷஜருத்துர் அன்பொழுகக் கேட்டார்.

“திமஷ்கில் இல்லை. ஆனால், ஷாம் தேசத்தின் எல்லையிலே இருக்கிறான். முஹம்மத் ஷாவைக் கடைசியாக அவ் வெல்லைப் புறத்தில் பார்த்ததாகச் சிலர் சொன்னார்கள். அங்கே சென்று அக் கயவனை வேட்டையாடிப் பிடிக்கவேண்டிய நேரத்தில் தான் நான் இங்கே திரும்பி வர நேர்ந்தது. அந்த முஹம்மத் ஷாவைப் பிடித்த பிறகு அவனுக்கு அங்கே வேலையில்லை. கூடிய சீக்கிரமே அவனும் திரும்பிவந்து விடுவானென்று நினைக்கிறேன். ஆனால், நான் அங்கிருந்து புறப்படும்போது அவன் சொன்ன வார்த்தைகளைத்தாம் என்னால் மறக்கமுடியவில்லை,” என்று மூச்சு விட்டுக்கொண்டே சுல்தான் கூறினார்.

“அப்படி என்ன கூறினார்?” என்று திடுக்கிட்டுக் கேட்டார் சுல்தானா.

ஒன்றும் வித்தியாசமாகவோ அல்லது விகற்பமாகவோ அவன் கூறிவிடவில்லை. ஆனால், ஷாம் தேசத்துக்கும் ஐயூபி வமிசத்துக்கும் பொருத்தமில்லையென்றே அவன் கூறினான்; அதையே நான் திரும்பத் திரும்ப நினைத்துக்கொள்கிறேன். நான் அதை எவ்வளவுதான் மறக்க முயன்றாலும், அவ்வெண்ணம் திரும்பத் திரும்ப என்னுள் வந்துகொண்டேயிருக்கிறது!”

“ஆம். எனக்கும் இப்போதுதான் ஞாபகம் வருகிறது. அமீர்தாவூத்கூட அப்படித்தான் என்னிடம் பலமுறை பகர்ந்திருக்கிறார். ஸலாஹுத்தீன் காலந்தொட்டே ஷாமும் உருப்படவில்லை; அங்குச் சென்ற நம் சுல்தான்களும் உருப்படவில்லை. மேலும், சென்ற முறை ஐயூபி சுல்தான் ஒருவர் ஷாமில் இருக்கும்போதுதான் கிறிஸ்தவர் தமீதாவை முற்றுகையிட்டார்கள்; இப்போதும் மற்றொரு சுல்தானாகிய தாங்கள் ஷாமில் இருக்கும்போதுதான் அக் கிறிஸ்தவர்கள் தமீதாமீது பாய்ந்தார்கள். ஆனால், தாங்கள் உயிருடன் மிஸ்ருக்குத் திரும்பும் பாக்கியத்தையாவது நான் கிடைக்கப் பெற்றேனே!”

“ஷஜர்! ஆண்டவன் எப்படி யெப்படி நாடுகிறானோ, அப்படி யப்படியேதான் எல்லாம் நடக்கும்! அதற்கு ஐயூபி சுல்தான்கள்தாம் என் செய்வர்? அல்லது ஷாம்தேசந்தான் என் செய்யும்? ஸலாஹுத்தீனும் அவர் தம்பியும் அங்கே மரணமடைந்ததால், எல்லா ஐயூபிகளுமே அங்கே மாண்டு மடிவார்கள் என்று அர்த்தமா? நான் அதற்காக ஒன்றும் அஞ்சவில்லை. ஆனால், என் மனமே சாந்தியின்றித் தவிக்கிறது. அன்று தூரான்ஷாவும் இதே வார்த்தைகளைச் சொன்னான். சகல வசதியுடன் நான் குதூகலமாய் இருக்கும்போது, ஏன் இப்படி என் மனத்திலே ஒருவிதச் சுமை ஏறியிருக்கிறதென்றுதான் விளங்கவில்லை!”

“ஏன், சிலுவையுத்தக் காரர்களைப் பற்றிய கவலையோ?”

“இல்லையில்லை; அதற்குத்தான் நீயே தக்க ஏற்பாடுகளை யெடுத்து ஒவ்வொரு காஹிரா வாசியையும் யுத்த வீரனாக ஆக்கிவிட்டிருக்கிறாயே! அல்லாமலும், அந்தக் கிறிஸ்தவர்கள் தமீதாவுக்கு இந்தப்புறம் வர ஆரம்பித்தால்தானே நான் கவலைப்படப் போகிறேன்? அஃதெல்லாம் இல்லை. ஆனால், என்னவோ, தெரியவில்லை — என் உள்ளம் கனக்கிறது. அதற்குக் காரணம் என்னால் சொல்ல முடியவில்லை!”

சுல்தானும் சுல்தானாவும் தனித்து இவ் வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தமீதாவிலிருந்து தூதனொருவன் வந்திருப்பதாக ஓர் அடிமை வந்து கூறினான்.

“அத் தூதனை இங்கே வரச் சொல்!” என்று சுல்தான் கட்டளையிட்டார்.

சற்று நேரத்தில் அவன் அங்குவந்து நின்றான். “யா ஸாஹிபல் ஜலாலில் மலிக்! தமீதாவிலே நம் சைன்னியங்களுக்கும் அந் நசாராக்களுக்கும் இடையே கடுமையான போர் நடந்துகொண்டிருக்கிறது. நிச்சயமாக அவ் விரோதிகள் முறியடிக்கப்பட்டு விடுவார்களென்றே தோன்றுகிறது. ஆயினும். அவர்களுடைய படை நம்முடையதை விடப் பல மடங்கு பெரிதாயிருப்பதாலும், நீல நதிக்கரை அவர்களுடைய கட்டுப்பாட்டிலிருப்பதாலும், அவர்கள் தோல்வியடைந்த பிறகு கடல் மார்க்கமாக ஐரோப்பாவுக்கு ஓடிப்போகாமல், ஒரு வேளை நதி வாயிலாக இப்பக்கம் வந்தாலும் வந்துவிடக் கூடுமென்று நம் சேனாதிபதி சந்தேகிக்கிறார். எதற்கும் காஹிராவாசிகளும், இங்குள்ள நம் படைகளும் ஆயத்தமாய் இருக்க வேண்டுமென்று கூறவே இங்கு வந்தேன்,” என்று செப்பினான்.

சுல்தான் யோசித்தார். “சரி, நீ போகலாம். ஆனால், எதிரிகளைக் கூடியவரையில் தமீதாவிலிருந்து கடற் பக்கமே வெருட்டிவிட ஏற்பாடு செய்யுங்கள். அந்த அநாகரிகம் பிடித்த அறிவில்லா ஜாதியார் நீலநதி வழியே மிஸ்ருக்குள் புகுந்து விட்டால், ஒரு வரைமுறையுமில்லாமல் நடந்துகொள்வார்கள். அவர்களை இங்கே உள்ளே விட்டுக்கொண்டு பின்னால் அவதிப்படுவதைவிட முன்னாலேயே தடுத்து ஓட்டி விடுங்கள். கிறிஸ்தவர்களை யுத்தத்தில் வீழ்த்தும் போதே நீல நதியின் ஆதிக்கத்தையும் நீங்கள் கைப்பற்ற முயற்சியெடுங்கள். மீறி அவர்கள் இங்கே வந்துவிட்டால், நாம் கவனித்துக் கொள்கிறோம். ஜாஹிர் ருக்னுத்தீனிடம் நான் கூறியதாகச் சொல்லி, எதிரிகளின் ஒற்றர்கள் நடமாட்டத்தைக் கண்ணுங் கருத்துமாய்க் கவனிக்கச் சொல்!” என்று திட்டம் வகுத்துக் கூறினார்.

அவனும் மெளனமாகத் தலையசைத்துவிட்டு, அவ் வரசதம்பதிகளின் பெரிய அறையை விட்டு வெளியேறிப் போய்விட்டான். ஷஜருத்துர் அசையாமலே இருந்தார்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<அத்தியாயம் 31>> <<அத்தியாயம் 33>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment