“சுய மரியாதை மக்கள் இஸ்லாத்தை அழிப்பதாக எங்கே கூறினார்கள்?” என்று சவால் விடுக்கும் பேர்வழிகளுக்கு இக் கட்டுரை அர்ப்பணம்.

மேற்கு மதுரைத் தபாலாபீஸின் 20-6-1952 முத்திரையுடன், 19-6-52 தேதியிடப்பட்ட ஒரு “மொட்டைக் கார்டு” எமது ஆபீஸுக்கு 21௳ மாலை வந்து சேர்ந்தது. அக் கடிதத்திலுள்ள எழுத்துப் பிழைகளைத் திருத்திப் படித்தால், இப்படிக் காணப்படுகிறது:-

“அல்ஹாஜ் பா. தாவூத்ஷா, தாருல் இஸ்லாம் பத்திரிகை ஆசிரியர் அவர்கள் சமூகத்திற்குச் சிறுவன் A. R. இமாம்கான் வேண்டிக் கொள்வது: 1952 ஜூன் ௴ பத்திரிகையில் 16-ம் பக்கத்தில் நாஸ்திகம் நசித்துவிட்டது என்ற தலைப்பின் கீழ் இருந்த அறிக்கையைப் படித்தேன். அதில், இஸ்லாமிய பள்ளிவாசல்களைப் பள்ளிக்கூடங்களாக்குங்கள், ஆண்டவனைத் தொழும் ஆலயங்களை ஆலைகளாக ஆக்குங்கள், குர்ஆனைக் கொளுத்தி விடுங்கள் என்று சு. ம. க்கள் பல கூட்டங்களில் பேசியிருப்பதாய்க் குறிப்பிட்டிருந்தீர்கள். இது விஷயத்தில் கொஞ்சம் விவாதம் நடந்ததின் பேரில், இதன் ஆதாரம் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஆகையால், எந்த நகரில், எந்தத் தேதியில் யாரால் அப்படிப் பேசப்பட்டது? ஏதாவது தீர்மானம் செய்யப்பட்டதா? அல்லது புஸ்தகம் பத்திரிகை மூலமாக ஆதாரமிருக்கிறதா? என்பதைத் தங்கள் பத்திரிகை மூலமாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.”

கையொப்பமிடப்படாத மொட்டைக் கடிதங்களைப் பாராட்டுவதே எம் வழக்கமில்லை யென்றாலும், மேலே எடுத்துக் காட்டப்பட்ட கார்டில் மிகவும் முக்கியமான பிரச்சினையைப் பற்றி வினா விடுக்கப்பட்டிருப்பதாலும், இப்படிப்பட்ட சந்தேகம் இன்னம் பலரின் உள்ளத்துள்ளும் எழுந்திருக்கக் கூடுமாதலாலும், இந்த விளக்கமான கட்டுரையை ஆதாரங்களுடன் எடுத்தெழுத வேண்டிய அவசியம் நேரிட்டுவிட்டது.

சு. ம. க்கள் இஸ்லாத்தின் பாதுகாவலர்களென்றும், நண்பர்களென்றும், அபிமானிகளென்றும், ஆதரவாளர்களென்றும் அறியாமையால் கருதக் கூடியவர்களுக்கு மட்டுமே முற்கூறியது போன்ற சந்தேகம் எழுமன்றி, ஆதிமுதலே அந்த நேர்மையற்றவர்களின் நயவஞ்சகப் பொய்யுறவைப் பற்றிச் சிறிது கூர்ந்து கவனித்து வந்த அறிஞர்களுக்கு அத்தன்மைத்தான வீண் சந்தேகம் கிளம்புவதற்கு வழியில்லை. ஏனென்றால், சு. ம. க்காரர்கள் என்றைக்குமே நாஸ்திகர்களாக விளங்கி வருகிறவர்கள். பக்கா ஆஸ்திகமாகிய இஸ்லாம் அந் நாஸ்திகர்களின் பரம விரோதியாகத்தான் விளங்கி வருமன்றி, வெளி வேஷத்துக்காக வாயளவில் இஸ்லாத்தைப் புகழ்கிற சு. ம. க்காரர்களுக்கு அது நண்பனாக ஆகிவிட முடியாது. இதுதான் அடிப்படை.

பாக்கிஸ்தான் பிரிக்கப்பட்ட பின்னர்த் தென்னாட்டிலுள்ள முஸ்லிம் வாலிபர்களுக்கு அரசியலில் கலந்து கொள்ள ஒரு வழியில்லாமற் போய்விட்டமையால், 1947-க்குப் பின் தென்னாட்டுப் பிரசங்க மேடைகளை அலங்கரித்த திரு ஈ. வே. ரா. நாய்க்கர், திரு அண்ணாத்துரை, இன்னம் இவர்களின் சிஷ்ய கோடிகள், ஆரியர்களையும் வட நாட்டினரையும் சபாலங்காரமாகத் தாக்கிப் பேசிக் கடவுள் ஒழிப்பைப் பற்றி நீண்ட பிரசங்கங்கள் புரியும் போதெல்லாம் நம் தென்னாட்டு முஸ்லிம் இளவல்கள், ஹிந்து மதம் வெகு உன்னதமாகத் தாக்கப்பட்டதை நுகர்ந்து மகிழ்வதற்காகவும், இன்னம் வேறு பல சுயநயக் காரணங்களுக்காகவும், கூட்டங் கூட்டமாகச் சென்று அப்பிரசங்கிகளை ஊக்கி விட்டார்கள். (சில சமயங்களில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தலைவராய ஜனாப் முஹம்மத் இஸ்மாயீல் சாஹிபே கூட அப்படிப்பட்ட கூட்டங்களின் மேடைகளில் பிரசன்னமாகி வீற்றிருந்ததுமுண்டு.)

சரியான முறையில் வழிகாட்டப்படாமல், இஸ்லாமென்றால் இன்னதென்று அறிவிக்கப் பெறாமல் ஓரளவுக்குப் பாமரர்களாகத் திரிந்த நந் தென்னாட்டு முஸ்லிம் வாலிபர்களை நாஜூக்காகத் தங்கள் கள்ளவலைக்குள்ளே விழச் செய்வதற்காக அந்த ஈ. வே. ரா. நாய்க்கரும் அவருடைய தளபதியாக விளங்கி வந்த அண்ணாத்துரையும் கபடமாகவும் வஞ்சகமாகவும், எந்த எந்த மேடைகளிலே ஹிந்து மதத்தையும் ஹிந்துக் கடவுளையும் ஒழித்துக் கட்டவேண்டுமென்று மிக மூர்க்கமாகப் பேசினார்களோ அங்கங்கெல்லாம் இஸ்லாத்தை அளவு மீறிப் புகழ்ந்தும் பாக்கிஸ்தான் பெற்ற காயிதெ அஃலத்தை மெச்சிப் பேசியும், இணையற்ற ஏக சகோரத்துவத்தை இவ்வுலகில் கண்ணுக்கு மெய்யாக நிலைநாட்டி வைத்த நபிகள் திலகத்தையும் (ஸல்) அவர்களுடைய வாரிஸ்களையும் ஏத்தி வாழ்த்தியும் வாழுத்தியும், உலகத்தில் மனிதனாகப் பிறந்தவன் இஸ்லாத்தைத் தவிர வேறு எந்த மதத்தையும் கடைப்பிடிக்க அறவே இயலாதென்று வருணித்தும் கர்ஜனை புரிய ஆரம்பித்தார்கள். இந்த முதல் நம்பர் முனாபிக்தனமான முகமன்களுக்கு விஷயந் தெரியாத பாமரர்கள் மட்டும் மயங்கி மதியிழந்து விடவில்லை; ஆனால், நல்ல ஸாலிஹான அமல்களைச் செய்யக் கூடிய பக்கா முஸ்லிம் பெரியார்களும் சிறியார்களுங் கூடச் சேர்ந்து தங்களுடைய சிந்தனா சக்தியைத் தாத்காலிகமாக இழந்துவிட்டார்கள். இல்லையேல், முற்சொன்ன ஜனாப் முஹம்மத் இஸ்மாயீல் ஏன் அப்படி ஈ. வே. ரா. குழுவுக்கு உதவி புரிந்திருக்க வேண்டும்?

இவ்விதமாக, சு. ம. க்களின் ஹிந்து மத ஒழிப்பு என்னும் பிரசாரப்போர் தன் முதல் கட்டத்தை விட்டு, இரண்டாவது கட்டமாகிய, இஸ்லாத்தை நயவஞ்சகமாய்ப் புகழ்ந்து முஸ்லிம்களை ஏமாற்றுவது என்னும் அம்சத்தைப் பெற்றுக் கொண்டு விட்டது. இந்த இரண்டாவது திட்டப்படி சு. ம. க்கள் கூட்டங்கள் கூட்டுவதும், வருடமொரு முறை வருகிற மீலாத் மகாநாடுகளுக்கு ஒவ்வோரூர்க் கூட்டத்துக்கும் சென்று சேர்வதும், வாசா மகோசரமாய்ப் பிரசங்கம் புரிவதுமாய் முஸ்லிம்களை ஏமாற்ற முற்பட்டனர். லா இலாஹா இல்லல்லாஹ் என்னும் தௌஹீதை நிலைநாட்டிச் சென்ற முஹம்மத் நபியவர்களின் (ஸல்) பெருமையைப்பற்றி, ஆண்டவனென்று ஒருவன் அறவே கிடையான் என்று குபுரியத்தில் ஊறிக்கிடக்கிற சு. ம. நாஸ்திகர்களை ஏன் அந்த மீலாத் மகாநாடுகள் நடத்தியவர்கள் மேடைமீதேற்றினார்களோ, எமக்குத் தெரியாது. ஆனால், தினவெடுத்துக் கிடக்கிற நாக்களைத் தீட்டிக் கொள்ளவும் பசியெடுக்கிற வயிற்றுக்கு நல்ல பிரியாணி சாப்பாட்டைத் துருத்திக் கொள்ளவும் மீலாத் மகாநாடுகளும் மீலாத் விருந்து விழாக்களும் தாராள இடந்தந்தமையால், அந்த நாஸ்திக சு. ம. க்கள் நயவஞ்சகமாக இஸ்லாத்தையும் முஹம்மத் நபியவர்களையும் (ஸல்) வாயாரப் புகழ்வதுபோல் புகழ்ந்து, முஸ்லிம்களின் நல்லெண்ணத்தைக் கவர்ந்து கொண்டார்கள்.

பிறகு மூன்றாவது கட்டம் ஆரம்பமாயிற்று, அதுதான் இஸ்லாத்தையும் சேர்த்து, எல்லா மதங்களையும் இந்தத் திராவிட நாட்டிலிருந்து அடியோடு ஒழித்துவிட வேண்டுமென்கிற கட்டமாகும். இதற்கிடையில், அந் நாஸ்திக சு. ம. க்கள் தங்களுக்கு நிரம்பச் சிஷ்யர்கள் ஏற்பட்டு விட்டார்களென்பதை உணர்ந்து கொண்டமையாலும், கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும், அல்லது இப்போதுதான் பட்டம் பெற்றிருக்கும் முஸ்லிம் மாணவர்களான யுவர்களை – இஸ்லாமென்றால் இன்னதென்றே கற்காத இளவல்களை – நெடுகவே சிறுகச் சிறுகத் தங்கள் பத்திரிகைகள் வாயிலாகவும் நூல்கள் மூலமாகவும் கடவுளென்று ஒன்றுமே கிடையாது என்றும், மதம் வெறும் அபின் மயக்கமென்றும், வெளிநாட்டினர் இந்த மதமென்னும் விஷத்தை இங்குக் கொணர்ந்து நுழைக்குமுன் சகல திராவிடர்களும் மதமின்றிச் சமமாக வாழ்ந்து வந்தனரென்றும் பிரசாரம் செய்து செய்து தங்கள் வழிக்கு வசப்படுத்திக் கொண்டமையாலும், இனி முஸ்லிம் ஆஸ்திகர்கள் அத்தனை பேரும் ஒன்று கூடினாலும் தங்களை அணுவளவம் அசைக்க முடியாதென்று முடிவு செய்து கொண்டு இஸ்லாத்தின் தலைமீது கையைப் பகிரங்கமாக வைக்க ஆரம்பித்தார்கள்.

1949-ஆம் வருஷ மார்ச் மாதம். அப்போது சென்னை மாகாணத் தலைமை மந்திரியாயிருந்த திரு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு அந்தப் பதவியில் பலமான ஆட்டங் கண்டுவிட்டது. எங்கெங்கும் கூட்டங்கள் நடந்தன. 31-3-49 வியாழனன்று மாலை ஐலண்டு கிரவண்ட் என்னும் ஜிம்கானாத் தீவு மைதானத்திலே பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடின பிரம்மாண்டமான கூட்டத்தை ராமசாமி நாய்க்கர் நடத்தினார். அரசியல் விஷயமாகவும் திரு. ரெட்டியார் விஷயமாகவும் பேசிய பேச்சுக்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், அவருடைய நீண்ட பிரசங்கத்தின் நடுவே புரிந்த விஷமத்தைப் பாருங்கள்:-

“அது மட்டுமா? திராவிட நாட்டில் கடவுளுக்கும் மதத்திற்கும்கூட இடம் கொடுப்பதில்லை என்று தீர்மானித்துவிட்டோம்! சொல்லட்டுமே நம் பண்டித சிகாமணிகள், திராவிடனுக்குக் கடவுளோ மதமோ பண்டைக் காலத்தில் இருந்ததா என்று?”

திரு ஈ. வே. ரா. இந்த வார்த்தைகளைக் கூறியபோது, அவருடைய வலக்கரம் போன்ற தளபதி அண்ணாத்துரை என்பவர் (இப்போது திராவிட முன்னேற்றக் கட்சியின் தலைவராக விளங்குபவர்) அந்த நாய்க்கருக்கு இடப்புறத்தில் வீற்றிருந்தார். இந்த மாதிரி, திராவிட நாட்டில் (அல்லாஹ் உட்பட) எந்தக் கடவுளுக்கும், (இஸ்லாம் உட்பட) எந்த மதத்துக்கும் சிறிதும் இடங்கொடுப்பதில்லையென்று பக்கா நாஸ்திகர்களான நாங்கள் தீர்மானித்து விட்டோம்!’ என்று பலரறியப் புரியப்பட்ட பிரசங்க வார்த்தைகளுக்கு என்ன அர்த்தமென்பதை எமக்கு மொட்டைக் கடிதமெழுதிவிட்ட “A. R. இமாம்கான்” என்னும் மதுரைச் சிறுவர் சற்றுச் சிந்தித்துப் பார்ப்பாராக. 31.3.1949-இல் கூறிய அச்சபதமிக்க சொற்கள் இன்றுவரை வாபஸ் பெறப்படவுமல்லை; அல்லது ஈ. வே. ரா. குறிப்பிட்டது இஸ்லாத்தையும் அல்லாஹ்வுயும் நீக்கியதாகும் என்று அவராலோ அல்லது அண்ணாத்துரையாலோ விளக்கப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இந்த அகம்பாவமிக்க அறைகூவலை நாம் 1949 மே மாத ‘தாருல் இஸ்லாம்’ தலையங்கத்தில் வன்மையாகக் கண்டித்துத் தாக்கி விட்ட சவாலுக்கு நாளிதுவரை நாய்க்கரோ அண்ணாத்துரையோ பதில் கூறவும் இன்றுகாறும் முற்படவில்லை.

இவ்விதமாக, இஸ்லாம் என்னும் பெயரை வெளிப்படையாகக் கூறாமல், “சகல மதங்களையும் அழிக்கப்போகிறோம்!” என்று பறையறைவதையும், அல்லாஹ் என்னும் பெயரைத் திறந்த சொற்களால் குறிப்பிடாமல், “எல்லாக் கடவுள்களையும் ஒழிக்கப் போகிறோம்!” என்று மார்தட்டிக் கூறுவதையும் விடப் பொல்லாத தீர்மானமோ, பிரசாரமோ வேறென்ன இருக்கக்கூடுமென்று நினைக்கின்றீர்கள்?

அந்த ஐலண்டு கிரவுண்டு “மத, கடவுள் ஒழிப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” குறித்துள்ள நாய்க்கரின் பிரசங்கம் இப்படி மறுதலிக்கப்படாமலிருக்கின்ற நிலையிலேயே, அவருக்கும் அவருடைய தளபதிக்கும் இடையே பிணக்கேற்பட்டு விட்டது. கிழவர் திராவிடக் கழகம் என்றொரு கழகம் அமைத்துக் கொண்டிருப்பதால், அவரை விட்டுப் பிரிந்த வாலிபராகிய அண்ணாத்துரை திராவிட முன்னேற்றக் கழகமென்றொரு புதிய கழகத்தைச் சிருஷ்டி செய்துகொண்டு விட்டார். அது முதல் சு.ம. க்களின் திட்டம் நான்காவது கட்டத்துக்குள் நுழைய ஆரம்பித்தது.

இந்த நாலாவது கட்டம் என்னவென்றால், சு. ம. க்களின் இரு பிரிவுகளாகிய “முன்னேற்றக் கழகமும்,” “பின்னேற்றக் கழகமும்” தனித் தனியே தன் தன்னால் இயன்ற அளவுக்கு முஸ்லிம் வாலிபர்களைத் தன் தன் கட்சிக்கு ஈர்த்துக் கொள்ள முற்பட்டதுடனே, இதுவரை திரைமறைவில் சூசகமாக, ஜாடையாக இஸ்லாத்தைத் தாக்கி வந்த அந்தச் சு. ம. க்கள், இப்பால் இந்த முஸ்லிம் சிஷ்யர்களைவிட்டே பகிரங்கமாக இஸ்லாத்தைத் தாக்கச் சொல்லிப் பயிற்சி கொடுத்து, அவர்களை எழுதியனுப்பச் சொல்லித் தங்கள் பத்திரிகைகளில் பிரசுரித்து, வடநாட்டு ஆரியர்கள் புகுத்தியதாகக் கருதப்படும் ஹிந்து மதத்தை இவர்கள் தாக்குவதே போன்ற அதே பாஷையில், அரபிகளால் கொணர்ந்து இறக்குமதி செய்யப்பட்டதாக வருணிக்கப்படும் இஸ்லாம் மதமும் எல்லை வரம்பின்றிக் கண்மூடித்தனமாகவும், கபோதித்தனமாகவும் தாக்கப்பட்டது. இதன் விளைவு என்னவாயிற்றென்றால், தி. மு. கழகத் தலைவர் திருநெல்வேலி ஜில்லாவிலே சுற்றுப் பிரயாணம் செய்துவந்த பின்னர், முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஊராகிய மேலப்பாளையம் என்னும் பெரிய நகரின் மஸ்ஜித் சுவர்களிலே இறைவனைத் தூஷித்தும், இறுதி நபியை இகழ்ந்தும் கேவலமான வார்த்தைகள் கிறுக்கி வைக்கப்பட்டன. “ஸிராத்துல் முஸ்தகீம் பாலம் எத்தனை மூட்டை ஸிமெண்டினால் கட்டப்பட்டது?” என்னுமா போன்ற குறும்புக் கேள்விகள் விடுக்கப்பட்டன. அவ்வூர் வாலிப முஸ்லிம்களால், “பள்ளிவாசல்களை இடித்துப் பள்ளிக்கூடங்களாக்குங்கள்! தொழுகையை விட்டுத் தொழிலுக்குச் செல்லுங்கள்! ஆண்டவனை மறந்து ஆலைகளுக்கு ஏகுங்கள்! குர்ஆனைத் கிழித்தெறிந்து குறளைப் படியுங்கள்!” என்னுமா போன்ற துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன; சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன; கட்டுரைகள் வரையப்பட்டன; அண்ணாத்துரையார் ஹிந்து ஆலயங்களையும் ஹிந்துக் கடவுளையும் எதுகை மோனைகளுடன் தாக்குகிறாரே, அதே நடையில்!

மயிலைக் கண்டு வான்கோழி தன் சிறகை விரித்தாடியதாக உவமை கூறுவதையே, இந்த முஸ்லிம் வாலிபர்களென்போர் இஸ்லாத்தையும் தாக்க முற்பட்ட கதை வந்து முடிந்தது.

நாய்க்கரின் சிஷ்யர்கள் அதைவிட இன்னம் ஒரு படி பின்னே சென்று – (ஏனென்றால், அவருடைய கட்சி ‘முன்னேற்றக் கட்சி’ யன்றல்லவா?) என்னென்ன இயம்புகின்றார்களென்பதெற்கு அத்தாக்ஷியாகத்தான் சென்ற ரமலான் ஈத் மலரில் (ஜூலை மாத இதழில்) எஸ். டி. பாட்சா என்னும் ஓர் இளையான்குடி நாஸ்திகரின் பிதற்றல்களை எடுத்துப் பிரசுரித்துத் தலையங்கம் எழுதியிருந்தோம்.

இவ்வளவையம் நாம் எடுத்துக் காட்டியுங்கூட இன்னமும் சு. ம. க்கள் இஸ்லாத்தை ஒழிப்பதாகக் கூறுகிறவர்களல்லர் என்று அந்த மதுரை இமாம்கானைப் போன்றவர்கள் வலியுறுத்துவரென்றால், இன்னம் ஒரே ஓர் உதாரணத்தை எடுத்துக்காட்ட ஆசைப்படுகிறோம். 19/20-6-1952 சென்னை “விடுதலை”ப் பத்திரிகையில், பண்ருட்டி இப்ராகீம் என்னப்படுபவர் ஆசிரியர்க்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதமொன்று பிரசுரமாகியிருக்கிறது. அதில் அந்தப் பண்ருட்டி இப்ராகீம் என்பவர் எஸ். டி. பாட்சாவின் ஊத்தையுளறல்களை அப்படியே வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்திருப்பதுடன், “இந் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட மாயம், மந்திரம் முதலிய வித்தைகளில் கைதேர்ந்த முஸ்லிம் மதப் பிரசாரகர்கள் மூட நம்பிக்கையில் மூழ்கி இருந்த இந் நாட்டு மக்களிடம் அம் மூடத்தனத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மாய ஜால வித்தைகள் செய்து காட்டி ‘இவை அனைத்தும் ஆவது அல்லாஹ் ஒருவனின் அருளினாலதான்’ என்று கூறி மக்களை மயக்கி, மதத்தைப் பரப்பினார்களே யொழிய மக்களே விருப்பப்பட்டு அம் மதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படி விரும்பி ஏற்றுக்கொண்டிருப்பார்களேயானால், அர்த்தம் தெரியாத அவர்களின் குரானைப் படிக்கக் கற்றுக்கொண்டவர்கள் ஏன் அவர்களின் பேசும் மொழியாகிய உருதைக் கற்றுக் கொள்ளவில்லை? …. திராவிட முஸ்லிம்களே! நீங்கள் திராவிடர் கழகத்துக்குக் கடமைப்பட்டவர்கள். தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்த வேண்டியவர்கள் … இநக் கழகத்தின் அங்கத்தினராகி ஏனைய முஸ்லிம் தோழர்களுக்கும் வழிகாட்டுங்கள். ஒப்பற்ற தலைவராம் எங்கள் பெரியாரின் சொல்லைப் பின்பற்றுங்கள். ஒரு சில தோழர்கள் … திராவிடன் என்று சொல்லிக் கொள்ளும் நீ ஏன் இன்னும் முகம்மதியனாகவே இருக்கின்றாய்? ஏன் இன்னும் உன் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை (என்று கேட்கிறார்கள்) … வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை முன்னிட்டு நாங்கள் இம் மதத்திலேயே இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. தனி நாடு பிரியும் காலை நாங்கள் இம் மதத்தை விட்டொழிப்போம் என உறுதி கூறுகிறேன்,” என்றெல்லாம் வரைந்து தள்ளியிருக்கிறார்.

குர்ஆன் உருது மொழியிலுள்ளதென்றும், இஸ்லாம் உருது பேசுகிறவர்களின் சொத்தென்றும், தம்முடைய வடிகட்டிய முட்டாட்டனத்தைக் கடைந்தெடுத்துக் காட்டும் இந்த இப்ராகீம் என்னும் பண்ருட்டி பிரகஸ்பதி கேவலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்காக மட்டும் இப்ராகீம் என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கிறாராம்! எல்லாத் தமிழ்நாட்டு முஸ்லிம்களும் திராவிடக் கழகத்தில் சேர்ந்து, “தந்தை பெரியாருக்கு” நன்றி செலுத்தி, “ஒப்பற் தலைவராம் பெரியாரின்” சொற்களைப் பின்பற்றி, இஸ்லா மதத்தை விட்டொழிப்பதற்கு உறுதியாய் முன்வர வேண்டுமாம்!

எனவே, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்காகவென்று மட்டும் இஸ்லாமான பெயர் பூண்டு திரியும் காபிராகிய, நாஸ்திகராகிய, அந்த இப்ராகீம் என்பவர் நாளைக்குத் திடீரென்று செத்துவிட்டால், மற்றெல்லாக் கருஞ்சட்டைத் திராவிடக் கழக முஸ்லிம் (?) அங்கத்தினர்களும் பண்ருட்டிக்கு ஓடோடிச் சென்று, அந்தப் பிரேதத்தை எவரும் ஜனஸா தொழுது துஆ கேட்காமல் தடுத்து, தோளிலே தூக்கிச் சென்று, சுடுகாட்டில் கொளுத்திப் பண்ருட்டி யாற்றிலே அதன் சாம்பலைக் கரைத்து விடுவார்கள் போலும்!

அந்தப் பண்ருட்டி இப்ராகீம் என்பவர் முஸ்லிம் மாது ஒருத்தியை இஸ்லாமிய சட்டப்படி விவாகம் செய்துகொண்டிருப்பாரானால், விடுதலைக் காரியாலய திரு எஸ். டி. பாட்சா1 போன்றவர்கள் இப்போதே ஓடிச் சென்று, அந்தப் பெண்ணை இப்ராகீடமிருந்து விடுவித்து (ஏனென்றால், திராவிட முஸ்லிம் ‘உருது குரானுக்கு’ ஈமான் கொண்ட ஒருத்தியை மனைவியாக வைத்திருப்பது எப்படித் தகும்?) வெறொரு அல்லிக் கண்ணியை, அல்லது கெண்டைக் கண்ணியை, அல்லது கண்ணகியை அந்த இப்ராகீமுக்கு “இல்வாழ் விணைப்பு”ச் செய்து வைப்பார்கள் போலும்!

இதுதான் இன்றுள்ள சு. ம. நாஸ்திக முஸ்லிம்களின் நிலமை. இதைக் கண்டு நாம் அழுவதா, அல்லது சிரிப்பதா? உலகாயதத்தில் ஊறிப்போய் மேனாட்டுக் கிறிஸ்தவர்களாகவுமிருக்க முடியாமல், நாஸ்திகர்களாவும் போய்விடத் துணியாமல் தினே தினே பன்னூற்றுக் கணக்கானவர்கள் – அமெரிக்கர்கள், ஆங்கிலேயர்கள், மேற்கிந்திய தீவினர்கள், பிரெஞ்சுக்காரர்கள் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டு வருகிற இன்றைத் தினத்திலேதான் நம் தென்னாட்டிலேயுள்ள முஸ்லிம் தாய் தந்தையர்க்குத் தப்பிப்போய்ப் பிறந்து விட்ட எஸ். டி. பாட்சாக்கள், பண்ருட்டி இப்ராகீம்கள் – (இன்னம் முழு லிஸ்டும் தேவைப்படுவோர், “சேலம் ஆத்தூர், இஷா அத்தெ இஸ்லாம்” என்னும் விலாசத்துக்கு எழுதிக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்) கட்டிய முஸ்லிம் மனைவிகளையும் தலாக் சொல்லி விட்டுவிடாமல், இஸ்லாத்தின் பெயரைச் சொல்லிக் கொள்வதால் எவ்வளவு அதிகமான லாபத்தை அடைய முடியுமோ அவ்வளவு லாபத்தையும் அடைந்துகொண்டு, இஸ்லாத்தை அவதூறு செய்துகொண்டும், கிண்டல் செய்துகொண்டும் யூதாஸ்காரியத் போல் ராமசாமி நாய்க்கரின் துணைக் கருவிகளாக நின்று இஸ்லாத்தின் மீது படையெடுக்கிறார்கள்.

தங்களைத் திராவிடர்கௌன்று கூறிக்கொண்டு இஸ்லாத்தையும் குர்ஆனையும் திட்டுவார்கள். ஆனால், திராவிடர்களின் திருநாளாகிய பொங்கலைக் கொண்டாடாமல் முஸ்லிம்களின் பெருநாளாகிய ஈதைத்தான் கொண்டாடுவார்கள். குர்ஆன் வேதம் காட்டரபிகளுக்கு வந்தது, அது நமக்குச் சரியில்லையென்று தம்பட்டமடிக்கும் இவர்கள் அதே குர்ஆன் எந்தப் பெண்மணிகளுக்குச் சொத்துரிமை யிருக்கிறதென்று குறிப்பிடுகிறதோ அந்தப் பெண்களைத்தாம் மணப்பார்கள்; தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் சொல்லியுள்ள பெண்களை மணக்க மாட்டார்கள். (ஏனென்றால், மாமனார் சொத்தில் பெண் பாகம் கிடைக்காதல்லவா?) சுருங்கக் கூறின், எந்த எந்த வழியில் லாபமும் சம்பாத்தியமும் பெற முடியுமோ அந்த அந்த வழிக்கெல்லாம் இவர்கள் குர்ஆனையும், அல்லாஹ்வையும் ரசூலையும் பிணை வைப்பார்கள். எந்த எந்தத் துறைகளில் இவர்கள் ஆண்டவனுக்கும் மனித இனத்துக்கும் தொண்டு செய்ய வேண்டுமென்று (தொழுகை, ஜகாத் போன்றவை) ஏவப்பெறுகிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் கண்களையும், காதுகளையும் ஹிருதயங்களையம் ஸீலிட்டு மூடிக் கொள்வதுடனே, “இஸ்லாத்தை ஒழித்துவிட்டே மறுவேலை பார்ப்போம்!” என்று மார் தட்டுவார்கள்.

இவர்களின் மனைவி செத்தால், மக்கள் செத்தால், அப்போது மட்டும் அந்த மய்யித்களை ஜனாஸாத் தொழுகைக்காகப் பள்ளிக்குச் சுமந்து செல்வார்கள். ஆனால், இறைவனை எண்ணித் தொழுவது பாபிகள் செய்யும் காரியமல்லவோ என்று மற்ற நேரத்தில் “விடுதலை”ப் பத்திரிகையென்றும் விஷக் கொடுக்கைத் தட்டிவிடுவார்கள்.

இவ்வளவெல்லாமிருந்தும் இன்னும் திராவிடக் கழக, திராவிட முன்னேற்றக் கழக அனுதாப அபிமானமுள்ள உங்களுள்2 யாருக்கேனும் அந்த கழகங்களின் கபடநாடகப் பொய்ப்புகட்டின் மீது கண்விழிப்பேற்படவில்லை யென்றால், அந்த எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே உங்களையும் எம்மையும் காப்பாற்ற வேண்டும்!

-N. B. அப்துல் ஜப்பார்


1. திரு எஸ். டி. பாட்சாவின் மனைவி (இஸ்லாமிய ஷரீஅத்படி மணமுடிக்கப்பட்ட மங்கை) இன்னம் முஸ்லிம் மாதாகவே, கோஷா முறையைக்கூட அனுஷ்டித்துவரும் மனைவியாகவே யிலங்கி வருகிறார் என்றே அறிகிறேன். பா. தா. 

2. திராவிடப் பின்னேற்ற ஈ. வே. ரா. கக்ஷியும், திராவிட முன்னேற்ற அண்ணாத்துரைக் கக்ஷியும் நாஸ்திய இயக்கங்களே; எனவே, இக் கக்ஷிகளில் சேரும் இஸ்லாமியர்களும் நாஸ்திகர்களே யாவார்கள்; இதனால் இவர்கள் இஸ்லாத்தின் வட்டத்துள்ளே இருக்க இடமில்லையென்றறிக. இத்தகைய (இஸ்லாத்தில் பிறந்து) காபிராய் விட்டவர்கட்குப் பெண் கொடுப்பவர்கள் இவ்வுண்மையைக் கவனிப்பார்களாக! ஏற்கெனவே இஸ்லாமிய முறைப்படி மணமுடித்துள்ள இத்தகைய காபிர்களின் மனைவிமார்கட்குத் தலாக் (திருமண முறிவு) ஏற்பட்டுவிட்டது. இவ்வுண்மையை அங்கங்கேயுள்ள ஆலிம்களும், சமுதாய முஸ்லிம்களும் கவனித்து, ஆவன செய்யக் கடவார்களாக. பா. தா. 


தாருல் இஸ்லாம், ஆகஸ்டு 1952
பக்கம்: 27-30

Related Articles

Leave a Comment