பிணியை அளிப்பவன் இறைவனே என்கிறார்கள் எம் முஸ்லிம்கள்; ஆனால், அதனைப் போக்கடிப்பவர்கள் அவ்லியா என்கிறார்கள், அவ்லியா பக்தர்கள். இது முழு அபத்தமாயில்லையா? அல்லாஹ் தன் திரு நபியைப் பார்த்து, அவருக்கு வரக்கூடிய நலனைப் பெருக்கிக் கொள்ளவோ, கெடுதலைத் தவிர்த்துக் கொள்ளவோ அவர்கட்கே சக்தி இல்லை என்று சொல்லச் சொல்லியுள்ளான்.

நபி பெருமான் (ஸல்) செய்தியே இங்ஙனம் இருக்குங்கால், அவ்லியாக்களுக்கு -இறந்து போய்விட்ட அவர்களுக்கு- என்னென்னவோ சக்திகளெல்லாம் (இறைவனுக்கு இல்லாதவைகூட) இருப்பதாக அவ்வறியாத மாக்கள் அறையத் துணிகின்றார்கள்.

(என்னெனின், ஆண்டவனால் தங்கள் குறைகளை நீக்க முடியாதென்றும் அவ்லியாக்களாலே அது முடியுமென்றுந்தானே அவர்கள் நம்புகிறார்கள்!)

இனியொரு சாரார் கூறும் வாதமாவது: “நாங்கள் எங்கள் அவ்வலியாக்களை ஆண்டவனாக மதித்துக் குறையிரக்கவில்லை; அல்லாஹ்வினிடத்தே எங்கள் குறைமுறைகளை எடுத்துக் காட்டியே எங்களுக்குப் பரிகாரம் தேடித் தரச் சொல்லுகிறோம்.”

பேஷ்! நன்றாயிருக்கிறது இவர்கள் வாதம்! இவ்வாதத்துக்குக் குர்ஆன், ஹதீதுகளில் எங்கே ஆதாரம் காணப்படுகிறது? இவர்கள் கூற்று ஊத்துக்கு நிற்பதாயிருப்பின், நபி பெருமான் (மதீனா) “ரவ்லா ஷரீபை” ஒரு பெரிய நாகூர் தர்காவாக மாற்றிவிடலாமே! அல்லாமாக்கள், ஆலிம்சாக்கள், மவுலானாக்கள், மவுலவீகள், முல்லாக்கள், (முழுமக்கள்) சாபுமார்கள், அறிவுள்ள (?) அவ்லியா பக்தர்கள் அனைவரும் இதனைச் செய்ய முயலட்டுமே, பார்ப்போம்!

இனியொரு சாரார், “அவ்லியாக்களுக்கு அற்புத சக்தி இல்லை யென்றா சொல்றீம் பிளே?” என்று எம்மீது எரிந்து விழுவார். இஃதொரு குதர்க்கவாதமே யாம். அவ்லியாக்களுக்கு அற்புத சக்தி இருக்கிறதென்கிறார்களே, அந்த ஸாபுகளல்லவோ அதனை மெய்ப்பித்துக் காட்ட வேண்டும்? எம்மைக் கடாவி யாது பயன்?

அவ்லியாக்கள் (அல்லாஹ்வின் ஞேயர்கள்) இறந்தே விட்டார்கள்; அவர்கள் உயிருடனே இல்லை, அவ்வெற்றெலும்புக் கூடுகள் (கங்காளங்கள்) அடக்கப்பட்டுள்ள சமாதிகளுக்குப் பெண்களுடன் சென்று, “ஜியாரத்” என்னும் அழகிய நாமத்தை வைத்துக்கொண்டு, விக்கிரகத் தொழும்பர்களை விடப் பொல்லாத மகாமோச ஷர்க் பித்அத்களை எல்லாம் செய்கிறார்கள் அறியாத மாக்கள்; அவ்வாறு “ஜியாரத் செய்யலாம்!” என்று “பத்வா” விடுக்கிறார்கள், ஒரு சில “மவுலவீ”கள் என என்னப்பட்டவர்கள், நாணமோ நாணயமோ இல்லாது போய். வெட்கக்கேடே!

இறுதியாக யாமோர் அறை கூவலை விடுக்கிறோம்: “அஜ்மீர், நாகூர் போன்ற தர்காக்களில் நடப்பனவெல்லாம் இஸ்லாத்துக்கு ஏற்றவைதாமா? விஜயபுரம், முத்துப்பேட்டை போன்ற ஊர்களிலுள்ள 40 முழ நீளமுள்ள சமாதிகளுக்குள்ளே 60 அடி நெட்டையாயிருந்த அவ்லியாக்கள் மெய்யாகவே அடங்கியுள்ளார்களா?” இவ்வினாவினுக்கு உண்மை விடையளிப்பார்களா நம் மவுலவீகளும், மவுலானாக்களும், சாபுமார்களும், அவ்லியா பக்தர்களும், ஆஷாட பூதிகளும், ஏனை முல்லாக்களும், புராணப் (புளுகுப்) புலவர்களும்?

திருப்பதியில், சீரங்கத்தில் நடப்பனவெல்லாம் நாகூரிலும், முத்துப்பேட்டையிலும் நடைபெற்றே வருகின்றன என அவற்றையெல்லாம் அறிந்தவர்கள் அறைகின்றார்கள். அந்தக் காபிர்களே போல்வார்கள் இந்த “முஸ்லிம்கள்” என்னப்படுபவர்களும். ஏ தவ்ஹீதுக்குரிய சீதேவிகளே! நீங்கள் மீக்கூறியதைக் கவனிக்கின்றீர்களா? இல்லையா? என்ன உங்கள் பதில்?

-பா. தாவூத்ஷா

மார்ச் 1952 தாருல் இஸ்லாம் தலையங்கத்திலிருந்து

Related Articles

Leave a Comment