தோழர்கள் – 31 ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ (ரலி)

31. ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ (حنظلة بن أبي عامر الأوسي)

ப்துல்லாஹ் இப்னு உபை அஸ்ஸலூல் யத்ரிபில் வசித்து வந்த கஸ்ரஜ் கோத்திரத்தின் தலைவன். அவனுடைய மக்களிடத்தில் அவனுக்கு ஏகப்பட்ட செல்வாக்கு, மதிப்பு. யத்ரிபில் இருந்த மற்றொரு முக்கியக் கோத்திரம் அவ்ஸ். இஸ்லாம் மதீனாவில் எழுச்சி பெறுமுன் அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தினரைப் பற்றி, அவ்விரு சாராரும் ஒருவரையொருவர் குத்திக்கொண்டு, வெட்டிப் புரண்டு கொண்டிருந்தார்கள் என்று முந்தைய தோழர்கள் வரலாற்றில் அறிமுகம் செய்து கொண்டோம்.

இந்த இரு அரபு கோத்திரங்களுக்கு இடையில் பண்டைய காலம் தொட்டு இருந்துவந்த பகைமையை, அப்பொழுது அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மூன்று யூதக் கோத்திரத்தார் தூபமிட்டு நன்றாக ஊதி அணைய விடாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். ஊர் ரெண்டுபட்டுக் கிடந்தால்தான் தங்களுக்குக் கொண்டாட்டம் என்பதை நன்கு அறிந்திருந்த நரித்தனம்.

அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரங்களுடன் வெறும் வாயளவிலான நட்பு என்பதையெல்லாம் தாண்டி, நேசநாடுகளின் கூட்டணிபோல் யூதர்களின் பலமான உதவி இருந்து வந்தது. அவ்வகையில் கஸ்ரஜ் கோத்திரத்தின் மிக நெருங்கிய கூட்டாளி, யூதர்களின் பனூ கைனுக்கா கோத்திரம்.

மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்து வந்த அப்துல்லாஹ் இப்னு உபை யத்ரிபின் அரசனாக முடிசூட்டிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டு அனைத்தும் அவனுக்குச் சாதகமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. அவ்வேளையில் அந்நகருக்குள் மெதுவே அடியெடுத்து வைத்தது இஸ்லாம். அடுத்த சில மாதங்களுக்குள் கடகடவென அங்குப் பற்பல மாற்றங்கள் நிகழ்ந்து, ஒருமித்த புதிய முழக்கமாக, “லா இலாஹ இல்லல்லாஹ்” தோன்றிவிட, யத்ரிபின் அரசியலும் மக்கள் உறவும் தலைகீழாகிப்போய், அந்நகர் மதீனாவானது.

காலத்தின் கட்டாயம், வேறு வழியில்லை என்றெல்லாம் சமாதானம் செய்துகொண்டு “நானும் ஏற்றுக்கொள்கிறேன்” என்று முஸ்லிமாக ஆகிப்போனான் அப்துல்லாஹ் இப்னு உபை. ஆனால் சூடவிருந்த கிரீடம் தலை நழுவித் தரையில் விழுந்ததில் ஏற்பட்டுப்போன சோகம் அவனை மனதளவில் நயவஞ்சகனாய் உருவாக்கி, வரலாற்றில் அப்படியே நிலைநிறுத்திவிட்டது.

மதீனாவி்ல் ஆட்சி அமைந்ததும் அங்கிருந்த மூன்று யூத கோத்திரங்களிடமும் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். இரு தரப்பிற்கும் மிகவும் இணக்கமான உடன்படிக்கை. ஆனால், இத்தனை ஆண்டுக் காலம் யூதர்கள் யாருக்காகக் காத்திருந்தார்களோ அந்த நபி வந்து சேர்ந்துவிட்டாரே என்று மகிழாமல் அவர்களின் இன உணர்வு அரபு குலத்தில் தோன்றிய நபியை ஏற்றுக் கொள்ளவிடாமல் தடுத்தது. அது கேவலம் என்றால், அதைவிடக் கொடூரம் அவருடன் இணக்கமாக வாழ்ந்திடாமல் குழிபறிக்கும் துஷ்டத்தனத்தில் மூழ்கியது.

என்ன ஆயிற்று? தன்வினை தன்னைச் சுட்டது!

வெகு விரைவிலேயே அந்த மூன்று யூத குலங்களும் மதீனாவிலிருந்து துடைத்து எறியப்பட்டன.

துஷ்டதனத்தின் முதல் நடவடிக்கையில் இறங்கியவர்கள பனூ கைனுக்கா யூதர்கள். அந்த யூதர்களில் ஒருவன், ஒரே ஒருவன் செய்த ஒற்றைக் காரியம் அவர்களின் அழிவில் முடிந்தது. அது என்ன காரியம்; அதற்கு நபியவர்கள் எடுத்த கடுமையான எதிர் நடவடிக்கை என்ன; அது ஏன் என்பனவற்றை எல்லாம் வானொலி, தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்களின் தாக்கம் புகாத ஒரு மூலையில் அமர்ந்து படித்துப் பார்த்தால் இன்றைய உலக அரசியலில் நம் கண்பார்வை தெளிவடையவும், கண்ணோட்டம் மாறவும் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அது விரிவாய் நபியவர்களின் வரலாறுடன் அறியப்பட வேண்டிய சங்கதி. இங்கு நாம் சுருக்கமாய் அறிந்து கொள்ள வேண்டியது –

அந்த பனூ கைனுக்கா கோத்திரம் சுற்றி வளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டது. பதினைந்து நாள் நீடித்தது முற்றுகை. தங்களின் தோல்வியும் நபியவர்களிடம் அடையப்போகும் தண்டனையும் அவர்களுக்குத் தெளிவாய்த் தெரிந்தவுடன் அவர்கள் உதவி நாடி அணுகப்பட்டோர் அவர்களுடைய பண்டைய காலத்து நேசஅணியின் இரு தலைவர்களான உபாதா இப்னு ஸாமித் மற்றும் அப்துல்லாஹ் இப்னு உபை. உபாதா நபியவர்களிடம் வந்தார். “அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய விசுவாசம் ஒன்றே ஒன்று மட்டுமே. அது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் ஆகும். இந்த இறை மறுப்பாளர்களுடன் நான் கொண்டிருந்த உறவு அறுந்துவிட்டது. அவர்களுக்கு எனது ஆதரவு என்று எதுவும் இல்லை” தெளிவான வாக்கியங்களுடன் தன் நிலையைச் சொல்லிவிட்டார் உபாதா.

ஆனால் அப்துல்லாஹ் இப்னு உபை?

‘ஏற்கெனவே கிரீடம் போச்சு. இப்பொழுது தனது ஆதரவுக் கோத்திரமும் தொலைந்து போய்விட்டால் தன் கதி நிர்கதியாகிவிடுமோ?’ என்ற பெரும் கவலை ஏற்பட்டுப் போனது அவனுக்கு. நபியவர்களிடம் சென்றவன் அவர்களது போர்க் கவசத்தைப் பிடித்து உலுக்கி, “எனது நட்புக் கோத்திரத்துடன் நல்லவிதமாய் நடந்து கொள்ளுங்கள்” என்றான். கடும் சினம் கொண்ட நபியவர்கள், “என்னை விடு” என்று சொல்ல, “தாங்கள் அவர்களிடம் நல்லவிதமாய் நடந்து கொள்வேன் என்று சொல்லாதவரை விட மாட்டேன். ஒருகாலத்தில் அவர்களின் 700 வீரர்கள் என்னுடைய எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றியிருக்க, அவர்களை ஒரேநாளில் அழித்துவிட நீர் வந்தீரோ? மாறி மாறித் தோன்றும் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கைக் கொண்டவன் நான்”

“அவர்கள் உன்னுடையவர்கள்” என்று அனுமதியளித்தார்கள் நபியவர்கள்.

உயிரையும் பெண்டுகளையும் பிள்ளைகளையும் மட்டும் எடுத்துக்கொண்டு மதீனாவை விட்டுக் காலிசெய்தனர் பனூ கைனுக்கா. அப்துல்லாஹ் இப்னு உபையின் அராஜக வற்புறுத்தலுக்கு நபியவர்கள் இணங்கியதில் கருணையும் ராஜ தந்திரமும் கலந்திருந்தது – அதுவும் அம்மாமனிதரின் வரலாற்றுடன் படித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. அந்த நிகழ்வை இங்கு நாம் அறிந்து கொள்ள முனைந்தது, அப்துல்லாஹ் இப்னு உபை பிற்காலத்தில் எத்தகைய நயவஞ்சகனாய்ப் பரிணமிக்கப் போகிறான் என்பதற்கான அறிகுறியை.

அதன்பின் நிகழ்வுற்ற போர்கள், இதர நிகழ்வுகள் என்று ஒவ்வொன்றிலும் எத்தகைய கூச்சமோ, அவமானமோ, இறையச்சமோ இன்றி படு அப்பட்டமாய்த் தனது நயவஞ்சகத்தைப் பறைசாற்றி, நயவஞ்சகர்களின் தலைவனாகிப் போனான் அப்துல்லாஹ் இப்னு உபை. மனிதகுல பொற்காலத்தில் உலக மாமனிதருடன் வாழும் நற்பேறு கிடைத்திருக்க, அந்தப் பெருமை எதுவுமே உணராமல் ஈனனாய் அவன் மாறிப் போனது பெரும் அவலம். ஏன் அப்படி? கலிமாவின் தொடர்பு நுனிநாக்குடன் முடிந்து போனதால்! நமக்கு அளவிட முடியாத பாடங்களை இத்தகையோரின் வாழ்க்கையில் விட்டுவைத்திருக்கிறது வரலாறு.

அப்துல்லாஹ் இப்னு உபையின் வரலாற்றில் மேலும் பல உதாரணங்கள் இருந்தாலும் இந்த அத்தியாத்துடன் தொடர்புடைய போரில் நிகழ்ந்த ஒன்றை மட்டும் மேற்கொண்டு சுருக்கமாய்ப் பார்த்துவிட்டு நகர்ந்து விடுவோம்.

ஹிஜ்ரீ மூன்றாம் ஆண்டு, ஷவ்வால் மாதம் பலம் வாய்ந்த 3000 போர் வீரர்களுடன் மதீனாவிற்குப் படை திரட்டி வந்து கொண்டிருந்தனர் குரைஷிகள்.

திரண்டுவரும் படைகளை நகருக்குள் வரவிட்டுப் போரிடுவதா, நகருக்கு வெளியே சென்று எதிர்கொள்வதா என்று ஆலோசிக்கப்பட்டு, இறுதி முடிவாக உஹது நோக்கிப் புறப்பட்டது முஸ்லிம்களின் படை. மூவாயிரம் எதிரிகளை எதிர்கொள்ள சுமார் ஆயிரம் போர்வீரர்கள் நபியவர்கள் தலைமையில் திரண்டிருந்தனர். மதீனாவைவிட்டுக் கிளம்பிய படை, அஷ்-ஷைக்ஃகைன் எனும் இடத்தில் இரவில் தங்கியது. மறுநாள் பொழுது புலருமுன் மதீனாவுக்கும் உஹது மலைக்கும் இடையில் அஷ்-ஷவ்த் எனும் இடத்தை அடைந்து, அங்கு ஃபஜ்ரு தொழுகை முடிந்த நேரம். நிறம் காட்டினான் அப்துல்லா இப்னு உபை.

தன் சொல்பேச்சு கேட்கும் 300 வீரர்களுடன் சடாரென்று கிளம்பி, ‘எனக்குப் பிடிக்கலே; நான் வீட்டிற்குப் போகிறேன்’ என்று மதீனா திரும்பிவிட்டான்! போர்களத்தில் சகாக்களை அனாமத்தாய் அப்படி விட்டுவிட்டுத் திரும்புவது எத்தகைய துரோகம், நயவஞ்சகம்? தெரிந்திருந்தும் தெளிவான திடசித்தத்துடன் அதைச் செய்தான் அவன்.

“ஏன்? என்னாச்சு? எதற்கு இப்படி?” விசாரித்தார்கள் தோழர்கள்.

அதற்கு அவன் கூறிய காரணம், “நபியவர்கள் என் பேச்சிற்கு முக்கியத்துவம் அளிக்காமல், சிறுவர்களின் வார்த்தைகளுக்கு இணங்கிவிட்டார். எனவே நாங்கள் ஏன் இந்த இடத்தில் நம்மை மாய்த்துக் கொள்ள வேண்டும்?”

அப்படி என்ன பேச்சு?

மதீனா நகருக்குள் இருந்து கொண்டு எதிரிகள் நெருங்கியதும் போரிட வேண்டும் என்று கருத்து கொண்டிருந்தவர்களில் அப்துல்லாஹ் இப்னு உபை ஒருவன். மற்றவர்கள் நகருக்கு வெளியே சென்று எதிரிகளை எதிர்கொள்ள வேண்டும் என்றனர். ஆனால் தீர கலந்து ஆலோசித்து முடிவெடுத்தபின்தானே அனைவரும் கிளம்பினார்கள்? தவிரவும் அல்லாஹ்வின் தூதர் ஒரு விஷயத்தில் முடிவெடுத்தபின் அதற்கு வேறு என்ன மறுப்பு, எதிர்ப்பு?

இப்படிப்பட்ட அப்துல்லாஹ் இப்னு உபைக்கு மகள் ஒருவர் இருந்தார். ஜமீலா!

oOo

மதீனாவில் வாழ்ந்திருந்த மற்றொரு பெரும் பிரிவான அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவன் அபூஆமிர். இவனது இயற்பெயர் அப்து அம்ரு இப்னு ஸைஃபி. யூதர்களுடன் கொண்ட தொடர்பினாலோ என்னவோ, நபி ஒருவர் தோன்றப் போகிறார் என்று தம் குல மக்களுக்கு முன்னறிவிப்பு செய்து கொண்டிருந்தான் அவன். அவ்ஸ் மக்களிடத்தில் அவனுக்கு நல்ல செல்வாக்கு. அவர்கள் அவனைப் பெரியதொரு துறவிபோலவே கருதி ‘ராபி’ என்று புகழ்ந்து அழைத்துக் கொண்டிருந்தனர்.

நபி தோன்றப் போகிறார் என்று சொல்லிக் கொண்டிருந்த அவன் மனதில் இறைவன் தன்னை ஒரு நபியாக அறிவிக்கப்போகிறான் என்று ஓர் அசட்டுத்தனமான எதிர்பார்ப்பு இருந்து கொண்டிருந்தது. இந்நிலையில் மக்காவில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தோன்றி, பிறகு அவர்கள் புலம்பெயர்ந்து மதீனா வந்ததும், ‘இத்தனை நாள் காத்திருப்பு வீணா?’ என்று வெறுத்து நொந்து போனான் அவன். நபித்துவம் என்பது அமைச்சரவைப் பதவியா என்ன?

காத்திருந்த உண்மை கண்ணெதிரே தோன்றிய நொடியில் குருடாகிப் போனது அவன் பார்வை. மதீனாவில் இஸ்லாம் பரவலாகுமுன் அவ்ஸ் குலத்தின் தலையானவர்களுள் ஒருவனாய் இருந்த அவனால் இஸ்லாத்தின் ஒருமைப்பாட்டைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஒருநாள் நபியவர்களுக்கு எதிராய்த் தன் பகையைப் பகிரங்கமாய் அறிவித்துவிட்டு, அவன் உறவைச் சேர்ந்த 50 பேருடன் மக்காவிற்கு ஓடிவிட்டான். அவனுக்கு அல்-ஃபாஸிக் என்று புனைப் பெயரிட்டார்கள் நபியவர்கள். அபூஆமிர் அல்-ஃபாஸிக் என்று அவன் பெயரைத் திருத்திப் பத்திரப்படுத்திக் கொண்டது வரலாறு.

மக்காவுக்குச் சென்றவன் அங்கு பத்ரு யுத்தத்தில் தோற்றுப்போய்த் திரும்பிவந்து அமர்ந்து புகைந்து கொண்டிருந்த குரைஷிகளை முடுக்க ஆரம்பித்தான். அவர்களை முஸ்லிம்களுக்கு எதிராய் மீண்டும் போர் தொடுக்கத் தூண்டியதில் இவன் பங்கும் கணிசம்.

“என் அவ்ஸ் மக்களிடத்தில் எனக்கு நல்ல செல்வாக்கு உண்டு. என்னைப் பெரிதும் மதிக்கின்றனர் அவர்கள். நீங்கள் படை திரட்டுங்கள்; கிளம்புங்கள். நானும் இணைந்து கொள்கிறேன். போர்களத்தில் என்னைக் காணும் அவ்ஸ் மக்கள் உடனே நம் பக்கம் இணைந்துவிடுவார்கள். அதன்பின் முஹம்மதின் படை வலுவிழந்துவிடும். வேலை எளிது” என்று ஏகப்பட்ட வாக்குறுதிகள் கொடுத்துக் கொண்டே இருந்தான். ஆனால் அது முற்றிலும் தவறாய் முடிந்துபோகும் என்பதையெல்லாம் அப்போது அவன் அறியவில்லை.

நாளாவட்டத்தில் குரைஷிகளின் படை மீண்டும் உருவானது; தயாரானார்கள்; மதீனா நோக்கிப் புறப்பட்டார்கள் வெறித்தனமாய். அவர்களை எதிர்கொள்ள மதீனாவிலிருந்து கிளம்பிவந்தது முஸ்லிம்களின் படை. உஹது மலையடிவாரத்தில் இருபடைகளும் எதிரெதிரே சந்தித்துக் கொண்டன.

குரைஷிகளின் தலைவன் அபூஸுஃப்யான் இப்னுல் ஹர்புக்கு அருகில் நின்று கொண்டான் அபூஆமிர். தம் மக்களை நோக்கிக் கத்தினான். “என் அவ்ஸ் குல மக்களே! உங்கள் அன்பிற்குரிய அபூ ஆமிர் அழைக்கிறேன்” என்று முஸ்லி்ம்களை நோக்கி தன் பேச்சால் கவருவதற்கு முயல, “ஓ ஃபாஸிக். உன்னைக் காணும் எந்தக் கண்களும் திருப்தியுறக் கூடாது” என்று சாபமும் கற்களும் அவனை நோக்கிப் பறந்து வந்தன. அவமானப்பட்டு குரைஷிகளிடம் திரும்பிய ஓடிய அவன், “நான் அவர்களை விட்டுக் கிளம்பி வந்த பிறகு அவர்களை ஏதோ இனந்தெரியா தீங்கு சூழ்ந்துவிட்டது என்று நினைக்கிறேன்” என்றான் மூச்சுவாங்க.

துவங்கியது போர். முஸ்லி்ம் படைப்பிரிவில் இருந்த அவ்ஸ் மக்களை எதிர்த்து வெறித்தனமாய்ப் போரிட்டான் அபூஆமிர். ஆயுதங்கள் என்று மட்டும் இல்லாது கையில் கிடைத்த கற்களை எல்லாம் எடுத்து அவர்கள்மேல் வீசினான். மூர்க்கமான போர் ஒருவழியாய் முடிவுக்குவர, குரைஷிகள் எதிர்பார்த்த வெற்றிமட்டும் அவர்களுக்குக் கிடைக்காமல் போயிற்று.

தான் நினைத்தது குரைஷிகளின் மூலம் கைகூடவில்லை என்றதும் பின்னர் அவன் ஓடியது ரோமர்களை நோக்கி. அங்குச் சென்று ஆதரவு திரட்டுவோம்; இந்த முஸ்லிம்களை ஒடுக்க இனி இந்த வல்லரசுதான் சரி என்பது அவன் திட்டம். ஆனால் பின்னர் அந்த ரோம வல்லரசே தொலைந்து போகப்போகிறது என்பதை அவனும் உணரவில்லை; ரோமப் பேரரசனும் அறிந்திருக்கவில்லை. பைஸாந்திய அரசன் இருகை விரித்து அபூஆமிரை வரவேற்று, அணைத்துக் கொண்டு, எல்லா ஆதரவும் நான் தருகிறேன் என்று வாக்களித்தான். முதல் கட்டமாய் மெதுமெதுவே அங்கிருந்தபடி மதீனாவில் இருந்த நயவஞ்சகர்களின் கூட்டத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டான் அபூஆமிர்.

“தகுந்த தருணத்தில் முஹம்மதை எதிர்த்துப் போரிட படை திரட்டித் தருவேன்; அதற்கு வாகாய் நமக்கு ஒரு தலைமை இடம் தேவை” என்று அவன் தெரிவிக்க, திட்டம் தீட்டினார்கள் நயவஞ்சகர்கள். மதீனாவுக்குப் புலம்பெயரும்போது நபியவர்கள் முதன்முதலாய் நிர்மாணித்தார்களே குபா பள்ளிவாசல், அதன் அருகிலேயே மற்றொரு பள்ளிவாசலை உருவாக்கினார்கள் அவர்கள். அந்தப் பள்ளிவாசலுக்கு நபியவர்களையே அழைத்துத் தலைமை தாங்கி தொழவைத்துவிட்டால் பள்ளிக்கு அங்கீகாரமும் கிடைத்துவிடும்; முஸ்லிம்களின் கண்பார்வையில் படாமல் நாமும் நல்ல பிள்ளைகள்போல் இந்தப் பள்ளிவாசலில் நமது திட்டங்களை செயல்படுத்தலாம் என்று நீண்டது அவர்களது கனவு.

தபூக் படையெடுப்பிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த நபியவர்களுக்கு இத்திட்டத்தை இறைவன் வஹீ வாயிலாய்த் தெரிவிக்க இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டது எதிரிகளின் திட்டம்.

இப்படிப்பட்ட அபூஆமிருக்கு மகன் ஒருவர் இருந்தார். ஹன்ளலா!

oOo

ஃபாஸிக் அபூஆமிரின் மகன் ஹன்ளலாவுக்கும் முனாஃபிக்குகளின் தலைவன் அப்துல்லா இப்னு உபையின் மகள் ஜமீலாவுக்கும் திருமணம் நடைபெற்றது. எப்பொழுது? உஹதுப் போருக்கு மதீனாவில் பரபரப்பாய்த் தயாராகிக் கொண்டிருந்தார்களே முஸ்லிம்கள், அப்பொழுது. திருமணம் என்றதும் பெரும் நிகழ்வுகள், சம்பிரதாயம், ஆடம்பரம், விருந்து, மொய்முறை, லொட்டு லொசுக்கு என்று பழக்கப்பட்டுப்போன நமக்கு, அன்று அவர்களின் வாழ்வும் நடைமுறைகளும் உணர்த்தும் பிம்பம் நமக்கு அறவே அறிமுகமில்லாதவை.

குறிப்பாய் இந்தத் திருமணமும் அதை ஒட்டிய நிகழ்வுகளும் பெரும் ஆச்சரியம்! பார்ப்போம்.

திண்ணைத் தோழர்கள் என்று படித்தோமே நினைவிருக்கிறதா? ஏறக்குறைய ஐம்பது தோழர்கள் அத்திண்ணையில் வசித்து வந்ததாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அவர்களில் அபூஹுரைரா, கஅப் பின் மாலிக் அல்-அன்ஸாரீ, ஹாரிதா இப்னு அந்-நுஃமான் போன்று ஆன்மிகத்தை முக்கியத் தேடலாகக் கொண்ட தோழர்களுடன் அத்திண்ணையில் வசித்து வந்தவர் ஹன்ளலா இப்னு ஆமிர்.

திருமணம் பகலில் முடிந்துவிட்டது. படையோ போருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தது. மணமகன் ஹன்ளலா நபியவர்களிடம் நெருங்கி அனுமதி கேட்டார். ‘இப்பொழுதுதான் எனக்குத் திருமணம் முடிந்துள்ளது. ஒரு வாரம் ஒரு மாதம் விடுப்பு வேண்டும். தேன்நிலவு போகவேண்டும்’ என்ற கோரிக்கையெல்லாம் இல்லை.

“இன்றிரவு மட்டும் எனக்குப் படையிலிருந்து விலகியிருக்க அனுமதி வேண்டும். காலையில் வந்துவிடுவேன்.”

ஹன்ளலா தம் புது மனைவியுடன் முதல் இரவு அனுபவிக்க அனுமதியளித்தார்கள் நபியவர்கள். வீட்டிற்குக் கிளம்பினார் ஹன்ளலா. உஹதுக்குக் கிளம்பியது முஸ்லிம்களின் படை. மதீனாவைவிட்டுக் கிளம்பிய படை, அஷ்-ஷைக்ஃகைன் எனும் இடத்தில் இரவில் தங்கி ஓய்வெடுக்க, இங்கு மதீனாவில் தம் வீட்டில் இல்லறத்தில் ஈடுபட்டார் ஹன்ளலா ரலியல்லாஹு அன்ஹு.

இரவு முடிந்து வைகறைத் தொழுகை நேரம் நெருங்கியது. அஷ்-ஷவ்த் எனும் இடத்தை அடைந்து ஃபஜ்ருத் தொழுதார்கள் நபியவர்களும் படையினரும். மதீனாவில் கணவனும் மனைவியும் எழுந்து குளித்துவிட்டு தொழுதனர். புது தம்பதியர் அல்லவா? இயற்கையான உந்துதலால் மீண்டும் இருவரும் கூடினர். அப்படியே கண்ணயர்ந்தார் ஹன்ளலா. பொழுது புலர்ந்து கதிரவன் எட்டிப்பார்க்க, சட்டென்று விழித்தெழுந்தார் ஹன்ளலா. படை உஹதை அடைந்து போர் துவங்கியிருக்கும் என்ற நினைப்பு அவரைப் பரபரப்பாக்கியது. உடலுறவுக்குப்பின் கடமையான குளியலை குளிப்பதற்கும் அவருக்கு நேரமில்லை; அவகாசமில்லை. கடகடவென கவசம் தரித்தார்; ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டார்; ‘சென்று வருகிறேன்’ என்று இருசொற்களைப் புதுப்பெண்ணிடம் உதிர்த்துவிட்டு, போர்களத்திற்குப் பாய்ந்தோடினார் ஹன்ளலா ரலியல்லாஹு அன்ஹு.

அதே நேரத்தில் அங்கு வேறோரு பாதையில் 300 பேருடன் மதீனா திரும்பிக் கொண்டிருந்தான் அவருடைய மாமனார் அப்துல்லாஹ் இப்னு உபை. இங்குக் கணவன் கிளம்பியதும் ஜமீலா ரலியல்லாஹு அன்ஹா அக்கம்பக்கத்தவரிடம் ஒரு முக்கியச் செய்தியொன்றை பரிமாறச் சென்றார். அது என்னவென்று தெரிந்து கொள்வதற்குமுன் நாமும் உஹதுக்குச் சென்று வந்துவிடுவோம்.

oOo

உக்கிரமாய் நடைபெற்றுக்கொண்டிருந்த போரில் முஸ்லிம் படைகளுடன் கலந்து களத்தில் குதித்தார் ஹன்ளலா. ‘என் பங்குக்கு வந்தேன்; நானும் வாளை நாலு சுழற்று சுழற்றினேன்; தீர்ந்தது என் பங்கு. என் புது மனைவி எனக்காக இன்று மாலை அலங்காரத்துடன் தயாராக நிற்பாள்’ என்ற எண்ணம் எதுவும் அவர் மனதில் இருந்ததாகத் தெரியவில்லை. வீடு மறந்தார்; புதுக் குடும்பம் மறந்தார். அவர் கண்களிலும் சிந்தையிலும் நிறைந்திருந்தது அல்லாஹ்வின் எதிரிகள். திரண்டிருந்தது ஒரே எண்ணம், ஒழிக்க வேண்டும் அவர்களை.

ஹன்ளலா களத்தில் குறிவைத்தது, குரைஷிப் படையின் தலைவன் அபூஸுஃப்யானை. படையின் தலைவன் என்பதால் அபூஸுஃப்யானைச் சுற்றி பாதுகாப்பு வளையம் பலமாய் இருந்தது. தவிர அபூஸுஃப்யான் குதிரையில் அமர்ந்து போரிட்டுக் கொண்டிருக்க, ஹன்ளலாவிடம் குதிரையும் இல்லை; கழுதையும் இல்லை. வெறும் காலாட்படை வீரர் அவர். ஆனால் எந்த அசௌகரியமும் ஒரு பொருட்டே இல்லை என்று சுழன்று சுழன்று அபூஸுஃப்யானை நெருங்கி விட்டார் ஹன்ளலா. தம் வாளைச் சுழற்றி அபூஸுஃப்யானை வெட்டி வீழ்த்த முயல மயிரிழையில் உயிர் தப்பினார் அபூஸுஃப்யான். போரின் போக்கே திசை மாறி இருந்திருக்கும். தவறிப்போனது அந்த வீச்சு. அப்பொழுது பக்கவாட்டிலிருந்து வந்த ஷத்தாத் இப்னு அஸ்வத் என்பவன் தன் ஈட்டியை ஹன்ளலாவின் உடலில் செருக அது மறுபுறம் வெளிவந்தது. அப்படியும் விடாது உடலில் குத்திட்டு நிற்கும் ஈட்டியும், வழிந்தோடும் குருதியுமாய் எதிரியைத் துரத்தினார் ஹன்ளலா. ஆனால் மீண்டும் எதிரியின் ஈட்டி அவரைத் தாக்க வீர மரணமடைந்தார் ஹன்ளலா ரலியல்லாஹு அன்ஹு.

அதன்பின் தொடர்ந்த போர்; வெற்றியை நெருங்கிய முஸ்லிம் படை ஒருசிலரின் தவறினால் பாதிப்படைந்தது; ஹம்ஸா ரலியல்லாஹு உட்பட மற்றும் பலர் வீர மரணமடைந்தது; பெருத்த சேதம் நிகழ்வுற்றது – அதெல்லாம் உஹதின் இதரப் பெரும் நிகழ்வுகள்.

ஒருவழியாய் முடிவுற்றது போர். மாண்டவர்கள் போர்க்களத்தில் சிதறிக் கிடக்க, அவற்றைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த நபியவர்கள் மிகவும் விசித்திரமானக் காட்சி ஒன்றைக் கண்டார்கள். அவர்களது பார்வை ஆச்சரியத்துடன் விண்ணை நோக்கி உயர்ந்தது.

பிறகு தம் தோழர்களிடம் திரும்பியவர்கள், “உங்கள் சகோதரர் ஹன்ளலாவை வானவர்கள் விண்ணுக்குச் சுமந்து சென்றார்கள். சுவர்க்கத்திலிருந்து வெள்ளிப் பாத்திரத்தில் எடுத்து வந்த நீரினால் அவரது உடலைக் கழுவிக் கொண்டுவந்து கிடத்தியுள்ளார்கள். இவரது செய்தி என்ன என்று விசாரித்து வாருங்கள்”

ஹன்ளலா தாம்பத்யத்தில் ஈடுபட்டு, குளிக்கவும் அவகாசமின்றிப் போருக்கு விரைந்த செய்தி பிறகே அவர்களுக்குத் தெரிய வந்தது.

ஸுப்ஹானல்லாஹ்! இந்த நற்பாக்கியத்தை, உன்னதப் பெருமையை என்ன சொல்லி எழுதுவது, விவரிப்பது? இறைவனுக்காக ஓடிப்போய் உயிர் நீத்தவரைக் கழுவிக் குளிப்பாட்ட இறங்கி வருகிறார்கள் வானவர்கள், சுவர்கத்தின் நீரைச் சுமந்து கொண்டு. அதுவும் வெள்ளிப் பாத்திரத்தில்! கஸீலுல் மலாயிக்கா – வானவர்களால் கழுவப் பெற்றவர் என்ற அடைமொழி ஏற்பட்டு ஒட்டிக் கொண்டது ஹன்ளலாவுக்கு. போரில் அன்று இறந்தவர்களை அடக்கம் செய்யும்போது ஹன்ளலாவின் உடலில் இருந்து சொட்டிக் கொண்டிருந்தது நீர். சுவர்க்கத்தின் நீர்.

இங்கு இவர் போருக்குக் கிளம்பி வந்திருக்க அங்கு மதீனாவில் அவர் மனைவி ஜமீலா ரலியல்லாஹு அன்ஹா அக்கம் பக்கத்தவரிடம் சென்றார் என்று பார்த்தோமல்லவா? அவர் நான்கு சாட்சிகளை அழைத்தார். “நேற்று நான் ஹன்ளலாவை மணம் புரிந்துகொண்டேனே அவருடன் எனது தாம்பத்யம் இனிதே நிறைவேறியது” என்று தம் திருமணம் பூர்த்தியானதைச் சொல்லி வைத்தார் அவர். ‘இது என்ன விசித்திரச் செய்கை’ என்று சற்றுக் குழப்பமாக இல்லை? அதற்கு வலுவான ஒரு காரணம் இருந்தது. கனவு!

ஜமீலா கனவொன்று கண்டிருந்தார். அதை அவரே விவரித்திருந்தார். “நான் கனவொன்று கண்டேன். வானம் திறந்து கொள்ள, ஹன்ளலா அதனுள் புகுந்தார். பிறகு வானம் மூடிக் கொண்டது. ஹன்ளலா இன்று வீர மரணம் அடையப் போவதாக நான் இதற்கு அர்த்தம் கொள்கிறேன்”

இங்கு, சற்று கண்மூடி நாம் சிந்தித்துப் பார்க்க வேணடும். ஒரு பெண், புதிதாய்த் திருமணம் ஆனவர், தம் கணவர் வீர மரணம் அடையப் போகிறார் என்பதை அறிந்து அவருடன் முழுமனதாய் மகிழ்வுடன் தாம்பத்யம் கொள்கிறார். அந்த உறவினால் கரு உருவாகும் சாத்தியங்கள் அத்தனையும் உள்ளன என்பது அவருக்குத் தெரியும். கணவன் இறந்துவிட்டால் மறுமணத்திற்கு அந்தக் குழந்தை ஒரு கூடுதல் தடை என்பதும் யதார்த்தம். இத்தனையும் இருந்தும், கூடினார்; கணவர் போருக்கு விரைய வழி அனுப்பி வைத்தார். “போகாதே போகாதே என் கணவா; பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்” என்ற அங்கலாய்ப்பு, அழுகை, ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லை. “என் கணவர் வீர மரணம் அடைந்தார்” என்பதில் அவர்களுக்கு பெரும் பெருமை. அவருடைய வாரிசு இவன்தான் என்பதை உலகுக்கு அறிவிப்பதில் அதைவிடப் பெருமை. நம் பெண்கள் நகை, பட்டு, ஒற்றைவடச் சங்கிலி எனும் செயற்கையை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தம் கணவனிடம் இயற்கையாய் என்ன எதிர்பார்க்க வேண்டும், எதற்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கு இதில் உதாரணம் பொதிந்துள்ளது.

கரு உருவானது. ஜமீலாவுக்கு ஹன்ளலாவின் மகன் பிறந்தார். அவர் பெயர் அப்துல்லாஹ். பின்னர் இந்த ஜமீலாவை தல்ஹா பின் உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு மறுமணம் புரிந்து கொண்டார். அவர்களுக்கு முஹம்மது பின் தல்ஹா என்றொரு மகன். அப்துல்லாஹ் பின் ஹன்ளலாவும் முஹம்மது பின் தல்ஹாவும் மிகவும் நெருக்கமாகிப் போனார்கள். ஓர் இழப்பை வேறு சிறப்பானவற்றின் மூலம் அவர்களுக்கு ஈடு செய்தான் இறைவன்.

இவ்வுலகும் வாழ்க்கையும் அவர்களது பார்வையில் முற்றிலும் வேறு. திருமணம், தாம்பத்யம், தொழுகை, வழிபாடு, போர், உயிர் என பேச்சும் மூச்சும் அனைத்துமே இறைவன், அவன் தூதர் என்ற கயிற்றால் கட்டப்பட்டு வாழ்ந்து முடித்திருக்கிறார்கள் அவர்கள். வித்தியாசமான பரிமாணத்துடன் வாழ்ந்த ஒப்பற்ற சமூகம் அவர்கள். நம் நிகழ்கால வாழ்க்கையை அவர்களுடன் எந்த அளவுகோலில் வைத்து ஒப்பிடுவது?

இறை வழியில் போரிடுபவர்களுக்கு உலக அளவுகோலின் எந்த இலக்கணமும் பொருந்துவதில்லை. அவர்களது வாழ்வும் வெற்றி; மரணமும் வெற்றி. இறைவனும் அவன் தூதரும் போதும் என்று உயிரைத் துறக்கிறார்கள் அல்லவா, அப்பொழுது இறைவனின் சிறப்பும் நற்பேறும் நாம் கற்பனை செய்ய இயலா வடிவில் இவ்வுலகிலும் அவர்களுக்கு வந்தடைகிறது; மறுமையிலும் நிரந்தரமாக உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்திவிடுகிறது. எல்லாம் வல்ல இறைவனின் பூரண திருப்தியை அவர்கள் அடைந்துவிடும்பொழுது மற்ற எதுவும் முக்கியத்துவம் இழந்துவிடுகிறது.

பிற்காலத்தில் அப்துல்லாஹ்விடம் “நீ யார்?” என்று யாராவது அவரை விசாரித்தால் பெருமிதமான பதில் வரும் அவரிடமிருந்து, “வானவர்களால் கழுவப்பெற்றவரின் மகன் நான்”

“யார் அவர்?”

“ஹன்ளலா, கஸீலுல் மலாயிக்கா!”

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

சத்தியமார்க்கம்.காம்-ல் 18 மே 2011 அன்று வெளியான கட்டுரை

உதவிய நூல்கள்

Related Articles

Leave a Comment