நண்பனின் அக்காள் கணவராக அவர் அறிமுகமானபோது எனக்குக் கல்லூரிப் பருவம். அந்நண்பனின் தாய், தந்தை, சகோதரன், அக்காள் எல்லோருமே அன்புடன், இன்முகத்துடன் பேசிப் பழகும் குணமுடையவர்கள் என்பதால் நானும் அவர்களது வீட்டிற்குள் இயல்பாகச் சென்று வரும் அளவிற்கு நட்பு இருந்தது. நாளாவட்டத்தில் அவர்கள் அனைவரை விடவும் எனக்கு வெகு அன்னியோன்யமான நட்பாக அமைந்து போனதென்னவோ அந்த அக்காளின் கணவர்தாம். அது எப்படி நடந்தது, எச்சந்தர்ப்பத்தில் நாங்கள் நெருங்கியவர்களானோம் என்று நினைத்துப் பார்க்கிறேன், புலப்படவில்லை. ஆனால் என்னைவிட பதினாறு வயது அதிகமுள்ள அவருடன் நட்பு பாராட்டி, பேசிப் பழகியதெல்லாம் எனது கல்லூரிப் பருவத்தை அடுத்தே தொடங்கிவிட்டதை என் மனப்பெட்டகம் குறித்து வைத்துள்ளது.
உருது பேசுபவர்கள் சகோதரியின் கணவரை பாய்ஜான் என்று அழைப்பதால் எனக்கும் அவர் அன்று முதற்கொண்டே ஃபைரோஸ் பாய்ஜான் ஆகிவிட்டார். அப்படித்தான் அவரை அழைப்பேன். சிரித்த முகம், தெளிவான, திருத்தமான பேச்சு, நகைச்சுவை உணர்ச்சி ஆகியனவற்றின் கலவை அவர். ஈயும் நற்குணம். இவையெல்லாம் அவரிடம் கலந்திருந்ததாலோ என்னவோ அவருடனான நட்பு பலப்பட்டுவிட்டது. அது அப்படியே வளர்ச்சியடைந்து, என் வாழ்க்கையின் வெகு முக்கியமான காலகட்டம் ஒன்றில் துணை நின்று, அவர் புரிந்த உதவி அண்ணனாக, என் நலன் விரும்பியாக, பன்முகம் கொண்டவராக அவரை மாற்றிவிட்டது. அவர் மீதான என் மரியாதையும் அன்னியோன்யமும் கூடிவிட்டன.
கால ஓட்டத்தில், அவர்கள் வீட்டில் பெரியவர்கள், அக்காள் எல்லோரும் உலகைப் பிரிந்து, மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும் இவரும் வேலை நிமித்தம் வெளிநாட்டிற்குச் சென்று நானும் இங்கு வந்துவிட்ட போதிலும் எங்கள் இருவர் இடையேயான நட்பு தொடர்ந்தபடிதான் இருந்தது. அவர் ஓய்வு காலத்தை எட்டி மீண்டும் சென்னைக்கு வந்து சேர்ந்தபின் அது மீண்டும் புத்துணர்ச்சி பெற்று, கடந்த பதினான்கு ஆண்டு காலத்தில் மேலும் பலப்பட்டு… என் குடும்பத்தில் ஒருவரைப் போலவே ஆகிவிட்டர் ஃபைரோஸ் பாய்ஜான்.
மூன்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பைபாஸ் சர்ஜரிக்குப் பிறகு உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் இருந்த போதிலும் தன்னளவில் சுறுசுறுப்பாக, தமக்குத் தேவையானவற்றை தாமே செய்து கொள்பவராக இயங்கி வந்தார். கடந்த சனிக்கிழமை மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், இராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் அளித்தார். அடுத்த இரு நாள்களில் அது கொரோனா என்பதைக் கண்டறிந்துள்ளனர். நிலைமையும் மோசமடையத் தொடங்கியுள்ளது. பொது மருத்துவமனை கொரோனாப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பலனின்றி 28/3/2021 ஞாயிறு மதியம், தமது 71ஆம் வயதில் ஃபைரோஸ் பாய்ஜான் படைத்தவனிடம் மீண்டுவிட்டார்.
சற்றொப்ப நாற்பது ஆண்டு காலம் நாங்கள் பூண்டிருந்த நட்பு இவ்வுலகில் இவ்விதம் முடிவுக்கு வந்தது.
அடிக்கடி பேசிக்கொள்வோம். தொடர்ந்து வாட்ஸப் தகவல் பரிமாற்றங்கள் இருந்தன. இருதரப்பிலுமான முக்கியமான நிகழ்வுகளைப் பகிர்ந்தபடியே இருப்போம். அனைத்தும் சட்டென்று முடிவுற்று விட்டன.
அவரது உள்ளத்தை, படைத்தனவே முற்றிலும் அறிவான். ஆனால் நானறிந்த வரையில், பழகிய வகையில், அவரிடம் இருந்தவை மெய்யான இறையச்சம்; அவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் பக்தி சிரத்தை.
அனைவரும் மரணத்தைச் சுவைத்தே தீர வேண்டும் என்பது என்னதான் புத்திக்குக் தெரிந்திருந்தாலும் கண்கள் கேட்கவா செய்கின்றன? அவை கொட்டுவேன்தான் என்கின்றன. உள்ளமானது அவருக்காக இறைஞ்சியபடியே இருந்தாலும் இழப்பின் வலி உடனே ஆறிவிட மாட்டேன் என்கிறது.
ஆறும். மனம் சகஜமாகும் இன்ஷா அல்லாஹ். ஆனால், நினைவுகள் மட்டும் சொச்ச வாழ்நாளும் தொடரும் பசுமையாய். ஆழப் பதிந்துவிட்ட நட்பின் தடம் அப்படி.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்)
-நூருத்தீன்