9. பெரும் புரட்சியும், ஆதிலின் வீழ்ச்சியும்

Revolt

முடிசூட்டு விழா நடந்த தினத்தில் அவ்வயோதிக அமீர் ஷஜருத்துர்ரிடம் கூறிய எச்சரிக்கை வார்த்தைகள் வீண்போகவில்லை. அவர் கூறிய முதல் தீர்க்க

தரிசனமாகிய “ஒன்று, சுல்தான் ஒழிய வேண்டும்!” என்னும் விஷயம் வெகு விரைவிலேயே மெய்யான காட்சியாக மிளிரத் தொடங்கியது. ஆதில் சுல்தான் தாமாகவே தமது புதைகுழியைத் தோண்டிக்கொண்டிருந்தார். அவருக்கு அரசாங்கத்தைப் பற்றியோ குடிமக்களின் நலன் பற்றியோ கவலையென்பதே சிறிதுமில்லை. உலகத்தில் பிறந்து, அதிலும் சுல்தானுக்கு மகனாய்ப் பிறந்து, இப்போது அரியாசனத்தின்மீதே அமரும் சாட்சாத் சுல்தானாக ஜொலிக்கும் அவர், சகலவித சுகபோக சௌபாக்கிய வைபவங்களுடன் எவற்றையெல்லாம் அனுபவிக்க இயலுமோ, அவற்றை எல்லாம் தட்டுத்தடங்கலின்றி அனுபவிப்பதை விட்டுவிட்டு, ராஜ்யபாரத்தைத் தலைமேற் போட்டுக்கொண்டு உள்ளத்தையும் சித்தத்தையும் சீர்குலைத்துக் கொள்வதாவது? என்ற ஞானம் பிறந்துவிட்டது!

வேலையற்ற பைத்தியக்காரரல்லவோ “ஐயோ, என் மக்களின் நலன்! அந்தோ, என் ராஜ்யத்தின் வளர்ச்சி!” என்று சதாசர்வகாலமும் மூளையைக் குழப்பிக் கொள்வார்கள்! இஃதென்ன பித்துக்கொள்ளித்தனம்! ஹாய்யாக, சுல்தானாக இருந்துகொண்டு, அமீர்கள் நீட்டிய இடத்திலே கையொப்பத்தைப் போட்டுவிட்டு, உல்லாசமாக உலக சுகத்தை அனுபவிப்பதற்காகத்தான் தாம் அரியாசனம் ஏறியிருப்பதாக அவர் எண்ணிக்கொண்டார்; எண்ணிக்கொண்டதுடன் நிற்கவில்லை. உடனே தம் கொள்கைகளை நடைமுறையில் கொண்டுவந்தும் விட்டார்!

மிஸ்ர் தேச மக்கள், ஸலாஹுத்தீன் ஐயூபி, அவர் தம்பி முதலாவது ஆதில், இவருடைய மைந்தர் காமில் முதலிய வலுவீர சிங்கங்களின் ஆட்சியையெல்லாம் மிகவும் மனநிறைவுடன் அனுபவித்து வந்திருக்க, இந்தச் சிறு சுண்டெலியாகிய இரண்டாவது ஆதிலின் பெயரைச் சொல்லிக்கொண்டு அதிகாரம் செலுத்தும் அமீர்களுக்கு அடி பணிவரோ? அதெப்படி முடியும்? ஜன்னி கண்டவர்களுக்கு ஜுரம் அத்துமீறி ஏறிவிடுவதைப்போல் இந்த ஐயூபி ஆதிலின் அநியாய ஆட்சி மிஸ்ர் ஸல்தனத்திலுள்ள எல்லாரின் உள்ளத்துள்ளும் கடுங் கசப்பையே உண்டுபண்ணி விட்டது. இயற்கையாகவே, மக்கள் மன்னன்மீது கொண்ட ஆத்திரத்தை அமீர்களின்மீதே பிரயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். அன்று தாவூத் கூறிய மற்றொரு தீர்க்கதரிசனமும் மெய்யாகிக்கொண்டே வந்தது. நிலைமை நாளுக்கு நாள் எவ்வளவு மோசமாகிக்கொண்டு வந்ததென்றால், சுல்தானின் கேளிக்கையாட்டங்கள் எந்த அளவுக்குத் தினமும் பெருகி வந்தனவோ, அதனினும் பதின்மடங்கு அதிகமாக பொதுமக்களின் அதிருப்தி பொங்கிக்கொண்டு போயிற்று. அவர்களுடைய அதிருப்தி வளர வளர, அமீர்கள் தங்கள் தலையை வெளியே காண்பிப்பதும் அதிக அபாயகரமாகவே போய்க்கொண்டிருந்தது.

அந்த அபாயம் எத்துணைப் பயத்தை அந்த அமீர்களின் உள்ளத்துள் ஊட்டிவந்ததென்றால், ஹிஜ்ரீ 637-ஆம் ஆண்டின் ரமலான் மாதத்தில் அவர்கள் இரா வேளையில் தராவீஹ் தொழுது கொள்ளக்கூடப் பள்ளிவாசல்களுக்குப் போக முடியாமற் போய்விட்டது. நாம் முன்னமோரிடத்தில் கூறியிருப்பதேபோல், இந்த அமீர்கள் எதுவரை பொதுமக்களிடம் ஒழுங்காய் நடந்துகொண்டார்களோ, அதுவரை கௌரவமாகவே இருந்து வந்தார்கள்; ஆனால், எந்தச் சமயத்தில் அவர்கள் தங்களுடைய முதிர்ந்த அமீரின் நல்லுபதேசத்தைக்கூடச் செவியேற்காமல் தங்களிஷ்டப்படி அபூபக்ரை அரசராக்கிக் கொண்டார்களோ, அப்போதே அவர்கள் தங்கள் உயிரைக்கூடக் காப்பாற்றிக் கொள்ள முடியாத அபாயத்துக்கு அஞ்சிப்போய் வீட்டுக்குள்ளே பதுங்கிக் கொண்டார்கள்.

இந்த மாதிரியான நிலைமை எத்தனை நாட்களுக்குத்தாம் நீடித்திருக்க முடியும்? உடனே எல்லா அமீர்களும் ரகசியக் கூட்டம் கூட்டினார்கள். இப்போது நிலைமையை எப்படிச் சமாளிப்பதென்று அவர்கள் புத்தியில் ஒன்றுமே புலனாகவில்லை. இறுதியாக, தாங்களெல்லாரும் சேர்ந்து கூடி, அந்த மதிப்புக்குரிய பெரியார், கண்ணியமிக்க தாவூத் அவர்களின் பேச்சுக்கும் போதனைகளுக்கும் செவிசாய்க்காமற் போன பெரிய முட்டாள் தனத்தாலேதான் இம்மாதிரி ஏற்பட்டுவிட்டதென்று முடிவு செய்து, முதலில் அவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டுமென்றும், பிறகு அவர் உபதேசிக்கிறபடியே நடந்து கொள்ள வேண்டுமென்றும் ஏகமனதாக முடிவு செய்தனர்.

மறுநாள் மாலையில் அமீர் தாவூத் தமது தொழுகை அறைக்குள் மக்ரிப் தொழுதுவிட்டு. அங்கேயே அமர்ந்திருந்தார். அப்போது ஷஜருத்துர் ஓட்டமாக ஓடிவந்தாள். மூச்சு இரைக்க இரைக்க, “தாதா! எல்லா அமீர்களும் சேர்ந்து கூட்டமாகத் திரண்டு நம் மாளிகையின் பக்கமாக விரைந்து வருகிறார்கள். நான் இப்போதுதான் உப்பரிகையிலிருந்து அவர்களைப் பார்த்தேன்,” என்று கூறினாள்.

இதைக் கேட்டு ஆச்சரியமுற்ற அவர், “அவர்கள் இங்கேயா வருகிறார்கள்? ஏன் வருகிறார்கள்?” என்று கேட்டார். அவள் முகமும் கலவரக் குறியையே காட்டிற்று. “சரி… வரட்டும். வந்தால் தெரிகிறது,” என்று தம்மையே தேற்றிக் கொண்டார்.

பிறகு ஷஜருத்துர்ரை நோக்கி, தம்முடைய விசேஷ உடைகளைக் கொண்டுவரச் சொல்லி, எழுந்து நின்று தம்மை அலங்கரிக்க ஆரம்பித்தார். ஏனெனில். மதிப்புக்குரிய பெரிய மனிதர்கள் அதிகாரிகளைக் காண வரும்போது, அவ்வதிகாரிகள் தங்களுக்குரிய பிரத்தியேக உடுப்புடனே இருக்க வேண்டுமென்பது எந்நாட்டிலுமுள்ள சம்பிரதாயமாகும். சம்பிரதாயங்களை மிகவும் ஒழுங்கு தவறாமல் கடைப்பிடிக்கிற தாவூதும் அந்த வழக்கப்படி “அமீரெ முஅல்லம்” என்னும் அந்தஸ்துக்குரிய தமது பிரத்தியேக உடுப்பை மாட்டிக்கொண்டார். அவர் உடுத்து முடிவதற்கும், வாயிற் சேவகன் வந்து, அமீருல் முஅல்லமைக் காண ஏனை அமீர்கள் வந்து காத்துக்கொண்டிருக்கின்றனர் என்று அறிவிப்பதற்கும் சரியாயிருந்தது.

“நமது சபா மண்டப ஹாலில் இருக்கிற எல்லா விளக்குக்களையும் கொளுத்தி வை; நான் இதோ வந்துவிட்டேன்,” என்று தாவூத் அந்தச் சேவகனை அனுப்பிவிட்டு, ஷஜரைப் பார்த்து, “என் கண்மணி! நான் அந்த அமீர்களிடம் என்ன பேசப்போகிறேன் என்பதை நீ அதிக ஆவலுடன் தெரிந்துகொள்ள விழைகிறாய் என்பதை உன் முகத்தோற்றம் வெளிப்படுத்துகிறது. நான் உன்னை இந்த விஷயத்தில் கவலையுறச் செய்ய நாடவில்லை. எனவே, அந்தச் சபா மண்டப ஹாலின் கீழ்ப்புறமாயிருக்கிற மேல்மாடி வெளியறையில் நீ அமர்ந்து கொண்டு, கீழே நடப்பவற்றைக் கவனி. அவர்கள் பேசிவிட்டுப் போன பின்னர் உனக்கு ஏதும் சந்தேகம் தோன்றினால், நான் தெளிவிக்கின்றேன்,” என்று புன்முறுவல் பூத்த வதனத்துடன் புகன்றுவிட்டு அகன்றார்.

சபா மண்டபத்தில் எல்லா அமீர்களும் நின்றுகொண்டிருந்தார்கள். நல்ல பிரகாசமுள்ள தீபாலங்காரத்துடன் காட்சியளித்த அம்மண்டபம் மேலேயிருந்து கவனித்த ஷஜருத்துர்ருக்குப் பிரமிப்பூட்டியது. நம்முடைய கிழஅமீர் சற்றுக் கூனல் விழுந்த தம் முதுகைக் கூடியவரை நிமிர்த்திக்கொண்டு, நிதானமாக அந்த ஹாலுக்குள் நுழைந்தார். அங்கிருந்தோர் அனைவரும் ஏககாலத்தில் “அஸ்ஸலாமு அலைக்கும், யா அமீருல் முஅல்லம்!” என்று கூறினார்கள். அவரும் பதில் ஸலாம் சொல்லிவிட்டுத் தமது ஆசனத்தில் ஏறி அமர்ந்தார். ஏனையவர்களும் அமர்ந்தார்கள்.

“நீங்கள் அனைவரும் இந்நேரத்தில் என்னைத் தேடி இங்கு வந்திருக்கும் காரணம் என்னவோ?” என்று அவர் கம்பீரமாகக் கேட்டார்.

பதில் வரவில்லை; எல்லாரும் வாய் புதைந்து வாளா இருந்தனர். அப்பொழுது அவர்களிலிருந்து ஒருவர் எழுந்து, “யா அமீர்! நாங்கள் அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ, வேண்டுமென்றோ அறியாமையாலோ தங்களை ஏதும் அவமானப் படுத்தியிருந்தால், அல்லது தங்கள் உள்ளம் நோவடையும் வண்ணம் எதையாவது செய்திருந்தால், அதை அல்லா(ஹ்)வுக்காகவும், அவனுடைய ரசூலுக்காகவும் பிழை பொறுக்கும்படி தங்களிடம் வேண்டிக் கொள்ளவே நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம்,” என்று கூறினார்.

“இதற்காகவா நீங்களெல்லோரும் சேர்ந்து வரவேண்டும்? நான் ஒன்றும் உங்கள்மீது குறையொன்றையும் பாராட்டவில்லையே! இந்த உலகத்தில் குற்றமே இழைக்காத மனிதர் எவரிருக்கிறார்? நான் ஒன்றையுமே விகற்பமாகக் கொள்ளவில்லையே! எதைச் செய்தால் ஸல்தனத்துக்கு கேடுகாலம் சம்பவிக்குமென்று நான் கருதினேனோ, அதைச் செய்யவேண்டாமென்று சொன்னேன். ஆனால், நீங்கள் என் அபிப்ராயத்துக்கு மாறான கொள்கையைக் கொண்டிருந்தபடியால், இஸ்லாமிய ஜனநாயக முறைமைப்படி, பெரும்பான்மையினராகிய உங்களிஷ்டத்துக்கு விட்டுவிட்டேன். இப்போது நீங்களெல்லோரும் என் கருத்துத்தான் நியாயமானதென்று உணர்ந்துகொண்டால், அதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். இதற்காக யார் யாரை மன்னிப்பது?”

ஒரு மனிதனை நாம் வெகு சுலபமாகப் “பெரிய மனிதனாக” ஆக்கிவிடலாம். ஆனால், அவன் அந்த யோக்கியதையைப் பெற்றுக்கொள்ள அருகதையுள்ளவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அருகதையையே அமீர் தாவூத் பெற்றிருந்தாரென்பதை அவருடைய இந்தப் பதில் நிரூபித்து, மற்ற அமீர்களின் நெஞ்சைப் பிளந்துவிட்டது.

அப்போது அந்தத் தூதுகோஷ்டிக்குத் தலைமை தாங்கிவந்த அமீர் எழுந்து நின்று, பேசுகிறார்:- “எங்கள் மதிப்புக்குரிய கண்ணிய சீலரே! கசப்பான மருந்தைக் கொடுத்தபோதினும், நோயைத் தீர்த்துக்கொள்ள மருத்துவரிடம் எப்படி ஒரு நோயாளி போய்த்தான் தீரவேண்டுமோ, அதைப்போல இன்று மிஸ்ரின் ஸல்தனத்துக்கும், அமீர்களாகிய நமக்கும், பொதுமக்களுக்கும் நம்முடைய சுல்தானுல் மலிக்குல் ஆதில் என்பவரால் இழைக்கப்படும் தீங்குகளைத் தவிர்த்துக்கொள்ள என்ன செய்யலாம் என்பதைத் தங்களிடம் கேட்டுப் போகவே நாங்கள் இதுசமயம் இங்கு வந்து, தங்கள்முன் நிற்கிறோம். தாங்கள் எதைச் சொன்னாலும், அதை நாங்கள் தவறாமல் செய்வோம் என்பதையும், எதைக் கேட்டாலும் தவறாமல் கொடுப்போம் என்பதையும், என்ன கட்டளையையிட்டாலும் முற்றமுற்றக் கீழ்ப்படிவோம் என்பதையும் தங்கள் திருச்சமூளகத்தில் மிகத் தாழ்மையாய் விண்ணப்பித்துக் கொள்கிறோம். இன்று இஸ்லாமே இந்நாட்டில் ஆபத்துள் சிக்கித் தவிக்கிறது; முஸ்லிம்களே பெரிதும் துயருறுகின்றனர்.

“இப்போது நாங்களெல்லாம் இரா வேளைகளில் மட்டும் வெளியே தலைநீட்டாதிருக்கிறோம். நிலைமை முற்றிப்போனால், இனிமேல் பகலில்கூட வெளியே வரமுடியாதென்று அஞ்சுகிறோம். வெள்ளிக்கிழமை ஜுமுஆத் தொழுகைகளின்போதுகூட எங்களால் மனநிம்மதியுடன் மஸ்ஜிதுள் அமர்ந்திருக்கத் தைரியம்கொள்ள முடியவில்லை. பலவீனமான சுல்தானை அரியணைமீது அமர்த்தினால், நாங்கள் அதிக பலமடைவோமென்று முன்பு கண்ட கனவு எங்கள் கழுத்துக்கே கத்தியாகப்போய் முடிந்திருக்கிறது. எங்களுக்கு இன்னது செய்வதென்றே ஒன்றும் புலனாகவில்லை. முன்பு தங்களை நாங்கள் பகைத்துக் கொண்டதாலேயே இவ்விபரீதங்களெல்லாம் முளைத்திருக்கக் கூடுமோவென்று அஞ்சியே முதலில் தங்களிடம் மன்னிப்புக்கேட்க இங்கே வந்தோம். நாங்கள் அறியாமையாலும் ஆழச் சிந்தியாமையாலும் சிறுபிள்ளைத்தனமாய்ப் புரிந்துவிட்ட இவ்விபரீதச்செயலை எப்படிச் செப்பனிட்டுச் சீர்திருத்தி, ஸல்தனத்தையும், மக்களையும், எங்களையும் காப்பாற்றிக்கொள்ளலாம் என்பதை வயதிலும், கல்வியிலும், அறிவிலும், அனுபவத்திலும் கரைகடந்த பெரியாராகிய தாங்களே எங்களுக்கு அறிவிக்க வேண்டுமென்று மிகவும் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம்.”

இந்நீண்ட கோரிக்கையை அமீர் தாவூத் ஊன்றிச் செவிமடுத்தார். வயதின் காரணமாகச் சுருக்கங்கள் பல நிறைந்த அந்த முதியவரின் முகத்தில் சஞ்சலக்குறிகள் தோன்றின. அபூபக்ரை அரசராக்குவது ஆபத்தை விளைக்குமென்பதை மட்டும் முன்பு அவர் கூறினாரேயன்றி, இம்மாதிரி ஆபத்துப் பெருகியபின்னர் எல்லா அமீர்களும் சேர்ந்து வந்து தம்மிடம் இந்தக் கோரிக்கையைச் சமர்ப்பிப்பார்களென்று அவர் சிறிதுமே எதிர்பார்க்கவில்லை. எனவே, அவருக்குத் திடீரென்று என்ன சொல்வதென்றே புலனாகவில்லை. நரைத்துச் சுருண்டிருந்த நீளமான தாடியை அவர் மிகவும் மெதுவாக இரண்டு விரல்களால் மட்டுமே இழுத்து இழுத்து விட்டுக்கொண்டிருந்ததிலிருந்து அவர் மூளை எவ்வளவு ஆழமாய்ச் சிந்தனை செய்தது என்பது நன்கு புலனாயிற்று. இப்படிச் சுமார் பத்து நிமிஷம் கழிந்தது.

“பொதுமக்கள் சுல்தானை மட்டும் வெறுக்கிறார்களா? அல்லது எல்லா அமீர்களையுமே வெறுக்கிறார்களா என்பதை நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்களோ?” என்று அவர் நிதானமாய்க் கேட்டார்.

“ஜனங்களுக்கு அந்த மன்னர்மீதிருக்கிற மிகப்பெரிய அதிருப்தியின் காரணமாகவே அவர்கள் எங்களையும் வெறுக்கிறார்களென்றே நினைக்கிறோம். அந்த மலிக்குல் ஆதிலை வீழ்த்திவிட்டால், பிறகு நிலைமையைச் சுலபமாகச் சமாளித்துவிடலாமென்று நம்புகிறோம்,” என்று அத் தூதுகோஷ்டியின் தலைவர் பதிலளித்தார்.

“அதுவும் சரிதான். இப்போது அந்த அபூபக்ரின் தம்பி ஸாலிஹ் எங்கேயிருக்கிறார் என்பது தெரியுமா? நான் சென்ற சிலகாலமாக அரசியல் விஷயத்தைப்பற்றி எதையுமே தெரிந்து கொள்ளாமலிருக்கிறேன்,” என்றார் தாவூத்.

”ஏன், அவர் இங்கேயே அரண்மனையில்தான் இருக்கிறார்.”

“அவர் சுல்தானாவதற்கு விரும்புவாரல்லவா?”

“ஏன், நாமெல்லாரும் கேட்டுக்கொண்டால், அவர் மறுக்க மாட்டாரென்றே கருதுகிறோம். ஆனால், அண்ணன் பட்டத்தில் இருக்கும்போது, அவர் எப்படி அப் பதவியை அடைய முடியும்?”

“அதென்ன பிரமாதம்! அபூபக்ரை நீங்களாக நியமித்தீர்கள்; இப்போது நீங்களேதாம் அவரை வீழ்த்தவேண்டும். அரியாசனத்தை இவ்விதமாகக் காலிசெய்து விட்டால், அந்த ஸ்தானத்தில் ஸாலிஹ் அமர்கிறார்!”

“அபூபக்ர் ஆதிலை எப்படி வீழ்த்துவது? அதைக் கேட்கவேயன்றோ நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்?”

”ஏன், பொதுமக்களெல்லோருமே அவரை வெறுப்பதாகக் கூறினீர்களே? அவர்களுடைய உதவியை வைத்துக்கொண்டால், விஷயத்தைச் சுலபமாக முடித்துவிடலாமே! இதில் என்ன சங்கடமிருக்கிறது?”

“அப்படியானால், பெரும் புரட்சியையும் கலகத்தையும் கிளப்பிவிட வேண்டுமென்றா தாங்கள் கருதுகிறீர்கள்?”

“நானொன்றும் அப்படிச் சொல்லவில்லையே! சாத்விகமான முறையிலேயே செய்யலாம். ஓர் உயிர்கூடச் சேதப்படாமல் அபூபக்ரையும் வீழ்த்திவிடலாம்; ஸாலிஹையும் சுல்தானாக்கிவிடலாம். அப்படி முடியாத அளவுக்கு விஷயம் முற்றிப்போயிருந்தால், வேரூன்றிய பருமரத்தைக் கோடரியைக் கொண்டுதானே வெட்டியெறிய வேண்டும்?”

தாவூத் என்ன கருத்துடன் இச்சூசகமான வார்த்தைகளைப் பிரயோகித்தாரென்பதை அந்த எல்லா அமீர்களும் நன்றாய் விளங்கிக்கொண்டார்கள். பின்பு சற்று நேரத்தில் அவர்களெல்லாரும் அங்கிருந்து அனுமதிபெற்று அகன்றுவிட்டார்கள்.

அடுத்தநாள், அரண்மனைக்குள் ஒரே கலகம்! காஹிராவிலிருந்த மக்களுக்கொன்றும் தலைகால் புரியவில்லை. கலகச் செய்தி காட்டுத்தீயேபோல் எல்லாருடைய காதிலும் எட்டி விட்டபடியால், கண்மூடிக் கண்திறப்பதற்குள்ளே எல்லா மக்களும் சுல்தானின் அரண்மனையைச் சூழ்ந்துகொண்டு விட்டார்கள். அக் கலகக் கூட்டத்துக்கு அமீர்களே முன்னணியில் கொடிபிடித்துக் குதிரைகள்மீது ஆரோகணித்திருந்தனர். “ஆதில் அபூபக்ர் வீழ்க! அக்கிரம ஆட்சி ஒழிக!” என்ற கோஷம் வானைப்பிளந்தது.

அரண்மனையின் வெளிவாயிற் கதவும் ஜன்னல் கதவுகளும் இறுக மூடப்பட்டிருந்தபடியால், கலகக்காரர்கள் தாரளமாகக் கல்மாரியைப் பொழிந்தார்கள். ஜனநெரிசல் கடல் பொங்கியதுபோல் நிமிஷத்துக்கு நிமிஷம் அலை மேல் அலையாய்ப் பெருகிக்கொண்டேயிருந்தது. அவரவரும் தத்தம் கையிலகப்பட்ட தடியையும் தாம்பையும், மண்வெட்டியையும் கோடாரியையும் தாங்கிக்கொண்டு அவ்வரண்மனையைச் சூழ்ந்து முற்றுகையிட்டுவிட்டனர்.

அவர்களிடும் கோஷத்தால் வானமே குமுற எதிரொலி கிளப்பிற்று. தங்களுடைய கோபத்துக்கு இலக்கான சுல்தானை வீழ்த்துவதற்கு அமீர்களே தலைமைவகிக்க ஆரம்பித்து விட்டார்களென்பதைக் கண்டுகொண்ட பொதுமக்கள் சந்தோஷத்தால் துள்ளிக்குதிக்கத் துவங்கிவிட்டார்கள். அரசப்புரட்சிக் கலகமென்றால், அது எவ்வளவு பயங்கரமான காட்சியை அளிக்குமோ, அவ்வளவு அச்சமூட்டத்தக்க அம்சங்களையும் இந்தக் கலகமும் பெற்றிருந்தது. கூட்டத்தின் நெருக்கடி தாளாமல் நசுங்கி மாண்டவர் பலபேர்! மயங்கி வீழ்ந்தவர் எழுந்து நிற்குமுன் அவரை மேலும் மிதித்துத் தொகைத்தவர் பலபேர்! அரண்மனைக் கதவை முட்டித் திறப்பதற்காக உயிரைத் துறந்தவர் எத்தனையோ பேர்! குதிரைகளின் குளம்படியில் சிக்கி மாண்டவர் பலபேர்! தீவட்டிகளையும், ஈட்டிகளையும், பெருந்தடிகளையும், குறுந்தடிகளையும் காற்றில் பறக்கவிட்டவர் பலபேர் – சுல்தானின் அரண்மனை இந்த மாதிரியான கலகக்கூட்டத்தினர் மத்தியிலே பரிதாபகரமாய் நின்றுகொண்டிருந்தது.

இந்த நிலைமை நெடுநேரம் நீடித்திருக்கவில்லை. சுல்தானின் சில மெய்க்காவலர்களைத் தவிர்த்து வேறெந்தப் படைபலமும் அவ்வரண்மனைக்குக் காவலில்லாமையால், திரண்டு வந்த ஜனசமுத்திரத்துக்கு முன்னே அம் மாளிகை தூசிக்குச் சமமாகவே இருந்தது. கோபுரக்கதவுகள் நிலையுடன் பெயர்த்தெறியப்பட்டன; கிடிக்கிகள் கம்பிகளுடன் பிடுங்கி எறியப்பட்டன. வெளியே இருந்த அம் மாபெருங் கூட்டம், “புரட்சி ஓங்குக!” என்ற பேரிரைச்சலுடன் ஏககாலத்தில் உள்ளே நுழையத் தொடங்கியது; அணைக்கட்டின் மதகுப்பலகையைத் தூக்கியதும் ஆற்றுவெள்ளம் பாயுமே, அதுபோல் நுழைந்தனர் அனைவரும்.

அடுத்த நிமிடத்தில் அபூபக்ர் என்னும் இரண்டாவது ஆதிலின் மேனிமட்டுமே மிகுந்திருந்தது; ஆவி போன இடம் தெரியவில்லை!

(தொடரும்)

மறுபதிப்பு: சமரசம் – 16-31 டிசம்பர் 2011

<<அத்தியாயம் 8>>     <<அத்தியாயம் 10>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

 

Related Articles

Leave a Comment