10. புதிருக்குமேல் புதிர்

Balcony

ஹிஜ்ரீ 637-ஆம் ஆண்டின் துல்கஃதா மாதத்தில் – (அதாவது, கி.பி. 1240 ஆம் ஆண்டில்) முன்னம் குறிப்பிட்ட பெரும் ராஜப்புரட்சிக் கலகம் நிகழ்வுற்றது.

அபூபக்ர் ஆதில் அப்புரட்சிக் கலகத்தில் கொல்லப்பட்டு விட்டதால், அந்த அரியாசனத்தின்மீது அவருடைய தம்பியாகிய ஸாலிஹ் ஐயூபி சுல்தானாக அமர்த்தப்பெற்றார். அவர் அந்த ஸ்தானத்துக்கு உயர்த்தப்பட்டதற்கெல்லாம் காஹிராவின் அமீர்களேதாம் காரணமென்றாலும், சிறப்பாக நம் கிழஅமீர் தாவூதே முதல்காரணமென்பதை யார் மறுக்க முடியும்?

கலகம் ஒருவாறு ஓய்வதற்குள்ளே அன்று அந்திமாலைப்பொழுது வந்துவிட்டபடியால், ஸாலிஹ் தாம் பட்டமேற்கும் விழாவையும் சிறப்பான பெருவிருந்தொன்றையும் மறுநாள்தான் நடத்தவேண்டுமென்று அமீர்கள்மூலம் பிரகடனப்படுத்திவிட்டு, தம்முடைய அண்ணனது பிரேதத்தை அக்கணமே நல்லடக்கம் செய்யவும் ஏற்பாடு செய்துவிட்டார்.

காஹிராவில் இதற்குமுன்னம் எத்தனையோ அரசர்கள் காலஞ்சென்றிருக்கிறார்கள். ஆனால், எந்தக் காலத்திலும் இத்தகைய இரகசியமான பிரேத அடக்கச் சடங்கு நடந்தேறியதேயில்லை. மக்களின் மாபெரும் வெறுப்புக்கு ஆளான அபூபக்ர் கொன்று ஒழிக்கப்பட்டதைப்பற்றி எவருக்குக் கவலை? அல்லது வருத்தம்? எனவே, அழுவாரின்றியும், பிரேத அடக்கத்துக்கு முன்னே நிகழ்த்தப்படும் ஜனாஸா  தொழுகைக்கு வருவாரின்றியும், யாதொருவித அரச மரியாதையும் செலுத்தப்படாமலே அபூபக்ரின் பிரேதம் மண்ணுக்குள்ளே மறைக்கப்பட்டது. எனினும், ஸாலிஹ் எவ்வளவோ மனஅமைதியுடன் அதுவரை கல்லாய்ச் சமைந்திருந்தும், இறுதிநிமிடத்தில் தம்மையறியாமலே தாரைதாரையாக அவலக்கண்ணீர் சொரியத் தலைப்பட்டார். பொதுமக்களின் மனவெறுப்புக்கு ஆளாகும் மன்னனின் இறுதிக்காலம் எவ்வளவு அச்சமும் திடுக்கமும் ஊட்டுவதாய் இருக்கிறதென்பதை நினைத்து நினைத்து அவர் அயர்வுற்றார். ஆயின், அக் கவலை நீடித்து நிற்கவில்லை.

பொதுமக்களும் அமீர்களும் தங்கள் தங்கள் கடமையைச் செலுத்தி, கெடுங்கோலராகிய ஆதில் மன்னரை வீழ்த்தியதும், அந்த ஸல்தனத்தில் அவருடைய தம்பி ஸாலிஹை அமர்த்தியதும் மிகப்பெரிய வெற்றியென்றே கருதிப் பெரிதும் திருப்தியுற்றுவிட்டனர். கலகம் நிகழ்ந்து சிலநாட்களுக்குள்ளே அவர்களும் எல்லாவற்றையும் மறந்தேபோய்விட்டனர். பெரும் புயலுக்குப் பின்னே சாந்தமான அமைதி ஏற்படுவது இயற்கைதானே!

ஆனால், அந்தப் புரட்சிக் கலகத்தில் உயிரிழக்க நேர்ந்த அனைவருள்ளும் ஒருவரை மட்டும் நம்மால் இங்குக் குறிப்பிடாதிருக்க இயலவில்லை. அந்த ஸாமுத்திரிகா லக்ஷண நிபுணர் அஜீஜ் தீட்டிய திட்டங்களுக்கு இணங்கி ஷஜருத்துர்ரை அக் கிழஅமீருக்குப் பத்தாயிரம் தீனார்களுக்கு அடிமையாக விற்றுவிட்ட முஹம்மத் யூசுப் பின் ஈஸா அன்றைக்குப் போய் வீட்டில் படுத்தவர் இறுதிவரை எழுந்திருக்கவேயில்லை. ஏனெனில், பரம்பரையாகவே அடிமை வியாபாரம் செய்து வருகிறவர்களுள் எவரேனும் ஷஜருத்துர்ரை இந்த மாதிரி மேன்மையாக வளர்த்து நல்ல லாபத்துக்கு விற்றிருந்தால், அவர் நல்ல மனத்திருப்தியுடனே சந்தோஷமாகக் காலங்கழித்திருப்பார்.

ஆனால், தம்முடைய சொந்த மகளாகவே பாவித்து, தாம் முன்னே அறியாமையால் இழைத்துவிட்ட பெருங் குற்றத்துக்குப் பிராயச்சித்தமாக ஷஜருத்துர்மீது பேரன்பைப் பொழிந்து, தமது சுகத்தையெல்லாம் அறவே தியாகம் செய்த உத்தம புருஷராகிய யூசுப் அவளுடைய பிடிவாத குணங்களுக்காகவும், அஜீஜின் வற்புறுத்தல்களுக்காகவும் இணங்கிப்போய் அந்த அறிவின் அளப்பருங் களஞ்சியத்தை, குணத்தின் குன்றை, ஞானத்தின் ஜோதியைத் தங்கதீனார்களுக்கு மாற்றுப்பொருளாய் விற்க நேரிட்டுவிட்டது அவர் குற்றமா? பிரிவாற்றாமையின் பெருந்துயராலும், மனநிம்மதி சற்றும் இல்லாமையாலும் அவர் தீராத நோயில் வீழ்ந்துவிட்டார்.

ஆனால், அவர் மிகவும் பலவீனமுற்றுப்போய் இளைத்துக் களைத்திருந்தபோது, ஒருநாள் வீதி நெடுக ஜனங்கள் பெருங்கூச்சலிட்டுக்கொண்டு திரண்டோடுவதைக் கண்டார். படுக்கையை விட்டுத் தட்டித்தடுமாறிக் கொண்டே வாயிலருகே வந்து, விஷயம் என்னவென்று விசாரித்தார். ஓடுகிறவர்கள் இன்னம் வேகமாக ஓடிக்கொண்டிருந்தார்களேயல்லது, அந்த நோயாளி மனிதர் கெஞ்சிக் கேட்கும் கேள்விகளுக்கு ஒருவரும் நின்று பதில் சொல்லவில்லை. எனவே, அவர் வாயிற் படியைவிட்டுக் கீழே மெல்ல இறங்கிப் பரிதாபகரமாக ஆவல் நிறைந்த வதனத்துடன் ஒருவரை நெருங்கி, விஷயம் என்னவென்று கேட்டார். அந்த மனிதனோ, வேகமாய் நடந்து கொண்டே, “அரண்மனையில் கலகம்! அமீர்களையும் சுல்தானையும் ஒழிக்கப்போகிறோம்!” என்று மிகுந்த காரசாரமான ரோஷத்துடனே கத்திக்கொண்டே சென்றான்.

“அரண்மனையில் கலகமா? அமீர்களை ஒழிக்கப்போகிறார்களா? என் ஷஜருத்துர்? என் ஷஜருத்துர்!” என்று பித்துப் பிடித்தவனேபோல் அலறிக்கொண்டே ஓடினார் யூசுப். ஆனாலும், பல மாதங்களாக மனவேதனையால் உருகிப்போயிருந்தவர் எப்படி ஓடமுடியும்? ஒருசில கெஜதூரம் நடப்பதற்குள் அவர் வீதியில் இடறி விழுந்துவிட்டார். கீழே விழுந்தவரை அந்த ஆத்திரம்பொங்கிய கூட்டத்தினருள் எவரே கவனிக்கப் போகின்றார்! பின்னால்வந்த பெருங்கூட்டத்தின் காலடிகளில் அவர் அகப்பட்டுத் துவையலாகிப் போனார். ஷஜருத்துர்ரின் ஞாபகத்தைத் தவிர்த்து வேறு எந்த எண்ணமும் இல்லாமலே யூசுபின் ஆவி ஆண்டவனிடம் அன்றே போய்ச் சேர்ந்துவிட்டது.

ஷஜருத்துர்ரின் வளர்ப்புத் தந்தையின் கதி அப்படிப் போய் முடிந்தது!

அமீர்களின் தூதுகோஷ்டி சென்ற பின்னர் அந்தக் கிழ அமீர் தாவூதின் மாளிகையில் என்ன நடந்ததென்பதைக் கவனிப்போம்:-

தாவூத் கட்டளையிட்ட வண்ணம், ஷஜருத்துர் மாடியின் மீதிருந்தே கீழே சபாமண்டப ஹாலில் நிகழந்த வைபவங்களைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தாள். அவள் அன்றுவரை அத்தனை அமீர்களையும் ஒரே கூட்டமாகக் கண்டதேயில்லை. அன்றியும், ஸல்தனத்தைப்பற்றிய மிக முக்கியமான விஷயத்தைப் பற்றியே அன்று அக்கூட்டம் தீர்மானிக்க வேண்டியதிருந்ததால், அவளுக்கிருந்த ஆவலை அளந்து வருணிப்பானேன்? நடந்த விஷயங்களையெல்லாம் ஊக்கமாய் முழுவதும் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, அப்பாலே எழுந்து சென்றாள். அவள் மூளையில் அநேக விஷயங்களுக்கு அர்த்தமே விளங்கவில்லை. அதிலும், சிறப்பாக, அக் கிழவர் கூறிய இறுதி வார்த்தைகளுக்குள் என்ன கருத்துப் பொதிந்திருக்கிறதென்பதையும் அவளால் அறிந்துகொள்ள இயலவில்லை.

அன்றிரவு அமீர் தாவூத் படுக்கைக்குப் போகுமுன்னர் ஷஜருத்துர் வழக்கப்படி அவருக்குப் பணிவிடைகள் செய்ய வந்தாள்.

“குழந்தாய்! பார்த்தாயா? இன்று நடந்த கூட்டத்தின் முடிவு என்னவாகப் போகிறதென்பதை நீ தெரிந்துகொண்டாயா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

“ஏதோ ஒருவாறு புரிந்துகொண்டேன், தாதா. கூடிய சீக்கிரமே எல்லா அமீர்களுமாகச் சேர்ந்து திரண்டு நம் சுல்தான் ஆதிலை வீழ்த்தப் போகிறார்களென்பதை நான் விளங்கிக் கொண்டேன். ஆனால், ஒருசில விஷயங்கள் மட்டும் எனக்குப் புலனாகவில்லை.”

“என்ன விஷயங்கள்?”

“தங்கள் உரையாடலின்போது அந்த அமீர்களைப் பார்த்து, ‘ஸாலிஹ் இப்போது எங்கிருக்கிறா’ரென்று கேட்டீர்களே, அந்த ஸாலிஹ் யார்?”

“ஓ, அவரா? அவர்தாம் நம் முந்தைய சுல்தான் அல்மலிக்குல் காமிலின் இளைய குமாரர்; இப்போது இருக்கிற அபூபக்ர் ஆதிலின் சொந்தத் தம்பி. நான் ஸாலிஹை மிகச் சிறு பையனாய் இருந்தபோதுதான் பார்த்திருக்கிறேன்; அப்போது அவரை அல் மலிக்குல் காமில் பிணையாக வைத்தார். பிறகு என்ன நேர்ந்ததென்பது எனக்குத் தெரியாது. அதற்காகவே அப்படிக் கேட்டேன்.”

“அல் மலிக்குல் காமில் தம் மைந்தரைப் பிணையாக வைத்தாரா? எனக்கொன்றுமே புரியவில்லையே! சுல்தான் தாம் பெற்ற பிள்ளையைப் பிணை வைப்பதாவது?” என்று ஆச்சரியத்தினும் அதிக ஆச்சரியத்துடனே வினவினாள் ஷஜர்.

“அது பெரிய கதை. இரவு நெடுநேரமாவதால், நீ போய்ப் படுத்துக்கொள். நாளைக்குச் சொல்லுகிறேன்,” என்று தாவூத் தம் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

அதிக ஆனந்தத்துடனே சிறுகுழந்தை சுவைத்துப் புசிக்கும் மிட்டாய்ப் பண்டத்தை வெடுக்கென்று பிடுங்கினால், எவ்வளவு ஏமாற்றத்தை அக் குழந்தை அடையுமோ, அதைவிட அதிகமான ஏமாற்றமே ஷஜருத்துர்ருக்கு அப்போது ஏற்பட்டது. ஏனெனில், சொல்லத்தான் வேண்டுமென்று பிடிவாதம் பிடிப்பதென்றால், அது கேவலம் ஓர் அடிமைப் பெண்ணால் முடிகிற காரியமா? அல்லது அவ்வளவு உயர் தகுதியில் இருக்கும் அவ்வுயரிய அமீரிடம் அப்படிப் பிடிவாதம் பண்ணலாமா?

எனவே, ஷஜருத்துர் ஏமாற்றமுற்று மௌனமாய் இருந்துவிட்டாள். அவள் வாயை மூடிக்கொண்டிருந்தாலும், மனத்தினுள்ளே ஆவல் நிறைந்த வினாக்கள் பல அடுத்தடுத்துத் தோன்றிக்கொண்டே இருந்தன. ஓர் அரசன் தன் சொந்தக் குமாரனைப் பிணை வைத்ததாக ஓர் அமீர் கூறினால், அதைவிட அதிசயமான சம்பவத்தை வேறு எவரே கண்டிருக்க, அல்லது கேட்டிருக்கத்தான் முடியும்? எனவே, ஷஜருத்துர்ரும் ஆவலுடனும் அதிசயத்துடனும் அவர் முகத்தை மாறிமாறிப் பார்த்ததில் ஆச்சரியமில்லை.

நெடுநேரம் சென்றது. ஷஜருத்துர் இன்னம் படுக்கைக்குப் போகவில்லை என்பதையும், அவள் அந்த மாடியின் கைப்பிடி சுவர்மீது மெய்ம்மறந்து அமர்ந்திருக்கிறாள் என்பதையும் அமீர் கண்டுகொண்டார். பிறகு அவர் அவளை மெல்லத் தம்மிடம் அழைத்து, “ஏன், ஷஜர்! தூங்கப் போகவில்லையா?” என்று கேட்டார்.

அவள் சிரித்தாள். “தூங்காத மருந்தை எனக்குப் புகட்டிவிட்டு, தூங்கவில்லையா என்று என்னைக் கேட்டால், நான் என்ன சொல்வது? இன்று மாலையில் நான் கண்ட அதிசயங்களை விளங்கிக் கொள்வதற்காகத் தங்களை அண்மினேன். ஆனால், தாங்களோ, புதிருக்குமேல் புதிர் போடுகிறீர்கள். எனக்கோ, மன அமைதியின்றித் தூக்கம் வரவில்லை!”

“நீளமான கதையை நான் சொல்லி முடிப்பதற்குள் பொழுது விடிந்துவிடுமே என்ற அச்சத்தால் நான் உன்னை ஓய்வெடுத்துக்கொள்ளச் சொன்னேன். நீயோ, அக் கதையைக் கேட்காமல் தூங்கமாட்டாய் போலிருக்கிறது! சரி. அந்த மெழுகுவர்த்தி விளக்கைக் கொளுத்திவிட்டு, என் ஹுக்காவுக்கு ‘குடாக்’ மருந்து வைத்துச் சித்தப்படுத்து. கதையைச் சொல்கிறேன்.”

தாவூத் தம் வார்த்தைகளை முடிக்கக்கூடவில்லை; ஷஜருத்துர் சிட்டாய்ப் பறந்தாள். விளக்கேற்றி, ஹுக்காவைப் பதனிட்டு, சரியான மட்டத்துக்குத் தண்ணீர் நிரப்பி, அதன் குழல்வாயைக் கிழவரிடம் நீட்டினாள். ஷஜருத்துர் சித்தஞ்செய்து கொடுக்கிற ஹுக்காப் புகையின் இனிய காரமே அக் கிழவருக்கு மிகவும் மனச்சாந்தியைக் கொடுக்குமாகையால், அவரும் ஆவலுடன் அதை எட்டி வாங்கிச் சுவைத்துப் புகைத்துக்கொண்டார். என்ஜினுக்குச் சூடேறச் சூடேற, அது எப்படி வேகமாய்ப் போகுமோ, அப்படியே அந்த அமீரும் ஹுக்காவின் உஷ்ணம் நெஞ்சில் படரப்படர, வெகு உற்சாகத்துடன் அந்தப் பிணைவைத்த கதையின் விவரத்தை ஷஜருத்துர்ருக்குக் கூறினார். அவளும் அவர் படுக்கைக்குப் பக்கத்திலிருந்த பெரிய வெல்வெட் திண்டில் அமர்ந்துகொண்டு. மிகவும் கவனமாக அக் கதையைக் கேட்கலானாள்.

(தொடரும்)

மறுபதிப்பு: சமரசம் – 1-15 ஜனவரி 2012

<<அத்தியாயம் 9>>     <<அத்தியாயம் 11>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

 

Related Articles

Leave a Comment