துருக்கியின் அனடோலியாவில் தியார்பகிர் மாகாணத்தில் நிலத்தைத் தோண்டிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் இரண்டு மண்ணறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவற்றைக் கண்டு அவர்களுக்கு எக்கச்சக்க சிலிர்ப்பு, பெருமிதம். அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஸ்மித்ஸோனியன் நிறுவனத்தின் பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

பொன்னும் புதையலும் பழங்கால அபூர்வப் பொருள்களும் தொல்பொருளாளர்கள் கண்டெடுப்பது காலந்தோறும் உலகெங்கும் நடைபெறுவதுதான். எனும்போது, இந்த மண்ணறைகளில் என்ன சிறப்பு? அவை கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் மரணமடைந்த முதலாம் கிலிஜ் அர்ஸலானின் அவருடைய மகளின் கல்லறைகள்.

இந்த கிலிஜ் அர்ஸலான்-I துருக்கியர்களின் வரலாற்றில் முக்கியமானவர். ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் சிலுவையையும் ஆயுதங்களையும் உயர்த்திப் பிடித்து வந்து, முதலாம் சிலுவை யுத்தம் நிகழ்த்திய காலகட்டத்தில் அவர்களுக்கு எதிராக முதலில் போர்க்களம் கண்ட முஸ்லிம் சுல்தான்; சில வெற்றிகளை ஈட்டியவர் என்று வரலாற்றில் இவருக்குச் சில சிறப்புத் தகுதிகள் உண்டு. அதுவும் அன்று முஸ்லிம் சுல்தான்கள் பிரிந்து கிடந்த அவல நிலையில் இவர் தம்மளவில் முயன்று சிலுவைப் படையினரை துணிச்சலுடன் எதிர்த்து நின்றது பெரும் பராக்கிரமம்.

கி.பி. 1095ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் க்ளெர்மாண்ட் நகரில் போப் அர்பன் II நிகழ்த்திய உரைதான் சிலுவை யுத்தத்தின் வினையூக்கி. கிரேக்க கிறித்தவர்களின் பைஸாந்தியம் ஸெல்ஜுக் துருக்கியர்களை எதிர்கொள்ள ஐரோப்பியர்களிடம் உதவி வேண்டி நின்றது; இலத்தீன் கிறிஸ்தவ திருச்சபைக்கும் ஐரோப்பிய மன்னர்களுக்கும் இடையே நிலவிய அரசியல், ஆதிக்கப் போட்டி; முஸ்லிம்கள் வசம் இருந்த ஜெருஸலம்; லெவண்டினின் (இன்றைய சிரியா, ஜோர்டான், இராக், ஃபலஸ்தீன் உள்ளடங்கிய பகுதி) செல்வ வளத்தைக் கண்டு அவர்களுக்கு வியர்த்த மூக்கு, உமிழ்நீர் சுரந்த வாய் எனப் பற்பல காரணங்கள் பின்னிப் பினைந்திருந்த போதிலும் முரட்டுக் கும்பல்கள் பல்லாயிரக் கணக்கில் திரண்டு, சிலுவையை உயர்த்திப் பிடித்துக்கொண்டு போர் முழக்கத்துடன் முஸ்லிம்களின் நிலங்களுக்குள் காலடி எடுத்து வைக்க காரணமாக அமைந்தது என்னவோ அந்த க்ளெர்மாண்ட் உரைதான்.

‘போர்ப் படையினரை முரட்டுக் கும்பல் என்று சுட்டுவது ஏன்?’ என்றோர் ஐயம் எழலாம். பைஸாந்தியச் சக்கரவர்த்தி அலெக்ஸியஸின் மகள் அன்னா காம்னெனா (Anna Comnena). அவர் தம்முடைய நூலில் சிலுவைப் படையினரை ஒட்டுமொத்தமாக, ‘அனைவரும் மேற்குலகின் காட்டுமிராண்டிகள்’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். சிலுவைப் படையினரின் முக்கியமான தலைவரான பொஹிமாண்ட்டை (Bohemond) விவரிக்கும்போது அன்னாவின் சொல்லாட்சி இன்னும் கடுமை. ‘அயோக்கியத்தனத்தையே பழக்கமாகக்கொண்டிருந்தவன், பொய் பேசுவதையே இயல்பாகக் கொண்டிருந்தவன்’ என்று எழுதி வைத்திருக்கிறார். அவையெல்லாம் பாரபட்சமற்றவை என்பது மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்களே ஏற்றுக்கொள்ளும் உண்மை.

ஐரோப்பாவிலிருந்து சிலுவைப் படையினர் கிளம்பி வந்தார்கள்; பைஸாந்தியச் சக்கரவர்த்தியைச் சந்தித்தார்கள்; பாஸ்போரஸ் ஜலசந்தியைக் கடந்து ஆசியாவிற்குள் நுழைந்தார்கள்; கெட்ட ஆட்டம் போடத் தொடங்கினார்கள். அங்கெல்லாம் முஸ்லிம்கள்தாம் மன்னர்களாக, சுல்தான்களாக, அதிபர்களாக ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தனர். பாக்தாதில் வீற்றிருந்ததும் அப்பாஸிய கலீஃபாதான்.

ஆனால் அரியணைப் போட்டி, வாரிசுப் பிரச்சினை, அதிகார மோதல் என்று ஒருவருக்கொருவர் தாடியைப் பிடித்திழுத்து அவர்களுக்குள் ஓயாத ஒழியாத போர்; தத்தம் செல்வாக்குடன் ஆளுக்கொரு பகுதியில் தனித்தனி ஆட்சி. பெரும் திரளாக, பேராரவாரத்துடன் இப்படியொரு சிலுவைப் படை திரண்டு வருவதையோ, அவர்களால் ஏற்படப் போகும் நீண்ட நெடிய பாதிப்புகளையோ, ஜெருஸலம் பறிபோக இருப்பதையோ சற்றும் உணராமல், அந்த ஆபத்தைப் பற்றிய அனுமானமே இல்லாமல் தங்களது உட்பூசலில்தான் அவர்கள் முழு மூச்சுடன் மும்முரமாக ஈடுபட்டு ஒற்றுமையின்றி பலவீனப்பட்டுக் கிடந்தார்கள்.

ஊர் இரண்டு படுவதே கூத்தாடிக்குக் கொண்டாட்டமாக முடியும்போது, முஸ்லிம் ஆட்சியாளர்கள் இப்படிப் பலவாகப் பிளவுற்று, சிதறுண்டு கிடந்தால்?

சிலுவைப் படை தான் முன்னேறிய பகுதிகளிலெல்லாம் பெருவெற்றிகளைச் சாதித்தது. நிலங்களைக் கைப்பற்றியது. கொடூரங்களை அரங்கேற்றியது. ‘சிலுவைப் படையினர் தங்களது பலத்தால் வெற்றியடையவில்லை. மாறாக முஸ்லிம்கள் மத்தியில் திகழ்ந்த ஒற்றுமை இன்மையினால்தான் வென்றனர்’ என்று ஜெஃப்ரி ஹின்ட்லே (Geoffrey Hindley) தம்முடைய Saladin: Hero of Islam என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம்கள் மத்தியில் நிலவிய அவலத்தை அறிய இது போதாது?

இத்தகு சூழல்தான் கிலிஜ் அர்ஸலான் முன்னெடுத்த முயற்சிகளுக்கும் சாதித்த சில வெற்றிகளுக்கும் பெரும் முக்கியத்துவத்தை அளிக்கின்றன.

அதிகாரபூர்வமான சிலுவைப் படை கிளம்புவதற்குள் துறவி பீட்டர் என்பவர், ‘மக்களின் சிலுவைப்போர்’ (People’s Crusade) என்றொரு பெருங்கூட்டத்தைத் திரட்டிக்கொண்டு வந்தார். தம் மக்களிடம் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தவர் அவர். போப் அர்பனின் க்ளெர்மாண்ட் உரையைச் செவியுற்றதும் அதில் மிகவும் கவரப்பட்டு உணர்ச்சிவசப்பட்டுப் போனார். கழுதை ஒன்றில் ஏறிக்கொண்டு, ஊர் ஊராகச் சென்று, அங்குள்ள பட்டிதொட்டிகள் எல்லாம் நுழைந்து போப்பின் உரையை அவர் எடுத்துரைக்க, மூலை முடுக்கெல்லாம் தீ பரவியது. போதாததற்கு, தாம் தேவனால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வேறு அறிவித்துக்கொண்டார். அவர்மீது ஏற்கெனவே எக்கச்சக்கமான நல் அபிப்ராயத்தில் இருந்த மக்களுக்கு அது பக்திப் பரவசத்தை அதிகப்படுத்த, அவரது வீரியமிக்கச் சொற்பொழிவுகள் அவர்களுக்கு வேத வாக்காக ஒலிக்க ஆரம்பித்தன.

அழுகையும் விம்மலும் சரியான விகிதத்தில் கலந்திருந்த அவரது உரைகள், தேவனின் விரோதிகள் என்று முஸ்லிம்களை வர்ணித்து, அவர்கள்மீது அவர் விடுத்த சாபம், கிறிஸ்துவின் கல்லறையைக் காக்க அணிவகுப்பவர்கள்மீது தேவனின் மன்னிப்பு நிச்சயம் என்ற வாக்குறுதி எல்லாமாகச் சேர்ந்து அவர்களை வேறு எந்தப் பின்விளைவுகளைப் பற்றியும் சிந்திக்க விடவில்லை. அவருடைய நாவன்மை அவர்களை அப்படியே கட்டிப்போட்டது. பின்பற்றியவர்கள் பாமரக் கூட்டம் என்பதால் அவர்கள் அவர் சொன்னதை அப்படியே நம்பினர்.

‘அனைவரும் உங்களது ஆயுதங்களைத் தூக்குங்கள்; போர்த் தளவாடங்கள் அனைத்தையும் சித்தப்படுத்துங்கள்; ஒன்று கூடுங்கள்; குதிரைகளில் ஏறி வந்து சேருங்கள்’ என்று மக்களுக்குப் போர் வெறியை ஊட்ட ஆரம்பித்தார் துறவி பீட்டர். க்ளெர்மாண்ட் உரை நிகழ்ந்து ஆறு மாதங்கள்தான் ஆகியிருக்கும். ஆனால் அதற்குள் பிரான்சில் 15,000 பேர் அடங்கிய படை அவரால் திரண்டது. அனைவரும் அவரது சொல்லுக்குக் கட்டுண்டு கிளம்பிய ஏழை எளிய மக்கள். குதிரையேற்றமோ, போர்ப் பயிற்சியோ, ஆயுதப் பயிற்சியோ அறியாதவர்கள். ஆயினும் பேரார்வத்துடனும் உத்வேகத்துடனும் அவர்கள் அவரைப் பின்பற்றித் தொடர்ந்தனர்.

அதற்குள் ஜெர்மனியில் பல்வேறு பரிவாரங்கள் திரண்டிருந்தன. அவர்களும் இவர்களும் ஒன்று சேர்ந்து, படையாக உருமாறி, அதற்கு ‘மக்களின் சிலுவைப் போர்’ என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது. போர் வெறி அவர்களை உந்தித்தள்ள, போப் அர்பனின் அதிகாரபூர்வமான சிலுவைப் படைக்கு முந்தைய அந்தப் படை, கான்ஸ்டன்டினோபிளை நோக்கி நகர்ந்தது. ஆர்வமும் ஆர்வக் கோளாறும் ஒழுங்கீனமும் கொண்ட அந்தப் படை அடுத்து நிகழ்த்திய அட்டகாசங்கள் பின்னால் வரவிருக்கும் ஆபத்திற்குக் கட்டியம் கூறுவது போல் அமைந்துவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.

படையெடுத்துப் போகிற போக்கில், பிரான்ஸ், ஜெர்மனி பகுதிகளில், ஏசு கிறிஸ்துவின் விரோதிகள் என்று தாங்கள் கருதியவர்களை எல்லாம் அடித்துக் கொன்று தூக்கி எறிந்துகொன்டே சென்றனர். அப்படி அவர்கள் கொன்றதெல்லாம் யூதர்கள். எண்ணிக்கை ஏராளம். பெல்கிரேட், ஹங்கேரி பகுதிகளெல்லாம் கொள்ளை அடிக்கப்பட்டன. கொன்று, துவம்சம் செய்து, அராஜகம் புரிந்து ஒருவழியாக, கி.பி. 1096 ஆகஸ்ட் முதல் தேதி, கான்ஸ்டன்டினோபிள் வந்து சேர்ந்தது அந்தக் கூட்டம்.

எதிர்பாராமல் வந்து சேர்ந்த இந்த ஒழுங்கீனர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று பைஸாந்தியச் சக்ரவர்த்தி அலெக்ஸியஸ் யோசித்தார். துருக்கியர்களின் பெரும்படையுடன் இந்தக் கற்றுக்குட்டிப் படை மோத முடியாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால் ஒரு காரியம் செய்தார். ‘சிலுவைப் படையினர் வரட்டும், அதுவரை காத்திருங்கள். வேறு எதுவும் செய்ய வேண்டாம்’ என்று அறிவுறுத்தி, ஆசியா மைனர் பகுதிக்கு அவர்களை அனுப்பி வைத்தார்.

அறிவுரையையும் சொல் பேச்சையும் கேட்கிற படையா அது? அப்படியானவர்களாய் இருந்திருந்தால் இப்படி ஏன் முந்திக்கொண்டு வருகிறார்கள்? ஆசியா மைனர் பகுதியை வந்தடைந்த அந்தக் கூட்டம் அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்தது. அங்கிருந்த சிறு கிராமங்களையும் நகரங்களையும் தாக்கிக் கொள்ளையடித்தனர். ஏக களேபரம். இத்தனைக்கும் நடுவே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஜெர்மனியர்கள், இத்தாலியர்கள் ஒரு பிரிவாகவும் பிரஞ்சுக்காரர்கள் ஒரு பிரிவாகவும் பிரிந்து ஆளுக்கொரு தலைவரை ஏற்படுத்திக்கொண்டார்கள். தத்தம் போக்கில் அவர்கள் நகர்ந்து, சென்ற திக்கில் இருந்த புறநகர்ப் பகுதிகளைக் கொள்ளையடித்தனர். ஜெர்மனியர்களின் அணி அனடோலியாவில் உள்ள அரணைக் கைப்பற்றியது.

அச்சமயம் கிலிஜ் அர்ஸலான்-I அங்கு சுல்தான் ஆகியிருந்தார். அவருடைய ஆட்சியில் இருந்த பகுதிகள்தாம் அவை. தகவல் வந்ததும் தம் படையைக் கிளப்பினார் அவர். ஜெர்மனியர்கள் கைப்பற்றியிருந்த அனடோலியாவின் கோட்டையை கிலிஜ் அர்ஸலானின் படை முற்றுகையிட்டது. உள்ளிருப்பவர்களின் நீர் ஆதாரங்களுக்கான வாயில்களைத் தடுத்து நெருக்கியது. நீரின்றித் தவித்துப்போன சிலுவைப் படையினர் வேறு வழியின்றிக் கழுதையின் இரத்தத்தைக் குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இறுதியில் கிலிஜ் அர்ஸலானின் தளபதிகள் வெகு இலகுவாக அரணை அவர்களிடமிருந்து மீட்டனர். சிலுவைப் படையினர் போர்க் கைதிகள் ஆனார்கள். கைதானவர்களுள் சிலர் இஸ்லாத்தை ஏற்று உயிர் பிழைக்க, மற்றவர்கள் கொல்லப்பட்டனர்.

சிலுவைப் படையின் மற்றொரு பிரிவு வேறொரு பகுதியில் கொள்ளையடித்துக் கொண்டிருந்தது இல்லையா, அப்பகுதிக்குத் துருக்கிய உளவாளிகள் இருவர் அனுப்பி வைக்கப்பட்டனர். ஜெர்மானியர்கள் அனடோலியா அரணையும் நைக்கியா நகரையும் கைப்பற்றிவிட்டனர் என்று அவர்கள் வதந்தியைப் பரப்ப, ‘ஆஹா! வெற்றி’ என்று குதித்தது சிலுவைப் படையின் அந்தப் பிரிவு. ஆனால் அந்த உற்சாகம் வெகு விரைவில் அவர்களுக்குள் பொறாமையைத் தூண்டியது. கைப்பற்றப்பட்ட பகுதிகளின் வளங்கள் ஜெர்மானியர்களுக்கு மட்டும் சொந்தமாகிவிடுமே, செல்வத்தில் தங்களுக்குப் பங்கு ஏதும் கிடைக்காமல் பறிபோகுமே என்ற கவலையும் சோகமும் ஏற்பட்டு, பெண்களையும் குழந்தைகளையும் முதியவர்களையும் மட்டும் அங்கேயே விட்டுவிட்டு 20,000 பேர் கொண்ட கூட்டம் நைக்கியாவுக்கு ஓடியது. முஸ்லிம்களின் திட்டம் சரியாக வேலை செய்தது.

மூன்று மைல் தூரத்தில் பாதை குறுகும் இடத்தில் கிலிஜ் அர்ஸலானின் படையினர் காத்திருந்தனர். சிலுவைப் படை அவ்விடத்தை நெருங்கியதும் அவர்கள் சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென்று இடைவிடாத அம்பு மழை பெய்ய ஆரம்பித்தது. திகைத்துப்போய், அச்சத்தில் நிலைகுலைந்து சிலுவைப் படையினர் தட்டுக்கெட்டு ஓட, சரமாரியாக அவர்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் சரணடைந்தவர்களும் மட்டும் உயிர் பிழைத்தனர். கிலிஜ் அர்ஸலான், மக்களின் சிலுவைப் போரில் பெரு வெற்றியை ஈட்டினார். எனினும், பின்னர் சிலுவைப் படையினருடன் நைக்கியாவில், டொரிலியத்தில் நிகழ்த்திய போர்களில் அவர் பின்வாங்கவே நேர்ந்தது.

சில ஆண்டுகளுக்குப்பின் ரோம ஸல்தனத்தின் சுல்தான் கிலிஜ் அர்ஸலானும் டானிஷ்மெண்த் பகுதியின் மாலிக் காஸி குமுஷ்திஜினும் கூட்டாளிகளாகித் தோளோடு தோள் கைபோட்டுக் கொண்டனர். இரு தரப்புப் படைகளும் நட்புப் படைகளாகின. அதைத் தொடர்ந்து சிலுவைப் படையினரை எதிர்கொள்ள அவருக்கு மற்றொரு வாய்ப்புக் கிடைத்தது. புதிதாய்க் கிளம்பி வந்த சிலுவைப் படையின் மூன்று பிரிவுகளுடன் கிலிஜ் அர்ஸலான் – குமுஷ்திஜின் கூட்டணி மூன்று முக்கியப் போர்களை நிகழ்த்தின. மூன்றும் முத்தாய்ப்பாய்ப் பெருவெற்றியில் முடிந்தன.

அதன் விளைவாக கிலிஜ் அர்ஸலானின் புகழ் ஓங்க தொடங்கியது. இதர குறுநில ஆட்சியாளர்களுக்கு அவரது வலிமை புரிந்தது. ஒருவிதத்தில் அவரது தலைமையின் கீழ் திரளவோ, அவருடன் இணையவோ விரும்பினர். கிலிஜ் அர்ஸலானும் சிலுவைப் படையினருக்கு எதிரான ஒருங்கிணைந்த முஸ்லிம் கூட்டணியை உருவாக்க முனைந்ததாகத்தான் அறிய முடிகிறது. அது தொடர்ந்திருந்தால் வரலாறு மாறியிருக்கக் கூடும். ஆனால் இறைவனின் நாட்டம் வேறாக இருந்தது. அத்தகு வெற்றியை சுல்தான் ஸலாஹுத்தீனுக்காக அவன் சித்தப்படுத்தியிருந்ததால் கிலிஜ் அர்ஸலானின் விதி வேறு விதமாக முடிந்தது.

இராக்கின் மோஸுலில் ஆட்சியாளருக்கும் கிளர்ச்சியாளருக்கும் இடையே பிரச்சினை முற்றி, அது ஆட்சியாளரின் கொலையில் போய் முடிந்தது. அதைத் தொடர்ந்து கிலிஜ் அர்ஸலானிடம் உதவி கோரி வந்து நின்றார் கொலையுண்ட ஆட்சியாளரின் மைந்தர். தாமதிக்காமல் உடனே மோஸுலுக்கு அணிவகுத்தார் கிலிஜ் அர்ஸலான். அச்செய்தி அறிந்ததும் நகரைக் கைப்பற்றியிருந்த கிளர்ச்சியாளர்களின் தலைவன் தப்பித்து சின்ஜாருக்கு ஓடிவிட, சுல்தான் கிலிஜ் அர்ஸலானை மகிழ்ந்து வரவேற்ற மோஸுல் மக்கள், ‘வாருங்கள் ராஜாவே’ என்று அவரிடம் நகரை ஒப்படைத்தனர்.

தப்பித்து ஓடியவர் பிழைத்தது போதும் என்று அமைதியாக இருந்து விடவில்லை. அங்கு இதர சில முஸ்லிம் ஆட்சியாளர்களை அழைத்துப் பேசி திட்டமிட, அவர்களின் கூட்டணிப் படை உருவானது. அந்தக் கூட்டணிப் படை கிலிஜ் அர்ஸலானை எதிர்த்துப் போர் தொடுத்தது. சண்டை நிகழ்ந்தது. அந்த யுத்தத்தில் காபூர் ஆற்றில் மூழ்கி இறந்து போனார் கிலிஜ் அர்ஸலான்.

ஸெல்ஜுக் ரோம ஸல்தனத்தின் புகழ்பெற்ற ஆட்சியாளர், சிலுவைப் படையினரைத் தோற்கடித்து முக்கியமான வெற்றிகள் ஈட்டியவர், முஸ்லிம் கிளர்ச்சியாளர்களின் கூட்டணிப் படை நிகழ்த்திய போரில் ஹி. 500/கி.பி. 1107ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

-நூருத்தீன்

சமரசம் 1-15 மார்ச் 2021, வெளியான கட்டுரை

அச்சுப் பிரதியை வாசிக்க க்ளிக்கவும்

Related Articles

Leave a Comment