வெளிச்சப் புள்ளிகள்

by நூருத்தீன்

“உங்களுக்கு ஆறு மாதம்தான் அவகாசம். அதற்குள் ஏதாவது நீங்கள் சாதிக்க முடிந்தால் நல்லது”

தம் நாட்டிற்கு வந்திறங்கிய ஜெர்ரி ஸ்டெர்னினை (Jerry Sternin), சம்பிரதாய ஹாய், ஹலோவிற்குப் பிறகு வியட்நாமின் வெளியுறவுத்துறை அமைச்சர் இப்படித்தான் வரவேற்றார். ஜெர்ரியின் மனைவியும் பத்து வயது மகனும் வியட்நாமை ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்க, திகைப்புடன் அமைச்சரைப் பார்த்தார் ஜெர்ரி.

அது 1990 ஆம் ஆண்டு. Save the Children எனப்படும் குழந்தைகள் நல்வாழ்வு அமைப்பு அமெரிக்கவிலுள்ள அதன் நிர்வாக இயக்குனர் ஜெர்ரி ஸ்டெர்னினிடம், ‘வியட்நாமில் ஓர் அலுவலகத்தை நிறுவி அந்நாட்டுக் குழந்தைகளுக்கு உதவுங்கள்’ என்று பொறுப்பு அளித்து அனுப்பி வைத்திருந்தது. காரணம் வியட்நாமிய அரசாங்கம் ‘எங்களுக்கு உதவுங்கள்’ என்று Save the Children-க்கு அனுப்பியிருந்த வேண்டுகோள். ஆனால், அரசாங்கத்தில் உள்ள பலருக்கும் மேலை நாட்டின் அந்த அமைப்பு தங்கள் நாட்டிற்குள் வருவதில் உடன்பாடில்லை. வேண்டா வெறுப்பாகத்தான் தலையசைத்திருந்தார்கள். வந்து சேர்ந்தார் ஜெர்ரி.

வியட்நாமில் அச்சமயம் நிலவிய பெரும் பிரச்சினை ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள். அதைத் தீர்க்கத்தான் ‘உங்களுக்கு ஆறு மாதம் அவகாசம்’ என்றார் அமைச்சர். ஜெர்ரி தம்மை அனாதரவாக உணர்ந்தார். அந்நாட்டு மொழி தெரியாது; உதவிக்கு வெகு சொற்பமான பணியாட்கள்; அவர்கள் பணிபுரிவதற்குப் போதுமற்ற வசதி. இவ்வாறான நிலையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்றால்? ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிலோ ஹார்லிக்ஸ் கரைத்துக் கொடுத்து தீர்க்கும் பிரச்சினையா ஊட்டச்சத்து குறைபாடு?

அதனால் முதலில் பிரச்சினையைப் புரிந்துகொள்ளத் தகவல்களைத் திரட்டினார் ஜெர்ரி. குவித்து வைத்துப் படித்ததில் ஊட்டச்சத்து குறைபாடு என்பது வியட்நாமில் நிலவும் பற்பல இதர பிரச்சினைகளுடன் பின்னிப் பினைந்துள்ளது புரிந்தது.

மூன்றாம் உலக நாடுகளுக்கே உரித்தான, மோசமான சுகாதாரக் கட்டமைப்பு, நீக்கமற வியாபித்திருக்கும் வறுமை, கானல் நீராகிப்போன சுத்த நீர் வசதி, இதுபோல் பல்வேறு காரணங்கள். கிராமப்புற மக்களுக்கோ, ‘ஊட்டச்சத்தா? அப்படியென்றால் என்ன?’ என்ற அளவிற்கு விழிப்புணர்வு.

வறுமை, சுத்த நீர், சுகாதாரம், துப்புரவு இவையெல்லாம் பிரச்சினையின் அடிவேர்தாம்; அதில் சந்தேகமே இல்லைதான். ஆனால், அவை அனைத்தையும் சரி செய்தால்தான் பல இலட்சம் குழந்தைகளின் ஊட்டச்சத்து மேம்படும், அவர்கள் ஆரோக்கியம் அடைவர் என்று அறிக்கை அளித்துவிட்டுப் போய்விட முடியுமா? அல்லது அவை அனைத்தையும் தீர்த்தபின் நாங்கள் உதவுகிறோம் என்றால் அது ஆகக் கூடிய காரியமா? அதுவும் ஆறே மாதத்தில்! உள்ள வேலைக்குப் போதுமளவு நிதிவசதி இல்லை என்பது தனிக்கதை. யோசித்தார் ஜெர்ரி.

முதல்கட்டமாகக் களத்தில் இறங்கி நிலைமையை ஆராய்வோம் என்ற முடிவுடன் கிராமப்புறங்களுக்குச் சென்று அங்குள்ள தாயார்களைச் சந்தித்தார். அவர்களைச் சிறு குழுக்களாகப் பிரித்து, ‘உங்கள் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் எடை போடுங்கள். அத்தகவல்களைச் சேகரித்து என்னிடம் தாருங்கள்’ என்று முதல் பணியை அளித்தார். அவர்களும் கிடுகிடுவென்று அப்பணியை முடித்தனர்.

‘மிக மிக வறுமையான குழந்தைகள் யாரேனும் அதே நிலையில் உள்ள மற்ற குழந்தைகளைவிட ஆரோக்கியமாகவும் வளர்ச்சியில் அவர்களை மிகைத்தும் இருக்கிறார்களா?’ என்று விசாரித்தார்.

அப்பெண்கள், தலையசைத்து ஆமோதித்தார்கள் “ஆமாம், ஆமாம், ஆமாம்”.

வியப்படைந்தார் ஜெர்ரி. அப்படியென்ன வித்தியாசம்? அக்கிராமங்களில் அனைத்துக் குடும்பங்களுக்கும் அடிவேர் பிரச்சினை ஒன்றாக இருக்கும்போது சில குடும்பத்துப் பிள்ளைகள் மட்டும் ஆரோக்கியமாக உள்ளனர். எனில், இந்த ஊட்டச்சத்துப் பிரச்சினையைத் தீர்க்க நிச்சயமாக மாற்று வழி ஒன்று உள்ளது. அனைத்துப் பிரச்சினைகளையும் மீறி சில பிள்ளைகளுக்கு மட்டும் ஆரோக்கியம் சாத்தியமாகியிருக்கிறது எனில் அது மற்ற பிள்ளைகளுக்கும் சாத்தியம். அதுதான் இப்பிரச்சினைக்கான வெளிச்சப் புள்ளி என்பதை உணர்ந்தார் ஜெர்ரி.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள பிள்ளைகளின் குடும்பங்கள் சிலவற்றை முதலில் தேர்ந்தெடுத்து, அவர்களை நேரில் சந்தித்தார். அவர்களது உணவு பழக்க வழக்கத்தை அறிந்துகொள்ள அக்குடும்ப உறுப்பினர்களிடம் பேசினார். அவர்கள் அனைவரிடமும் பொதுவாகத் தென்பட்ட பழக்கம் இரண்டு வேளை உணவு. அதுவும் நல்ல அரிசியில் குழந்தைகளுக்கு உகந்த வகையில் குழைவாகச் சமைக்கப்பட்ட உணவு. மற்றபடி வேறு எதுவும் அசாதாரணமாகத் தென்படவில்லை.

ஆரோக்கியமான குழந்தைகளின் இல்லங்களை அடுத்து அணுகினார். அவர்களது நடைமுறையை விசாரித்தார். சில வியப்பான தகவல்கள் அதில் கிட்டின. அக்குடும்பங்களின் தாயார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நான்கு வேளை உணவு புகட்டினார்கள். உணவின் அளவு என்னெவோ, முந்தைய குடும்பங்களின் இரண்டு வேளை உணவின் அளவுதான்.  ஆனால் அதை நான்கு வேளைக்குப் பிரித்து அளித்தார்கள். உணவின் ஊட்டச்சத்து பிள்ளைகளின் உடலில் தங்குவதற்கு இது பெருமளவு உதவுகிறது என்பதைக் கண்டறிந்தார் ஜெர்ரி.

அடுத்து முந்தைய குடும்பங்களின் தாயார்கள் தங்கள் பிள்ளைகள் தங்களுக்கு வேண்டிய அளவு தாமாக உண்னட்டும் என்று விட்டுவிட, பின்னவர்களின் தாயார்களோ தாங்களே பிள்ளைகளுக்குப் பரிமாறினார்கள்; நிலா காட்டி, பூச்சாண்டி பயமூட்டி எப்படியாவது வற்புறுத்தி உணவை ஊட்டி விடவும் செய்தார்கள்.

இவையெல்லாம் இரண்டு தரப்பிற்கும் இடையே இருந்த குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள்தாம் என்றாலும் மற்றொரு வித்தியாசம், வெகு முக்கியமான் வித்தியாசம் ஒன்று இருந்தது. அது உணவு முறையில் நுணுக்கமான மாற்றம். பண்ணை நீர்களில் சிறுசிறு இறால்கள் இருக்கும் போலும் – அவற்றையும் நெல் வயல்களில் திரியும் சின்னஞ்சிறு நண்டுகளையும் பொறுக்கி எடுத்து வந்து, அவற்றுடன் இனிப்புக் கிழங்குகளையும் சில கீரைகளையும் சோறுடன் சேர்த்து சமைத்து அவற்றைத்தாம் அவர்கள் பிள்ளைகளுக்கு அளித்து வந்தனர். சோறுடன் அவர்கள் கலக்கும் இந்த உப ஆகாரத்தை ஏனைய குடும்பங்கள் கீழ்த்தரமான உணவாகவும் ஏளனமாகவும் கருதி வந்தன. ஆனால் அவைதாம் அக்குழந்தைகளுக்குத் தேவையான புரதச் சத்தையும் வைட்டமின்களையும் புகட்டுகின்றன என்பது ஜெர்ரிக்குத் தெளிவாகப் புரிந்தது.

இந்த ரகசியம் புரிந்ததும் அனைத்துக் குடும்பங்களும் அதைப் பின்பற்ற ஜெர்ரி செயல்படுத்திய திட்டம் அருமை.

அனைவரையும் அழைத்து, ‘உங்கள் பிரச்சினை இதான். இதோ இவர்களைப் போல் சமைத்து ஊட்டுங்கள். உங்கள் பிள்ளைகளும் புஷ்டிவான்கள்’ என்று அறிவித்தால், ‘ஹும்… அதெல்லாம் அவர்களுக்குச் சரிப்படும். எங்கள் வீட்டிற்கு அது ஒத்துவராது’, ‘இதென்ன புதிதாகக் கண்டதையும் பொறுக்கி எடுத்துச் சோறில் சேர்த்துச் சமைப்பது’ போன்ற ஒவ்வாமை, ஒத்துழையாமை முணுமுணுப்புகள் எழக்கூடுமல்லவா? சோற்றுப் பானையில் தலையை விடுவது இலேசுப்பட்ட காரியமா என்ன? அதனால், அந்தப் புதிய எளிய வழிமுறைக்கு அவர்களை இயல்பாகப் பழக்கப்படுத்தினார். எப்படி?

சில கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, அங்குள்ள குடும்பங்களைப் பத்துப் பத்தாகப் பிரித்துக்கொண்டார். அவர்கள் ஒவ்வொரு நாளும் கீற்றுக் கொட்டகை ஒன்றில் குழும வேண்டும்; வரும்போதே இறால், நண்டு, கிழங்கு, கீரைகளைச் சேகரித்து எடுத்து வர வேண்டும்; அனைவரும் சேர்ந்து அங்கு அவற்றைக் கலந்து சோறு சமைக்க வேண்டும். ஒருவருக்கொருவர் கைகோர்த்து, இணைந்து ஊக்கமுடன் செயல்பட அது தூண்டுகோல் அளித்து, அத்திட்டம் வேலை செய்தது. அடுத்த ஆறு மாதத்தில் அக்கிராமங்களில் உள்ள 65 சதவிகித குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றம் தென்பட்டது.

14 கிராமங்களில் அந்தப் பரீட்சார்த்த முயற்சி வெற்றி பெற்று அது வியட்நாமில் உள்ள 265 கிராமங்களுக்கும் பரவி, 20 இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு அதனால் நற்பயன்.

நிர்வாக இயல் சார்ந்த, Switch எனப்படும் நூலில், அதன் ஆசிரியர்களான Chip Heath, Dan Heath சகோதரர்கள் இந்நிகழ்வை தனிப்பகுதியாகவே பகிர்ந்துள்ளார்கள்.  இந்த வெளிச்சப் புள்ளிகள் வெறுமே நிர்வாக இயலுக்கு மட்டுமானவையா?

தினசரி வாழ்க்கையில் – குடும்பமாகட்டும் வெளியுலகமாகட்டும் – எப்பிரச்சினையை நாம் அணுகினாலும் அதன் அடிவேராகப் பிரச்சினைகள் பல இருக்கத்தாம் செய்யும். அவை எளிதில் களைய முடிவதாக இருந்தால், அதற்கான வாய்ப்புகள் இருந்தால் நன்று; களைந்துவிடலாம். ஆனால் பல நம் சக்திக்கு அப்பாற்பட்டவை. அரசியல் சகதிகள் நிறைந்தவை. அவற்றைக் கண்டு, எதுவும் சரிப்படாது, சிஸ்டமே சரியில்லை என்று ஒதுங்கிவிடாமல் ஒளிக்கீற்றைத் தேடினால் சில வெற்றிகள் சாத்தியம் என்பதே ஹீத் சகோதரர்கள் பரிந்துரைக்கும் Bright Spots – வெளிச்சப் புள்ளிகள்.

விடிந்ததும் உங்கள் படுக்கைக்கு காபியோ, தேநீரோ வராவிட்டால் அங்கிருந்ததே கூட நீங்கள் வெளிச்சப் புள்ளிகளைத் தேட ஆரம்பிக்கலாம்.

-நூருத்தீன்

கல்கோனா மின்னிதழில் 16-30 அக்டோபர் 2020, வெளியான கட்டுரை

அச்சுப் பிரதியை வாசிக்க க்ளிக்கவும்


Creative Commons LicenseThis work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment