மக்காவில் ஒருநாள் தாய்க்கும் மகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம். கோபத்தின் உச்சியில் தாய் கத்தினார், “போ… இத்துடன் நம் உறவு முறிந்தது. இனி நான் உனக்கு அம்மாவே இல்லை”
நிதானமாய்த் தாயை நோக்கித் திரும்பி வந்த மகன், தம்முடைய பதிலைத் தெரிவித்தார். ஆனால் அந்த பதில் தாய்க்குக் கோபத்தைத்தான் அதிகப்படுத்தியது. மகனை மீண்டும் கத்தித் திட்டியவர், இறுதியில் சத்தியமிட்டுக் கூறினார், “நான் உனக்கு அம்மாவும் இல்லை, நீ எனக்கு மகனும் இல்லை”.
அதற்குமேல் பதிலேதும் பேசாமல் வெளியேறினார் மகன்.
அம்மாவுக்கும் மகனுக்கும் இடையே அப்படி என்ன பெரிய பிரச்சனை? பெற்றோருக்குச் செலுத்த வேண்டிய மரியாதையையும் புரிய வேண்டிய கடமையையும் இஸ்லாம் கட்டாயமாக்கியிருக்க இப்படித் தாயிடம் எதிர்த்துப் பேசிவிட்டு வீட்டை விட்டுக் கிளம்புவது பெரும் பாவமாயிற்றே! குர்ஆனின் 17ஆவது சூராவான அல்-இஸ்ராவின் 23ஆவது ஆயத்தின் ஒரு பகுதியில் அல்லாஹ் எவ்வளவு கடுமையாகத் தெரிவிக்கிறான்?
“அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும் பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம். . . .” (குர்ஆன் 17:23)
சீ, சே, சை போன்ற ஓரெழுத்து வார்த்தைகளை எரிச்சல், சடைவு போன்ற உணர்ச்சிகளின் முன்னுரையாகக்கூடப் பெற்றோரிடம் சொல்வதற்கு இறைவன் தடை விதித்திருக்க, தம் தாயிடம் சண்டை போட்டுவிட்டு வெளியேறும் அளவிற்கு என்ன ஆயிற்று அந்த மகனுக்கு?
இஸ்லாம் பெற்றோர்களுக்குப் பெரும் கண்ணியத்தை அளிக்கிறது. பெற்றோருக்கு ஆற்றவேண்டிய கடமையை ஏக இறை வணக்கத்திற்கு வெகு அடுத்த நிலையில் வைக்கிறது. அதைச் சரியாகப் புரிந்து வைத்திருந்தார்கள் நபியவர்களின் தோழர்கள். எப்படி? இறைவனுக்கு வெகு அடுத்து பெற்றோர். ஆனால் –
இறைவனுக்கு அடுத்துத்தான் பெற்றோர்.
oOo
ஒருநாள் ஹிரா குகையிலிருந்து இறங்கி வந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், மக்காவில் ஏகத்துவம் சொல்ல ஆரம்பித்தார்கள். தெளிவான மனங்களில் “நச்”சென்று அச்செய்தி சென்று பதிந்து கொண்டது. மெதுமெதுவே மக்காவில் இஸ்லாமிய மீளெழுச்சி துவங்கியது. ஏழைகள், அடிமைகள், வெகுசில பிரபலங்கள், முஹம்மது நபியின் சில உறவினர்கள் என்று சிறிய இஸ்லாமியக் குழு ஒன்று உருவாக அந்தச் சின்னஞ்சிறு குழுவுக்கெதிராய்க் குரைஷிகளின் பென்னம்பெருங்கோத்திரமே தொடை தட்டிப் பூதாகரமாய் எழுந்து நின்றது.
செய்தி அப்படி! பன்னெடுங்காலமாக கஅபாவில் வைத்துப் பூஜிக்கப்பட்ட 360 கடவுளர்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்த ஒற்றைச் செய்தி!
சிறிது சிறிதாய் அந்த இஸ்லாமியச் செய்தி மக்காவில் பரவப்பரவ, நாளும் பொழுதும் அந்நகரில் இதுவே பேச்சு. ”புதிதாய் இது என்ன மதம்?” என்று இரவு உறங்கும்வரை கோபத்துடன் பேசிவிட்டு, தூங்கியெழுந்து காலையில் மீண்டும் அதையே தொடர்ந்தார்கள். கூட்டங் கூட்டமாய்க் குரைஷிகள் இஸ்லாத்தை எதிர்த்துப் பேசிக்கொண்டிருந்ததை அக்கூட்டங்களில் ஓர் இளைஞர் மிக ஆர்வமாய்க் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் முஸ்அப் இப்னு உமைர்!
மக்காவில் மிக அழகிய இளைஞர்களில் ஒருவர் அவர். நல்ல வசீகரத் தோற்றம். செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த கொழுந்து. வறுமையென்றால், “கிலோ என்ன விலை?” என்ற அளவிற்கு சொகுசும் ஆடம்பரமும் வசதியுமாய் அமைந்த வாழ்க்கை. குணாஸ் பின்த் மாலிக் என்பவர் அவரின் தாயார். கரடுமுரடான சுபாவம்; மக்களைப் பயமுறுத்தும் அளவிற்கு ‘அகன்ற வாய்’. ஆனால் மகன் மீது அளவற்ற பாசம். “அனுபவிடா மகனே! என் செல்லம்!” என்று தங்குதடையில்லாமல் சுகபோகத்தில் மகனைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். விலையுயர்ந்த ஆடைகள், சிறந்த கால்நடைகள், வேளா வேளைக்கு அருமையான உணவு, மிகச் சிறந்த நறுமணப் பொருட்கள் என்று எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி செல்வ சுகத்தில் திளைத்துக் கொண்டிருந்தார் மகன். முஸ்அப் கடந்து சென்ற தெருவில் நுழைபவர், “ஹும்! முஸ்அப் இப்னு உமைர் இந்தத் தெருவில் உலாத்திவிட்டுப் போயிருக்கிறார் போலிருக்கிறதே” என்று எளிதாய் மோப்பமிட்டுச் சொல்லிவிடுமளவிற்கு அவர் பூசிக்கொள்ளும் நறுமணம் மிதந்து கொண்டிருக்கும்.
சுருக்கமாய், இக்கால உவமை சொல்வதென்றால், பணக்கார வீட்டின் உல்லாசப் பிள்ளைகள் என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொள்ளாத குறையாய் லேட்டஸ்ட் ஸ்டைலின் அத்தனை அம்சங்களையும் சுமந்து கொண்டு, ஷாப்பிங் மால்கள், கடற்கரை என்று சுற்றிக்கொண்டிருக்கிறதே இன்றைய வாலிபக் கூட்டம், அப்படி மக்காவில் வலம் வந்து கொண்டிருந்தார் முஸ்அப்.
அக்காலத்தில் குரைஷிகள் கூடும் பொது இடங்களில் தவறாமல் முஸ்அப் உண்டு. முஹம்மது நபி, அவர் உரைக்கும் மார்க்கம், அதைப் பற்றிக் குரைஷிகளின் கோபம், ஆத்திரம், எதிர்ப்பு என்பதெல்லாம் அவர் காதில் விழுந்து கொண்டிருந்தது. கேட்கக் கேட்க ஆர்வம் தொற்றியது. ‘யார் அவர்? என்னதான் அது?’
ஆர்வம் ஏற்பட்டதும் முஸ்அப் இப்னு உமைர் விசாரிக்க ஆரம்பித்தார். தேடி விசாரித்துக் கொண்டு ஒருநாள் இரவு அர்கமின் என்பவரின் வீட்டை அடைந்து – கதவு தட்டப்பட்டது. அங்குக் குர்ஆன் வசனங்களை நபியவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவிப்பதும் பிறகு அனைவரும் சேர்ந்து ஏக இறைவனை வழிபடுவதுமான செயல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. முஸ்அபின் காதில் அவை விழுந்தன. எவை? குர்ஆன் வசனங்கள். அவை நேராய்ச் சென்று தாக்கியது அவரது இதயத்தை. அடுத்து அந்த மாற்றம் சடுதியில் நிகழ்ந்தது.
இது அற்புதம்! இது உண்மை! இதுவே ஈருலகிற்கும் வழிகாட்டி என்று இஸ்லாத்தினுள் நுழைந்தார் இளைஞர் முஸ்அப் இப்னு உமைர், ரலியல்லாஹு அன்ஹு!
நபியவர்களிடம் துவங்கிய பாலபாடம், அவரைச் செழுமைப்படுத்த ஆரம்பித்தது. முற்றிலும் புதிய முஸ்அபை அவரது நெஞ்சினுள் செதுக்கிக் கொண்டிருந்தன குர்ஆன் வசனங்களும் நபி மொழிகளும். சொல்லிக் கொள்ளும்படி எவ்வித இலட்சியமும் இன்றி உல்லாசமாய்த் திரிந்து, சொகுசை அனுபவித்துக் கொண்டிருந்த முஸ்அப், அப்படியே மாறிப்போனார்; தலைகீழாய்!
முஸ்அபின் தாயார் குணாஸ் தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்காத குறையாக மகனைக் கவனித்துக் கொண்டார் என்று பார்த்தோமல்லவா? அதே அளவு அவர் மூர்க்கமானவருங்கூட. முஸ்அப் தம் தாயின் மனோபாவத்தையும் கோபத்தையும் நன்கு உணர்ந்திருந்தவர். எனவே தாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதைத் தொடக்கத்தில் அப்படியே மறைத்துக்கொண்டார். வீட்டிலும் மக்காவிலும் வழக்கம்போல் உலாத்திக் கொண்டு, யாருக்கும் தெரியாமல் தொடர்ந்து தாருல் அர்கம் சென்றுவர ஆரம்பித்தார்.
ஆனால் எத்தனை நாள் மறைக்க முடியும்? ஒருநாள் குரைஷிகளில் ஒருவன் முஸ்அப், தாருல் அர்கத்துக்குச் செல்வதையும் புதியவர்கள் வழிபடுவதைப்போல் வழிபடுவதையும் கண்டு விட்டான். ‘முஸ்லிம்களுடன் சேர்ந்துவிட்டானா இவனும்! என்ன அநியாயம்? வைக்கிறேன் உனக்கு ஆப்பு’ என்று உடனே அவன் சென்று சேர்ந்தது முஸ்அபின் தாயாரிடம். தன் மகன்மேல் எத்தகு அன்பும் பாசமும் கொண்டிருந்த தாய் அவர்? அதெல்லாம் ஒரே நொடியில், வந்தவன் தெரிவித்த ஒரே வார்த்தையில் தலைகீழாகிப் போனது. ‘என்ன? என் மகன் முஸ்லிமாகி விட்டானா?’
வழக்கம்போல் சாதாரணயமாய் முஸ்அப் வீட்டினுள் நுழைய, துவங்கியது களேபரம். மூர்க்கமான தாய், இளமைத் துடிப்புள்ள மகன்; வட்டமேசை மாநாடு போலவா பேச்சுவார்த்தை நடந்திருக்கும்? ஏகப்பட்ட களேபரம். மகனை அடித்துத் துவைக்க கையை ஓங்கிய குணாஸ் நிறுத்திக் கொண்டு, “நீ சாதாரணமாய்ச் சொன்னால் கேட்க மாட்டாய். இரு வருகிறேன்” என்று சங்கிலியொன்றை எடுத்து வந்து வேலையாட்களின் உதவியுடன் அவரை வீட்டின் மூலையொன்றில் தள்ளி விலங்கிட்டார்.
“இஸ்லாத்தைக கைவிடு. இல்லையெனில் கை, கால்களில் விலங்குதான்.”
இளவரசனைப்போல் வலம் வந்து கொண்டிருந்தவர் தம் வீட்டிலேயே பெற்றத் தாயால் சிறை வைக்கப்பட்டார். உண்மையின் விலை என்றுமே மிக அதிகம். பரிசுக்கேற்பத்தானே போட்டியின் கடுமை? மறுமையின் பேரின்பம் என்பது பண்டிகைக்காலத் தள்ளுபடியுமல்ல; இலவச இணைப்புமல்ல. அந்த உண்மை முஸ்அபின் மனதினுள் திடம் வளர்க்க ஆரம்பித்தது.
இதனிடையே மக்காவில் இதர முஸ்லிம்கள் குரைஷிகளிடம் அடைந்துவந்த துன்பமும் உச்சநிலையை அடைந்து விட்டிருந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நபியவர்கள் ஒருகட்டத்தில் முஸ்லிம்கள் அபிஸீனியாவிற்கு (இன்றைய எத்தியோப்பியாவிற்கு)ப் புலம்பெயர அனுமதியளித்திருக்கும் செய்தி, வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த முஸ்அபின் காதில் வந்துவிழுந்தது. விலங்கு உடைத்துத் தப்பித்தார் முஸ்அப். துவங்கியது அவரது முதற் பயணம். இஸ்லாத்திற்காகப் புலம்பெயர்ந்த முதல் முஸ்லிம்களில் முஸ்அப் ஒருவரானார்.
சில காலம் கழித்து மீண்டும் மக்கா திரும்பினார் முஸ்அப். முதலில் பெற்றோருடன் அனைத்து சௌகரியங்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தவர் அவர். அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டுப் போனவர் இப்பொழுது திரும்பி வந்ததும் எவ்வித வசதியுமில்லை, குரைஷிகளின் இஸ்லாமிய எதிர்ப்பால் பிழைப்புக்கு வழியுமில்லை. வறுமை அவரை நன்றாகத் தழுவி அணைத்துக் கொண்டது.
அபிஸீனியாவிலிருந்து முஸ்அப் திரும்பிவந்ததை அறிந்ததும் மீண்டும் அவரைப் பிடித்துச் சிறைவைக்க முயன்றார் அவரின் தாய் குணாஸ். தன் சேவகர்களை அனுப்ப, இம்முறை சிலிர்த்து நின்று தன் எதிர்ப்பைத் தெரிவித்தார் முஸ்அப்.
“இறைவன் மீது ஆணையாகச் சொல்கிறேன். யாராவது என்மேல் கையை வைத்துப் பார்க்கட்டுமே, கொலை விழும்! ஒருவரையும் விடமாட்டேன்”
அந்த வார்த்தைகளின் உண்மை, அவர் முகத்தில் தெரிந்த வீரம் பார்த்துத் திகைத்து நின்றுவிட்டார் குணாஸ். நிச்சயம் முஸ்அப் அதைச் செய்வார் என்று தெரிந்தது.
கோபத்தின் உச்சியில் அவர் கத்தினார், “போ… இத்துடன் நம் உறவு முறிந்தது. இனி நான் உனக்கு அம்மாவே இல்லை”
நிதானமாய்த் தாயை நோக்கித் திரும்பிய மகன், “ஆனால் உளமாரச் சொல்கிறேன் அம்மா! நான் உங்கள்மீது அளவில்லாத பாசம் கொண்டுள்ளேன். நான் சொல்வதைக் கேளுங்கள். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை. முஹம்மது அவனுடைய இறுதித் தூதர். இதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். அதுபோதும்.”
“அந்த நட்சத்திரங்களின் மீது ஆணையாகக் கூறுகிறேன். உன் மதத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கெல்லாம் என் புத்தி கெட்டுப்போகவில்லை, என் தராதரமும் குறைந்துவிடவில்லை. எக்கேடோ கெட்டுப் போ. நான் உனக்கு அம்மாவும் இல்லை, நீ எனக்கு மகனும் இல்லை.”
அதற்குமேல் என்ன பேசுவது? வெளியேறினார் முஸ்அப் இப்னு உமைர், ரலியல்லாஹு அன்ஹு.
ஏழ்மை நிலையிலிருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்குக் குரைஷிகள் இழைத்த கொடுமைகள் ஒருபுறம் என்றால், முஸ்அபுக்குக் கடின வாழ்க்கை வேறு பரிமாணத்தில் தண்டனை அளித்தது. எப்பொழுதாவது கிடைக்கும் சொற்ப உணவை உண்டுவிட்டு, கந்தலாய் இருந்த துணியைக் கொண்டு மானத்தை மறைத்துக் கொண்டு மனம் நிறைய திருப்தியுடன், அசைக்க இயலாத இறைநம்பிக்கையுடன் முற்றிலும் வேறுபட்ட முஸ்அபாக உருவாக ஆரம்பித்தார் அவர்.
ஒருநாள் தோழர்கள் சூழ அமர்ந்திருந்தார்கள் நபியவர்கள். அங்கு வந்தார் முஸ்அப். அவரைக் கண்டதுமே தோழர்களின் தலை கவிழ்ந்தது. பலர் கண்களில் கண்ணீர். வேறொன்றுமிலலை, கோலம்! முஸ்அபின் அலங்கோலம்!
நவநாகரீக ஆடைகள் பூண்டு, திரியும் தெருவெல்லாம் நறுமணம் பரப்பிச் சென்ற முஸ்அப், வறுமையின் இலக்கணமாய்க் கிழிந்து தொங்கிய மோசமான ஆடையுடன் நின்றிருந்தார். அவரை அன்புடன் ஆதுரவாய் நோக்கிய நபியவர்கள், “மக்காவில் முஸ்அபைப் போன்று பெற்றோரால் சீராட்டி வளர்க்கப்பெற்ற இளைஞனை யாரும் கண்டிருக்க மாட்டார்கள். இப்பொழுது அவர் அனைத்தையும் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய நபிக்காகவும் உதறித்தள்ளிவிட்டு நிற்கிறார்” என்றார்கள்.
மகன் பெற்றோர்க்கு ஆற்றும் கடமையென்பது ஏக இறைவனையும் அவனுடைய இறுதித் தூதையும் சமரசம் செய்து கொள்வது அல்ல. பெற்றார், உற்றார் என யாராக இருப்பினும் அவர்களெல்லாம் ஏக இறைவனுக்கு அடுத்துத்தான் என்பதை உணர்வது. தெள்ளத்தெளிவாக உணர்வது. இல்லையெனில் –
அனைத்தும் விழல் நீர்!
-நூருத்தீன்
நாகப்பட்டினம் இலாஹிய்யா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி மே 2, 2015 அன்று வெளியிட்ட வெள்ளி விழா மலரில் பிரசுரமான கட்டுரை.