மிழ் நாட்டின் தெற்கு பகுதியைச் சேர்ந்த அவருக்கு வயது முப்பதிற்குள்தான் இருக்கும். மிகவும் பின் தங்கிய ஏதோ ஒரு கிராமம். அங்கிருந்த பலரைப் போல் அவருக்கும் பொருருளாதாரப் போதாமை. போதாமை எனச் சொல்வதைவிட இன்மை. ஏதேதோ ஏற்பாடு செய்து விஸா கிடைத்து ரியாதுக்கு வந்து சேர்ந்துவிட்டார்.

பெரும் நிறுவனங்களில் துப்புரவு சேவையை ஒப்பந்தம் எடுத்திருந்த நிறுவனத்தில் அவருக்கு வேலை. அவருக்கும் தமிழகத்திலிருந்து வந்திருந்த மற்றவர்களுக்கும் ரியாதில் இருந்த மின் வாரிய அலுவலகத்தில் துப்புரவுப் பணி ஒதுக்கப்பட்டது. தினமும் காலையில் அவர்களது தங்குமிடத்தில் இருந்து வாகனம் அவர்களை ஏற்றி வந்து அலுவலகத்தில் இறக்கிவிடும். மாலை அழைத்துச் சென்று விடும்.

இக்கட்டுரையின் நாயகன் அவர் என்பதால் அவர் இங்கு இனி இவர்.

இவருக்கு அந்த மின் வாரிய அலுவலகத்தின் கணினித் துறை ஆக்கிரமித்திருந்த தளத்தில் பணி. அங்கு ஒரு சில கிறிஸ்தவர்களைத் தவிர மற்ற அனைவரும் முஸ்லிம்கள். பெரும்பாலாக அரபியர்களும் இதர நாட்டவர்கள் சிலரும் நிறைந்திருந்த அந்தத் துறையில் தமிழகத்தைச் சேர்ந்த நால்வர் மென்பொருளாளர்களாக இருந்தனர். தாய்மொழியில் பேச வாய்ப்பு கிடைப்பதால் இவருக்கு அவர்கள் நால்வரிடமும் பேசிக்கொள்வது ஆறுதலாகவும் வசதியாகவும் இருந்தது.

ஆனால் இவருக்கு இனந்தெரியாமல் ஏற்பட்ட களிப்பு வேறு. அது, அச்சூழல் இவரது மனத்தில் தடவிய களிம்பு!

தமிழ் நாட்டின் பின் தங்கிய கிராமத்திலிருந்து வந்தாரே, அந்த கிராமத்தில் இவரும் இவரைச் சார்ந்தவர்களும் அஃறிணை. தொடப்படக்கூடாத இனம். நாய்களுக்கு இருக்கும் மதிப்பு கூட இவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. அத்தகு சூழலில் அத்தகு கேவலத்தில் பிறந்து, வளர்ந்து ரியாத் வந்து சேர்ந்தவருக்கு, துப்புரவுப் பணியாளனானத் தன்னை, படித்து, சிறந்து, உயர்பதவி வகிக்கும் அவர்கள் அனைவரும் எத்தகு பேதமும் இன்றி, பாகுபாடின்றி, தோளில் கைவைத்துப் பழகுவது, கைகளைப் பற்றுவது நம்ப முடியாத அதிர்ச்சியை அளித்து விட்டது. அவர்கள் புழங்கும் தேனீர் அறையில் அவர்கள் அருந்தும் கோப்பைகளிலேயே இவரும் அங்கு தயாராகும் தேனீர் அருந்த முடிந்தது. விசேஷமான தருணங்களில் அவர்களுக்குள் பகிரப்படும் பதார்த்தங்களில் இவருக்கும் ஒரு பங்கு அளிக்கப்படுவது, தாம் அவர்கள் அருகில் நின்று உண்பது, பருகுவது இவருக்கு அடக்க மாட்டாத வியப்பாகவே இருந்தது.

‘நானும் ஒரு மனிதன்’ என்ற சுயநினைவு இவருக்கு அங்குதான் உருவாகி இருக்க வேண்டும். அதையடுத்துப் பற்பல மனமாற்றங்கள் இவருக்குள் நிகழ்ந்திருக்க வேண்டும். ஒரு நாள்–

தமிழ் நாட்டைச் சேர்ந்த அந்த நால்வருள் ஒருவரிடம் சென்று, “நான் முஸ்லிமாக வேண்டும்” என்றார்.

வேலையில் மூழ்கியிருந்த அந்த இளைஞருக்கு முதலில் புரியவில்லை. ஏன், எதற்கு என்று விசாரித்தபோதுதான் இவரது ஊரில் இவரது முன் கதை அவலம் தெரிய வந்தது. சென்னை நகரத்தில் படித்து, வளர்ந்த அந்த இளைஞருக்கு தாம் கேள்விப்பட்டிருந்த அத்தகு தீண்டாமை ஏதோ மிகை கற்பனை என்றிருந்த எண்ணம் இவரது வாக்குமூலத்தில் தகர்ந்தது. தமது சஊதி மேலாளர் அப்துர் ரஹ்மானிடம் இவரை அழைத்துச் சென்று விஷயத்தைச் சொன்னார்.

“அவசரத்தில், ஆத்திரத்தில் உனது முடிவு அமைந்திருக்கலாம். நிதானமாக யோசித்துவிட்டுச் சில நாள்கள் கழித்து வந்து சொல்லு” என்றார் அப்துர் ரஹ்மான்.

“நிறைய யோசித்துவிட்டேன். மாற்றமில்லை” என்று பதலளித்தார் இவர்.

சில வீதிகள் கடந்து அழைப்பியல் மையம் ஒன்று இருந்தது. “அவர்களிடம் இவரை அழைத்துச் சென்று பேசச் சொல்” என்று அறிவுறுத்தினார் அப்துர் ரஹ்மான்.

அந்த மையத்தில் இருந்த இலங்கையைச் சேர்ந்தவர், இவரது கதையையும் முடிவையும் கேட்டுவிட்டு, இஸ்லாமிய அடிப்படைகளை விளக்கினார். “யோசியுங்கள். யாருடைய நிர்ப்பந்தமும் இல்லாமல் சுயமாக முடிவெடுங்கள். பிறகும் இதுதான் உங்களது முடிவு என்றால் வாருங்கள்” என்று வழி அனுப்பி வைத்தார்.

இவர் அதிக நாள் அவகாசம் எடுத்துக்கொள்ளவில்லை. வெகு விரைவில் இஸ்லாத்தில் இணைந்தார்.

“எனக்குப் புதுப் பெயரை தேர்ந்தெடுத்துள்ளேன். நான் அப்துர் ரஹ்மான்”.

சஊதி மேலாளர் அப்துர் ரஹ்மான் உட்பட கணினித் தளத்தில் இருந்த ஒவ்வொருவரும் இந்த அப்துர் ரஹ்மானிடம் கைகுலுக்கி, மார்புறத் தழுவியதை சென்னை இளைஞர் பார்த்துக்கொண்டிருந்தார். ரமளானில் நோன்பு திறக்க தம் வீட்டிற்கு அப்துர் ரஹ்மானை அழைத்தார்.

“உங்களது பிரச்சினைக்கு நீங்கள் வேறு தீர்வைக் கூட நாடியிருக்கலாமே” என்று விசாரித்தபோது, “இறைவனுக்கு முன் நான் சமமாக நிற்கிறேன். இப்பொழுது பாருங்கள் தொழுகைக்கு மஸ்ஜிதுக்குச் செல்கிறேன்; அரபி, சூடானி, இந்தியன் என்ற பேதமின்றி ஒரே வரிசையில் சமமாக நின்று தொழுகிறேன். பின் வரிசையில் என் பாதங்களுக்குப் பின்னால் சிரம் பணியும் அரபிகள் என் கால்களை அருவருப்புடன் பார்ப்பதில்லை” என்றெல்லாம் விவரித்தவர், “மனைவிக்கு ஃபோன் செய்து சொல்லிவிட்டேன். அவர்களும் முஸ்லிமாகத் தயாராகி விட்டார்கள்” என்றார்.

இது புனைவோ, மிகையோ அன்று. நேரடி அனுபவ – தி ரியாத் ஸ்டோரி.

-நூருத்தீன்

சமரசம் – மே 16-31, 2023 இதழில் வெளியான கட்டுரை

அச்சுப் பிரதியை வாசிக்க க்ளிக்கவும்

Photo by Vladimir Fedotov on Unsplash

Related Articles

Leave a Comment