நம் சரித்திரக் காதையின் நடுவிலே ஜாஹிர் ருக்னுத்தீன் என்னும் பஹ்ரீ மம்லூக் தலைவரை நாம் திடீரென்று கொண்டு வந்து நுழைத்து, இதுவரை வருணித்து வந்தோமென்றாலும், அவர் யார்? எங்கிருந்து வந்தார்? எப்படி ஸாலிஹ் மன்னரிடம் வந்து சேர்ந்தார்? தமீதாமீது படையெடுத்துச்சென்று கிறிஸ்தவர்களைத் தாக்கக் கூடிய கெளரவத்தைப் பெறும் பாக்கியம் எப்படிக் கிடைக்கப் பெற்றார்?

ஷஜருத்துர் அவரையே எல்லா நெருக்கடியான சந்தர்ப்பங்களிலும் முற்ற முற்றச் சார்ந்து நிற்கும்படியான அவ்வளவு பெரிய நம்பிக்கையை எப்படி அவர் பெற்றார்?-என்பன போன்ற சந்தேகங்கள் உங்கள் உள்ளத்துள் எழக்கூடுமாகையால், அவரைப் பற்றி நாம் சற்றே ஆராய்வோம்:-

மிஸ்ரில் நடத்த முஸ்லிம் ஆட்சியைப் பற்றிய விவரமான சரித்திரங்களை நீங்கள் கவனமாய்ப் படிப்பீர்களேல், இந்த ஜாஹிர் ருக்னுத்தீன் என்னும் மம்லூக் அடிமையே ஐயூபிகளின் ஆட்சி மிஸ்ரிலே குலைந்துபோன பின்னர், கி. பி. 1250-இல் “மம்லூக் ஆட்சி” என்னும் அடிமைகளின் வம்ச ஸல்தனத்தை நிருமித்தார் என்பதைக் கண்டு கொள்வீர்கள். இந்திய சரித்திரத்தில் குத்புத்தீன் ஐபக் முதலிய முஸ்லிம் அடிமைகள் சில காலம் அரசாட்சி புரிந்ததே போல், எகிப்தின் சரித்திரத்திலும் அப்படிப்பட்ட அடிமைகளின் ஆட்சி சில காலம் நிறுவப்பட்டது. அந்த அடிமை வம்ச சுல்தான்களுள் ஜாஹிர் ருக்னுத்தீனே (al-Malik al-Ẓāhir Rukn al-Din Baibars al-Bunduqdar)பேபரஸ்” என்னும் முதல் மம்லூக் சுல்தானாய் உயர்ந்தார். ஐயூபிகள் அமர்ந்திருந்த அரியாசனத்திலே, ஸாலிஹ் என்னும் ஐயூபியே சிருஷ்டித்த மம்லூக் அடிமைகள் பின்னொரு காலத்தில் அமர்ந்து ஆட்சி செலுத்த நேர்ந்தது மற்றொரு விதியின் விசித்திரமேயாகும். இக் கதையெல்லாம் பின்னால் நிகழப் போகும் வைபவங்கள். ஆனால், பின்னொரு காலத்தில் அவ்வளவு உயரிய சுல்தானாகப் போக விருந்த அந்த ஜாஹிர் ருக்னுத்தீனின் ஆரம்ப வாழ்க்கையைப் பாருங்கள்:-

அவர் மிகவும் உயரமாய் வளர்ந்த ஆஜானுபாகுவாய் விளங்கி வந்தார். உயரத்துக்கேற்ற பருமனும் படைக்கப்பெற்றிருந்தார்; மிகவும் வலிமை பொருந்திய பலாட்டியராகவும் இருந்து வந்தார். அன்றியும், அவர் எடுத்த காரியத்தை முடிக்கக் கூடிய வல்லமை வாய்க்கப்பெற்றிருந்தார். ஆனால், அவருடைய அங்க லக்ஷணத்தில் ஒரே ஒரு குறை இருந்தது; தற்செயலாய் நேர்ந்த ஒரு விபத்தினால் அவருக்கு வலக்கண் ஊனமாகிவிட்டது. அவருடைய பெற்றோர்கள் பரம ஏழைகளாதலால், அவரை அடிமையாக விற்று விட்டாவது, அதன் மூலம் கிடைக்கிற வருவாயைக் கொண்டு வயிறு வளர்க்கலாமென்று முடிவு கட்டினார்கள். எனவே, மத்திய ஆசியாவிலிருந்து அவர்கள் மிஸ்ருக்குப் பிரயாணமாகி வந்தார்கள். சுல்தான் ஸாலிஹ் ஒரு நாள் மாலையில் வெளியே உலவி வரும்போது, அந்த ருக்னுத்தீன் என்னும் கட்டுமஸ்தான் தேகம் படைத்த இளைஞரையும் அவருடைய பெற்றோர்களையும் வீதியோரத்தில் சந்தித்தார். அடிமையாக விற்பதற்கே அச் சிறுவனைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது தெரிந்து, ஸாலிஹ் விலைபேசினார்; அங்கத்தில் பழுதிருந்ததைக் காரணமாகக் காட்டி, 750 தீனார் கொடுப்பதாகக் கூறினார். அந்தச் சிறிய தொகையே தங்களுக்குப் பெரிய பொக்கி­ஷமெனக் கருதிய ருக்னுத்தீனின் பெற்றோர்கள் முழு மனச் சம்மதத்துடனே அவரை விற்றுவிட்டு, தொகையைப் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்கள்.

சுல்தான் ஸாலிஹ் தம் பாதுகாவலுக்காகச் சிருஷ்டித்துக் கொண்ட ஹல்காவில் ருக்னுத்தீனுக்கே முக்கிய ஸ்தானத்தைக் கொடுத்து விட்டார். காசு கொடுத்து வாங்கப்பட்ட அவ்வடிமை, சுல்தான் ஸாலிஹின் சொந்தச் சொத்தாகவே கருதப்பட்டு வந்தார். ஆனால், அவர் ஹல்காவிலே சேர்ந்ததிலிருந்து சுல்தானின் பெருமதிப்பை எந்த அளவுக்குப் பெற்றுக்கொண்டார் என்றால், வெகு விரைவான முறையிலே புகழுக்கு மேல் புகழை எட்டிவிட்டார். சுல்தான் எங்குச் செல்வதாய் இருந்தாலும், ருக்னுத்தீனை அவருடன் பார்க்கலாம். மேலும் சுல்தான் மீது அவருக்கு எவ்வளவு அளவு கடந்த பிரியம் ஏற்பட்டு விட்டதென்றால், எப்பாடு பட்டாவது அரசர் பொருட்டு உயிரையும் தியாகம் செய்ய வேண்டுமென்னும் வைராக்கியமே கொண்டு விட்டார். ஸாலிஹூம் அமீர்களைக் கொன்றுவிட்டு, அவ் வினத்தைச் சார்ந்த மம்லூக்குகளுடைய அதிருப்திக்கு ஆளாகியிருந்த சமயத்தில் இப்படிப்பட்ட நம்பிக்கைக்குப் பாத்திரரான உண்மை மம்லூக் தேவைப்பட்டே வந்தார். ருக்னுத்தீனைப் போன்ற மம்லூக்குகள் தமக்கு அங்கக் காவலர்களாய் இருக்கிற வரையில் தம் உயிருக்கொன்றும் ஆபத்துவர மார்க்கமில்லை என்று சுல்தான் ஸாலிஹ் திடமாய் எண்ணியமையாலேயே அன்றொரு நாள் ஷஜருத்துர்ரிடம் இந்த மம்லூக்குகளைப் பற்றிப் பெருமையாய்ப் பேசினார்.

ஸாலிஹ் மன்னர் ஷாமுக்குப் போன பொழுதும் ருக்னுத்தீன் சுல்தானுக்கே மெய்காப்பாளராகப் பணியாற்றி வந்தமையால், இவர் பெரும் புகழ் சம்பாதித்துக் கொண்டார். முஹம்மத் ஷாவை எதிர்த்து நிகழ்ந்த போர்களில் எல்லாம் ருக்னுத்தீன் மிகத் திறமையாக வாள் வீசியதையும், ஈட்டி எறிந்ததையும், வில் பிடித்ததையும் பார்த்த சுல்தான் அப்படியே பிரமித்து விட்டார். தலை முறை தலை முறையாகப் போர்க்கள அனுபவம் வாய்ந்தவர்கூடச் செய்து காட்ட முடியாத சிறந்த வேலைகளை இச் சிறு வாலிபர் வெகு லாவகமாகச் செய்வதைக் கண்டு அதிசயிக்காமல் இருக்க முடியுமா? ஏற்கனவே சுல்தானின் பிரீதிக்கு இலக்காகியிருந்த இவர் இப்போது அதிக பிரியத்தையும் நேயத்தையுமே பெற்றுக் கொண்டுவிட்டார்.

ஷாமிலிருந்து ஸாலிஹ் திரும்ப நேர்ந்தபோது ருக்னுத்தீனும் உடன் திரும்பினார். காஹிரா வந்து சேர்ந்ததும் தமீதாவின் வீழ்ச்சியையும், ஜீலானீ ஓடிவந்து விட்டதையும் கேள்வியுற்ற சுல்தான் எங்ஙனம் ஒரு பெரிய படையை அதே ருக்னுத்தீனின் தலைமையில் தமீதாவுக்கு அனுப்பினார் என்பதையும் நீங்கள் முன்னம் படித்திருக்கிறீர்கள். அந்த ஜாஹிர் ருக்னுத்தீனின் தன்னலமற்ற தியாக உள்ளம், போர்த்திறமை வாய்க்கப்பெற்ற திண்ணிய தீரம், வன்மைமிக்க வீரச்செய்கை, ஸல்தனத்தின் க்ஷேமத்துக்காகவே உயிரையும் மதிக்காத உன்னதத் பெருமை ஆகியவற்றையெல்லாம் ஸாலிஹ் ஷஜருத்துரிடம் பல முறை எடுத்துக் கூறியிருந்தார். எனவே, சுல்தானாவுக்கும் ருக்னுத்தீன் மீது பக்ஷமும், பாசமும், அன்பும் ஆதரவும் சிறுகச் சிறுக உதயமாகி வந்தன. பஹ்ரீ மம்லூக்குகள் மீது பாரபக்ஷமான முறையில் சுல்தான் பிரியம் பாராட்டுகிறாரே என்று முதலில் வருந்திய ஷஜரும் நாளேற வேறத் தம் கருத்தை மாற்றிக் கொள்ள நேர்ந்தது. எனினும், சுல்தான் ஸாலிஹ் ருக்னுத்தீன்மீது கொண்ட அவ்வளவு பெரிய அளவுக்கு ஷஜருத்துர்ருக்கு நம்பிக்கை பிறக்காமலே இருந்து வந்தது.

ஆனால், சுல்தான் வியாதியாய்ப் படுத்தவுடனே கைம்முறிந்துவிட்ட ஷஜருத்துர்ருக்கு அந்த ருக்னுத்தீன் ஒருவரே தக்க ஊன்றுகோலாய் வந்து வாய்த்தாரென்பதை எவரே மறுக்க இயலும்? சுல்தான் உயிருடன் இருக்கும் வரையில் ஒருவிதமாகவும், சுல்தான் உயிரிழந்த பின்னர் வேறுவிதமாகவும் நடந்துகொள்ள வேண்டுமென்னும் தீயகுணம் ருக்னுத்தீனுக்கு உதயமாயிற்றா? இல்லை! அவருடைய பெருமைக்குரிய உயரிய தன்மையைப் பாருங்கள்! உதவியற்றுத் தனித்துத் தவித்த சுல்தானாவுக்கு அவர் எப்படிச் சமய சஞ்சீவியாய் வந்து வாய்த்தார்! அவர் கொண்டிருந்த பாசமெல்லாம் ஸல்தனத்துக்காகவே அன்றி, ஒரு தனிப்பட்ட சுல்தானுக்காக வன்று எப்படி நிரூபித்தார்! மையித்தை மூமிய்யாவாக்க எப்படியெல்லாம் ஷஜருத்துர்ருக்குத் துணை புரிந்தார்! எத்தனைப் இராப்பகல்கள் கண் விழித்தார்! எப்படியெப்படி எல்லாம் அம் மூமிய்யாவைப் பாதுகாத்தார்! எவ்வாறெல்லாம் சுல்தானின் மரணம் சம்பந்தப்பட்ட பயங்கர உண்மையை வெகு சாதுரியமாக ஒளித்து வைத்தார்! எல்லாவற்றுக்கும் மேலாக, நசாராக்கள் கோட்டை வாயிலை நெருங்கிவிட்ட வேளையிலே எத்துணைப் பொறுப்புடன் தம் மாபெரும் கடமையை நிறைவேற்றினார்! இஸ்லாத்துக்கு எத்தகைய பெரு வெற்றியைச் சம்பாதித்துக் கொடுத்தார்! சுல்தானே நேரிலிருந்து செய்து முடிக்க வேண்டிய அரும் பெருங் காரியங்களை எல்லாம் சற்றும் தளர்ச்சியுறாமல் எப்படி முடித்துக் கட்டினார்! அல்லாமலும், வெளிநாடு சென்றிருந்த தூரான்ஷாவுக்கு ராஜ விசுவாசப் பிரமாணம் தெரிவித்து ஷஜருத்துர்ரிடம் சத்தியம் செய்து கொடுத்தார்! எவ்வெப்படி எல்லாம் இறுதிவரை தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றி வைத்தார்! உலக சரித்திரத்திலே இவரைப் போன்ற தியாக உள்ளம் – ராஜ விசுவாசம் – படைத்த வேறோர் அடிமையைக் காட்டுங்கள், பார்க்கலாம்!

ஷஜருத்துர்ருக்கு ருக்னுத்தீன் மட்டும் பக்க பலமாய் நின்றில்லா விட்டால், என்ன கதி நிகழ்ந்திருக்கும் என்பதை எவரால் எடுத்துக் கூற இயலும்? மிஸ்ரின் ஸல்தனத்தைக் காப்பாற்றிய பொறுப்பு ஷஜருத்துர்ரை எந்த அளவுக்குச் சார்ந்து நிற்கிறதோ, அதே அளவுக்கு, அல்லது சற்று அதிகமான அளவுக்கு ருக்னுத்தீனையும் சார்ந்தே இருக்கின்றது. சுல்தானும் காலஞ் சென்றுவிட்டிருக்க, பட்டத்துக்குரிய ஒரே இளவரசரும் கண்காணாத தூரத்திலிருக்க, மிஸ்ரின் பாரமெல்லாம் ஒரு கைம்பெண்ணின் தலையில் சுமந்து நிற்க, ருக்னுத்தீன் மட்டும் கெட்ட எண்ணம் படைக்கப்பெற்றிருந்தாராயின், அந்த ஸல்தனத்தைத் தம் சகாக்களான பஹ்ரீகளின் உதவி கொண்டு அவர் எவ்வளவு சுலபமாகக் கைப்பற்றிருக்க முடியும்! ஆனால், அவர் என்ன செய்தார்? அதை நீங்களே நன்குணர்ந்திருக்கின்றீர்கள்.

அடிமையானால் என்ன? ஆண்டியானால் என்ன? இஸ்லாத்தில் மனிதனுக்கு மனிதன் வேற்றுமை கற்பிக்கப்பட்டில்லை. எல்லாரும் ஒரு குலம், எல்லாரும் ஓரினம்

இஸ்லாம் சிருஷ்டித்த இணையற்ற படைப்புகளுள் ஜாஹிர் ருக்னுத்தீனும் ஒருவர் என்பதை எவரும் மறுக்க முடியாது. அடிமையானால் என்ன? ஆண்டியானால் என்ன? இஸ்லாத்தில் மனிதனுக்கு மனிதன் வேற்றுமை கற்பிக்கப்பட்டில்லை. எல்லாரும் ஒரு குலம், எல்லாரும் ஓரினம் என்னும் ஒரே பரந்த நோக்கத்தின் மீதே நாம் அனைவரும் நிலை பெறுத்தப் பெற்றிருக்கிறோம். எனவேதான், இன்னம் சில காலத்துக்கு அந்த பஹ்ரீ மம்லூக்குகளே மிஸ்ரின் ஸல்தனத்துக்கு ஸுல்தான்களாக உயரக்கூடிய யோக்யதையைப் பெற்றுக்கொண்டு விட்டார்கள். நம் இந்தச் சரித்திரக் காதை ஷஜருத்துர்ரின் வாழ்க்கையை மட்டும் கூறி முடிக்கப் போவதால், ஜாஹிர் ருக்னுத்தீன் தம் பிற்கால வாழ்க்கையில் எப்படி “பேபரஸ்” மன்னராக உயர்ந்தாரென்பதை நாம் இந்நூலில் எழுதப் போவதில்லை. எனினும், இச்சரித்திரம் சம்மந்தப்பட்ட வகையிலே அந்த பஹ்ரீ மம்லூக் எவ்வளவு உயர்ந்த ஸ்தானத்தை எல்லாம் எட்டி விட்டார் என்பதை நீங்கள் உணர்ந்துமிருக்கிறீர்கள்; இனியும் போகப் போக அதிகம் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.

எனவே, இளவரசர் தூரான்ஷா பட்டமேற்கப் போகிற நேரத்திலே ஜாஹிர் ருக்னுத்தீன் எல்லா மம்லூக்குகளுள்ளும் – பஹ்ரீ, புர்ஜீ மம்லூக்கிகள் எல்லாருள்ளும் – தலைசிறந்த பெரிய மனிதராகவும், சேனாதிபதியாகவும், லூயீயை யுத்தத்தில் வீழ்த்திய உயர் தனிப் பெருமை மிக்கவராகவும் ஜொலித்துக் கொண்டிருந்தார். அல்லாமலும், சுல்தான் ஸாலிஹின் மரண சம்பந்தமான முழுவிவரமும் வெளியிடப்பட்ட பின்பு ஒவ்வொரு மனிதனின் வாயிலும் ஜாஹிர் ருக்னுத்தீனின் ராஜபக்தி, அன்பு, ஆதரவு, வீரம், செய்ந் நன்றி மிக்க தன்மை ஆகியவை பற்றியே பேச்சுக்கள் பிறந்துகொண்டிருந்தன. ஷஜருத்துர்ருக்கோ, நினைக்க நினைக்க நம்ப முடியாத அத்துணைப் பெரிய வீராதி வீரச் செயல்களையும், தீராதி தீரச் செய்கைகளையும் புரிந்து காட்டிய ருக்னுத்தீனைப் பற்றிய பாசம் பெருகிக் கொண்டே சென்றது.

ஆனால்,…!

பஹ்ரீ மம்லூக் ஒருவன், அதிலும் ஒற்றைக்கண் பார்வையிழந்த அரைக்குருடன், எல்லாவற்றிற்கும் மேலாக, நேற்று இந்தக் காஹிராவில் வந்து நுழைந்தவன் இம்மாதிரியான பேரும் புகழும், கீர்த்தியும் கியாதியும் பெற்று விட்டதைக் காணக் காண அந்தப் பழைய இனத்தவர்களாகிய புர்ஜீ அடிமைகளுக்குப் பொறாமை என்னும் கொடிய பிசாசு பிடித்தலைக்கத் தலைப்பட்டுவிட்டது. பொறாமை என்றால் எப்படிப்பட்ட பொறாமை? ருக்னுத்தீனின் கழுத்தை நெரித்து உதிரத்தை உறிஞ்சிவிடலாம் என்ற அளவுக்குப் பற்களை நறநறவென்று கடிக்கக்கூடிய எல்லைக்கு அந்தப் புர்ஜீகளுக்கு அழுக்காறு பொங்கி எழ ஆரம்பித்துவிட்டது. ஆனால், மேலிடத்துத் தயவும் கெளரவமும் இருக்கிற வரையில் எவரே ருக்னுத்தீனை அசைக்கத்தான் முடியும்? எப்போது சமயம் வாய்க்கும் அவரைக் கீழே உருட்டவென்று அந்தப் பொறாமையாளர்கள் தவியாய்த் தவித்தார்கள். சகல மக்களும் ஜாஹிர் ருக்னுத்தீனை விரும்ப விரும்ப, புர்ஜீகள் அவ்வளவுக்கு அவ்வளவு அவரை வெறுக்க முனைந்தனர். என்னதான் புர்ஜீகள் வெறுத்தாலும், ஆண்டவடன் வேறுவிதமாக நாடியிருந்தான் என்பதை அவர்கல் எங்ஙனம் அறிவார்கள்?

ஆயினும், ருக்னுத்தீனுக்கு மட்டும் எல்லாம் தெரியும். தம்முடைய கால்களை வாரிவிட்டுக் கீழே தள்ள எதிர்க்கட்சி மம்லூக்குகளும் அவர்களுடைய தலைவர்களும் கச்சை கட்டிக் கொண்டு நின்றார்கள் என்பதை அவர் நன்குணர்ந்து கொண்டார். ஆனால், அதற்காக அவரொன்றும் மனங் குன்றிவிடவில்லை. மிஸ்ரின் ஸல்தனத்துக்குத் தம்மாலான மட்டும் சர்வ பரித்தியாகமும் புரிந்துதான் தீர்வதென்று அதிகமான உறுதி கொண்டு விட்டார். திடசித்தமும் தியாக உணர்ச்சியும் இருக்கிற வரையில் தம்மை ஒருவரும் ஒன்றும் செய்துவிட முடியாதென்பதை அவர் நன்கறிந்திருந்தார். இவ்வாறெல்லாம் கொண்டிருந்த சிறந்த மனப்பான்மையின் காரணமாகவே அவர் ஷஜருத்துர்ருடன் பூரணமாக ஒத்துழைத்துப் புகழை நிலைநாட்டினார். ஆண்டவனும் அவருக்கு அருள் புரிந்து வந்தான். இன்றுங்கூடச் சரித்திரத்தில் அந்த மம்லூக் மிக உன்னத ஸ்தானத்திலேயே வீற்றிருக்கின்றார்.

அன்று தூரான்ஷாவை அரண்மனை வரையில் கொண்டு வந்து விட்டதும், ருக்னுத்தீன் அதற்குமேலும் சகிக்க முடியாதவராகி, நேரே தமதிருப்பிடம் சென்று கால் நீட்டிப் படுத்து நன்றாய் உறங்கிவிட்டார். பின்பு சுல்தான் ஸாலிஹின் மையித் எடுக்கப் போகிற நேரத்திலேதான் விழித்தார். இடையில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை யூகித்துக்கொண்டு, அவர் நிதானமாக தமது கடமைகளை முடித்துக்கொண்டு அப் பிரேத ஊர்வலத்தில் போய்க் கலந்து கொண்டார். சுல்தான் ஸாலிஹ் உயிருடனிருந்த போதெல்லாம் எங்ஙனம் இந்த ஜாஹிர் ருக்னுத்தீன் அவருக்கு மெய்காப்பாளராக விளங்கி வந்தாரோ, அப்படியே அவருடைய பிரேத ஊர்வலத்தின் போதும் முன்னணியில் நின்று நடத்திச் சென்றார். அப்போதெல்லாம் புர்ஜீகளுக்கு ருக்னுத்தீனைப்பற்றிச் சிறிது பொறாமை இருந்ததெனினும், இன்னம் சில நாட்கள் சென்று வளர்ந்த அவ்வளவு பெரிய அளவுக்கு அப்போது இல்லை. பின்பு மையித் அடக்கத்தை அடுத்து ரமலானும் பிறந்து, அரசவையில் துக்கமும் காக்கப்பட்டு விட்டபடியால், எல்லாம் ஓய்ந்து போய்க் கிடந்தன.

தூரான்ஷா சுல்தானாகப் பட்டம் ஏற்கப் போவதற்கு முன்தினம் புர்ஜீ மம்லூக்குகளுக்கும், புதிதாக யுத்த நிமித்தம் சிருஷ்டி செய்யப்பட்ட அவர்களுடைய அமீர்களுக்கும் ருக்னுத்தீனை இனிமேல் புகழடைய முடியாதபடி செய்துவிட வேண்டுமென்னும் தீய எண்ணம் முகடுமுட்டி விட்டபடியால், அவர்கள் எல்லாரும் கூடிக் கலந்தாலோசித்து, என்ன சதி செய்யலாமென்பதை முடிவு கட்டினார்கள். காலஞ்சென்ற சுல்தான், ருக்னுத்தீனுக்கு எல்லை கடந்த சலிகைகளை அளித்துச் சென்றதும், விதவையாய் இருக்கும் ஷஜருத்துர் இப்பால் அந்த மம்லூக் தளபதிக்கு ஆக்கமளித்து வந்ததும் புர்ஜீகளைக் கலக்கி விட்டபடியால், எப்பாடுபட்டாவது தூரான்ஷாவின் தயவையும் சலிகைகளையும் ருக்னுத்தீனுக்கு எதிராகத் தங்கள்பக்கம் திருப்பிக் கொள்ள வேண்டுமென்று முடிவு கட்டினார்கள். சாமோபாயத்தைக் கைக்கொண்டே அந்த ருக்னுத்தீனைத் திரைமறைவுள் தள்ளிவிட வேண்டுமென்றும், அது முடியாமற் போகும் பக்ஷத்தில் ஏனை மூன்று உபாயங்களையுமேனும் கடைப்பிடித்து அந்த பஹ்ரீ அமீரை ஒழித்துக் கட்டி விடுவதென்றும் அந்தக் கெட்ட எண்ணம் படைத்த புர்ஜீகள் தீர்மானித்தார்கள். அமீர் தாவூத்தைப் போன்ற அருமையான மனிதர் தோன்றிய அவ் வம்சத்தில் உதித்தவர்கள் இப்பால் இவ்விதமாகக் கெட்ட நோக்கம் கொண்டு சூழ்ச்சி செய்ய முனைந்தும் இன்னொரு விதியின் விசித்திரமாகவே காணப்பட்டு வருகின்றது.

எனவே, அந்த புர்ஜீகளுக்கு எஹூதிகளின் மனப்போக்கைப் போன்ற துர்க் குணம் ஏற்பட்டுவிட்டபடியால், நயவஞ்சகமாகத் தூரான்ஷாவைத் தங்கள் பக்கம் திருப்பிக் கொண்டு விடவேண்டுமென்றும், பஹ்ரீகளின் மீது அவர் வெறுப்புக் கொள்ளும்படி தூண்டிவிட வேண்டுமென்றும் முடிவு செய்து, ஒரு தூது கோஷ்டியாகக்கூடி, இளவரசரைச் சந்திக்கப் புறப்பட்டுவிட்டார்கள். என்னெனின், தூரான்ஷா பட்டத்தில் ஏறிவிட்ட பிறகு தம் தந்தையைப் போல் இவரும் பஹ்ரீயை ஆதரிப்பவராகவும் புர்ஜீகளை வெறுப்பவராகவும் மாறிவிட்டால், தங்கள் கதி அதோகதி ஆகிவிடுமென்பதை அவர்கள் நன்கறிவார்கள். ஆகவே, எப்படியாவது நயவஞ்சகச் செயல்கள் மூலமாக எதிர்காலத்தில் சுல்தானாகப் போகிறவர்கள் தங்கள் வலைக்குள்ளே போட்டுக்கொண்டு விடவேண்டுமென்று துணிந்துவிட்டார்கள்.

பொறாமை என்னும் மாகொடிய பிசாசின் விபரீத சக்தியை நாம் என்னென்று வருணிப்பது? அந்த புர்ஜீ வம்சத்தார் மீது அகாரணமாய்க் கொண்டுவிட்ட மனப் புழுக்கமென்னும் கொடிய புற்று நோய் ஐயூபி வம்சத்துக்கே முற்றுப்புள்ளி வைக்க ஆரம்பித்துவிட்டது என்பதைச் செல்லச் செல்லக் காணப்போகின்றீர்கள்.

அபூபக்ர் ஆதில் மிஸ்ரின் பட்டத்துக்கு வரும்போதாவது அமீர்களின் திலகம் தாவூத் பின் மூஸா என்னும் புர்ஜீ உயிர் வாழ்ந்திருந்தார். தம்முடைய இனத்தவரின் போக்குச் சரியில்லை என்பதை அவர் ஆதியிலும் சுட்டிக் காண்பித்தார்; இறுதியிலும் நிரூபித்து விட்டார். ஆனால், சுல்தான் ஸாலிஹ் அற்ப வயதில் திடுமென்று காலமாகி, சிறு யுவனாகிய தூரான்ஷா பட்டத்துக்கு வருகிற காலத்தில் அந்த அமீர் உயிர் வாழும் பாக்கியத்தைப் பெற்றில்லை. ஒருகால் அவர் இன்னம் வாழ்ந்திருப்பாரேயானால், மிஸ்ரின் சரித்திரமே வேறுவிதமாக மாறிவிட்டிருக்கலாம். தெளிந்த சிந்தையுடனிருந்து சீர் தூக்கிப் பார்த்து ஏதொன்றன் நன்மை தின்மைகளைப் பிட்டுக் காண்பிக்கும் பெற்றிபடைக்கப் பெற்றிருந்த அம் முதுப் பெரியார் காலஞ்சென்ற பின்னரும், அவரொத்த மற்ற அமீர்கள் சுல்தானால் கொல்லப்பட்ட பின்னரும், புர்ஜீ வம்சத்தில் ஒரே ஒரு சற்குணச் சிகாமணியேனும் காணப்படாமையால், இந்த இன மம்லூக்குகளும், அவர்களின் தலைவர்களான புது அமீர்களும் கொஞ்சமும் ஞானமின்றி நடந்து, அனைத்தையும் விபரீதமாகக் கெடுத்துவிட்டார்கள். அமீர் தாவூதால் ஷஜருத்துர் வளர்த்து வாலிபமாக்கி விடப்பட்டிருந்தும், அந்த ராணியார் புர்ஜீகளை வெறுத்து, பஹ்ரீகளுக்கு ஆக்கமளிக்க நேர்ந்த காரணந்தான் என்ன என்பதை உற்றுணர்ந்து ஆராய்ந்து தங்கள் கெட்ட புத்தியைச் செப்பனிட்டுக் கொள்வதை அவர்கள் கைவிட்டு, மாற்றாந் தாய்க்கு எதிராகப் புது சுல்தானைத் தாங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு விட்டால் எல்லாம் சரிப்பட்டு விடுமென்று அநியாயமாய் முடிவு செய்து கொண்டார்கள்.

இந்த விபரீத முடிவினால் என்னென்ன வின்னியாசமான நிகழ்ச்சிகள் மிஸ்ர் ராஜ்யத்திலே நடைபெற்றுவிட்டன என்பதை அடுத்த பாகத்தில் காணப் போகிறீர்கள். தீக்குணம் படைக்கப்பெற்ற அந்த புர்ஜீகள் அதிக்கிரமமான முறையில் கடைப்பிடித்த நயவஞ்சகச் சூழ்ச்சிகளின் பலனாக ஜாஹிர் ருக்னுத்தீன் வலுப்பெறவும், அவருடைய பஹ்ரீ இனத்தவர்கள் முன்னேறவும் நேர்ந்துவிட்டன. எந்த அளவுக்கு முன்னேறினர் என்றால், ஐயூபி வம்ச ஆட்சி முற்றுப்பெற்ற பின்னர், மிஸ்ரிலே பல ஆண்டுகள்வரை பஹ்ரீகளின் ஸல்தனத் வேரூன்றிப் படரத் தக்க வகையில் அற்புதமான ஆக்கத்தைப் பெற்றுக் கொண்டு விட்டார்கள்.

எந்த புர்ஜீகளின் உதவியால் மிஸ்ரின் ஸல்தனத் ஆதியில் வளர்க்கப்பட்டதோ, அதே புர்ஜீகளின் சூழ்ச்சிகளால் அஃது இறுதியில் அடியுடன் அழிக்கப்படவேண்டுமென்று இறைவன் எண்ணியிருந்தான் போலும்!

-N. B. அப்துல் ஜப்பார்

முதல் பாகம் முற்றிற்று

<<ஷஜருத்துர் முகப்பு>>  <<அத்தியாயம் 49>>

 

Related Articles

Leave a Comment